இரு கட்சி அமைப்புமுறையின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க ஜனநாயகக் கட்சியினருக்கு உதவுவதற்காக ஜாக்கோபின் ஆசிரியர் பாஸ்கர் சங்கரா ஒரு மிதமான முன்மொழிவை செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாஸ்கர் சங்கரா(Twitter/@democracynow)

ஜனவரி 6, ட்ரம்பின் ஆட்சி சதியின் ஒரு ஆண்டு நிறைவின்போது ஜாக்கோபின் ஆசிரியரும் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) முக்கிய உறுப்பினருமான பாஸ்கர் சங்கரா கார்டியன் பத்திரிகையின் கருத்துப்பதிவு பத்தியில் அமெரிக்காவில் அரசியல் பதட்டங்களை எவ்வாறு 'தணிப்பது” என்பது பற்றியும் இரு கட்சி அமைப்புமுறையில் எவ்வாறு நம்பிக்கையை மீளமைப்பது என்பது பற்றியும் ஜனநாயகக் கட்சிக்கு அறிவுரை கூறினார்.

'அமெரிக்க ஜனநாயகம் நொறுங்கும் போது, அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாது' என்ற தலைப்பிலான கட்டுரை, 'எங்கள் நெருக்கடி தலைக்கு வரும்போது காங்கிரஸ் கட்டிடத்தின் மீது மோசமான பாசிச தாக்குதல் அல்லது இராணுவத்தால் கையகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்' என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்தது.

சமூக அதிருப்தியை மழுங்கடித்து அதை ஜனநாயகக் கட்சிக்கு பின்னால் செலுத்தும் DSA இன் அரசியல் பாத்திரத்தை சங்கராவின் வழிமுறை வெளிப்படுத்துகிறது.

முதலாளித்துவ இரு கட்சி அமைப்பின் ஒப்பீடான ஸ்திரத்தன்மையை வலியுறுத்துவதன் மூலம் அவர் தொடங்குகிறார். அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி இருக்கும் அளவிற்கு, அது 'மெதுவாக நகரும்' என்று அவர் எழுதுகிறார். ஜனவரி 6 நிகழ்வுகள் இரு கட்சி அமைப்பின் நெருக்கடியின் வெளிப்பாடு அல்ல, மாறாக அதன் வலிமையின் வெளிப்பாடு என்கின்றார்.

ஜனவரி 6 'சதி அல்ல' என்கிறார் சங்கரா. ஆர்ப்பாட்டம் 'ஒழுங்கமைக்கப்படவில்லை' மற்றும் எதிர்ப்பாளர்கள் 'சலித்துவிட்டதால்' கலைக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியினரும் ஊடகங்களும் அதை 'பெரும் விளம்பரம் செய்து' ஊதிப் பெரிதாக்கின, அது பதட்டங்களை அதிகப்படுத்தியது'. அன்று அமெரிக்கா உண்மையில் பாசிசத்தில் விழும் ஆபத்தில் இல்லை என்பதற்கான வலுவான அறிகுறி, ஜனவரி 6 ஆம் தேதி அன்று அமெரிக்க உயரடுக்கின் பிரதிபலிப்பாகும்' அவர்கள் ட்ரம்பை எதிர்த்தனர் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாத்தனர். அமெரிக்க ஆளும் வர்க்கம், 'தாராளவாத ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படையாகக் கைவிடத் தயாராக இல்லை' என்று சங்கரா எழுதுகிறார்.

யதார்த்தமோ அதற்கு நேர் எதிரானது. அரசியலமைப்பை தூக்கியெறிந்து சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சியை எதிர்கொள்ளும் போது 'தாராளவாத ஜனநாயக நெறிமுறைகளை' பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க ஆளும் வர்க்கம் முற்றிலும் தயாராக இல்லை என்பதை ஜனவரி 6 காட்டியது. 2000 தேர்தல் களவாடப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜனநாயகக் கட்சியினர் காட்டிய சலனமற்ற தன்மை இன்னும் அதிக அளவில் வெளிப்பட்டது. நாடு சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு வந்தாலும் கூட, தீவிர வலதுசாரிகளின் ஜனநாயக விரோத சதிகளை விட, கீழிருந்து வரும் சமூக எதிர்ப்புக்கே ஜனநாயகக் கட்சியினர் மிகவும் பயப்படுகிறார்கள்.

ஜனவரி 6 அன்று, ஆட்சிக் கவிழ்ப்பு தந்திரோபாய குறைபாடுகள் மற்றும் தற்செயலான நிகழ்வுகளால் தோல்வியடைந்ததை தவிர, ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவினரின் எதிர்ப்பாலும் அல்ல. பொலிஸில் உள்ள பிரிவுகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தோழமையுணர்வை கொண்டிருந்தன மற்றும் இராணுவம் ட்ரம்பிற்கு 199 நிமிடங்கள் அவகாசம் அளித்து மற்றும் காங்கிரஸில் கீழ்மாடியில் சிக்கியுள்ள காங்கிரஸ் உறுப்பினர்களை மீட்க துருப்புக்களை அனுப்ப மறுத்தது. காங்கிரஸின் கிட்டத்தட்ட 150 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகளை ஊர்ஜிதப்படுத்துவதற்கு எதிராக வாக்களித்தனர். சதி நடந்து கொண்டிருக்கும் போது, வாஷிங்டன் டி.சி. அல்லது நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்களிடம், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அணிதிரளுமாறு ஒரு ஜனநாயகக் கட்சியினர் கூட ஒரு பரந்த வேண்டுகோள் விடுக்கவில்லை. சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் என்று சங்கரா கூறும் பெருநிறுவனங்கள் இப்போது சதியில் ஈடுபட்ட அதே குடியரசுக் கட்சியினருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை நன்கொடையாக வழங்குகின்றன.

ஜனவரி 6 இன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும் சங்கராவின் முயற்சிகள் ஜனநாயகக் கட்சியின் பிரதிபலிப்பிற்கு முற்றிலும் ஒத்துப்போகின்றன. ஜனவரி 6 ஆபத்தை பெரிதுபடுத்தாதது மட்டுமல்ல ஜனநாயகக் கட்சியினர் தலைமைச் சதிகாரர்களுக்கு எதிராக எந்தவொரு தீவிரமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனவரி 8 அன்று, பைடென் 'எங்களுக்கு வலுவான குடியரசுக் கட்சி தேவை' என்று கூறினார், அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரைத் தங்கள் 'சகாக்கள்' என்று தொடர்ந்து குறிப்பிடுகின்றனர்.

அரசியல் அமைப்பின் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக ஜனவரி 6 ஐ முன்வைத்த பின்னர், உண்மையான ஆபத்து சர்வாதிகாரம் அல்ல, மாறாக அரசியல் துருவப்படுத்தல் மற்றும் அதிகரித்து வரும் பதட்டங்கள் என்று சங்கரா கூறுகிறார். 'அமெரிக்க அரசியல் அமைப்புமுறை துருவமுனைப்பைக் கையாள தனித்தன்மையான முறையில் தயாராக இருக்கவில்லை' என்று அவர் எழுதுகிறார். இதன் விளைவாக, 'பல அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றும் அரசியலின் திறனில் நம்பிக்கை இல்லாததில் ஆச்சரியமில்லை' என்றார்.

இந்த தூண்டில் போடும் தந்திரோபாயத்தின் மூலம், பைடென் ஒரு இடதுசாரிக் கொள்கைகளை இயற்ற வேண்டும் என்று இடதுசாரிகள் கோரக்கூடாது. ஏனெனில் இது தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சியைத் தூண்டும் என்று சங்கரா முடிவிற்கு வருகின்றார்.

ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் எட்டு ஆண்டுகால உற்சாகமற்ற தாராளவாதத்தால் தூண்டப்பட்ட எதிர்ப் புரட்சிதான் ட்ரம்பிசம் என்றால், அதிக நம்பிக்கை கொண்ட இடதுசாரி அரசாங்கம் என்ன மாதிரியான பிரதிபலிப்பைத் தொடக்கிவிடும்? இது ஒவ்வொரு முற்போக்காளரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வியாகும். குறிப்பாக அவர்கள் பைடெனை 'புதிய பிராங்ளின் ரூஸ்வெல்ட்டாக' மாற்ற முயற்சிக்கும்போது. எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் உறுதியான இடதுசாரி எதிரியை எதிர்கொள்கையில், பிற்போக்கு சக்திகள் இன்னும் ஆக்ரோஷமாக மாறும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

ஒருவர் நிலைமையை எவ்வாறு தணிப்பது? இதனை ஆரம்பிப்பதற்கு, ஜனநாயகக் கட்சியினர் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை கற்பனை செய்வதில் குறைவாக கவனம் செலுத்த வேண்டும் (அந்த அச்சங்களில் சில தேவைப்பட்டாலும் கூட) மற்றும் மக்கள் நம்பக்கூடிய கனவுகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது அரசியல் மக்களுக்கு வழங்கக்கூடிய பொருளாதாயங்களைப் பற்றிய தெளிவான செய்தியை கொடுக்கவேண்டும். அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நிறுவனரீதியான சீர்திருத்தத்தை தொடர நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கும் அதே வேளையில், செனட் முட்டுக்கட்டைகளை நீக்குதல் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பாஸ்கர் சங்கரா போன்ற ஜனநாயகக் கட்சி செயற்பாட்டாளர்களின் வேலை, முதலாளித்துவக் கட்சிகள் எவ்வாறு 'சூழலைத் தணிக்க' அல்லது புதிய தேர்தல் முழக்கங்களை வகுக்கலாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவதாகும். (அவர் ஒபாமாவின் 'நாம் நம்பக்கூடிய மாற்றத்தை' திருடுவதை விட 'மக்கள் நம்பக்கூடிய கனவுகளுடன்' அசலாக இருக்க முடியும்).

ஜனநாயகக் கட்சியின் 'தகவல் வழங்கும்' பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவார்கள் என்று சோசலிஸ்டுகள் நம்பவில்லை. சமூக பதட்டங்களை 'தணிக்க' நாங்கள் முயலவில்லை, ஏனென்றால் சமூகத்தில் பதட்டங்கள், இறுதியில் முதலாளித்துவ சமூகம் சமரசமற்ற நலன்களை கொண்ட வர்க்கங்களாக பிரிக்கப்படுவதன் விளைவாகும். சோசலிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்திற்கு கல்வி கற்பதற்கும் அணிதிரட்டுவதற்கும் போராடுகிறார்கள், இதனால் வர்க்கங்கள் இல்லாத ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவ முடியும். மேலும் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தியை ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்க முடியும்.

ஆனால் சங்கராவின் வாதத்தின் முக்கிய அம்சம் DSA யின் சோசலிச எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது. 'பைடெனை 'புதிய பிராங்ளின் ரூஸ்வெல்ட்டாக' மாற்ற முயற்சித்தால், இடதுசாரிகள் பாசிச வலதுசாரிகளுக்கு புறநிலையாக உதவுவார்கள் என்று அவர் வாதிடுகிறார்.

முதலாவதாக, அவர்களின் இடதுசாரி விமர்சனங்கள் அல்ல மாறாக ஜனநாயகக் கட்சியினரே ஜனவரி 6 நிகழ்வுகளை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் ட்ரம்புக்கு உதவுவதற்குப் பொறுப்பாளிகளாகும். மேலும் சங்கரா பாசிஸ்டுகளுக்கு உதவுவது எனக் கூறுவது என்னவென்றால், உண்மையில் அவர்களை நசுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான ஜனநாயகக் கட்சியில் இருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தினை நசுக்குவதாகும்.

தொற்றுநோய்களின் போது வோல் ஸ்ட்ரீட்டிற்கு எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்களை தியாகம் செய்யும் நிர்வாகத்திற்கு எதிரான எதிர்ப்பை சங்கரா கண்டிக்கிறார். பைடென் நிர்வாகம் இப்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் 'அதை பரவவிடு' என்ற கொள்கையின் பதிப்பை செயல்படுத்துகிறது. இது விரைவில் அமெரிக்காவில் அவர்களின் 900,000 வது நபரைக் கொல்லும். பெருநிறுவன இலாபங்களை பெருப்பிக்கவும், வோல் ஸ்ட்ரீட் ஊகங்களில் இருந்து அதன் செல்வத்தைப் பெறும் நிதியப் பிரபுத்துவத்தை வளப்படுத்தவும் ஒமிக்ரோன் மாறுபாடு உலகம் முழுவதையும் நாசமாக்குகையில் பைடென் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வேலைக்குச் செல்லவும் பள்ளிக்குத் திரும்பவும் கட்டாயப்படுத்துகிறார். ஜனநாயக நிர்வாகமும் ஜனநாயகக் காங்கிரஸும் ஒரு சாதாரண சமூக உள்கட்டமைப்பு மசோதாவைக் கூட நிறைவேற்ற முடியாதிருக்கையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பென்டகன் செலவின மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.

இந்த கொள்கைகளை எதிர்க்க முடியாது என்று சங்கரா கூறுகிறார். இதனால் அதன் கோவிட் கொள்கை விருப்பப்பட்டியல் இதற்கிடையில் பைடெனால் நிறைவேற்றப்படுகையில் நாம் தீவிர வலதுசாரிகளை கோபப்படுத்துகிறோம் என்கிறார். உண்மையில், சங்கரா தான் அதிக கவனம் செலுத்தப்படாத ஜனவரி 6ஐ மிகைப்படுத்தியதாக முன்வைப்பதன் மூலம் வலதுசாரிகளின் தற்போதைய சதிகளுக்கு அரசியல் மறைப்பு வழங்குகிறார்.

சங்கராவின் வாதம், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் நாடகப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற சாதி முதலாளித்துவப் பிரிவுகளுடன் அதன் அழுகிய கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நசுக்கவும் இடதுசாரி எதிர்ப்பை 'பாசிசவாதிகள்' அல்லது 'வடிவத்தில் இடதுகள் எனவும் உள்ளடக்கத்தில் வலதுகள்' என அவதூறு செய்தது.

எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான சோசலிச, ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை உடல் ரீதியாக அழித்தொழிக்க இந்த வாதம் பயன்படுத்தப்பட்டது. இது மாஸ்கோ விசாரணைகள் மற்றும் பெரும் பயங்கரமாக இருந்த அரசியல் இனப்படுகொலையின் கட்டமைப்பின் மையக் கூறு ஆகும். ஸ்பானிய உள்நாட்டுப் போரின் GPU நிலவறைகளில், எண்ணற்ற சோசலிச தொழிலாளர்களும், மக்கள் முன்னணியின் இடதுசாரி எதிர்ப்பாளர்களும் பாசிசத்துடன் கூட்டு சேர்ந்து 'ஐந்தாவது அணியை' உருவாக்கினர் என்ற பொய்யாக உருவாக்கிய காரணத்திற்காக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த அடிப்படையில் ஸ்ராலினிஸ்டுகள் அரசியல் சூழலை விஷமாக்கி, ஆகஸ்ட் 1940 இல் மெக்சிகோ நகரில் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு தயாராகினர். DSA தலைமையின் கணிசமான பிரிவு கடந்த ஆண்டு ட்ரொட்ஸ்கியின் படுகொலையைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சங்கராவின் வாதம் இன்று மக்கள் முன்னணிக் காலத்தில் இருந்ததை விட மிகவும் கீழ்த்தரமானது. அங்கு ஸ்ராலினிசம் கூட்டணியில் இருந்த முதலாளித்துவ பிரிவுகள் குறைந்தபட்சம் முதலாளித்துவத்தை பாதுகாக்க சமூக சீர்திருத்தங்களை இயற்ற வேண்டும் என்பதை அங்கீகரித்திருந்தன. அவரது கட்டுரையில், பைடென் ஒரு பிராங்ளின் ரூஸ்வெல்ட்டாக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று சங்கரா கூறுகிறார்! தொழிலாளர்களும் இளைஞர்களும் செயலற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் 50 ஆண்டுகளில் ஒரு தீவிரமான சமூக சீர்திருத்தத்தை கூட நிறைவேற்றாத ஒரு முதலாளித்துவ கட்சியை விமர்சனமின்றி ஆதரிக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

சங்கராவின் வேண்டுகோள், தன்னை ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாக ஸ்தாபித்துக்கொண்டதிலிருந்து இது வகித்த பாத்திரமான ஜனநாயகக் கட்சியை இடதுசாரி விமர்சனங்களிலிருந்து பாதுகாக்கும் DSA இன் நீண்டகால முயற்சியின் ஒரு பகுதியாகும். மார்ச் மாதத்தில், அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் பைடெனின் எதிர்ப்பாளர்களை 'மோசமான நம்பிக்கை' கொண்ட நடிகர்களாகக் கண்டித்தார் மற்றும் நிர்வாகத்தின் மீதான விமர்சனம் 'சலுகைகளுக்கான' ஒரு பயிற்சி என்றும் சோசலிஸ்டுகள் 'மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்ககூடாது' என்றும் கூறினார். சங்கராவின் வாதம் சற்று வித்தியாசமானது, ஆனால் இறுதி இலக்கு பைடெனுக்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பை நிராயுதபாணியாக்குவதாகும். DSA இன் நோக்கம் சோசலிசத்தை பிரபலப்படுத்துவது அல்ல, மாறாக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு எதிர்ப்பாக அதன் வளர்ச்சியைத் தடுப்பதாகும்.

ஆனால் பைடென் மீதான விமர்சனத்தை மௌனமாக்கும் சங்கராவின் முயற்சி, ஜனநாயகக் கட்சியுடனான அதன் உறவினை DSA நியாயப்படுத்தவதையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இடதுசாரிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது, DSA அதன் 'உள்-வெளி மூலோபாயம்' மூலம் சோசலிசத்திற்கு ஒரு பாதை இருப்பதாக வாதிடுகிறது. அதாவது ஜனநாயகக் கட்சியை இடது பக்கம் தள்ளுவதற்கு 'வெளியே' இருந்து அழுத்தத்தைப் பயன்படுத்துவதற்காக மட்டுமே DSA ஜனநாயகக் கட்சிக்கு 'உள்ளே' இருந்து செயல்படுகிறது என்கின்றது. ஆனால் சங்கரா இப்போது தீவிர வலதுசாரிகளை ஊக்குவிப்பதற்காக 'வெளியே' இருந்துவரும் அழுத்தத்தைக் குற்றம் சாட்டுகிறார். அதற்குப் பதிலாக பைடென் நிர்வாகத்தின் 'உள்ளே' தலைமையை விமர்சனமற்ற முறையில் பின்பற்ற வேண்டும் என்று கோருகிறார்.

சங்கரா மற்றும் DSA கருதுவதற்கு நேர்மாறான அமைப்பில் சேர ஆர்வமாக உள்ள சோசலிஸ்டுகள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள், மாணவர் அமைப்பில் சேர வேண்டும்.

Loading