கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி போரிலும், யூதப் படுகொலையிலும் OUN மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் பங்கு

பகுதி 3

[பகுதி ஒன்று] [பகுதி இரண்டு] [பகுதி மூன்று] [பகுதி நான்கு] [பகுதி ஐந்து]

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐந்து பாகங்கள் கொண்ட தொடரில் இது மூன்றாவதாகும். முதல் பகுதி கனேடிய ஏகாதிபத்தியத்தின் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்துடன் நீண்டகால கூட்டணியை அறிமுகப்படுத்தியது. பகுதி இரண்டு உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (OUN) தோற்றம் மற்றும் யூத-எதிர்ப்பு, நாஜி-சார்பு பத்திரிகையான Krakivski Visti இன் பதிவு. இது கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலாண்டின் தாத்தா மிகைலோ சோமியாக்கால் பதிப்பிடப்பட்டது. நாஜிக்களின் பாசிச OUN (M) மற்றும் OUN (B) ஒத்துழைப்பாளர்களுக்கு கனேடிய அரசு எவ்வாறு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியது, அவர்களின் குற்றங்களை மூடிமறைக்க அவர்களுக்கு உதவியது. மேலும் அவர்களையும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தையும் அதன் ஏகாதிபத்திய வெளி மற்றும் உள்நாட்டு கொள்கை கருவிகளாகப் பயன்படுத்தியது எப்படி என்பதை பகுதி நான்காம் ஆய்வு செய்யும்.

'சுதந்திர உக்ரேனை' ஸ்தாபிப்பதற்கு நாஜிக்களுடன் எவ்வாறு மிகவும் திறம்பட ஒத்துழைப்பது என்பதில் கசப்பான பிளவுகள் இருந்தாலும், உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் போட்டியாளர்களான மெல்னிக்கின் OUN (M) மற்றும் பண்டேராவின் OUN (B) பிரிவுகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜிக்களின் நிர்மூலமாக்கும் போர் மற்றும் யூதப்படுகொலையில், நாஜிக்களின் கையாட்களாக இயங்கினர்.

சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பு தொடக்கத்திலிருந்தே, யூரல்கள் வரை நீண்டு செல்லும் காலனிகள் மீது ஜேர்மன் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு 'நிர்மூலமாக்கும் போர்' என்று கருதப்பட்டது. இது முன்னோடியில்லாத மிருகத்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தால் வகைப்படுத்தப்பட்டது.

அரசு நிறுவனங்கள் மற்றும் பேர்லினில் உள்ள ஃபிரெட்ரிக்-வில்ஹெல்ம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட 'கிழக்கிற்கான பொது திட்டத்தின்' படி, கிழக்கு ஐரோப்பா அல்லது ரஷ்யாவில் வாழும் மக்கள் அழிக்கப்பட வேண்டும் அல்லது காலனித்துவ அடிமைகளாக மாற்றப்பட வேண்டும். இந்த சிலுவைப் போரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இரத்தக்களரி வன்முறை வேகத்தை அதிகரித்தபோது, ஹிட்லரும் அவரது நெருங்கிய ஒத்துழைப்பாளர்களும் 1941 இன் பிற்பகுதியில் ஐரோப்பிய யூதர்களுக்கு தமது 'இறுதித் தீர்வை' செயல்படுத்தினர். அதாவது, யூதப்படுகொலையில் 6 மில்லியன் மக்களை திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைத்த முறையில் நிர்மூலமாக்கினர்.

OUN ஐ ஊக்குவிக்கும், பாதுகாக்கும் மற்றும் மூடிமறைக்கும் உக்ரேனிய கனேடிய காங்கிரஸும் (UCC) பிற சமகால வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் ஒட்டாவா, வாஷிங்டன், இலண்டன் மற்றும் பேர்லினில் உள்ள அவர்களின் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தமது சுயநலத்திற்காக இரண்டாம் உலகப் போரில் OUN இன் வரலாறு பற்றி முற்றிலும் நம்பமுடியாத கருத்துக்களை கூறுகின்றனர். இவை அத்தனையும் பொய்களின் மூட்டையாகும்.

அக்டோபர் 1941 இல் கார்கோவ் தெருக்களில் சோவியத் பாதுகாவலர்களுடன் ஜேர்மன் படைகள் போரிட்டன (Wikipedia)

OUN மற்றும் பண்டேராவாத உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஒரு 'தேசிய விடுதலை இயக்கம்' என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில், அவர்கள் பாசிஸ்டுகள், அத்துடன் நாஜி ஜேர்மனிக்கும் பின்னர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணிந்தவர்கள். OUN உம் UPA உம் 'நாஜிக்கள் மற்றும் சோவியத்துகள் இரண்டையும்' எதிர்த்துப் போரிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். 1945 இல் வியன்னா, மூனிச் மற்றும் பிற இடங்களில் உள்ள கடைசி நாஜி மறைவிடங்களுக்கு தப்பியோட வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை, உக்ரேனிய பாசிஸ்டுகள் ஜூன் 1941 இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான படையெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்று, நேரடியாக நாஜிகளின் கட்டளையின் கீழ் அல்லது அவர்களுடன் ஒருங்கிணைந்து சோவியத்துகளுக்கு எதிராக தொடர்ந்து போராடினர்.

குறிப்பாக UCC மற்றும் உக்ரேனிய தீவிர வலதுசாரிகள் UPAஇன் இனப்படுகொலை வரலாற்றைப் போற்றுகின்றனர். அதன் தலைமையும் அங்கத்தவர்களும் பெரும்பாலும் பண்டேராவின் கட்டளையின் கீழ், மூன்றாம் குடியரசின் போர் எந்திரத்திற்கும் SS க்கும் சேவையாற்றிய பாசிசவாதிகளை கொண்டிருந்தனர். இறுதியாக, உக்ரேனிய பாசிசவாதிகளின் இன்றைய பாதுகாவலர்கள் யூதப்படுகொலையில் தாங்கள் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று கூறுகின்றனர். மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய யூதர்களை நிர்மூலமாக்குவதை பற்றி நாம் பேசவில்லை என்றால், இது சிரிப்பிற்கிடமானதாக இருக்கும். பல OUN ஆவணங்கள் மற்றும் வெளியீடுகள், இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் போது மற்றும் அதற்கு முன்பே, யூதர்களுக்கு எதிரான பாரிய வன்முறையை ஆதரித்தன.

யூதர்களை சுற்றி வளைத்தல், அவர்களை படுகொலை செய்தல் மற்றும் மரண முகாம்களில் பணியாளர்களை நியமித்தல் உட்பட, 100,000 க்கும் மேற்பட்ட போலந்து மக்களை இனச்சுத்திரகரிப்பில் கொன்றது மற்றும் பல்லாயிரக்கணக்கான சோவியத் ரஷ்ய மற்றும் உக்ரேனிய கிளர்ச்சியாளர்களை கொன்றதில் OUN மற்றும் UPA உறுப்பினர்களின் யூதப்படுகொலையில் பங்கேற்பை சமீபத்திய வரலாற்று ஆய்வு ஆவணப்படுத்தியுள்ளது. உக்ரேனிய பாசிசவாதிகளுக்கு எதிரான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதால், அவர்களின் சமகால பாதுகாவலர்கள் சத்தமாக அலறுகிறார்கள். ஆனால், புறநிலை வரலாற்று உண்மைகளை மௌனமாக்கும் அளவிற்கு அவர்களால் உரக்கக் கத்தமுடியாது.

கனேடிய வரலாற்றாசிரியர் ஜோன் பௌல் ஹிம்கா, ஒரு காலத்தில் பண்டேரா ஒரு 'தேசிய விடுதலைப் போராளி' என்ற கட்டுக்கதையினதும் மற்றும் ஏதோ ஒரு வடிவிலான உக்ரேனிய தேசிய அடையாள அரசியலின் ஒரு வாழ்நாள் தாராளவாத ஊக்குவிப்பவராகவும் இருந்தபோதும், OUN என்பது ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலை மற்றும் போலந்துமக்களின் இனச் சுத்திகரிப்பு ஆகியவற்றில் பங்கேற்ற ஒரு குற்றவியல் அமைப்பாக இருந்து என்ற இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். 1941-1944 ஆம் ஆண்டு உக்ரேனிய யூதர்களின் அழிவில் உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் யூதப்படுகொலை: OUN மற்றும் UPA இன் பங்கேற்பு என்ற அவரது சமீபத்திய புத்தகத்தில், யூதப்படுகொலையில் OUN-UPA பங்கை ஹிம்கா சுருக்கமாகக் பின்வருமாறு கூறுகிறார்:

மூன்று முக்கிய கட்டங்களில் தேசியவாதிகள் பாரிய படுகொலைக்கு பங்களித்தனர். ...

முதலாவதாக, சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பிற்குப் பின்னர், 1941 கோடையில் யூத எதிர்ப்பு வன்முறையில் OUN ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதக்குழுக்கள் முக்கிய பங்கு வகித்தனர். யூதர்களை கட்டாய உழைப்பு, அவமானம் மற்றும் படுகொலைக்கு உட்படுத்துவதற்காக இந்த ஆயுதக்குழுக்கள், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஜேர்மன் பிரிவுகளால் தூக்கிலிடப்பட்டனர். முக்கியமாக Einsatzgruppe C மற்றும் Waffen SS பிரிவான 'Wiking' இனரால் இவை நடத்தப்பட்டன. உக்ரேனிய தேசியவாத ஆயுதக்குழுக்கள் ஜேர்மனியின் வன்முறைக்காக யூதர்களை ஒன்றுதிரட்டினர். ஏனெனில் அவர்கள் படையெடுப்பாளர்களை விட யூதர்களை எளிதில் அடையாளம் காண முடியும் மற்றும் நகரங்களில் உள்ள யூதர்களின் சுற்றுப்புறங்கள் உட்பட்ட பகுதிகளை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். 1941 ஆம் ஆண்டு ஜூலை தொடக்கத்தில் எல்விவ் மற்றும் சோலோச்சிவ் ஆகிய இடங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளைப் போலவே சில சமயங்களில் வன்முறை இரத்தக்களரியை மக்கள் காணக்கூடியதாக இருந்தது; சில நேரங்களில் OUN ஆயுதக்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மிகவும் மறைமுகமாக கொன்றனர். சில சமயங்களில் அவர்கள் கிராமத்தில் உள்ள அனைத்து யூதர்களையும் கொலை செய்தனர்.

இரண்டாவதாக, OUN கலீசியாவில் உள்ள உக்ரேனிய துணை காவல்துறை மற்றும் வோல்ஹினியாவில் உள்ள நிலையான பாதுகாப்புபிரிவினர் (Schutzmannschaften) ஆகியவற்றிற்கு அணிதிரட்டப்பட்டு அவற்றுள் ஊடுருவியது. இந்த பொலிஸ் பிரிவுகள் யூதப்படுகொலைக்கு தேவையான ஆள் உதவியை வழங்கின. அவர்கள் யூதர்களை பெல்செக்கில் உள்ள மரண முகாமுக்கு நாடு கடத்துவதற்காக அல்லது சுட்டுக் கொல்லப்படுவதற்காக சுற்றி வளைத்தனர்; உண்மையான கொலைகளில் பெரும்பாலானவை ஜேர்மனியர்களால் செய்யப்பட்டிருந்தாலும், உக்ரேனிய காவல்துறையினரும் சில சூழ்நிலைகளில் கொன்றனர். இந்த அழித்தொழிப்புக்கள் முதன்மையாக 1942 இன் தொடக்கத்திலிருந்து 1943 இன் நடுப்பகுதி வரை நடந்தன.

மூன்றாவதாக, 1943 இன் ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய போலீஸ்காரர்கள் OUN தலைமையிலான தேசியவாத கிளர்ச்சியில் சேர ஜேர்மன் சேவையை விட்டு வெளியேறினர். சில இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் கொலைகள் இரண்டிலும் பரிச்சயம் பெற்ற அவர்கள், UPA இல் தலைமைப் பதவிகளைப் பெற்றனர். முன்னாள் போலீஸ்காரர்கள் அவர்களுடன் இணைந்தவுடன், UPA ஒரு பாரிய இனச் சுத்திகரிப்புத் திட்டத்தை தொடங்கியது. இது முதலில் வோல்ஹினியாவிலும் பின்னர் கலீசியாவிலும் இடம்பெற்றது. இது முதன்மையாக போலந்து மக்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனியரல்லாத பிற இனங்களின் பாதிக்கப்பட்டவர்களும் இருந்தனர். 1943-44 குளிர்காலத்தில், செம்படை மேற்கு நோக்கி நகர்ந்தபோது, UPA எஞ்சியிருந்த யூதர்களை காடுகளில் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளியேற்றி, அவர்களை தற்காலிகமாக கடூழிய உழைப்பு முகாம்களில் வைத்து, பின்னர் கொலை செய்தது.

உக்ரேனிய பாசிசவாதிகளும் பார்பரோசா தாக்குதலும்

ஜூன் 22, 1941 இல் தொடங்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பான பார்பரோசா தாக்குதலில் தீவிரமாக பங்கேற்க, OUN இன் போட்டிப் பிரிவுகள் ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான தங்கள் பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை திரட்டின. அவர்கள் இதனை பல வடிவங்களில் செய்தார்கள். பார்பரோசா தாக்குதல்கள் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஜேர்மன் இராணுவ உளவுத்துறை முக்கியமாக OUN (B) ஆதரவாளர்களை வைத்து இரண்டு உக்ரேனிய பட்டாலியன்களை அமைத்தது. Nachtigal பட்டாலியனின் முன்னணி உக்ரேனிய அதிகாரி, நாம் பகுதி 2 இல் குறிப்பிட்டது போல, பண்டேராவின் நெருங்கிய கூட்டாளியான ரோமன் ஷுகேவிச் ஆவார். அவர் பின்னர் UPA இன் இராணுவத் தளபதியாகினார்.

இந்த வரைபடம் 1941 இல் ஜேர்மன் முன்னேற்றங்களை விளக்குகிறது. 3 மில்லியனுக்கும் அதிகமான துருப்புகள் 1800 கிமீ நீளமுள்ள சோவியத் ஒன்றியத்தின் மேற்கு எல்லை முழுவதையும் ஆக்கிரமித்தனர். கிழக்குப் போரின் முதல் ஆண்டில், நாஜிக்களும் அவர்களது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களும், குறிப்பாக உக்ரேனிய பாசிஸ்டுகள், யூத மக்களில் பெரும் பகுதியைக் கொன்றனர்.

OUN (M) மற்றும் OUN(B) ஆகிய இரண்டும் தடைசெய்யப்பட்ட prohidny hruppy (விஷேட படைகளை) அமைத்தன. அவை நாஜிப் படைகள் சோவியத் உக்ரேனுக்குள் முன்னேறும் போது அவற்றை ஆதரித்து பின்தொடர்ந்தன. அவர்களில் பலர் 'காவல்துறை' செயல்பாடுகளை விரைவாக ஏற்றுக்கொண்டனர். அது மக்களை அடக்கி, சோவியத் ஆட்சியின் ஆதரவாளர்களை தேடிக்கண்டுபிடித்து மற்றும் யூதர்களை சுற்றி வளைத்து கொன்றது. OUN (B) ஆனது 'உக்ரேனிய மக்கள் இராணுவத்தை' உருவாக்கியது. இது SS மற்றும் தாக்குதல்பிரிவின் (Einsatzgruppen) கொலைப் படைகளுக்கு உதவிய ஜேர்மனியின் முன்னேற்றத்திற்குப் பின்னால் பணியாற்றிய துணை இராணுவப் படையாகும்.

கிறிஸ்டியா ஃபிரீலாண்டின் தாத்தா மிகைலோ சோமியாக் நடாத்திய, OUN (M) உக்ரேனிய மத்திய குழுவால் வெளியிடப்பட்ட நாளிதழான Krakivski Visti, ஜூன் 23, 1941 இதழில் 'கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்களுக்கான' 'புனிதப் போர்' என்று அழைக்கப்பட்டதை தொடங்குவதாக அறிவித்தது.

'வரலாற்றில் மிகவும் நியாயமான போர்' என்ற தலைப்பின் கீழ், Krakivski Visti பின்வருமாறு அறிவித்தது:

'ஜூன் 22, 1941 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் துருப்புக்கள் தொடங்கிய போரை விட வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இவ்வாறான ஒரு நியாயமான போர் இருக்கவில்லை. இன்று தொடங்கிய போர் மனிதனின் விடுதலைக்காக, நாடுகளின் விடுதலைக்காக ஒரு மாபெரும் சிலுவைப் போர் போன்றது. இது கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்களுக்கான பயங்கரமான ஆவியிலிருந்து உலகம் முழுவதும் விடுதலைக்கானதாகும். இன்று, ஜேர்மன் தலைவர் (Führer- ஹிட்லர்) சிவப்பு மாஸ்கோவால் அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் மீட்பராக இருப்பார் ... இந்தப் புனிதப் போரில் ஏற்கனவே இறந்த மற்றும் தொடர்ந்து வீர மரணம் அடையும் ஜேர்மன் வீரர்களின் இரத்தம் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் அனைத்து மனித இனத்தின் விடுதலை பெற்ற மக்கள் அனைவருக்குமான ஒரு புதிய எதிர்காலத்தின் அடித்தளமாக மாறும்'.

பார்பரோசா தாக்குதல் தொடங்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட Krakivski Vistiஇதழின் முதல் பக்கம். 'பெரும் அலையில்' என்ற முதன்மைக் கட்டுரை குபியோவிச் இனால் எழுதப்பட்டது. அவர் எழுதுகிறார்: 'இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சிதைவின் வரலாற்று தருணம். ஜேர்மன் மக்களின் தலைவரின் உத்தரவின் பேரில், ஜேர்மன் ஆயுதப்படைகள் கிழக்கே, இருள் மற்றும் யூத-போல்ஷிவிக் சாம்ராஜ்யத்தினை சீரழிக்க நகர்ந்துள்ளன.'

நாஜிக்கள் பார்பரோசா தாக்குதலை தொடக்கியவுடன், OUN (M) மற்றும் OUN(B) இருபிரிவினரும் நாஜி தலைமையிலான 'புதிய ஐரோப்பாவில்' தங்களுக்கான ஒரு பெரிய பங்கிற்கான திட்டங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

ஜூன் 10,1941 அன்று, நாஜி படையெடுப்பிற்கு 12 நாட்களுக்கு முன்பு, Krakivski Visti வெளியீட்டாளரும் உக்ரோனிய மத்தியக் குழுவின் (UtsK) தலைவருமான வோலாடிமியர் குபியோவிச் அடோல்ஃப் ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதி, மூன்றாம் குடியரசின் ஆதரவின் கீழ் ஒரு பாசிச உக்ரேனிய அரசுக்கான OUN (M) திட்டத்தை கோடிட்டுக் காட்டினார்.

அடோல்ஃப் ஹிட்லருக்கு குபியோவிச்சின் கடிதம், பாசிச உக்ரேனிய அரசுக்கான அதனுடன் இணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

அவர் தனது கடிதத்தில் பின்வருமாறு அழைப்பு விடுத்தார்:

“ஒரு ‘தலைவர்’ அரசு

'உக்ரேனிய 'ஹெட்மன்' அரசின்* பாரம்பரியத்திற்கு திரும்பிச் சென்றால், எதிர்கால உக்ரேனிய அரசு ஒரு சர்வாதிகார அரசியலமைப்பைக் கொண்டிருக்கும். நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவரின் (Vozhd) கைகளில் குவிக்கப்படும். ('உக்ரேனிய 'ஹெட்மன்' அரசு 1648 இலிருந்து 1782 வரை இருந்த உக்ரேனிய கொசாக்குகளின் அரசை குறிப்பிடுகிறது)

“ஒரு கட்சி அரசு

“ஒரு ஆலோசனை அமைப்பாக, அரசியல் கட்சியின் தலைமையும், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழுவும் அவருக்கு உதவியாக இருக்கும். ஒரு தேசியக் கட்சியானது அரசியல் அமைப்பின் முழு வடிவமாக இருக்கும். மேலும் அது அரசு ஒழுங்குமுறையின் அடிப்படையையும் தேசியக் கல்வி மற்றும் சமூக வாழ்வின் அமைப்பையும் தீர்மானிக்கும் ஒரே காரணியாக இருக்கும். …

'பொருளாதாரம்

'... தலைமையைப் போலவே, நிர்வாகமும் பொருளாதாரமும் சர்வாதிகார முறையில் ஒழுங்கமைக்கப்படும்.'

குபியோவிச்சைப் போல அடிமைத்தனமாக கீழ்ப்படிதலுள்ள ஒரு 'தலைவரின்' தலைமையில் கூட ஹிட்லரும் நாஜிக்களும் ஒரு 'உக்ரேனிய அரசை' உருவாக்க விரும்பவில்லை. எவ்வாறாயினும், நாஜி படையெடுப்பாளர்களால் மேற்கு கலீசியா ஆக்கிரமிக்கப்பட்டவுடன் பொது அரசாங்கத்தின் பிரதேசங்களில் சேர்க்கப்படும் என்ற அவரது முன்மொழிவுக்கு அவர்கள் இணக்கமாக இருந்தனர். இது UTsK தனது செயல்பாடுகளை உக்ரேனிய மையப்பகுதியின் ஒரு பகுதியாக விரிவுபடுத்த அனுமதித்தது.

நாஜி தலைமையிலான ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைத்தன உக்ரேனிய 'சுதந்திரம்'

OUN (B) இன் சொந்தக் கணக்கின்படி, OUN-ஊழியர்கள் கொண்ட ஜேர்மன் இராணுவத்தின் Nachtigal பட்டாலியன் ஜூன் 30, 1941 இல் லெவிவ் (Lviv) இனை அடைந்தது. 'மற்றும் யாரோஸ்லாவ் ஸ்டெட்ஸ்கோ தலைமையிலான OUN தலைவர்கள் உக்ரேனிய அரசை மீட்டெடுப்பதாக அறிவித்து ஒரு அரசாங்கத்தை அமைத்தனர்'.

இன்றுவரை, உக்ரேனிய பாசிசவாதிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஸ்டெட்ஸ்கோ லெவிவ் நகரில் ஒரு கூட்டத்தில் அறிவித்த 'உக்ரேனிய அரசு அதிகாரத்தின் பிரகடனத்தை' (Akt Proholoshenia Ukrainskoi Derzhavy) கொண்டாடுகிறார்கள். அதே நாளில் ஒரு 'சுதந்திரப் பிரகடனமாக' நகரத்தின் யூத மக்களுக்கு எதிரான ஒரு பயங்கரமான படுகொலை தொடங்கியது.

பண்டேராவின் உக்ரேனிய தேசியவாத ஆதரவாளர்களால் இந்த பிரகடனம் எப்போதாவதே முழுமையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி நிர்மூலமாக்கும் போரில் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களாக உக்ரேனுக்கு வந்திருப்பதை இது மேலும் எடுத்துக்காட்ட உதவும் என்பதால், அவர்கள் உக்ரேனின் சுதந்திரத்தை அறிவிக்கவில்லை. மாறாக, நாஜி தலைமையிலான ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு அதன் அடிமைத்தனத்தை அறிவித்தனர்.

நாஜி தலைமையிலான ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிவதாக உறுதியளிக்கும் உக்ரேனிய அரச அதிகாரத்தின் OUN B இன் பிரகடனத்தின் இறுதிப் பகுதி. (Image Credit, State Archive of Lviv Oblast, Ukraine.)

சுதந்திரம் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாத ஒரு சிறிய உரை, 'உக்ரேனிய அரசு அதிகாரம்' ஐரோப்பாவிலும் உலகிலும் ஒரு புதிய ஒழுங்கை உருவாக்க அடோல்ஃப் ஹிட்லரின் தலைமையின் கீழ் தேசிய சோசலிச பெரும் ஜேர்மனி (National Socialist Great Germany) உடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் என பிரகடனம் உறுதியளிக்கிறது. மற்றும் மாஸ்கோவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஜேர்மன் இராணுவத்துடன் வலுவாக ஒத்துழைக்கும் ...”

பாண்டேராவாதிகள் ஸ்லோவாக்கியாவில் தங்கள் சக பாசிச கூட்டாளிகளை பின்பற்ற முயல்கின்றனர். அங்கு ஹ்லின்கா காவலர் (Hlinka Guard) நாஜி ஆதரவின் கீழ் ஒரு அரசாங்கத்தை அமைத்திருந்தார்கள். மற்றும் 1930 களில் OUN தலைவர்கள் பயிற்சி பெற்ற குரோஷிய உஸ்டாஸ்ஸைப் (Ustasce) பின்பற்றினர். அங்கு உஸ்டாஸுக்கு சொந்த பாசிச கைப்பாவை அரசுக்கான இடம் வழங்கப்பட்டது.

OUN-B பயங்கரவாதிகளின் செயல்பாட்டுப் பயனைக் கண்டு, ஜேர்மன் இராணுவத்தின் (Wehrmacht) பிரிவுகள் லெவிவ் பிரகடனத்தை வரவேற்றன. மேலும் ஸ்டெட்ஸ்கோ அதைச் செய்தபோது அங்கிருந்த வெயர்மாஹ்ட் அதிகாரிகள் குழு உற்சாகமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஹிட்லர் ஒரு உக்ரேனிய அரசை எந்த வடிவத்திலும் உருவாக்குவதை அனுமதிப்பதைவிட, தனது இனவாத-பாசிச திட்டத்திற்கு உக்ரேனின் பரந்த வளம்மிக்க நிலங்களை மிகவும் முக்கியமானதாகக் கண்டார்.

ஜூலை 5, 1941 இல், பண்டேரா நாஜிகளின் கெஸ்டபோவால் கைது செய்யப்பட்டு பேர்லினுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உக்ரேனின் 'பிரதமர்' என்று தன்னைப் பெயரிட்ட ஸ்டெட்ஸ்கோ ஒரு வாரத்திற்குப் பின்னர் அவரைப் பின்தொடர்ந்தார். பேர்லினில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, பண்டேராவும் ஸ்டெட்ஸ்கோவும் அரசியல் சுதந்திரத்தை அனுபவித்தனர். பண்டேராவின் கடிதப் பரிமாற்றம், அதில் சில 'இரகசியம்' என்று குறிக்கப்பட்டன. பண்டேரா மற்றும் ஸ்டெட்ஸ்கோ ஆகியோர் ஜூலை 14 அன்று விடுவிக்கப்பட்டு, மேலும் நாஜி ஆட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு நாஜி இராணுவ மற்றும் காவல்துறை அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தனர். ஆகஸ்ட் 3, 1941 இல் கலீசியாவை உக்ரேனின் மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து பொது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது குறித்து ஹிட்லருக்கு எழுதிய அடிபணிவான 'எதிர்ப்புக் கடிதத்தில்', ஹிட்லர் 'மேற்கின் அடையாங்களை கொண்ட ஒரு தேசியவாதி' என்று குறிப்பிட்டு பண்டேரா தனது 'ஆழ்ந்த மரியாதையை' உறுதிப்படுத்தினார்.

மேற்கு உக்ரேனில் உள்ள டெர்னோபிலில் ஸ்டீபன் பண்டேரா நினைவுச்சின்னம். அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் உக்ரேனிய கனடிய காங்கிரஸின் தீவிர ஆதரவுடன், நேட்டோ-சார்பு மற்றும் ஜரோப்பிய ஒன்றிய 'ஜனநாயக' உக்ரேனிய அரசாங்கங்கள் திட்டமிட்ட வகையில் பாசிச பண்டேராவையும் அவரது OUB (B) மற்றும் UPA ஐயும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக உயர்த்தியுள்ளன (Wikipedia)

ஸ்டெட்ஸ்கோ, அவருடைய ஆளுகையின் கீழ் ஒரு உக்ரேன் நாஜி ஜேர்மனிக்கு ஒரு தேசிய கட்டாய உழைப்பு முகாமாக செயல்படும் என்று உறுதிப்படுத்தினார்: அவர் எழுதினார், 'ஒரு இறையாண்மை மற்றும் ஒன்றுபட்ட உக்ரேனிய அரசின் மறுசீரமைப்பு நாஜி ஜேர்மனியின் வெற்றியால் மட்டுமே சாத்தியமாகும் என்பது எனக்குத் தெரியும்... கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் உக்ரேனின் முழுமையான பொருளாதார ஆதரவை நாங்கள் ஜேர்மனிக்கு வழங்குவோம் ...'

நாஜிக்களின் மற்ற உக்ரேனிய பாசிச கூட்டாளிகளான OUN(M) இன் போட்டித் தலைவரும் சித்தாந்தவாதியுமான மைகோலா ஸ்டிசிபோர்ஸ்கியை பண்டேராவாதிகள் படுகொலை செய்ததே, நாஜிக்கள் பண்டேராவையும் ஸ்டெட்ஸ்கோவையும் மீண்டும் காவலில் வைக்க காரணமாக அமைந்தது.

ஸ்டெட்ஸ்கோ மற்றும் பண்டேராவின் 'தடுப்புக்காவலை' கம்யூனிஸ்டுகள், யூதர்கள், ரோமாக்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நாஜிக்கள் (மற்றும் OUN!) வழங்கிய மிருகத்தனமான சிறைவாசத்திற்கு சமமான ஒன்று என OUN ஆதரவாளர்களும் வக்காலத்துவாங்குபவர்களும் சித்தரிக்க விரும்புகிறார்கள். OUN துண்டுப்பிரசுரங்கள் ஸ்டெட்ஸ்கோ மற்றும் பண்டேரா அடைக்கப்பட்ட 'வதை முகாம்கள்' பற்றி அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றன.

உண்மையில், OUN (B) தலைவர்கள் 'விஷேடமான மதிப்புமிக்க' காவலில் வைக்கப்பட்டனர். இது நாஜிக்கள் இராஜதந்திரிகள் மற்றும் நாட்டுத் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு மற்றும் சலுகைமிக்க தடுப்புக்காவலாகும். மேலும், அவர்கள் நாஜி அடக்குமுறை அமைப்பில் இணைந்துள்ள தங்களின் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் நாஜிக்கள் OUNஇன் துணை இராணுவப்பிரிவு மற்றும் விஷேடகுழு உறுப்பினர்களை உக்ரேனிய பொலிஸ் பிரிவுகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் தங்கள் கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் கடுமையாக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஸ்டெட்ஸ்கோவும் பண்டேராவும் தடுத்து வைக்கப்பட்டிருந்த Zellenbau இல் ஒரு பொதுவான அறை. மெத்தை மற்றும் தலையணையை கவனிக்கவும்
கீழே, Waffen SS Galicia உறுப்பினர்கள் பயிற்சி பெற்ற டாகோவில் உள்ள யூத கைதிகளுக்கான நிலைமைகள். பட்டினியால் வாடும், அச்சுறுத்தப்பட்ட மனிதர்களை மரக்கட்டில்களில் அடுக்கிவைப்பதைக் கவனியுங்கள்

காவலில் இருந்தபோது, உக்ரேனிய தேசியவாதிகள் குறிப்பிட விரும்பாத ஒரு ஆவணமான 'Zhitiepys' அல்லது 'வாழ்க்கைக் கதையை' ஸ்டெட்ஸ்கோ தயாரித்தார். இது யூதர்களை நிர்மூலமாக்குததையும் மற்றும் பாசிச குணாதிசயங்களுக்கு OUN ஆதரவழிப்பதையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஸ்டெட்ஸ்கோ எழுதினார், 'மார்க்சிசத்தை யூத சிந்தனையின் ஒரு விளைபொருளாக நான் கருதுகிறேன். இருப்பினும், யூதர்களின் உதவியுடன் மாஸ்கோவாத-ஆசிய மக்களால் மாஸ்கோவாத சிறைச்சாலையில் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டது. மாஸ்கோவும் யூதர்களும் உக்ரேனின் மிகப் பெரிய எதிரிகளும் மற்றும் அழிவுமிக்க போல்ஷிவிக் சர்வதேசக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களாவர். உக்ரேனை அடிமைப்படுத்த மாஸ்கோவிற்கு உதவும் யூதர்களின் மறுக்கமுடியாத தீங்கு விளைவிக்கும் மற்றும் விரோதமான பாத்திரத்தை நான் முழுமையாக உணர்ந்துகொள்கின்றேன் ... எனவே யூதர்களை நிர்மூலமாக்குவதையும் உக்ரேனிலுள்ள யூதர்களை நிர்மூலமாக்குவதற்கு ஜேர்மன் முறைகளைக் கொண்டுவருவதையும் நான் ஆதரிக்கிறேன்”.

நாம் இத்தகைய பாரதூரமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதால், ஸ்டெட்ஸ்கோ 'vinisheniya' —அழிப்பு— மற்றும் 'eksterminatsii zhidivstve' — யூதர்களை நிர்மூலமாக்கல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதை வலியுறுத்த வேண்டும்.

ஸ்டெட்ஸ்கோவின் 'Zhitiepys அல்லது 'வாழ்க்கை கதையிலிருந்து' ஒரு பகுதி

மற்றொரு பத்தியில், சோசலிசம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான உக்ரேனிய தேசியவாதிகளின் தவிர்க்கமுடியாத எதிர்ப்பையும் வெறுப்பையும் ஸ்டெட்ஸ்கோ வெளிப்படையாக விளக்குகிறார்:

“நான் எமது அமைப்பின் (OUN) சித்தாந்தம் மற்றும் வேலைத்திட்டத்தை மார்க்சிசம், ஜனநாயகம் மற்றும் அனைத்து வர்க்க அடிப்படையிலான சித்தாந்தங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு முற்றிலும் விரோதமாக உருவாக்கினேன். அரசியல் ரீதியாக, உக்ரேனில் சர்வாதிகார, ஒற்றைக் கட்சி அமைப்பை நான் ஆதரிக்கிறேன். சமூகத் துறையில், தேசிய சோசலிச (நாஜிகளின்) திட்டத்திற்கு நெருக்கமான தேசிய ஒற்றுமையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் என்னுடைய திட்டமானது உக்ரேனிய நாட்டின் குறிப்பிட்ட அம்சங்களில் வேறுபடுகிறது ...'

பண்டேராவின் மரணத்திற்குப் பின்னர், OUN(B) இன் தலைவராக இருக்கும் ஸ்டெட்ஸ்கோ தான் என்ன நினைக்கின்றேன் என்பதை நாஜிக்களின் சிறையில் இருந்து வெளியேறுவதற்காக அவர்கள் கேட்க விரும்புவதைச் சொல்லவில்லை. OUN (B) இன் ஏற்கனவே நிறுவப்பட்ட கொள்கையை அவர் தனது நாஜி சிறைபிடித்தவர்களிடமும் ஆதரவாளர்களிடமும் வெறுமனே கூறிக்கொண்டிருந்தார்.

போர்க்காலத்தில் OUN இன் போராட்டம் மற்றும் செயல்பாடுகள் (Borotba I diialnist OUN pidchas vinny) என்ற ஒரு OUN(B) ஆவணம் உக்ரேனிய பாசிச தாக்குதல் குழுக்கள் (prohidny hurupy) சோவியத் ஒன்றியத்தை ஜூன் 1941 இல் நாஜி படைகள் ஆக்கிரமித்தபோது ஆதரவழித்து பின்தொடர்ந்ததற்கான வழிகாட்டியாக தயாரிக்கப்பட்டது. அதில் வெளிப்படையாக பாரிய கொலைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. 'கலவரம் மற்றும் குழப்பத்தின் நேரத்தில், விரும்பத்தகாத போலந்து, மாஸ்கோவாத மற்றும் யூத ஆர்வலர்களை அழிக்க அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக யூத-மாஸ்கோவாத ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களை அழிக்க அனுமதிக்கப்படுகிறது'.

OUN இன் சமகால பாசிச ஆதரவாளர்கள் தொடர்ந்து மேற்கோள் காட்டும் இந்த ஆவணம் மேலும் கூறுகிறது:

'OUN ஒரு அரசாங்கத்தை நிறுவியதும், அது பின்வரும் சமூகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்:

'தேசிய சிறுபான்மையினர் அ) நமக்கு நட்பானவர்கள் ... மற்றும் ஆ) மாஸ்கோவாதிகள், போலந்துமக்கள் மற்றும் யூதர்கள் போன்ற நமக்கு விரோதமானவர்கள் … எனப் பிரிக்கப்படுவர்

“Re: a) உக்ரேனியர்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் இருக்குமா...

“Re: b) போராட்டத்தில் அழிவு, குறிப்பாக ஆட்சியைப் பாதுகாத்தவர்கள்: அவர்களின் சொந்த நிலங்களுக்கு நாடு கடத்தல், அழிவு, குறிப்பாக புத்திஜீவிகள் எந்த நிர்வாகப் பதவிகளையும் வகிக்க அனுமதிக்கக்கூடாது. பொதுவாக, பள்ளிகள் போன்ற வசதிகள் கிடைக்கக்கூடிய அறிவாளிகளை உருவாக்குவதை நாங்கள் சாத்தியமற்றதாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, போலந்து விவசாயிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே உக்ரேனியர்கள் மட்டும் தான் கட்டாய இலத்தீன் மதக் கல்விக்குள் கற்பிக்கப்படுவார்கள் என்று விளங்கப்படுத்தப்பட வேண்டும். “தலைவர்கள் அழிக்கப்பட வேண்டும். நாசவேலைகளைத் தடுக்க யூதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்வாகப் பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பொருளாதார நிர்வாகத்தில் ஒரு யூதரைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் இருந்தால், எங்கள் ஆயுததாரிகளில் ஒருவரை அவருக்கு மேல் பதவியில் இருத்தி, சிறிய கடமை ஒழுங்கு மீறல்களுக்காக அவர் இல்லாதொழிக்கப்பட வேண்டும். உக்ரேனியர்கள் மட்டுமே, வெளிநாட்டு எதிரிகள் அல்ல, பொதுவாழ்க்கையின் பல்வேறு பிரிவுகளில் தலைவர்களாக இருக்க முடியும். யூதர்களை ஒருங்கிணைத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது”.

நாஜி பாதுகாப்புப் படைகளுடனும், பாதுகாப்புப் படைகளுக்குள்ளும் இணைந்து செயல்படும் OUN இன் இரு பிரிவுகளின் உக்ரேனிய பாசிசவாதிகள், 'உக்ரேனியர்களுக்கான உக்ரேன்' அதாவது ஒரு இனரீதியாக 'தூய்மையான' உக்ரேனிய அரசை நிறுவுவதற்கான அவர்களின் இலக்கைத் தொடர இந்த இனப்படுகொலை கருத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

Nachtigall பட்டாலியன் மற்றும் OUN (B) துணைக் குழுக்கள் 1941 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் ஜூலை 3 வரையிலும், மீண்டும் ஜூலை 25 முதல் 29 வரையிலும் எல்விவ் நகரில் இரண்டு கொலைவெறித் தாக்குதல்களில் பங்கேற்றன. இதில் 9,000 வரையிலான லிவிவின் யூதர்கள் நாஜிக்கள் மற்றும் உக்ரேனிய பாசிசவாதிகளால் கொல்லப்பட்டனர். Ternopil, Kremianets, Zolochev மற்றும் Zboriv ஆகிய இடங்களில் இதே போன்ற படுகொலைகள் நிகழ்ந்தன. இந்தக் கொலைப் பிரச்சாரங்கள் மிகப் பெரிய துப்பாக்கிச் சூடுகளுக்கு வழிவகுத்தன. OUN ஆயுததாரிகள் மற்றும் காவல்துறை துணைப்படைகளின் உதவி மற்றும் பங்கேற்புடன் தாக்குதல்படைப்பிரிவின் கொலைப்படைகளால் ஏற்பாடு செய்யப்பட்டு 1941 கோடையில் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி இவான் கட்சனோவ்ஸ்கி, யூதர்களை படுகொலை செய்ததில் UPA யில் இருந்த முன்னாள் உக்ரேனிய காவல்துறை மற்றும் துணைப் படைகள் வகித்த முக்கிய பங்கை விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 1941 இல் கியேவில் உள்ள Babi Yar இல் 34,000 யூதர்களை சுட்டுக் கொன்றது உட்பட மிகவும் கொடூரமான குற்றங்களில் OUN (M) தலைமையிலான பொலிஸ் பிரிவினரின் பங்கினையும் அவர் எடுத்துக்காட்டினார்.

இழிவான மைகோலா லேபெட் உட்பட, துணைப் பொலிஸ் பிரிவுகளில் முக்கியப் பங்கு வகித்த பல OUN (B) உறுப்பினர்கள், கெஸ்டாபோ மற்றும் SS ஆல் நடத்தப்படும் ஜேர்மன் இராணுவ மற்றும் பொலிஸ் பள்ளிகளில் சித்திரவதை மற்றும் பிற 'திறன்கள்' பற்றிய பயிற்சியைப் பெற்றனர். OUN (B) இன் இரக்கமற்ற SB பாதுகாப்பு சேவைகளுக்குத் தலைமை தாங்கும் லேபெட், 1939 இல் போலந்து மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உடனடியாக Zakopane விலுள்ள கெஸ்டாபோ பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்காக நாஜிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 120 உக்ரேனியர்களைக் கொண்ட குழுவிற்கு தலைமை வகித்தார். போருக்குப் பின்னர், அவர் வாழ்நாள் முழுவதும் சிஐஏ இன் கையாளாக இருந்ததுடன், அவர் அமெரிக்காவில் “Prolog” பிரச்சார பதிப்பகத்தை நடத்தி வந்தார்.

Zakopane கெஸ்டாபோ பள்ளியில் அவரது பயிற்சியானது, சித்திரவதை மற்றும் கொலைக்காக அப்பாவி யூதர்களை ஒழுங்கற்ற முறையில் தேர்வு செய்வதை உள்ளடக்கியது. OUN-B இல் இருந்து விலகிய மைகிதா கோசாகிவ்ஸ்கி, லெபேட் 'சில யூதர்களின் வீட்டிற்குள் நுழைந்து ... ஒரு யூதரைப் பிடித்து, தனது பிரிவுக்கு அழைத்துச் சென்று...' கெஸ்டபோ அதிகாரிகள் 'சரியான விசாரணை முறைகளை' கற்பித்ததை கண்டதாக பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஒப்புக்கொண்டார்.

'ஆரியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொள்ள அப்பாவி யூதரைத் தூண்டி, ஜேர்மன் அதிகாரிகள் அவரைத் தங்கள் கைமுட்டிகள், வாள் மற்றும் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி அடித்து சித்திரவதை செய்தனர். அந்த யூதர் தலை முதல் கால் வரை இரத்தம் தோய்ந்த போது, அவர்கள் அவரது காயங்களில் உப்பு பூசி மற்றும் தீயினால் சுட்டனர் ... 'பின்னர் கெஸ்டாபோ தளபதி 'ரோசன்பவும் அவரை மீண்டும் இரும்புக் குழாயால் அடித்தார், மேலும் லேபெட் அந்த வீரச் செயலில் பங்கேற்றார்.'

நாஜிகளுக்கு எதிரான போரின் திருப்பத்தின்போது உக்ரேனிய பாசிசவாதிகளின் பிரதிபலிப்பு

1942-1943 இலையுதிர்/குளிர்காலத்தில் ஸ்ராலின்கிராட்டில் ஹிட்லரின் படைகளின் இரட்டைத் தோல்விகளும், 1943 கோடையில் குர்ஸ்க் போரும் உக்ரேனிய பாசிசவாதிகளின் போட்டிப் பிரிவினருக்கு சந்தர்ப்பவாத மற்றும் இழிந்த தந்திரோபாய திருப்பங்களை ஏற்படுத்த காரணமானது.

1943 வசந்த காலத்தில், OUN(M) அதன் ஆதரவாளர்களைத் திரட்டி Waffen SS இன் உக்ரேனிய பிரிவை உருவாக்கத் தொடங்கியது. ஸ்ராலின்கிராட்டில் ஏற்பட்ட தோல்வியால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு முன்னதாக, நாஜிக்கள் Waffen SS இற்குள் 'தூய ஆரியர்கள்' மட்டுமே நுழைவதை கட்டுப்படுத்தியிருந்தனர். நாஜி பொது அரசாங்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரே உக்ரேனிய மொழி வெளியீடாக சோமியாக் ஆசிரியராக இருந்த Krakivski Visti இந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தது.

14வது கலிசியா Waffen SS இற்கான ஆட்சேர்ப்பு சுவரொட்டியை Krakivski Visti இன் முதல் பக்கத்தில் காட்டுவதையும், அதே போல் ஒரு கேலிச்சித்திரம் செய்யப்பட்ட யூதரை வாளால் கொலை செய்யப் போகும் Waffen SS சிப்பாய்

மே 16, 1943 இல் Krakivski Visti குபியோவிச்சின் பின்வரும் வேண்டுகோளை வெளியிட்டது:

'உக்ரேனிய மக்கள் மீண்டும் அதன் மிகக் கொடிய எதிரியான போல்ஷிவிசத்திற்கு எதிராகப் போரிட கையில் துப்பாக்கியுடன் வருவதற்கான வாய்ப்பைப் பெறும்போது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் வந்துவிட்டது. SS காலாட்படை பிரிவு 'கலிசியா' என்ற பெயரில் தனியான உக்ரேனிய தன்னார்வ இராணுவப் பிரிவை உருவாக்குவதற்கு பெரும் ஜேர்மன் குடியரசின் தலைவர் ஒப்புக்கொண்டார். நீங்கள் தோற்கடிக்க முடியாத ஜேர்மனிய இராணுவத்துடன் தோளோடு தோள் நின்று போல்ஷிவிக் மிருகத்தை முற்றுமுழுதாக அழிக்க வேண்டும்...'

குபியோவிச், கலிசிய Waffen SS பிரிவின் முதல் உத்தியோகபூர்வ உறுப்பினராகி Waffen SS மற்றும் அதன் தலைவர் ஹென்ரிச் ஹிம்லர் ஆகியோரின் முன் சத்தியப்பிரமாணம் செய்தார்.

Krakivski Visti, பத்திரிகை Waffen-SS க்கான ஆட்சேர்ப்பு பிரச்சாரத்துடன், மோசமான யூத-விரோதக் கட்டுரைகளுடன் வெளிவந்தது. ஜேர்மன் பத்திரிகைத் தலைவர் எமில் காஸ்னர், ஜேர்மன் யூத-விரோத உள்ளடக்கத்தின் பல மறுபதிப்புகளை வழமையாக பதிப்பதற்கு மாறாக இந்தக் கட்டுரைகள் உக்ரேனியர்களால் எழுதப்பட வேண்டும் என்று கோரினார். இந்த கட்டுரைகள் Waffen SS ஆட்சேர்ப்பு பிரச்சாரத்திற்கான உக்ரேனிய ஆதரவை முன்னிலைப்படுத்த உதவும். ஒலெக்சாண்டர் மோக் உட்பட பல தன்னார்வலர்கள் முடுக்கிவிடப்பட்டனர். அவர் பின்னர் டொராண்டோவில் ஒரு வெளியீட்டாளராக வாழ்க்கைதொழிலை தொடர்ந்தார். ஆனால் அவர் இங்கு குடியேறுவதற்கு முன், உலக இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகள் 'யூதர்கள் ஐரோப்பாவை எவ்வாறு சீரழிக்கிறார்கள்', 'அவர்கள் (யூதர்கள்) போல்ஷிவிக்குகளுக்கு எப்படி உதவினார்கள்' மற்றும் மே, ஜூன் 1943 இல் வெளியிடப்பட்ட 'விழிப்புணர்வும் தீமையும்' போன்ற தலைப்புகளைக் கொண்டிருந்தது. குபியோவிச் அவர்களால் பதிவிடப்பட்டு மற்றும் இறுதியில் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் உக்ரேனிய ஆய்வுக்கான கனேடிய நிறுவனத்தின் மூலம் நிதியளிக்கப்படும் 'உக்ரேன் தொடர்பான என்சைக்ளோபீடியா' இல் உள்ள அவரது வாழ்க்கை வரலாற்றில் இந்த பங்களிப்புகள் தெளிவாக இல்லை.

ஜூலை 18, 1943 இல் லிவிவ் நகரில் கலீசியா பிரிவு உருவானதன் நினைவாக அணிவகுப்பு. ஓட்டோ வாக்டர் மற்றும் குபிவோவிச் ஆகியோர் மையத்தில் உள்ளனர். Photo credit:Coalition to Oppose the Arms Trade.

Waffen SS 14வது அல்லது கலீசியா பிரிவு, முன்னாள் பிரிவு உறுப்பினர்களின் வாக்குமூலங்களின்படி, 1943 ஆம் ஆண்டில் டாகோவ் உட்பட பல்வேறு வதை மற்றும் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அருகில் பயிற்சி பெற்றது. புதிய SS ஆட்கள் அணிவகுத்துச் சென்றபோது முகாம் கைதிகள் தங்கள் தொப்பிகளைக் கழற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் ஒவ்வொரு வாரமும் தேசிய சோசலிசக் நாஜி தத்துவத்தில் இரண்டு மணிநேர போதனைகளைப் பெற்றனர். அதே நேரத்தில் அவர்களின் மீதமுள்ள நாட்கள் அதன் நடைமுறைக்கு அர்ப்பணிக்கப்பட்டன. ஆகஸ்ட் 1943 இன் இறுதியில், உறுப்பினர்கள் தங்கள் இரத்த வகையுடன் பச்சை குத்தப்பட்ட பின்னர், அடோல்ஃப் ஹிட்லருக்கு சத்தியப்பிரமாணம் செய்தனர். 8,000 பேரை இணைத்துக் கொள்வதற்கான இலக்கிற்கு அதிகமானோர் இருந்ததால், அதில் இல்லாதவர்கள் நான்கு சிறப்பு பொலீஸ் பிரிவுகளில் இணைக்கப்பட்டு, அவர்களும் அட்டூழியங்களில் பங்கு பெற்றனர்.

பிப்ரவரி 1944 வரை போரைக் காணாத கலீசியா பிரிவு நாஜிகளுக்கு எதிரான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஜூலை 1944 இல், D-Day தரையிறக்கங்களுடன் ஒன்றாக நிகழ்ந்த சோவியத் எதிர்த்தாக்குதலை எதிர்த்த இந்த பிரிவானது, பிரோடியில் (Brody) 73 சதவீத படைகளை இழந்தது. 1945 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாசிச ஆட்சிக்கு எதிராக ஸ்லோவாக்கிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை நசுக்குவதற்காக ரிசர்வ் படைகளிலிருந்து நாஜிகளால் இந்த பிரிவு மீண்டும் கட்டப்பட்டு ஸ்லோவாக்கியாவிற்கு அனுப்பப்பட்டது.

Waffen SS 14வது கலீசியாவின் கட்டளை அதிகாரிகள் மிக மோசமான நாஜி பாரிய கொலைகாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாக்குதல் பிரிவின் கொலைகளில் ஒரு முன்னாள் நபரான பிரிட்ஸ் ஃபிரைட்டாக் (Fritz Freitag) '114 கைதிகள் கைப்பற்றப்பட்டனர், 283 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்' போன்ற பதிவுகளுடன் தனது அட்டூழியங்களைப் பற்றிய விரிவான நாட்குறிப்பை வைத்திருந்தார். SS தாக்குதல் பிரிவின் உயர்தலைவர் பிரன்ஸ் மாஹால் (Franz Magall) என்பவர் தனது தாக்குதல் பிரிவின் குற்றங்களை ஒரு நாட்குறிப்பில் “சதுப்பு நிலங்கள் அவர்களுக்கு போதுமான ஆழமாக இல்லாததால் பெண்களையும் குழந்தைகளையும் சதுப்பு நிலங்களுக்குள் தள்ளுவது வெற்றிகரமானதாக இருக்கவில்லை” என பதிவு செய்துள்ளார்.

கலீசியா பிரிவின் வரலாறு பற்றி மூன்று புத்தகங்களை எழுதிய மைக்கேல் ஜேம்ஸ் மெல்னிக், உக்ரேனின் உள்ளூர் மக்களுக்கு எதிராகவும், பின்னர் ஸ்லோவாக்குகளுக்கு எதிராகவும் அது நடத்திய கிளர்ச்சி எதிர்ப்பு செயல்பாடுகளை மிக நுணுக்கமாக விவரிக்கிறார். ஆனால் முன்னாள் Waffen SS உறுப்பினரின் மகனான அவர், தனது பிரிவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 'கம்யூனிஸ்டுகள்' அல்லது கிளர்ச்சியாளர்களாக இருப்பார்கள் என அனைத்துப் பிரிவின் உயிரிழப்புகளும் அதற்குத் தகுதியானவை என்று அவர் வெறுமனே கருதுகிறார்.

1944 ஆம் ஆண்டு Huta Pieniacka படுகொலை பற்றிய மெல்னிக்கின் விளக்கத்தை தேசிய நினைவுகூரலுக்கான போலந்து நிறுவனத்தினதும் மற்றும் விஞ்ஞானத்திற்கான உக்ரேனிய கல்லூரியின் விபரங்களுடன் இங்கு ஒப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

மெல்னிக் இந்த அட்டூழியத்தை பின்வருமாறு நியாயப்படுத்துகிறார்: “இந்த கிராமம் (அண்ணளவாக 1,000 மக்கள் வசிக்கும்) போலந்து மற்றும் சோவியத் தலைமையிலான கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு நன்கு வலுவூட்டப்பட்ட ஆயுதமேந்திய கோட்டையாகவும் பெரிய எதிர்ப்பு மையமாகவும் மாறியிருப்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள், ஜேர்மன் விநியோக பாதைகளை குழப்பவதற்கும், ஜேர்மன் இராணுவத்தின் பின்புற பகுதிகளை சீர்குலைப்பதற்கும் மேலதிகமாக, UPA க்கு எதிராகப் போராடியதுடன், சுற்றியுள்ள கிராமங்களைத் தாக்கி உள்ளூர் உக்ரேனிய மக்களை பயமுறுத்தின.” மெல்னிக் பின்னர் கிராமம் ''அமைதிப்படுத்தும் நடவடிக்கைக்கு' உட்படுத்தப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார். இது இறுதியில் கிராமத்தை அழிக்கவும், மீதமுள்ள பல குடிமக்களை இல்லாதொழிக்கவும் வழிவகுத்தது. ஆனால் இது ஜேர்மனியர்களின் வேலையாகும். முந்தைய ஆண்டில் 100,000 க்கும் மேற்பட்ட போலந்துகள் மற்றும் யூதர்கள் OUN (B) இன் படுகொலைகளில் இருந்து Huta Pienacka வாசிகள் தப்பி ஓடிவிட்டனர் என்ற உண்மையையும் மெல்னிக் குறிப்பிடாது விட்டுவிடுகிறார். இந்த 'அமைதிப்படுத்தும் நடவடிக்கை' அவர்கள் அனைவரையும் முடித்தது.

போலந்து மக்கள் இதனை வித்தியாசமான முறையில் நினைவுகூருகின்றனர்:

“... பிப்ரவரி 28 அன்று 14வது பிரிவின் 4வது பட்டாலியன் இந்த குற்றத்தை செய்தது. அன்று, அதிகாலையில், இந்த பிரிவின் படையினர்கள், வெள்ளை உடை அணிந்து, முகமூடி அணிந்து, கிராமத்தை சுற்றி வளைத்தனர். பீரங்கிகளால் கிராமம் தாக்குதலுக்கு உள்ளானது. SS ‘கலீசியா’ இன் 14வது பிரிவின் SS ஆட்கள் கிராமத்திற்குள் நுழைந்து, ஒரு தேவாலயத்தில் சுற்றி வளைக்கப்பட்ட பொதுமக்களை சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், கொட்டகைகளில் பிரிக்கப்பட்டு பூட்டிவைக்கப்பட்டு தீவைக்கப்பட்டனர். தப்பி ஓட முயன்றவர்கள் கொல்லப்பட்டனர். தலைமை ஆணையத்தின் வழக்குத்தொடுனர்களால் விசாரிக்கப்பட்ட சாட்சிகள் இச்செயலின் மோசமான விவரங்களை விவரித்தனர். பெண்கள், குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு எதிராகவும் இந்தக் குற்றம் நடந்துள்ளது”.

உக்ரேனிய விஞ்ஞானக் கல்லூரி இதுபற்றி பின்வருமாறு எழுதுகிறது:

'கிராமத்தின் மீதான SS பிரிவின் தாக்குதல், பிதிர்ட்சிவ் (Pidhirtsiv) இல் உள்ள மக்கள் உக்ரேனிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்ததன் விளைவாகும். இது ஹுடா பினியாக்கா (Huta Pieniacka) வின் போலந்து மக்கள் யூதர்களை மறைத்து வைத்திருப்பதாகவும், போல்ஷிவிக் கிளர்ச்சியாளர்களை ஆதரிப்பதாகவும், ஆயுதங்களை சேமித்து வைத்ததாகவும் ஜேர்மனியர்களுக்கு அறிவித்தது. உக்ரேனிய SS ஆட்கள் விசாரணை நடத்த கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கியபோது, ஒருவருக்கொருவர் தமக்குள் உக்ரேனிய மொழியில் பேசிக்கொண்டு போலந்து மக்கள் தம்மை மாறுவேடத்தில் கொள்ளைக்காரர்களாக மாற்றிக்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தொடங்கினர். பின்னர், SS இன் உக்ரேனிய படைப்பிரிவு பிதிர்ட்சிவ் கிராமத்திற்கு வந்தது. கிராமத்தைச் சுற்றி வளைத்த பின்னர், அது மக்களைக் கொல்லத் தொடங்கியது”.

OUN(B) உம் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவமும்

பிப்ரவரி 1943 இல் ஸ்ராலின்கிராட்டில் ஜேர்மன் படைகள் சரணடைந்த பின்னர் மற்றும் நாஜிகளுக்கு எதிரான சோவியத் கிளர்ச்சி எதிர்ப்பிற்கு உக்ரேனிய மக்களிடையே ஆதரவு பெருகிய பின்னர், OUN(B) அதன் நாஜி நட்பு நாடுகளின் தோல்வி மற்றும் ஒரு 'சுதந்திர உக்ரேனுக்கான' முன்னோக்கு இழக்கப்பட்டதையும் எதிர்நோக்க தம்மை தயாரிக்கத் தொடங்கியது.

OUN இனால் ஒழுங்கமைக்கப்பட்ட உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) அக்டோபர் 1942 இல் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது 1943 வசந்த காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக உருவானதுடன், பின்னர் மார்ச்-ஏப்ரல் 1943 இல் பெருமளவில் உக்ரேனிய பொலீஸ் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் விட்டோடியதன் விளைவாக மட்டுமே உருவானது.

சுமார் 4,000-6,000 உக்ரேனிய பொலிசார் 1943 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் Volhynia பகுதியில் UPA தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு விடுத்த அழைப்புக்கு ஆதரவளித்தனர். கட்சனோவ்ஸ்கியின் கூற்றுப்படி, அந்த ஆண்டின் இறுதியில் அனைத்து UPA கிளர்ச்சியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த விட்டோடிய பொலிசாராக இருந்தனர். Nachtigall மற்றும் Roland ஜேர்மன் சிறப்பு நடவடிக்கை பட்டாலியன்கள் உட்பட நாஜி உதவியாளர்களாக பணியாற்றிய மற்றவர்களும், இறுதியில் Waffen SS கலீசியா பிரிவில் இருந்து தப்பியோடியவர்களும் UPA உடன் இணைந்துள்ளனர்.

டிசம்பர் 1942 இல், கியேவுக்கு அருகிலுள்ள உக்ரேனிய பாதுகாப்பு படைப் பிரிவிற்கு அல்லது துணை போலீஸ் பிரிவுக்கு ஜேர்மன் அதிகாரி வருகை தந்தார். OUN (B) உக்ரேனிய பாதுகாப்பு படைப் பிரிவில் தனது காரியாளர்களை திட்டமிட்டு இணைத்திருந்தது (Wikipedia)

அதன் அதிகாரத்தின் உச்சத்தில், UPA ஒருவேளை 20,000 கிளர்ச்சியாளர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலோர் முன்பு நாஜிக்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் அல்லது போரிட்டவர்களாவர்.

UPA இலிருந்து பெருமளவிலான பொலிசார் விலகியதன் அரசியல் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. OUN(B) ஆல் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகளை UPA இலிருந்து விலகிவிடும்படி கட்டளையிட முடியும் என்றால், அவர்கள் OUN(B) இன் அறிவுறுத்தல்களின்படி நாஜிக்களின் துணைப் போலீசில் பணியாற்றியதால் தான் என்பதாகும். அவர்கள் உக்ரேனின் யூதர்களை பெருமளவில் அழித்தொழிக்க உதவியபோது, அவர்கள் அதன் கட்டுப்பாட்டினதும் மற்றும் அதன் உத்தரவின் பேரில்தான் அவ்வாறு செய்தனர்.

கட்சனோவ்ஸ்கி, 119 உயர்மட்ட மற்றும் 210 நடுத்தர OUN(B) தலைவர்கள் மற்றும் UPA தளபதிகளின் வாழ்க்கை வரலாற்றை மதிப்பாய்வு செய்ததன் மூலம், இந்த 'தேசிய விடுதலை இயக்கம்' எந்த அளவிற்கு நாஜி கையாட்களால் வழிநடத்தப்பட்டது மற்றும் பணியமர்த்தப்பட்டது என்பதை நிரூபித்துள்ளார். கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், 55 சதவீத நடுத்தர தரவரிசை OUN/UPA பணியாளர்கள் நாஜி இராணுவம், பொலீஸ் மற்றும்/அல்லது உளவுத்துறையுடன் தீவிரமாக ஒத்துழைத்தனர். 77 சதவீத உயர்நிலை OUN மற்றும் UPA தலைவர்கள் செய்ததைப் போலவே அவர்களும் செய்துள்ளனர். தகவல்கள் போதுமானதாக இல்லாததால் உண்மையான விகிதம் அதிகமாக இருக்கலாம் என அவர் வலியுறுத்துகிறார்.

கனடாவின் ரோயல் இராணுவக் கல்லூரி பேராசிரியரும் உக்ரேனிய கனேடிய காங்கிரஸின் ஷெவ்செங்கோ பதக்கத்தை (Shevchenko Medal) பெற்றவருமான லுபோமிர் லூசியுக், UPA 'நாஜிக்கள் மற்றும் சோவியத்துகள் இரண்டையும் எதிர்த்துப் போரிட்டது' என்று எம்மை நம்ப வைக்க்க முயல்கின்றார். ஆனால் ஜேர்மன்-எதிர்ப்பு இராணுவ ஈடுபாடுகள் குறைவாகவும் பயனற்றதாகவுமே இருந்தன. சோவியத் படைகளுடனான போரில் இறந்த 54 சதவிகிதத்திற்கு மாறாக, OUN உயர்மட்ட தளபதிகளில் 6 சதவிகிதம் மற்றும் உயர்மட்ட UPA தளபதிகளில் 3 சதவிகிதம் மட்டுமே ஜேர்மனியர்களுடனான இராணுவ மோதலின் விளைவாக இறந்ததாக கட்சனோவ்ஸ்கி ஆவணப்படுத்தியுள்ளார். OUN தலைவர்களில் 32 சதவீதம் பேர் சில சமயங்களில் ஜேர்மனியர்களால் சிறைபிடிக்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட்டனர். உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் அவர்களின் மேற்கத்திய ஏகாதிபத்திய கூட்டாளிகளால் பரப்பப்படும் பொய்கள், புறநிலையாக ஒப்பிட்டுப்பார்க்கக்கூடிய உண்மைகளுடன் முரண்படுகின்றன.

குர்ஸ்க் போரில் நாஜி டாங்கி இராணுவம் தோல்வியடைந்ததுடன், 1943 கோடையில் OUN (B) மாநாட்டில், நீதிமன்றத்திற்கு எதிர்கால முயற்சியில் தன்னை நிலைநிறுத்துவதற்காக, முற்றிலும் இழிந்த மற்றும் நேர்மையற்ற சொல்லாட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் எதிர்காலத்தில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவை எதிர்கொள்ளும் முயற்சியில் தன்னை நிலைநிறுத்தியது. அது 'தேசிய சோசலிச சித்தாந்தத்தை' கண்டனம் செய்து மற்றும் 'தேசிய சிறுபான்மையினருக்கு' அதன் ஆதரவை அறிவித்தது. முக்கியமாக, தன்னைப் பற்றியும் அதன் அரசியல் வரலாற்றைப் பற்றியும் பொய்யுரைக்கும் OUN பிரச்சாரம் இங்குதான் தொடங்குகிறது.

நடைமுறையில், UPA பாரிய வன்முறையைத் தொடர்ந்து செய்தது. வோல்ஹினியா, கலீசியா, லுப்ளின் மற்றும் பொலேசியா பகுதிகளில் இருந்த 100,000 வரையிலான போலந்து மக்களை இனச் சுத்திகரிக்க திட்டமிட்ட பிரச்சாரம், 'தேசிய சிறுபான்மையினர்' மீது OUN தனது அன்பை அறிவித்தபோது உச்சத்தை அடைந்தது. ஜூன் 1943 இல், வடக்கின் UPA தளபதி டிமிட்ரோ கிளியச்கிவ்ஸ்கி ஒரு இரகசிய உத்தரவை வெளியிட்டார்: 'போலந்து மக்களை அழித்தொழிக்க நாங்கள் ஒரு பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேர்மன் படைகள் பின்வாங்கும்போது,16 வயது முதல் 60 வயது வரை உள்ள முழு ஆண்களையும் அழிக்க இந்த வசதியான தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ... பாரிய காடுகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ள கிராமங்களும் குடியிருப்புகளும் பூமியிலிருந்து மறைந்து போக வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் உண்மையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுமாவர். இந்தக் கொலைகள் 1945 வரை தொடர்ந்தன. UPA தான் கட்டாயசேவையில் அமர்த்தப்பட்ட சில யூத மருத்துவர்களையும் சுட்டுக் கொன்றது.

1943 இல் லிப்னிகி கிராமத்தில் போலந்துமக்களைக் குறிவைத்த ஒரு UPA படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் [Photo: Władysława Siemaszków]

ஆண்டு முழுவதும், UPA நாஜிகளின் பின்தளத்தைப் பாதுகாப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இது , சோவியத்துகளுக்கு எதிராக ஜேர்மன் பிரிவுகளை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்த அனுமதித்தது.

உடனடி தோல்வியின் சாத்தியப்ப்பாட்டை எதிர்கொண்டு, செப்டம்பர் 1944 இல் நாஜிக்கள் பண்டேராவை சிறையிலிருந்து விடுவித்தனர். இதன் விளைவாக முன்னேறி வரும் செம்படையை எதிர்த்துப் போரிடுவதில் UPA-OUN(B) உம் நாஜிக்களும் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தின. பண்டேராவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் க்ரெஸ்கோர்ஸ் ரோசோலின்ஸ்கி-லீபவின் கூற்றுப்படி, 'பண்டேரா மற்ற உக்ரேனிய முன்னணி அரசியல்வாதிகளான மெல்னிக், குபியோவிச் மற்றும் பாவ்லோ ஷண்ட்ருக் ஆகியோருடன் சேர்ந்து சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உக்ரேனியர்களை அணிதிரட்டி ஜேர்மனியர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டார்.'

சோவியத் செம்படை 1944 மற்றும் 1945 இன் முற்பகுதியில் ஜேர்மன் வெயர்மாஹெட் தோல்விக்குப் பின்னர் தோல்வியை ஏற்படுத்தியமை, நாஜி ஜேர்மனியின் வீழ்ச்சியை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்தது. OUN(B) மற்றும் OUN(M) இன் உக்ரேனிய தேசியவாதிகள் மேற்கு நோக்கி ஓடினர். ஃபிரீலாண்டின் தாத்தா மைக்கைலோ சோமியாக் மற்றும் அவரது ஒத்துழைப்பாளர்கள் வியன்னாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் தொடர்ந்து Krakivski Visti இனை வெளியிட்டனர். கடைசி இதழ் மார்ச் 1945 இல் வெளிவந்தது. பல முன்னணி நபர்கள் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களை சென்றடைந்தனர். அங்கு OUN உறுப்பினர்கள் மாஃபியா போன்ற கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தினர்.

பண்டேரா மூனிச்சிற்கு தப்பியோடிய பின்னர் அவர் CIA மற்றும் மேற்கு ஜேர்மன் உளவுத்துறையுடன் ஒத்துழைத்தார். OUN (B), அதன் செயல்பாடுகளை ஒரு சுருக்கமாக இடைநிறுத்திய பின்னர், 1946 இல் பிரிட்டனின் MI6 இன் அனுசரணையினால் மறுசீரமைக்கப்பட்டு உக்ரேனில் சோவியத் எதிர்ப்பு கிளர்ச்சியில் ஒரு கூட்டாளியாக பயன்படுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 1950களின் இறுதி வரை அமெரிக்கர்கள் இரகசியமாக இதற்கு உதவியளித்தனர். 1950 களின் நடுப்பகுதியில், பண்டேராவின் விட்டுக்கொடுக்காத பாசிசம் CIA மற்றும் அவரது பல முன்னாள் கூட்டாளிகள் பலரை அந்நியப்படுத்தியது. அவர்கள் பாசிசத்தை 'வெறுக்கத்தக்கதாக' கண்டு மற்றும் 'சிறைபிடிக்கப்பட்ட நாடுகளுக்கான' ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பற்றிய மேற்கத்திய ஏகாதிபத்திய பிரச்சாரத்திற்கு அரசியல்ரீதியாக பொருந்தாதது என்று கண்டனர். பண்டேரா 1959 இல் ஒரு KGB முகவரால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் மகனும் கனடாவின் டொரொண்டோவிற்கு தப்பிச் சென்றனர், அங்கு அவர்கள் OUNஇன் பாதையை தொடர்ந்து ஊக்குவித்து வந்தனர்.

Waffen SS இன் 14வது கலிசியா பிரிவினர் பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தமை, உக்ரேனிய பாசிசவாதிகள் தங்கள் தடங்களை மறைக்கவும், தங்கள் அரசியல் நற்பெயரை சுத்தப்படுத்தவும், தங்கள் புதிய அமெரிக்க கனேடிய ஆசான்களுக்கு தங்களை மிகவும் விரும்பத்தக்கதாக ஆக்குவதற்காக சொன்ன பொய் பிரச்சாரத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஏப்ரல் 25, 1945 இல், அது சரணடைவதற்கு சற்று முன்பு, Waffen SS இன் கலிசியன் பிரிவின் உறுப்பினர்கள் தங்கள் சீருடைகள் மற்றும் SS முத்திரைகளை களைந்து தங்களை 'உக்ரேனிய தேசிய இராணுவத்தின் முதல் பிரிவு' என்று அறிவித்தனர். முதலில் அவர்களைச் சந்தித்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர்கள் உண்மையில் யாருடன் பழகுகிறார்கள் என்பதைக் கண்டுகொண்டனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களாக அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

* * *

ஏப்ரல் 27 அன்று, ஒவ்வொரு லிபரல், கன்சர்வேடிவ், கியூபெக்கியர்கள் அணி, பசுமைக் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக, உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை 'இனப்படுகொலை செயல்' என்று முத்திரை குத்தும் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

தெளிவாக, கனேடிய ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் இழிந்த தன்மை மற்றும் பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லை.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பிற்போக்குத்தனமானது. ஆனால் மாஸ்கோ உக்ரேனில் இனப்படுகொலையை நடத்துகிறது என்ற கூற்று, ரஷ்யாவை கொடூரமாக்குவதையும், மோதலை தீவிரப்படுத்துவதையும் சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆத்திரமூட்டலாகும். எனவே கனேடிய ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய உயிர்களின் இழப்புகளைப் பொருட்படுத்தாமல் ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்கான தங்கள் திட்டங்களைத் தொடரலாம்.

உக்ரேனின் யூதர்களுக்கு எதிராக நாஜி இனப்படுகொலைக்கு உதவிய மற்றும் உறுதுணையாக இருந்தவர்களுடன் எட்டு தசாப்தங்களாக ஒரு கூட்டணியை வளர்த்து வந்த ஒரு அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து இது வெளிவருவது மிகவும் கோரமானது. இந்தத் தொடரின் இறுதிப் பகுதியில், கனேடிய ஏகாதிபத்தியம் உக்ரேனிய பாசிசவாதிகளுக்கு எவ்வாறு அடைக்கலம் அளித்தது, அவர்களின் குற்றங்களை மறைக்க உதவியது மற்றும் தற்போதைய போரின் தயாரிப்பு, தூண்டுதல் மற்றும் நடத்துதல் உட்பட அதன் கொள்ளையடிக்கும் நலன்களை முன்னேற்றுவதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொண்டது என்பதை ஆவணப்படுத்துவோம்.

தொடரும்

Loading