“வன்முறையின் வேதனையே நவீனகாலப் பரவசம்போலும்”

துன்பியல் மக்பெத்: சமூக ஒழுங்கு உள்நாட்டுப் போராகச் சிதைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில்லியம் ஷேக்ஸ்பியரின் மக்பெத் (1606) இலட்சியப் பேராவலும், சூழ்ச்சியும் இரத்தக் களரியான உள்நாட்டுப் போரும் கலந்து மிரளவைக்கும் துன்பியல் நாடகமாகும். பழம்பெரும் அமெரிக்கத் திரைப்பட ஆக்குநர் ஜோயல் கோயன் (கோயன் சகோதரர்கள் புகழ்) மக்பெத் துன்பியலின் இந்தப் பதிப்பை இயக்கியுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஆகப்பெரிய துன்பியல் நாடகங்களில் ஒன்றாகிய மக்பெத் துன்பியலை முழுக்க முழுக்க ஒலியரங்க மேடையில் கறுப்பு வெள்ளைப் படமாக்கிக் கிளர்ச்சியூட்டும் படைப்பாகச் செய்துள்ளார்.

மக்பெத் துன்பியல்

டென்சல் வாஷிங்டன் மக்பெத் ஆகவும், ஃபிரான்சிஸ் மக்டார்மண்ட் திருவாட்டி மக்பெத் ஆகவும் வருகின்றனர். (co-director of Fargo, O Brother, Where Art Thou?, Intolerable Cruelty, A Serious Man) (ஃபார்கோ, ஓ பிரதர், வெர் ஆர்ட் தோ?, இன்டாலரபிள் க்ரூயல்டி, எ சீரியஸ் மேன் ஆகியபடங்களின் இணை இயக்குநரான) கோயனின் இந்தப் புதிய படைப்பில் ஆர்சன் வெல்லஸ் 1948ஆம் ஆண்டு குறைந்த செலவில் இயக்கிய சோடனையற்ற பதிப்பின் எதிரொலிகள் அடங்கியுள்ளன. சில காட்சிகள் மறுசீரமைக்கப்பட்டு, சில பகுதிகள் வெட்டப்பட்டாலும், கோயனின் இந்தப் படைப்பு —நம் காலத்திற்கான அவசரத் தன்மையுடனும் வினையார்வத்துடனும்— அந்த நாடகத்தின் ஆன்மாவுக்கு உண்மையாகவே உள்ளது. 2021 ஜனவரி 6ஆம் நாள் நடந்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்புச் சதியையும் உலகெங்கும் எதேச்சாதிகாரத்தின் பொதுவான எழுச்சியையும் நினைத்துப் பார்க்காமல் இருத்தல் கடினம்.

கோயனின் மக்பெத் தொடக்கத்திலிருந்தே மெய்யழகு தோய்ந்ததாகவும், கலக்கமளிப்பதாகவும் உள்ளது. படப்பிடிப்பு கவனமாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டு, ஜேர்மானிய அகவெளிப்பாட்டுவாத கலை இயக்கத்தின் சாயலில் உள்ளது. இந்தப் பட ஆக்கம் விரும்பியோ விரும்பாமலோ ஷேக்ஸ்பியர் மீதான அடையாள அரசியல் நிறுவனத்தின் தாக்குதலுக்கு மட்டுமல்லாமல், பொதுவாக, 'பண்பாட்டுத் தனதாக்கம்”, 'உங்கள் சொந்த பாதையை விட்டு விலகாமலிருப்பது” ஆகியவை பற்றிய அனைத்துப் பிற்போக்கு அபத்தத்துக்கும் கூரிய பதிலடியாக அமைகிறது. “நடிகர் தேர்வில் அசலாயிருக்க வேண்டும்” என்னும் வலது சாரிப் பரப்பியக்கம் கலைத் தன்மைக்குப் பகையான ஒன்று. இவ்வியக்கத்துக்கு நடுவில், எடுத்துக்காட்டாக, ”யூதக் கதாபாத்திரங்களில் அநேகமாய் யூதர்களே நடிக்க வேண்டும்” என்று சாரா சில்வர்மன், மவுரீன் லிப்மன் போன்ற பெரும் புள்ளிகள் கேவலமாகச் சொல்லிக் கொள்ளும் நிலையில், யூத அமெரிக்கரான கோயன் ஓர் ஆங்கில நாடக ஆசிரியர் 11 ஆம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்தில் அமைத்த நாடகத்தில் ஆபிரிக்க அமெரிக்கரான வாஷிங்டனை நடிக்க வைத்த முடிவு முகத்தில் அறைந்தாற் போன்றது, அதுவும் மிகவும் தேவையான ஒன்று. முக்கிய கலை என்பது இனமும் அடையாளமும் கடந்த ஒன்று என்பதோடு, அவற்றின் மீது கொண்ட ஓயாப்பித்தையும் மதிப்புக் கெடச் செய்வதற்கு இப்படம் மேலுமொரு சான்று.

இந்த அடிப்படையில்தான், இந்த மக்பெத் படைப்பைப் பற்றிய ஒரு விவாதத்தில், டென்சல் வாஷிங்டன் சொன்னார்: 'பல்வகைமை ஏதோ சிறப்பானது என்பது போல் அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய இடத்தில் கூட நாம் இருக்கலாகாது என்பது என் பணிவான கருத்து. இந்த இளஞ்சிறார் —கறுப்பு, வெள்ளை, நீலம், பச்சை அல்லது எந்நிறமானாலும்— உயர்ந்த திறமையும் தகுதியும் உடையவர்கள். அதனால்தான் அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.'

தன் பங்கிற்கு மக்டார்மண்ட் டெட்லைன் ஏட்டுக்களித்த பேட்டியில் கூறினார், 'நாங்கள் மிகவும் கலவையான குழுமம். எங்களில் சிலர் அமெரிக்க ஆங்கிலம் பேசுவோம், சிலர் பிரித்தானிய ஆங்கிலமும் சிலர் அயர்லாந்திய ஆங்கிலமும் பேசுவோம். எங்களில் சிலர் பயிற்சி பெற்ற ஷேக்ஸ்பியர் நாடக நடிகர்கள். டென்சலையும் என்னையும் போன்ற மற்றவர்கள் ஏதோ கொஞ்சம் செய்துள்ளோம், ஆனால் அதிகமில்லை.… எங்கள் வல்லமையில் நிறைய மாறுபாடு இருந்தது. ஆனால் குழுமம் என்று வந்த போது, கிட்டத்தட்ட ஒரு மாத ஒத்திகைக்குச் சேர்ந்து வேலை செய்வதற்கான ஒரு பாணியையும் ஒரு மொழியையும் நாங்கள் உருவாக்கிக் கொண்டோம். அதனால் இம்முறை நாங்கள் ஒரு வகையான செவ்வியல் ஒத்திகை வெளியில் தகைமை கண்டதாக நினைக்கிறேன்.'

இயக்குநரும் நடிகர்களும், அவர்களின் இனம் எதுவாக இருந்தாலும், ஆண் பெண் யாரானாலும், ஷேக்ஸ்பியரின் நாடகப் பொருளை அப்படியே உண்மையாக எடுத்துக் கொண்டு, பரந்துபட்ட பார்வையாளர்களுக்கு அதன் பொருத்தப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். '[ஷேக்ஸ்பியர்] ஒரு மேல்தட்டு நாடகக் கலைஞர் அல்லர்' என்று கோயன் கூறினார்: 'அவர் வெகு மக்களுக்காக எழுதிய நாடகக் கலைஞர். அது தன் காலத்தில் மக்கள் விரும்பிய கேளிக்கை ஆயிற்று. ஆனால் அது பேரிலக்கியமாகவும் அமைகிறது.”

Brendan Gleeson and Harry Melling in The Tragedy of Macbeth

மக்பெத் நாடகத்தில் ஸ்காட்லாந்திய படைத்தளபதி ஒருவர் கொலைகளால் வழியமைத்து ஸ்காட்லாந்தின் அரியணைக்குச் செல்ல முனைவதால் நேரிடும் அழிவையும் அநாகரிகத்தையும் ஷேக்ஸ்பியர் பேராழத்துடனும் கலைநுட்பத்துடனும் ஆய்வு செய்கின்றார். இதனால் 'தூண்டப்படும் துயரமான தீக்கனலும் குழப்பமான நிகழ்ச்சிகளும் / இன்னல் சூழ்ந்த காலத்துக்குப் புதிய சூழ்ச்சி.” அழகான மொழி, சலனப்படுத்தும் மொழி; நாடகம் ஒவ்வொரு முறை எதிர்ப்படும் போதும் புதுப்புது அர்த்தங்களை ஒருவர் காணலாம்.”

'நியாயமே கள்ளம், கள்ளமே நியாயம்” சொல்வது தொடக்கத்திலேயே மூன்று சூனியக்காரிகள் (புதிரான முறையில் அனைவரும் ஒருவராக நடித்து மலைக்கவைப்பவர் கேத்திர்ன் ஹன்டர்). நியாயத்துக்கும் கள்ளத்துக்கும், மனிதத்தன்மைக்கும் மனிதமின்மைக்கும், ஒளிக்கும் இருளுக்கும், நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும், பகுத்தறிவுக்கும் பகுத்தறியாமைக்கும் இடையிலான எல்லைகள் நாடகத்தையும் கோயனின் திரைப்படத்தையும் மென்மேலும் பெருகிச் சென்று இறுதியில் அச்சமூட்டும் பதட்டத்திலேயே இருக்கச் செய்கின்றன.

சூனியக்காரிகள் குருதிதோய்ந்த ஒரு போருக்குப் பின்னர் மக்பெத்தையும் பாங்க்வோவையும் (பெர்ட்டிகார்வெல்) “அழுக்குச் சூழலில்” சந்திக்கிறார்கள். ஸ்காட்லாந்து மன்னர் டங்கனைக் (பிரெண்டன் க்ளீசன்) கவிழ்க்க நோர்வே அரசனுடன் கூட்டாக இரண்டகம் செய்யும் காவ்டரின் தானே தலைமையில் வந்த ஒரு கலகப் படையைத் தோற்கடிக்கப் படை நடத்தியபின் போர்வீரர்கள் களத்திலிருந்து வெளிப்படுகின்றனர். குழந்தை இல்லாத மக்பெத் மன்னராவார், ஆனால் பாங்க்வோ முடிமன்னர்களின் புதிய வம்சத்தைத் தோற்றுவிப்பார் என்று சூனியக்காரிகள் சொல்லிக் கொள்கின்றார்கள்.

மக்பெத்தின் வெற்றிக்கு டங்கன் தரும்பரிசாக, மக்பெத் காவ்டரின் தானே ஆக முடிசூட்டப்படுகிறான். ஆனால் மக்பெத்துக்கு இன்னும் பெரிய இலட்சியங்கள் உள்ளன. இரவு வானத்தின் கீழே அவன் பாடுகின்றான்: 'விண்மீன்களே, உங்கள் தீச்சுடர்களை ஒளித்துக் கொள்ளுங்கள்: / ஒளி என் ஆழமான கறுப்பு ஆசைகளைக் காண வேண்டாம்.'

Frances McDormand in The Tragedy of Macbeth

இதற்கிடையில் திருவாட்டி மக்பெத்துக்கு மக்பெத்தின் எண்ணங்கள் ஒரு கடிதமாக வந்து சேர்கின்றன. குழந்தை இல்லா விட்டாலும், மக்பெத்துடன் ஆழமாக இணைந்திருப்பதால், அவள் தன் கணவரின் இலட்சியங்களுக்குத் தன்னால் ஊக்கமளிக்க முடியும் என்று நம்புகிறாள். “மனித அன்பெனும் பால் அவரிடம் பொங்கி வழிவதால்” வெற்றியைக் கொண்டாடத் தங்கள் கோட்டைக்கு வரும் டங்கனை அவரால் கொலை செய்யமுடியாது என்று அஞ்சுகிறாள்.

மனத்தை சில்லிடச் செய்யும் அவளது மனவோசை மெக்டார்மண்டால் அழுத்தமாக வழங்கப்படுகிறது. திகிலூட்டும் கோட்டைச் சுவர்களுக்குள், அவள் ஆவிகளை 'அடி முதல் முடி வரை கடுங்கொடுமையை என்னில் நிரப்புங்கள்!” என வேண்டுகிறாள்: எப்படியும் தொடக்க அரங்கிலாவது திருவாட்டி மக்பெத்துதான்“ ஷேக்ஸ்பியர் வரைந்த சித்திரங்களிலேயே ஆகப்பெரும் ஆளுமை கொண்டு, ஆகப்பெரும் மலைப்பூட்டும் சித்திரம்” என்று திறனாய்வாளர் ஏ.சி. பிராட்லி ஒருமுறை வாதிட்டார். அவளுடைய கணவரிடமிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டுவது 'நெகிழ்ந்து கொடுக்காத திடச் சித்தம், இதுவே கற்பனையையும் மனவுணர்ச்சியையும் உளச் சான்றையும் கட்டுக்குள் வைத்துக் கொள்வதாகத் தெரிகிறது” என்று பிராட்லீ எழுதினார்.

பின்னர் மக்பெத் தன்னால் தனது மனிதத் தன்மையை இழக்காமல் நெடுந்தொலைவு செல்ல முடியாது என்று அச்சமுற்று ஊசலாடும் போது ('மனிதனாகக் கூடிய அனைவருக்கும் என் அறைகூவல்: / இதற்கு மேல் செய்யத் துணிவார் யாருமில்லை”) அவனுடைய மனைவி அவனைக் கோழை என்று கடிந்து நோகடிக்கிறாள்.

கொலைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது, ஆனால் அதன் சமூகவிளைவுகளும், உளவியல் விளைவுகளும் நீண்டு செல்லக் கூடியவை. திருவாட்டி மக்பெத் “கொஞ்சம் தண்ணீர் நம்மை இந்தச் செயலிலிலிருந்து துடைத்து விடும்” என்று முதலில் நினைத்தாலும், “அரேபியாவின் அனைத்து நறுமணத் திரவியங்களும் இந்தச் சிறிய கையை மணக்கச் செய்து விடா” என்று இறுதியில் உணர்கிறாள், குற்ற உணர்ச்சியால் நொறுங்கிப் போய் அவள் ஒரு துன்பியல் முடிவைச் சந்திக்கிறாள்.

டங்கனைக் கொன்று அவனிடத்தில் அரசரான பின்னர் மக்பெத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆழமாய்த் தொல்லைப்படுத்துகிறது. குறுங்கால நோக்கில், மக்பெத் தன் எதிராளிகளை 'துரோகிகளென்று' வெளியிலனுப்பவோ, நாடு கடத்தச் செய்யவோ முடிகிறது. இவர்களில் பாங்க்வோவும், டங்கனின் மகன்களும், மக்டஃப் கோமானும் (கோரே ஹாக்கின்ஸ்) அடக்கம். மக்டஃப்பின் மனைவியும், குழந்தைகளும் கொலை செய்யப்படுவது ஷேக்ஸ்பியர் நாடகங்களிலேயே மிகவும் குலை நடுங்கச் செய்யும் காட்சிகளில் ஒன்றாகும், அது இங்கே தவிர்க்கப்படவில்லை. நச்சுக்குணம் கொண்ட ராஸ் (அலெக்ஸ் ஹாஸ்வெல்லின் புதிரான நடிப்பு) இல்லாத இடமில்லை. அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்தக் குடும்பத்தைப் போய்ப் பார்த்து அவர்களிடம் ராஸ் கூறுகிறார்: 'நாம் துரோகிகளாக இருந்து... கொந்தளிக்கும் கொடுங்கடலில் மிதக்கும் காலம் கொடியது.'

Denzel Washington in The Tragedy of Macbeth

இறுதியில், வாஷிங்டன்-மக்பெத் ஆற்றும் உரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இடம் பெற்ற மிகவும் இருளடர்ந்த உரைகளில் ஒன்று. அதில் அவன் வாழ்க்கை என்பது 'ஒரு கதை, / ஒருமுட்டாள் சொன்ன கதை / ஓசையும் கனலும் நிறைந்தகதை / பொருளற்ற கதை” என்று அறுதியிட்டுச் சொல்கிறான். ஆனால் இவை ஒரு கொடுங்கோலனின் சொற்கள், அவனுடைய செயல்களும் நடத்தையுமே அழுகி நாறுவதைக் காட்டும் சொற்கள். ஒவ்வொரு கொடுங்கோலனின் வாழ்வையும் போலவே அவனது வாழ்க்கையும் குற்றம் நிறைந்தது, உளவியலாக வாட்டி வதைப்பது; அது வெறுமையானதும், வேதனையானதும், பயனற்றதும் ஆகும் என்று மெய்ப்பட்டுள்ளது. மால்கம், மக்டஃப் ஆகியோர் இன்னுங்கூட உயிரோட்டமான, காத்திரமான மாற்றாக அமைகின்றார்கள்.

அடித்து நொறுக்கும் பின் விளைவுகளுடன் படம் தடதடத்து முன் செல்கிறது. வழியெங்கும் குறிப்பிடத்தக்க காட்சிகள் இடம் பெறுகின்றன. ஷேக்ஸ்பியரின் மயக்குமொழிக்கு அதற்குரிய இடம் தரப்படுகிறது.

குறிப்பாகவும் சிறப்பாகவும் வரிசைகட்டி வரும் காட்சிகளில் ஒன்று: நீக்கமற நிறைந்துள்ள நச்சுத்தனமான ராஸ்-க்கும் வீடற்ற முதியவர் ஒருவருக்குமான சந்திப்பாகும். இருண்டு கறுத்த நிலவமைப்பில் உடைந்து நொறுங்கிய சிதிலங்களுக்கு நடுவில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. குணச்சித்திர நடிகர் ஸ்டீபன் ரூட் குடித்து விட்டு வாய்க்கு வந்த படி பேசும் போர்ட்டராகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். நாடகத்தில் ஒரு மாற்றுக் காட்சியாக அவல நகைச்சுவைக்குப் புகழ்பெற்ற ஒரே ஒரு தருணத்தில் அவர் வருகிறார். நடிப்புகள், ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு அனைத்தையும் கோயன் நன்றாக ஒழுங்கு செய்துள்ளார். பாங்க்வோ கொலையுண்டு, அவருடைய மகன் ஃப்ளீன்ஸ் (லூகாஸ் பார்க்கர்) தப்பிச் செல்லும் காட்சியும் இவற்றில் ஒன்று. வாஷிங்டனும், மெக்டார்மண்டும் படம் முழுக்கத் திறம்பட நடித்துள்ளனர்.

மக்பெத் நாடகத்தை ஷேக்ஸ்பியர் ஓரளவுக்கு ஸ்காட்லாந்தில் முதலாம் ஜேம்ஸ் மன்னரை மனத்திற்கொண்டு அமைத்துள்ளார் என்பது நன்கு ஆவணமாக்கப்பட்டுள்ளது. அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், சூனியக் கலையில் பித்துக் கொண்டவர். ஜேம்ஸின் ஆட்சிக் காலத்தில் அரசியல் துரோகமும் சூழ்ச்சியுமே மையச் சிக்கல்களாக இருந்தன. முதலாளித்துவம் எழுச்சி பெற்று வந்த ஊழியில் முதலாம் எலிசபெத் மறைந்த பின் அரியணை ஏறிய புராட்டஸ்டான்ட் ஜேம்ஸ் பல்வேறு எதிர்ப் புரட்சி சதிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்து. கத்தோலிக்கத் திருச்சபை ஆளுகை செய்யும் பிரபுத்துவ ஒழுங்கை நோக்கி இங்கிலாந்தை மீளத் திருப்புவதே இந்தச் சதிகளின் நோக்கம். இப்படிப்பட்ட ஒன்றுதான் 1605ஆம் ஆண்டின் வெடிமருந்துச் சதி. பாராளுமன்றத்தையும் மன்னரையும் தகர்த்து ஒரு கைப்பாவை மன்னரை அமர்த்த முடியும் என்பது அந்தச் சதிகாரர்களின் நம்பிக்கை.

மக்டஃபிடம் அவரது குடும்பம் கொலையுண்ட கொடுஞ்செய்தியை ராஸ் தெரிவிக்கும் பேச்சை முழுமையாக மேற்கோள் காட்டத்தகும். படத்தில் அழுத்தமான உச்சரிப்பில் அது பேசப்படுகிறது:

ஐயோ, பாவம் இந்தநாடு !

கிட்டத்தட்ட தன்னை அறியவே அச்சம்

இதனை நம் தாயென்று சொல்ல முடியாது,

ஒன்றுமில்லா நம் கல்லறை என்றுதான் சொல்ல முடியும்,

ஆனால் ஒன்றுமறியார் ஒருமுறை புன்னகைக்கப் பார்த்தார்;

எங்கே பெருமூச்சுகளும் வலிமுனகல்களும் கீச்சுக் கதறல்களும்

வானைக் கிழித்தாலும் அடையாளம் காணப்படாதோ, அங்கே

வன்முறையின் வேதனையே நவீனகாலப் பரவசம் போலும்.

எழுச்சியும் வீழ்ச்சியுமான மக்பெத்தின் துன்பியல் பலவிதத்திலும் ஒரு சமூகத் துன்பியலாகும். நெருக்கடிக்குள்ளாகும் சமூக ஒழுங்கு, உள்நாட்டுப் போர், கொந்தளிப்பு, ஆட்சி மாற்றம், கொடுங்கோன்மை, நிலையற்ற தன்மை — இவை நம் காலத்திலும் தெளிவாக எதிரொலிக்கும் கூறுகள். மிகவும் கலவையான திரைப்படக் கலைத்திறன் கொண்ட கோயனைப் போன்ற ஒருவர் வானிலிருந்து வந்து குதித்தாற்போல், இப்படிப்பட்ட பேரழிவுச் செவ்வியல் நாடகத்தைப் படமாக இயக்கத் தேர்வு செய்கிறார் என்றால், அதற்குத் தற்செயல் காரணிகள் உட்பட, வெவ்வேறு பக்கங்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் குறிப்பாக அமெரிக்க சமூகத்தின் நிகழ்கால நெருக்கடியிலிருந்து பிறந்த சில அவசரக் கவலைகள் மேலோட்டமாக உய்த்துணரப்பட்டாலும் கூட, அவரது படைப்புருவில் நுழைந்திருப்பது மதிப்புக்குரியது.

மக்பெத் நாடகத்தின் கடைசியாக வந்துள்ள இந்தத் திரையாக்கம் கொந்தளிப்பான காலத்திற்குரிய படைப்பாகப் பரந்துபட்டோர் காணத் தக்கதொன்று.

Loading