பகுதி ஒன்று

கிளிஃவ் சுலோட்டர்: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு (1928-1963)

பகுதி1| பகுதி2| பகுதி3| பகுதி4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிளிஃவ் சுலோட்டரின் இந்த அரசியல் வாழ்க்கை வரலாறு 1928க்கும் 1963க்கும் இடையிலான காலப்பகுதியை உள்ளடக்குகிறது. அது உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கத்தில் இன்றிலிருந்து தொடங்கி நான்கு பகுதிகளாக வெளியிடப்படும். 1963 லிருந்து அவரது மறைவு வரையான, அரசியல் வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகம், இந்த ஆண்டின் இறுதில் வெளிவரும்.

முன்னுரை

கிளிஃவ் சுலோட்டர் மே 3, 20201 அன்று இங்கிலாந்தில் உள்ள லீட்சில், அவரது 92வது வயதில் காலமானார்.

கிளிஃவ் சுலோட்டர்

1957 முதல் 1986 வரை கிளிஃவ் சுலோட்டர் சோசலிசத் தொழிலாளர் கழகம் (Socialist Labour League - SLL), தொழிலாளர் புரட்சிக் கட்சி (Workers Revolutionary Party - WRP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International - ICFI) தலைமையில் ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா ஆகியோருடனான நெருங்கிய ஒத்துழைப்பில் பணியாற்றினார். பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் (Pabloite International Secretariat) 1963 இல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (American Socialist Workers Party) கோட்பாடற்ற மறு ஐக்கியத்திற்கு எதிராக மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்ட மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களை பாதுகாக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட, வரிசைக்கிரமமான ஆவணங்களின் பிரதான ஆசிரியராக சுலோட்டர் இருந்தார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளராக அவர் பல வருடங்கள் செயல்பட்டார்.

1960 இல் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாப்பதற்கான சுலோட்டரின் நீடித்த பங்களிப்பானது, அடுத்துவந்த அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும், புரட்சிகர மார்க்சிசத்தை நிராகரித்தலுக்கும் துன்பகரமான வகையில் வேறுபட்டு நிற்கிறது. 1985–86ல் ஹீலி மற்றும் பண்டாவுடன் மையப்பொறுப்பை பகிர்ந்துகொண்டிருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளேயான ஒரு அழிவுகரமான நெருக்கடியின் மத்தியில் சுலோட்டர் , தொழிலாளர் புரட்சி கட்சியின் திசைவிலகலுக்கான காரணங்கள் பற்றிய எந்தவிதமான சீரிய மதிப்பீட்டையும் தடுத்து, பிரிட்டிஷ் பகுதியின் உறுப்பினர்களை வழிதவறச் செய்வதற்கு அவரால் இயன்ற அனைத்தையும் செய்தார் மற்றும் அனைத்துலகக் குழுவையும் இழிவுபடுத்தினார்.

பிப்ரவரி 8, 1986 அன்று, இலண்டன் காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன், சுலோட்டர் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆதரவாளர்களை கட்சியின் காங்கிரஸில் பங்கேற்கத் தடை விதித்ததோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்தும் பிளவுபடுத்தினார்.

நீண்ட ஆயுட்காலம் கிளிஃவ் சுலோட்டருக்கு கருணை காட்டியதாக இருக்கவில்லை. அனைத்துலகக் குழுவுடன் அவர் முறித்துக் கொண்ட நேரத்தில் அவர் வெறும் 57 வயதை அடைந்திருந்தார், அவரது எஞ்சிய 35 ஆண்டுகளை அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 30 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த அனைத்துக் கோட்பாடுகளையும் மறுதலிப்பதற்கும் கைவிடுவதற்கும் அர்ப்பணித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியை அழித்த நெருக்கடிக்கான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நேர்மையற்ற முறையில் விலகும் பொருட்டு, (எவரை, எந்த ‘எதிர்ப்புக்கும் வளையாதவர்’ என்று சுலோட்டர் கூறிக்கொண்டாரோ அவர் மீது) ஹீலி மீதும், எல்லாவற்றுக்கும் மேலாக லெனின், ட்ரொட்ஸ்கி மீதும் குற்றம் சுமத்தினார். பிளவையடுத்து பல தசாப்தங்களாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைமுறிவானது, தொழிலாள வர்க்கத்திற்குள் புரட்சிகர மார்க்சிச கட்சியை வளர்த்தெடுப்பதற்கான தேவையை சோசலிசம் கொண்டிருக்கிறது என்ற தவறான நம்பிக்கையில் வேரூன்றி இருந்தது என்று அவர் வலியுறுத்தினார். 1996 இல், “தொழிலாள வர்க்கத்திற்‘காக’ ஒரு கட்சியையும் வேலைத் திட்டத்தையும் உருவாக்குவதற்கான ஒட்டுமொத்த கருத்துடன் முற்றிலும் துண்டித்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது” என்ற அவரது அறிவிப்புடன் மார்க்சிசத்தைக் கைவிடும் அவரது நிலைப்பாட்டை சுருங்கக் கூறினார்.”[1]

இந்த சொற்றொடருடன் சுலோட்டர், முப்பதாண்டுகளுக்கு முன்னர் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், தான் போராடியிருந்த மையக் கோட்பாடுகளுடன், அதாவது சோசலிசத்தின் வெற்றியானது தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவுக்கான போராட்டத்தில் தங்கி இருக்கிறது, அது மார்க்சிச–ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளைக் கட்டுவதின் ஊடாக மட்டுமே நிறைவேற்றப்பட முடியும் என்பதிலிருந்து முற்றிலும் முறித்துக்கொண்டு விட்டதாகத் தெளிவுபடுத்தினார்.

கிளிஃவ் சுலோட்டர் அவரது வாழ்க்கையில் ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாத்த அந்த ஆண்டுகளில், அவரோடு பணியாற்றி அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருந்த அனைத்துலகக் குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை, மார்க்சிச தத்துவத்தையும் அரசியலையும் அவர் மறுதலிப்பது, வெட்கமற்ற வஞ்சகத்துடனும் சிடுமூஞ்சித்தனத்துடனும் அதை அவர் மேற்கொண்டதில் தவிர்க்க முடியாத அவமதிப்பைத் தூண்டியது. 1985-86லும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் அவரது பங்கு முற்றிலும் ஏதோ ஆச்சரியப்படத்தக்க வகையில் வந்துவிடவில்லை. அதற்கு முந்தைய பத்தாண்டில் அவருடைய பணியின் தன்மையில் ஏற்பட்ட சீரழிவு, தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து அதிகரித்த அளவில் வெளிப்படையான விலகலில் பிரதிபலித்தது. அதே சீரழிந்த நிகழ்ச்சிப்போக்கு அவரது மிக நெருங்கிய தோழர்களின் பரிணாமத்திலும் வெளிப்பட்டது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக அரசியல் புரட்சி எனும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை 1930களிலிருந்து உயர்த்திப் பிடித்திருந்த ஜெர்ரி ஹீலி, மிக்கையில் கோர்பச்சேவுக்கு ஒரு வக்காலத்து வாங்குபவராக தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 1940களில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்திருந்த மைக்கல் பண்டா, தனது முழு இளமைக்கால வயதில் கிரெம்ளினின் எதிர்ப் புரட்சிகர அரசியலுக்கு எதிராகப் போராடியவர், திடீரென நான்காம் அகிலத்தைக் கைவிட்டு ஸ்ராலினுக்கான அவரது புகழ்ச்சியை அறிவித்தார். அவர்களிடையே இருந்த மிகவும் கசப்பான பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர்களுடைய தனிப்பட்ட உறவுகளில் முழுச் சீர்குலைவு இருந்தபோதிலும், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில், தங்களது நெருங்கிய ஒத்துழைப்புக் காலங்களில் அவர்கள் எந்த அரசியல் நிலைப்பாடுகளைப் பாதுகாத்தார்களோ அதற்கு நேரெதிரான அரசியல் நிலைப்பாடுகளுக்கு வந்தடைந்தார்கள். அவர்களுடைய கூட்டு அரசியல் பாதையானது, 1970 கள் மற்றும் 1980 களின் கடினமான பத்தாண்டுகளில் சர்வதேசரீதியாகவும் பிரிட்டனிலும் எழுந்த வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் வேரூன்றியிருந்த சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ட்ரொட்ஸ்கிசத்துடனான அவருடைய முறிவின் அடிப்படைப் பண்பையும் அதை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் எடுத்துக்கொண்டால், சுலோட்டரின் இறப்பானது உணர்ச்சிகரமான நினைவுகூர்தலுக்கான ஒரு நிகழ்வு அல்ல. எவ்வாறாயினும், அவர்கள் செய்த தீமை மட்டுமே அவர்களுக்குப் பின் வாழ்கிறது என்பது பற்றியது மட்டுமல்ல. நான் சுலோட்டரின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதில், அவர் சர்வதேச ரீதியாகவும் பிரிட்டனுக்குள்ளும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில், அவரது மிகவும் அரசியல் ரீதியான மற்றும் அறிவுபூர்வமான உற்பத்தித்திறன் வாய்ந்த காலமாக இருந்த அவரது வாழ்வின் பொழுது, அவர் ஆற்றிய மிகவும் ஆழமான ஆக்கபூர்வமான பங்கை சுலோட்டரே புறக்கணித்தது போன்று அதனை முன்மாதிரியாகக் கொள்ளமாட்டேன்.

நான் கிளிஃவ் சுலோட்டரை சரியாக அரை நூற்றாண்டுக்கு முன்னர் 1971 ஜூலையில் விரிவுரையாற்றும்பொழுது முதன்முதலாக சந்தித்தேன். அவருடைய எழுத்துக்களும் விரிவுரைகளும் அதேபோல அரசியல் பணிகளின் போது எங்களுடைய பல கலந்துரையாடல்களும் ஒரு மார்க்சிசவாதியாக எனது கல்விக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு செய்திருந்தன. ஆனால் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அதிகரித்துவரும் தத்துவார்த்த மற்றும் அரசியல் நோக்குநிலை தவறலுக்கு, அவர் என்ன செய்தாரோ மற்றும் என்ன செய்யக்கூடாது என்று தேர்வுசெய்தாரோ அவை இரண்டுக்குமாக, கணிசமான அளவு பொறுப்பை பகிர்ந்துகொள்கிறார். அரசியல் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட, 1980களில் ஹீலியின் மார்க்சிச வழிமுறையை அம்பலப்படுத்துவதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சியில் ஏதாவதொரு நபர் தீர்க்கமாக தலையிட்டிருக்கக்கூடியவராக இருக்க முடியுமெனில், அவர் கிளிஃவ் சுலோட்டராகத்தான் இருப்பார். ஆனால் நனவாக அவர் அதை செய்ய விருப்பவில்லை மற்றும் 1985-86 நெருக்கடியின் பொழுதும் அதற்குப் பின்னரும் அவர் ஆற்றிய பாத்திரமானது, எங்களுக்குள் இருந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புக்கு முற்றிலுமாக முடிவுகட்டியது. நான் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் எழுத்துக்களையும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்க கடமைப்பட்டவன். அங்கே நான் மாற்றுவதற்கு எதுவுமில்லை திரும்பப் பெறுவது ஒருபுறமிருக்கட்டும். முரண்நகை என்னவென்றால், நான் சுலோட்டருக்கு எதிராக எழுதியதெல்லாம் சிறிய அளவுக்கு அல்ல, பெரிதும் ஆரம்பகாலத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டதால் செல்வாக்கு செலுத்தப்பட்டதாகும். இந்த முரண்பாடானது, கீழ்வரும் கிளிஃவ் சுலோட்டரின் அரசியல் வாழ்க்கை வரலாற்று எழுத்துக்களில் தொடர்கிறது.

David North
July 30, 2021

கிளிஃவ் சுலோட்டரின் குழந்தைப் பருவமும் ஆரம்பகால ஆண்டுகளும்

பிரிட்டனில் 1926 பொது வேலைநிறுத்தம்

கிளிஃவ் சுலோட்டரின் தந்தை பிரடெரிக் ஆர்தர் சுலோட்டர் (Frederick Arthur Slaughter) இங்கிலாந்தின் தென்பகுதியிலுள்ள ஆக்ஸ்போர்ட்ஷயரில் 1907ம் ஆண்டு பிறந்தார். பிரெட் இளமையாக இருக்கும்போதே, இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிக்கு நகர்ந்தார், அங்கே டர்ஹாமில் ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியாக வேலை கிடைக்கப் பெற்றார். அவர் 1926 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின் அனுபவத்தினூடாகக் கடந்து சென்றார். சுரங்கத் தொழிலாளர்களுக்கும் தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தத்திற்குமாக அழிவுகரமான விளைபயன்களுடன், அந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொழிற்சங்க காங்கிரசால் (Trades Union Congress - TUC) காட்டிக் கொடுக்கப்பட்டது. அவர் டர்ஹாமில் 1903ல் பிறந்திருந்த அன்னி எலிசபெத் ஸ்டாக்கெல்டை சந்தித்து, 1928ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இளம் தம்பதிகள் விரைவிலேயே யோர்க்க்ஷயரில் உள்ள டன்காஸ்டருக்கு குடிபெயர்ந்தனர். அங்கே அக்டோபரில் அவர்களது முதலாவது குழந்தை கிளிஃவ்போர்ட் (Clifford) பிறந்தார். அதன்பின் அவர்களுக்கு கீத் மற்றும் நான்சி எனும் இரட்டையர்கள் பிறந்தனர். 1938ல் பிரெடெரிக் சுலோட்டர் லீட்சுக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் கிளிஃவ் சுலோட்டர் தனது வயதுவந்த வாழ்க்கைப் பருவம் முழுவதையும் கழித்தார்.

1974 நவம்பர் 14 அன்று அவரது 67ம் வயதில் அவரது மறைவை அடுத்து வேர்க்கர்ஸ் பிரஸ் இல்வெளியான ஒரு நினைவஞ்சலியில், மூத்த சுலோட்டர் “1920கள் மற்றும் 1930களில் பெற்ற அனுபவம் அவருக்கு முதலாளித்துவம் மீது கடும் வெறுப்பைத் தூண்டியது மற்றும் தொழிலாள வர்க்கத்தினாலான ஒரு சமூகப் புரட்சியின் தேவையின் மீது ஒரு ஆழ்ந்த நம்பிக்கையையும் ஊட்டியது” என்று குறிப்பிட்டது. வேர்க்கர்ஸ் பிரஸ்- இன் படி, ஃபிரெட் “1926 பொது வேலைநிறுத்தத்தையும் தானும் ஒருவராக இருந்த சுரங்கத் தொழிலாளர்களின் வலிமையான போராட்ட செயல்பாட்டிற்கு மாறாக தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர்களின் கோழைத்தனமான காட்டிக்கொடுப்பையும் மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்தார்.” [2]

1930களில் ஃபிரெட் சுலோட்டர் வீடுவீடாகச் சென்று காப்புறுதி முகவராக வேலை செய்தார், ஆனால் இறுதியில் லீட்ஸில் ஜோன்பௌலர் டிராக்டர் தொழிற்சாலையில் பணி கிடைக்கப்பெற்று கன்வீனர் (பகுதி பொறுப்பாளர்) ஆனார். இரண்டாம் உலகப் போரின் பொழுது ஒருகுறிப்பிட்ட காலத்தில் ஃபிரெட் சுலோட்டர் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அன்னி எலிசபெத்தும் கூட கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார், ஆனால் அவரது கணவரை விடவும் குறைவாகவே அதில் முனைப்பாக இருந்தார். போரைத் தொடர்ந்து, ஃபிரெட் சுலோட்டர் தொழிலாள வர்க்க குடும்பங்களிடம் கலைக்களஞ்சியங்களை வீடு வீடாகச் சென்று விற்கும் ஒரு “விற்பனையாளராக” பணிக்குத் திரும்பினார்.

கிளிஃவ் சுலோட்டர் தனது குழந்தைப் பருவத்தில் பெரிதும் தனிமைப்படலால் பாதிக்கப்பட்டார். அவரின் எதிர்கால மனைவி, பார்பரா சுலோட்டர் (பென்னெட்) இவ்வாறு நினைவு கூர்கிறார், “எட்டு வயதே நிரம்பி இருக்கும்பொழுது ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது தனது தாய் வரவேற்பு அறையில், ஆரஞ்சுப் பெட்டியின் மீது அமர்ந்து அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தார். ஜாமீன்கள் (நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் அதிகாரிகள்) வாடகை பாக்கிக்காக வீட்டிலிருந்த கிட்டத்தட்ட அனைத்து தளவாடங்களையும் எடுத்துச்சென்று விட்டிருந்தனர். அந்த அனுபவத்தை அவர் ஒரு போதுமே மறக்கவில்லை.” [3]

1946ல் வெளிச்செல்லும் மாணவர்களில் கிளிஃவ் சுலோட்டர் (பின்வரிசையில் இடமிருந்து இரண்டாவது இடம்). பார்பரா பென்னெட் முன்வரிசையில் இடமிருந்து இரண்டாவது இடம்

கிளிஃவ் ஆண்களுக்கான லீட்ஸ் மாடர்ன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார், அங்கு அவர் கல்வியில் சிறந்து விளங்கினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு படிப்பு உதவித்தொகையைப் பெறும் அதன் மாணவர்களுள் முதலாவது நபராக அவர் விளங்கினார். அவருடன் மிகவும் நெருக்கமான உறவில் திளைத்த அவருடைய தந்தையின் செல்வாக்கின் கீழ், கிளிஃவ் சுலோட்டர் தான் மாணவராக இருந்தபோதே லெனினது எழுத்துக்கள் மற்றும் மார்க்சிச செவ்வியல் நூல்களைப் படிக்கத் தொடங்கினார். 1947 அளவில் கிளிஃவ் சுலோட்டர் இளம் கம்யூனிஸ்ட் கழகத்தில் (Young Communist League - YCL) முனைப்போடு செயல்படத் தொடங்கினார்.

உயர்நிலைப் பள்ளியை முடித்த பின்னர், பல்கலைக்கழகம் புகுமுன் கிளிஃவ் சுலோட்டர் ஆயுதப்படைகளில் பணியாற்றும் கட்டாயத்திற்கு மாற்றாக, ஒரு சுரங்கத் தொழிலாளியாக வேலை செய்வதற்கு முடிவெடுத்தார். லீட்சுக்கு வெளியில் உள்ள ஒரு சிறிய கிராமமான வூட்லெஸ்போர்ட் (Woodlesford) இல் வாட்டர் ஹைக் கொல்லரி சுரங்கத்தில் அவர் வேலை செய்தார். சுலோட்டர் காலைநேர வேலைச்சுற்றுக்கு தேவையான நேரத்திற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார். அதனால் அவருக்கு லெனினின் எழுத்துக்களைப் படிப்பதற்கு நேரம் கிடைத்தது. மார்க்சிச தத்துவத்தில் அவரது வளர்ந்து வரும் ஈடுபாட்டுக்கு, தொழிலாள வர்க்கத்தின் வாழ்வு மற்றும் போராட்டங்களின் யதார்த்தங்களின்பாலான ஒரு விரிவான அறிவு மற்றும் உணர்வுபூர்வத்தன்மையை வழங்குவதில், சுலோட்டர் மீது அவரது அனுபவம் அதன் தடத்தைப் பதித்தது. பார்பரா சுலோட்டர் கவனித்தவாறு: “தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றிய அவரது புரிதல் ஆழமானது என்று நான் நினைக்கிறேன். தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றி பெரிய அளவில் கற்றுக்கொள்ளாமல், சம்பளம், வாழ்க்கை நிலைமைகள் தொடர்பான தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற்றுக் கொண்டு, நீங்கள் இரண்டு வருடங்கள் நிலத்தடியில் முழங்காலில் மூன்றடி அடுக்குகளில் நிலக்கரியை அள்ளிக்கொண்டு வேலை செய்யமுடியாது. ரஷ்யப் புரட்சியையும் லெனினிது படைப்புக்களையும் பற்றிய அவரது படிப்போடு இணைந்த அது, சோசலிசப் புரட்சி மூலம் தொழிலாள வர்க்கம் ஆட்சியதிகாரத்தை எடுப்பதற்கான தேவையில் அவரை நம்பிக்கைகொள்ளச் செய்தது.”[4]

நிலக்கரிச் சுரங்கத்தில் அவரது வேலையைத் தொடர்ந்து, சுலோட்டர் லீட்ஸில் பொறியியல் தொழில் துறையில் பலமாதங்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றார். 1949 அக்டோபரில் கேம்பிரிட்ஜில் அவரது படிப்பைத் தொடங்கினார், அங்கே அவர் அவரது கவனத்தை சமூக மானிடவியலுக்கு மாற்றுவதற்குமுன் முதலில் வரலாறை பிரதான பாடமாகப் படித்தார். சுலோட்டர் 1952ல் முதல்தர பட்டத்தைப் பெற்றார் அவரது படிப்பிற்கிடையே சோசலிச அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் மற்றும் பல்கலைக் கழகத்தில் வலதுசாரி மாணவர்களின் ஆத்திரமூட்டல்களை அப்போது சமாளிக்க வேண்டி இருந்தது. ஒருமுறை அவரது அறைக்குத் திரும்பியபொழுது, அவரதும் அதேபோல அவரது யூத நண்பரதும் சக மாணவரதும் துணிமணிகள் விடுதிக் கட்டிடத்திற்கு வெளியே முற்றத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பதைக் கண்டார்.

1950ல் கேம்பிரிட்ஜில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, சுலோட்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே தான் சந்தித்திருந்த பார்பரா பென்னட்டை திருமணம் செய்து கொண்டார். பார்பராவின் பெற்றோர்கள் சோசலிஸ்டுகளாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுதே 1944ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தங்களது திருமண வாழ்வின் முதல் இரு ஆண்டுகள் தம்பதியர் இருவரும் கேம்பிரிட்ஜில் வாழ்ந்து வந்தனர், அங்கு கம்யூனிஸ்ட் கட்சியில் அவர்கள் செயல் முனைப்புடன் ஈடுபட்டிருந்தனர். ஜே.டி. பேர்னல் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அறிவுஜீவிகளால் வழங்கப்பட்ட விரிவுரைகளில் அவர்கள் பங்கேற்றனர்.

கிளிஃவ் சுலோட்டர் மற்றும் பார்பரா பென்னெட்டின் திருமணப் படம் (அக்டோபர்1950)

கேம்பிரிட்ஜில் பட்டம்பெற்ற பின்னர் கிளிஃவ் சுலோட்டரும் பார்பராவும் லீட்சுக்கு இடம்பெயர்ந்தனர். சுலோட்டர் லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் ஒரு வேலையை, யோர்க்க்ஷயர் சுரங்க சமூகத்தில் தமது சகாக்களான நோர்மன் டென்னிஸ் மற்றும் பெர்னான்டோ ஹென்ரிக்குஸ் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு நடத்தும் பணியைப் மேற்கொண்டார். அவர்களின் ஆய்வின் பகுதியாக சுலோட்டரும் டென்னிசும் உள்ளூர் நிலக்கரி சுரங்கத்தில் பல மாதங்கள் வேலை செய்தனர்.

அவர்களின் ஆய்வின் அடிப்படையில், சுலோட்டர், டென்னிஸ் மற்றும் ஹென்ரிக்குஸ் நிலக்கரியே எங்கள் வாழ்க்கை (Coal is Our Life) என்ற புத்தகத்தை எழுதினர். அது பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூகவியல் நூலாக தொடர்ந்தும் நீடிக்கின்றது.

இளம் சுலோட்டர் அரசியல் மற்றும் கலாச்சார விடயங்களில் ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தார் என பார்பரா சுலோட்டர் நினைவு கூருகிறார். அவருடைய கல்வி ஆய்வு மற்றும் அரசியல் கற்றலைத் தவிர ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் அவர் பரந்த அறிவைக் கொண்டிருந்தார். அவர் பார்பராவுக்கு ஸ்டெந்தால், ஃபிளோபேர் மற்றும் ஸோலா ஆகியோரின் இலக்கியங்களை அறிமுகம் செய்தார். சோசலிசத்திற்காகப் போராடுவதற்கு அர்ப்பணித்துக்கொண்ட அவருடைய வாழ்வின் அந்தக் கட்டத்தில், சுலோட்டருக்கு தனிப்பட்ட வெற்றியின் வழக்கமான முறையில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தது.

கிளிஃவும் பார்பரா சுலோட்டரும் தங்கள் மகளுடன்

அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல் முனைப்பாக இருந்தபோதிலும், “சோசலிசத்திற்கு பிரிட்டிஷ் பாதை” என்ற 1951 வேலைத்திட்டத்தில் விவரிக்கப்பட்டிருந்த சீர்திருத்தவாத நோக்குநிலையை சுலோட்டர் கண்டார். அரசு பற்றிய மார்க்சிச தத்துவத்துடன் சமரசம் காண்பது என்பது அவருக்கு கடினமாக இருந்தது. ஸ்ராலின் உச்சரிப்புக்களை மறுக்கமுடியாதவை என எவ்விதக் கேள்வியுமின்றி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டது அவருக்கு வியப்பாக இருந்தது. அவருக்கு வெளிப்படையாக அறிவும் திறமையும் இல்லாத விடயங்களில் கூட, சோவியத் சர்வாதிகாரி சொன்ன அல்லது எழுதிய அனைத்துமே வேதவாக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பார்பரா சுலோட்டர் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளையும் ஸ்ராலினிச இயக்கத்தில் அவரது அனுபவங்களையும் இவ்வாறு விவரிக்கிறார்:

நான் 63 ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதுதான் இரண்டாம் உலக யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருந்த நிலையில், 1945இல் எனது பதினெட்டாவது வயதில் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பொழுது அரசியலுக்குள் நுழைந்தேன். 1930களில் மற்றும் ஸ்பானிய உள்நாட்டுப் போரின் கோரமான நிகழ்வுகள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் பொழுது, என்னுடைய சொந்தக் குடும்பம் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் துன்பங்களை ஒரு குழந்தையாக இருந்து சந்தித்ததானது, நான் என்னைப்போன்று மில்லியன் கணக்கான மற்றவர்களைப் போல, போருக்கு முந்தைய அந்த நாட்கள் ஒருபோதும் திரும்பக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். போரின் பொழுது ரஷ்யப் புரட்சியின் வெற்றிகளை ரஷ்யத் தொழிலாள வர்க்கம் பாதுகாத்த வீரஞ்செறிந்த நிலையின் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியானது, பெரும் கௌரவத்தைப் பெற்றிருந்தது மற்றும் என்னைப் போலவே மற்ற ஆயிரக்கணக்கானோர் அது ஒரு புரட்சிகரக் கட்சி என்ற ஒரு தவறான எண்ணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.

அடுத்த 11 ஆண்டுகள் நான் முற்றிலும் தவறாகக் கல்வியூட்டப்பட்டேன். இடது எதிர்ப்பு மற்றும் நான்காம் அகிலத்தினுடைய போராட்டம் பற்றி எதுவும் அறியமுடியாமல் இருந்தேன். உண்மையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒருவகை தீய அவதாரமாக விவரிக்கப்பட்டனர், அவர்கள் “பாசிஸ்டுகளை விட மோசமானவர்களாக” விமர்சிக்கப்பட்டனர். நான் இவற்றைப் பற்றி உண்மையில் கேள்வி எழுப்பினேனா என்று என்னால் சொல்ல முடியாது ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியானது, புரட்சிகரக் கட்சி என்பதிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது என்பதைப் பற்றி உணர்வதற்கு எனக்கு நீண்ட காலம் பிடிக்கவில்லை. ஆனால் வேறு எந்த மாற்றீடையும் என்னால் பார்க்க முடியவில்லை. [5]

1950களின் தொடக்கத்தில் கிளிஃவ் சுலோட்டரும் அவரது மகளும்

குருஷ்சேவின் “இரகசிய பேச்சு”

கிளிஃவ் மற்றும் பார்பரா சுலோட்டருக்கு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பாதை பற்றி என்ன ஐயங்கள் இருந்தாலும், அவர்கள் ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொண்டதும் ட்ரொட்ஸ்கிசத்திற்குத் திரும்பியதும் 1956இல் உலக ஸ்ராலினிச இயக்கத்தில் வெடித்த நெருக்கடிக்கு அவர்கள் கொடுத்த பதிலாக இருந்தது. 1956 பிப்ரவரி 25 அன்று கிட்டத்தட்ட ஸ்ராலின் இறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், புதிய சோவியத் கட்சியின் தலைவரும் மறைந்த சர்வாதிகாரியின் நீண்டகால உதவியாளராக இருந்தவருமான நிகிதா குருஷ்சேவ், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது காங்கிரஸில் 4 மணிநேரம் நீண்டதொரு இரகசியப் பேச்சை வழங்கினார். அங்கு வருகை தந்திருந்த பேராளர்களுக்கு, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஸ்ராலின் அகற்றப்பட வேண்டும் என்று லெனின் வலியுறுத்தியிருந்த, நீண்டகாலம் நசுக்கப்பட்டிருந்த மரண சாசனத்தை வாசித்தார்.

நிகிதா குருஷ்சேவ் அவரது “இரகசிய பேச்சை” வழங்குகிறார்

ஸ்ராலின் நீண்ட காலமாக சோவியத் ஒன்றியத்தில் ஒரு தெய்வீக அந்தஸ்து அளிக்கப்பட்ட ஒரு மனிதராக வணங்கப்பட்டிருந்தார், உண்மையில் அவர் ஆயிரக்கணக்கான போல்ஷிவிக் தலைவர்களையும் விசுவாசமான கம்யூனிஸ்டுகளையும் படுகொலை செய்த ஒரு அரசியல் குற்றத்திற்குப் பொறுப்பானவர் என்று திகைப்படைந்த பேராளர்களிடம் குருஷ்சேவ் கூறினார்.

அவர் சொன்னார்:

ஸ்ராலின், மக்களுக்கு அறிவுறுத்தல், விளக்குதல் மற்றும் அவர்களோடு பொறுமையாக ஒத்துழைத்தல் என்பதன் மூலம் அல்லாமல், அவருடைய கருத்துக்களைத் திணித்தல் மற்றும் தன்னுடைய கருத்துக்கு முழுதாக கீழ்ப்படியக் கோருதல் என்பதன் மூலம் செயலாற்றினார். இந்தக் கருத்துக்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அல்லது தங்களது [சொந்த] நிலைப்பாட்டை நிரூபிக்க முயல்கிறார்களோ அல்லது தங்களது [சொந்த] நிலைப்பாட்டின் சரியான தன்மையை நிரூபிக்க முயல்கிறார்களோ அவர்கள் கூட்டுத் தலைமையிலிருந்து அகற்றப்பட்டு, பின்னர் அடுத்தடுத்து தார்மீக ரீதியாகவும் சரீரரீதியாகவும் அழித்தொழிப்புக்கு ஆளாயினர். 1934ல் 17வது கட்சிக் காங்கிரசை அடுத்த காலகட்டத்தின் பொழுது, இது குறிப்பாக உண்மையாக இருந்தது. கம்யூனிசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களும் அதற்கு நேர்மையாக இருந்தவர்களுமான பல முக்கியமான கட்சித் தலைவர்களும் கட்சியின் கீழணிகளில் இருந்த கட்சிப் பணியாளர்களும் ஸ்ராலினுடைய சர்வாதிகாரத்துக்கு பலி ஆக்கப்பட்டனர் ………..

ஸ்ராலின், “மக்களின் எதிரி” என்ற ஒரு கருத்துருவை உருவாக்கினார். இது ஸ்ராலினுடன் எந்த வகையிலும் உடன்படாத எவருக்கும் எதிராக புரட்சிகர சட்டத்தன்மையின் அனைத்து விதிகளையும் மீறி, ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையைப் பயன்படுத்துவதை சாத்தியப்படுத்தியது. மொத்தத்தில், உண்மையில் தற்போதைய சட்ட அறிவியலின் அனைத்து நெறிகளுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்ட, குற்றத்திற்கான ஒரே ஆதாரம், குற்றஞ்சாட்டப்பட்டவரே “ஒப்புதல் வாக்குமூலம்” கொடுப்பதாகும். அடுத்தடுத்த விசாரணையில் நிரூபிக்கப்பட்டவாறு, “ஒப்புதல் வாக்குமூலங்கள்” குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சரீரரீதியான அழுத்தங்களின் மூலமே பெறப்பட்டன. இது புரட்சிகர சட்டத்தன்மையை அப்பட்டமாக மீறலுக்கு வழிவகுத்தது மற்றும் - கடந்தகாலத்தில் கட்சியின் நிலைப்பாட்டைப் பாதுகாத்த (நபர்கள்) - முற்றிலும் அப்பாவி தனிநபர்கள் பலர் பலியாட்களாவதற்கு……. வழிவகுத்தது.

ஒருநபரின் தன்னிச்சையான நடத்தை மற்றவர்களிடம் தன்னிச்சையான தன்மையை ஊக்குவித்து அனுமதித்தது. பரந்த அளவில் கைதுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாடு கடத்தப்படல், சாதாரண விசாரணையின்றி, வழக்கு விசாரணையின்றி மரண தண்டனை விதிக்கப்பட்டமை ஆகியன, பாதுகாப்பற்ற தன்மை, அச்சம் மற்றும் விரக்தியான நிலைமைகளை உருவாக்கின.

இது கட்சியின் அணிகளின் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்து அடுக்குகளிலும் எந்தவிதமான ஒற்றுமைக்கும் பங்களிக்கவில்லை, மாறாக கட்சிக்கு விசுவாசமாக இருந்த, ஆனால் ஸ்ராலினுக்கு சிரமமாக இருந்த தொழிலாளர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதையும் துடைத்தழிக்கப்படுவதையும் கொண்டிருந்தது.[6]

குருஷ்சேவ் மற்றும் அவரது சோவியத் அரசியல் குழுவில் உள்ள அவருடைய கூட்டாளிகள், குற்றங்கள் அனைத்துக்குமான பொறுப்பை ஸ்ராலின் மேல் சுமத்தியதன் மூலம் குற்றங்களுக்கான தங்களது பொறுப்பிலிருந்து அவர்கள் நழுவிக் கொண்டார்கள். ஸ்ராலின் உருவாக்கியிருந்த ஒரு “தனிநபர் வழிபாட்டுக்கு” முழு கட்சியும் புதிரான வகையில் அடிபணிந்தது என்று அவர்கள் கூறிக்கொண்டனர். நிச்சயமாக இந்த அரசியல் பேய்க்கதை எதையும் விளக்கவில்லை. 1920களின் பொழுது ஸ்ராலினை அதிகாரத்துக்கு வரச் செய்த, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயான அரசியல் போராட்டத்தைப் பற்றிய எந்த ஆய்வையும் அது தவிர்த்தது. உட்கட்சிப் போராட்டம் தொடர்பான எந்த விதமான குறிப்பும், குறிப்பிடப்பட்டிருந்த அளவில், ட்ரொட்ஸ்கிக்கு எதிரான பிரச்சாரம் சரியாக அமைந்திருந்தது என்றே குருஷ்சேவ் வலியுறுத்தினார்:

1950 களின் நடுப்பகுதியில் சுலோட்டர்

ட்ரொட்ஸ்கிஸ்டுகள், வலதுசாரிகள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோருக்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்தைக் கட்சி நடத்தியுள்ளது என்பதையும், அது லெனினிசத்தின் அனைத்து எதிரிகளையும் கருத்தியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியது என்பதையும் நாம் உறுதிப்படுத்தியாக வேண்டும். இந்த கருத்தியல் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது அதன் விளைவாக கட்சி வலிமைப்படுத்தப்பட்டது மற்றும் முறுக்கேற்றப்பட்டது. இங்கே ஸ்ராலின் சாதகமான பாத்திரத்தை வகித்துள்ளார்.[7]

நெருக்கடியில் ஸ்ராலினிச கட்சிகள்

குருஷ்சேவின் இரகசிய பேச்சின் உரை சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றவுடன் அது எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. குருஷ்சேவின் வெளிப்படுத்தல்கள் உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் அதிர்ச்சியலைகளைத் தோற்றுவித்தன. அனைத்து பிரதான கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் – அவர்களுள் பெரும்பாலோர் தங்களுடைய நிலைப்பாட்டில் ஸ்ராலினுக்கு கடமைப்பட்டிருந்த நிலையில், பலரும் ஆர்வத்துடன் மாஸ்கோ வழக்கு விசாரணைகளை அங்கீகரித்ததுடன் ஏனைய எண்ணற்ற குற்றங்களையும் நியாயப்படுத்தினர். அவர்கள் உடனடியாக உறுப்பினர்களிடமிருந்து கடலலையைப் போன்று வந்த கேள்விகளை எதிர்கொண்டனர். தங்கள் சொந்த நாடுகளில் தம்மை குட்டி ஸ்ராலினாகக் காட்டிக் கொண்ட, உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கிரெம்ளின் இப்போது “புரட்சிகர சட்டத்தின் மீறல்கள்” என்று குறிப்பிடுவதற்கான தங்களின் தனிப்பட்ட பொறுப்பின் விவரத்தை வழங்கவேண்டும் என்று கேட்கப்பட்டனர். எவ்வளவு காலம் அவர்கள் நனவாக தங்கள் சொந்த தேசிய கட்சிகளின் உறுப்பினர்களை பொய்யான தகவல்களின் அடிப்படையில் தவறாக வழி நடத்தினர்?

ஆனால் ஸ்ராலினிச தலைவர்களை அச்சுறுத்திய கேள்விகள், பெரும்பாலும் ஸ்ராலினிச குற்றங்களின் மறுக்கமுடியாத அம்பலப்படலில் இருந்து தவிர்க்கமுடியாத வகையில் எழும் ஒன்றாக இருந்தன: ட்ரொட்ஸ்கி சரியாக இருந்திருந்தாரா? 1923இல் லெனின் இறுதியாய் நோய்வாய்ப்பட்டபொழுதும் 1924ல் அவரது மரணத்தை அடுத்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளேயும் மூன்றாம் அகிலத்திலும் கட்டவிழ்ந்த போராட்டத்தின் முழு போக்கையும் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் இல்லையா? ட்ரொட்ஸ்கியினுடைய எழுத்துக்களையும் உரைகளையும் வெளியிட வேண்டிய நேரம் வரவில்லையா? ஸ்ராலினுடைய பயங்கரத்தால் பலிக்கடா ஆக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியும் அவரைப் பின்பற்றிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் “புனருத்தாரணம்” செய்யப்பட்டு, மாபெரும் புரட்சியாளர்கள் என கௌரவிக்கப்பட வேண்டாமா?

இந்த வினாக்களில் ஒன்றுக்குக் கூட குருஷ்சேவாலோ அல்லது வேறு எந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராலோ உறுதிப்பாட்டுடன் பதிலளிக்கக் கூடியதாக இருக்கவில்லை. 1920 மற்றும் 30களில் ட்ரொட்ஸ்கியாலும் இடது எதிப்பினாலும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டம், வெறுமனே ஸ்ராலின் என்ற ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிரானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ட்ரொட்ஸ்கியின் விமர்சனம், ஸ்ராலின் ஆளுமை கொண்டிருந்த, முழு அதிகாரத்துவ ஆட்சிக்கும் எதிராக இருந்தது. ட்ரொட்ஸ்கி விவரித்தவாறு ஸ்ராலினிச ஆட்சியானது, தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை, அதிகாரத்துவம் பறித்துக் கொண்டதன் விளைவாக இருந்தது. அது அதனை தனியொரு நாட்டில் சோசலிசம் எனும் மார்க்சிச விரோத தத்துவத்தின் அடிப்படையில் மேற்கொண்டது. சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அதன் நனவான மற்றும் முறையான துரோகங்கள் உட்பட ஸ்ராலினிச ஆட்சியின் குற்றங்கள், சோவியத் ஒன்றியத்திற்குள் 'சமத்துவமின்மையின் போலீஸ்காரராக' செயல்படும் அதிகாரத்துவத்தின் சலுகைகளைப் பாதுகாப்பதில் வேரூன்றியிருந்தது. 1933இல் ஹிட்லர் ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, (இதற்கு கிரெம்ளின் கொள்கைகளே பொறுப்பு), நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க ட்ரொட்ஸ்கியின் அழைப்பு, ஸ்ராலினிச ஆட்சியை சீர்திருத்த முடியாது என்பதையும், அரசியல் புரட்சியின் மூலம் தொழிலாள வர்க்கத்தால் அதை தூக்கிவீசுவது அவசியம் என்பதையும் அவர் அடையாளம் கண்டதுடன் ஒத்துப்போவதாக இருந்தது.

ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தின் சரியானதன்மையை ஒப்புக்கொள்வது என்பது ஒருபுறம் இருக்கட்டும், கிரெம்ளினோ தேசிய ஸ்ராலினிச கட்சிகளோ ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தை கலந்துரையாடுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. உண்மையில் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயலாளர்களான மொறிஸ் தொரேஸ் மற்றும் ஹரி பொல்லிட் ஆகியோர் மாஸ்கோ வழக்கு விசாரணைகளில் பலியானோரை புணருத்தாரணம் செய்ய வேண்டாமென்று குருஷ்சேவை கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். பொல்லிட்டின் தலைமையின் கீழான பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி, பொய்புனைவு வழக்குகளையும் மரண தண்டனைகளையும் அங்கீகரித்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஸ்ராலினிச அமைப்புக்களின் உள்ளே வளர்ந்து கொண்டிருந்த குழப்பங்களை அடக்குவதற்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஜூன் 30, 1956 அன்று, குருஷ்சேவின் இரகசிய பேச்சுக்கு வெறுமனே நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் ஸ்ராலினுடைய குற்றங்கள் பற்றியும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் ஆழ்ந்த அரசியல் காரணங்களைப் பற்றியும் மேலும் கலந்துரையாடுவதையும் நிறுத்த முயற்சித்தது.

மொறிஸ் தொரேஸ்

ஸ்ராலினிச அமைப்புகளுக்குள்ளே குருஷ்சேவின் பேச்சால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடியானது, 1956 இலையுதிர் காலத்தில் போலந்திலும் ஹங்கேரியிலும் வெடித்தெழுந்த எதிர்ப்புகளால் பெரியளவில் உக்கிரம் அடைந்தது. ஸ்ராலினிசமயமாக்கல் அகற்றப்பட்டது மற்றும் சுய சீர்திருத்த நடைமுறைகள் பூர்த்தியடைந்து இருந்ததாக கிரெம்ளின் ஆட்சி கூறிக்கொண்ட, தமக்கு சேவை செய்யும் கூற்றுக்கள், புடாபெஸ்ட்டுக்கு டாங்கிகளை அனுப்புவதற்கான மற்றும் ஹங்கேரிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை கொடூரமாக நசுக்குதற்கான அதன் முடிவால் தகர்த்தெறியப்பட்டன.

1956 இல் புடாபெஸ்ட்

கிரெம்ளின் தனது தலையீட்டை பாசிச எதிர்ப்புரட்சியை ஒடுக்குவதாக முன்வைத்த பொழுது, இந்தப் பொய்கள் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால உறுப்பினரான பத்திரிகையாளர் பீட்டர் ஃபிரையர் (Peter Fryer) -இன் அறிக்கைகளால் மறுக்கப்பட்டன. அவர் கட்சியின் இதழான டெய்லி வேர்க்கரின் செய்தித் தொடர்பாளராக ஹங்கேரிக்கு பயணம் செய்திருந்தார். அவருடைய செய்தியறிக்கைகள், கிரெம்ளினின் பிரச்சாரத்துடன் முரண்பட்டதால், அவை பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியால் தணிக்கை செய்யப்பட்டன. பீட்டர் ஃபிரையர் டெய்லி வேர்க்கர் பத்திரிகையிலிருந்து அவருடைய இராஜினாமாவை அறிவித்த பொழுது, பிரிட்டிஷ் ஸ்ராலினிஸ்டுகள் அவர் மீது விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பதிலாகத் தொடுத்தனர். அவரை தனிமைப்படுத்தும் நம்பிக்கையுடன் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் அவரை தற்காலிக நீக்கம் செய்தது மற்றும் பின்னர் அவரை வெளியேற்றியது. ஆனால் இந்த அதிகாரத்துவ நடவடிக்கையானது அமைப்பிற்கு மேலும் அவப்பெயரைத்தான் ஏற்படுத்தியது. சில மாதங்களுக்குள்ளேயே 7,000 பேர் அல்லது தோராயமாக அதன் உறுப்பினர்களில் 20 சதவீதம் பேர் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து இராஜினாமாச் செய்தனர்.

அவர் வெளியேற்றப்பட்ட போதிலும், 1956 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஃபிரையரின் ஹங்கேரியப் புரட்சி பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட அணிகளில் பின்விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் இரு துன்பியலை எழுதினார். முதலாவது “ஒரு மக்கள் புரட்சி – கொடுங்கோன்மைக்கும் வறுமைக்கும் எதிரான மக்கள் எழுச்சி அது தாங்கமுடியாததாகிவிட்டது- அதுவே உலகின் முதலாவது சோசலிச அரசின் படையால் நசுக்கப்பட்டது.” [8]

ஃபிரையர் கிரெம்ளினின் பொய் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்:

பிற்போக்காளர்கள் எழுச்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்தனர் என்பது மறுக்க முடியாததாக இருந்தபோதிலும், எழுச்சியானது பாசிஸ்டுகளாலோ அல்லது பிற்போக்காளர்களாலோ ஒழுங்கமைக்கப்படவும் இல்லை கட்டுப்படுத்தப்படவும் இல்லை என்பதை நானே என் கண்களால் பார்த்தேன், உண்மையில் பாசிஸ்டுகளால் அல்லது பிற்போக்காளர்களால் அல்ல, மாறாக ஹங்கேரியின் சாதாரண பொதுமக்களால்: தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இவர்களால் போராடப்பட்ட “எதிர்ப் புரட்சிக்கு” எதிரான சண்டையில் சோவியத் துருப்புக்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதை நானே என் கண்களால் பார்த்தேன். ஜேர்மன் பாசிச ஆதிக்கத்திலிருந்து 1944-45 இல் ஹங்கேரியை விடுதலை செய்த இராணுவம், -பெரும் நிலப்பிரபுக்கள் பெருமுதலாளிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டிருந்ததை விரட்டியடித்தது மற்றும் நிலச்சீர்திருத்தத்தை சாத்தியமாக்கியது மற்றும் சோசலிச கட்டமைப்பை ஆரம்பித்தது- இந்த இராணுவம்தான் இப்பொழுது ஹங்கேரிய மக்களின் சிறந்த புதல்வர்களுடன் போராட இருந்ததாம். [9]

படையெடுப்பானது 20,000 ஹங்கேரியர்கள் 3,500 ரஷ்யர்கள் உயிரைப் பலிகொண்டது, புடாபெஸ்ட்டின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டன, பத்தாயிரக் கணக்கானோர் சண்டையில் காயமடைந்தனர்.

இரண்டாவது துன்பியல் இந்த தலையீட்டின் நீண்டகால அரசியல் விளைவுகளாகும். நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து செஞ்சேனை ஹங்கேரியை விடுவித்த மரபுரிமையானது சோவியத் ஒன்றியத்துக்கான ஆதரவைக் கொண்டிருந்தது, இப்போது அழிக்கப்பட்டது. அது ரஷ்யா மீதான வெறுப்பு மற்றும் தீவிர திசைவிலகலால் பிரதியீடுசெய்யப்பட்டது. ஃபிரையர் எழுதினார்:

பெரும்பாலான ஹங்கேரியர்கள் முதலாளித்துவம் திரும்ப வருவதையோ அல்லது நிலவுடைமையாளர்கள் திரும்ப வருவதையோ விரும்பாத அதேவேளை, இன்றைய வெறுப்பு, மற்றும் சரியாக அவர்களுக்கு வறுமையின் ஆட்சி, கடினத்தன்மை மற்றும் அச்சம் ஆகியன கம்யூனிசமாக முன்வைக்கப்பட்டது. இந்த பொய்களுக்கான பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் தோள்மீது, பிரதானமாக மக்களுக்கு பூமியில் சொர்க்கத்திற்கு உறுதி வழங்கிய, அட்மிரல் ஹோர்த்தியின் போருக்கு முந்தைய பாசிச சர்வாதிகாரத்தைப் போல, அடக்குமுறை நிரம்பிய மற்றும் குற்றகரமான ஒரு போலீஸ் அரசை அவர்களுக்கு வழங்கிய ராக்கோசி, ஃபர்க்காஸ் மற்றும் ஜெரோ ஆகியோரின் தோள்களில் விழுந்தது. தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, பொய் கூறவைக்கப்பட்டனர். விவசாயிகளும் சுரண்டப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, பொய் கூறவைக்கப்பட்டனர். எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பொய் கூற வைக்கப்பட்டு மிகவும் இறுக்கமான கருத்தியல் உறைக்குள் பிழிந்தெடுக்கப்பட்டனர்.

ஒருவர் மனதிலுள்ளதைப் பேசுவது, ஒரு ஆணித்தரமான கேள்வியைக் கேட்பது, பாதுகாப்பான, பழக்கமான ஒரே வாசகம் கொண்ட மொழியில் அரசியல் வினாக்கள் பற்றறிப் பேசுவது கூட எங்கும் நிறைந்த இரகசிய போலீசாரின் முன் தவறிழைக்கும் ஆபத்தை ஏற்படுத்த இருந்தது. அதிக ஊதியம் பெறும் இந்த அமைப்பின் நோக்கம், முதலாளித்துவத்தை மீட்கும் முயற்சிகளில் இருந்து வெளிப்படையாக மக்களைப் பாதுகாப்பதாகும், ஆனால் நடைமுறையில் அது தன்னலக்குழுவாட்சியின் அதிகாரத்தைப் பாதுகாத்தது. அதற்காக அது தணிக்கை, சிந்தனைக் கட்டுப்பாடு, சிறையிடல், சித்திரவதை மற்றும் படுகொலை உட்பட, மிகவும் வெறுக்கத்தக்க வழிமுறைகளைப் பயன்படுத்தியது. கொடுமை என்னவெனில், அத்தகைய ஆட்சிதான் ஒரு சோசலிச சமூகமாக, ‘மக்கள் ஜனநாயகமாக’, கம்யூனிசத்திற்கான முதலாவது அடியெடுப்பாக முன்வைக்கப்பட்டது. [10]

ஹங்கேரிக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளின் மற்றொரு துன்பியலுக்கு ஃபிரையர் பின்னர் கவனத்தை ஈர்த்தார்.

கொடுங்கோன்மையை முழு இருதயத்தோடும் ஆத்மாவோடும் பாதுகாத்தோம், அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை நாம் கூட ஒப்புக்கொள்ளவில்லை. சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் மாநாட்டால் நாங்கள் ஓரளவு கண்மூடித்தனமாக இருப்பதற்கு முன்பு, சோசலிசத்தைக் கட்டுதலில் உள்ள 'எதிர்மறை அம்சங்கள்' என்று அழைக்கப்பட்டதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த 'எதிர்மறை அம்சங்களை' ஆரோக்கியமான விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் மூலம் வென்றுவர முடியும் என்று நாங்கள் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தோம். இருபதாவது காங்கிரசுக்குப் பின்னர் ‘தவறுகள்’, ‘வசவுகள்’, ‘சோசலிச சட்டத்தன்மையின் விதிமீறல்களை’ சிலநேரங்களில் பெரிதும் துணிவாக, ’குற்றங்களைப்’ பற்றிப் பேசும் சுதந்திரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் பிரச்சாரம் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததாக எங்களுக்குக் கூறிய, ஆனால் நம் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பிய பிரகாசமான புதிய சமுதாயத்தின் தோற்றத்தைக் காணும் எங்கள் சொந்த ஆர்வத்திற்கு நாங்கள் இன்னும் பலியாகிவிட்டோம்.[11]

ஸ்ராலினிசத்தின் நெருக்கடிக்கு பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பதிலிறுப்பு

1956ன் இறுதியில் இவ்வாறு கொந்தளித்துக் கொண்டிருந்த மாதங்களின் பொழுது, பீட்டர் ஃபிரையர் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசத்தின் தலைவரான ஜெர்ரி ஹீலியை சந்தித்தார். ஹீலி, மாஸ்கோ வழக்குகளைப் பற்றி கேள்விகள் எழுப்பியதற்காக 1937ல் பிரிட்டிஷ் கம்யூனிட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். ட்ரொட்ஸ்கிச இயக்கம் “மன்றம்” (The Club) என்று அறியப்பட்டிருந்தது. அது தொழிற் கட்சிக்குள் ஒரு கன்னையாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விநியோகிக்கப்பட்ட அறிக்கை ஒன்று, ஃபிரையர் ஹீலியால் ஈர்க்கப்பட்டது, “ஸ்ராலின் பற்றி சரியாக இருந்திருந்தார் என்பதன் காரணமாக மட்டுமல்ல, ஸ்ராலினிசத்திற்கு காரணமான ஒரு வரலாற்றுத் தத்துவத்தை பெருமையுடன் பேசியதாலாகும்.” [12] எனக்குறிப்பிட்டது.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் விநியோகிப்பதற்காக ஹீலி ஃபிரையரின் “ஹங்கேரிய துயரம்” என்பதை சிறுவெளியீடாக வெளியிட ஏற்பாடு செய்தார்.

ஜெர்ரி ஹீலி

சிறிய பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கம், ஸ்ராலினிசக் கட்சியின் நெருக்கடியில் தலையீடு செய்தது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் சாதனையாகும். இந்த தலையீட்டிற்கான அடிப்படை அரசியல் மற்றும் கட்டாயம் அவற்றைச் சொல்லியாக வேண்டும், ஒரு புத்திஜீவிதத் தூண்டலை ஜெர்ரி ஹீலி வழங்கினார். அவரது முக்கியான பங்களிப்பு, அவருடைய எதிரிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளான தனிப்பட்ட சுறுசுறுப்பு, கீழ்ப்படியாத உறுதிப்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க சொற்பொழிவுத் திறன் ஆகியவற்றால் வெறுமனே தீர்மானிக்கப்படவில்லை. அவரது வாழ்வின் மிக முக்கிய கட்டத்தில், தலைவர் என்ற வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ஹீலியின் பண்புகள், ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியால் எழுப்பப்பட்ட மாபெரும் வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றிய தெளிவின் அடித்தளத்தின் மீதுதான் தொழிலாள வர்க்கத்தின் புதிய பரந்த புரட்சிகரக் கட்சியை, நான்காம் அகிலத்தைக் கட்டியாக வேண்டும் என்ற புரிதலாக இருந்தது. இந்தத் தெளிவானது, காலம் அனுமதிக்கும்போது கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்ற வெறுமனே கட்சி கட்டும் “அம்சம்” அல்ல. அது ஹீலி அடிக்கடி வலியுறுத்துகிறவாறு, புரட்சிகரக் கட்சியை கட்டுதலின் சாரம், புரட்சிகர காரியாளர்களையும் தொழிலாள வர்க்கத்தையும் கல்வியூட்டுவதற்கான தவிர்க்க முடியாத அடிப்படையாக இருந்தது.

மேலும், “மன்றம்”, அதன் சிறிய அளவும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிதி வளங்களும் இருந்தபோதிலும், முந்தைய மூன்று ஆண்டுகளில் நான்காம் அகிலத்திற்குள் அது நடத்தியிருந்த அரசியல் போராட்டத்தினால், உலக ஸ்ராலினிச இயக்கத்தின் உள்ளே எழுந்த நெருக்கடிக்கு அரசியல் ரீதியில் தயார்செய்யப்பட்டிருந்தது.

நான்காம் அகிலமும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமும்

1953 நவம்பரில் சமரசம் செய்யப்பட முடியாத அரசியல் மற்றும் வேலைத்திட்ட வேறுபாடுகள், நான்காம் அகிலத்தை முரண்படும் இரண்டு கன்னைகளாக பிளவுபடுத்தியது. நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலகத்தின் செயலாளரான மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு கன்னை, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் அத்தோடு தொடர்புடைய கட்சிகளின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் பற்றி 1933 மற்றும் 1938க்கு இடையில் ட்ரொட்ஸ்கியால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆய்வானது, இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் பின்னரான பின்விளைவுகளால் இருவகையிலும் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது மற்றும் மறுக்கப்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்திருந்தது. நாஜி ஜேர்மனி மீதான சோவியத் வெற்றியும் கிழக்கு ஐரோப்பாவின் “இடைத்தடை நாடுகளில்” “மக்கள் ஜனநாயகங்களை” நிறுவியமையும் ட்ரொட்ஸ்கி முன்கூட்டியே எதிர்பார்த்திராத புரட்சிகரப் பாத்திரத்தை ஸ்ராலினிசம் வகிக்கிறது என்பதை விளக்கிக்காட்டியுள்ளது. பப்லோ மற்றும் மண்டேலின் கருத்துப்படி, இந்த “ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்” சோசலிசத்திற்கு ஒரு மாற்றுப் பாதையையும் ஸ்ராலினிச கட்சிகளின் மேற்பார்வையின் கீழ் அவை அடையப்பட முடியும் என்பதையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.

இந்தத் திருத்தல்வாத முன்னோக்கானது பப்லோ மற்றும் மண்டேல் (அப்போது “ஜேர்மைன்” என்ற கட்சிப் பெயரை அவர் பயன்படுத்தினார்) இருவராலும் எழுதப்பட்ட பத்திரத்தில் விவரிக்கப்பட்டிருந்தது. அது 1951ல் சர்வதேச செயலகத்தின் ஒன்பதாவது நிறைபேரவையில் (Plenum) ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது விளக்கியது:

எமது இயக்கத்தைப் பொறுத்தவரை புறநிலை சமூக யதார்த்தம் என்பது அடிப்படையில் முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஸ்ராலினிச உலகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முதலாளித்துவத்தை எதிர்க்கும் அபிரிமிதமான பெரும்பான்மை சக்திகள் சோவியத் அதிகாரத்துவத்தின் செல்வாக்கு மற்றும் தலைமையின் கீழ் இப்போதே காணப்படுவதன் காரணமாக, இரண்டு அடிப்படைக்கூறுகளும் பெரிய அளவில் புறநிலை சமூக யதார்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. [13]

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் மேலும் மேலும் அதிகரித்துவரும் மோதலானது, ஒரு புதிய உலகப் போருக்கு வழிவகுக்கும், அது ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையிலான உலகப் புரட்சியின் வடிவத்தை எடுக்கும், அதன் விளைவாக நூற்றாண்டுகளுக்கு நீடித்திருக்கும் “ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை” உருவாக்கும். “முதலாளித்துவ ஆட்சி”க்கும் “ஸ்ராலினிச உலகிற்கும்” இடையிலான அழிவுகரமான போரைப் பற்றிப் பார்க்கையில், நான்காம் அகிலம் சுயாதீனமாக நீடித்திருப்பதற்கான நியாயம் எதுவும் இல்லை என்று பப்லோ வலியுறுத்தினார்:

அகிலத்தின் மூன்றாம் உலகக் காங்கிரஸால் பல்வேறு வகை நாடுகளில் வகுக்கப்பட்ட முழுத் தந்திரோபாயமும், சர்வதேச நிலைமை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் உலகப்போரை நோக்கிய ஒரு குறிப்பிடப்பட்ட தன்மையுடனும் மற்றும் அப்போதுள்ள சக்திகளுக்கிடையிலான உறவுகளாலும் மீளமுடியாதவாறு செல்கின்றது என்ற எங்களின் அடிப்படை மதிப்பீட்டினாலே தீர்மானிக்கப்படுகின்றது என்பதை இப்போது மீண்டும் மீண்டும் கூறுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.

எங்களுக்கும், எங்களை விட்டு வெளியேறியவர்கள் உட்பட ஏனைய அனைவருக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், நாம் செயலற்ற முறையில் இந்த அவதானிப்பைச் செய்யவில்லை, மிகவும் உடன்படக்கூடிய, எளிதான வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை நாம் நம் ஆத்மாவின் ஆழத்தில் கனவு காணவில்லை. பிரமைகளில் எம்மையே நாம் தாலாட்டிக்கொள்ள விரும்பவில்லை. இந்த நிலைப்பாட்டின் விளைவாக நடைமுறையில் இப்போதே செயல்பட முயற்சிக்கிறோம். [14]

கட்டவிழ்ந்துவரும் உலக “போர்-புரட்சி”யில் அவர்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை என்ற மட்டத்திற்கு, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிச இயக்கங்களுக்கு ஆலோசகராக சேவை செய்து, புறநிலை நிகழ்வுகள் கோரியபடி ஒரு புரட்சிகர வழியைப் பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பர். எனவே, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தங்கள் சொந்த அமைப்புகளைக் கலைத்து ஸ்ராலினிச கட்சிகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் வரம்பு மீறாத இந்த அரசியல் பாத்திரத்தைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

இந்த முன்னோக்கால் தூண்டிவிடப்பட்ட அரசியல் மோதலானது, 1953 மார்ச் 5 அன்று ஸ்ராலினது மரணத்திற்குப் பின் உடனடியாக சோவியத் ஒன்றியத்தில் நடந்த அபிவிருத்திகளால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ராலினது கடவுள் போன்ற அந்தஸ்தை குறைப்பதற்கும், சர்வாதிகாரியின் வாழ்வின் இறுதி மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட விசித்திரமான யூத எதிர்ப்பு பிரச்சாரத்தை நிறுத்துவதற்கும், அரச ஒடுக்குமுறையின் மட்டத்தைக் குறைக்கவும், புதிய கிரெம்ளின் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பப்லோவாலும் மண்டேலாலும் சோவியத் அதிகாரத்துவத்தின் சுய-சீர்திருத்த முற்போக்கு நிகழ்வுகளின் அடையாளங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தக் கற்பனையானது, 1953 ஜூனில், கிழக்கு பேர்லினில் வால்டர் உல்பிரிட்ச் தலைமையில் ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாளர்களின் எழுச்சியை கொடூரமாகத் தாக்கியபோது, விரைவிலேயே தகர்ந்துபோனது.

அவர்களின் ஊக்குவிப்புடன், கலைப்புவாதக் கன்னைகள், நான்காம் அகிலத்தின் தேசிய பகுதிகளில் வளர்ந்தன. அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியில், கொஹ்ரான் மற்றும் கிளார்க்கால் தலைமை தாங்கப்பட்ட பப்லோவாத கன்னை, “பழைய ட்ரொட்ஸ்கிசத்தை குப்பையில் போடு” என்ற முழக்கத்தை ஏற்றுக் கொண்டது. நான்காம் அகிலத்தின் பிரிட்டிஷ் பகுதியில் ஜோன் லோரன்ஸ் தலைமையிலான பப்லோவாத கன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த “மன்றத்தை” கலைப்பதற்கு கோரினர்.

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வைத் திருத்தலானது, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மீதான பப்லோவாத தாக்குதலின் முக்கியக் கூறாக இருந்தது. ஆனால் அது ட்ரொட்ஸ்கிசத்தை மறுதலிப்பது மார்க்சிச இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான தலைமைத்துவத்தின் தீர்க்கமான பங்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவுக்கான அதன் போராட்டம் இவற்றை உள்ளடக்கி இருக்கிறது. கொஹ்ரான் மற்றும் கிளார்க் கன்னையின் வெளியேற்றத்தை அடுத்து, சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இன் தேசியக் குழுவில் 1953, நவம்பர் 3 அன்று ஜேம்ஸ் பி. கனன் வழங்கிய அவரது சுருக்கமான உரையில் பின்வருமாறு விளக்கப்பட்டது:

தலைமைத்துவம் என்பது முழு உலகின் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கப்படாத பிரச்சினையாகும். உலகத் தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான ஒரே தடை தலைமை பற்றிய தீர்க்கப்படாத பிரச்சினையாகும். அதுதான் “கட்சி பற்றிய கேள்வி” யின் அர்த்தமாகும். அதுதான் இடைமருவு வேலைத்திட்டம், தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடி தலைமை நெருக்கடி என்று கூறும்போது அர்த்தப்படுத்துவதாகும். அதன் அர்த்தம், போராட்டத்தில் வெகுஜனங்களைத் தலைமையேற்கச் செய்யக்கூடிய, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் நனவான வெளிப்பாட்டை, ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்குவதற்கான பிரச்சினையை, தொழிலாள வர்க்கம் தீர்க்கும் வரையில், பிரச்சினையானது தீர்க்கப்படாமலேயே தொடர்ந்து இருக்கும். அதுதான் அனைத்துப் பிரச்சினைகளிலும் மிகவும் முக்கியமானது: அதாவது கட்சி பற்றிய பிரச்சினை ஆகும்.

இப்போது நாம் தெளிவாகப் பார்க்கின்றவாறு பப்லோவாதத்துடனான எமது முறிவானது அது ஒரு புள்ளியை பிரதானமாகப் பார்த்தால், ஒரு புள்ளியில் கவனம் செலுத்தினால், அது இதுதான்: கட்சி பற்றிய பிரச்சினை ஆகும். செயலில் பப்லோவாதத்தின் அபிவிருத்தியை நாம் பார்த்திருக்கின்றவாறு, இப்போது அது நமக்கு தெளிவாகத் தெரிகிறது. பப்லோவாத திருத்தல்வாதத்தின் சாராம்சம், ட்ரொட்ஸ்கிசத்தின் அந்த மிக முக்கியமான பகுதியைத் தூக்கி எறிவதாகும்: மனிதகுலத்தின் நெருக்கடி தொழிலாளர் இயக்கத்தின் தலைமை நெருக்கடி என்ற கருத்துருவானது கட்சி பற்றிய கேள்வியில் சுருக்கிக் கூறப்படுகிறது.

பப்லோவாதத்தின் நோக்கம், ட்ரொட்ஸ்கிசத்தை அழிக்க விரும்புவது மட்டுமல்லாமல், ட்ரொட்ஸ்கி லெனினிடமிருந்து கற்றுக்கொண்ட ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு பகுதியையும் அழிக்க விரும்புகிறது. அவரது முழு சகாப்தத்திலும் லெனினிது மகத்தான பங்களிப்பு, புரட்சியில் தொழிலாளர்களை தலைமையேற்று நடத்திச்செல்ல வல்ல ஒரு முன்னணிக் கட்சியைக் கட்டுதற்கான அவருடைய கருத்தும் உறுதியான போராட்டமும் ஆகும். மற்றும் அவர் அவருடைய தத்துவத்தை அவரது சொந்த நடவடிக்கையை மேற்கொண்ட காலத்திற்குள் மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் எல்லா வழிகளிலும் 1871க்குச் சென்று, முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியின், பாரிஸ் கம்யூனின் தோல்வியில் தீர்க்கமான காரணி, வெகுஜன இயக்கத்திற்கு நனவான வேலைத்திட்டத்தையும் உறுதியான தலைமையையும் கொடுக்கக்கூடிய புரட்சிகர மார்க்சிச முன்னணிப் படையின் கட்சி ஒன்று இல்லாமல் இருந்தது என்று கூறினார். 1917ல் லெனினின் இந்தப் பகுதியை ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொண்டதுதான், ட்ரொட்ஸ்கியை லெனினிசவாதியாக ஆகச் செய்திருந்தது.

அதுதான் இடைமருவு வேலைத்திட்டத்தில் எழுதப்பட்டிருந்த, புரட்சிகரக் கட்சியின் தீர்க்கமான பாத்திரம் பற்றிய லெனினிசக் கருத்தாகும். இந்த கருத்துக்கள், எப்படியோ துரோக ஸ்ராலினிச அல்லது சீர்திருத்த அதிகாரத்துவங்களுக்குள் ஊடுருவுகின்றன மற்றும் ஏதாவதொரு வகையில், “வால்நட்சத்திரம் தோன்றும் நாளில்”, சோசலிசப் புரட்சி உணரப்பட்டு, புரட்சிகர மார்க்சிச, அதாவது லெனினிச-ட்ரொட்ஸ்கிச கட்சி இல்லாமல் சோசலிசப் புரட்சி அடையப்பட முடியும், என்ற கருத்துருக்கு ஆதரவாக பப்லோவாதிகள் இதைத் தூக்கி எறிந்தனர். இதுதான் பப்லோவாதத்தின் சாராம்சமாகும். பப்லோவாதம் என்பது ஒரு வழிபடல் முறையாகவும் மற்றும் ஒரு கட்சி மற்றும் ஒரு திட்டத்திற்கான வெளிப்பாடாகவும் இருக்கிறது. [15]

1953 நவம்பர் 16 அன்று கனன் உலகெங்கிலுமுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு பப்லோ மற்றும் பப்லோவாதத்துடன் தீர்க்கமான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான முறிவைச் செய்யுமாறு அழைப்பு விடுக்கும் அவரது பகிரங்க கடிதத்தை வெளியிட்டார். அந்தக் கடிதத்தில், ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை பப்லோவின் திருத்தலை கனன் ஐயத்திற்கிடமின்றி நிராகரித்தார், அதில் அவர் எழுதியதாவது:

1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஸ்ராலினிசம் தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கையை காட்டிக்கொடுக்கின்ற வகையில் ஸ்ராலினிசம் செயல்பட்டு, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்க வைத்திருப்பதுடன், பின்னர் அக்கறையின்மைக்கு கொண்டு சென்றது, அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது முடியாட்சி ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் அதற்கான விலையைச் செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டுள்ளது. [16]

ஒரு வாரம் கழித்து, 1953 நவம்பர் 23 இல், பப்லோவின் சர்வதேச செயலகத்திற்கு எதிராக, உலகெங்கிலுமுள்ள மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைமை அங்கமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமைப்பை அறிவிக்கும் ஒரு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுத் தீர்மானத்தில் கையெழுத்திட்ட நால்வருள் ஜெர்ரி ஹீலியும் ஒருவராக இருந்தார்.

1953 பிளவில் இருந்து தோன்றிய பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கம் அரசியல் ரீதியாக வலிமையாக இருந்தது. ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வை அது பாதுகாப்பது, பப்லோ, மண்டேல் போலல்லாமல், கிரெம்ளினுக்குள்ளேயான கன்னைப் போராட்டங்கள் பற்றிய பதிவுவாத மதிப்பீடுகளை அது தவிர்க்கும்படி செய்தது. அதிகாரத்துவத்திற்குள்ளே (மெலென்கோவ் அல்லது ஒருவேளை மிக்கோயானதை) ஏதாவது ஒன்றை முற்போக்கான போக்கு என்பதற்கான வாய்ப்பு வளங்களின் மீது பப்லோ மற்றும் மண்டேல் முடிவற்றவகையில் ஊகித்தனர். பிற்போக்கான மற்றும் சாத்தியமற்ற “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” மற்றும் அதன் புதுப்பிக்கப்பட்ட மாற்றுவகையான ஏகாதிபத்தியத்துடன் “சமாதான சகவாழ்வு” என்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒட்டுமொத்த ஸ்ராலினிச இயக்கமும் முழு நெருக்கடியில் இருப்பதாக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வலியுறுத்தினர்.

ஹீலி பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை அணிதிரட்டல்

ஆகையால், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1956-ன் நெருக்கடிக்கு தயாரிப்புச் செய்யப்பட்டிருந்தார்கள். இருபதாவது காங்கிரசுக்கு ஆற்றிய உரையில் குருஷ்சேவ் ஸ்ராலினைக் கண்டனம் செய்திருந்தார் என்ற செய்தி அறிவிப்புக்களை ஹீலி முதல்முறையாகக் கேட்டபொழுதான குளிர்கால இறுதியின் குளிரும் தூறலும் நிறைந்த சனிக்கிழமை பிற்பகலை பின்னாளில் நினைவு கூர்ந்தார். பிரிட்டிஷ் பத்திரிகைகளில் முழு உரையும் இறுதியாக வெளியிடப்பட்டபொழுது, “இரகசிய பேச்சு” ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையை குறிக்கிறது என்பதை ஹீலி உடனே புரிந்துகொண்டார். சோவியத் அதிகாரத்துவத்திற்கும் “ஸ்ராலினின் பொய்மைப்படுத்தல் பள்ளிக்கும்” எதிராக 1923க்கும் 1940க்கும் இடையில் இறுதிவரை “முதியவரால்” தொடுக்கப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டம் ஒரு தகுதிவாய்ந்த வாயிலிருந்து அல்லது, இன்னுஞ் சொல்லப்போனால், நிக்கிதா குருஷ்சேவின் வாயிலிருந்தே நேரடியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ஹீலி என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தார். அவரது சிறிய இயக்கத்தின் உறுப்பினர்கள் தங்களால் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமுள்ள ஸ்ராலினிஸ்டுக் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் கொண்ட ஒரு பட்டியலைத் தொகுக்கும்படி உறுப்பினர்களை அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். அவர்கள் கடந்த காலத்தில் ட்ரொட்ஸ்கிசத்தைப் பற்றி என்ன சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, அவர்களைச் சந்திக்குமாறும், குருஷ்சேவ் பேச்சுப் பற்றி கலந்துரையாடுமாறும் கட்சி உறுப்பினர்களுக்கு ஹீலி அறிவுறுத்தினார். ஹீலி தாமே இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து முழுவதும், இரயிலிலும் காரிலும் பயணம் செய்து, 1937 இல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்படுவதற்கு வாக்களித்த முன்னாள் 'தோழர்கள்' உட்பட, தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது தெரிந்து வைத்திருந்த அனைவரையும் சந்தித்தார். இளம் கம்யூனிஸ்ட் கழகத்தில் தனது காலத்திலிருந்த “பழைய நண்பர்களை” தொடர்பு கொண்டார். அவர்களுள் சிலர் சக்தி மிக்க தொழிற்சங்க காங்கிரசில் (TUC) உயர்ந்த மற்றும் வலிமைவாய்ந்த பொறுப்புக்களுக்கு உயர்ந்திருந்தனர்.

நேரத்தை எடுத்துக்கொள்ளும் கடினமான மற்றும் பெரும்பாலும் விரக்தி ஏற்படுத்தும் பணியாக அது இருந்தது. அங்கே கடந்தகால தவறுகளுக்காக நிறைய தலையாட்டல்கள், சில அழுகைகள் மற்றும் அவ்வப்போது மன்னிப்பும் கூட இருந்தது. ஹீலி 1930களில் தான் நெருக்கமாகச் சேர்ந்து பணியாற்றியிருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். ஒருவர் ஹீலியை வெளியேற்றியதற்குப் பின்னர் அவரோடு பேச மறுத்திருந்தார், பொது ஆர்ப்பாட்டங்களில் அவர்களின் பாதைகள் குறுக்காக கடந்துசெல்லும் போதிலெல்லாம் அவரை “மோஸ்லிவாத” (Mosleyite) பாசிஸ்ட் (மோஸ்லி, பிரிட்டனில் தலைமை பாசிஸ்டுகள்) என்று பொதுவெளியில் அவமதித்திருந்தவர். அவர் இப்பொழுது போக்குவரத்து மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தில் 19 முன்னணி பொறுப்புக்களில் ஒன்றை வகித்திருந்தார். ஹீலி, குருஷ்சேவின் பேச்சை பந்திக்குப் பந்தி படித்துக் காட்டினார். ஹீலி பேச்சு பற்றிய அவரது மதிப்பீட்டை முடித்திருந்தபொழுது, இப்பொழுது சக்திவாய்ந்த தொழிற்சங்க அலுவலர், “நல்லது ஜெர்ரி, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் சொல்வது சரிதானென்று நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார். ஆனால் அவர் ஸ்ராலினிஸ்டுகளுடன் பகிரங்கமாக முறித்துக் கொண்டதைத் தவிர, ட்ரொட்ஸ்கியைப் புனருத்தாரணம் செய்வதைக் கோருவதற்கு அவர் விரும்பவில்லை. தொழிற்சங்கத்தில் அவரது நிலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஆதரவைச் சார்ந்திருந்தது.

பல சிரமங்கள் இருந்தபோதிலும், ஹங்கேரியின் படையெடுப்புக்கு முன்னரே, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வளர்ந்து வரும் அதிகரித்த எண்ணிக்கையிலான அதிருப்தியாளர்கள் மத்தியில் கணிசமான இருப்பை நிறுவுவதில் ஹீலியும் மன்றமும் (CLUB) வெற்றி பெற்றன. ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஹீலியால் வென்ற கம்யூனிஸ்ட் கட்சி புத்திஜீவிகளில் டாம் கெம்ப் மற்றும் பிரையன் பியர்ஸ் ஆகியோர் அடங்குவர். ஹீலியும் மன்றமும் தொழிற் கட்சிக்குள்ளே எழுப்பிய முக்கியமான வரலாற்றுப் பிரச்சினைகள், சமூக ஜனநாயக சீர்திருத்தவாதத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றீட்டை தேடிக் கொண்டிருந்தோர் மத்தியில் ஆதரவைப் பெற்றது.

தொடரும்

Notes:

[1] Cliff Slaughter, A New Party for Socialism—Why? How? By Whom? On What Programme? Answers to Some Burning Questions—And Some New Questions (London: Workers Revolutionary Party, 1996), p. 68.

[2] Workers Press, November 18, 1974, p. 12.

[3] Barbara Slaughter, email to David North, July 27, 2021.

[4] Barbara Slaughter, email to David North, July 26, 2021.

[5] Barbara Slaughter, Remarks upon opening the founding congress of the Socialist Equality Party (US), July 2008.

[6] https://www.marxists.org/archive/khrushchev/1956/02/24.htm

[7] Ibid.

[8] https://www.marxists.org/archive/fryer/1956/dec/introduction.htm

[9] Ibid.

[10] Ibid.

[11] Ibid.

[12] This citation comes from a review of The Death of Uncle Joe by Alison Macleod, published by the journal Revolutionary History, Volume 7, No. 2. Macleod, who wrote for the Daily Worker from 1944 until her resignation in 1957, remained bitterly hostile to Trotskyism and to Gerry Healy. This makes her acknowledgment of Healy’s influence on Fryer, a fact that Macleod deplores, all the more significant. The reviewer was also hostile to Healy, who he refers to as Fryer’s Mephistopheles. https://www.marxists.org/history/etol/revhist/backiss/vol7/no2/heisler.html

[13] Cited in David North, The Heritage We Defend, in the chapter titled “The Nature of Pabloite Opportunism” (https://www.wsws.org/en/special/library/heritage/15.html)

[14] “For a Decisive Turn in France,” International Information Bulletin, November 1952, p. 5.

[15] James P. Cannon, Speeches to the Party (New York: Pathfinder Press, 1973), pp. 181–82.

[16] Cliff Slaughter, ed., Trotskyism Versus Revisionism: A Documentary History (London: New Park Publications, 1974), Vol. 1, The Fight Against Pabloism in the Fourth International, pp. 298–301.

Loading