கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: உக்ரேனிய தீவிர அதி-வலதுசாரிகளுடன் ஒட்டாவாவின் பல தசாப்த கால கூட்டணியும் ரஷ்யா மீதான நேட்டோ போரும்

பகுதி - 1

[பகுதி - ஒன்று] [பகுதி இரண்டு] [பகுதி மூன்று] [பகுதி நான்கு] [பகுதி ஐந்து]

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கனடா உட்பட, அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும், ரஷ்யாவின் மீது பெயர் குறிப்பிடாமல் மற்ற எல்லாவற்றிலும் போரை நடத்துகின்றன. உக்ரேனின் 'இறையாண்மையை' பாதுகாப்பதற்காகவும் அதன் 'ஜனநாயகத்தை' காப்பாற்றுவதற்காகவும் நேட்டோ சக்திகள் பல பில்லியன் டாலர்கள் ஆயுதங்களை கியேவிற்கு வழங்குவதாக அவர்களின் அரசாங்கங்கள், பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் ஸ்தாபகக் கட்சிகள் கூறுகின்றன. உண்மையில், அவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலகை அணு ஆயுதங்களுடன் போரிடும் ஒரு உலகளாவிய மோதலின் உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

உலக சோசலிச வலைத் தளம் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளவாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்டகாலமாகவே உக்ரேன் மீதான போருக்குத் திட்டமிட்டு மாஸ்கோவை தூண்டியது. இது ரஷ்யாவை சுற்றி வளைக்க கடந்த மூன்று தசாப்தங்களாக நேட்டோவின் கிழக்கு நோக்கி விரிவாக்கத்திற்கு வழிவகுத்து, மேலும் மாஸ்கோவின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாட மறுத்து புட்டினை தனது பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் ஆரம்பிக்கத் தூண்டியது. வாஷிங்டனும் வோல் ஸ்ட்ரீட்டும் ரஷ்யாவை அடிபணியச் செய்யவும், அதன் ஏராளமான வளங்களைச் சூறையாடவும், அதன் மூலம் சீனா மீதான இராணுவ-மூலோபாய சுற்றிவளைப்பை இறுக்கவும் உறுதியாக உள்ளன.

இந்த கொள்ளையடிக்கும் பூகோள மூலோபாய மற்றும் பொருளாதார இலக்குகளைப் பின்தொடர்வதில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரேனின் தீவிர வலது கட்சிகள் மற்றும் பாசிச ஆயுதக்குழுக்களுடன் இணைந்துள்ளன. அதாவது, இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளின் ஆதரவைப் பெறுவதற்கு ஒத்துழைத்த உக்ரேனிய பாசிசவாதிகளை போற்றும் மற்றும் பின்பற்ற முற்படும் சக்திகளுடன் இணைந்துள்ளன. இனரீதியாக 'தூய்மையான' உக்ரேனிய அரசை உருவாக்குவதற்கு உக்ரேனிய பாசிசவாதிகள் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான குற்றங்களில் சிலவற்றில் பங்கேற்றனர். இதில் யூதப்படுகொலையும் அடங்கும்.

வாஷிங்டன், அதன் ஜேர்மன் மற்றும் கனேடிய நட்பு நாடுகளின் உதவி மற்றும் ஆதரவுடன், உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய சார்பு ஜனாதிபதியான விக்டர் யானுகோவிச்சை அகற்றிய பிப்ரவரி 2014 சதியில் அதன் அதிர்ச்சித் துருப்புக்களாக பாசிச Right Sector இனைப் பயன்படுத்தியது. ஏகாதிபத்திய சக்திகள் பின்னர் உக்ரேனை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க உறுதிபூண்ட ஒரு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியது.

வாஷிங்டன் பின்னர் உக்ரேனின் ஆயுதப் படைகளை மறுசீரமைத்தது, பாசிச அசோவ் பட்டாலியன் உக்ரேனின் பாதுகாப்புப் படைகளுடன் இணைக்கப்படுவதை மேற்பார்வையிட்டது. இன்று இந்த பாசிசவாதிகள், உக்ரேனின் சிறப்புபயிற்சி பெற்ற துருப்புக்களில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமையர் செலென்ஸ்கி தானாகவே பெருமையாகக் கூறியது போல், அவர்கள் ரஷ்ய மக்கள் பெரும்பான்மையான டொன்பாஸ் பிராந்தியத்தில் முக்கிய முன்னணி போராளிகளாவர்.

கனேடிய ஏகாதிபத்தியம் நீண்டகாலமாக உலக விவகாரங்களில் ஒரு தன்னலமற்ற சக்தியாக தன்னை காட்டிக்கொள்ள முயன்று வருகிறது. ஆனால் ஒட்டாவா உக்ரேன் போரில் குறிப்பாக ஆத்திரமூட்டும் மற்றும் போர்க்குணமிக்க பாத்திரத்தை வகிக்கிறது. இது போரின் தயாரிப்பு மற்றும் தூண்டுதலில் அதன் கணிசமான பங்கின் தொடர்ச்சியாகும்.

தாராளவாத மற்றும் பழைமைவாதக அரசாங்கங்கள் இரண்டின் கீழும், கனடா வாஷிங்டனுடன் நெருக்கமாக செயற்பட்டது. முதலில் முன்னாள் வார்சோ ஒப்பந்த நாடுகள் மற்றும் சோவியத் குடியரசுகளை உள்ளடக்கிய நேட்டோவை விரிவுபடுத்தியது. பின்னர், 2016 முதல், ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ பயணப் படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்த உதவியது. போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் உள்ள நேட்டோவின் நான்கு நவீனமயப்படுத்தப்பட்ட போர்க் குழுக்களில் ஒன்றாக கனடா தலைமை வகிக்கிறது. மேலும் ரஷ்யாவின் வீட்டு வாசலில் அச்சுறுத்தும் வகையில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 2015 முதல், நூற்றுக்கணக்கான கனேடிய ஆயுதப் படைகளின் பயிற்சியாளர்கள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் உக்ரேனின் ஆயுதப் படைகளை மறுசீரமைக்க அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றினார்கள். அசோவ் பட்டாலியனின் பாசிசவாதிகளை ஒருங்கிணைத்து பயிற்சி அளிப்பதும் இதில் உள்ளடங்கும்.

கனேடிய ஆயுதப் படைகளின் பயிற்சியில் பங்கேற்கும் போது, உக்ரேனிய தேசிய காவலரின் உறுப்பினர் பாசிச அசோவ் பட்டாலியனின் சின்னத்தை அணிந்துள்ளனர் (Reproduced from social media by Radio Canada International) [Photo: Radio Canada International]

வாஷிங்டனும் ஒட்டாவாவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான போர் நோக்கங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளதால், உக்ரேனுக்கான கனடாவின் இராணுவ ஆதரவு அதிவேகமாக அதிகரித்துள்ளது. ஜனவரி முதல், கனடா அடுத்த மார்ச் மாதத்திற்குள் கியேவிற்கு கனரக ஆயுதங்கள் உட்பட 618 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான முழுப் பொருளாதாரப் போருக்கும் தலைமை தாங்கியுள்ளது. SWIFT வங்கி அமைப்பிலிருந்து ரஷ்யாவை விலக்கி, ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு அழுத்தம் கொடுத்த பிரிட்டனின் டோரி ஆட்சியுடன் இணைந்து பணியாற்றுகின்றது.

கடந்த மூன்று தசாப்தங்களாக பால்கன், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் போர்களில் அதன் பங்கேற்புடன் உக்ரேனில் கனடாவின் போர்நாடும் பங்கும் இணைந்துள்ளது. இந்தப் போர்கள், 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' ஆல் ஏற்படக்கூடிய இனப்படுகொலையை தடுப்பது அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது பற்றிய பொய்களால் எப்போதும் நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவது மற்றும் பூகோள மூலோபாயரீதியாக முக்கியமான யூரேசிய நிலப்பரப்பின் மீது அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்தியின் ஆதிக்கத்தை முன்னிறுத்துவதாகும்.

ஒரு தொடர்ச்சியான போர்ப் பிரச்சாரம் மற்றும் 'இனப்படுகொலை' பற்றிய ஆத்திரமூட்டும் கூற்றுகளுக்குப் பின்னால், கனேடிய ஆளும் வர்க்கம் அதன் சொந்த கொள்ளையடிக்கும் பொருளாதார மற்றும் பூகோள அரசியல் நோக்கங்களைத் தொடர்கிறது. பூகோள முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி நிலைமைகளின் கீழ், வாஷிங்டனுடனான அதன் எட்டு தசாப்தங்கள் பழமையான இராணுவ-பாதுகாப்பு கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதில் கனேடிய ஆளும் வர்க்கம் உறுதியாக உள்ளது. இது, அதன் விரிவான உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் முக்கியமானது என்று கருதுகிறது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர தொழிலாளர் அரசாங்கத்தை தூக்கி எறியும் ஏகாதிபத்திய முயற்சியின் ஒரு பகுதியாக 1919 இல் சைபீரியாவிற்கு துருப்புக்களை அனுப்பிய கனடாவிற்கு, ரஷ்யாவுடன் அதன் சொந்த மூலோபாய போட்டியும் உள்ளது. காலநிலை மாற்றம் இயற்கை வளங்கள் மற்றும் கடல் பாதைகளை சுரண்டுவதை இன்னும் சாத்தியமானதாக ஆக்கியுள்ள ஆர்க்டிக்கில் இது குறிப்பாக உண்மையாகும்.

ஆனால், ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரில் கனேடிய ஏகாதிபத்தியத்தின் அளப்பரிய பங்கை முன்தள்ளும் மூன்றாவது முக்கியமான காரணி உள்ளது என்னவெனில் உக்ரேனிய தீவிர வலதுசாரிகளுடனான கனேடிய அரசின் நீண்டகால கூட்டணியும் மற்றும் ஆதரவுமாகும்.

மூன்றாம் குடியரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில், கனேடிய அரசு பல்லாயிரக்கணக்கான அதன் உறுப்பினர்களுக்கும் உக்ரேனிய தேசியவாதிகளின் (OUN) இரு போட்டிப் பிரிவுகளின் ஆதரவாளர்களுக்கும் புகலிடம் அளித்தது. மேலும் அது அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக குறிப்பிட்ட எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் அவ்வாறு செய்தது. கொடூரமான போர்க்குற்றங்களில் ஹிட்லரின் கூட்டாளிகளான OUN மெல்னியேக் (M) மற்றும் OUN பண்டேரா (B) இருவரும் நாஜிகளுடன் இணைந்து அதன் ஆதரவை ஆர்வத்துடன் நாடினர்.

பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் போலந்து மக்களைக் கொன்றதில் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் (UPA) பங்கு இருந்தபோதிலும், OUN இன் ஸ்டீபன் பண்டேரா பிரிவால் 1943 இல் உருவாக்கப்பட்ட உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் (UPA) உறுப்பினர்கள் திறந்த கரங்களுடன் கனடாவிற்கு வரவேற்கப்பட்டனர். 'கலிசியா பிரிவு' என்று அழைக்கப்படும் Waffen SS இன் 14வது கைக்குண்டெறியும் பிரிவின் உறுப்பினர்களும் கூட வரவேற்க்கப்பட்டனர். நாஜி கட்சியின் ஆயுதப் பிரிவாக வெகுஜன படுகொலைகள் மற்றும் பிற போர்க்குற்றங்களின் பங்கு காரணமாக நூரெம்பேர்க் விசாரணை Waffen SS ஒரு குற்றவியல் அமைப்பாக இருப்பதைக் கண்டறிந்திருந்தாலும் அவ்வாறு செய்யப்பட்டது.

கனேடிய அரசும் அரசியல் ஸ்தாபகமும் உக்ரேனிய பாசிச குடியேற்றவாசிகளையும் அவர்களது அரசியல் சந்ததியினரையும் அவர்களின் குற்றங்களை மூடிமறைப்பதை ஊக்குவித்து உதவியது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்க 1945க்குப் பிந்தைய பண்டேராவின் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் எஞ்சியவர்களைப் பயன்படுத்தி, சிஐஏ உருவாக்கிய கதையைத் தொடர்ந்து, ஒரு புதிய கட்டுக்கதை கட்டப்பட்டது. அது தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளை பாசிசவாதிகளாகவோ அல்லது யூதப்படுகொலையில் இணைந்து செயற்பட்டவர்களாகவோ காட்டாமல் 'தேசிய விடுதலை'க்கான போராளிகளாகவும், நாஜிசம் மற்றும் 'கடவுள் அற்ற கம்யூனிசத்தால்' பாதிக்கப்பட்டவர்களாகவும் சித்தரித்தது.

கனேடிய ஏகாதிபத்தியம் இந்த தீவிர பிற்போக்கு சக்திகளை அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கை நோக்கங்களைத் தொடரப் பயன்படுத்தியது. இதற்கு பிரதியீடாக, அவர்கள் குறிப்பிடத்தக்க பரந்த அரசியல் செல்வாக்கைப் பெற்றுள்ளனர்.

அரசின் ஆதரவுடன், தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள் கனடாவின் இதுவரை பெரும்பாலும் சோசலிச மற்றும் இடதுசாரி அரசியலுடன் அடையாளம் காணப்பட்ட கணிசமான உக்ரேனிய குடியேற்ற சமூகத்தில் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தினர். இந்த தேசியவாதிகள் கனடாவின் பனிப்போர் வெளியுறவுக் கொள்கையின் அரணாகச் செயல்பட்டு சோவியத் ஒன்றியத்திற்கு கடுமையான விரோதப் போக்கைத் தூண்டினர். அதே வேளையில், நாஜிகளின் உக்ரேனிய பாசிச ஒத்துழைப்பாளர்களை வெளிப்படையாகக் கொண்டாடும் ஒரு பிரத்தியேக தேசியவாதத்தை அரசு ஆதரவுடனான இன-கலாச்சார அமைப்புகளின் வலைப்பின்னல் மூலம் ஊக்குவித்தனர். 1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும், கனேடிய ஏகாதிபத்தியத்தால் பாதுகாக்கப்பட்ட உக்ரேனிய-கனேடிய தீவிர வலதுசாரி சக்திகள் முதலில் முதலாளித்துவ மறுசீரமைப்பு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அழுத்தம் கொடுக்கவும், பின்னர் 'சுதந்திரமான' உக்ரேனை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு ஆதரவளிக்கவும் மீண்டும் பயன்படுத்தப்பட்டனர்.

உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் (Ukrainian Canadian Congress -UCC) நீண்டகாலமாக கனேடிய அரசுக்கும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் இணைப்பாக செயல்பட்டு வருகிறது. உக்ரேனிய கனேடிய காங்கிரஸின் சொந்த வலைத் தளம் பெருமையாகக் கூறுவது போல, இது ஆரம்பத்திலிருந்தே அரசால் ஆதரிக்கப்பட்ட அமைப்பாகும். இது 1940 இல் கனடாவின் போர்த் துறையின் அனுசரணையில் உக்ரேனிய கனேடிய குழுவாக நிறுவப்பட்டது.

உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் தலைவர்கள் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் உள்ளவர்களை உடனடியாக அணுகக்கூடியவர்களாக உள்ளார்கள் மற்றும் பிரதம மந்திரிகள் மற்றும் பிற மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் முன்னணி UCC உறுப்பினர்கள் உக்ரேனுக்குக்கான விஜயங்களில் அடிக்கடி பயணிக்கிறார்கள். கிழக்கு உக்ரேன் மற்றும் கிரிமியாவை 'மீட்பதில்' 'மிகவும் திறம்பட' செய்ய உக்ரேனிய பாதுகாப்புப் படைகளுக்கு கனேடிய ஆயுதப் படைகள் பயிற்சி அளித்து வருவதாக 2016 ஆம் ஆண்டில் கியேவில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தபோது, அப்போதைய உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் தலைவரான பௌல் க்ரோட் அவரின் பக்கத்தில் இருந்தார்.

Waffen SS இன் கலீசியா பிரிவின் நடவடிக்கைகளை உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் வெட்கமின்றி பாதுகாக்கிறது. பல தசாப்தங்களாக கனேடிய கலீசியா பிரிவு படையினரின் சங்கங்கள் உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் உடன் இணைவதைப் பற்றி இது பெருமையுடன் உள்ளது. இருப்பினும், தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை அது ஊக்குவிப்பது OUN இனை ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் UPA இற்கு தலைமை தாங்கிய மற்றும் 1940 இல் நிறுவப்பட்டதிலிருந்து 1959 இல் இறக்கும் வரை அதை வழிநடத்திய பாசிச தலைவரான ஸ்டீபன் பண்டேராவின் OUN (B) ஐ கொண்டாடுவதில் கவனம் செலுத்துகிறது.

உக்ரேனிய-கனேடிய வரலாற்றாசிரியர் ஜோன்-பௌல் ஹிம்கா 2010 இல் உக்ரேனிய கனேடிய காங்கிரஸை '(OUN-UPA) தீச்சுடரின் காவலர்கள்' என்று விவரித்தார், அவர்கள் 'இந்த தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் மகிமைப்படுத்தலை உக்ரேனிய தேசியத்தை அடையாளப்படுத்தும் திட்டத்தின் மையத்தில் வைத்துள்ளனர்.' மிக சமீபத்தில், அவர் ரேடியோ-கனடா இன்டர்நேஷனலிடம் இடம் 'பல சமூக அமைப்புகள் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் பண்டேரா பிரிவின் தலைமையில் உள்ளன' எனக் கூறினார்.”

OUN (Bandera) உடன் தொடர்புடைய பாசிச பதாகையை வைத்திருக்கும் கனடாவின் துணைப் பிரதமர்

கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய பாசிசத்திற்கும் இடையிலான கூட்டணி, கனடாவின் துணைப் பிரதம மந்திரி, நிதியமைச்சர் மற்றும் அதன் 'பெண்ணிய' வெளியுறவுக் கொள்கையின் தலைமை வடிவமைப்பாளரான கிறிஸ்டியா ஃபிரீலாண்ட் என்பவரில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளடங்கியுள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசாங்கங்களில் ரஷ்யாவிற்கு எதிரான முழுப் பொருளாதாரப் போரின் தீவிர வக்கீல்களில் ஃபிரீலாண்ட் ஒருவராவர். மேலும் உக்ரேனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என ட்ரூடோ லிபரல் அரசாங்கத்திற்குள் அழுத்தம் கொடுத்துள்ளார். அவர் உக்ரேனின் உள் அரசியலில் ஒரு தீவிரமான பாத்திரத்தை வகிப்பதுடன், ஜனவரி மாதம் அவரது அமெரிக்க சார்பு முன்னோடியான தன்னலக்குழு செல்வந்தரான பெட்ரோ பொரோஷென்கோவை சிறையில் அடைக்க வேண்டாம் என்று செலென்ஸ்கியின் மீது அழுத்தம் கொடுத்திருந்தார். அதே நேரத்தில், அவர் வாஷிங்டனுக்கும் அதன் கியேவ் ஆதரளாவாளர்களுக்கும் இடையே ஒரு உயர்நிலை தரகராக பணியாற்றுகிறார். ஃபிரீலாண்டின் கூற்றுப்படி, அவர் தினமும் உக்ரேனின் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரியுடன் பேசுகிறார்.

2015 ஆம் ஆண்டு 'புட்டினின் பெரிய பொய்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் ஃபிரீலாண்ட் தன்னை உக்ரேனிய கனேடிய சமூகத்தின் 'பெருமைமிக்க உறுப்பினர்' என்று விவரித்தார். அவர் எழுதினார், '1939 இல் ஹிட்லரும் ஸ்ராலினும் தங்கள் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், எனது தாய்வழி தாத்தாக்கள் மேற்கு உக்ரேனில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் திரும்பிச் செல்லத் துணியவில்லை, ஆனால் அவர்கள் அங்கு தங்கிவிட்ட தங்களுடைய சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். எனது தாத்தா பாட்டிகளின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும், 1917 ரஷ்யப் புரட்சியின் குழப்பத்தின் போதும் அதற்குப் பின்னரும் கடைசியாக, குறிப்பிட்ட காலம் இருந்த சுதந்திர உக்ரேன் என்ற கருத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பொறுப்புடன், அரசியல் நாடுகடத்தப்பட்டவர்களாக அவர்கள் தங்களைக் கண்டார்கள். அந்தக் கனவு அடுத்த தலைமுறையிலும், சில சமயங்களில் அதற்கு அடுத்த தலைமுறையிலும் நீடித்தது.”

அவர் அடிக்கடி திரும்பத் திரும்பச் சொன்ன, அவருடைய தாத்தாவிற்கு ஆழமான அஞ்சலி செலுத்துவது மற்றும் உக்ரேனிய கலாச்சாரம் மற்றும் தேசியவாதத்தில் அவரைப் பயிற்றுவிப்பதில் அவருடைய பங்கு பற்றிய இந்தக் கதை அரசியல்ரீதியாக கணிப்பிடப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட ஒரு கட்டுக்கதையாகும். சுருக்கமாக ஒரு பொய்யாகும்.

கிறிஸ்டியா ஃபிரீலாண்ட் தனது நாஜி ஒத்துழைப்பாளர் தாத்தா மிக்கைலோ சோமியாக் மற்றும் OUN இன் உக்ரேனிய பாசிசவாதிகளை பொதுவாக 'நாஜிசம் மற்றும் கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்' என்ற பொய்யை விளம்பரப்படுத்துகிறார். (Twitter)

ஃபிரீலாண்டின் தாய்வழி தாத்தா, மிக்கைலோ சோமியாக், செல்வாக்கு மிக்க மற்றும் மிகவும் வெகுமதி பெற்ற நாஜி ஒத்துழைப்பாளராக இருந்தார். 1940 இன் தொடக்கத்திலிருந்து 1945 முதல் மாதங்கள் வரை ஐந்து ஆண்டுகளுக்கு, நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உக்ரேனிய மொழி செய்தித்தாளிற்காக பணியாற்றினார். Krakivs’ki Visti (Krakow News) அடோல்ஃப் ஹிட்லரை புகழ்ந்து, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி அழிப்புப் போரைக் கொண்டாடி, யூதர்கள் மீது வெறுப்பைத் தூண்டினார். மற்றும் Waffen SS இன் உக்ரேனிய அல்லது 'கலிசியா பிரிவு' உருவாவதை ஊக்குவித்தார். நாஜி மரண முகாமில் இறந்த யூதரிடம் இருந்து திருடப்பட்ட அச்சகத்தில் இப் பத்திரிகை அச்சிடப்பட்டது.

சோமியாக் OUN (M) இல் உறுப்பினராக இருந்தார். அதிலிருந்து பண்டேராவும் அவரது ஆதரவாளர்களும் 1940 இல் பிரிந்தனர். OUN (M) ஆனது OUN (B) ஐ விட நாஜிகளுக்கு நேரடியாகவும் அடிமைத்தனமாகவும் சேவை செய்ய தயாராக இருந்தது. அது உக்ரேனிய மத்திய குழு (UTsK) மூலம் இதனை செய்தது. இது அரசியல் அமைப்புகளின் மீதான நாஜிகளின் தடையைத் தவிர்ப்பதற்காக தன்னை ஒரு சமூக நல அமைப்பாக மாறுவேடமிட்டுக்கொண்டது.

UTsK இன் தலைவரான வொலோடிமையர் குபிஜோவிச் Krakivs’ki Visti இன் வெளியீட்டாளராக இருந்தார். 1943 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கலீசியா பிரிவு என்று அழைக்கப்படும் Waffen SS இன் 14வது கைக்குண்டுவீச்சு பிரிவு நிறுவப்பட்டபோது, குபிஜோவிச் அதன் முதல் உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்தார்.

போருக்குப் பின்னர், சோமியாக் மற்றும் குபிஜோவிச் வெவ்வேறு கண்டங்களில் வாழ்ந்து வந்தபோதிலும், ஆனால் அவர்கள் உக்ரேனிய தேசியவாத பாதையை முன்னெடுப்பது குறித்து வாழ்நாள் முழுவதும் கடிதப் பரிமாற்றத்தை மேற்கொண்டிருந்தனர். 1983 இல் ஃபிரீலாண்டின் தாத்தா சோமியாக்கின் மரணத்துடன் மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பு முடிவிற்கு வந்தது.

ஃபிரீலாண்டின் அரசியல் வம்சாவளி 2017 இல் அம்பலப்படுத்தப்பட்டபோது, அவரும் ட்ரூடோ அரசாங்கமும் அதை 'ரஷ்ய தவறான தகவல்' என்று நிராகரித்தனர். அவர்கள் முழு அரசியல் ஸ்தாபகத்தாலும் பெருநிறுவன ஊடகங்களாலும் விரைவாக இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஃபிரீலாண்ட், எதிர்க்கட்சியான பழைமைவாதிகள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் உடந்தையுடன், தனது அன்பான தாத்தாவின் பங்கைப் பற்றி கலந்துரையாட வெட்கமின்றி மறுத்துவிட்டார்.

Globe and Mail, Ottawa Citizen, National Post மற்றும் பிற முக்கிய நாளிதழ்கள் சோமியாக் நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் ஒரு செய்தித்தாளை மேற்பார்வை செய்ததை ஒப்புக்கொண்டதாக அறிக்கைகளை வெளியிட்டன. இருப்பினும், இந்தக் கருத்துக்கள் கவனமாகத் தொகுக்கப்பட்ட தகவலின் ஒரு பகுதியாகும். உக்ரேனிய பாசிசவாதிகளின் உதவியுடன் நாஜிக்கள் படுகொலையை நடத்தியதால், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி அழிப்பு போருக்கு ஆதரவை ஊக்குவிப்பதிலும் யூதர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதிலும் Krakivs’ki Visti இன் பங்கை அவர்கள் குறைத்து மதிப்பிட்டு மூடிமறைத்தனர். கிழக்கில் நாஜிப் போருக்கு Krakivs’ki Visti இன் ஆதரவு வருந்தத்தக்கது என்றாலும், அது உக்ரேனிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் பங்களித்தது என்று பரிந்துரைக்கப்பட்டது!

கனடாவின் பெருநிறுவன ஊடகங்கள் ஃபிரீலாண்டின் அரசியல் வம்சாவளியை விசாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை, அல்லது அதை ஒரு பரந்த வரலாற்று சூழலில் வைத்து பார்க்கவில்லை. Krakivs’ki Visti இன் காப்பகத்தை மதிப்பாய்வு செய்யவோ அல்லது பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய தேசியவாத நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதில் கனடாவின் பங்கை ஆராயவோ யாரும் நிருபரையோ அல்லது வரலாற்றாசிரியரை நியமிக்கவில்லை. சோமியாக்கின் இரண்டாம் உலகப் போரின் பத்திரிகைச் செயல்பாடுகள், சமகால நிகழ்வுகளுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு வரலாற்று கதையாக உலகளவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய தீவிர வலதுசாரிகளுக்கான கனேடிய அரசின் நீண்டகால ஆதரவைப் பற்றிய எந்தவொரு தீவிர விசாரணையையும், ஊடகங்களோ அல்லது அரசியல் ஸ்தாபகங்களோ ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அவ்வாறு செய்திருந்தால், உக்ரேனிய 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகத்தை' பாதுகாக்க ஒட்டாவா இப்போது நேட்டோ போரில் மிக நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றபோது உக்ரேனில் உள்ள பாசிசவாதிகள் மீதும் அவர்களின் கனேடிய சித்தாந்த வழிகாட்டிகள் மற்றும் செயல்படுத்துபவர்கள் மீதும் தவிர்க்க முடியாமல் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கும்.

2014 ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்கா மற்றும் கனடா உக்ரேனிய பாசிஸ்டுகளை அதிர்ச்சித் துருப்புக்களாகப் பயன்படுத்தியதில் இருந்து, உக்ரேனின் ஆயுதப் படைகளில் பொதிந்துள்ள பாசிஸ்டுகளுக்கு கனேடிய ஆயுதப் படைகளின் பயிற்சிகள் மற்றும் உக்ரேனிய அதி தீவிர வலதுசாரிகள் மற்றும் மற்றும் உக்ரேனிய கனேடிய காங்கிரஸின் பிரத்தியேகவாத, தீவிரமான கம்யூனிச எதிர்ப்பு தேசியவாதத கருத்தியல் மற்றும் பொருளாதாய ஊக்குவிப்பிற்கான அரசு ஆதரவு பற்றிய உறவுகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு பஞ்சமிருக்கவில்லை.

இரண்டாம் உலகப் போரில் உக்ரேனிய பாசிஸ்டுகளின் மரபு, சின்னங்கள் மற்றும் சடங்குகளுடன் ஃப்ரீலாண்ட் வழக்கமாக தன்னை இணைத்துக் கொள்கிறார். 2016 ஆம் ஆண்டில், அவர் உக்ரேனிய கனேடிய காங்கிரஸுக்கு ஒரு முக்கிய உரையை நிகழ்த்தி, அதன் உறுப்பினர்கள் பாசிச பாண்டேரவாதிகளுக்கு மரியாதை செலுத்தி 'உக்ரைனுக்கு மகிமை! மாவீரர்களுக்கு மகிமை!” என்று கோஷமிட வழிநடத்தியதன் மூலம் தனது உரையை முடித்தார். (ஒளிப்பதிவை பார்க்கவும்). 1949 இல் OUN (B) மற்றும் UPA உறுப்பினர்களால் ஸ்தாபிக்கப்பட்ட உக்ரேனிய கனேடியர்களின் லீக் முன் அவர் பேசியுள்ளார், மேலும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதம் மற்றும் பாசிச பண்டேராவுக்கு தனிநபர் வழிபாட்டு முறை போன்ற பக்தியை பரப்புவதில் இன்றுவரை அர்ப்பணிப்புடன் இருக்கிறார். உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த சில நாட்களுக்குப் பின்னர், ஃபிரீலாண்ட் தனது அரசியல் நிறங்களை எடுத்துக்காட்டியுள்ளார். OUN இன் சிவப்பு மற்றும் கறுப்பு பதாகையைப் பிடித்தபடி 'உக்ரேனைக் காப்பாற்று' ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

ஃபிரீலாண்டின் அரசியல் வம்சாவளி மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, உக்ரேனிய பாசிசத்துடன் அவரது 'தாராளவாதம்' இணைந்திருப்பது, கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும், அவரது அரசியல் எழுச்சிக்கு எந்த வகையிலும் தடையாக இருக்கவில்லை. மாறாக, கனேடிய ஏகாதிபத்தியம் அதன் கொள்ளையடிக்கும் நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை பின்தொடர்வதில் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளுடன் அணிசேரத் தயாராக இருப்பதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

'Freeland's crusade in Alberta' என்ற தலைப்பிலான தாராளவாத Toronto Star பத்திரிகையில் வெளிவந்த ஒரு சமீபத்திய கட்டுரையில், “அவரது தாத்தா பாட்டி அகதிகளாக கனடாவிற்கு வந்தார்கள், இப்போது அவர்களின் பேத்தி அவர்களின் தாயகத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இது ஃபிரீலாண்ட் பற்றி நிறைய கூறுகிறது, ஆனால் கனடா எப்படி இருக்க விரும்புகிறது என்பதைப் பற்றியும் இது நிறையக் கூறுகிறது.

'அது விதியாக இருந்தாலும் சரி, அல்லது தற்செயலாக இருந்தாலும் சரி, சரியான நேரத்தில் சரியான இடத்தில் மிகவும் உறுதியான மற்றும் அறிவுள்ள ஒருவரைக் கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்' என அந்தப் பத்திரிகை எழுதியது.

விதிக்கும் தற்செயல்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கனேடிய ஏகாதிபத்திய அரசின் தலைமையில் இரண்டாவது இடத்தில் ஃபிரீலாண்டின் இருப்பது மற்றும் ஜஸ்டின் ட்ரூடோவின் பிரதம மந்திரியின் வாரிசாக இருக்கலாம் என்பதும் கனேடிய அரசுக்கும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த கூட்டணியின் விளைவு ஆகும்.

கனடாவிலும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்கள் முன் இந்த ஒத்துழைப்பை அம்பலப்படுத்துவது ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு உலகளாவிய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் ஒரு முக்கிய கூறுபாடாகும்.

நேட்டோ சக்திகளின் ஆளும் உயரடுக்குகள், ரஷ்யாவை சுற்றிவளைப்பதை 'ஜனநாயகம்' மற்றும் 'மனித உரிமைகள்' ஆகியவற்றிற்கான ஒரு சிலுவைப் போராக சித்தரிப்பதில் உள்ளடங்கியிருக்கும் வரலாற்று சிக்கல்கள் பற்றிய அறியாமை மற்றும் பரந்த பிரச்சாரத்தை நம்பியுள்ளன. அவர்களின் பாசிச உக்ரேனிய நட்பு நாடுகளின் வரலாற்று பதிவையும் மற்றும் அவர்கள் எழுப்பி புத்துயிர் கொடுக்க முயலும் தீவிர பிற்போக்கு மரபுகளை ஆவணப்படுத்துவது உழைக்கும் மக்களிடம் இருந்து இந்தப் பிரச்சாரத்தை வெட்டுவதற்கும், நேட்டோ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கும், முதலாளித்துவத்திற்கும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு மூலகாரணமான இலாப அமைப்புக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க உதவும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கனேடிய ஏகாதிபத்தியம் அடைக்கலம் கொடுத்த ஹிட்லரின் உக்ரேனிய பாசிச கூட்டாளிகளின் நடவடிக்கைகளையும் கருத்தியலையும் இந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த பகுதிகள் ஆராயும். Krakivs’ki Visti இன் நாஜி சார்பு பிரச்சாரம் மற்றும் யூத-விரோத அறிவுரைகள் மற்றும் அதன் வெளியீட்டாளர்களின் அரசியல் செயல்பாடுகள், அத்துடன் பண்டேராவின் OUN (B) மற்றும் UPA ஆகியவற்றின் வரலாறும் இதில் அடங்கும். நான்காவது பகுதி, இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றில் உக்ரேனிய பாசிஸ்டுகளின் பங்களிப்பை மறைப்பதற்கும், தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்களின் பரந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் கனேடிய அரசு அளித்த ஆதரவை ஆவணப்படுத்தும். 'கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்' சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுசீரமைப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் அடிமையாக உக்ரேனை 'சுதந்திரமான' மாற்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் கனேடிய ஏகாதிபத்தியத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள தீவிர வலதுசாரி சக்திகளின் பங்கைப் பற்றி விவாதிக்கும். ஒட்டாவாவும் கனேடிய ஆயுதப் படைகளும் இந்த தீவிர வலதுசாரிப் படைகளுடன், கனடா மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளிலும், ரஷ்யாவுடன் போரைத் தயாரிப்பதிலும் தூண்டுவதிலும் எவ்வாறு செயல்பட்டன என்பதை அம்பலப்படுத்துவதுடன் இத் தொடர் கட்டுரை முடிவடையும்.

Loading