இலங்கை: வேலைச்சுமை அதிகரிப்புக்கும் சம்பள வெட்டுக்கும் எதிரான கிளனுகி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வேலை சுமை அதிகரிப்புக்கும் சம்பளவெட்டுக்கும் எதிராக, சாமிமலை கிளனுகி தோட்ட தொழிலாளர்களின் பதினைந்து நாள் வேலை நிறுத்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் (NUW) காட்டிக்கொடுக்கப்பட்டது.

கம்பனியினால் அதிகரிக்கப்பட்டுள்ள கொழுந்தின் அளவை 20 கிலோவில் இருந்து 16 கிலோவாக குறைக்க வேண்டும் மற்றும் வாரத்தில் ஆறு நாள் வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈட்பட்டார்கள். கம்பனி 1,000 ரூபாய் நாள் சம்பளம் வழங்குவதற்கு, நாளாந்தம் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதிகரிக்கப்பட்ட இலக்கை அடைவது சாத்தியமற்றது என தொழிலாளர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிசைட் தொழிலாளர்கள் (Photo credit: K. Kishanthan)

தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப வேலை செய்யலாம் எனவும், அது குறிப்பு புத்தகத்தில் பதிவிடப்படும் எனவும் தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களின் முன்னால் தோன்றி தந்திரமாக கூறினார். இது தோட்ட நிர்வாகத்தினால், இ.தொ.கா. மற்றும் தொ.தே.ச. ஆகியவற்றுடன் இணைந்து, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தயாரிக்கப்பட்ட பொறியாகும். ஆனால், தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் சம்பந்தமாக எழுத்தில் உறுதியளிக்க முகாமையாளர் மறுத்துவிட்டார்.

இப்பொழுது முகாமையாளர் தொழிலாளர்களை பழிவாங்க ஆரம்பித்துள்ளார், சில நிமிடங்கள் தாமதமாக வேலைக்கு வருபவர்களுக்கு கூட வேலை வழங்குவதற்கு மறுக்கின்றார். இந்தப் பிரச்சினைகளை பற்றி யாராவது பேசுவார்களாயின் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என அவர் மிரட்டுகின்றார்.

ஆரம்பத்தில், மஸ்கெலியா தோட்டக் கம்பனிக்கு சொந்தமான கிளனுகி தோட்டத்தின் டீ சைட் பிரிவில், செப்டெம்பர் 21 அன்று இந்த வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொடங்கி, அக்டோபர் 6 வரை தொடர்ந்தது.

புதிதாக திணிக்கப்பட்ட வேலை இலக்கை நிறைவேற்றத் தவறினால் தொழிலாளர்களின் சம்பளம் வெட்டப்படுகின்றது. ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 40 ரூபாய் வீதம், அவர்களால் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவிற்கேற்ப ஊதியம் வழங்கப்படுகின்றது. அவர்கள் 16 கிலோ பறிப்பார்களாயின், 640 ரூபாய் மாத்திரமே வழங்கப்படும். இதன்படி அவர்களின் நாளாந்த சம்பளமான 1,000 ரூபாயிலிருந்து 360 ரூபாய் குறைவாகவே வழங்கப்படுகின்றது. அதே நேரம், வேலை நாட்கள் வாரத்தில் ஐந்தாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, சில நேரங்களில் மூன்று அல்லது நான்கு நாட்களாகவும் குறைக்கப்படுகின்றன.

இ.தொ.கா. மற்றும் தொ.தே.ச. ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து தலையிட்டன. கிளனுஜி தோட்ட, கிளனுகி பிரிவு இ.தொ.கா. மற்றும் தொ.தே.ச. கிளைத் தலைவர்களான கே. ஜெயபிரகாஷ் மற்றும் எம். ஞானப்பிரகாஷ், கிளனுகி பிரிவு தொழிலாளர்கள் டி சைட் பிரிவு தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைவதை தடுக்க செயற்பட்டனர். கிளனுஜி பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால், டீசைட் பிரிவு வேலை நிறுத்தத்தில் சேர வேண்டிய அவசியமில்லை என தொ.தே.ச தலைவர் ஞானபிரகாஷ் கூறினார்.

கிளைத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தை முறியடிக்கத் தவறியமையினால் இ.தொ.கா. மற்றும் தொ.தே.ச. உயர்மட்ட தலைமைத்துவம் தலையிட்டு, அதனை முறியடிக்க முயன்றது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரும், இ.தொ.கா. தலைவருமான ஜீவன் தொண்டமான், தோட்டத்திலிருந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களை செப்டம்பர் 30 அன்று கொட்டகலையில் உள்ள இ.தொ.கா. தலைமையகத்திற்கு வரவழைத்தார். தொழிலாளர்கள் தினசரி 16 கிலோகிராம் இலக்கைத் எடுக்கலாம் என்றும், தான் தோட்டத்துக்கு வந்து பிரச்சினையைத் தீர்க்க முகாமையாளரிடம் பேசுவதாகவும் தொண்டமான் கூறினார். இது தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான போலி வாக்குறுதியாகும்.

அதே நாளில் மஸ்கெலியா கிளப்பில் இதே போன்ற கலந்துரையாடலுக்கு அழைதத்த தொ.தே.ச மஸ்கெலியா பிராந்தியத் தலைவர் நகுலேஸ்வரன், 'முதலில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும். நாங்கள் கோரிக்கைகளை பற்றி தொடர்ந்து கலந்துரையாடுவோம்,' எனக் கூறினார். தொழிலாளர்கள் கோபத்துடன் கலந்துரையாடலில் இருந்து வெளியேறினர். அந்த தலைவர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாத தொழிலாளர்கள், மீண்டும் வேலைக்கு செல்ல மறுத்தனர்.

அக்டோபர் 5, கிளனுகி தோட்ட அலுவலகத்திற்கு வந்த இ.தொ.கா. மஸ்கெலியா பிராந்திய தலைவர் பிச்சைமுத்து, முகாமையாளர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முயற்சித்தார். தொழிலாளர்கள் மீண்டும் அதை நிராகரித்தனர். எவ்வாறெனினும், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுத்ததினால், தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப நிர்பந்திக்கப்பட்டார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரில், வேலைச்சுமை அதிகரிப்புக்கு எதிரான வேலைநிறுத்தத்தின் போது, சோசலிச சமத்துவக் கட்சியுடன் (சோ.ச.க) இணைந்து உருவாக்கப்பட்ட கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது, வேலை நிறுத்தத்தில் குறிப்பிடத்தக்க தலையீடு செய்தது. கிளனுகி பிரிவு தொழிலாளர்கள், டி சைட் பிரிவு தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் சேரவிடாமல் தடுக்க முயன்ற தொழிற்சங்க கிளை தலைவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. இதன் விளைவாக, அவர்களும் செப்டம்பர் 29 அன்று வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டதுடன் செப்டெம்பர் 6 வரை அதை தொடர்ந்தனர்.

செப்டம்பர் 26 கலந்துரையாடல் ஒன்றை நடத்திய கிளனுகி நடவடிக்கை குழு, டீ சைட் பிரிவு தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் வேலைச் சுமை அதிகரிப்பு மற்றும் சம்பளவெட்டு பிரச்சனைகளை அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் எதிர்கொள்வதாக குறிப்பிட்டனர். கலந்துரையாடலின் போது, தாக்குதல்களுக்கு எதிரான பொது போராட்டத்திற்காக மற்ற தோட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டனர். செப்டெம்பர் 30 அன்று மீண்டும் கூடிய கிளனுஜி நவடிக்கை குழு, டீ சைட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக, ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடிவு எடுத்தனர்.

செப்டம்பர் 30 அன்று மீண்டும் கூடிய நடவடிக்கை குழு கலந்துரையாடலின் போது, டீ சைட் பிரிவில் பணிபுரியும் பெண் தொழிலாளி கூறியதாவது: 'தோட்டக் கம்பெனிகளும் அரசாங்கமும் மேற்கொள்ளும் ஆத்திரமூட்டல்களையும் தாக்குதல்களையும் தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக சோ.ச.க. பலமுறை எச்சரித்துள்ளது. இந்தத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது. வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக எங்கள் தோட்டத்தின் தொழிலாளர்கள் 2016 அக்டோபரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ஏழு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். அவர்களின் விடுதலைக்காகவும், அவர்களை மீண்டும் வேலையில் அமர்த்தவும் போராடிய ஒரே கட்சி சோ.ச.க மட்டுமே.'

அடுத்து வரும் நாட்களில், நடவடிக்கை குழு உறுப்பினர்கள், கிளனுகி தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் குறித்த உலக சோசலிச வலைத் தள கட்டுரையை தொழிலாளர்களின் மத்தியில் விநியோகித்து, கிளனுகி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை உருவாக்க பிரச்சாரம் செய்தனர். 'கிளனுகி தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுக்க தொழிற்சங்கங்களை அணுமதிக்க முடியாது. இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களும், நடவடிக்கை குழுக்களை அமைத்து போராட்டத்தில் சேர வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் இத்தகைய நடவடிக்கை குழுக்களின் கூட்டணி மூலம் போராட்டத்தைச் சுற்றி தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளை அணிதிரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அந்த கட்டுரை வலியுறுத்தியது

தாங்க முடியாத வேலை நிலைமைகள் மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிராக, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.

மஸ்கெலியா தோட்டக் கம்பெனிக்கு சொந்தமான மஸ்கெலியாவில் மரே, தலவாக்கலையில் கட்டுகலை ஆகிய தோட்டத் தொழிலாளர்கள் அதிக வேலை இலக்குகள் மற்றும் ஊதியக் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 27 மற்றும் 29 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவை பெருந்தோட்டம், கொட்டகலை பெருந்ததோட்டம், ஹொரணை பெருந்தோட்டம் மற்றும் அகரபத்தனை பெருந்தோட்டம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பல தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், கடந்த மாதம் இதே பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை நடத்தினர்.

கோவிட்-19 தொற்றுநோயால் உக்கிரமாக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தொழில்துறை நெருக்கடி ஆழமடைகின்ற நிலையில், பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களை தீவிரப்படுத்தியுள்ளன. கென்யா, சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட தேயிலை உற்பத்தி நாடுகளுடனான போட்டி தீவிரமடையும் போது, இலங்கை தேயிலை தோட்ட நிறுவனங்கள் வீழ்ச்சி அடைவதோடு, கேள்வி குறைந்து வரும் நிலைமைக்கும் முகம் கொடுக்கின்றன.

நெருக்கடியின் சுமையை தோட்டத் தொழிலாளர்கள் மீது சுமத்துவதன் மூலம் தங்கள் இலாபத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள், அதற்கு எதிரான எந்த எதிர்ப்பையும் அடக்க முடிவு செய்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில், சாமிமலையில் உள்ள ஓல்டன் தோட்டத்தில் 38 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் 24 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் சோடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்கொள்கின்றனர். கட்டுகலை தோட்டத்தில் 11 தொழிலாளர்கள் சமீபத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டு இதே போன்ற சோடிக்கப்பட்ட வழக்கை எதிர் கொள்கின்றனர்.

இந்த அனைத்து தாக்குதல்களிலும், அனைத்து பெருந் தோட்ட தொழிற்சங்கங்களும் கம்பனிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும், உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இலங்கையில் சுமார் 250,000 பாடசாலை ஆசிரியர்கள் சம்பளக் கோரிக்கைகளுக்காக மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார ஊழியர்கள் தங்கள் ஊதிய கோரிக்கைகள் மற்றும் மோசமான வேலை நிலைமைகள் குறித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். துறைமுகம், மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடாப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, தொழிலாள வர்க்கமானது தோட்டத் தொழிலாளர்கள் உட்பட, தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதில் முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் பொலிஸ்காரனாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து விலக வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தமது கையிலெடுக்க நடவடிக்கை குழுக்களை அமைத்து, இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் முதலாளிகளினதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பொது போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைவது கட்டாயமாகும். தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்.

Loading