நினைவகத்தில் கைவைக்காதே!

ரஷ்ய அரசு வழக்கறிஞர்கள் பெரும் பயங்கரம் பற்றிய ஆராய்ச்சிக்கான முன்னணி அமைப்பை மூட முயற்சிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழன் அன்று, ஒரு மனித உரிமை அமைப்பும் மற்றும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான ரஷ்ய நினைவக அமைப்பான மெமோரியல், அதன் நடவடிக்கைகள் ஒரு 'வெளிநாட்டு முகமை' போலிருப்பதாக போலியாக கூறப்படுவதன் அடிப்படையில் அதை கலைக்கும் நோக்கில் ஒரு சட்ட நடைமுறையை அறிவிக்கும் ஒரு கடிதத்தை அரசு தரப்பிலிருந்து பெற்றது. நினைவகம், அதன் கலைப்புக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று வலியுறுத்துகிறது. நவம்பர் 23 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் இது பற்றிய நீதிமன்ற விசாரணைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நினைவகம் மீதான தாக்குதல், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நனவின் மீதான தாக்குதலாகும். 1936-1938 இன் ஸ்ராலினிச பெரும் பயங்கரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்து, மில்லியன் கணக்கான மக்களை நாடுகடத்தியது. மேலும் இவர்கள் பல ஆண்டுகளாகவும், சில நேரங்களில் பல தசாப்தங்களாகவும் முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாஸ்கோவிற்கு அருகிலுள்ள புடோவ்ஸ்கி படப்பிடிப்பு தளம். 1937 மற்றும் 1938 க்கு இடையில், 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர்.(C) WSWS Media

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நடத்தப்பட்ட பாரிய படுகொலை நடவடிக்கை, அக்டோபர் புரட்சி பற்றி தொழிலாள வர்க்கத்திடமிருந்த வரலாற்று நனவை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டது. பாதிக்கப்பட்டவர்களில் 1917 சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்கிய போல்ஷிவிக் கட்சியின் முழுப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான இடது எதிர்ப்பாளர்கள், ஸ்ராலினிசத்திற்கு எதிரான சோசலிசவாதிகள்; ஜேர்மனி, கிரீஸ், யூகோஸ்லாவியா, ஹங்கேரி, போலந்து, சீனா மற்றும் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க உறுப்பினர்கள்; அதேபோல் சோவியத் ஒன்றியம் முழுவதும் பரந்திருந்த பல பத்தாயிரக்கணக்கான புத்திஜீவிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும் அடங்குவர்.

நினைவகம் பெரும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மிக விரிவான தரவுத் தளத்தை இணையத்தில் நிறுவி வெளியிட்டது. இந்த தரவுத் தளம் ஸ்ராலினிசத்தின் குற்றங்களின் வரலாறு மற்றும் ரஷ்ய புரட்சியின் வரலாறு மற்றும் 1920கள் மற்றும் 1930 களில் சர்வதேச சோசலிச இயக்கம் பற்றிய ஆராய்ச்சிக்கு இன்றியமையாதது.

மேலும் நினைவகம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும், பெரும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் காப்பகப் பதிவுகளை அணுகுவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவுகிறது. இந்த பதிவுகளில் பல இன்னும் NKVD இன் வாரிசான சோவியத் இரகசிய சேவையான FSB இன் கைகளில் உள்ளன. மேலும் அவற்றுக்கான அணுகல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவகத்தை மூடுவதற்கான ரஷ்ய அரசின் முயற்சி ரஷ்யாவில் ஒரு எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. அங்கு பெரும் பயங்கரத்தால் தீண்டப்படாத ஒரு குடும்பம் இல்லை.

ஒரு இலக்கிய விமர்சகரும் கவிஞருமான லெவ் ஒபோரின், ஊடக நிறுவனமான மெடுசாவிடம், அவரது தாத்தாவான வாசிலி பாவ்லோவிச் ஒபோரின் மற்றும் அவரது மனைவி, இடது எதிர்ப்பு உறுப்பினர்கள் இருவரின் தலைவிதியைக் கண்டறிய நினைவகம் உதவியது என்று கூறினார். 'எனது தாத்தா சுடப்பட்டார், ஆனால் அவர் எப்போது இறந்தார் மற்றும் புதைக்கப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவரது முந்தைய வாழ்க்கை வரலாறு பற்றிய விவரங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அவர் மேலும் கூறினார், 'பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அவர்களின் ஒடுக்கப்பட்ட உறவினர்களைப் பற்றி அறிய நினைவகம் உதவிய ஏராளமான மக்கள் உள்ளனர்.'

ஒரு தொழிலாளியும் 1920 களில் இடது எதிர்ப்பாளர்களின் அங்கத்தவருமான வாசிலி ஒபோரின் 1939 இல் சுட்டுக்கொல்லப்பட்டார் (C) Arkhiv Tsentra Memorial

1937 இல் கைது செய்யப்பட்ட தனது தாத்தா மிக்கையில் நிகோலேவிச் மலாமாவுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுகொள்ள நினைவகம் உதவியது என்று இசையமைப்பாளர் க்சேனியா காசான்ட்சேவா மெடுசாவிடம் கூறினார். அந்த அமைப்பின் தரவுத்தளத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் மட்டும் இல்லை, ஆனால் நினைவகம் மலாமாவின் தகவல்கள் உள்ள ஆவணக் காப்பகங்களை அணுகவும் உதவியது. அவர் சொன்னார், “நினைவகம் இல்லாமல் நாங்கள் எதையும் அறிந்திருக்க மாட்டோம். அதை அகற்றும் முயற்சியைப் பற்றி நான் அறிந்தபோது, இது தனிப்பட்ட முறையில் என்னை மூச்சுத திணறவைப்பது போல் உணர்ந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது எனது நினைவையே அழிக்கும் முயற்சியாகும்”.

ஒரு முக்கிய எழுத்தாளரான லுயுட்மிலா பெட்ருஷெவ்ஸ்கயா நினைவகத்தை கலைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசாங்கத்தால் வழங்கப்ப்பட்ட பரிசை திருப்பித் தருவதாக அறிவித்தார்.

நினைவகம் 1989 இல், ஸ்ராலினிசத்தின் இறுதி நெருக்கடியின் மத்தியில், இயற்பியலாளர் ஆண்ட்ரி சகாரோவ் உட்பட பல முக்கிய சோவியத் அதிருப்தியாளர்களால் நிறுவப்பட்டது. 1985 இல், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மிக்கைல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை முழுமையாக மீள்நிறுவும் நோக்கத்துடன் பெரெஸ்ட்ரோயிகா கொள்கையைத் தொடங்கினார். இது ஒரு பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் ஆட்சிக்கு எதிராக விரைவில் நாடு தழுவிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தமாக வெளிப்பட்ட ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் அச்சுறுத்தல் ஆகிய இரண்டிற்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் விடையிறுப்பாக இருந்தது.

அன்றைய அரசியல் மற்றும் கலாச்சார சூழல் மிகவும் முரண்பட்டதாக இருந்தது. முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரத்துவம் முழு வேகத்தில் முன்னேறிய அதே வேளையில், ஸ்ராலினிசத்தின் பல குற்றங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1980களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முன்னர் நசுக்கப்பட்ட எண்ணற்ற வரலாற்று ஆவணங்கள் மற்றும் இலக்கியப் படைப்புகள் சோவியத் பத்திரிகைகளில் பரவலாக வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கான மக்களால் விவாதிக்கப்பட்டன.

இந்த ஆவணங்கள் முக்கியமான புதிய ஆராய்ச்சிக்கான மத்திய அடிப்படையை உருவாக்கியது. இதில் சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரொகோவினின் இடது எதிர்ப்பின் ஏழு தொகுதிகள் கொண்ட வரலாறு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அதிகாரத்துவத்தின் நெருக்கடியானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை பெரும் பயங்கரதத்திற்குப் பின்னர் முதல் முறையாக சோவியத் ஒன்றியத்தில் தலையிட அனுமதித்தது. பல தசாப்தங்களாக வரலாற்று உண்மை மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஒடுக்கியமை மற்றும் ஸ்ராலினிசத்தின் துரோகங்கள் மற்றும் இடைவிடாத வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் ஆகியவை சோவியத் ஒன்றியத்தில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

மேலும், புத்திஜீவிகளின் கணிசமான அடுக்கு வலது பக்கம் நகர்ந்து முதலாளித்துவ மறுசீரமைப்பை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியது. இந்த நிலைமைகளின் கீழ், அதிகாரத்துவம் இறுதியில் சோவியத் ஒன்றியத்தை 1991ல் கலைத்து, தன்னை ஒரு புதிய ஆளும் வர்க்கமாக மாற்றிக்கொள்ள முடிந்தது.

இதுதான் இந்த நினைவகம் நிறுவப்பட்ட அரசியல் சூழலாகும். இவ்வமைப்பை உருவாக்கியவர்களில் பலர் ஸ்ராலினிசத்தையும் சோசலிசத்தையும் தவறாக ஒன்றெனக்கருதி, இதனால் பெரும் பயங்கரத்திற்கு மார்க்சிசத்தை குற்றச்சாட்டினர். இந்த அமைப்பு பாரம்பரியமாக ரஷ்யாவின் தாராளவாத எதிர்ப்பிற்கு நெருக்கமாக உள்ளது. சமீபத்தில், அது ஒரு அரசியல் கைதியும் புட்டினிற்கு எதிரான வெளிப்படையான இனவாத மற்றும் வலதுசாரி எதிர்ப்பாளரான அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் அறிக்கையை வெளியிட்டது. இருப்பினும், இது ஒரு ஆராய்ச்சி நிறுவனம் என்ற வகையில் அதன் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைக்காது.

அதன் அரசியல், பொருளாதார மற்றும் அறிவுசார் விளைவுகளினால் பெரும் பயங்கரம் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பின்விளைவுகளை கொண்ட ஒன்றாகக் கருதப்பட வேண்டிய நிகழ்வாகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல தசாப்தங்களில் நிலவிய மார்க்சிச-விரோத மற்றும் சோசலிச-விரோத பிற்போக்கு சூழலில் நினைவகம் பெரும் பயங்கரம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பணிகளை பாதுகாத்துள்ளது.

நினைவகத்தின் மீது ரஷ்ய அரசின் தாக்குதல் இப்போது இந்த சூழ்நிலை உடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் வருகிறது. வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியும், மிகவும் அழிவுகரமான தொற்றுநோயின்போது முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூகச் சூழல் மற்றும் அரசியல் பேரழிவு ரஷ்யப் புரட்சியின் வரலாறு மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக இடது எதிர்ப்பு மற்றும் ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டம் ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை ரஷ்யா உள்ளடங்கலாக அதிகரிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.

1930 களின் முற்பகுதியில் இருந்து சோவியத் இடது எதிர்ப்பு பற்றி முன்னர் அறியப்படாத ஆவணங்கள் 2018 இல் கண்டுபிடிக்கப்பட்டது, பெரும் பயங்கரம் வரை எதிர்ப்பாளர்களின் மகத்தான அரசியல் வலிமை மற்றும் செயல்பாடுகளுக்கு சாட்சியமளித்ததுடன், அதேபோல் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த மாதம், ரஷ்யாவின் முக்கிய கலாச்சார தொலைக்காட்சி நிலையமான Kultura, 1920 களின் புகழ்பெற்ற சோவியத் இலக்கிய விமர்சகரும் இடது எதிர்ப்பின் முக்கிய உறுப்பினருமான அலெக்சாண்டர் வோரோன்ஸ்கியின் படைப்புகள் பற்றிய தீவிரமான, ஒரு மணி நேர விவாதத்தை ஒளிபரப்பியது. அவரின் எழுத்துக்கள் பல தலைமுறை சோவியத் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அடித்தளமாக உள்ளது.

எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் இருந்து வெளிப்பட்ட ரஷ்ய தன்னலக்குழு இத்தகைய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றி அதிக உணர்திறன் கொண்டது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட எழுச்சி, அக்டோபர் புரட்சி மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டம் பற்றிய வரலாற்று உண்மையை மீட்டெடுப்பதற்கான அடிப்படையை உருவாக்கும் என்பதில் அது மிகவும் நனவாக உள்ளது. இதற்காகத்தான் நவ-ஸ்ராலினிச பொய்மைப்படுத்தல்கள் மற்றும் அரசு அடக்குமுறை ஆகியவற்றின் மூலம் இது அதனை முன்கூட்டியே தடுக்க முயல்கிறது.

2017 ஆம் ஆண்டில், அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாவில், யூத-விரோத அவதூறுகள் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்கள் நிறைந்த ஒரு பெரிய தொலைக்காட்சித் தொடருக்கு ரஷ்ய அரசு நிதியுதவி செய்தது. ரஷ்ய தன்னலக்குழு ஸ்ராலினையும் அவரது குற்றங்களையும் திட்டமிட்டு ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில், பெரும் பயங்கரத்தை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெருகிய முறையில் நேரடி அரச அடக்குமுறையை எதிர்கொள்கின்றன. 2013 இல் நினைவகம் 'வெளிநாட்டு முகமை' என அறிவிக்கப்பட்ட பின்னர பல ஆண்டுகளாக பெரிய அபராதங்களுக்கு உட்பட்டது

சந்தர்மோக்கில் உள்ள பாரிய துப்பாக்கிச் சூட்டு தளத்தில் அகழ்வாராய்ச்சியில் பணிபுரிந்தவரும் கரேலியாவில் உள்ள நினைவகத்தின் பிராந்தியப் பிரிவின் தலைவராக இருந்தவருமான யூரி டிமிட்ரிவ், ஏற்கனவே அப்பட்டமான அரச கட்டமைப்பில் புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நினைவகத்தின் மீதான தாக்குதல் வெற்றிகரமாக அமையுமானால் அது திடுக்கிடும் விளைவுகளை ஏற்படுத்தும். நினைவகம் கலைக்கப்படுமானால், ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் மற்றும் சோசலிச இயக்கத்தின் வரலாறு குறித்து வரலாற்று ஆய்வு செய்யும் எவரும் உடனடியாக அரசின் பழிவாங்கலுக்கு அஞ்ச வேண்டியிருக்கும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த தாக்குதலை நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும்.

Loading