ஜேர்மன் சான்சிலர் ஷோல்ஸுக்கு எழுதப்பட்ட பகிரங்கக் கடிதம் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலுக்கு பெருகிவரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமும் பல மாதங்களாக போர் தயாரிப்பில் இருந்த போதிலும், உக்ரேனில் பினாமிப் போருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. 'மூன்றாம் உலகப் போரின்' ஆபத்து குறித்து எச்சரித்து, உக்ரேனுக்கு 'கனரக ஆயுதங்கள்' வழங்குவதை நிராகரிக்கும் ஒரு பகிரங்க கடிதம் சில நாட்களுக்குள் 200,000க்கும் அதிகமான கையெழுத்துகளைப் பெற்றுள்ளது.

ஜேர்மனியின் 'வரலாற்றின் மீதான மதிப்பீடு' மற்றும் 'வரலாற்றுப் பொறுப்பு' ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 'உக்ரேனுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேலும் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டாம்' என்றும் இது இந்தப் போரை அணுசக்தி மோதலாக விரிவுபடுத்தும் என்றும் அக்கடிதம் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸிற்கு அழைப்புவிடுக்கின்றது. 'ஒரு ரஷ்ய எதிர்த்தாக்குதல், பின்னர் நேட்டோ உடன்படிக்கை உதவி வழங்கலுக்கான விடயத்தைத் தூண்டலாம், இதனால் ஒரு உலகப் போரின் உடனடி ஆபத்து தூண்டப்படலாம்' என அதன் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

முதல் கையொப்பமிட்டவர்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆண்ட்ரியாஸ் டிரேசன் மற்றும் அலெக்சாண்டர் குளூக, பத்திரிகையாளர் ஆலிஸ் ஸ்வார்ட்சர் மற்றும் குற்றவியல் சட்டப் பேராசிரியர் ரெய்ன்ஹார்ட் மேர்க்கெல் ஆகியோர் அடங்குவர். வலதுசாரி தீவிரவாதிகள் நிறைந்த உக்ரேனிய இராணுவத்திற்கு, விமான எதிர்ப்பு டாங்கிகளை வழங்குவதற்கு ஜேர்மன் பாராளுமன்றம் பெரும் பெரும்பான்மையுடன் ஒப்புதல் அளித்த மறுநாள், ஏப்ரல் 29 வெள்ளியன்று இக்கடிதம் வெளியிடப்பட்டது.

டுசல்டோர்ப் நகரில் மே தின பேரணியில் அதிபர் ஷோல்ஸ்

இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் போருக்கான பாரிய எதிர்ப்பின் வெளிப்பாடே பகிரங்க கடிதத்திற்கான பரந்த ஆதரவாகும். ஜேர்மன் அரசாங்கம் எந்தளவுக்கு வெளிப்படையாக ஏகாதிபத்திய மற்றும் நாஜி பெரும் சக்திக் கொள்கைகளான ரஷ்யாவிற்கு எதிரான போர் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றதோ அந்தளவிற்கு எதிர்ப்பு வலுவாக வளர்கிறது.

இது மே 1ம் தேதி தெளிவாக நிரூபிக்கப்பட்டது. பேர்லின் மேயர் பிரான்சிஸ்கா கிவ்வாய், பிராண்டன்பர்க் வாசலின் முன் ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (DGB) பேரணியில் கூக்குரலிடுவதை எதிர்நோக்கவேண்டியிருந்தது. மேலும் அவர் காவல்துறைக்கு 'மரியாதை' மற்றும் உக்ரேனில் போருக்கு 'ஆதரவு' கோரியபோது அவர் மீது முட்டைகளை வீசப்பட்டது. டுசல்டோர்ப் இல் அதிபர் ஷோல்ஸ் இன் இராணுவவாத உரையின் போது, அவரை ஒரு 'போர் வெறியர்' என்று வர்ணித்த மற்றும் அவரது இராணுவவாதக் கொள்கையை விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அவர் உரத்துக்கத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கருத்துக் கணிப்புகளும் அதிகரித்துவரும் போர் எதிர்ப்பு உணர்வை நிரூபிக்கின்றன. சமீபத்திய Deutschlandtrend கணக்கெடுப்பின்படி, உக்ரேனிய இராணுவத்திற்கு 'கனரக ஆயுதங்கள்' வழங்குவதற்கான ஆதரவு ஒரு மாதத்திற்குள் 10 சதவீத புள்ளிகள் குறைந்து 45 சதவீதமாக உள்ளது. கருத்து ஆய்வு நிறுவனமான Insa இன் மேலும் ஒரு ஆய்வில், பதிலளித்தவர்களில் 73 சதவீதம் பேர் 'உக்ரேன் போர் மூன்றாம் உலகப் போராக விரிவடையும் என்ற கவலையை' வெளிப்படுத்தினர்.

ஆனால் மூன்றாம் உலகப் போரை எப்படித் தடுக்க முடியும்? '28 பேரின் கடிதம்' இதற்கு பதில் அளிக்கவில்லை. போரின் தொடக்கத்தில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் மத்தியில் தன்னை முன்னணி இராணுவவாதியாக நிரூபித்துக் கொண்ட அதிபர் ஷோல்ஸுக்கு இது ஒரு சக்தியற்ற மற்றும் நம்பிக்கையற்ற வேண்டுகோளை முன்வைக்கிறது. ஷோல்ஸ் மற்றும் போக்குவரத்து விளக்கு கூட்டணி ஜேர்மன் இராணுவத்திற்கு 100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான 'சிறப்பு நிதியை' வழங்கியுள்ளது

மேலும், ஷோல்ஸ் மற்ற ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாட்டை விட உக்ரேனுக்கு அதிக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கும் அரசாங்கத்தை நடத்துகிறார். பாதுகாப்பு மந்திரி கிறிஸ்டீன் லம்பிரெக்ட் (சமூக ஜனநாயகவாதிகள்) பகிரங்கமாக ஒப்புக்கொண்டவாறு, போரின் தொடக்கத்தில் இருந்து நடந்த இரகசிய ஆயுத விநியோகங்களுக்கு கூடுதலாக, சில வாரங்களாக கிழக்கு ஐரோப்பா வழியாக உக்ரேனுக்குள் டாங்கிகள் கடத்தப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் Tagesspiegel செய்தித்தாள் தெரிவித்தபடி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் உள்நபர்களின் தகவலின் படி, உக்ரேனில் இப்போது ரஷ்யாவை விட அதிக செயல்பாட்டு டாங்கிகள் உள்ளன என்று தெரிவிக்கின்றது.

கடிதத்தின் ஆசிரியர்கள் கூறுவது போல், அபாயங்களை கவனமாக பரிசீலிக்கும் ஒரு விவேகமான கொள்கையை ஷோல்ஸ் நடத்தவில்லை. மாறாக, ஜேர்மன் அரசாங்கம் வேண்டுமென்றே தூண்டிவிட்டு மோதலைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே 2014 இல், ஜேர்மன் அரசாங்கம் 'இராணுவ கட்டுப்பாடு' முடிவுக்கு வந்ததாக அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கியேவில் ரஷ்ய-விரோத 'மைதான்' சதித்திட்டத்தை வாஷிங்டனுடன் இணைந்து நடத்தியது. அப்போதிருந்து, உக்ரேனிய இராணுவம் அசோவ் படைப்பிரிவு போன்ற கொலைகாரர்களின் பாசிச கும்பலை நாடி அதன் சொந்த ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது. ஜேர்மன் அரசாங்கம் நடைமுறையில் இந்த பாசிசப் பிரிவுகளுக்கும் அவர்களுடன் சண்டையிடும் வலதுசாரி தீவிரவாதப் படையணிகளுக்கும் ஆயுதம் கொடுத்து, ஐரோப்பாவின் மேலாதிக்க இராணுவ சக்தியாக தன்னைத் திணிக்க இந்தப்போரைப் பயன்படுத்துகிறது.

இந்த ஆளும் வர்க்கத்தின் 'உணர்வுக்கு' முறையிடுவது அர்த்தமற்றது என்பது, அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் பகிரங்க கடிதத்தின் அடக்கமான கோரிக்கைகளுக்கு எதிர்வினையாற்றிய கோபமான அவதூற்று பிரச்சாரத்தால் காட்டப்படுகிறது.

'போரால் 'துன்புறுத்தப்பட்டதாக' உணரும் எவரும், தங்கள் தார்மீக திசைகாட்டியை, ஒரு சுத்தியலால் நேராக்க வேண்டும்' என்று பாதுகாப்புக் குழுவின் தலைவர் மேரி-ஆக்னஸ் ஸ்ட்ராக்-சிம்மர்மான் (சுதந்திர ஜனநாயகவாதி - FDP) கூறினார். பசுமை அரசியல்வாதியான அன்டன் ஹோவ்ரைட்டர் வலதுசாரி Bild செய்தி ஊடகத்துடனான உரையாடலில் அணுவாயுத போர் பற்றிய கவலையை போர் பிரச்சாரம் என்பது போல காட்டி ஸ்வார்ட்சர் 'முற்றுமுழுதான ரஷ்ய பிரச்சாரத்தை' பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

பொருளாதார விவகார அமைச்சர் ரோபேர்ட் ஹாபெக் (பசுமைக் கட்சி) உடன் பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பிரிட்டா ஹாடெல்மேன் அக்கடிதத்திற்கு எதிராக கடுமையாகப் பேசினார். அலெக்ஸாண்டர் லம்ஸ்டோர்வ் (FDP) கட்டுரையாளர் ஷஸா லோபோ எழுதிய Spiegel இணையக் கட்டுரையை பாராட்டினார். அவர் இது “புட்டினுக்கு நடக்கக்கூடிய சிறந்த விஷயம்” என்று ஒரு வலதுசாரி இராணுவவாதியின் பாரம்பரிய முறையில் “ஜேர்மன் உதிரி அமைதிவாதத்தை” பற்றி விவரித்தார்.

உக்ரேனில் ஜேர்மன் கொள்கையுடன் நெருக்கமாக தொடர்புடையவர்கள் குறிப்பாக மூர்க்கமானவர்கள். கியேவில் உள்ள பசுமைக் கட்சியுடன் இணைந்த Heinrich Böll அறக்கட்டளையின் நீண்டகாலத் தலைவரான செர்ஜி சம்லெனி, ரஷ்ய பிரச்சாரத்தைப் பரப்புவதற்காக ஸ்வார்சர் தனது வெளியீட்டை 'வழக்கமாக கருவியாக்குகின்றார்' என்று குற்றம் சாட்டினார். சில நாட்களுக்கு முன்பு, சம்லெனி ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அழைப்பு விடுத்தார் மற்றும் 'ரஷ்யாவின் அணுசக்தியை அகற்ற' உண்மையில் கோரினார். ட்விட்டரில், அவர் ஹிட்லரின் குற்றங்களில் ஜேர்மனியர்கள் ஈடுபட்டிருந்ததைவிட 'ரஷ்யர்கள்' 'புட்டினின் குற்றங்களில் மிகஅதிகம் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

இந்த நபர்கள் தங்கள் போர் திட்டங்களை இன்னும் கொஞ்சம் கவனமாக தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது, நரகத்தை கொஞ்சம் குளிராக மாற்றுமாறு பிசாசுக்கு வேண்டுகோள் வைப்பது போன்றது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு புறநிலை காரணங்களைக் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் மேலே கொண்டு வரப்பட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னரான ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் வர்க்க பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்புவதற்காக போர் வழிமுறைகளை நாடுகின்றன.

மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்கான ஒரே வழி சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான். உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவரான டேவிட் நோர்த் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மே தினப் பேரணியில் குறிப்பிட்டது போல்:

உலகப் போரை அச்சுறுத்தும் இந்த முரண்பாடுகள் உலக சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன. தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சவால் இதுதான்: உலகப் போருக்கு இட்டுச் செல்லும் புறநிலைப் போக்குகளை வலுவிழக்கச் செய்து பலவீனப்படுத்தி, அதேவேளையில் புரட்சிக்கு இட்டுச் செல்லும் புறநிலை போக்குகளைப் பலப்படுத்தி வேகப்படுத்த வேண்டும்.

போருக்கு எதிரான போராட்டத்திற்கான அடிப்படையானது தொழிலாள வர்க்கத்தின் இயக்கமாகும். போரை நிறுத்தவும், முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், தேசிய எல்லைகளை கிழித்தெறிந்து, உலக சோசலிச சமுதாயத்தை உருவாக்கவும் வல்லமை கொண்ட மாபெரும் சமூக சக்தி அதுதான்.

Loading