பகுதி மூன்று

கிளிஃவ் சுலோட்டர்: ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு (1928-1963)

பகுதி1| பகுதி2| பகுதி3| பகுதி4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிளிஃவ் சுலோட்டர்

வர்க்கப் போராட்டம், மார்க்சிச தத்துவம் மற்றும் புதிய இடது

'விட்சன்ரைட் மாநாட்டிற்கு' (Whitsuntide Conference) சில மாதங்களுக்குப் பின்னர் வெளிவந்த அதே லேபர் ரிவியூ சுலோட்டரின் ஒரு நீண்ட தத்துவார்த்தரீதியான கட்டுரையையும் கொண்டிருந்தது. '‘புதிய இடதும்’ தொழிலாள வர்க்கமும்' என்ற தலைப்பிலான, இந்தக் கட்டுரை தனிச்சிறப்புமிக்க முக்கியத்துவம் வாய்ந்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தொழிலாளர் வர்க்கத்தின் தினசரி போராட்டங்களில் தலையிடுவதற்கான வலியுறுத்தலின் அடிப்படையில் இருந்த மெய்யியல் கருத்துருக்களை அது விரிவாக விளக்கியது.

சுலோட்டரைப் பொறுத்தவரை, எழுச்சியடைந்துவரும் மற்றும் அதிகரித்தளவில் பிரபல்யமாகும் 'புதிய இடதுகளின்' கருத்தியல்வாதிகளதும் தத்துவவாதிகளினதும் மையப் பண்பு, வரலாற்றின் உந்துசக்தியான வர்க்கப் போராட்டத்தின் மீது கவனம் செலுத்துவதிலிருந்து மார்க்சிசத்தை திசை திருப்பும் முயற்சியாகும்.

“முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ள' மிக எளிமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து பெறப்பட்ட “கவனத்திற்கு எடுக்கமுடியாத போர்க்குணத்திற்கு”, முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் எல்லாவற்றிற்கும் மேலாக எதையும் “கவனத்திற்கு எடுக்காது” தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவளிக்கும், மார்க்சிசத்தின் ஒரு காலாவதியான வறட்டுப் பிடிவாத வடிவத்தை ஆதரிப்பதற்காக லேபர் ரிவியூ மற்றும் நியூஸ் லெட்டர் விமர்சிக்கப்பட்டது என்பதை சுலோட்டர் கவனித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், ஈ.பி. தொம்சனின் நண்பரும் மற்றும் பிரிட்டனில் வளர்ந்து வரும் புதிய இடதுசாரி ஒரு முன்னணியின் பிரதிநிதியுமான ரால்ப் (ரஃபேல்) சாமுவேலின் 'சுவாரஸ்யமான கருத்து' மீது அவர் கவனத்தை ஈர்த்தார். அவர் 'ஜெர்ரி ஹீலிக்கு 'தொழில்துறை போராட்டம் தீர்க்கமான விஷயம் அல்ல, அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் தான் தீர்க்கமானது' என்பதை நினைவூட்டினார்.' சுலோட்டர் தொடர்ந்தார்:

அதிகாரத்திற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்திற்கு நாம் நிச்சயமாக திரும்புவோம்; இதற்கிடையில் வர்க்கப் போராட்டத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் பக்கங்களின் இடைத்தொடர்பு பற்றி நாம் கவனம் செலுத்துவோம். இது ஒரு தத்துவார்த்த கேள்வி, ஒரு வரலாற்று கேள்வி மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணிகளாக்குவதற்காக புத்திஜீவிகள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய ஒன்றாகும். ... தொழில்துறை போராட்டத்தை விலக்கிவிட்டால், உங்களுக்கு என்ன 'அரசியல்' செயல்பாடு உள்ளது? பாராளுமன்றமா? நாங்கள் ஆங்கில கால்வாய்க்கு அப்பால் பிரான்சை பார்த்து நடுங்குகிறோம்.

பல்கலைக்கழகங்கள் (Universities) மற்றும் லெஃப்ட் ரிவியூ (Left Review) மற்றும் நியூ ரீசனர் (New Reasoner) வட்டாரங்களில் ஒத்துக்கொள்ளப்பட்டிருப்பதை விட 'மார்க்சிசத்தில்' என்ன எஞ்சியிருப்பது என்பதைப் பார்ப்பது சற்று கடினம். மார்க்ஸின் தத்துவார்த்த கண்டுபிடிப்புகள் அல்லது முடிவுகளை அவர்கள் இன்னும் செல்லுபடியானதாகக் கருதுகிறார்களா? அப்படியானால், எதை? அல்லது மார்க்சின் வழிமுறை (இயங்கியல்) மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இன்றைய சமூக யதார்த்தம் அந்த வழிமுறையைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய கண்டுபிடிப்புகளைக் கோருகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்களா? பழைய மார்க்ஸால் அசைக்க முடியாத ஹேகலின் மிச்சங்களாக இந்த பெரும்பாலான விமர்சகர்களால் பெருமையுடன் முகர்ந்து பார்க்கப்படும் ஒன்றாக இயங்கியலை கருதுகின்றார்களா என்று ஒருவர் சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது. அப்படியானால் அங்கு என்ன மிஞ்சியிருக்கிறது?

எங்கள் பங்கிற்கு, மார்க்சின் இயங்கியல் வழிமுறையானது, சமூக உற்பத்திக்கும் தனியார் தன்னகப்படுத்தலுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பிரதிபலிக்கும் முதலாளிகளுக்கும் மற்றும் அவர்களின் அரசுக்கும் எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை, முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படைப் பகைமையை அம்பலப்படுத்துகிறது என்று கூறுவதன் மூலம் எம்மை நாமே மேலும் மேலும் “இழிவுபடுத்திக்கொள்கிறோம்.” இதைக் குறிப்பிடுவது, முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விரிவான மற்றும் தீவிரமான ஆராய்ச்சிக்கு பிரதியீடாக இல்லை. ஆனால் இவை முதலாளித்துவத்திற்குள் இருக்கும் மாற்றங்கள், அந்த உண்மையை எப்போதும் கவனத்தில் கொண்டு படிக்கவில்லை என்றால், உழைப்பின் மீதான மூலதனத்தின் அதிகாரத்தின் நிலையான கட்டமைப்பிற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்ற அத்தகைய ஆய்வு பயனற்றது. பயனற்றது என்பதன் பொருள் தொழிலாள வர்க்கத்திற்கு 'நடைமுறையில்' பயனற்றது மட்டுமல்ல, விஞ்ஞானரீதியாகவும் கூட பயனற்றது. …

முதலாளித்துவ வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுத் தன்மையிலிருந்து நவீன வர்க்கப் போராட்டம் எழுகின்றது. ஆம், தொழிலாள வர்க்கத்திற்குள் வேறுபாட்டின் வளர்ச்சி உள்ளது; ஆம், புதிய 'நடுத்தர வர்க்கங்களின்' வளர்ச்சி உள்ளது; ஆம், முதலாளித்துவ சொத்துடமை மிகவும் சிக்கலான வழிகளில் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், மார்க்சின் முறையின் சாராம்சத்தையும், வர்க்க சமுதாயத்தைப் பற்றி அவர் உருவாக்கிய மையக் கண்டுபிடிப்பையும் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருக்காவிட்டால், இந்த நிகழ்வுகள் அவற்றிற்குள்ளேயே உள்ள விஷயங்களாகப் பார்க்கப்பட்டு, அவற்றின் ஆய்வாளர்கள் அவற்றின் உண்மையான வரலாற்று முக்கியத்துவத்தை அதாவது வர்க்கப் போராட்டத்திற்கான அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்திருக்க அதிக நேரம் எடுத்திருக்கும். [53]

புதிய இடதுக்கும் மார்க்சிசத்திற்கு இடையே இருந்த பிளவின் ஒரு முக்கியமான புள்ளியை சுலோட்டர் அடையாளம் கண்டார்:

இது, மார்க்சிசத்திற்கு உதட்டளவில் சேவை செலுத்தப்பட்ட போதிலும், வர்க்கம் பற்றிய கருத்தைச் சுற்றி மார்க்சிசம் கவனம் செலுத்தியதிலிருந்து விலகியுள்ளது. இது, அதன் மையத்தில் வர்க்க மோதலைக் கொண்டிராததும், வர்க்கம் தொடர்பான எந்த அணுகுமுறையிலும் மார்க்சிசத்தின் ஒரு துண்டு துணுக்கு கூட கிடையாது. தொழிலாள வர்க்கம் அந்தஸ்து, வருமானம் அல்லது எந்த பொதுவான சமூகப் பண்புகளின் அடிப்படையிலும் வரையறுக்கப்படவில்லை, மாறாக. முதலாளித்துவ உற்பத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் சிறப்பு நிலைப்பாட்டிலிருந்து பெறப்பட்ட, அதனால் அபிவிருத்தி செய்யப்பட்ட, முதலாளித்துவத்திற்கு அதன் தேவையான விரோதத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு பொதுவான பண்புகளாலும் நீங்கள் தொழிலாள வர்க்கத்தை வரையறுக்கலாம்; ஆனால் அது தனது அமைப்பின் வளர்ச்சி மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் வரலாற்று ரீதியாக தன்னை வரையறுக்கிறது. சமூக விஞ்ஞானத்தில் உள்ள மார்க்சிசவாதிகள் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் நிலை மற்றும் அந்த நிலைக்குத் தேவையான செயல்களைப் பற்றிய தெளிவான நனவுக்கு உதவும் பணியைச் சுமக்கின்றனர். அதன் உச்சக் கட்டத்தில், அதன் பொருள் இந்த வரலாற்றுக் காலத்தின் மிகப்பெரிய பணியில் பங்கு வகிப்பது: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுதலாகும். இதுதான் தத்துவத்தின் மற்றும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மற்றும் அமைப்புரீதியான கருவிகளின் முக்கியமான செயல்பாடு; இது இடது புத்திஜீவிகளிடமிருந்து வரும் அனைத்து தத்துவார்த்த பங்களிப்புகளின் பரிசோதனையாக இருந்தாக வேண்டும் [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]. [54]

இந்தப் பத்தியில் இருந்து சுலோட்டர், மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் ஆரம்பகால எழுத்துக்களைக் கவனமாக ஆய்வு செய்தார் என்பது தெளிவாக தெரிகின்றது. அதில் அவர்கள் குட்டி முதலாளித்துவ 'விமர்சனரீதியான விமர்சகர்களுக்கு' எதிராக வரலாற்றின் சடவாத கருத்தை உருவாக்கினர். 1844 இல் மார்க்ஸால் எழுதப்பட்ட புனித குடும்பத்தில் ஒரு பகுதி சுலோட்டருக்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது:

இந்த அல்லது அந்தப் பாட்டாளி வர்க்கம் அல்லது முழு பாட்டாளி வர்க்கமும் கூட அதன் குறிக்கோளாக அந்தக் கணத்தில் என்ன கருதுகிறது என்பது பற்றிய கேள்வி அல்ல. பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, அதன் இருப்பிற்கு ஏற்ப, வரலாற்றுரீதியாக அது என்ன செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஒரு கேள்வியாகும். அதன் குறிக்கோளும் வரலாற்று நடவடிக்கையும் அதன் சொந்த வாழ்க்கைச் சூழ்நிலையிலும் அதேபோல் இன்று முதலாளித்துவ சமுதாயத்தின் முழு அமைப்பிலும் வெளிப்படையாகவும் மாற்றமுடியாததாகவும் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. [மூலத்தில் வலியுறுத்தல்] [55]

1839 இல் கார்ல் மார்க்ஸின் சமகால சித்திரம்

தத்துவார்த்த பிளவுகளிலிருந்து ஆரம்பித்து, அவர்களின் வேலைத்திட்டம் மற்றும் நடைமுறையில் வெளிப்படுத்துவதுவரை, வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் ஒரு உண்மையான புரட்சிகர நடைமுறைக்கு ஒரு நியாயமான மாற்றாக காட்ட முயற்சி செய்த, சிற்றெண்ணம் கொண்ட புதிய இடது புத்திஜீவிகளின் சீர்திருத்தவாதத்தை சுலோட்டர் தாக்கினார். 'எதிர்கால முன்னேற்றத்திற்கான உறுதியான அடித்தளமாக, இன்றைய சமூகத்திற்குள் உறுதியான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான விருப்பமானது, அடிப்படையில் ஒரு குட்டி முதலாளித்துவ நிலைப்பாடாகும்' என்று சுலோட்டர் எழுதினார், 'தனியார் சொத்துடைமையின் உலகத்திலிருந்து ஒரு தீவிர முறிவின் தேவையை எதிர்கொள்ள மறுப்பது, அமெரிக்க சமூகவியலாளர் நோர்மன் பேர்ன்பாம், 'நிர்வாக தொழில்நுட்பவல்லுநர்' என்று அழைக்கும், விடயத்தைக் கையாளுவதன் மூலம் வாழ்கிற, சமூக வாழ்க்கையில் பாட்டாளிகளை விட முதலாளிகளுடன் தோராயமாக வாழும் எல்லைக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதாகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் லெஃப்ட் ரிவியூ ஆகியவற்றில் முக்கிய அக்கறையான, 'சோசலிசம் இங்கே இப்பொழுது' என்பது இந்த கருத்துக்களின் மோசமான வெளிப்பாடாகும்.' [56]

சோசலிச தொழிலாளர் கழகத்தை ஸ்தாபிப்பதற்கு பப்லோவாதிகளின் பதில்

சோசலிச தொழிலாளர் கழகத்தை ஸ்தாபிப்பதற்கான முடிவு முன்கணித்தபடி, பப்லோவாதிகளால் கண்டிக்கப்பட்டது. 'அனைத்துலகக் குழுவின் அமைப்புகளுக்கு ஒரு பகிரங்க கடிதத்தில்' பப்லோவாத சர்வதேச செயலகம் (International Secretariat) பின்வருமாறு வலியுறுத்தியது:

தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கு எதிரான அதிகப்படியான தாக்குதல்கள் மற்றும் சாமானிய தொழிலாளர் மட்டத்தில் அதன் 'மூன்றாவது காலகட்ட' செயல்பாட்டின் மூலம், கட்சிக்கு தேவையான மிக அடிப்படையான ஒழுக்கத்தை புறக்கணித்து, அத்தியாவசியமான வேலைகள் செய்யப்பட வேண்டும் என்ற பாவனையுடன், [சோசலிச தொழிலாளர் கழகம்] இப்போது தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் வென்ற அனைத்து நிலைகளையும் அழித்து வருவதுடன், சக்திகளின் தொடர்பிலும் நேரத்திலும் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் சீர்திருத்தவாத அதிகாரத்துவத்துடன் ஈடுபட்டுள்ளது. [57]

இந்த தாக்குதலின் கீழ், பப்லோவாதத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகள் இருந்தன: 1) நான்காம் அகிலம் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் 'இடது' முதலாளித்துவக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளின் மீது அழுத்தம்கொடுக்கும் குழுவாக மட்டுமே இருக்க முடியும்; 2) ஒரு மார்க்சிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வெல்வதற்கு ஒரு சுயாதீன புரட்சிக் கட்சி வெறுமனே சாத்தியமற்றது; மற்றும் 3) அத்தகைய கட்சியை உருவாக்க எந்த முயற்சியும் செய்யக்கூடாது.

சர்வதேச செயலகம், அதன் சந்தர்ப்பவாத காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தி, 'பொருளாதார முன்னணியில் போர்க்குணமிக்க வேலைநிறுத்த நடவடிக்கைகள் மூலம் எந்த மாற்றுத் தலைமையும் கட்டமைக்கப்படாது' என்று அறிவித்தது. [58] மேலும் நல்ல காரணத்திற்காக, 'எந்தவொரு வெகுஜன புரட்சிகரக் கட்சியும் முக்கியமாக தனிப்பட்ட ஆள்சேர்ப்பு மூலம் உருவாக்கப்படாது (அதாவது, பிரச்சாரம் அல்லது போர்க்குணமிக்க நடவடிக்கைகளின் மூலம் வெகுஜனக் கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்கள் அல்லது ஒரு நேரத்தில் 4, 5, 10, 12 உறுப்பினர்களை கொண்ட குழுக்களை வெற்றிகொள்ள முடியாது)“ அறிவித்தது. [59]

சமூக ஜனநாயகத்திலிருந்து சோசலிச தொழிலாளர் கழகம் தன்னை வெளியேற்றுவதற்காக சர்வதேச செயலகம் பின்வருமாறு கண்டித்தது:

சோசலிச தொழிலாளர் கழகம் தொடங்கப்பட்ட விதம் வலதுசாரி அதிகாரத்துவத்தின் இயல்பு பற்றி எந்தப் பிரமையும் இல்லாத எவருக்கும், தொழிற் கட்சிக்குள் இருப்பதை நடைமுறையில் சாத்தியமற்றதாக்குகின்றது. ஆனால் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அப்பாவி நிறுவனர்கள் Transport House [தொழிற் கட்சி தலைமையகம்] தடை மூலம் ஆச்சரியப்பட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்வோம். எனினும் இந்தத் தடை ஒரு உண்மை. இப்போது சோசலிச தொழிலாளர் கழகம் தொழிற் கட்சிக்குள் இருக்க விரும்பினால், இந்தத் தடைக்குப் பின்னர், அது எதிர்ப்பின் கீழ் கலைக்கப்பட வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதிகாரத்துவத்தை எதிர்ப்பதற்கு அது வெளிப்படையாக முடிவு செய்தது. தற்போதைய சூழ்நிலையில், அத்தகைய மீறல் தவிர்க்க முடியாமல் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது [வலியுறுத்தல் அசலில் உள்ளது]. [60]

பப்லோவாதிகளைப் பொறுத்தவரை, 'அதிகாரத்துவத்தை மீறுவது' அனைத்து அரசியல் முட்டாள்தனங்களிலும் மிகப் பெரியதாகும். அவர்களின் விவாதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரே முடிவு, நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்காக உலக வரலாற்றில் மிக சக்திவாய்ந்த அதிகாரத்துவத்தை மீறுவதற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பு ஒரு பேரழிவு தரும் அரசியல் தவறாகும். எனவே, பப்லோவாத சர்வதேசத்தின் அனைத்து முயற்சிகளும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்துவங்களின் நடைமுறையில் இருக்கும் அமைப்புகளின் மீது அழுத்தம் கொடுக்கும் குழுவாக இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அளவுக்கு குறைப்பதன் மூலம் அந்தப் பிழையை திருத்துவதை நோக்கி செலுத்தப்பட்டன.

'ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தல்' என்ற தலைப்பில், லேபர் ரிவியூ இல் சுலோட்டர் எழுதிய ஒரு தலையங்க அறிக்கையில், சோசலிச தொழிலாளர் கழகம்தன்னை அடித்தளமாகக் கொண்டிருந்த அடிப்படை புரட்சிகர முன்னோக்கை நிலைநிறுத்தியது:

சோசலிச தொழிலாளர் கழகம் தற்செயலாக உருவானது அல்ல. பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்திற்கு அத்தகைய அமைப்பு தேவை என்பதைக் காட்டியதிலிருந்து கடந்த ஆண்டின் போராட்டங்களில் இருந்து உருவானதாகும். முதலாளிகளின் தாக்குதலிலிருந்து, சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்பு மற்றும் வலதுசாரி துரோகங்களிலிருந்து அடிப்படை படிப்பினைகளை உள்ளீர்க்கும் ஒரு முன்னணிப் படையை ஒழுங்கமைக்க, கற்பிக்க மற்றும் தயார்செய்ய தொழிலாள வர்க்கத்தின் அனுபவத்தில் தலையிடுவதன் மூலம் உருவானது. தொழில்துறையில் வளர்ந்து வரும் போர்க்குணம் இன்னும் தொழிற் கட்சியில் கொண்டு செல்லப்படாத நேரத்தில் அது உருவானது. தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்குள் வர்க்கப் போராட்டக் கொள்கைகளுக்காகப் போராடுவதன் மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது, எனவே இன்றைய சூழ்நிலையில் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அமைப்புகளுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் சிறந்த மரபுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

பப்லோ மற்றும் அவரது சர்வதேச செயலகத்தின் குழு, பிரிட்டனில் தற்போதைய நிலை, புறநிலை வர்க்க உறவுகள், தொழில்துறை போராட்டம், அரசியல் போராட்டம், அங்கிருந்து ஊற்றெடுக்கும் மார்க்சிஸ்டுகளின் பிரச்சனைகள் மற்றும் பணிகளை பகுப்பாய்வு செய்யவோ அல்லது மதிப்பிடவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை. இது அவர்களின் முறையும் அல்ல. ஒன்று, இத்தகைய பகுப்பாய்வும் மதிப்பீடும் பிரிட்டனில் மார்க்சிச இயக்கத்தின் நடைமுறைச் செயல்பாட்டு அனுபவத்தைப் பெற்றால் மட்டுமே பலனளிக்கும். ஆனால் சர்வதேச செயலகம் யாருடைய வாழ்க்கை அனுபவத்தையும் பெற வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் ஆயத்த- திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அதன் அர்த்தம், அதிகாரத்துவம் அல்லது அதன் பிரிவுகளை ஒரு வெகுஜன அழுத்தம் புரட்சியின் தலைமைக்கு கட்டாயப்படுத்தும் வரை வர்க்கப் போராட்டத்தில் ஒருவரின் சொந்தத் தலையீட்டை அடிபணியச் செய்வதாகும்.

'வெகுஜன அழுத்தம்' அதிகாரத்துவத்தின் அத்தியாவசிய தன்மையை மாற்றும் என்பது, மார்க்சிசத்திற்கு எதிரான கருத்தும், 'வெகுஜன அழுத்தம்' அதிகாரத்துவத்தை உலகப் புரட்சியுடன் சேர்ந்து செல்ல கட்டாயப்படுத்தும் என்ற மார்க்சிச எதிர்ப்பு கருத்துமாகும். அது மீண்டும் 'வெகுஜன அழுத்தத்தின் கீழ்' கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தை கைப்பற்ற வழிவகுக்கும் என்று அனுமானிக்கின்றது. இந்த பப்லோவாத தத்துவங்களுக்கு எதிராக (இவை உண்மையில் 'அதிகாரத்துவம் பற்றிய மார்க்சிச கருத்தாக்கத்தின் மோசமான திருத்தம்'. இவ்வாறு லேபர் ரிவியூ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை முத்திரை குத்தியது) நான்காம் அகிலத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மார்க்சிஸ்டுகள் போரைத் தொடுத்தனர். எந்த சமரசமும் இருக்க முடியாது, ஏனென்றால் அகிலம் தானே ஒரு புரட்சிகர சக்தியாக இருந்தது பணயம் வைக்கப்பட்டிருந்தது. பப்லோவும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் திருத்தல்வாதக் கருத்துக்களுடன், நான்காம் அகிலத்தின் அவசியத்தைப் பற்றிய சம்பிரதாய முறையிலான சொற்றொடர்களைக் கொண்டு திரும்பத் திரும்பக் கூறலாம், நடைமுறையில் அவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் அதன் அடித்தளத்தை சீர்குலைத்தன. அகிலத்துடன் சம்பிரதாய அனுசரிப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, அதன் உள்ளடக்கத்தையும், அதன் வேலைத்திட்டத்தையும் அழிப்பதே பப்லோவாதமாகும். நான்காம் அகிலத்தின் பெருமைக்குரிய பெயரில் பப்லோவாத கருத்துக்களை முன்வைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.

பல்வேறு நாடுகளில் மார்க்சிசத்தின் மீதான இந்த திருத்தத்தை எதிர்த்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள், மார்க்சிஸ்டுகளாக காட்டிக்கொள்ளும் இந்த பேர்வழிகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தையும் கோட்பாடுகளையும் பாதுகாக்க அனைத்துலகக் குழுவை அமைத்தனர்.

இன்று அனைத்துலகக் குழு பார்ப்பது போல், மார்க்சிஸ்டுகளுக்கான மிக உயர்ந்த பணி, நான்காம் அகிலத்திற்கு உறுதியான அடித்தளங்களை வழங்கும் கட்சிகள், ஒவ்வொரு நாட்டிலும் சக்திவாய்ந்த புரட்சிகர கட்சிகளை உருவாக்குவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதாகும். இந்தப் பணியை அடையவேண்டும் என்றால் பப்லோவின் தத்துவங்களுடன் சமரசம் செய்ய முடியாது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் நடைமுறை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் மார்க்சிச கருத்துக்களுக்கும் பப்லோவாதத்திற்கும் இடையில் ஒரு இணைக்கமுடியாத இடைவெளி உள்ளது. பப்லோவாதத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டம் இல்லாமல் எதிர்காலத்தின் மார்க்சிச காரியாளர்கள் உருவாக முடியாது. [61]

மிஷேல் பப்லோவும் (வலதுபக்கம்) ஏர்னெஸ்ட் மண்டேலும்

அனைத்துலகக் குழுவிற்குள் உள்ள பிரிவுகள்

சோசலிச தொழிலாளர் கழகத்தை ஸ்தாபிப்பது பிரிட்டனில் தொழிற்சங்கம் மற்றும் தொழிற் கட்சி அதிகாரத்துவத்துடன் மட்டும் மோதலை தீவிரப்படுத்தவில்லை. இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் வர்க்க நோக்குநிலை ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளில் அரசியல் பிளவுகளை வெளிப்படையாகக் கொண்டுவந்தது. உண்மையில், 1953 பிளவிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் தீர்க்கமான செல்வாக்கு மற்றும் அதன் பின்விளைவுகள், உலக நிலைமை பற்றிய மதிப்பீடு மற்றும் அதன் அனைத்துலக் குழுவின் பணிகள் மீதான தாக்கங்களில் இருந்து பிரித்து பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் வேலையை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் ஊக்குவிக்கவும் முடியாது. இந்த செல்வாக்கு, நாங்கள் விளக்கியபடி, குருஷ்சேவின் இரகசிய பேச்சு, ஹங்கேரிய புரட்சி மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் நெருக்கடிக்கு மன்றத்தின் பதிலில் சக்திவாய்ந்த வெளிப்பாட்டைக் கண்டது. 1956 நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறும் அதிருப்தியாளர்களை சேர்ப்பதற்கான வாய்ப்பை பிரிட்டனில் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு மட்டும் முன்வைக்கவில்லை என்பதை ஹீலி அங்கீகரித்தார். அரசியல் மூலோபாயத்தை உருவாக்குவதற்கு மிக முக்கியமானதாக இருந்தது என்னவெனில், 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற வேலைத்திட்டத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் எதிர்ப்பு, ஸ்ராலினிசத்தின் தோற்றம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு, சோவியத் அதிகாரத்துவத்தினதும் அதனுடன் இணைந்த கட்சிகளின் எதிர்ப் புரட்சிகர தன்மை அதனால் அவர் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த அவரது பகுப்பாய்வு இவற்றின் வரலாற்று நிரூபணம் ஆகும்.

இறுதி பகுப்பாய்வில், 1956 நெருக்கடியின் இன்றியமையாத முக்கியத்துவம் என்னவென்றால், நான்காம் அகிலத்துக்கும் சீரழிந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கும் இடையிலான சக்திகளின் உலக உறவில் ஆழமான மாற்றத்தை அது அறிவித்தது. நான்காம் அகிலத்தின் இன்னும் சிறிய சக்திகளை எதிர்கொள்ளும் பெரிய அரசியல் தடைகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் -மற்றும் அவை நிச்சயமாக மிகப் பெரியவை- இருந்தபோதிலும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் மீது பழைய அதிகாரத்துவங்களின் பிடியை பலவீனப்படுத்துவதைக் குறித்தது. ஜனவரி 1957 இல் லேபர் ரிவியூ அறிவித்தபடி, 'பெரும் பனியுகம்' முடிவுக்கு வந்தது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியை தீர்ப்பதற்கு சாதகமான புறநிலை நிலைமைகள் இப்போது உருவாகி வருகின்றன. ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முன்னால் இருந்த சவால், பிரிட்டனுக்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும், அவர்களின் தத்துவார்த்த வேலை மற்றும் நடைமுறை செயல்பாடு ஆகிய இரண்டிலும், புதிய சூழ்நிலையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதாகும்.

இந்த வரலாற்று மற்றும் அரசியல் சூழலில், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் புதுப்பிக்கப்பட்ட அவசரத்தைப் பெற்றது. 1956 க்குப் பின்னர், ட்ரொட்ஸ்கிசத்தின் புத்துயிரூட்டப்பட்ட சக்திகளால் தாக்குதலின் அபாயத்திற்கு எதிராக பலவீனமான அதிகாரத்துவத்தின் சிதைந்த சக்திகளை வலுப்படுத்தும் நோக்கில், ஒரு இராணுவ ஒப்புமையை பயன்படுத்த பப்லோவாதிகளின் முயற்சிகள் பெருமளவில் இயக்கப்பட்டன. பப்லோவாதிகள் 1956 ஆம் ஆண்டின் நெருக்கடிக்கு பதிலளித்து, மறுஇணைப்பு என்ற போர்வையில் (அதாவது, 1953 பிளவு முடிவடைந்தது) அனைத்துலகக் குழுவை உடைக்க முயன்றனர். நான்காம் அகிலத்தின் இந்த மறுஐக்கியம் இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு அடிபணிந்ததன் அடிப்படையிலும், பல முதலாளித்துவ-தேசியவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிர சக்திகளுக்கு ஆதரவளிப்பது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை கைவிடுதல் மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை நிராகரித்தல் ஆகியவை அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) வலதுபுறமாக நகர்வதால் வலுவூட்டப்பட்டன.

குருஷ்சேவின் இரகசிய பேச்சு மற்றும் ஹங்கேரிய புரட்சிக்கு சோசலிச தொழிலாளர் கட்சியின் பதில், மன்றத்தினதை விட மிகவும் வித்தியாசமானது. கனன் ஒரு சிறந்த உரையை வழங்கினாலும், மற்றொரு முன்னணி உறுப்பினரான முர்ரி வையிஸ், ஸ்ராலினிசம் என்ற தலைப்பில் நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டுரையை எழுதினாலும், மன்றத்தின் நீடித்த அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளுடன் ஒப்பிடக்கூடிய எதுவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படவில்லை. பிரித்தானியாவில் நிகழ்ந்ததை விட அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கோஷ்டி மோதல் மற்றும் நிறுவன சிதைவு மிகவும் கடுமையானது என்ற போதிலும், சோசலிச தொழிலாளர் கட்சி உண்மையில் ஸ்ராலினிச இயக்கத்திலிருந்து ஒருவரை கூட அணிதிரட்டமுடியவில்லை. இது போதுமானதற்ற அமைப்புரீதியான முன்முயற்சியின் விளைவு அல்ல. மாறாக, சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) 1956 இன் நிகழ்வுகளுக்கு ஸ்ராலினிசத்திற்கு எதிரான தாக்குதலை வளர்த்தெடுப்பதன் மூலம் பதிலளிக்காது, மாறாக அமெரிக்காவில் 'இடது' போக்குகளின் 'மறுகூட்டை' ஊக்குவித்ததன் மூலம், ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் அடிப்படையிலிருந்த வரலாற்றுப் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதைத் தவிர்த்தது.

டிசம்பர் 1956 இல் அறிவிக்கப்பட்ட சோசலிச தொழிலாளர் கட்சியின் மறுகுழுவாக்க முயற்சி, உடைவிற்குப் பின்னரான அதன் பாரம்பரிய 'பாட்டாளி வர்க்க நோக்குநிலையிலிருந்து' கட்சியின் விலகல் மற்றும் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் எதிர்ப்பு அரசியலை தழுவல் ஆகியவற்றின் ஒரு வெளிப்பாடாகும். பிற்போக்குத்தனமான AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் ஊக்குவிக்கப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு அரசியல் சூழல் மற்றும் சாமானிய தொழிலாளர்களின் போர்க்குணத்தில் கூர்மையான சரிவு, நிச்சயமாக வயதுமூப்படைந்த சோசலிச தொழிலாளர் கட்சித் தலைமைக்குள் ஊக்கமின்மை மற்றும் இராஜினாமா செய்யும் மனநிலைக்கு பங்களித்தன. சோசலிச தொழிலாளர் கட்சி எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் ஒரு 'குறுங்குழுவாக' மாறிவருகிறது என்ற எண்ணத்தால் பீடிக்கப்பட்ட கனன், தொழிலாள வர்க்கத்திலிருந்து குட்டி முதலாளித்துவத்தை நோக்கி அரசியல் நோக்குநிலை மாற்றத்திற்கு உள்ளாகும் பாதிப்பிற்கு உள்ளானவரானார்.

ஒரு 'குறுங்குழுவாத' இருப்பிலிருந்து உடைத்துக்கொள்வது என்பது, நடைமுறையில் பாட்டாளி வர்க்க நோக்குநிலை மற்றும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை மறுதலிப்பது ஆகியது.

மார்ச் 1957 இல், கனன், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை முன்கூட்டியே கலந்தாலோசிக்காமல், இலங்கை லங்கா சம சமாஜ கட்சியின் மிகவும் சந்தர்ப்பவாத தலைவர்களின் ஒருவரான லெஸ்லி குணவர்த்தனாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். இரண்டு பிரிவுகளையும் மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், சர்வதேச செயலகத்துடன் கலந்துரையாடல்களை தொடங்குவதற்கான ஆதரவை அவர் சமிக்ஞை செய்தார்.

ஜேம்ஸ் பி. கனன்

இந்தக் கடிதம் அனைத்துலகக் குழுவிற்குள் நீடித்த உட்கட்சிப் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சோசலிச தொழிலாளர் கட்சியின் கூற்றை நிராகரித்தனர். பப்லோவாதிகளுடனான மறு அணுகுதல் நியாயமானது, ஏனெனில் 1953 இல் பிளவுக்கு வழிவகுத்த வேறுபாடுகள் பெரும்பாலும் அமைப்புரீதியான கேள்விகள் தொடர்புபட்டதாகவே இருந்தன, அரசியல் பிரச்சினைகள் எப்படியோ காலப்போக்கில் தீர்க்கப்பட்டுவிட்டிருந்ததன, எனவே 1953 இனைப்பற்றி தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பது அவசியமில்லை என சோசலிச தொழிலாளர் கட்சியினர் வாதிட்டனர்.

1953 பிளவுக்கு அடிப்படையான வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரிவினரின் வலியுறுத்தல், சோசலிச தொழிலாளர் கட்சியின் சூழ்ச்சியைக் கடினமாக்கியது. ஜனவரி 1959 இல் கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் வெற்றியைப் பயன்படுத்தி, அமெரிக்க அமைப்பு மீண்டும் மறுஐக்கிய செயல்முறையை முன்னெடுத்துச் சென்றது. கியூபப் புரட்சி ஒரு புதிய தொழிலாளர் அரசை உருவாக்கியுள்ளதால் பப்லோவாதிகளுடன் சேர்ந்து சோசலிச தொழிலாளர் கட்சி தமது ஆதரவை வலியுறுத்தி, இது மீண்டும் மறுஐக்கியத்திற்கான அடிப்படையை வழங்கியதாக குறிப்பிட்டனர்.

நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாதுகாப்பில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் பங்கு (1961-1963)

ஜனவரி 2, 1961 அன்று, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியக் குழுவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில் நான்காம் அகிலத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சோசலிச தொழிலாளர் கட்சி நான்காம் அகிலத்தின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து பின்வாங்குகிறது என கவலை தெரிவித்தது. மேலும், 1953 பிளவுக்கு வழிவகுத்த வேறுபாடுகள், மிக சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய உடன்பாட்டினால் மாற்றியமைக்கப்பட்டு விட்டன என்ற கூற்று, பப்லோவாத திருத்தல்வாதத்தின் இயல்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. 1953 முதல், நெருங்கி வருவதற்குப் பதிலாக, பப்லோவாதத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான இடைவெளி மேலும் அகலமாகிவிட்டது மட்டுமல்லாது அது, தத்துவார்த்தரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணைக்கமுடியாததாகிவிட்டது. மேலும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு பின்வருமாறு கூறியது:

புரட்சிகர இயக்கத்தை எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து கலைப்புவாதமாகும். இது ஏகாதிபத்தியத்தின் வலிமைக்கு அல்லது தொழிலாளர் இயக்கத்தில் இருக்கும் அதிகாரத்துவ எந்திரங்கள் அல்லது இவை இரண்டிற்குமான சரணடைவிலிருந்து எழுகின்றது. சர்வதேச மார்க்சிச இயக்கத்தில் இந்த கலைப்புவாத போக்கை 1953 ல் இருந்ததை விட இப்போது மிகத்தெளிவாக பப்லோவாதம் பிரதிபலிக்கிறது. பப்லோவாதத்தை பொறுத்தவரை, ஏகாதிபத்திய சகாப்தத்தில் அனைத்து மார்க்சிச தத்துவார்த்த மற்றும் மூலோபாயத்தின் இதயமான, முன்னேறிய தொழிலாள வர்க்கம் இனி வரலாற்றின் முன்னோடியாக இல்லை, ஆனால் இது “உலக வரலாற்றுக் காரணிகளின்” விளையாட்டுப் பொருளாகி அவற்றை மேலெழுந்தவாரியாக கணித்து மதிப்பிடும் ஒன்றாகவே இருக்கமுடியும். [62]

ட்ரொட்ஸ்கிசம் மற்றும் மார்க்சிசத்தின் அடிப்படையான கருத்துக்கள் பற்றிய பப்லோவாதத்தின் திருத்தங்கள் தீர்க்கரமாக நிராகரிக்கப்பட வேண்டியிருந்தது. சோசலிச தொழிலாளர் கழகம் எச்சரித்தது:

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் புரட்சிகர கட்சிகளைக் கட்டுவது என்ற மூலோபாயத்திலிருந்து எந்தப் பின்வாங்கலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினால் ஒரு உலக-வரலாற்றுத் தவறாக முக்கியத்துவம் கொடுக்கப்படும். [63]

1953 பிளவிலிருந்து பின்வாங்குவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான ஆரம்பமாக இருக்கும் என்ற கருத்தை சோசலிச தொழிலாளர் கழகம் ஏற்கவில்லை. இது ஒரு அபாயகரமான தவறான கருத்து என அது வலியுறுத்தியது:

ட்ரொட்ஸ்கிசத்திற்கு முன் திறக்கப்படும் சாத்தியப்பாடுகளின் அளவின் காரணமாக அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவு அவசியமாக உள்ளதுடன், திருத்தல்வாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான நிலைப்பாட்டை நாம் அவசரமாக வரைய வேண்டும். பப்லோவாத திருத்தல்வாதம் ட்ரொட்ஸ்கிசத்திற்குள் ஒரு போக்காகக் கருதப்பட்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. இது செய்யப்படாவிட்டால் நாம் இப்போது தொடங்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு தயாராக முடியாது. இந்த உணர்வுடன் சோசலிச தொழிலாளர் கட்சி எங்களுடன் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். [அழுத்தம் மூலத்தில் உள்ளது]. [64]

இந்த கடிதம் ஒரு அரசியல் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்ததுடன், 1953 இலும் பின்னர் 1982 மற்றும் 1986 க்கு இடையிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உயிர்வாழ்வு அதில் தங்கியிருந்தது. 1961 முதல் 1963 வரை இரண்டு வருடங்கள் நீடித்த இந்தத் தீவிரமான போராட்டத்தில், சோசலிச தொழிலாளர் கழகத்தால் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான அறிக்கைகள் மற்றும் அறிக்கைகளின் ஆசிரியராக கிளிஃவ் சுலோட்டர் ஒரு முக்கிய பங்கை வகித்தார். இருப்பினும், சுலோட்டரின் பங்களிப்பு, கணிசமானதாக இருந்தாலும், தனிமையில் மேற்கொள்ளப்பட்ட சாதனை அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும். சுலோட்டரின் படைப்பின் உயர் மதிப்பீட்டை எந்த வகையிலும் குறைத்துவிட முடியாத, ஒரு வரலாற்று உண்மையாக, அவரது பங்களிப்புகள் சோசலிச தொழிலாளர் கழகத்தின் மற்ற சிறந்த உறுப்பினர்களுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் செய்யப்பட்டது. இதில் மைக் பண்டா, டொம் கெம்ப், சிரில் ஸ்மித், ஜாக் கேல் ஆகியோரும் மற்றும் இன்னும் மிக இளம் ஜெஃப் பில்லிங்- உம் அடங்குவர். ஹீலி தீர்க்கமான மற்றும் உறுதியான தலைமையை வழங்கினார். அவர் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த புத்திசாலித்தனம், பரந்த அரசியல் அனுபவத்துடன் ட்ரொட்ஸ்கிசத்திற்கு முன்னேறிய தொழிலாளர்களை வெல்லும் மற்றும் எதிர்வரவிருக்கும் சோசலிசப் புரட்சியில் அவர்களை தலைமைத்துவத்திற்கு தயார் செய்வதற்கான இடைவிடாத உறுதியைக் கொண்டு வந்தார். ஹீலியின் வழிகாட்டுதலின் கீழ் சோசலிச தொழிலாளர் கழகத்தால் நடத்தப்பட்ட தத்துவார்த்தப் பணிகளில் சிறப்பம்சமாக இருந்தது, புரட்சிகர மூலோபாயத்தின் அபிவிருத்தியும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலுடன் அதன் நேரடித் தொடர்பும் ஆகும். தொழிலாள வர்க்கத்தினை ஒரு புரட்சிகர சக்தியாக கொண்ட நோக்குநிலை 1961 இன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆவணங்களுக்கு அரசியல் துல்லியத்தையும் மற்றும் போராட்ட உந்துதலையும் வழங்கியது.

ஜனவரி 2 இன் சோசலிச தொழிலாளர் கழகத்தின் கடிதம், சோசலிச தொழிலாளர் கட்சி முழுவதும் மீதான ஒரு தாக்குதலுக்கு சமமானது என்பதை கனன் புரிந்து கொண்டார். அவர் மே 12, 1961 அன்று, சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய செயலாளராக அவரது வாரிசான ஃபாரெல் டோப்ஸுக்கு பின்வருமாறு எழுதினார்: 'எங்களுக்கும் ஜெர்ரிக்கும் இடையேயான விரிசல் வெளிப்படையாக விரிவடைகிறது.' [65] ஆனால் அவர் 'சோசலிச தொழிலாளர் கழகம் ஒரு ஓஹ்லரைட் [அதாவது குறுங்குழுவாதத்தில்] ஆர்வமாக உள்ளது' என்று கூறினாலும், உண்மையான பிரச்சனை என்னவென்றால், சோசலிச தொழிலாளர் கட்சி சந்தர்ப்பவாதத்தினுள் அதிகமாக மூழ்கியிருந்தது. அதன் 1961 'உலக நிலைமை பற்றிய தீர்மானத்தில்', சோசலிச தொழிலாளர் கட்சி காஸ்ட்ரோ தலைமையிலானது போன்ற குட்டி-முதலாளித்துவ தீவிர இயக்கங்களுக்கு அதன் தழுவலை நியாயப்படுத்த அவநம்பிக்கை மற்றும் சுய-தோல்வியடைந்த ஏமாற்றுவாதத்தை நாடியது. ஒரு புரட்சிகர கட்சியை உருவாக்க போதுமான நேரம் இல்லை என்று அது கூறியது. எனவே காஸ்ட்ரோ, ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியது:

குறிப்பாக, காலனித்துவப் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் சூழ்நிலையின் அவநம்பிக்கையை மிகக் கடுமையாக உணர்கிறார்கள். அவர்கள் செயலில் இறங்குவதற்கு முன்னர், ஒரு புரட்சிகர-சோசலிசக் கட்சி கட்டப்படும்வரை அவர்கள் காத்திருக்க முடியாது. சிறிய கருவாகத் தவிர, இதுபோன்ற கட்சிகள் எதுவும் இல்லை என்பதால், மக்கள் நன்கு அறியப்பட்ட அரசியலின் சட்டத்தைப் பின்பற்றி, ஆளும் கட்சியின் இடது பக்கம் நிற்க தேசிய தலைமையின் எந்த தலைமையையும் அதிகாரத்திற்கு தள்ளுகின்றனர். சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல தசாப்தங்களாக செய்த துரோகத்தால் ஒரு சோசலிச தலைமை இல்லாத நிலையில், முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்புகள் அனைத்து நிலைகளிலும் இடது நிலைப்பாட்டை ஆக்கிரமித்தது. புரட்சிகர சிந்தனை கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியால் ஆதரிக்கப்பட்டால் அவை இன்னும் வலிமையானவையாகும்……

ஒரு குட்டி முதலாளித்துவ கண்ணோட்டத்துடன் தொடங்குவதால், ஒரு புரட்சிகர மனப்பான்மை கொண்ட குட்டி முதலாளித்துவ அமைப்பை முன்கூட்டியே தழுவிக்கொள்வது எவ்வளவு அபாயகரமான பிழை என்பதை கியூபா நிரூபித்துள்ளது [67] [அழுத்தம் சேர்க்கப்பட்டது].

1966 இல் மூன்று கண்ட மாநாட்டில் ட்ரொட்ஸ்கிசத்தை கண்டித்து காஸ்ட்ரோ உரையாற்றுகிறார்

இந்தப் பத்தி சோசலிச தொழிலாளர் கட்சி ஆவணங்களை பண்பிட்டுக்காட்டும் மோசமான வார்த்தையாடல்களை எடுத்துக்காட்டுகிறது. புரட்சிகரக் கட்சியின் வளர்ச்சியும் 'வெகுஜனங்களும்' ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத நிகழ்ச்சிப்போக்குகளாக கருதப்படும் விதம் இங்கு குறிப்பாக கவனிக்கத்தக்கது. மக்கள், புரட்சிகரக் கட்சியின் கட்டுமானத்திற்காக 'முற்றிலும் காத்திருக்க முடியவில்லை' என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பொறுமையின்மை ஏன் புரட்சிகரக் கட்சியின் உண்மையான வளர்ச்சியில் வெளிப்படுத்தப்படவில்லை? 'வெகுஜனங்களின்' பொறுமையின்மை ஒரு மார்க்சிச கட்சியை உருவாக்குவதை சாத்தியமாக்கும் புறநிலை நிலைமைகள் இருப்பதற்கான தெளிவான சான்றாகும். உண்மையான பிரச்சனை 'வெகுஜனங்களின்' 'பொறுமையின்மை' அல்ல, ஆனால் பப்லோவாத அமைப்புகளின் பொறுமையின்மையாகும். இவை பாட்டாளி வர்க்கமற்ற அரசியல் சக்திகளுக்கு சந்தர்ப்பவாதரீதியாக அடிபணிந்ததன் மூலம் மக்களிடையே தலைமைத்துவத்திற்காக போராடும் பிரச்சனையை கடந்து சென்றன.

ஜூலை 28-29, 1961 அன்று நடைபெற்ற அனைத்துலக் குழுவின் கூட்டத்தில் அவர் அளித்த அரசியல் அறிக்கையில், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) தீர்மானத்திற்கு கிளிஃவ் சுலோட்டர் நீண்ட பதில் அளித்தார். சோசலிச தொழிலாளர் கட்சியின் திருத்தல்வாதத்தின் தாக்கங்களை எடுத்துக்காட்டிய அறிக்கை, சோசலிச தொழிலாளர் கட்சியின் நிலைப்பாட்டின் மீது சுலோட்டரால் உருவாக்கப்பட்ட விமர்சனத்தின் அரசியல் மற்றும் வழிமுறையில் சார்ந்த அத்தியாவசிய கூறுகளின் ஒரு சுருக்கமான எடுத்துகாட்டாக இருந்தது:

சோசலிச தொழிலாளர் கட்சி தீர்மானத்தின் அடிப்படை பலவீனம் என்னவென்றால், அது மார்க்சிச முறையை 'புறநிலைவாதம்', அதாவது பொய்யான புறநிலையுடன் மாற்றுகிறது. இந்த அணுகுமுறை அவர்களை பப்லோவாதிகள் போன்ற முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. சோசலிச தொழிலாளர் கட்சி தீர்மானத்தின் அடிப்படை பலவீனம் என்னவென்றால், மார்க்சிச அணுகுமுறையை 'புறநிலைவாதத்தினால்', அதாவது ஒரு பொய்யான புறநிலையால் மாற்றீடு செய்வதாகும். இந்த அணுகுமுறை பப்லோவாதிகளுக்கு ஒத்த முடிவுகளுக்கு இட்டுசெல்கிறது. ஏகாதிபத்தியத்தை முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக லெனின் பகுப்பாய்வு செய்ததிலிருந்து, தொழிலாள வர்க்கத்தின் நனவான புரட்சிகரப் பங்கும் அதன் கட்சியும் மிக முக்கியமானது என லெனின் முடிவு செய்தார். எவ்வாறாயினும், 'புறநிலைவாதத்தினை' ஆமோதிப்பவர்கள், அதன் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் பெற்ற மார்க்சிச தலைமையைக் காட்டிலும் 'புறநிலை காரணிகளின்' வலிமை மிக அதிகமாக உள்ளது மற்றும் முதலாளித்துவத்தின் பலம் தூக்கி எறியப்பட்டு, தொழிலாள வர்க்க புரட்சி அடையப்படும் என்கின்றனர். மார்க்சிச தலைமையை உருவாக்கும் வரை புரட்சியை தாமதப்படுத்த முடியாத மக்களின் 'பொறுமையின்மை' பற்றிய சோசலிச தொழிலாளர் கட்சி தீர்மானத்தின் சூத்திரங்களுடன், இதைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் இணைப்பது கடினம். கியூபாவில் குட்டி முதலாளித்துவ தலைமை, பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் நிகழ்வுகளின் புறநிலை தர்க்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால் (கியூபா ஒரு 'தொழிலாளர் அரசு' என்று சோசலிச தொழிலாளர் கட்சி கூறுகிறது, இது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை மட்டுமே குறிக்கும்) வர்க்கம், கட்சி மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு பற்றிய லெனினிச தத்துவம் வழக்கொழிந்து போகிறது. இந்த வகையான நிகழ்வு எப்படி சாத்தியமானது என்பதைக் காட்டும் தற்போதைய உலக சூழ்நிலையின் பகுப்பாய்வை நாம் கட்டாயம் கோர வேண்டும்.

அதேபோல, புரட்சியின் போக்கில் புரட்சிகரக் கட்சியை கட்டியமைப்பது பற்றி சோசலிச தொழிலாளர் கட்சி தீர்மானத்தில் உள்ள சூத்திரங்களுக்கும் இது பொருந்தும். இங்கேயும், சூத்திரங்களின் தாக்கங்களை இறுதிவரை சிந்திக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, இத்தகைய சூத்திரங்கள் வர்க்க உறவுகளின் பொதுவான வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. உலக சூழ்நிலையில், 'புறநிலை காரணிகள்' எந்த வகையில் புரட்சிகர தலைமையை தயார் செய்து கட்டமைப்பதை அவசியமற்றதாக்குகிறது என்பதை சோசலிச தொழிலாளர் கட்சி காட்ட வேண்டும். இருண்ட பிற்போக்கான காலங்களிலும், ஆயத்தம் செய்யும் மற்றும் புரட்சிக்கு முந்தைய காலகட்டங்களிலும் இத்தகைய கட்சிகளின் கட்டுமானம், லெனினதும் அவரைப் பின்பற்றியவர்களினதும் சிறந்த வரலாற்றுப் பணியாகும். …

தலைமை மற்றும் நனவின் அடிப்படை மார்க்சிச தத்துவம் இவ்வாறு திருத்தப்பட்டவுடன், மார்க்சிசவாதிகள் அல்லாத அரசியல் போக்குகளை மதிப்பிடுவதற்கான முற்றிலும் தவறான வழிமுறைக்கு கதவு திறக்கப்படுகிறது. தலைவர்கள் சில பொதுவான அளவில் 'முற்போக்கு' அல்லது 'இடதுபக்கம்” நகர்வதாக விவரிக்கப்படுகிறார்கள் (நிச்சயமாக மாற்ற முடியாத மற்றும் சக்திவாய்ந்த 'புறநிலை' சக்திகளின் அழுத்தத்தின் கீழ்) மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு இடையேயான அவர்களின் உறுதியான வர்க்கப் பங்கு பற்றி எந்த மதிப்பீடும் இல்லை. …

சோசலிச தொழிலாளர் கழக தேசியக் குழு இந்த நேரத்தில் புறநிலைவாதத்தினை நோக்கிய இந்தப் போக்கை குறிப்பாக ஆபத்தானதாக கருதுகிறது. ... முதலாளித்துவ தேசியவாதிகள், ஸ்ராலினிச அதிகாரத்துவம், பழைய ஐரோப்பிய சக்திகளில் சமூக-ஜனநாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட புதிய அதிகாரத்துவம் ஆகியவை, ஏகாதிபத்திய பொருளாதார எந்திரத்தை தொடர்ந்து செயல்படுத்த பெரிய அரசியல் சலுகைகளை வழங்க வேண்டியிருந்தது. … அனைத்து மார்க்சிஸ்டுகளும் ஏகாதிபத்தியத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பங்களிக்கும் இந்த அனைத்து சக்திகளுக்கும் ஒரு தெளிவான வர்க்க எதிர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் சந்தர்ப்பவாதிகள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களில் இந்த சக்திகளின் பிரதிபலிப்புக்கு எதிராக போராடுவது ஒரு அடிப்படைத் தேவையாகும்.

ஏகாதிபத்திய வளர்ச்சியின் இந்தக் கட்டத்தில், சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிவது புரட்சிகரக் கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். … சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராகவும், அவர்களின் பிற்போக்கு வர்க்கப் பாத்திரத்திலிருந்து அரசியல் முடிவுகளை எடுக்கத் தவறிய அனைவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியான போராட்டம் மட்டுமே புரட்சிகரக் கட்சியை சீரழிவிலிருந்து பாதுகாக்க முடியும். தத்துவார்த்தரீதியாக வளர்ச்சியடையாது இருப்பதும் ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு இந்தப் போக்குகளின் பங்களிப்பை புரிந்துகொள்வதிலிருந்து தவறுவதும், துல்லியமாக இத்தகைய விட்டுக்கொடுப்புகள் மற்றும் இத்தகைய ஆபத்துகளின் ஆரம்பமாக இருக்கலாம். சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு, சோசலிச தொழிலாளர் கட்சி இத்தகைய போக்கைப் பின்பற்றும் அபாயத்தில் உள்ளது என்று கருதுகிறது. …

இந்தத் தத்துவார்த்த வேறுபாடுகளின் தீவிர அரசியல் தாக்கங்கள் அங்கே உள்ளன. சோசலிச தொழிலாளர் கட்சி தீர்மானத்தின் 'புதிய யதார்த்தம்' ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் குட்டி-முதலாளித்துவ தலைமைகளை புரட்சிகரமானதாக அங்கீகரிக்கிறது என்றால், மார்க்சிச புரட்சியாளர்களுக்கான நடைமுறை முடிவுகளையும் ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும். குட்டி-முதலாளித்துவம் ஒரு சிறந்த வரலாற்று விதியைக் கொண்ட ஒரு உயிர்வாழக்கூடிய வர்க்கம் என்றால், இந்தக் கட்டத்தில் நனவான பாட்டாளி வர்க்கத்தின் காரியாளர்களின் பங்கு நாம் நினைத்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதையும் இது நிச்சயமாகக் குறிக்கிறது. சோவியத் அதிகாரத்துவத்தை ஒரு வர்க்கமாகவும், உலகப் புரட்சி நிகழ்ச்சிப்போக்கில் ஒரு தற்செயலான ஒட்டுண்ணி என்றல்லாது சமூகத்தின் வளர்ச்சியில் ஒரு அவசியமான வரலாற்று வடிவம் என வகைப்படுத்த முனைந்தவர்களுக்கு ட்ரொட்ஸ்கி கோரியது போலவே, வரலாற்றின் தனித்துவமான சகாப்தத்திற்காக அவர்கள் தங்கள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தும் இந்த திருத்தங்கள் இறுதிவரை சிந்திக்கப்பட்டாக வேண்டும் என்று நாம் மீண்டும் சொல்கிறோம். [68]

1962 ஆம் ஆண்டில், அனைத்துலக் குழுவிற்குள் மோதல் அதன் இரண்டாம் ஆண்டில் நுழைந்தபோது, சோசலிச தொழிலாளர் கழகம் பப்லோவாதத்தினதும் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியினதும் தத்துவார்த்த நெறிமுறையை, -ஒருவேளை 'பேரழிவு' என்பது மிகவும் பொருத்தமான வார்த்தையாக இருக்கும்- இந்த கலந்துரையாடலை ஒரு புதிய கட்ட ஆய்விற்கு எடுத்துச் சென்றது. 'மார்க்சிசத்தின் கேலிச்சித்திரம்' என்ற தலைப்பில் சுலோட்டர் மற்றும் பண்டா எழுதிய லேபர் ரிவியூ தலையங்கத்தில், காஸ்ட்ரோ மற்றும் பென் பெல்லாவுக்கு (அல்ஜீரியாவில் முதலாளித்துவ தேசியவாத FLN தலைவர்) பப்லோ எழுதிய கடிதங்களில் இருந்து திருத்தல்வாத தத்துவாசிரியரின் மோசமான அனுபவவாதத்தினையும் மற்றும் வரலாற்று சடவாத பகுப்பாய்வின் மிக அடிப்படைக் கூறுகளை கைவிட்டதையும் அம்பலப்படுத்தினர்:

காஸ்ட்ரோ மற்றும் FLN க்கு பப்லோ எழுதிய கடிதங்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர தத்துவம் மற்றும் அதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் அனைத்தையும் தேசிய இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ தலைமைகளுக்கு தியாகம் செய்யும் வகைக்குள் அடங்கும். இந்தக் கடிதங்கள் காஸ்ட்ரோ மற்றும் FLN தலைவர்களுக்கு சோசலிசத்திற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் மீண்டும் விழுவதற்கும் இடையே 'ஒன்றை தேர்வு செய்ய' விடுத்த சிறந்த வேண்டுகோளாகும். வரலாற்று சடவாவாதம் மறக்கப்பட்டுவிட்டது; தங்கள் சொந்த அரசியல் தத்துவம் மற்றும் அமைப்பை உருவாக்க திட்டவட்டமான வர்க்கம் தேவை என்பதற்கான எந்த தடயமும் அங்கு இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை மாற்றம் வரலாற்றின் போக்கை மாற்றும். [69]

சுலோட்டரும் பண்டாவும், அல்ஜீரியாவின் எதிர்காலம் மட்டுமல்லாமல் ஆபிரிக்காவின் அனைத்து புதிய சுதந்திர அரசுகளின் எதிர்காலமும், 'இந்த அரசியல்ரீதியாக வரையறுக்கப்பட்ட உயர்தட்டு எவ்வாறு அரசு அதிகாரத்தை பயன்படுத்துகிறது' என்பதையே சார்ந்துள்ளது என்று பப்லோ கூறிய ஒரு பத்தியில் கவனம் செலுத்தினர். [70] எனவே, பென் பெல்லாவும் மற்றவர்களும் சிறந்த பப்லோவின் ஆலோசனையை பின்பற்றி, சுயாதீனமான புரட்சிகரப் போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கான அமைப்புகளை உருவாக்காது, சோசலிசத்தை மக்களுக்குப் பரிசாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

காஸ்ட்ரோவுக்கு முன்னால் பப்லோ ஊர்ந்து சென்றதற்கான மற்ற உதாரணங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டினர்:

ஒரு மார்க்சிச கட்சியின் தலைமையின் கீழ் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் தேவைகளை பகுப்பாய்வு செய்வதை, பப்லோ காஸ்ட்ரோவை புகழ்வதனால் பிரதியீடு செய்கிறார். அவர் எழுதுகிறார்: 'நாங்கள் ஒரு உயர்ந்த புத்திஜீவித மற்றும் நடைமுறை தரத்தில் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையின் முன்னிலையில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன் .... ரோசா லுக்செம்பேர்க், லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் சில துறைகளில், புரட்சிகர யூகோஸ்லாவியர்கள் மற்றும் சீனர்களின் ஆக்கபூர்வமான மற்றும் ஆழ்ந்த புரட்சிகரமான முறையில் மார்க்சிசத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது, ஒருங்கிணைப்பது, விளக்குவது மற்றும் வளர்த்துக் கொள்வது என்று தெரிந்த பெரும் புரட்சியாளர்களின் வரிசையில் நீங்கள் உண்மையில் இருக்கிறீர்கள். மார்க்சிச பகுப்பாய்வு மட்டுமல்லாது, அனைத்து விதமான ஒப்பீட்டு அளவிலான முக்கியத்துவத்தைத் தீர்மானித்தலும் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன …

பப்லோவின் கடிதத்தில் உள்ள நகைச்சுவைப் பத்திகளுடன் மட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. அவற்றில் சில கிட்டத்தட்ட நம்பமுடியாதவை. உதாரணமாக, “அறிவார்ந்த புனிதப் பண்புகளை மேலும் மேலும் தன்னார்வத்துடன் ஏற்றுக்கொள்வதன் (அப்படியானால் தன்னார்வ வகைக்கு முன்?!) மூலம் மனிதனின் சடத்துவ தரத்தைக் கூட மேம்படுத்தல்” உட்பட பெரும் சமூக சீர்த்திருத்தங்களை அவர் கணித்தார் [71]

இந்த தலையங்க கட்டுரை பப்லோவின் திவாலான முறை குறித்த ஒரு கடுமையான குற்றச்சாட்டுடன் முடிந்தது:

உறுதியான பகுப்பாய்வுக்குப் பதிலாக, மேலெழுந்தவாரியான ஒப்பீடுகள், மூலோபாயத்திற்குப் பதிலாக தீவிர நம்பிக்கை ('கியூப புரட்சியின் இதுவரையிலான சாதனைகள், அதன் தலைமையின் தரம் மற்றும் விமர்சன மனப்பான்மை அதிகாரத்துவம் மற்றும் அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் நியாயமான நம்பிக்கையைவிட அனுமதிக்கும் அதன் உணர்வு.') தொழிலாள வர்க்கத்தினரிடையே புரட்சியாளர்களின் ஒரு முன்னோக்குக்கு பதிலாக, மக்கள் எழுச்சியின் முதல் கட்டத்தில், மக்களின் தன்னிச்சையான ஆதரவைப் பெறும் தலைவர்களிடம் உதாரணமாக காஸ்ட்ரோவுக்கு பொறுப்பை கைவிடுவது. இதில் கூட 'வரலாற்றின் முன் உங்களது உயர்ந்த பொறுப்பு உள்ளது.' 'இந்தப் புரட்சியின் தலைமையின் மீது, கியூபா மற்றும் உலக மக்களின் நலனுக்காக, இந்த வாய்ப்புகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்கான மகத்தான வரலாற்றுப் பணி உள்ளது.'

அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய அனைத்து பேச்சுக்களுடனும், நாம் அதிகாரத்துவ மனநிலையை சிறப்பாகக் கொண்டிருக்கிறோம். தொழிலாள வர்க்கம் தனது சொந்த தலைமையை உருவாக்க தினசரி போராடுவதற்குப் பதிலாக, வரலாற்றின் போக்கை மக்கள் நனவுபூர்வமாக தீர்மானிக்க உதவி, காஸ்ட்ரோ மற்றும் மற்றவர்கள் மக்களின் 'நன்மைக்காக' வாய்ப்புகளை 'புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்' என அழைப்பு விடுகின்றோம்.

பப்லோவின் கடிதங்கள், நாம் எந்த அர்த்தத்திலும் புரிந்துகொள்ளும் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியின் கடிதங்கள் அல்ல. ஏனென்றால் அவை தேசிய இயக்கங்களின் தற்போதைய தலைமைக்கு ஒரு தத்துவார்த்த மற்றும் நடைமுறை சரணடைதலை மூடிமறைப்பதில் தோல்வியுற்ற நகைப்புக்கிடமான முயற்சியே தவிர வேறில்லை. இந்த சரணடைதல் உலகின் பிற பகுதிகளில் உள்ள சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மீதான பப்லோவாதிகளின் அணுகுமுறையில் அதன் மறுபக்கத்தைக் கொண்டுள்ளது. [72]

இந்தப் பத்திகள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 60 வருடங்களுக்குப் பின்னர் மறுபரிசீலனை செய்வது, எதிர்காலத்தில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம், சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவின் கபடத்தை ஒரு சரியான ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வாக ஏற்றுக்கொண்டது என்பதும், அல்லது சோசலிச தொழிலாளர் கட்சி 1953 இல் பிளவுக்கு வழிவகுத்த அரசியல் வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுவிட்டன என்று வலியுறுத்தியதும் சமகால வாசகரை வியக்க வைக்கும். ஆனால் சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதத்திற்கு திரும்புவது, திருத்தல்வாதத் தலைவர்களின் வாதங்களின் தரத்தினால் அல்ல, மாறாக சோசலிச தொழிலாளர் கட்சி மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் செலுத்தப்பட்ட புறநிலை அழுத்தங்கள் மற்றும் தீவிர நடுத்தர வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலையைத் தழுவிக்கொண்டமை ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டது.

பிற்குறிப்புகள்:

[53] “‘New Left’ and Working Class”, Labour Review, July-August 1959, Vol. 4, No. 2, p. 50.

[54] Ibid.

[55] Marx-Engels Collected Works (New York: International Publishers, 1975), Volume 4, p. 37.

[56] Ibid., pp. 51–52.

[57] Cited from the International Bulletin of the International Secretariat, April 1959, in Labour Review, July-August 1959, Vol. 4, No. 2, p. 33.

[58] Document available here.

[59] Ibid.

[60] Ibid.

[61] Labour Review, July-August 1959, Vol. 4, No. 2, p. 38.

[62] Trotskyism Versus Revisionism: A Documentary History, Volume Three (London: New Park Publications, 1974), p. 48

[63] Ibid., p. 49.

[64] Ibid.

[65] Ibid., p. 71.

[66] Ibid., 73.

[67] Ibid., pp. 97–98

[68] Ibid., pp. 161–69.

[69] Labour Review, Volume 7, Number 1, Spring 1962, p. 5.

[70] Ibid.

[71] Ibid., pp. 6–7.

[72] Ibid.

Loading