கிளிஃவ் சுலோட்டர்: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு

பகுதி நான்கு

பகுதி1| பகுதி2| பகுதி3| பகுதி4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது கிளிஃவ் சுலோட்டரின் அரசியல் வாழ்க்கை வரலாற்றின் 1928க்கும் 1963க்கும் இடையிலான காலப்பகுதியின் இறுதிப்பாகமாகும். 1963 லிருந்து அவரது மறைவு வரையான, அரசியல் வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகம், இந்த ஆண்டின் இறுதில் வெளிவரும்.

லெனின் இயங்கியல் பற்றி கிளிஃவ் சுலோட்டர்

லேபர் ரிவியூ இன் அதே இதழில் 'புரட்சியின் பட்டறையில்: லெனினின் மெய்யியல் குறிப்பேடுகள்' என்ற தலைப்பில் சுலோட்டர் எழுதிய மூன்று பகுதி கட்டுரையின் முதல் பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு துண்டுப்பிரசுரமாக இயங்கியல் பற்றி லெனின் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இது சுலோட்டரின் தத்துவார்த்த படைப்புகளில் மிகவும் அறியப்பட்டதும் மிகவும் செல்வாக்குமிக்கதும் என்பதை நிரூபித்தது. இக்கட்டுரை சமூக நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளின் பகுப்பாய்வில் இயங்கியல் சடவாதத்தின் (dialectical materialism) தொடர்பை தெளிவுபடுத்துவதில் பெரும் பங்களிப்பாக இருந்தது. பப்லோவாதத்துடன் மீண்டும் இணைவதற்கான சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) உந்துதலுக்கு எதிரான போராட்டத்தின் உள்ளடக்கத்தில் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் 1939-40 குழுவாத மோதலில் ட்ரொட்ஸ்கியின் சடவாத இயங்கியலை வெளிப்படுத்தியதைப் போன்று இந்தக் கட்டுரை முக்கியத்துவமானது. மார்ச் 1963 இல் சுலோட்டரால் எழுதப்பட்டு, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழுவின் அறிக்கையாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பவாதம் மற்றும் அனுபவவாதம் என்பதுடன் இணைந்து, சோசலிச தொழிலாளர் கட்சியுடனான பிளவுக்குப் பின் வந்த ஆண்டுகளில், அனைத்துலகக் குழுவின் காரியாளர்களை பயிற்றுவிப்பதில் இயங்கியல்பற்றி லெனின் பெரும் பங்கு வகித்தது.

மேலும், அனைத்துலகக் குழு முழுவதும் சுலோட்டருக்கு வழங்கப்பட்ட உயர் மரியாதை, அவரது இந்த எழுத்துக்களை தோழர்கள் ஊக்கத்துடன் கற்றுக்கொண்டதையே கூடியளவில் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

1961 இல் லெனினின் நூல் திரட்டுக்களின் புதிய ஆங்கில மொழி பதிப்பினை சோவியத் வெளியீட்டாளர்கள் வெளியிட்டது ஒரு பெரிய அரசியல் மற்றும் புத்திஜீவித நிகழ்வாக இருந்தது. இந்த பதிப்பில் ஒரு புதிய தொகுதியான எண் 38, மெய்யியலின் முக்கிய படைப்புகள் பற்றிய லெனினின் ஆய்வின் போது எடுக்கப்பட்ட கணிசமான குறிப்புகளின் தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. இந்தக் குறிப்புகளில் மிக முக்கியமானவை அவருடைய 'ஹேகலின் தர்க்க விஞ்ஞானத்தின் விளக்க மதிப்பீடு' மற்றும் 'மெய்யியலின் வரலாறு குறித்த ஹேகலின் சொற்பொழிவுகளின் விளக்க மதிப்பீடு' தொகுதி 38 'இயங்கியல் பற்றிய கேள்வி' என்ற ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரையையும் உள்ளடக்கியது. முதலாம் உலகப் போர் வெடித்ததைத் தொடர்ந்து லெனின் சுவிட்சர்லாந்திற்கு வந்த பின்னர், 1914-15ல் இந்தப் படைப்புகள் எழுதப்பட்டன.

லெனினின் நூல் திரட்டுக்களின் புதிய பதிப்பை வெளியிடுவதற்கு முன்பு, ஹேகல் பற்றிய லெனினின் குறிப்புகள் சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே முற்றிலும் அறியப்படவில்லை. லெனினின் Cahiers philosophiques (மெய்யியல் குறிப்பேடுகள்) பிரெஞ்சு மொழி பதிப்பு 1955 இல் வெளியிடப்பட்டிருந்ததுடன், பரவலாகக் குறிப்பிடப்படும் ஒன்றாகவும் இருந்தது.

இருப்பினும், ஆங்கிலத்தில் லெனினின் மெய்யியல் குறிப்பேடுகளின் வெளியீடுகள் அவற்றின் வாசகர்களின் எண்ணிக்கையை பெரிதும் விரிவுபடுத்தியது மற்றும் லெனினின் அரசியல் மற்றும் அறிவார்ந்த பாராட்டுக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் குறிப்பேடுகள் லெனின் மகத்தான ஆழமான சிந்தனையாளர் என்பதை தெளிவாக நிறுவியது. சந்தர்ப்பங்கள் கிடைத்தவுடன் உள்ளுணர்வுடன் பதிலளிக்கும் வெறுமனே ஒரு தேரச்சி்பெற்ற நடைமுறைக்கு பொருத்தமான அரசியல்வாதியாக மட்டுமே அவரைச் சித்தரிக்கும் அனைத்து முயற்சிகளும் இதனால் தகர்ந்தன. லெனின் ஒருமுறை கோர்கிக்கு எழுதிய கடிதத்தில், மிகவும் சிக்கலான மற்றும் அருவமான கருத்துருக்களைப் (concepts) புரிந்துகொள்ளக்கூடிய, மெய்யியலில் ஒரு “தேடுபவர்” என்று தன்னை விவரித்திருந்தார்.

விளாடிமீர் லெனின்

தொகுதி 38 மூலம் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்விகள் பின்வருவனவாகும்: 1917 இல் போல்ஷிவிக்குகளால் அதிகாரம் கைப்பற்றப்படுவதற்கும் லெனினின் 1914-15 இல் ஹேகல் பற்றிய ஆய்வுகளுக்கும் என்ன தொடர்பு? தீவிரமான உலகப் போரின் சூழ்நிலையில் லெனின், பேர்னில் உள்ள சுவிஸ் தேசிய நூலகத்தில் மெய்யியல் நூல்களின் மிகவும் கடினமான மற்றும் அருவமான விஷயங்களில் ஒன்றான ஹேகலின் தர்க்கத்தின் விஞ்ஞானத்தில் ஏன் பல மணித்தியாலங்களை செலவிட்டார்? குறிப்பேட்டால் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்வி, லெனின், சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் (Materialism and Empirio-Criticism) என்ற முன்னர் எழுதிய மெய்யியலின் முந்தைய படைப்புடன் அவற்றின் தொடர்பாகும். பிந்தைய நூலான குறிப்பேடு “கொச்சை” சடவாதத்தின் மறுபரிசீலனை என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டது. ஹேகல் பற்றிய லெனினின் குறிப்புகள் மந்தமான “எந்திரரீதியிலான சடவாதம்” தன்னிலிருந்து விலகி சடவாதம் மற்றும் கருத்துவாதத்தின் ஒரு “இயங்கியல்” கலவையை நோக்கிய அவரது தத்துவார்த்த கண்ணோட்டத்தில் ஒரு அடிப்படை மறுநோக்குநிலையைக் குறிக்கின்றனவா? ஹேகலின் செல்வாக்கின் கீழ், லெனின் இறுதியாக ஒளியைக் கண்டு, கருத்துவாதத்தின் மீதான அவரது முந்தைய தணியாத விரோதத்தை கணிசமாக மாற்றியமைத்தாரா?

சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமையானது தொகுதி 38 இனை வெளியிடுவதற்கு முன் குறிப்பேடுகளைப் பற்றி அறிந்திருந்தது. 1958 இல் லேபர் ரிவியூ- இல் 'மெய்யியலாளராக லெனின்,' என்ற ஒரு கட்டுரையில் பீட்டர் ஃபிரையர், பிரெஞ்சு Cahiers philosophiques (மெய்யியல் குறிப்பேடுகள்) இலிருந்து பத்திகளை மேற்கோள் காட்டியிருந்தார். இயங்கியல் சிந்தனையின் நுணுக்கங்களைப் பற்றி சிறிதும் புரிந்துகொள்ளாத இயந்திரரீதியாக சடவாதத்தைப் பின்பற்றுபவராக லெனினை E.P. தாம்சன் அவமதிப்புடன் நிராகரித்தார். இதனைத் தப்பென்று காட்டுவதற்கு ஃபிரையர் தானாகவே குறிப்பேடுகளின் பிரெஞ்சு மொழியிலிருந்து முக்கிய கட்டுரையை மொழிபெயர்த்து பதிலளித்திருந்தார். [73]

மெய்யியல் குறிப்பேடுகளின் உள்ளடக்கங்களும் முக்கியத்துவமும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமைக்குள்ளே, குறிப்பாக, ஹீலி, சுலோட்டர், டாம் கெம்ப் மற்றும் சிரில் ஸ்மித் ஆகியோருக்கு இடையே தீவிர கலந்துரையாடல்களுக்கு உட்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹீலி, குறிப்பாக, சோசலிச தொழிலாளர் கட்சி உடனான போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஆய்வு நெறிமுறை ரீதியான (methodological) பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்க்க ஆர்வமாக இருந்தார். 1939-40 குழு மோதலில் ஜேம்ஸ் பேர்ன்ஹாமின் நடைமுறைவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் தலையீட்டை நினைவுபடுத்தி, சோசலிச தொழிலாளர் கழகம் ஏற்கனவே சோசலிச தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் குறைந்த மட்டத்திலான மற்றும் சாதாரணமான நடைமுறைக்கேற்ற கணக்கீடுகளின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியது. புதிய தொகுதி குறித்து ஒரு கட்டுரை எழுதுமாறு ஹீலி சுலோட்டரை வலியுறுத்தியிருக்கலாம். கட்டுரை எழுதுவதை ஊக்குவிக்கும் கருத்துக்கள் அதன் தொடக்கத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன:

இந்த எழுத்துக்கள் இங்கும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கான புரட்சிகர கடமைகளுக்கு பதிலளிக்க மார்க்சிச தத்துவத்தை வளர்க்கும் செயல்முறையில் முற்றிலும் விலைமதிப்பற்றவை என்பதை நிரூபிக்கும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு புரட்சிகர தலைமையின் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக லெனின் தத்துவத்திற்கு தனது மகத்தான பங்களிப்பைச் செய்ததைப் போலவே, இன்று தத்துவார்த்த அபிவிருத்திக்கு சமூக ஜனநாயக, ஸ்ராலினிச இயக்கங்களின் காட்டிக்கொடுப்புக்களையும் தத்துவார்த்த சீரழிவையும் கடக்கும் உயிர்வாழும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இது செய்யப்படமுடியும். அந்தக் காட்டிக்கொடுப்புக்களின் விளைவுகளை வெற்றிகொள்வது வார்த்தைகள் தொடர்பான கேள்விகள் அல்ல, மாறாக அதன் வரலாற்றுப் பாத்திரத்தின் நனவைப் பெறுவதற்கு தேவையான தத்துவத்தை அபிவிருத்தி செய்வதனூடாக தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அவசியமான மூலோபாயத்திற்குமான மாற்றுத் தலைமையை உருவாக்குவதாகும்.

எனவே, லெனினின் எழுத்துக்களை வாசிக்கையில், எங்கள் தற்போதைய பிரச்சனைகளுக்கான எழுதிவைக்கப்பட்ட தீர்வுகளை கண்டுபிடிப்பதல்ல எமது நோக்கம். இந்த சிறந்த சிந்தனையாளரும் அரசியல் தலைவரும் பயன்படுத்தும் வழிமுறையை (method) பற்றிய நுண்ணறிவைப் பெறுவதே எங்கள் நோக்கமாகும். இந்த வழிமுறையை பயன்படுத்தி லெனின் உலக முதலாளித்துவத்தின் தன்மை மற்றும் அவரது சொந்தக் காலத்தின் சமூக உறவுகள் மற்றும் கருத்தியல்கள் பற்றி குறிப்பாக ரஷ்யாவில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். இந்த கண்டுபிடிப்புகள் வழிமுறையை விட மிகவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. லெனினின் இயங்கியல் வழிமுறையை பயன்படுத்துவது பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியின் புதிய நிலைகளை பகுப்பாய்வு செய்யும் அவரின் திறனுக்கும், அரசியல் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களின் அவரின் மேதாவித்தனத்திற்கும் திறவுகோலாக இருந்தது [அழுத்தம் மூலத்தில் உள்ளது]. [74]

ஹேகலின் தர்க்கவியல் பற்றிய லெனினின் குறிப்புகளை சடவாதமும் அனுபவவாத விமர்சனத்துடனான ஒரு முறிவாக முன்வைப்பதற்கான முயற்சிகளை சுலோட்டர் நிராகரித்தார்:

1914-15ல் லெனின் ஹேகலைப் படித்தபோதுதான் இயங்கியல் புரிந்தது என்று சில வட்டாரங்களில் கூறுவது வழக்கம்; இது நிரூபிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்வது கூட, உண்மையிலே காலத்திற்கேற்ற கோலமானது. அவரது ஆரம்பகால எழுத்துக்களில் லெனின் பண்படாத மற்றும் இயந்திரத்தனமாக இருந்தார் எனக்கூறப்படுவதுண்டு. இந்த பண்படாததன்மை அவரது சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் (1908) இல் மிகவும் வெளிப்படையாக இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இதன் தாக்கம் கட்சியின் அமைப்புரீதியான மற்றும் அரசியல் கேள்விகள் மீதான அவரது அணுகுமுறைகள் கடுமையானதாகவும் பிடிவாதமானதாகவும் இருந்தன. இந்த விடயம் மிகவும் குறுகிய அடித்தளத்தில் தங்கியிருப்பதைக் காண்பது முக்கியம்: லெனினின் சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் உள்ளிட்ட உண்மையான எழுத்துக்களைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, பிந்தைய படைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பகுதிகள் பொதுவாக நமக்கு வழங்கப்படுகின்றன. இது அதன் உள்அர்த்தத்தைச் சிதைக்கிறது அல்லது குறிப்பேடுகளிலிருந்து தொடர்ச்சியான சிறுமேற்கோள்கள் லெனின் தனது மெய்யியல் கடந்த காலத்தை நிராகரிக்கின்றார் என்று காட்டுவதாக இருக்கின்றன…..

முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஹேகலைப் படித்தது லெனினின் தத்துவத்தை செழுமைப்படுத்தியது மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் முரண்பாடுகளின் சாரத்தினுள் இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவியது என்பதில் இப்போது சந்தேகம் இல்லை. என்றாலும், அவரது அரசியல் வாழ்க்கையின் 'முன்-ஹேகலியன்' மற்றும் 'பின்-ஹேகலியன்' கட்டங்களுக்கு இடையே இப்போது அடிக்கடி செய்யப்படுகின்ற கடுமையான எல்லைகளை வரையறுப்பது மிகவும் தவறாகும். மாறாக லெனினின் சொந்த படைப்பிலேயே உண்மையான இயங்கியல் வளர்ச்சி உள்ளது. [75]

அவரது கட்டுரையின் இரண்டாம் பகுதியில் சுலோட்டர், லெனினின் ஹெகல் பற்றிய படைப்புகளை, சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) உடனான கலந்துரையாடலில் இருந்து எழுந்த அரசியல் பகுப்பாய்வு மற்றும் நடைமுறையின் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தினார். சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர் ஜோசப் ஹான்சன் —பின்னர் அனைத்துலகக்குழுவால் FBI தகவலளிப்பவராக அம்பலப்படுத்தப்பட்டார்— எந்தவொரு அரசியல் சூழ்நிலையின் “நிகழ்வுகளுக்கும்” ஒரு பதிவுவாத பிரதிபலிப்பின் அடிப்படையில் ஒரு அரசியல் நடைமுறையை ஆதரித்தார். இது சடவாதமாக அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ஒரு வகையான செயலற்ற 'புறநிலைவாதத்துடன்' இணைந்து செல்கின்றது. இது அரசியல் நிகழ்வுகளை, பொதுவாக மனித நடவடிக்கைக்கு முற்றிலும் வெளியேயும் மற்றும் சுயாதீனமானதாகவும் மற்றும் குறிப்பாக 'விமர்சன-புரட்சிகர' நடைமுறைக்கு வெளியேயும் கட்டவிழ்ந்திருந்தாற்போல மதிப்பிடுகின்றது என சுலோட்டர் வலியுறுத்தினார்.

1. குறிப்பேடுகள் எழுதுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு லெனின் 1894 வரை விளக்கியிருந்தவாறு, புறநிலைவாதிகள் இந்த அல்லது அந்த அரசியல் விளைவுகளின் 'தவிர்க்க முடியாத தன்மை' பற்றி பேசுகிறார்கள். ஆனால் மார்க்சிச (இயங்கியல்) சடவாதியைப் போலல்லாமல், அவர்கள் இந்த நிகழ்ச்சிப்போக்கிற்கு “எந்த சமூக-பொருளாதாரக் கட்டமைப்பு சரியாக உள்ளடக்கத்தைக் கொடுக்கிறது மற்றும் எந்த வர்க்கம் இந்தத் தேவையைத் தீர்மானிக்கிறது' என்பதை வெளிப்படுத்தத் தவறிவிடுகின்றனர்.[76] இவ்வாறு, சுலோட்டர் வலியுறுத்தியது போல், பதிவுவாதமுறையில் 'முடிவடைந்துவிட்ட நிகழ்வுகளை வழிபடுதல்' மற்றும் புறநிலைவாத செயலற்ற தன்மை ஆகியவற்றின் கலவையானது, கட்சியானது மார்க்சிச கட்சி என்று விவரிக்கப்படும் மட்டத்திற்கு, நிகழ்வுகளில் தலையிட்டு, தொழிலாள வர்க்கத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அதன் பொறுப்பைத் தவிர்த்து, நிகழ்வுகளுக்கு ஒரு செயலற்ற பார்வையாளரின் பங்கைக் கட்சிக்குக் கொடுத்து, அத்தகைய சாத்தியமான புறநிலைமை இருக்கும் அளவிற்கு, அந்நிகழ்வுகளை, புரட்சிகர திசையில் திருப்ப முயற்சிக்கும் வகையில், கட்சியின் பங்கைக் குறைக்கின்றது.

அரசியலில் அத்தகைய மார்க்சிசமற்ற மற்றும் திருத்தல்வாத அணுகுமுறையை எதிர்ப்பதில், ஹேகல் மீதான லெனினின் பணி புரட்சிகர இயக்கத்தை பலப்படுத்துகிறது என்று சுலோட்டர் வாதிட்டார்:

உலகெங்கிலும் பெரிய விஷயங்கள் நடக்கும்போது, ஹேகல் பற்றிய லெனினின் குறிப்பேடுகள் மிகவும் கவனம்கொடுக்கத் தேவையில்லாத தெளிவற்ற ஒன்றாகத் தோன்றலாம். இருப்பினும், துல்லியமாக மெய்யியல் துறையில்தான் கூர்மையான மற்றும் சமரசமற்ற போராட்டம் நடத்தப்பட்டாக வேண்டும். இங்கே ஒரு தவறான கருத்துருவாக்கம் (conception) என்பது ஒரு முழு தவறான வழிமுறையைக் குறிக்கும், மெய்நிகழ்வுகளுக்கு (facts) இடையிலான உறவுகள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன, மேலும் பேரழிவு தரும் தவறான முடிவுகள் எடுக்கப்படும். உதாரணமாக, சில 'மார்க்சிஸ்டுகள்' மார்க்சிச முறை, அனுபவவாதத்தின் அதே தொடக்கப் புள்ளியைக் கொண்டுள்ளது என்று அனுமானிக்கின்றனர்.

அதாவது, 'உண்மையில் என்ன நிகழ்ந்தது' என்பதில் இருந்து தொடங்குகிறது எனப்படுகின்றது. அப்படியானால், லெனின் மற்றும் பிறர் ஏன் ஹேகல் மற்றும் இயங்கியல் முறைக்கு அதிக நேரம் செலவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதாக இருக்கும். நிச்சயமாக, ஒவ்வொரு விஞ்ஞானமும் மெய்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எவ்வாறாயினும், 'மெய்நிகழ்வுகளின்' வரையறையும் மற்றும் நிறுவுதலும் எந்த விஞ்ஞானத்திற்கும் முக்கியமானது. ஒரு விஞ்ஞானத்தை உருவாக்கும் ஒரு பகுதி துல்லியமாக அதன் வரையறைகள் மற்றும் அதன் சொந்த விதிகளைக் கொண்ட ஒரு ஆய்வுத்துறையாக வரையறுக்கப்படுகிறது: 'மெய்நிகழ்வுகள்' அனுபவத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் இந்த மெய்நிகழ்வுகளின் விஞ்ஞானமானது நடைமுறைக்கு ஒரு அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள அடிப்படையை வழங்கும் வகையில் புறநிலைரீதியாக மற்றும் விதிரீதியாக உட்தொடர்புடையது. சமூகம் மற்றும் அரசியல் துறையில் எங்கள் 'அனுபவவாத' மார்க்சிஸ்டுகள் இந்த நிலையிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். அவர்களின் நடைமுறை என்னவென்றால்: 1848 அல்லது 1921 அல்லது 1938 இல் இருந்தது போல மெய்நிகழ்வுகளின் அடிப்படையில் எங்களிடம் ஒரு திட்டம் இருந்தது; இப்போது மெய்நிகழ்வுகள் தெளிவாக வேறுபடுகின்றன, எனவே எங்களுக்கு வேறு திட்டம் தேவை. ….

இது 'மெய்நிகழ்வுகள்' பற்றிய தவறான மற்றும் மார்க்சிசம் அல்லாத பார்வை, இந்த திருத்தல்வாதக் கருத்துக்களுக்கு வழிவகுக்கிறது. நமது 'புறநிலைவாதிகள்' என்ன சொல்கிறார்கள், 'வரலாறு நம் பக்கம் உள்ளது' என்ற செய்தியுடன், இதுதான்: நடக்கும் பெரிய போராட்டங்களைப் பாருங்கள், அவற்றைப் பகுப்பாய்வு செய்யாமல் ஒன்றாக இணைக்கவும். அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய உங்கள் பதிவுகளுக்குச் சென்று, இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும் மற்றும் உங்களிடம் 'மெய்நிழ்வுகள்' உள்ளன. காலனித்துவப் புரட்சிகள் இங்கே வெற்றிகரமாக உள்ளன, அங்கேயும், மற்றொரு இடத்திலும் வெற்றி பெறுகின்றன. எனவே, காலனித்துவ புரட்சியின் வெற்றி என்பது ஒரு மெய்நிகழ்வு. நெரூமா (Nkrumah) மற்றும் மொபோயா (Mboya) மற்றும் நாசர் போன்ற தேசியவாதத் தலைவர்கள் 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' உரைகளை நிகழ்துகிறார்கள் மற்றும் தேசியமயமாக்கல்களையும் செய்கிறார்கள்; வரலாறு, பாட்டாளி வர்க்கம் அல்லாத அரசியல்வாதிகளைக் கட்டாயப்படுத்தி திரும்பமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத வகையில் சோசலிச திசையில் செல்ல நிர்ப்பந்திக்கின்றது. ஆனால் இந்த வகையான 'புறநிலைவாதம்' என்பது பதிவுவாதங்களின் தொகுப்பாகும், ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட பகுதிகளைக் கொண்ட முழுத்தோற்றத்தினதும் செழுமையான இயங்கியல் பகுப்பாய்வு அல்ல. ஒரு உண்மையான புறநிலை பகுப்பாய்வு, உலக அளவில் மற்றும் நாடுகளுக்குள் உள்ள வர்க்கங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகளிலிருந்து தொடங்குகிறது. இந்த வர்க்கங்களின் தேவைகளுக்கும் அவற்றின் நனவு மற்றும் அமைப்புக்கும் இடையிலான உறவுகளின் பகுப்பாய்வின் மூலம் இது தொடர்கிறது. இவற்றின் அடிப்படையில் அது சர்வதேச மற்றும் ஒவ்வொரு தேசிய அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கான தனது வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொள்கிறது. 'முற்போக்கு சக்திகளின்' பட்டியல் ஒரு புறநிலைரீதியான பகுப்பாய்வு அல்ல! இது நேர்மாறானது, அதாவது, வெறுமனே மேலெழுந்தவாரியான பதிவுவாதங்களின் திரட்டலும், அப்போதுள்ள வர்க்கப் போராட்டம் பங்கேற்பாளர்களால், பிரதானமாக அதற்கு தலைமை வகிக்கும் தேசியவாத இயக்கங்களுக்கும் அதிகாரத்துவமயமாக்கப்பட்ட தொழிலாளர் இயக்கங்களுக்கும் தலைமை வகிக்கும் குட்டிமுதலாளித்துவ அரசியல்வாதிகளால் நடத்தப்படுவது போன்று நிலவும் விஞ்ஞானபூர்வமற்ற நனவை ஏற்றுக்கொள்வதுமாகும். இந்தத் தத்துவார்த்த பிழையை காஸ்ட்ரோவும் மற்றவர்களும் 'இயற்கையான' மார்க்சிசவாதிகள் [ஹான்சன் மற்றும் SWP கூறியது போல்] எனக்கூறுவதால் மேலே பூசிமூடுவது சம்பந்தப்பட்ட “தத்துவம் வகுப்பாளர்களுக்கு” அவர்கள் எவ்வளவு தூரம் சென்றார்கள் என்பது பற்றி சிறிதும் தெரியாது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. வெகுஜனப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் எளிதாகவும் தன்னியல்பாகவும் புரட்சிகர கருத்துக்களை வந்தடையும்போதே அதிகபட்ச புரட்சிகர பதட்டத்தின் காலங்கள் உள்ளன என்று அவர்கள் பரிந்துரைக்க முனைவது போலுள்ளது. இதற்கு மாறாக, இது போன்ற சமயங்களில் துல்லியமாகவே ஒரு நீண்டகாலப் போராட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட விஞ்ஞானபூர்வமான நனவு, தத்துவம் மற்றும் மூலோபாயம் மீதான உச்ச மதிப்பு நிலவுகின்றது.

பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றின் சாராம்சம், விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை வளர்ப்பதற்கான அதன் நனவான முயற்சியும் அந்த விஞ்ஞானத்திற்கு ஏற்ப ஒரு மூலோபாயமும் ஆகும். மார்க்சிசத்தை நோக்கிய 'இயற்கையான' முன்னேற்றங்கள் பற்றிய அனைத்துப் பேச்சுக்களும் இந்த செயல்முறையைத் தொடர வேண்டிய அவசியத்தின் மீதான தாக்குதலாகும். ஒரு அனுபவவாதி, சமூக நிகழ்ச்சிப்போக்கின் பல்வேறு பகுதிகளை நாளுக்கு நாள் அவை தம்மைத்தாமே முன்வைப்பதிலிருந்து படிக்க முடியும் என்று நம்புகிறார். இவற்றை ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் ஒரு 'யதார்த்தமான' அல்லது 'புறநிலைரீதியான' முழுத்தோற்றத்தினையும் சர்வதேச முன்னோக்கையும் கொடுக்கும் என்கிறார். [77]

சுலோட்டர் 'மெய்நிகழ்வுகள்' பற்றி ஒரு திமிர்பிடித்த அலட்சியத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு, பெரும்பாலும் ஆய்வுநெறிமுறைகள் (methodology) பற்றி முற்றிலும் தெளிவற்ற, சமூக நலன்கள் மற்றும் மோசமான அரசியல் மற்றும் புத்திஜீவிதமான தப்பெண்ணங்களே 'மெய்நிகழ்வுகள்' முக்கியமானதா அல்லது முக்கியமற்றதா என்று முடிவு செய்வதை நனவற்ற முறையில் தீர்மானிக்க இட்டுச்செல்வதாக நடைமுறைவாதிகளால் குற்றம்சாட்டப்படுகின்றது. சிந்தனை நிகழ்ச்சிப்போக்கிற்கு பயன்படுத்தப்படும் கருத்துகளுக்கு மிகக்குறைவான கவனமே செலுத்தப்படுகிறது. இந்த பொதுவான புத்திஜீவிதக் குறைபாடு பற்றித்தான் ஹேகல் குறிப்பாக தனது தர்க்க விஞ்ஞானத்தில் கவனம் செலுத்தியிருந்தார், மேலும் இதுதான் ஹேகலின் பாரிய படைப்பு பற்றிய, ஒரு சடவாதியாக லெனினது ஆய்வின் மையமாக இருக்கின்றது. தத்துவார்த்தரீதியாக நனவான (அதாவது இயங்கியல் சடவாத) சிந்தனையின் அடிப்படை முக்கியத்துவத்தின் மீதுதான் புறநிலை யதார்த்தத்தின் விஞ்ஞானபூர்வமான துல்லியமான பிரதிபலிப்பு இருப்பதாக லெனினால் விளக்கப்பட்டது:

தர்க்கம், அறிந்துகொள்ளலின் விஞ்ஞானமாகும். இது அறிவின் தத்துவமாகும். அறிவு என்பது, மனிதனின் இயற்கையின் மீதான பிரதிபலிப்பாகும். ஆனால் இது எளிமையான அல்லது, உடனடியான அல்லது, முழுமையான பிரதிபலிப்போ அல்ல. ஆனால் ஒரு தொடரான அருவங்களின் நிகழ்ச்சிப்போக்கு, கருத்துருக்கள் மற்றும் விதிகள் போன்றவற்றின் அபிவிருத்தி ஆகும் மற்றும் இந்த கருத்துருக்கள், விதிகள் போன்றவை (சிந்தனை, விஞ்ஞானம் = 'தர்க்கரீதியான கருத்து') எப்போதும் நகரும் மற்றும் அபிவிருத்தியடையும் இயற்கையின் உலகளாவிய விதிகளால் ஆளப்படும் தன்மையை நிபந்தனையுடன், தோராயமாக அரவணைத்துக் கொள்கின்றன. இங்கே உண்மையில், புறநிலை ரீதியாக, மூன்று விடயங்கள் உள்ளன: 1) இயற்கை 2) மனித அறிகை = மனித மூளை (இதே இயற்கையின் மிக உயர்ந்த உற்பத்திப் பொருளாக), மற்றும் 3) மனித அறிகையில் இயற்கையின் பிரதிபலிப்பு தோற்றம். மற்றும் இந்த வடிவம் துல்லியமாக கருத்துருக்கள் (concepts), விதிகள் (laws), கருத்தினங்கள் (categories) போன்றவற்றைக் கொண்டுள்ளது. மனிதன் இயற்கையை அதன் முழுமையில், அதன் உடனடி மொத்தத்தில் முழுவதுமாக கண்ணாடி இயல்பில் =பிரதிபலிக்க= புரிந்துகொள்ள முடியாது. மாறாக அருவங்கள், கருத்துருக்கள், விதிமுறைகள் மற்றும் உலகின் விஞ்ஞானரீதியான தோற்றம் முதலியனவற்றை உருவாக்குவதன் மூலம் எப்போதும் அதற்கு நெருக்கமாக வரமுடியும்.[78]

ஜோர்க் வில்ஹெம் பிரெடெரிக் ஹேகல்

இயங்கியல் தர்க்கத்தை பற்றிய ஹேகலின் விளக்கவுரையின் மகத்தான முக்கியத்துவத்தை சுலோட்டர் விளக்கும் அதே வேளையில், அவரது எழுத்துக்களின் கருத்துவாத அடித்தளங்களையும், அதனால் அதன் மட்டுப்படுத்தல்களையும் வலியுறுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டினார். மேலும், அவர் எச்சரித்தார்: 'இயங்கியல் முறை' என்பது ஒரு குறுக்குவழி என்று கருதுவது இந்தக் கடின உழைப்பை [பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பகுப்பாய்வு] தேவையற்றதாகக் கருதுவது இயங்கியலைப் ‘பிரயோகிப்பது’ பற்றி அழகாகப் பேசுபவர்களின் தவறாகும்.[79]

இயங்கியல் தர்க்கத்தை விரித்துரைப்பதில் ஹேகலின் முன்னேற்றங்களைத் திறம்பட மற்றும் விஞ்ஞானபூர்வமாக நியாயமாகவே அணுகுவதற்கு மார்க்சுக்கு ஒரு மெய்யியல் விமர்சனம் மட்டுமின்றி, சடவாதத்திற்கு திரும்புவதன் மூலம் மட்டுமே சாத்தியமானது. சுலோட்டர் இதனைப் பின்வருமாறு விளக்குகின்றார்:

இளம் மார்க்ஸ், ஹேகலை மெய்யியல் ரீதியாக நிராகரித்ததில் மட்டுமல்லாமல், சடவாதத்தை நோக்கிய தனது இந்த திருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மார்க்சால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானரீதியான பொருளாதார மற்றும் சமூக ஆய்வின் மீதும் லெனின் தன்னை அடித்தளமாகக் கொண்டிருந்தார் என்பதை உறுதியாகக் கூற முடியும். 'மனிதனால் உருவாக்கப்பட்ட புறநிலை உலகம்' திட்டவட்டமான உற்பத்தி-உறவுகளின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட சமூக-பொருளாதார அமைப்புகளின் தொடர்ச்சியால் உருவாக்கப்பட்டதாகும். உற்பத்தி சக்திகள், திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சுரண்டுவதற்காக மனிதர்கள் ஒழுங்கமைத்த இந்த 'பொருளாதாரக் கட்டமைப்புகள்', முழுமனித அனுபவங்களால் உருவாக்கப்பட்டதால், அவை அனைத்து மனித செயல்பாடுகளின் புறநிலை அடித்தளங்களாக இருப்பதால் அந்தச் செயல்பாட்டுக்கான விஞ்ஞானரீதியான தத்துவங்களுக்கும் அடித்தளமாகவும் இருக்கின்றன. கற்பனாவாத மெய்யியலின் முடிவோடு, சமூக விஞ்ஞானத்தின் பணி அல்லது வரலாற்று சடவாதத்தின் பணி, 'பொருளாயத வாழ்வில் உற்பத்தி முறையில்' தொடங்கி, சமூக வாழ்வில் அத்தியாவசியமான இணைப்புக்களையும் முரண்பாடுகளையும் பதிவு செய்வதாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான அதன் போராட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ய இந்த முரண்பாடுகளை தொழிலாள வர்க்கத்திற்கு உணர்த்துவதுதான் மார்க்ஸின் வாழ்க்கைப் பணியாகும். இதற்காக அவர் முதலாளித்துவ சமுதாயத்தினையும் மற்றும் அதன் முரண்பாடுகளையும் பற்றிய விஞ்ஞானரீதியான ஆய்வுக்கு பெரிதும் அர்ப்பணித்திருந்தார். முதலாளித்துவ சமுதாயத்தின் வீழ்ச்சி, பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் மற்றும் அதன் உச்சக்கட்டமான புரட்சிகரக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் நனவு அல்லது தத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளைப் பற்றி மேலும் செறிவூட்டப்பட்ட மதிப்பீட்டை உருவாக்கும் பொறுப்பும் வாய்ப்பும் இன்று மார்க்சிஸ்டுகளுக்கு உள்ளது. இந்த திசையில் முக்கிய பங்களிப்புகள் 1896 க்கும் அவரது இறப்புக்கும் இடையில் லெனினாலும் பின்னர் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலினிச சீரழிவைத் தடுப்பதற்கும் மற்றும் 1922க்கும் 1940க்கும் இடையில் ஏகாதிபத்தியத்தின் வன்முறையான வீழ்ச்சியின் காலத்தில் நான்காம் அகிலத்தை உருவாக்குவதற்குவதற்கான அவரது போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியாலும் செய்யப்பட்டன. [80]

சுலோட்டரின் கட்டுரையின் தாக்கம் அனைத்துலகக் குழுவில், குறிப்பாக சோசலிச தொழிலாளர் கட்சியுடன் பிளவுபட்டதன் விளைவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வென்றெடுக்கப்பட்ட சக்திகளின் மீதான தாக்கத்தை மிகைமதிப்பீடு செய்ய முடியாது. எனது சொந்த தத்துவார்த்த கல்வி மற்றும் அரசியல் வளர்ச்சியில் இந்த கட்டுரையின் முக்கியத்துவத்தை குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன். 1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்தை நோக்கி தொழிலாளர் புரட்சிக் கட்சி திசைதிருப்பப்படுவது அதிகளவில் தெளிவாகத் தெரிந்ததால், இந்தப் பின்னோக்கிய போக்கிற்கும் லெனினின் குறிப்பேடுகள் பற்றிய போலி-ஹேகலிய தவறான புரிதலை நோக்கி ஹீலி பின்வாங்குவது ஆகியவற்றுக்கும் இடையேயான உறவின் பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஹீலியின் அணுகுமுறையின் செல்லுபடியாகும் தன்மை குறித்த எனது சந்தேகங்கள், அதாவது உண்மையில் தொகுதி 38 பற்றிய அவரது சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் தவறானவை மற்றும் விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கை 1982 இலையுதிர்காலத்தில் லெனினின் இயங்கியல் பற்றி என்னை மீண்டும் வாசிக்கத் தூண்டியதில் பெரும் பங்குவகித்தது. நான் சுலோட்டரின் படைப்பிலிருந்து நீண்ட பிரிவுகளை நகலெடுத்து, அதில் சுய விளக்கத்திற்காக எனது சொந்த கருத்துக்களைச் சேர்த்தேன்.

லெனினின் குறிப்பேடுகளை படிப்பதற்கான சுலோட்டரின் அணுகுமுறையின் மதிப்பீட்டினை பற்றி நான் பின்வருமாறு எழுதினேன்:

சுலோட்டர், ஹேகலின் தர்க்கவியல் பற்றிய லெனினின் ஆய்வின் பெரும் முக்கியத்துவத்தை சரியாக வலியுறுத்தும் அதேவேளையில், ஹேகலின் கருத்துவாதத்திற்கு எந்த சலுகையும் வழங்கவில்லை. அதாவது சடவாதியான லெனினுக்கும் கருத்துவாதியான ஹேகலுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாட்டைக் குறைக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சடவாதத்தின் போராளியான லெனின், சடவாத இயங்கியலை செழுமைப்படுத்துவதற்காக ஹேகலின் தர்க்கத்தில் பகுத்தறிவுள்ள அனைத்தையும் கையகப்படுத்தினார். எனவே, சுலோட்டர் லெனினின் விமர்சனக் குறிப்புகளை, அதாவது ஹேகலின் கருத்துவாதத்திற்கு எதிராக இயக்கியவற்றை சரியாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

'மாய-கருத்துவாதியும்-ஆன்மீகவாதியுமான ஹேகல் (நம்முடைய அன்றைய அனைத்து உத்தியோகபூர்வ, மதவாத-கருத்துவாத தத்துவத்தைப் போலவே) சடவாதத்தினை நிராகரித்து முக்கியத்துவம் கொடுக்காது மெய்யியல் வரலாற்றில் மாயவாதம், கருத்துவாதம் ஆகியவற்றைப் போற்றுகிறார் மற்றும் விரிவுபடுத்துகிறார்.

சுலோட்டரின் அணுகுமுறையின் சிறப்பியல்பு, ஜெரி ஹீலியினதில் இருந்து வேறுபட்டு, லெனினின் முழு பணிகளும் இயங்கியல் முறையில் ஊடுருவி இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றார். இதன் விளைவாக, தர்க்கத்தின் விஷயத்தைப் பற்றிய லெனினின் ஆய்வு, ஒரு சடத்தின் தர்க்கம் (matter of logic) எவ்வாறு இயங்கியல்ரீதியாக சிந்தனையில் பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றிய அவரது புரிதலை ஆழப்படுத்தியது. இயங்கியல் என்பது == எப்படி வெளி உலகில் இயக்கம், அனைத்து நிகழ்வுப்போக்குகளிலும், கருத்துருக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை. ….

இயங்கியல் சடவாத முறைக்கு விஞ்ஞானரீதியான ஆய்வு தவிர்க்கமுடியாத முன்நிபந்தனை என்பதை சுலோட்டர் அங்கீகரிக்கின்றார். இது முழுக்க முழுக்க மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் அர்த்தத்தில் ஒத்துப்போகிறது. மெய்யியல் கருத்தினங்கள் இந்த ஆய்வை இடமாற்றம் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த இயக்கத்திலிருந்து ஒரு உள்ளடக்கத்தை வழங்க முடியாது. இயங்கியல் முறையின் நனவான வளர்ச்சி என்பது விஞ்ஞானத்தின் பணியாகும். இது அனைத்து நிகழ்வுப்போக்குகளின் இயக்க விதிகள் மற்றும் அவற்றின் சர்வவியாபக இடைத்தொடர்பைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகின்றது.

குறிப்பாக சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் லெனினின் பணியின் தொடர்ச்சியை நிறுவி, புரட்சிகர அரசியலின் விஞ்ஞான வளர்ச்சியுடன் சுலோட்டர் இதைத் தொடர்புபடுத்துகிறார். இந்த முக்கியமான கூறு GH [ஜெர்ரி ஹீலி] -இன் கட்டுரைகளில் எந்த குறிப்பையும் பெறவில்லை. அது குறிப்பிடப்பட்டுள்ள வரையில், இது ட்ரொட்ஸ்கியின் சடவாத இயங்கியல் பற்றிய உண்மையான வளர்ச்சியை பகுப்பாய்வு செய்வதற்குப் பதிலாக, ஹேகலியன் இயங்கியல் பற்றிய அவரது மங்கலான பதிப்பை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உண்மையான விஞ்ஞானபூர்மான ஆய்வின் அவசியம் தொடர்பான முதல் கேள்வியில், சிந்தனையின் சுய இயக்கம் கருத்தினங்களை நகலெடுக்கையில் அதனூடாக சரியான சிந்தனை (இலியென்கோவ் குறிப்பிடுவதுபோல்) இயங்குவது போல, கருத்தினங்களை அருவமாக மீளுற்பத்தி செய்வது மிதமிஞ்சியதாக இருக்கிறது என ஹீலி குறிப்பிடுகிறார். எனவே அருவமான கருத்துருக்களின் இயங்கியலில் இருந்து தவிர்க்க முடியாமல் பாயும் 'வேகமான' நடைமுறைகள் சாத்தியம். இந்த முறையின் விளைவு தவிர்க்க முடியாமல் கருத்துருக்களின் இயங்கியல் ஓட்டம் என்று தவறாக விளக்கப்படும் பதிவுகளை விமர்சனமற்ற முறையில் ஏற்றுக்கொள்வதாகும். இவ்வாறு சரியான தொடர்வரிசையில் 'சரியான' சிந்தனை கொண்டிருந்ததற்காக ஒருவர் தொடர்ந்து தன்னைத் தானே வாழ்த்திக் கொள்கிறார். இந்த முழு செயல்முறையின் முன்னுரையாக இருப்பது, சடப்பொருள் மற்றும் சிந்தனையை எளியமுறையில் அடையாளம் கண்டுகொள்வதாகும். சிந்தனையின் இயங்கியல் (சிக்கலான செயல்முறை மற்றும் தோராயத்தின் மூலம்) சடப்பொருள்களின் இயங்கியலை பிரதிபலிக்கின்றது என்பதற்கு மாறாக, சிந்தனைரீதியான இயங்கியல், பொருட்களின் இயங்கியல் போன்றதே எனப்படுகின்றது. (அல்லது இன்னும் துல்லியமாக: இயங்கியல் சடப்பொருள் மற்றும் சிந்தனையில் அதன் பிரதிபலிப்பு ஒரே மற்றும் வேறுபடுத்தப்படாததாக கருதப்படுகிறது). [81]

இயங்கியல் பற்றிய லெனினின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்தம் பாராட்டியதில், நான் பின்வரும் முடிவிற்கு வந்தேன்:

முதலில் 1962 இல் வெளியிடப்பட்ட சுலோட்டரின் எழுத்துக்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் இயங்கியல் சடவாதத்திற்கான போராட்டத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பாக இருந்தது. மேலும் அது இன்றுவரை இயங்கியல் வழிமுறையின் பொதுவான அம்சங்களின் சிறந்த வெளிப்பாடாக உள்ளது. அங்கு பாசாங்குத்தனமான மற்றும் விசித்திரமான மொழியை அணுகுவதன் மூலம் இயங்கியலின் பாத்திரத்தை மறைக்க எந்த முயற்சியும் இல்லை. மைய புள்ளிகள் தெளிவாக உள்ளன: அதாவது மனிதன் கருத்துருக்களின் உதவியுடன் சிந்திக்கிறான், ஆனால் இந்த கருத்துருக்கள் நிலையானவை அல்ல, ஆனால் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. எங்கள் புரட்சிகர கருத்துருக்களின் வளர்ச்சி என்பது சடத்துவ உலகில் ஏற்படும் மாற்றங்களின் பிரதிபலிப்பாகும். இதன் சாராம்சம் சோசலிசப் புரட்சியைத் தயாரித்து வழிநடத்தும் போராட்டத்தின் போக்கில் கட்சியால் உட்புகுத்தப்படுகின்றது. தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவ உலகில் அதன் புரட்சிகர செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும், மார்க்சிச கட்சி உலக நெருக்கடியின் உள்ளார்ந்த விதிகளைக் கண்டறிய முயல்கிறது. இயங்கியல் இயக்கம், உலகம் தன்னிலிருந்து வடித்தெடுக்கப்பட்டு, நீடித்த விஞ்ஞானரீதியான பணியின் விளைவாக மட்டுமே வந்த கருத்துருக்களில் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த புத்தகம் இன்னும் தோழர்களால் கவனமாக படிக்கப்பட வேண்டும். [82]

39 ஆண்டுகள் கடந்த பின்னரும், நான் அந்த பரிந்துரையில் உறுதியாக இருக்கிறேன்.

சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்ததை சோசலிச தொழிலாளர் கழகம் கண்டிக்கிறது

லெனினின் மெய்யியல் குறிப்பேடுகள் பற்றிய சுலோட்டரின் ஆய்வு, திருத்தல்வாதத்திற்கு எதிரான சோசலிச தொழிலாளர் கழகத்தின் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஜூலை 21, 1962 அன்று, அதன் தேசியக் குழு 'ட்ரொட்ஸ்கிசம் காட்டிக் கொடுக்கப்பட்டது: சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதத் திருத்தல்வாதத்தின் அரசியல் வழிமுறையை ஏற்றுக்கொள்கிறது' என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன் முக்கிய ஆசிரியராக சுலோட்டர் இருந்தார். அது 1953 பிளவின் காரணங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றிய தெளிவு இல்லாமல் சோசலிச தொழிலாளர் கழகம் மீண்டும் இணைவதை ஏற்காது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி காட்டியது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கம் இல்லாமல் ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ ஆட்சியின் வெற்றிகளே பப்லோவாதிகளுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கான அடிப்படைகள் என்ற கூற்றை அது நிராகரித்தது. நான்காம் அகிலத்தின் மூலோபாயத்தை விரிவுபடுத்துவதற்கான தொடக்கப் புள்ளி கியூபாவாக இருக்க முடியாது. கியூபா பற்றிய சோசலிச தொழிலாளர் கட்சியின் வலியுறுத்தல் தவறானது. 'ஒவ்வொரு நாட்டிலும் லெனினிச கட்சிகளை நிறுவுவதற்கான தேவையிலிருந்து, முதலில் திருத்தல்வாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்' என்பதிலிருந்து நாம் தொடங்கியாக வேண்டும்” என சுலோட்டர் எழுதினார். [83]

அரசியல் சரணடைதல் பற்றிய பப்லோவாத கோட்பாடு கொள்கை நான்காம் அகிலத்தின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதுடன் தொடர்புபட்டதல்ல:

இந்தக் கட்டத்தில் மத்தியவாதிகள் அல்லது 'இடதுபக்கம் நோக்கிநகரும் நீரோட்டங்களுக்கு' சரணடைவது 1953 -இனை விட பெரிய அளவில் காட்டிக்கொடுப்புக்குச் சமமாகும். மார்க்சிசவாதிகள் அல்லாத தலைமைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் 'புறநிலை சக்திகளின்' வலிமையினால் குட்டிமுதலாளித்துவ தலைமைகள் மார்க்சிசவாதிகளாக உருவாகலாம் என வலியுறுத்துவது, மார்க்சிச தலைமையை திசைதிருப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்க அச்சுறுத்துகின்றன. மத்தியவாதிகளிடம் சரணடைதல் இப்போது நடைமுறைக்கு வந்தால், இப்போது இடம்பெறுவது சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தொழிலாள வர்க்கம் முறித்துக் கொள்வதைத் தடுக்கிறது, பின்னர் திருத்தல்வாதிகள் பாரிய தொழிலாள வர்க்கத் தோல்விகளுக்குப் பொறுப்பாவார்கள். [84]

பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டனர்: 'சோசலிச தொழிலாளர் கழகம் இந்தத் திருத்தல்வாதத்தின் வழியில் எந்தப் பகுதியுடனும் உடன்படத் தயாராக இல்லை. மேலும் இறுதிவரை போராடும்.' [85] இந்த எச்சரிக்கை லேபர் ரிவியூ இன் ஒரு தலையங்கத்தால் வலுப்படுத்தப்பட்டது:

இந்த நேரத்தில், ஒரு காலத்தில் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று பெருமைப்பட்ட மற்றவர்கள் பப்லோவுடன் ஒன்றிணைவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் தேடுகிறார்கள். ஒரு குரல் எந்திரத்தனமாக மீண்டும் மீண்டும் எழுகிறது: 'கடந்த காலத்தை மறந்து விடு! 1953 இல் பப்லோவாதத்துடனான பிளவுக்கான அரசியல் காரணங்களை விவாதிக்க வேண்டாம். … இந்த புதிய திருத்தல்வாதிகளின் குழு இந்த வழிகளில் நாங்கள் வரலாற்றை எழுத வைக்கும். 1953 ஆம் ஆண்டில் நாம் பப்லோவுடன் ஆழமான பிளவு கொண்டிருந்தோம், இப்போது இவை அனைத்தும் மறந்துவிட்டன, அது உண்மையில் ஒரு கனவு மட்டுமே; அது ஒருபோதும் நடக்கவில்லை. கடந்த காலத்தை மறந்து, 'புதிய யதார்த்தத்தை' பாருங்கள் எனக் கூறுகின்றனர். ட்ரொட்ஸ்கிச தத்துவத்தைக் கைவிடுதல் எனும் இந்த வெட்கக்கேடு மார்க்சிச இயக்கத்திற்கு எதிரான திருத்தல்வாதத்தின் புதிய தாக்குதலை உள்ளடக்கியிருக்கின்றது.

இந்த விவாதத்திலிருந்து ஒரு விஷயம் உறுதியாக உள்ளது; மார்க்சிசவாதிகளுக்கும் திருத்தல்வாதிகளுக்கும் இடையில் எவ்வித ஒற்றுமையும் இருக்க முடியாது என்பதைக் காட்டுகின்றது. சோசலிச தொழிலாளர் கழகம் எந்தச் சூழ்நிலையிலும் இதுபோன்ற அரசியல் மோசடியில் பங்கேற்காது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் மற்றும் எங்களுடன் பேசவும் ஒத்துழைக்கவும் தயாராக இருக்கும் அனைவருடனும் விவாதிக்கவும் ஒத்துழைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் போதுமான அரசியல் தெளிவு இல்லாமல் அமைப்புரீதியான அடிப்படையில் ஒற்றுமைக்கு நாங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டோம். [86]

சந்தர்ப்பவாதமும் அனுபவவாதமும் அனைத்துலக் குழுவில் பிளவும்

சோசலிச தொழிலாளர் கட்சியின் முக்கிய அரசியல் தலைவரும் பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மீண்டும் இணைவதற்கான உந்துதலின் வடிவமைப்பாளருமான ஜோசப் ஹான்சன் நவம்பர் 1962 இல் லெனினின்இயங்கியல் குறித்து சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் கிளிஃவ் சுலோட்டர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார். 'கியூபா -அமில சோதனை: அதிதீவிர குறுங்குழுவாதிகளுக்கு ஒரு பதில்' என்ற தலைப்பில் ஹான்சனின் ஆவணம், ஒரு ஸ்ராலினிச வசைமாரியின் துர்நாற்றத்தைக் கொண்டிருந்தது. உண்மையில், அதில் உள்ளடங்கியிருப்பது என்னவென்றால்: 1970 களில் ட்ரொட்ஸ்கியின் படுகொலை தொடர்பான விசாரணையின் போது அனைத்துலக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், ஹான்சன் ஆரம்பத்தில் சோவியத் இரகசிய உளவுத்துறையான GPU இன் முகவராக சோசலிச தொழிலாளர் கட்சியினுள் நுழைந்தார் என்பதை நிறுவியதாகும். ஹான்சன், அவரது வார்த்தையாடல் பாணி ஒரு மோசமான கேலிக்குரிய வடிவத்திலான சிதைவுகள் மற்றும் வெளிப்படையான பொய்யுடன் இணைந்து, சோசலிச தொழிலாளர் கட்சியின் பெருகிய முறையில் உறுப்பினர்களான வசதியான நடுத்தர வர்க்க மாணவர்களின் தத்துவத்தின் மீதான அக்கறையின்மை மற்றும் அரசியல் அறியாமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். அவர் சோசலிச தொழிலாளர் கழகம் தத்துவத்திற்கு வழங்கிய கவனத்தை நகைச்சுவையாக அல்லது மனநல கோளாறின் வெளிப்பாடாகக் கருதினார். கியூபாவில் ஒரு தொழிலாளர் அரசு நிறுவப்பட்டது என்பதை சோசலிச தொழிலாளர் கழகம் ஏற்க மறுத்தது 'உண்மை நிகழ்வுகளுக்கு” எதிரான ஒரு வினோதமான தப்பெண்ணங்களின் விளைவாகும் என அவர் குறிப்பிட்டார்.

கேலி செய்யும் தொனியில், ஹான்சன் பின்வருமாறு எழுதினார்:

ஆரம்பத்தில் இருந்தே கியூபாவில் நிகழ்வுகளை நெருக்கமாகக் கவனித்த [சோசலிச தொழிலாளர் கழகம் கவனிக்காதிருந்தது போல!] அமெரிக்க மற்றும் கனேடிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கருத்தைக் கேட்க சோசலிச தொழிலாளர் கழக தலைவர்கள் மறுத்துவிட்டனர். தமது நாட்டிலும் மற்றும் கண்டத்தின் மற்ற பகுதிகளிலும் புரட்சியின் வளர்ச்சி மற்றும் அனுபவங்களை நேரடியாகக் கண்ட இலத்தீன்-அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கருத்தைக் கேட்கவும் அவர்கள் மறுத்துவிட்டனர். உலகெங்கிலும் உள்ள மற்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அடைந்த முடிவுகளை அவர்கள் வெறுக்கிறார்கள். வெளிப்படையான நிகழ்வுகளை ஒப்புக்கொள்ள இந்த பிடிவாத மறுப்பு ஏன்? அனைத்திலும் விசித்திரமான, சோசலிச தொழிலாளர் கழகத் தலைவர்கள் மெய்நிகழ்வுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதை அங்கீகரித்துள்ளனர்; அவர்கள் அதை ஒரு நல்லொழுக்கமாக மாற்றி அதை ஒரு மெய்யியலாக உயர்த்தியுள்ளனர். காரணம் மிகவும் எளிது: மெய்நிகழ்வுகளை அங்கீகரிப்பது அனுபவவாதத்தின் பண்பு; மார்க்சிசம் அனுபவவாதத்தை எதிர்க்கிறது; எனவே, மார்க்சிஸ்டுகளாக, நாங்கள் மெய்நிகழ்வுகளை அங்கீகரிக்க மறுக்கிறோம். [87]

ஜோசப் ஹான்சன்

மற்ற 'ட்ரொட்ஸ்கிஸ்டுகள்' கியூபாவை ஒரு 'தொழிலாளர் அரசு' என்று கருதுகிறார்களோ இல்லையோ, கியூப அரசின் வர்க்கத் தன்மை பற்றிய கேள்விக்கு அவர்களின் வாதங்களை கவனமாக ஆராயாமல் திருப்திகரமான தீர்வைக் கண்டுபிடிக்க வேறு வழியில்லை. ட்ரொட்ஸ்கியின் காலத்தில் மில்லியன் கணக்கானோர் ஸ்ராலினை லெனினின் அரசியல் வாரிசாகவும், சோவியத் ஒன்றியத்தை தொழிலாளர்களின் சொர்க்கமாகவும் மற்றும் மாஸ்கோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாகவும் கருதினார்கள். இது ட்ரொட்ஸ்கியை, ஸ்ராலினை ஒரு எதிர் புரட்சியாளர் என்று கண்டனம் செய்வதிலிருந்தும், சோவியத் ஒன்றியத்தை ஒரு ஊனமுற்ற தொழிலாளர் அரசாக வரையறுப்பதிலிருந்தும், அதிகாரத்துவ ஆட்சியை தூக்கி எறிய ஒரு அரசியல் புரட்சிக்காக அழைப்புவிடுவதிலிருந்தும் தடுக்கவில்லை. மேலும், ஹான்சனால் உருவாக்கப்பட்டு முன்வைக்கப்படும் அபத்தமான முக்கூற்று முடிபு (syllogism) ('மெய்நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வது அனுபவவாதத்தின் சிறப்பியல்பு; மார்க்சிசம் அனுபவவாதத்தை எதிர்க்கிறது; எனவே, மார்க்சிஸ்டுகளாக, நாங்கள் மெய்நிகழ்வுகளை அங்கீகரிக்க மறுக்கிறோம்') சோசலிச தொழிலாளர் கழகத்தின் விவாதத்தின் துல்லியமான விளக்கத்தின் மீதான ஒரு அரசியல் ஆத்திரமூட்டலாகும்.

லெனினின் இயங்கியல் பற்றி நாம் ஏற்கனவே நீளமாக மேற்கோள் காட்டிய உரைப்பகுதியை ஹான்சன் கேலி செய்யத் தொடங்கினார் (இது பின்வருமாறு தொடங்குகிறது: 'உலகெங்கிலும் பெரிய விஷயங்கள் நடக்கும்போது, ஹேகல் பற்றிய லெனினின் குறிப்பேடுகள் மிகவும் கவனம்கொடுக்கத் தேவையில்லாத தெளிவற்ற ஒன்றாகத் தோன்றலாம்'). 'இந்த கட்டுரையில் வாசகர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் அசல் அறிவார்ந்த வார்த்தைகள்' பற்றி நகைச்சுவையாக, ஹான்சன் பின்வருமாறு தொடர்ந்தார்:

இந்த பிரகாசமான பத்தியை வாசிக்க முனையும் முயற்சி மதிப்புள்ளது. ஏனெனில் இது கியூபா புரட்சியை அணுகுவதில் சோசலிசத் தொழிலாளர் கழகத் தலைவர்கள் பயன்படுத்திய தத்துவார்த்த முறையையும் இன்றைய உலகில் வேறு பலவற்றையும் வெளிப்படுத்துகிறது. 'நிச்சயமாக, ஒவ்வொரு விஞ்ஞானமும் மெய்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது' என்ற தகுதி வாக்கியத்தை நாங்கள் கவனிக்கிறோம். இதை ஒப்புக்கொண்ட ஆசிரியரைப் பாராட்ட வேண்டும்; இது ஒரு சடத்துவ உலகம் உள்ளது என்பதற்கான குறைந்தபட்ச விழிப்புணர்வுக்கான சாதகமான அறிகுறியாகும். பல்வேறு விஞ்ஞானங்கள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன, இந்த துறைகளில் மெய்நிகழ்வுகள் பல்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளன, அவற்றின் முக்கியத்துவத்தையும் அவற்றுக்கிடையேயான உறவுகளின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துவது விஞ்ஞானத்தின் வேலை, அதனால் நாம் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்ற ஒருவரின் அவதானிப்பிற்காக நாம் அவருக்கு ஒரு பதக்கத்தைக் கூட வழங்கலாம். …

சுலோட்டரின் தவறு என்னவென்றால், அனுபவவாதத்திற்கும் மார்க்சிசத்திற்கும் இடையில் ஒரு முற்றுமுழுதான இடைவெளியை நிறுவுவது, அவற்றுக்குள் பொதுவானதாக இருப்பதை கவனிக்காது விட்டுவிடுவது ஆகும். சுருக்கமாக, அவர் இந்த விஷயத்தில் கடுமையான, இயந்திரவாத சிந்தனையின் குற்றவாளி. எவ்வாறாயினும், இதனால் உருவாகிய முன்னோடியில்லாத சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு குற்றவாளியை ஒரு இலேசான தண்டனையுடன் விடுவிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

மெய்நிகழ்வுகளைக் கவனத்தில் எடுக்காதது போன்ற அற்ப விஷயங்களை நிரூபிக்கும் வகையில், கனரக இயந்திரங்களைப் பற்றிய அறிவுசார்ந்த கல்வி கற்கையினால் அவற்றை மிக நேர்த்தியாக கட்டுப்படுத்த முடியும் என்பதை ஒரு பிரிட்டிஷ் இயக்கமறுப்பியல்வாதி செய்து காட்டுவதைக் காண்பதற்கு நமக்கு எத்தனை முறை பாக்கியங்கள் இருந்தன? மேலும் லெனினின் மெய்யியல் குறிப்பேடுகளால் இயந்திரத்திற்கு தகவல்களைப் புகுத்துவது போல! ஒரு இடுக்கி மூலம் ஒரு வாதுமை கொட்டையை உடைப்பதை விட இது சிறந்தது.

இந்தப் பதிலை மார்க்சிசத்தின் மெய்யியல் அடிப்படைகளுடன் அறிவார்ந்த தொடர்பு எதுவும் இல்லாத ஒரு நபரால் மட்டுமே எழுத முடியும். மார்க்சிசமும் அனுபவவாதமும் 'மெய்நிகழ்வுகளை' பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதில் ஒரு பொதுவான அடித்தளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் அனுபவவாதம் 'இதை முறையாக கொண்டுசென்றது' [88] என்பது மார்க்சிசத்தின் முறையாகும் எனக்கூறுவது வெறுமனே கருத்துவாதத்திற்கும் சடவாதத்திற்கும் இடையிலான அடிப்படைப் பிளவுகளை பூசிமெருகூட்டுவதாகும்.

கருத்துவாதிகள், நிச்சயமாக, 'மெய்நிகழ்வுகளை' அங்கீகரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அங்கீகரிக்காதது என்னவென்றால், 'மெய்நிகழ்வுகள்' என்பது மனித நனவில் இருந்து சுயாதீனமாக இருக்கும் ஒரு யதார்த்தத்தின் அருவங்கள் என்பதையாகும். இந்த பிரச்சினையில்தான் லெனின் தனது சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் என்பதில் இயந்திரவாதம் (Machism) மீதான தனது தாக்குதலை மையப்படுத்தினார்.

ஹான்சன் தொடர்ந்து கூறுகையில், கியூபாவை தொழிலாளர் அரசு என வரையறுக்க மறுப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அதனைப் பாதுகாப்பதை எதிர்ப்பதற்குச் சமம் என்றார். எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில், சோசலிசத் தொழிலாளர் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவின் மீதான பப்லோவாத கண்டனங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் இந்த அப்பட்டமான பொய் ஒரு முக்கிய ஆயுதமாக மாறியது.

ஹான்சனுக்கான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் பதில், அதன் தேசியக் குழுவால் மார்ச் 23, 1963 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் வழங்கப்பட்டது. மைக் பண்டாவின் கருத்துக்கள் இதில் நிச்சயமாக உள்ளடங்கி இருந்தபோதிலும், அதன் முதன்மை ஆசிரியர் கிளிஃப் சுலோட்டர் ஆவார். 'நிலையான சடவாதம்' என்ற ஹான்சனின் குறிப்பை 'சுத்த முட்டாள்தனம்' என்று நிராகரிப்பதன் மூலம் அவர் தொடங்கினார். சுலோட்டர் எழுதுகிறார்:

அனுபவவாதம் மற்றும் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் இருக்கும் அதன் இளைய சகோதரனான நடைமுறைவாதம், 'புறநிலையாக இருக்கும் உலகின் இயல்பு என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சாத்தியத்தை மறுக்கின்றது. இதனால் அவர்கள் உலகத்தை சிந்தனையால் மட்டும் விளக்கமளிக்கும் அகநிலைக் கருத்துவாதத்திற்கு பாதையைத் திறந்துவிடுகின்றனர். மெய்யியலின் வரலாற்றைப் புறக்கணித்த அனுபவவாதம், அறிவின் இயங்கியல் தத்துவத்தை 'இயக்கமறுப்பியல்' என்று நிராகரிக்கிறது. இயங்கியல் சடவாத பார்வை மட்டுமே உலகை விளக்க முடியும். ஏனென்றால் அது நமது கருத்துருக்களின் வளர்ச்சி மற்றும் அவை பிரதிபலிக்கும் சடத்துவ உலகம் பற்றிய சடவாத விளக்கத்தை உள்ளடக்கியது. அனுபவவாதம் நிராகரிக்கப்பட வேண்டும், அதனை 'நிலையானது' ஆக்கக்கூடாது. ஹான்சனின் இந்த ஆய்வு வழிகாட்டுநெறிமுறை தொடர்பான பிழைக்கு பல பக்கங்கள் உள்ளன. [அழுத்தம் மூலத்தில் உள்ளது] [89]

மார்க்சிச மெய்யியல் மற்றும் வழிமுறையின் முக்கியமான பிரச்சினைகளை ஹான்சன் பண்படாமுறையில் கையாளுதல், சோசலிச தொழிலாளர் கட்சியின் குறைந்த தத்துவார்த்த நிலை குறித்து 1939-40 கன்னை மோதலின் போது ட்ரொட்ஸ்கி எழுப்பிய கவலைகளை நினைவுகூர வைக்கிறது. ட்ரொட்ஸ்கி தனது இறுதிக்கால எழுத்துக்களில், “தத்துவார்த்த முன்நிலையில் ஒரு உறுதியான போராட்டத்தை நடைமுறைவாதத்தின் 'அமெரிக்க' மெய்யியலுக்கு எதிராக, அனுபவவாதத்தின் மிக அண்மைய வளர்ச்சிக்கு எதிராக உறுதியான போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்; அதனைச் செய்யாவிட்டால் அமெரிக்காவில் உண்மையான மார்க்சிச வளர்ச்சி இருக்காது” என சோசலிச தொழிலாளர் கட்சியை எச்சரித்ததை சுலோட்டர் நினைவுகூருகின்றார். இன்று ஹான்சனும் கனனும் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையை எதிர்மறைப்பாணியில் 'உறுதிப்படுத்துகிறார்கள்'. [90]

இந்த உறுதிப்படுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு, அண்மையில் 'கியூப ஏவுகணை நெருக்கடிக்கு' கனனின் பதிலை சுலோட்டர் மதிப்பாய்வு செய்தார். இந்நெருக்கடி அக்டோபர் 1962 இல் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தை அணுசக்தி போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது. கியூபாவில் சோவியத் ஒன்றியம் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை நிறுவியுள்ளது என்பதை U-2 உளவு விமானங்களைக் கொண்ட கண்காணிப்பு விமானங்களின் மூலமாக கென்னடி நிர்வாகம் அறிந்து அவற்றை உடனடியாக நாட்டிலிருந்து அகற்றுமாறு கோரியது. ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி கியூபாவை முற்றுகையிட உத்தரவிட்டார். மற்றும் தீவை அணுகும் அனைத்து சோவியத் சரக்குக் கப்பல்களையும் நிறுத்தி, அமெரிக்க கடற்படைப் படைகளால் அவற்றை சோதனை இடப்போவதாகவும், சோவியத் கப்பல்கள் இதனை மறுத்து தடையை மீறினால் சுடப்படும் எனவும் அறிவித்தார்.

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு, அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையே, அணு-வெப்ப ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய இராணுவ மோதலின் விளிம்பில் உலகம் நின்றது. இறுதிநேரத்தில், தனது இரகசிய உரையின் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் பதவியில் இருந்த நிக்கிடா குருஷ்சேவ் சோவியத் ஏவுகணைகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். கென்னடி நிர்வாகம் கியூபா மீது படையெடுக்காது என்று உறுதியளித்தது. அணுவாயுதப் போரின் உடனடி அச்சுறுத்தல் விலகியது.

அக்டோபர் 31, 1962 அன்று, சோவியத் ஏவுகணை திரும்பப் பெறுதலை அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸில் 72 வயது மற்றும் அரை ஓய்வில் வாழ்ந்த ஜேம்ஸ் பி கனன்-தேசிய செயலாளராக தனது வாரிசான ஃபாரெல் டோப்ஸுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் நெருக்கடி மற்றும் அதன் விளைவு பற்றிய அவரது மதிப்பீடு சோவியத் ஒன்றியத்தின் செயல்களுக்கு மன்னிப்புக் கோரும் சாதாரணமான அரை-அமைதிவாதிகளிடம் காணப்படும் தன்மையைக் கொண்டிருந்தது. இது பொறுப்பற்ற சாகசத்தை மோசமான கோழைத்தனத்துடன் இணைத்தது. கென்னடி நிர்வாகத்தின் செயல்களை மதிப்பாய்வு செய்த பின்னர் கனன் பின்வருமாறு எழுதினார்:

உலக அமைதி மற்றும் கியூபப் புரட்சிக்கான நேரடி மற்றும் உடனடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்கையில், குருஷ்சேவ் பின்வாங்கி ஏவுகணைகளை அகற்ற ஒப்புக்கொண்டதுடன், ஐ.நா. வின் மேற்பார்வையின் கீழ் தளங்களை அழிக்கவும் அவர் ஒப்புக்கொண்டார். இதற்குப் பதிலாக தடையை அகற்றல் மற்றும் கியூபா மீது படையெடுக்கப்பட மாட்டாது என்ற பொது உத்தரவாதத்தை அவர் பெற்றார்.

இந்தச் சூழ்நிலையில் வேறு என்ன செய்திருக்க முடியும்? அணு-வெப்ப ஆயுதப் போரைத் தொடங்குவதற்கும், தேவைப்பட்டால் அதன் உச்சகட்ட வரம்பிற்குச் செல்வதற்கான வாஷிங்டனின் தெளிவான உறுதியைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா கியூப தளங்களை அழிக்கும் ஆபத்திற்குட்படுத்த துணிவது பொறுப்பற்றதாக இருந்திருக்கும்.

எங்கள் கருத்துப்படி, குருஷ்சேவ் அத்தகைய மோதலில் இருந்து விவேகத்துடன் பின்வாங்கினார். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உலகை போரிலிருந்தும் மற்றும் கியூப புரட்சியை பெரும் சக்திகளின் தாக்குதலில் இருந்தும் காப்பாற்றினார். ஏனென்றால் இங்கு அந்த நேரம் தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தது!

பின்வாங்குவது தவிர்க்க முடியாதது மற்றும் இந்த விட்டுக்கொடுப்புகளைப் பொறுத்தவரையில் அவற்றைப் பற்றி நமக்குத் தெரிந்தபடி, அத்தியாவசியமான எதையும் விட்டுவிடவில்லை. இதுபற்றி வேறுவிதமாக மதிப்பிடுபவர்கள், இந்தப் பிரச்சனைக்குரிய முடிவெடுக்க வேண்டிய நிலையில் குருஷ்சேவ் இராணுவ மற்றும் இராஜதந்திர முனைகளில் வேறு என்ன மாற்றீடான பாதையில் முடிவெடுத்திருக்க வேண்டும் என்று எமக்குக் கூறவேண்டும். குருஷ்சேவ் தடையை மீறியிருக்க வேண்டுமா அல்லது ஏவுகணைத் தளங்களை திரும்பப் பெற திட்டவட்டமாக மறுத்திருக்க வேண்டுமா? …

கடும் உண்மை என்னவென்றால், சோவியத் ஒன்றியமும் கியூபாவும் சொந்தமாக ஆயுதங்களைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், இன்னும் பயங்கரமான ஆயுதங்கள் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டு பயன்படுத்தத் தயாராக இருந்தன. இந்தக் காரணத்திற்காக, இராணுவ விவகாரங்கள் மற்றும் அரசு உறவுகளின் மட்டத்தில் குருஷ்சேவின் போக்கு தவறானது என்று நாங்கள் நம்பவில்லை. …

கென்னடியின் வலுவான நிலைப்பாடு 'சோவியத் ஆக்கிரமிப்புக்கு' உறுதியான பாடம் மற்றும் கடுமையான பின்னடைவைக் கொடுத்தது என்று அமெரிக்க பத்திரிகைகள் மகிழ்ச்சியான கூற்றுகளைக் கூறினாலும், ஏகாதிபத்திய பிரச்சாரத்தால் பாதிக்கப்படாத மக்கள், இந்த உடன்பாட்டால் நிம்மதியடைந்ததுடன் குருஷ்சேவின் நல்லறிவுக்கு நன்றி கூறினர். பெர்த்ரோண்ட் ரஸ்ஸல் மற்றும் நேரு அந்த வரிசையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். [91]

சுலோட்டர் கனனின் கடிதத்தை ஒரு தீவிரமான பகுப்பாய்விற்கு உட்படுத்தினார். இது 'நடைமுறைவாத முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக' சேவை செய்யவே உதவமுடியும் என்று எழுதினார். புரட்சிகர மார்க்சிசத்துக்காக, குறிப்பாக ஸ்ராலினிசத்திற்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அவர், “தத்துவம்” பற்றிய ஹான்சனின் பரிதாபமான கட்டுரையுடன் நியாயப்படுத்த முயன்ற அதே வகையான அரசியலுடன் முழு வாழ்க்கையையும் இரண்டு பக்கங்களிலும் மறுக்கிறார்: 'குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர் [குருஷ்சேவ்] வேறு என்ன செய்ய முடியும்?’ என கனன் கேட்கிறார். [92]

மேற்கோளில் காட்டியபடி கனன் முன்வைத்த 'சூழ்நிலைகளை' மறுபரிசீலனை செய்த பின்னர், சுலோட்டர் பின்வருமாறு பதிலளித்தார்:

கனன் சமூக சக்திகள் மற்றும் அரசியல் போக்குகளின் வர்க்க பகுப்பாய்வை நடைமுறைக்குரிய தீர்வுகளுடன் மாற்றுகிறார். 'கொடுக்கப்பட்ட சூழ்நிலைகள்' என்று அழைக்கப்படுபவை (ஹான்சனின் 'மெய்நிகழ்வுகளுக்கு' சமமானவை) அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கி குருஷ்சேவ் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் பின்பற்றப்பட்ட வர்க்க ஒத்துழைப்புக் கொள்கையின் விளைவாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்பாக குருஷ்சேவ் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த சூழ்நிலைகளுக்கு வழிவகுத்த நிகழ்ச்சிப்போக்குகளின் ஒரு பகுதியாக, நாம் குருஷ்சேவின் நடத்தையை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த வழியில் மட்டுமே மார்க்சிசவாதிகள் மற்ற வர்க்கப் போக்குகள் [அசலில் முக்கியத்துவம்] தொடர்பாக தங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும். [93]

ஹான்சனின் நடைமுறைவாத வழிமுறைகளுக்கும் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை நோக்கிய விரைவான திருப்பத்திற்கும் இடையிலான உறவு பற்றிய சுருக்கமான விளக்கத்தை சுலோட்டர் வழங்கினார்:

உண்மையில், கியூபா தொடர்பான கனனின் கடிதம் அனுபவவாதம் மற்றும் நடைமுறைவாதத்தின் வர்க்கப் பாத்திரத்தை விளக்குகிறது. இப்போக்குகள் மெய்யியலில் “கொடுக்கப்பட்ட மெய்நிகழ்வு' போன்றவற்றை ஏற்றுக்கொள்கின்றன. இவ்வாறான ஏற்றுக்கொள்ளல்கள் ட்ரொட்ஸ்கி ஒருதடவை குறிப்பிட்டபடி “நிறைவேற்றப்பட்ட மெய்நிகழ்வை வழிபடுதலாகும்.” உண்மையில் இவை சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவம் மற்றும் தொழிலாளர் இயக்கம் போன்ற தற்போதுள்ள கட்டமைப்பிற்கு ஏற்றவாறு, பொருத்தமான நனவின் வடிவங்களை ஏற்றுக்கொள்வதாகும்.

முதலாளித்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான தங்கள் சொந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி மற்றும் காரணம் கற்பிப்பதனூடாக அவர்கள் தங்கள் கருத்துக்களை வளர்த்துக் கொள்கிறார்கள். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை நியாயப்படுத்துவதில் முர்ரி வெயிஸின் சமீபத்திய பங்களிப்பு போலவே குருஷ்சேவை கனன் நியாயப்படுத்துதல், தொழிலாளர் அரசுகளில் அரசியல் புரட்சி மற்றும் கொள்கைரீதியான புரட்சிகர கட்சிகளின் கட்டுமானத்தை சோசலிசத் தொழிலாளர் கட்சி சார்பில் குரல்தரவல்லவர்கள் மற்றும் பப்லோவாதிகள் தொடர்ந்து தவிர்ப்பது போன்ற ஒரு கைவிடல் ஆகும். இந்த அனுபவவாதத்திற்கு ஆதரவாக இயங்கியல் சடவாதத்தைக் கைவிடுவதால் எழும் கொள்கை, அடிப்படையில் புரட்சிகர அரசியலை கைவிடுவதாகும்.

இயங்கியல் பகுப்பாய்வு ஒரு முழுமையான ஒன்றுடன் ஒன்று தொடர்புட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் பின்னணியின் உள்ளடக்கத்தில் உண்மைகளை பார்க்க வலியுறுத்துகிறதே தவிர, அதிலிருந்து 'நடைமுறை' முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவுற்ற, சுயாதீன அலகுகளாக அல்ல. அரசியலில், ஒவ்வொரு நிலைமையையும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கவும், இந்த நிலைமையில் வேறுபட்ட அரசியல் சக்திகளின் கொள்கைகளை அவர்களின் முந்தைய பாதையில் இந்த வர்க்க சக்திகளுடனான அவற்றின் உறவையும் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.

இதனால்தான் கியூப பிரச்சனையை கனன் முன்வைப்பது போல் 'கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?' என்பது அர்த்தமற்றது. அதன் தர்க்கரீதியான முடிவு எவ்வாறு இருக்குமெனில், இந்த வகை வாதம் எதையும் நியாயப்படுத்தப் பயன்படும். மார்க்சிசத்திலிருந்து இந்த தத்துவார்த்தரீதியான புறக்கணிப்பின் அளவைப் புரிந்துகொண்டால், கனன் “... ஏகாதிபத்திய பிரச்சாரத்தால் பாதிக்கப்படாத மக்கள், இந்த உடன்பாட்டால் நிம்மதியடைந்ததுடன் மற்றும் குருஷ்சேவின் நல்லறிவுக்கு நன்றி கூறினர். பெர்த்ரோண்ட் ரஸ்ஸல் மற்றும் நேரு அந்த வரிசையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்” என்னும்போது அபத்தத்தை உச்சரிக்கிறார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அதே நேரத்தில், சீன மக்கள் குடியரசுக்கு எதிராக, ஏகாதிபத்திய ஆதரவுடன், ஆயுத மோதலில் ஈடுபடும் அரசாங்கத்தின் தலைவராக நேரு இருப்பார் என்று யார் நினைத்திருப்பார்கள்? அந்த மோதலின் போது, இந்திய கம்யூனிஸ்டுகள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், சோவியத் போர் விமானங்கள் இந்திய அரசுக்கு குருஷ்சேவ் மூலம் வழங்கப்பட்டன! சந்தேகத்திற்கு இடமின்றி நேரு, இந்தச் சிறியபகுதி நடைமுறை 'மதிநுட்பத்திற்காக' குருஷ்ஷேவ், (கென்னடி மற்றும் [இங்கிலாந்து பிரதமர் ஹரோல்ட்] மக்மில்லன்) ஆகியோரைப் பாராட்டினார்.

ஒருவேளை கனன் 'வழங்கப்பட்ட சூழ்நிலையில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?' என சிலவேளை கூறக்கூடும். கனனின் வழிமுறை தர்க்கரீதியான வளர்ச்சியின் ஒரு தந்திரத்தால் இந்த முடிவிற்கு கொண்டு செல்லப்படவில்லை. மாறாக, அவர் வக்காலத்துவாங்கும் சக்திகள் யதார்த்தத்தில் ஏகாதிபத்தியத்துடனும் அதன் தற்போதைய தேவைகளுடனும் பிணைக்கப்பட்டிருப்பதாலாகும். மார்க்சிசம் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியின் வேறு எந்த கட்டத்தையும் விட ட்ரொட்ஸ்கிசம் வரலாற்றின் விதிகளுக்கு விதிவிலக்கானதல்ல. தத்துவார்த்த வளர்ச்சி நிறுத்தப்பட்டவுடன், அதன் அடிபணிவு படிப்படியாகவும் மறைநுட்பமான நிகழ்ச்சிப்போக்காக இருந்தாலும் மற்றும் “காரியாளர்கள்” மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவ்வியக்கம் அக்காலகட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் சித்தாந்தங்களுக்கு அடிபணிந்துபோகின்றது. [அழுத்தம் மூலத்திலுள்ளது]. [94]

இது நடைமுறைவாத வழிமுறைக்கும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் இடையேயான உள்ள தொடர்பை திறம்பட அம்பலப்படுத்திய ஒரு நிர்மூலமான விமர்சனமாகும். எவ்வாறாயினும், இந்த விரிவான மேற்கோளில் ஒரு தசாப்தத்திற்குப் பின்னரான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இயங்கியல் திரிபை பின்னோக்கிய வெளிச்சத்தில் பார்க்கையில் கவலையை எழுப்பும் ஒரு சொற்றொடர் உள்ளது. சுலோட்டர் 'அனுபவவாதத்திற்கு ஆதரவாக இயங்கியல் சடவாதத்தைக் கைவிடுவதில் இருந்து பாயும் கோட்பாட்டு ரீதியான புரட்சிகர அரசியலைக் கைவிடுவது' பற்றிப் பேசுகிறார் [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]. பின்னொரு ஆவணத்தில், சுலோட்டர் மீண்டும் 'இயங்கியல் வழிமுறையைக் கைவிடுவதில் இருந்து பாயும் ஏகாதிபத்தியத்தின் சேவகர்களுக்கு ஆதரவளிப்பது' பற்றி எழுதுகிறார் [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]. [95]

சோசலிசத் தொழிலாளர் கட்சி 1957 இல் மறுகூடலை நோக்கித் திரும்பியது மற்றும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், பப்லோவாதிகளுடன் மீண்டும் ஒன்றிணைவது, ஒரு தவறான வழிமுறையில் “இருந்து பாயவில்லை'. ட்ரொட்ஸ்கிசத்தை சோசலிசத் தொழிலாளர் கட்சி கைவிடுவதற்கான மிக அவசியமான பதில், புறநிலை சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சி தன்னை அடிபணியச் செய்துகொண்ட வர்க்க அழுத்தங்களில் காணப்பட வேண்டும். இதில் நடைமுறைவாதத்தை நாடியது இதன் ஒரு வெளிப்பாடாகும். எவ்வாறாயினும், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) மார்க்சிசத்தை திரிக்க முயன்றது பல ஆண்டுகளுக்கு பின்னராகும். 1963 ஆம் ஆண்டில், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அரசியலில் ஒரு தவறான வழிமுறை மற்றும் அதன் விளைவுகளை வலியுறுத்துவது முற்றிலும் நியாயபூர்வமானது. பிற்காலத்தில் இருந்ததைப்போல், அரசியல் பிரச்சினைகளை கவனமாக பரிசோதிப்பதைத் தவிர்ப்பதற்காக, சோசலிச தொழிலாளர் கழகத்தின் வழிமுறையின் மீதான கவனம் அந்த சமயத்தில் பயன்படுத்தப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், சுலோட்டர் தவறான வழிமுறையையும் சந்தர்ப்பவாத போக்குகளின் வளர்ச்சியையும் மிக உண்மையான வர்க்க அழுத்தங்களுடன் வெளிப்படையாக தொடர்புபடுத்திக் காட்டினார்:

எங்கள் கருத்தின்படி, இப்போது முன்னேறிய நாடுகள், தொழிலாளர் அரசுகள் மற்றும் காலனித்துவ நாடுகளுக்கான சந்தர்ப்பவாதக் கொள்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட, 1953 இல் பிளவுக்கு வழிவகுத்த பப்லோவின் ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான திருத்தல்கள், தொழிலாள வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறிவதற்கும் இடையே நிற்கும் சக்திகளுக்கு ஒரு அரசியல் சரணடைதலின் விளைவாகும். சோவியத் அதிகாரத்துவத்தின் அதிகாரமும், 1930கள் மற்றும் 1940களில் தலைமைத்துவ நெருக்கடியை தீர்ப்பதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தொழிலாளர் இயக்கங்களில் இருந்த மந்தநிலையும், பப்லோ மற்றும் அவரது குழுவின் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது விஞ்ஞானரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் விளக்கப்படவில்லை, மாறாக பதிவுவாதவகையில் விளங்கப்படுத்தப்பட்டது. சமூகம் மற்றும் அரசியலின் பகுப்பாய்வில் வர்க்க வரையறைகளில் இயங்கியல் வழிமுறையைக் கைவிடுவது, முதலாளித்துவத்திற்கு எதிரான அடுத்த வரலாற்றுப் போராட்டத்தை, புரட்சிகர மார்க்சிச கட்சிகளுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ள பாட்டாளி வர்க்கத்தைத் தவிர மற்ற சக்திகள் வழிநடத்தும் என்ற முடிவுக்கு கொண்டுவரும். [96]

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் (SLL) வாதங்களுக்கு சோசலிசத் தொழிலாளர் கட்சி (SWP) எந்தக் கோட்பாட்டு ரீதியிலும் பதிலளிக்க இயலாதிருந்தது. ஐக்கிய செயலகம் என்று மறுபெயரிடப்பட்ட பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் அதன் ஒருங்கிணைப்பு ஜூன் 1963 இல் நிறைவடைந்தது.

ஜூலை 1963 இல், அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிரிவுகள் பிளவின் அரசியல் காரணங்கள் மற்றும் எதிர்கால விளைவுகளை மதிப்பிடுவதற்காக சந்தித்தன. இந்த மதிப்பீடு, 1963 கோடையில் லேபர் ரிவியூவில் '25 ஆண்டுகளுக்குப் பின்னர்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டது. இதன் மூலம் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை, நான்காம் அகிலத்தை 1938 இல் ஸ்தாபிப்பதோடு இணைக்கும் வரலாற்று இணைப்பை நிறுவியது. அவ்வறிக்கை உலக நிலைமை பற்றிய கண்ணோட்டத்துடன் பின்வருமாறு ஆரம்பித்தது:

கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இது வரலாறு முன்னொருபோதும் காணாத மாற்றத்தின் நேரமாகும். பழைய பேரரசுகள் சரிந்துவிட்டன. புதிய அரசுகள் உருவாகியுள்ளன.

போரினால் வலுவிழந்த ஏகாதிபத்தியம், மூலோபாய பின்வாங்கல்களைச் செய்து, பழைய பிரதேசங்களை நேரு, என்க்ருமா மற்றும் பென் பெல்லா போன்ற புதிய ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. தேசிய விடுதலை இயக்கம் ஆபிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் விரிவடைந்துள்ளது.

இடைமருவு வேலைத்திட்டத்தை திருத்த முயன்ற கோழைகள், ஐயுறவாதிகள் மற்றும் பதிவுவாதிகள், 1938 முதல் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்துகின்றனர்.

போரின் முடிவில், நான்காம் அகிலத்தினை கட்டமைப்பதிலிருந்து சிலர் விலகியதோடு, போரின் அழிவு, உற்பத்தி சீர்குலைவு, பஞ்சம் மற்றும் குழப்பமான நிலைமைகளால் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் பலமிழந்துவிட்டதாக அறிவித்து, போராட்டம் பல நூற்றாண்டுகளுக்கு பின்தள்ளப்பட்டுள்ளது என்றும் சோசலிசப் புரட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தனர்.

பின்னர், ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் துரோகத்தின் மூலம், ஏகாதிபத்தியம் ஐரோப்பாவில் அதன் அஸ்திவாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தபோது, திருத்தல்வாதம் ஒரு புதிய தோற்றத்தை எடுத்தது.

நான்காம் அகிலத்தில் உருவாகிய பப்லோ தலைமையிலான ஒரு போக்கு, இந்த இயக்கம் மற்றும் அதன் இடைமருவு வேலைத் திட்டத்தின் மீது ஒரு கேள்விக்குறியை வைத்தது. அவற்றின் தோற்றம் மற்றும் முந்தைய அபிவிருத்திகளைப் பொருட்படுத்தாமல் புரட்சிகர நிலைமைகள் தலைமைகளை புரட்சிகரமாக்கும் என்று அது முடிவு செய்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவமானது போருக்கு முன்பு செய்ததைப் போல காட்டிக் கொடுக்க முடியாது என அது கூறியது.

திருத்தல்வாதிகளுக்கு எதிராக, முதல் மற்றும் மூன்றாம் அகிலங்களின் சிறந்த மரபுகளிலும், இடைமருவுவேலைத் திட்டத்தின் அடிப்படையிலும் நான்காம் அகிலத்தை கட்டமைக்க அனைத்துலகக் குழு 1953 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட நான்காம் அகிலம் என்ற மார்க்சிஸ்டுகளின் ஒரு உலகக் கட்சி மட்டுமே சிதைந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தை வெல்வதற்கு ஒடுக்கப்பட்டவர்களை வழிநடத்த முடியும் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கிறோம். அதன் வேலைத்திட்டம் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் சர்வதேச மற்றும் வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

வேறு எந்தத் தலைமையும் மனிதகுலத்திற்கு ஒரு பாதையைக் காட்டமுடியாது. [97]

புரட்சிகர வேலைத்திட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிக்கை பின்வருமாறு விவரித்தது:

ஆரம்பத்தில் இருந்தே, மார்க்சிச இயக்கம் திருத்தல்வாத போக்குகளுக்கு எதிராக வாழ்வா சாவா போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. முந்தைய சகாப்தத்தில், திருத்தல்வாதம் நேரடியாக தொழிலாளர் இயக்கத்தின் மீது, நகரங்களினதும் மற்றும் நாட்டுப்புறங்களினதும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அழுத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

எவ்வாறாயினும் இன்று, இந்த அழுத்தம் தொழிலாளர் அதிகாரத்துவத்தின் மீது குவிந்துள்ளது. இது முதலாளித்துவ அரசு அமைப்பு மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் கட்டமைப்புடன் பல்வேறு மட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய திருத்தல்வாதிகள் அனைவரும், மார்க்சிச இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறையை ஏற்கனவே உள்ள அதிகாரத்துவ தலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் அழுத்தத்திற்கு அடிபணிபவர்களாக உள்ளனர்.

இன்றய திருத்தல்வாதத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் பொதுவான தன்மையாக இருப்பது, மனிதகுலத்தை விடுவிக்கும் திறன் கொண்ட ஒரே சுயாதீனமான மற்றும் புரட்சிகர சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பங்கை மறுப்பது அல்லது குறைத்து மதிப்பிடுவதாகும். இவர்களுக்கு தொழிலாள வர்க்கம் வரலாற்றின் முக்கிய பங்குவகிக்கும் ஒன்றாக இல்லாது, ஒரு இழிவான மற்றும் செயலற்ற பொருளாக மாறியுள்ளது.

இதனால்தான் மார்க்சிச இயக்கம் இன்று ஒரு கணம் கூட திருத்தல்வாத கருத்துக்களுக்கும் போக்குகளுக்கும் கண்மூடித்தனமாக இருக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் விடுதலை மட்டுமல்ல, ஒரு சுயாதீன சக்தியாக அதன் இருப்பும்கூட திருத்தல்வாதத்திற்கு எதிராக ஒரு இடைவிடாத போர் நடத்தப்படும் அளவுக்கு மட்டுமே உறுதி செய்யப்படமுடியும்.

அதனால்தான் அண்மையில் இத்தாலியில் பப்லோவாத திருத்தல்வாதிகள் கூட்டிய 'ஒற்றுமைக்கான' மாநாட்டில் பங்கேற்க அனைத்துலகக் குழு மறுத்துவிட்டது.

இப்போது பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக பத்து வருடங்களாக தடையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எங்களுக்கு ஆரம்பத்தில் ஆதரவளித்த சிலர் கடந்த பத்தாண்டுகளில் பப்லோ மற்றும் பப்லோவாதம் பற்றிய தங்கள் கருத்துக்களை மாற்றியுள்ளனர்.

நாங்கள் மாற்றவில்லை. எம்மைப் பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு பிரிவின் மத்தியவாத சீரழிவின் மேம்பட்ட வடிவத்தை பப்லோவாதம் பிரதிபலிக்கிறது. [98]

குறிப்பிடத்தக்க தொலைநோக்குடன், இந்த அறிக்கை, பப்லோவாதத்தால் ஊக்குவிக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தின் துரோக உருவகமாக லங்கா சம சமாஜக் கட்சியைக் கண்டிக்கிறது:

பப்லோவால் ஊக்கமளிக்கப்படவில்லை என்றால், உதவப்பட்ட, சந்தர்ப்பவாத சீரழிவின் மிகச் சிறந்த அறிவுறுத்தலான உதாரணம், இலங்கையில் உள்ள லங்கா சம சமாஜக் கட்சியாகும். 1954 இல், நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டபோது, இந்தக் கட்சியின் தலைவர்கள் ஒரு தெளிவற்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

(எனினும் சில மாதங்களுக்கு முன்பு, பப்லோவாத அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிறுபான்மையினர், லங்கா சம சமாஜக் கட்சியிலிருந்து பிரிந்துவிட்டனர். இருப்பினும், இந்தப் பிளவிலிருந்து தலைவர்கள் எந்த அரசியல் முடிவுகளையும் எடுக்கத் தவறிவிட்டனர்.)

அதற்கு ஈடாக, பப்லோ லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்களின் சந்தர்ப்பவாதத்தைத் தீவிரமாக ஊக்குவித்தார். அவர்கள் இன்று தங்கள் புரட்சிகர பாசாங்குத்தனங்களை, முதலாளித்துவ கட்சிகள் மற்றும் ஆட்சிகளுக்கு முன்னால் மிகவும் அடிமைத்தனமாக மாற்றியுள்ளனர். லங்கா சம சமாஜக் கட்சி 1960 இல், திருமதி. பண்டாரநாயக்க உடனும் முதலாளித்துவ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருந்தனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

இந்தக் குட்டி முதலாளித்துவ வார்த்தைஜால தலைவர்கள் தங்களை மார்க்சிஸ்டுகளாக மாறுவேடமிட்டுள்ளனர். அதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் அகிலத்தின் பணிகள் குறித்த இடைமருவு வேலைத்திட்டத்தைப் படித்து மற்றும் அதை சம சமாஜக் கட்சியின் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். [99]

சரியாக ஒரு வருடம் கழித்து, லங்கா சம சமாஜக் கட்சி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் நுழைவதன் மூலம் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகளை உறுதி செய்தது. அது இலங்கை தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பேரழிவு தரும் விளைவுகளைக் கொண்ட வரலாற்று பரிமாணங்களின் காட்டிக்கொடுப்பாகும்.

இறுதியாக, இந்த அறிக்கை அனைத்துலகக் குழு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பணிகளை மதிப்பாய்வு செய்தது:

அனைத்துலகக் குழு எப்போதுமே நான்காம் அகிலத்தின் ஐக்கியத்தை ஆதரித்தது, இயக்கத்தைப் பிளவுபடுத்தி அதன் காரியாளர்களை அழிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகப் போராடியது. இத்தாலியில் சமீபத்தில் நடந்த மாநாட்டை ஒரு 'ஐக்கிய' மாநாடாகப் பார்க்கக்கூடாது, மாறாக 1953 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய பிளவின் அரசியல் தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டும்.

நான்காம் அகிலத்தின் உண்மையான ஐக்கியம், ஒரு சரியான வழிமுறை, உறுதியான கொள்கைகள் மற்றும் பரிசோதிக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே அடைய முடியும். இது, மற்ற அனைத்துப் போக்குகளுடனும் போட்டியிட்டு ஒரு உலக மார்க்சிச தலைமையைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்காத, குழப்பத்தின் மீது கட்டப்பட்ட அத்தகைய ஒற்றுமை, ஒரு மணல் கயிறாகும்.

“இது ஒரு ட்ரொட்ஸ்கிச சகாப்தம்” என்று திருத்தல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இந்த வகையான மகிழ்ச்சியான முட்டாள்தனத்தில் துணிவார்வமோ அல்லது நம்பிக்கையோ இல்லை. குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் இடது சீர்திருத்தவாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் கொள்கைகளை வெற்றிகரமாக மாற்றியமைத்தவர்களின் அணுகுமுறையை அது வெளிப்படுத்துகிறது.

பப்லோவின் அகிலத்திற்கு எதிர்காலம் இல்லை. ஏனெனில் அது எந்த வரலாற்று எதிர்காலமும் இல்லாத ஒரு சமூகக் குழுவான குட்டி முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் அகிலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனென்றால் நாம் தொழிலாள வர்க்கம் மற்றும் உலகம் முழுவதும் நடக்கும் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளோம்.

இது ஒரு ட்ரொட்ஸ்கிச சகாப்தம் என்று நாங்கள் கூறுகிறோம், பின்நோக்கி செலுத்தமுடியாத நிகழ்ச்சிப்போக்குகள் அதை உருவாக்குகின்றன என்பதன் காரணமாக அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் உறுதியான, கோட்பாட்டுரீதியான, சுயாதீனமான தலையீட்டின் காரணமாக நாம் ஒரு உலகக் கட்சியை உருவாக்குவோம் என்பதன் காரணமாக ஆகும்.

நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்பும் போராட்டம் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது. 'நான்காம் அகிலம் பிதற்றுபவர்கள், வார்த்தை ஜாலக்காரர்கள் மற்றும் அறநெறிக்கான அழைக்கப்படாத ஆசிரியர்களை அகற்றிவிடுகின்றது.'

தொழிலாள வர்க்கத்தின் உண்மையான கம்யூனிச தலைமையை உருவாக்க விரும்பும் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்: இடைமருவு வேலைத்திட்டத்திற்காக போராடும் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்: ஸ்தாபக மாநாட்டின் அடிப்படை முன்மொழிவை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும், அதாவது நான்காம் அகிலத்தின் நனவான செயல்பாட்டின் மூலம் மட்டுமே தலைமை நெருக்கடி தீர்க்கப்பட முடியும் என ஏற்கும் அனைவருக்கும் அழைப்புவிடுகின்றோம். [100]

சர்வதேச செயலகத்துடன் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் கொள்கை கோட்பாடற்ற மறு ஒருங்கிணைப்பு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் அகிலத்திற்குள் வெடித்த உள்நாட்டுப் போரின் தீவிரமயமாக்கலைக் குறித்தது. 25 வருடங்களுக்கு முன்பு ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியின் அழிவைத் தடுப்பதற்காக, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமை நடத்திய போராட்டம் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், 1961 மற்றும் 1963 க்கு இடையில் எழுதப்பட்ட தனிச்சிறப்புடைய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட அந்தப் போராட்டத்தின் அரசியல் பாடங்கள், சோசலிச தொழிலாளர் கழகத் தலைமையால் பாதுகாக்கப்பட்ட கொள்கைகளின் அடித்தளத்தில் நிறுவப்பட்ட அனைத்துலகக் குழுவின் புதிய பகுதிகளின் அதற்கடுத்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. ஜெர்ரி ஹீலி, மைக்கல் பண்டா மற்றும் கிளிஃவ் சுலோட்டர் ஆகியோரின் மகத்தான பங்களிப்பு அவர்களின் பாரம்பரியத்தின் நீடித்திருக்கும் ஒருபகுதியாக, அவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தின் நேர்மையான மதிப்பீடு புறக்கணிக்க முடியாத ஒன்றாகும்.

அனைத்துலகக் குழுவில் 1963 பிளவுக்குப் பிந்தைய தசாப்தத்தில் கிளிஃவ் சுலோட்டரின் பங்கு இந்த அரசியல் சுயசரிதையின் இரண்டாம் பாகமாக இருக்கும். இது எதிர்வரும் இலையுதிர்காலத்தில் வெளியிடப்படும்.

பிற்குறிப்புகள்:

[73] Labour Review, September-October 1957, Vol. 2, No. 5, pp. 136–147.

[74] Labour Review, Volume 7, Number 1, Spring 1962, p. 33.

[75] Ibid., pp. 35-36.

[76] “The Economic Content of Narodism and the Criticism of It in Mr. Struve’s Book,” Lenin, Collected Works, Volume 1 (Moscow: Progress Publishers, 1960), pp. 399–400.

[77] “‘The Theoretical Front’, Lenin’s Philosophical Notebooks, Second Article” Labour Review, Summer 1962, Vol. 7, No. 2, pp. 77–78.

[78] Lenin, Collected Works, Volume 38 (Moscow: Foreign Languages Publishing House, 1961), p. 182.

[79] “‘The Theoretical Front’, Lenin’s Philosophical Notebooks, Second Article” Labour Review, Summer 1962, Vol. 7, No. 2, p. 78.

[80] Ibid., pp. 76–77.

[81] David North, Notes on Lenin on Dialectics, October 1, 1982 [unpublished typed manuscript].

[82] Ibid.

[83] “Trotskyism Betrayed: The SWP accepts the political method of Pabloite revisionism,” Trotskyism Versus Revisionism, Volume Three (London: New Park, 1974), p. 238.

[84] Ibid., pp. 238–39.

[85] Ibid., p. 239.

[86] “Against Revisionism,” Labour Review, Volume 7, No. 2, Summer 1962, p. 41.

[87] “Cuba, the Acid Test,” Trotskyism Versus Revisionism, Volume Four (London: New Park, 1974), p. 23.

[88] Ibid., p. 25.

[89] Ibid., p. 76.

[90] Ibid.

[91] “Letter from James P. Cannon to Farrell Dobbs, October 31, 1962,” Trotskyism Versus Revisionism, Volume Four, pp. 72–73.

[92] “Opportunism and Empiricism,” Trotskyism Versus Revisionism, Volume Four, p. 77.

[93] Ibid., pp. 77–78.

[94] Ibid., pp. 78–79.

[95] Ibid., p. 87.

[96] Ibid., p. 97.

[97] “Manifesto of the International Committee of the Fourth International,” Labour Review, Summer 1963, Volume 7, Number 5, pp. 165–66.

[98] Ibid., p. 168.

[99] Ibid., p. 169.

Loading