கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: உக்ரேனிய பாசிசவாதிகளுக்கு ஒட்டாவா எவ்வாறு அடைக்கலம் அளித்தது மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவித்தது

பகுதி - 4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

[பகுதி ஒன்று] [பகுதி இரண்டு] [பகுதி மூன்று] [பகுதி நான்கு] [பகுதி ஐந்து]

ஐந்து பாகங்கள் கொண்ட தொடரில் இது நான்காவதாகும். முதல் பகுதி கனேடிய ஏகாதிபத்தியத்தின் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்துடனான நீண்டகால கூட்டணியை அறிமுகப்படுத்தியது. பகுதி இரண்டு உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (OUN) தோற்றம் மற்றும் யூத-எதிர்ப்பு, நாஜி-சார்பு பத்திரிகையான Krakivski Visti இன் பதிவு. இது கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலாண்டின் தாத்தா மிக்கைலோ சோமியாக்கால் பதிப்பிடப்பட்டது. நாஜிக்களின், பாசிச OUN (M) மற்றும் OUN (B) ஒத்துழைப்பாளர்களுக்கு கனேடிய அரசு எவ்வாறு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியது, அவர்களின் குற்றங்களை மூடிமறைக்க அவர்களுக்கு உதவியதை ஆவணப்படுத்தியது. மேலும் அவர்களையும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தையும் அதன் ஏகாதிபத்திய வெளி மற்றும் உள்நாட்டு கொள்கை கருவிகளாகப் பயன்படுத்தியது எப்படி என்பதை பகுதி நான்காம் ஆய்வு செய்யும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், கனேடிய அரசாங்கம், அதன் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நட்பு நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன், உக்ரேன் மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கும் தீவிர வலதுசாரி தேசியவாதிகளுக்கும் கதவுகளைத் திறந்தது. மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அவர்களின் 'பனிப்போர்' சிலுவையுத்தத்தில் நாஜி ஆட்சியின் வரலாற்றுரீதியாக மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த பாசிசவாதிகள் மற்றும் அதிதீவிர-தேசியவாதிகளை விட சிறந்த கூட்டாளிகள் இருக்கவில்லை.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கனேடிய ஏகாதிபத்திய கொள்கையில் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர். பின்னர் உக்ரேனிய கனேடிய காங்கிரஸாகிய (UCC) உக்ரேனிய கனேடிய குழு மூலம், யூதப்படுகொலையில் உக்ரேனின் ஈடுபாட்டை மறுத்த அமைப்புகளின் வலையமைப்பின் வளர்ச்சியை ஒட்டாவா ஆதரித்து மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக 'சுதந்திரமான' உக்ரேனிய அரசாட்சியைப் பெறுவதற்கு முதலில் மூன்றாம் குடியரசுடனும் பின்னர் பிரிட்டனின் MI6 மற்றும் CIA உடன் கூட்டில் இருந்த உக்ரேனிய பாசிசவாதிகளின் 'வீர' போராட்டத்தை கொண்டாடும் ஒரு தேசியவாத கட்டுக்கதையை உருவாக்கி ஊக்குவித்தது. வலதுசாரி தேசியவாத குழுக்கள் கனடாவில் உள்ள போருக்கு முன்னர் கூடுதலாக இடதுசாரிகளாக இருந்த பெரிய உக்ரேனிய புலம்பெயர்ந்தோரின் அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. அவை போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களுக்குள் ஊடுருவவும், தொழிலாளர் போராட்டங்களை கீழறுப்பதற்கும் கூட பயன்படுத்தப்பட்டன.

தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகள் பண்டேராவின் உருவப்படம் மற்றும் Right Sector மற்றும் Svoboda கொடிகளை தாங்கிய பதாகையுடன் கியேவில் அணிவகுத்துச் சென்றனர்

உக்ரேனிய பாசிசத்தின் குற்றங்களை மூடிமறைத்தல் மற்றும் தீவிர கம்யூனிச எதிர்ப்பு ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கு அப்பால், UCC யைச் சுற்றி அணிதிரண்ட வலதுசாரி தேசியவாதிகள் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கியமான மற்றும் எப்போதும் ஆக்கிரோஷமான பங்கைக் கொண்டிருந்தனர். மிக்கைல் கோர்பச்சேவின் கீழ் ஸ்ராலினிச ஆட்சி அதன் முதலாளித்துவ மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு நாடுகளுக்கு அதிக பயணங்களை அனுமதிப்பது உட்பட அதன் மேற்கு நோக்கிய திருப்பத்தின்போது, கனேடிய அரசின் ஆதரவுபெற்ற உக்ரேனிய தேசியவாதிகள் 'சுதந்திர சந்தையின்' அதிசயங்களையும் மற்றும் தேசியவாதத்தையும் போற்றவும், ஊக்குவிக்கவும் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் விரைவில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் இணைந்து 'சுதந்திரமான' உக்ரேனுக்கான பிரச்சாரத்தில் முன்னணிப் பாத்திரத்தை ஆற்றினார்கள்.

அரசு-ஆதரவளிக்கும் UCC உம் அதன் பாசிச மூலங்களும்

1940 இல் நிறுவப்பட்டதிலிருந்து, இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், உக்ரேனிய கனேடிய குழு (UCC) கனேடிய அரசுக்கு நெருக்கமான அரசியல் மற்றும் அமைப்புரீதியான உறவுகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். கனேடிய போர்த் துறையின் ஆதரவுடனும் உத்தரவின் பேரிலும் UCC நிறுவப்பட்டது. இது இன்றைய UCC தனது இணைய தளத்தில் பெருமையுடன் அறிவிப்பதால் வெளிப்படுத்தப்படும் உண்மையாகும்.

வலதுசாரி உக்ரேனிய தேசியவாத அமைப்பை நிறுவுவதற்கு நிதியுதவி செய்வதில் கனேடிய அரசை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய காரணி, கனடாவின் பரந்த உக்ரேனிய புலம்பெயர்ந்தோரிடையே காணப்பிட்ட இடதுசாரி மற்றும் சோசலிச சிந்தனைகளின் ஆதிக்கம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் ஜாரிச ரஷ்ய மற்றும் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசுகளின் உக்ரேனியப் பகுதிகளிலிருந்து கனடாவிற்கு பெரிய அளவில் குடியேறியதால் உருவாகிய மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் போர்க்குணமிக்க உக்ரேனிய மொழி பேசும் தொழிலாள வர்க்கத்தின் உருவாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகுமா என ஒட்டாவா அஞ்சியது.

1929 ஆம் ஆண்டளவில் உக்ரேனிய விவசாய தொழிலாளர் அமைப்பு (Ukrainian Farmer Labour Temple) நாடு முழுவதும் 187 கிளைகள், 62 நூலகங்கள் மற்றும் நான்கு செய்தித்தாள்களைக் கொண்டிருந்தமை இந்த வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். கனடாவில் உக்ரேனிய தேசியவாதிகள்/உக்ரேனிய தேசிய கூட்டமைப்பு (UNF) என்ற தீவிர வலதுசாரி அமைப்பின் நிறுவனரான வோலாடிமியர் கோஸார் (Volodymyr Kossar), 1927 இல் வின்னிபெக்கில் உள்ள உக்ரேனிய விவசாய தொழிலாளர் அமைப்பின் கட்டிடத்திற்கு வந்தபோது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் படங்கள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்ததை 1951 இல் கோபத்துடன் நினைவு கூர்ந்தார்.

உக்ரேனிய தேசியவாதிகளின் தீவிர வலதுசாரி அமைப்பின் நிறுவனரான வோலோடிமிர் கோஸார், கனடாவிற்கு குடியேறிய உக்ரேனியர்களிடையே காணப்பட்ட சோசலிசத்திற்கான ஆதரவைக் கண்டிக்கிறார்.

இந்த இடதுசாரி மற்றும் சோசலிச அமைப்புகளின் தலைமை 1930களின் பிற்பகுதியில் ஸ்ராலினிஸ்டுகளின் மூச்சடைக்கும் கட்டுப்பாட்டின் கீழ் விழுந்தாலும், அவர்கள் கனேடிய அரசின் போர்த் திட்டங்களுக்கு இன்னும் ஒரு சிக்கலை முன்வைத்தனர். போரின் ஆரம்ப கட்டங்களில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மோதலில் தலையிடுவதை எதிர்த்து பிரச்சாரங்களை நடத்தி அது கனடாவை ஏகாதிபத்தியம் என்று அறிவித்தது. நாஜி ஜேர்மனியுடனான ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கையில் நுழைந்த மாஸ்கோவின் வெளியுறவுக் கொள்கை நலன்களால் இந்த நிலைப்பாட்டை எடுக்க ஸ்ராலினிஸ்டுகள் தூண்டப்பட்டாலும், உக்ரேனிய மற்றும் பிற புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகங்கள் மத்தியில் ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான அக்டோபர் புரட்சியினதும் மற்றும் சோசலிச இயக்கத்தின் நீண்ட வரலாறு காரணமாக போர் எதிர்ப்பு நிலைப்பாடுகள் பிரபல்யமாக இருந்தன.

கனடாவின் போர் திணைக்களம், UCC ஐ உருவாக்குவது உக்ரேனிய புலம்பெயர்ந்தோரை போருக்கு அணிதிரட்டுவதற்கான ஒரு வழிமுறையாகக் கண்டது. UCC தனது இணைய தளத்தில் குறிப்பிடுவது போல், 'இறுதி மற்றும் உறுதியான உத்வேகம் கனடாவின் தேசிய போர் சேவைகளில் (National War Services) இருந்து வந்தது. இது இளம் உக்ரேனியர்கள் இராணுவ சேவைகளில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது.'

கனேடிய அரசாங்கம் போர் நடவடிக்கைகள் சட்டத்தைப் பயன்படுத்தி, உக்ரேனிய விவசாய தொழிலாளர் அமைப்பின் சொத்துக்களை கைப்பற்றி, புதிதாக உருவாக்கப்பட்ட UCC க்கு விற்றது. அந்த நேரத்தில் UCC அனைத்து வலதுசாரி உக்ரேனிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்தது. உக்ரேனிய தேசியவாத அமைப்பு (OUN) தலைமையிலான உக்ரேனிய தேசிய கூட்டமைப்பு (UNF), உக்ரேனிய கத்தோலிக்க சகோதரத்துவம் (UCB) மற்றும் முடியாட்சி ஐக்கிய ஹெட்மேன் அமைப்பு (UHO) ஆகியவை இதில் அடங்கும். இந்த சக்திகள் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்பே பாசிசத்தின் வெளிப்படையான அபிமானிகளாக இருந்தன. 1933ல், ஜேர்மன் முதலாளித்துவத்தால் அதிகாரத்திற்கு வந்த நாஜி ஆட்சி, அனைத்து சுதந்திரமான தொழிலாள வர்க்க அமைப்புகளையும் வன்முறையுடன் ஒழிக்கத் தொடங்கியது. உக்ரேனிய தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான Nowiy Schliakh, “பழைய உலகத்தின் மீதான புதிய ஜேர்மன் உலகத்தின் வெற்றியை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்' என எழுதியது.

ஹிட்லரின் நாஜிகளைப் போலவே, UCC க்குப் பின்னால் உள்ள உக்ரேனிய தேசியவாத சக்திகளும் சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிசத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான வெறுப்புணர்வை கொடூரமான யூத-விரோதத்துடன் இணைத்தனர். 1939 ஆம் ஆண்டில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக UCC தலைவராகப் பதவி வகிக்கும் மதபோதகரான வாசில் குஷ்னிர், வின்னிபெக்கில் சமீபத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றிகளை எதிர்த்து நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பின்வருமாறு கூறினார், “நமது (உக்ரேனிய) கலாச்சாரம் 'சர்வதேச யூதர்களுக்கு' சேவை செய்வதற்கு பதிலாக தேசியமாக இருக்கட்டும். கனடாவில் உள்ள ஹெட்மேன் அமைப்பின் தலைவர் 'ஜேர்மனி தனது பதாகையில் போல்ஷிவிசத்தின் அழிவை பொறித்துள்ளதால் உக்ரேனியப் படைகளை நாஜி ஜேர்மனியுடன் இணைவதற்கு வலியுறுத்தினார்'.

மே 8, 1939 இல், உக்ரேனிய தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான Nowiy Schliakh, யாரோஸ்லாவ் ஸ்டெட்ஸ்கோ என்ற புனைப்பெயரில் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதக் கொள்கையில், “உக்ரேனிய அரசு உருவாக்கம்” என்ற பிரகடனத்தை இவர் முன்வைத்ததை வாசிக்ககூடியதாக இருந்தது. 'யூதர்களும் நாமும்' என்று தலைப்பிடப்பட்ட ஸ்டெட்ஸ்கோவின் கட்டுரை, யூத-போல்ஷிவிக் தூற்றுதலை உச்ச தொனியில் ஊக்குவித்தது. அது 'யூதவாதம் ரஷ்ய போல்ஷிவிசத்திற்கும் உக்ரேனின் மற்ற எதிரிகளுக்கும் உதவுகிறது. அது வர்த்தகத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டு உக்ரேனிய நிலங்களில் வஞ்சகம், சுரண்டல் மூலமும் மற்றும் உக்ரேனின் எதிரிகளுக்கு அடிபணிந்து வாழ்கிறது. உலக நாடுகளை மனச்சோர்வடையச் செய்து சீரழிக்கும் மோசடிக்காரர்கள், இயங்கியல்வாதிகள் மற்றும் அகங்காரவாதிகளின் மக்கள், ... தனிப்பட்ட இலாபத்திலும், கீழ்த்தரமான உள்ளுணர்வின் திருப்தியிலும் மட்டுமே ஆர்வமுள்ள மக்கள், வெற்றிபெறும் நாடுகளின் வீர கலாச்சாரத்தை சிதைக்க விரும்புகிறார்கள். ... உலகம் முழுவதும் சிதறி, சர்வதேச கம்யூனிச மார்க்சிச சோசலிச சித்தாந்தத்தை தனக்கு சொந்தமானதாக ஏற்றுக்கொண்டு, மேற்கு நாடுகளை சிதைக்க மாஸ்கோவிற்கு உதவ அதை பயன்படுத்துகிறது” என அறிவித்தது.

போர்க்குற்றவாளிகளை கனடாவிற்குள் கொண்டு வருவதற்கான UCC இன் பிரச்சாரம்

இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர், UCC இன் முதல் செயல்களில் ஒன்று, OUN மற்றும் 14வது கைக்குண்டுப் பிரிவினர் அல்லது 'கலிசியா' பிரிவின் Waffen-SS இன் 'கலிசியா' பிரிவிலிருந்து நாஜிகளின் உக்ரேனிய ஒத்துழைப்பாளர்களை கனடாவில் சேர்க்க ஒரு பரப்புரை பிரச்சாரத்தை மேற்கொள்வது ஆகும். மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளின் பனிப்போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாசிசவாதிகள் மற்றும் வலதுசாரி தேசியவாதிகளை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கு கனடாவின் ஆளும் உயரடுக்கு அதன் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கூட்டாளிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வரும் நிலைமைகளின் கீழ் இந்த பிரச்சாரம் UCC இற்கு தேசிய முக்கியத்துவத்தை பெறவைத்தது.

1947 இல் தொடங்கி, கனேடிய அரசு 165,000 இடம்பெயர்ந்தவர்களை நாட்டிற்குள் குடியேறியவர்களாக ஏற்றுக்கொண்டது. எந்தவொரு நற்பண்புடைய நோக்கங்களினாலும் தூண்டப்படுவதற்குப் பதிலாக, இந்தக் கொள்கையானது கனேடியத் தொழிற்துறைக்கான கூடுதல் தொழிலாளர் சக்தியின் அவசியமான தேவையிலிருந்து எழுந்தது. 1947 இல் நிறுவப்பட்ட RCMP அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் 'சிறப்பு குழு' கனடாவிற்கு நுழைவதற்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் அல்லது அதன் அனுதாபிகள் எவரையும் விலக்கும் பணியை மேற்கொண்டது.

1946 ஆம் ஆண்டிலேயே OUN மற்றும் பிற தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளுடன் உறவுகளை ஏற்படுத்திய பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகளில் புதிய குடியேறியவர்கள் பற்றிய தகவலுக்காக கனடா பெரிதும் நம்பியிருந்தது. அது புதிதாக நிறுவப்பட்ட CIA இன் சோவியத் ஒன்றியத்தை சீர்குலைக்கும் மற்றும் உளவு பார்க்கும் முயற்சிகளில் மதிப்புமிக்க கூட்டாளிகளாக இருக்க முடியும் என்று முடிவு செய்தது. உண்மையில், CIA இன் சொந்த வகைப்படுத்தப்பட்ட வரலாற்றின் படி, உக்ரேனிய பாசிசவாதிகளுடன் CIA இன் உருவாகும் உறவு விரைவில் அதன் முழு பனிப்போர் அமைப்பான சீர்குலைக்கும் மற்றும் 'ஆட்சி மாற்றத்திற்கான' மாதிரியாக மாறியது. அவர்களது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சகாக்களைப் போலவே, கனேடிய அதிகாரிகளும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளின் அரசியல் பின்னணி மற்றும் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்திருந்தனர், ஆனால் பனிப்போர் சூடுபிடித்ததால் அவர்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

Waffen SS இன் கலீசியா பிரிவுக்கான ஆட்சேர்ப்பு சுவரொட்டி. அதில், “‘வாழ விரும்புகிறவன் போராட வேண்டும். இந்த நிரந்தரமான போராட்ட உலகில் எதிர்க்க விரும்பாதவர் வாழ்வதற்கான உரிமைக்கு தகுதியற்றவர்.’ அடால்ப் ஹிட்லர். கலீசியSS போருக்குப் செல்கிறது!'.

மே 1946 மற்றும் ஜூன் 1947 இல் OUN மற்றும் கலீசிய பிரிவின் முன்னாள் படையினரை கனடாவிற்கு அழைத்து வருமாறு UCC கனடாவின் செனட்டில் மனு செய்தது. உக்ரேனிய விவசாய தொழிலாளர் கோவில் அமைப்பின் (Ukrainian Farmer Labour Temple Association) வாரிசு அமைப்பான ஐக்கியப்பட்ட கனேடிய உக்ரேனிய சங்கம் (AUUC), இடம்பெயர்ந்த நபர் முகாம்களில் பல போர்க்குற்றவாளிகள் இருப்பதாக குடிவரவு மற்றும் தொழிலாளர் தொடர்பான செனட் குழுவிற்கு வெளிப்படையான எச்சரிக்கைகளை விடுத்தது. இந்த எச்சரிக்கைகள், Waffen-SS இல் கலீசியா பிரிவின் அங்கத்துவம் பற்றிய விஷேடமான குறிப்பை உள்ளடக்கியிருந்தது. ஆனால் இவை வேண்டுமென்றே கவனத்திற்கெடுக்கப்படவில்லை.

லூயிஸ் செயின்ட் லோரன்ட் இன் வலதுசாரி பெருவணிக லிபரல் அரசாங்கம், உக்ரேனிய ஒத்துழைப்பாளர்களை மட்டுமல்லாது பாசிச ஒத்துழைப்பாளர்களை ஏற்றுக்கொள்ளும் போதும் கண்டும்காணமலும் இருக்கத் தயாராக இருந்தது. ஸ்லோவாக்கிய, ரூமேனிய, ஹங்கேரிய, குரோசிய மற்றும் பால்டிக் மாநில பாசிசவாதிகள் மற்றும் நாஜி ஒத்துழைப்பாளர்கள் அனைவரும் இந்த காலகட்டத்தில் கனடாவினுள் அனுமதிக்கப்பட்டனர்.

1948 அளவில், கனேடிய அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் இருந்து உக்ரேனிய குடியேறியவர்களை பெருமளவில் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் பெரும்பாலோர் OUN மற்றும் OUN (B) இன் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் மற்றும் அவர்களது குடும்பங்களின் பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களாவர். அவர்களில் நாஜி சார்பு உக்ரேனிய நாளிதளான Krakivski Visti இன்ஆசிரியரும், கனடாவின் தற்போதைய லிபரல் அரசாங்கத்தில் துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃபிரீலாண்டின் வருங்கால அன்பான தாத்தாவுமான மைக்கைலோ சோமியாக் உம் இருந்தார்.

1950 களில், OUN (B) கனடா முழுவதும் 30 கிளைகளை நிறுவியது. அவர்கள் உக்ரேனின் விடுதலைக்கான கனேடிய கழகத்தையும் அமைத்தனர். இது 1959 இன் இறுதிவரை ஒரு தசாப்தத்திற்கு, ஸ்டீபன் பண்டேராவிற்கான கனேடிய கழகத்தின் வெட்கமற்ற ஆதரவின் காரணமாக UCC இலிருந்து பிரிந்து இருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு வன்முறை பயங்கரவாத பிரச்சாரத்தை ஒழுங்கமைக்க உதவுகையில் OUN (B) தனது பாசிசத்தை வெளிப்படையாக அறிவித்தது.

ஆரம்பத்தில், கலீசியா பிரிவின் முன்னாள் படையினர் கனடாவில் இருந்து தடை செய்யப்பட்டனர். நூரெம்பேர்க் விசாரணையில் Waffen-SS ஒரு குற்றமிக்க அமைப்பாக அறிவிக்கப்பட்டது. அதாவது அனைத்து கலீசியா பிரிவு உறுப்பினர்களும் போர்க் குற்றவாளிகள் என அர்த்தப்படுகின்றது. இருப்பினும், UCC இன் பரப்புரை முயற்சிகள் மற்றும் ஒட்டாவா மற்றும் வாஷிங்டனின் பனிப்போர் நிர்ப்பந்தங்கள் காரணமாக, மிகவும் வெளிப்படையான நாஜி ஒத்துழைப்பாளர்களை ஏற்றுக்கொள்வதில் இருந்த கனேடிய அரசின் ஆரம்பகால தயக்கம் விரைவாக கடக்கப்பட்டது.

இறுதியில், 2,000 கலீசியா பிரிவு முன்னாள் படையினர் கனடாவில் மீள்குடியேற்றப்பட்டனர். அங்கு அவர்கள் UCC மற்றும் கனேடிய அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் கூட்டு முயற்சிகள் மூலம் அடுத்தடுத்த தசாப்தங்களில் அவர்கள் செய்த கொடூரமான குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்காமல் பாதுகாக்கப்பட்டார்கள்.

கனேடிய ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கையில் UCC இன் முக்கிய பங்கு

கனடாவிற்கு கொண்டு வரப்பட்ட UCC மற்றும் பல நாஜி ஒத்துழைப்பாளர்கள் ஒட்டாவாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் முக்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர்.

1952 ஆம் ஆண்டில், கனேடிய அரசாங்கம் UCC உடன் இணைந்து, சோவியத் எதிர்ப்பு பிரச்சாரத்தை சோவியத் ஒன்றியத்திற்குள் ஒலிபரப்புவதை நோக்கமாகக் கொண்ட உக்ரேனிய மொழி வானொலி ஒலிபரப்பை ஐரோப்பாவில் நிறுவியது. UCC இன் இணைய தளம் விளக்குவது போல், “சோவியத் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராட, Voice of America மற்றும் Radio Canada வின் சர்வதேச உக்ரேனிய மொழிச் சேவை, தகவல் தடையை உடைத்து சோவியத் ஒன்றியத்திற்குள் ஒளிபரப்பியது. இதை அடைவதில் UCC மற்றும் அமெரிக்காவின் உக்ரேனியக் குழுவின் இந்த கடின உழைப்பு, மிகக்கூடிய பங்கு வகித்தது'.

பல தசாப்தங்களுக்கு பின்னர், இன்கோ (Inco) நிக்கல் சுரங்க நிறுவனம் உக்ரேனிய மற்றும் பிற நாஜி ஒத்துழைப்பாளர்களையும் பாசிசவாதிகளையும் போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தியது என்ற கதையை பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்தனர்.

உள்நாட்டில், நிக்கல் சுரங்க நிறுவனமான இன்கோ, RCMP பாதுகாப்பு சேவையின் கண்காணிப்பின் கீழ், கனடாவின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துள்ள போர்க்குணமிக்க Mine Mill தொழிற்சங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய உக்ரேனிய மற்றும் ஹங்கேரிய பாசிசவாதிகளை வேலைக்கு அமர்த்தியது. 1958 கசப்பான வேலைநிறுத்தத்தின் போது பாசிசவாதிகள் தொழிற்சங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அதில் நிறுவனம் அதன் சலுகைகளுக்கான கோரிக்கைகளை திணிப்பதில் பெருமளவில் வெற்றி பெற்றது. மேலும் பாசிசவாதிகள் Mine Mill இனை ஏகாதிபத்திய சார்பும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்ட ஐக்கிய எஃகு தொழிலாளர்கள் சங்கத்தால் (USWA) அகற்றிய வெற்றிகரமான அரசு-கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவு பிரச்சாரத்தில் குண்டர்களாக பணியாற்றினர்.

'சர்வாதிகார' சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றிற்காக போராடுகின்றன என்ற மாயையைத் தக்கவைக்க, கனேடிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் போர்க்குற்றங்களில் உக்ரேனிய தேசியவாதிகளின் உடந்தையை மறைக்கும் நோக்கில் போலி-கல்வி மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு விரிவான ஆதரவைக் கொடுத்தன. இந்த நோக்கத்திற்காக கனடாவிலும் அமெரிக்காவிலும் கருத்தியல் பிரச்சாரத்தின் முழுத்துறையும் நிறுவப்பட்டது.

அமெரிக்காவில், பிறர் துன்பத்தில் இன்பம் காணுபவரும் மற்றும் முன்னாள் OUN(B) இன் பாதுகாப்புத் தலைவரான மைக்கோலா லெபெட், CIA ஆல் Prolog Research Corporation இனை அமைப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த பதிப்பகம் சோவியத் ஒன்றியத்தில் விநியோகிக்க உக்ரேனிய மொழி CIA பிரச்சாரங்களை உருவாக்கியது. ஆனால் உக்ரேனிய கலாச்சாரம் மற்றும் உக்ரேனிய வரலாற்றின் கவனமாக திருத்தப்பட்ட பதிப்பை கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் சமூகத்திற்கு மேம்படுத்தியது.

Waffen SS இன் கலிசியா முன்னாள் படையினர் ஒரு குழுவை உருவாக்கினர். அதன் பெயர் அவர்களின் நாஜி கடந்த காலத்தை மறைக்க முயற்சிக்கும் வகையில், 'உக்ரேனிய தேசிய இராணுவத்தின் முதல் பிரிவின் முன்னாள் சிப்பாய்களின் சகோதரத்துவம்' எனப் பெயரிபட்டது. இந்த புதிய பெயரான 'உக்ரேனிய தேசிய இராணுவத்தின் முதல் பிரிவு' ஏப்ரல் 1945 இல் நாஜி சரணடைவுக்கு சில நாட்களுக்கு முன்பு தான், நேச நாட்டு துருப்புக்களிடம் சரணடைவதற்கு முன்னர் Waffen SS படையினரை உக்ரேனிய 'சுதந்திரப் போராளிகள்' என்று காட்டும் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அவர்களின் தலைமையகம் 1960 முதல் டொரன்டோவில் உள்ளது. மேலும் அவர்களின் வெளியீடான Visti Kombatanta (முன்னாள் படைவீரர் செய்திகள்) தங்களுக்கும் உக்ரேனிய புலம்பெயர்ந்தவர்களுக்கும் அவர்களின் போர்க்கால வரலாற்றை பொய்மைப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டது.

1950கள் மற்றும் 60களில், கனேடிய அரசின் அனுசரணையின் காரணமாக UCC அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த முடிந்தது. பிரதம மந்திரி செயின்ட் லோரன்ட் மற்றும் அவரது வாரிசான டோரி ஜோன் டிபென்பேக்கர் ஆகியோர் UCC காங்கிரஸ் மற்றும் செயல்பாடுகளின் போது உரையாற்றினர் .'இது உங்கள் பெருமைக்குரியது' என்று UCC விழாவில் பிரதம மந்திரி டிபென்பேக்கர் கூறினார். 'உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொண்ட பணிகளில் ஒன்று. சர்வதேச கம்யூனிசத்தின் அசுர அச்சுறுத்தலால் சமாதானம், மனநிறைவு அல்லது தவறான பாதுகாப்பு போன்ற ஆபத்துகள் குறித்து நாடுகளை எச்சரிக்க அபாய ஒலிகளை ஒலிக்க வைப்பதாகும்'.

உக்ரேனிய ஆர்வலர்கள் மேற்கூறிய யாரோஸ்லாவ் ஸ்டெட்ஸ்கோவின் தலைமையிலான 'போல்ஷிவிக் எதிர்ப்பு நாடுகளின் கூட்டுக்கு' (ABBN) தலைமை தாங்கினர். இது உண்மையில் 'முன்னாள் நாஜி போர் குற்றவாளிகளின் உலகின் மிகப்பெரிய அமைப்பாகும்' என்று அதன் CIA ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். டிபென்பேக்கர் மற்றும் தாராளவாத லெஸ்டர் பியர்சன் இருவரும் கனடாவின் அரசாங்கத்தின் தலைவராக இருந்தபோது ABBN உறுப்பினர்களை சந்தித்தனர். அவர்களது கம்யூனிச எதிர்ப்பு மேற்கோள்கள் ABBN வெளியீடுகளில் வெளிவந்தன. ஸ்டெட்ஸ்கோ 1967 இல் கனடாவுக்குச் சென்றபோது, அவர் வின்னிபெக்கின் கெளரவ குடிமகனாக்கப்பட்டார்.

ஸ்ராலினிச ஆதிக்கம் செலுத்திய AUUC இன் முந்தைய தலைமுறை உக்ரேனிய குடியேறியவர்களின் முன்னைய இடதுசாரி தலைமைக்கு எதிராக UCC உறுதியான கருத்தியல் போராட்டத்தையும் நடத்தியது. தாராஸ் ஷெவ்சென்கோ மற்றும் லெஸ்யா உக்ரேன்கா போன்ற உக்ரேனிய கலாச்சார பிரமுகர்களின் நினைவுச்சின்னம் தொடர்பான போராட்டங்களில் இவை வெளிப்பட்டன, மேலும் UPA இன் இராணுவத் தளபதி ரோமன் ஷுகேவிச் போன்ற OUN/UPA குற்றவாளிக்கு 1973 இல் UCC எட்மொன்டனில் ஒரு சிலையை நிறுவியது.

வரலாற்றாசிரியர் கஸ்ஸாண்ட்ரா லூசியுக்கின் கூற்றுப்படி, 'இந்த அமைப்பு முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கத்திற்கு வெற்றிகரமாக ஆதரவாக இருந்தது. கனடாவின் தேசிய விவரிப்பில் உக்ரேனியர்களை செருகியது, வரலாறுகளில் என்ன கூறப்படவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தி ஊக்குவித்து மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கனடாவின் வெளியுறவுக் கொள்கை மீதும் ஆதிக்கம் செலுத்தியது.

UCC ஆனது யதார்த்தத்தில் உக்ரேனியர்களை ஒரு இன அடித்தளத்தில் வாக்களிக்கும் பிரிவாக இருப்பதை உறுதிப்படுத்தியது. அரசாங்கத்தையும் நாட்டையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் இடைத்தொடர்புகளுக்கும் கட்டாயப்படுத்தியது. இதன் விளைவாக, UCC இன் உறுப்பினர்கள் சமூக-அரசியல் கட்டுப்பாட்டின் கூலிப்படையினர் என்பதிலிருந்து ஒரு அரசியல் சக்தியாக மாற்றப்பட்டனர்”.

1976 ஆம் ஆண்டில், முன்னாள் Waffen-SS அதிகாரி பீட்டர் சவ்ரின் மற்றும் பிறரால் உக்ரேனிய ஆய்வுகளுக்கான கனேடிய நிறுவனம் அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. சவ்ரின் அல்பேர்ட்டா பழமைவாத அரசியலில் ஆழ்ந்த செல்வாக்கு பெற்றவரும் மாகாண முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி அமைப்பின் தலைவராகவும், 1980 களில் அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்தார். சவ்ரின் Waffen-SS உடனான தனது தொடர்பின் பெருமையை மறைக்கவில்லை.

உக்ரேனிய கலைக்களஞ்சியத் திட்டத்தை உக்ரேனிய ஆய்வுகளுக்கான கனேடிய அமைப்பிற்கு வழங்குவதைக் குறிக்கும் விழா. முன் வரிசை மத்தியில் வோலோடிமியர் குபியோவிச்; பின் வரிசையில் இடதுபுறம், பீட்டர் சவ்ரின் (Photo Credit: defendinghistory.com)

அதே ஆண்டு, வோலோடிமிர் குபியோவிச், நாஜி ஒத்துழைப்பு உக்ரேனிய மத்திய குழுவின் (UTsK) முன்னாள் தலைவரும், Krakivski Visti இன் வெளியீட்டாளரும், போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தனது உக்ரேனிய Encyclopedia திட்டத்தை, அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தின் உக்ரேனிய ஆய்வுகளுக்கான கனேடிய அமைப்பிடமும் (CIUS) மற்றும் சவ்ரின் கைகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்வதற்காக எட்மொன்டனுக்குச் சென்றார். கையொப்பமிடும் விழாவில் எடுக்கப்பட்ட்ட புகைப்படம், இது போரின் போது நாஜி பேர்லினில் UTsK இன் பிரதிநிதியான அன்டானாஸ் பிகோல் (Antanas Figol) மற்றும் முன்னாள் Krakivski Visti ஆசிரியரான இவான் லிசியாக்-ரூட்நித்ஸ்கி (Ivan Lysiak-Rudnytksy) உட்பட UTsK இன் மற்ற முன்னணி உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதைக் குறிக்கிறது. உக்ரேனிய Encyclopedia, உக்ரேனிய தீவிர வலதுசாரி தேசியவாதத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு கற்பனையான வரலாற்றை உருவாக்கி, அது நாஜிகளுடனான அதன் ஒத்துழைப்பையும் போர்க்குற்றங்களில் பங்கேற்பதையும் மறைத்தது. எடுத்துக்காட்டாக, கலிசியா படைப்பிரிவு பற்றி Encyclopedia இல் உள்ள பகுதி, அது சம்பந்தப்பட்ட பல போர்க்குற்றங்களைப் பற்றியோ அல்லது Waffen-SS ஒரு குற்றவியல் அமைப்பாக நூரெம்பேர்க் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டதையோ குறிப்பிடவில்லை.

கிறிஸ்டியா ஃப்ரீலாண்டின் தாத்தா மைக்கைலோ சோமியாக் 1945 க்குப் பின்னர் குபியோவிச்சுடன் வழக்கமான தொடர்பில் இருந்தார். மேலும் சோமியாக்கின் மரணம் வரை இருவரும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டனர். 1978-79 இல், அவர் குபியோவிச்சுடன் இணைந்து பிரான்சில் Encyclopedia இல் பணியாற்றினார். 1986 இல், இளம் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் Encyclopedia விற்கான உள்ளீடுகளை வடிவமைக்கும் கோடைக்கால மாணவியாக பணியாற்றினார். அவரது பணி மற்றொரு தேசியவாத வரலாற்றாசிரியரான போஹ்டன் க்ராவ்சுக்கின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது. க்ராவ்சுக் பின்னர் மத்திய ராடா (உக்ரேனிய பாராளுமன்றம்) இற்கு ஆலோசனை வழங்கினார்.

CIUS இன் 'உதவி மானியத்தின்' தரம் பற்றிக் கருத்துரைத்து, வரலாற்றாசிரியர் Grzegorz Rossliinski-Liebe பின்வருமாறு எழுதினார்:

'ஆரம்பத்தில் இருந்தே CIUS சமகால உக்ரேனிய வரலாற்றை பற்றிய ஒரு விமர்சனரீதியாகவும் தொழில்ரீதியாகவும் ஒத்துழைக்க மறுத்தது. இந்தக் கட்டுரையை (2013) எழுதும் போது, இரண்டாம் உலகப் போரின் போது உக்ரேனிய வரலாற்றை ஆராய்வதற்கும், நாஜிகள், உக்ரேனிய பாசிசம் ஆகியவற்றுடன் OUN மற்றும் UPA ஆகியவற்றின் ஒத்துழைப்பை சுற்றியுள்ள கேள்விகளை ஆராயவும், யூதப்படுகொலையில் உக்ரேனியர்கள் ஆற்றிய பங்கை ஆராயவும் அல்லது அதுதொடர்பாக வேறெந்த விடயத்தையும் பற்றி CIUS எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை.

ஆனால் CIUS முதன்மையாக ஒரு கல்வி நிறுவனமாக இருந்தது. இன்று அவ்வாறு இல்லை. மாறாக, இது கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியால் ஆதரிக்கப்படும் கருத்தியல் பிரச்சாரத்திற்கான ஒரு மன்றமாகும். CIUS ஆனது தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளை கௌரவிப்பதற்கும் நினைவுகூருவதற்குமான அரச ஆதரவு முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்தது. இதில் நாடு முழுவதும் பண்டேரா, OUN மற்றும் Waffen SS இன் கலீசியா பிரிவுக்கு பல சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நிறுவுவதும் அடங்கும்.

உக்ரேனிய கனேடிய மாணவர் ஒன்றியத்தின் செய்தித்தாள் 'மாணவர்', ('Student') மல்ரோனி அரசாங்கத்தின் பன்முக கலாச்சாரத்திற்கான ஆதரவைப் பாராட்டுகிறது.

உக்ரேனிய தேசியவாதிகள் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கும் கட்டுக்கதைகளை உருவாக்குவதற்கும் கனேடிய அரசாங்கத்தின் ஆதரவு அதன் உத்தியோகபூர்வ 'பன்முக கலாச்சார' கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். இது 1960 களில் இருந்து வேகமாக வளர்ந்து. மேலும் இது 1971 இல் பியர் எலியட் ட்ரூடோவால் UCC! முன்னே ஒரு உரையில் அறிவிக்கப்பட்டது. கடந்த ஐந்து தசாப்தங்களாக 'இடது' மற்றும் 'முற்போக்கு' அமைப்புகளால் இடைவிடாமல் ஊக்குவிக்கப்பட்ட 'பன்முக கலாச்சாரம்' உண்மையில் அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானது. கனடா பல்வேறு தனித்துவமான தேசிய, இன மற்றும் மத 'சமூகங்களை' உள்ளடக்கியது என்ற கருத்தை இது ஊக்குவிக்கிறது. அதன் உறுப்பினர்கள் தங்கள் 'சொந்த' அமைப்புகளால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்பட முடியும். உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் விஷயத்தில், அந்த செயல்பாடு UCC ஆல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த பிற சிறுபான்மையினரை பொறுத்தமட்டிலும் இதேபோன்ற கொள்கையே பின்பற்றப்பட்டது. அங்கு இருந்து அதிக எண்ணிக்கையிலான நாஜி ஒத்துழைப்பாளர்கள் போருக்குப் பிந்தைய காலத்தில் கனடாவிற்கு வரவேற்கப்பட்டனர்.

Deschenes ஆணைக்குழு: கனேடிய அரசு உக்ரேனிய தேசியவாத போர்க்குற்றங்களை மறைக்கிறது

பெப்ரவரி 1985 இல், பிரையன் மல்ரோனியின் கன்சர்வேடிவ் அரசாங்கம் பொது அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக கனடாவில் நாஜி போர் குற்றவாளிகளை விசாரிக்க ஒரு ஆணையத்தை நிறுவியது. ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுப்பதில் Simon Wiesenthal நிலையம் முக்கிய பங்கு வகித்தது. இது கனடாவில் ஆயிரக்கணக்கான போர்க்குற்றவாளிகள் இருப்பதை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வெளிப்படுத்தியது. முன்னாள் கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி ஜூல்ஸ் டெஸ்செனஸின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆணையம் டிசம்பர் 1986 வரை செயல்பட்டது.

ஆணையத்தின் 35 ஆண்டுகால அறிக்கை உக்ரேனிய தீவிர வலதுசாரி தேசியவாதிகளுக்கு ஆதரவுகொடுப்போரால் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகிறது. ஏனென்றால், ஆணைக்குழுவின் செயல்முறை மற்றும் அறிக்கையானது, கனடாவில் போர்க்குற்றவாளிகள் குறைவாக இருந்தால், மற்றும் கனேடிய அரசு பாசிச தீவிர வலதுசாரிகளுடன் எந்த உறவுமுறையிலும் முற்றிலும் குற்றமற்றது என்ற முடிவுக்கு வர ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஆளும்தட்டினரது மூடிமறைப்புக்கு ஒத்திருந்தது.

ஆணைக்குழுவின் கட்டமைப்பின் பலவீனமானது இந்த முடிவுகளை உறுதி செய்தன:

  • ஆதாரங்களை சேகரிக்க முதலில் 11 மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது.
  • முந்தைய கனேடிய அரசாங்கங்களின் கடந்தகால முடிவுகளை விசாரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
  • போர்க்குற்றவாளிகளை அப்போது இருந்த கனேடிய சட்டங்களின் கீழ் மட்டுமே வழக்குத் தொடர அடிப்படை உள்ளதா என்பதைத் தீர்மானிக்க அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
  • சந்தேகிக்கப்படும் போர்க் குற்றவாளிகளின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அமைப்புகளான 'கலீசியா பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடாவில் உக்ரேனிய தேசிய இராணுவத்தின் 1வது பிரிவின் படையினரின் சகோதரத்துவம்' மற்றும் UCC க்கு ஆணையம் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வழங்கியது. இந்த உத்தியோகபூர்வ அந்தஸ்தானது, இரு நிறுவனங்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்ததுடன் மற்றும் சாட்சியமளிப்பது மற்றும் ஆதாரங்களை விலக்குவதற்கு ஆக்ரோஷமாக அழுத்தம் கொடுக்கிறது.

சோவியத் மற்றும் போலந்து மக்கள் குடியரசின் சட்ட செயல்முறைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக, போர்க்குற்றங்கள் அதிகம் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு நாடுகளான சோவியத் ஒன்றியம் மற்றும் போலந்தில் இருந்து எந்த ஆதாரத்தையும் தடுக்க UCC அயராது பிரச்சாரம் செய்தது. UCC மற்றும் அது பிரச்சாரம் செய்த தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளும் கனடாவில் நாஜி போர்க்குற்றவாளிகள் அம்பலப்படுத்தப்படுவதால் கூடுதலாக இழப்பை சந்திப்பவர்களாக இருப்பர். கலிசியா பிரிவின் படையினருக்கு கனடாவில் அடைக்கலம் கொடுக்கப்பட வேண்டும் என்று UCC வற்புறுத்தியது. மேலும், OUN-UPA இழைத்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சோவியத் சான்றுகள், அவர்கள் சோவியத் மற்றும் நாஜி சர்வாதிகாரத்தை எப்படி வீரத்துடன் எதிர்த்துப் போராடினார்கள் என்பது பற்றி பல தசாப்தங்களாக அவர்கள் கட்டியெழுப்பிய பொய்களின் கட்டிடத்தை தகர்த்திருக்கும். இது அவரது விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்த டெஸ்செனஸை நிர்ப்பந்தித்திருக்கலாம். அது போலவே, கனடாவில் அதன் முன்னாள் உறுப்பினர்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்த Waffen-SS இன் நடவடிக்கையில் மட்டுமே விசாரணை கவனம் செலுத்தியது. ஆணைக்குழு OUN/UPA ஐ ஒருபோதும் விசாரிக்கவில்லை.

உக்ரேனிய கனேடிய மாணவர் ஒன்றியத்தின் செய்தித்தாளான 'மாணவர்', நாஜி போர்க் குற்றவாளிகளுக்கு கனடாவில் பாதுகாப்பான புகலிடம் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சோவியத் தூண்டுதலால் செய்யப்பட்டவை என்று கூறி டெஸ்சென்ஸ் ஆணைக்குழுவிற்கு எதிராக பிரச்சாரங்கள் செய்தது.

ஆணைக்குழுவின் வரையறுக்கப்பட்ட நிதியுதவி மற்றும் உக்ரேனிய தேசியவாத குழுக்களால் அதன் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தப்பட்ட போதிலும், UCC ஆத்திரமுற்றிருந்தது. உக்ரேனியர்கள் நாஜிக்களுடன் ஒத்துழைத்ததாகக் கூறப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து கூற்றுக்களையும் இழிவுபடுத்தும் முயற்சியில் அது எந்தவொரு தயக்கத்தையும் காட்டவில்லை. அரசாங்க அதிகாரிகளை வற்புறுத்துவதற்கும் டெஸ்செனஸ் ஆணைக்குழு ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கும் இது 'பொது சுதந்திரத்திற்கான ஆணைக்குழு' (CLC) என்பதை நிறுவியது.

அல்பேர்ட்டா பல்கலைக்கழகத்தின் கனேடிய உக்ரேனிய ஆய்வுகள் நிறுவனம் மூடிமறைப்புகளுக்கு உதவுவதற்காக 'கல்வி மாநாடுகளை' ஒழுங்கமைக்க கூடுதல் நேரம் உழைத்தது.

ஜோன் சோபின்கா அவர்களின் சட்ட ஆலோசகராக செயல்பட்டதால், UCC/CLC இன் தாமதப்படுத்தும் உத்திகள் அனைத்து சோவியத் ஆதாரங்களையும் அடக்குவதில் வெற்றி பெற்றன. சோபிங்காவின் அழுத்தத்தின் கீழ், ஆணையம் சோவியத் சாட்சியங்களை ஒப்புக்கொள்வதற்கு கடுமையான விதிகளை அமைத்து, இவை நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்த்தது. 1986 கோடையில் சோவியத் அதிகாரிகள் கனேடிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டபோது, அந்த ஆதாரங்களை எடுக்க திடீரென்று 'நேரமில்லை' என்று டெஸ்செனஸ் ஒப்புக்கொண்டு மற்றும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர சென்றார். சிறிது காலத்திற்குப் பின்னர், சோபிங்கா கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். அவர் முன்பு ஒரு நாள் கூட இந்த பதவியில் பணியாற்றவில்லை.

லுபோமியர் லூசியுக் (அவரது தாய்வழி தாத்தா UPA இல் இருந்தார்) டெஸ்சென்ஸ் ஆணைக்குழுவின் இருப்புக்கு எதிராக UCC இன் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதை 'சோவியத் தூற்றும் பிரச்சாரம்' என்று அழைத்தார். வலதுசாரி பதில்தாக்குதல் யூத-விரோதத்தின் வெளிப்படையான வெடிப்பையும் உள்ளடக்கியிருந்தது. உக்ரேனிய கனேடிய மாணவர்களின் ஒன்றியமான SUSK இன் அமைப்பின் 'மாணவர்' செய்தித்தாள், யூத-விரோத சித்திரங்கள் மற்றும் தலையங்கத்தை வெளியிட்டது. அதில், “உக்ரேனிய சமூகத்தின் சார்பில் மிகக் குறைந்தவிலான உக்ரேனியர்களே இந்த விஷயத்தில் நம்பகத்தன்மையுடன் பேசக்கூடிய நிலைமையில் உள்ளனர். பெரும்பாலும் தங்கள் தொழில் வாழ்க்கை மீதான எதிர்விளைவுகளுக்கு பயந்து அமைதியாகிவிட்டனர். தொழில் செய்யும் அனைத்துப் பகுதிகளிலும் வல்லமைமிக்க யூதர்களின் இருப்பை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் கையைக் கடிப்பதைத் தவிர்க்கிறார்கள்” என குறிப்பிட்டது.

உக்ரேனிய தீவிர வலதுசாரி தேசியவாதிகள் டெஸ்செனஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை தாங்களாகவே எழுதியிருந்தால் கூட அதிலிருந்து அதிகம் பெற்றிருக்க முடியாது.

அறிக்கையின் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் அவர்களுக்கு இரண்டு 'சிறையிலிருந்து விடுதலையளிக்கும்' அட்டைகளைக் கொடுத்தன. இவை இரண்டும் ஆணைக்குழுவின் குறிப்பு விதிமுறைகளில் முன்னறிவிக்கப்பட்டவை:

முதலாவது, Waffen SS Galicia பிரிவின் உறுப்பினர்கள் “ஒரு குழுவாக குற்றஞ்சாட்டப்படக்கூடாது” என்ற கண்டுபிடிப்பு ஒரு சட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இலண்டன் உடன்படிக்கையிலோ அல்லது 14வது கலீசியா பிரிவு உட்பட ஒட்டுமொத்த SS ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவிக்கப்பட்ட மற்றும் அதில் உறுப்பினராக இருப்பது ஒரு போர்க்குற்றமாக அறிவிக்கப்பட்ட நூரெம்பேர்க்கில் உள்ள சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்தின் சாசனத்திலோ கனடா கையொப்பமிடவில்லை. டெஸ்செனஸின் கூற்றுப்படி, 'எந்த கனேடிய நீதிமன்றமும், இந்த குறிப்பிட்டவகையிலான குற்றத்திற்கான அதிகார வரம்பை பயன்படுத்துவதற்கு உரிமை கோர முடியாது”.

கனடாவில் வசிக்கும் கலீசியா பிரிவின் அனைத்து உறுப்பினர்களின் 'குற்றமற்றவர்கள்' என்று டெஸ்செனஸ் ஒரு தனிப்பட்ட அடிப்படையில் அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் SS இல் பணியாற்றியவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கான கனேடிய அரசின் முன்னைய முடிவு, டெஸ்சென்ஸ் ஆணைக்குழுவின் விசாரிப்பதற்கும் மற்றும் விசாரணைக்கு தடைசெய்யப்பட்ட ஒரு கொள்கை மூலம் அவர்களை விலக்கிவிடுவதற்காக சுற்றிவளைத்த விவாதத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது.

உக்ரேனிய தீவிர வலதுசாரி தேசியவாதிகள் இந்த மூடிமறைப்பை அன்றிலிருந்து வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழிப்புப் போர் மற்றும் யூதப்படுகொலையின்போது நாஜிக்களுடன் இணைந்து பணியாற்றிய மற்றும் கூட்டுச் சேர்ந்த அரசியல் சக்திகளுடனான கனேடிய அரசின் கூட்டணி, இதைத்தவிர வேறு எந்த விளைவுகளையும் பொறுத்துக்கொள்ள முடியாது மற்றும் பொறுத்துக்கொள்ளாது. மேலும், டெஸ்செனஸ் ஆணைக்குழுவின் மீதான ஆரவாரம் வெளிப்பட்ட நிலையில், கனடாவின் அரசியல் ஸ்தாபனம் மொஸ்கோவில் ஸ்ராலினிச ஆட்சியின் நெருக்கடி ஆழமடைந்த நிலையில், அதன் தீவிர வலதுசாரி உக்ரேனிய நட்பு பிரிவினரை மீண்டும் தங்கள் தாயகத்திற்கு அனுப்ப தயாராகி வந்தது.

முதலாளித்துவ மறுசீரமைப்பை தொடர்ந்து உக்ரேனிய தீவிர வலதுசாரி புலம்பெயர்ந்தோரின் பங்கு

கோர்பச்சேவ் ஆட்சி 1980களின் நடுப்பகுதியில் கிளாஸ்னோஸ்ட் மற்றும் பெரெஸ்த்ரோய்கா ஆகியவற்றை மேற்கொண்டபோது, ஏகாதிபத்திய சக்திகள் சோவியத் ஒன்றியத்தை உடைப்பதை நோக்கமாகக் கொண்ட தேசியவாத சக்திகளை ஊக்குவிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தத் தொடங்கின. உக்ரேனை பொறுத்தவரை, கனேடிய ஏகாதிபத்தியம் உக்ரேனிய 'சுதந்திரத்திற்கு' அழுத்தம் கொடுப்பதற்கும் பின்னர் செயல்படுத்துவதற்கும் உதவுவதற்காக உளவாளிகள் மற்றும் சோவியத் எதிர்ப்புக் கூறுகளின் வலையமைப்பை அனுப்புவதற்காக நாஜி ஒத்துழைப்பாளர்களுடன் கவனமாகப் தயாரிக்கப்பட்ட பல தசாப்த கால உறவுகளைப் பயன்படுத்திக் கொண்டது.

'மாணவர்' இதழானது சோவியத் ஒன்றியத்தில் பயணிக்கும் மாணவர்களிடம் 'மாணவர்' க்கு உளவாளியாக இருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தது.

இந்த பிரச்சாரத்தில் UCC முக்கிய பங்கு வகித்தது. மாணவர் செய்தித்தாள், சோவியத் ஒன்றியத்திற்கு செல்லும் உக்ரேனிய மாணவர்களை செயல்படுமாறு கேட்டுக்கொண்டது, அவர்கள் அப்பட்டமாக கூறியது போல், மாணவருக்கு 'ஒரு உளவாளியாக'. இந்த அழைப்பிற்கு பதிலளித்த மாணவர்களில் கிறிஸ்டியா ஃபிரீலாண்டும் ஒருவராவார். பிரீலாண்டின் குடும்பம் உக்ரேனிய தேசியவாதத்தில் மூழ்கியிருந்ததால், பண்டேராவும் UPAவும் 'தேசிய விடுதலைக்கு' போராடுபவர்கள் என்ற கட்டுக்கதையை உற்சாகமாக ஊக்குவித்த மாணவர் உடன் நீண்ட தொடர்பைக் கொண்டிருந்ததால் இது தற்செயல் நிகழ்வு அல்ல. அவரது அத்தை, கிறிஸ்டியா சோமியாக் 1969 மற்றும் 1970 க்கு இடையில் மாணவரின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஃபிரீலாண்ட், ஹார்வர்டில் ரஷ்ய இலக்கியம் மற்றும் வரலாற்றில் பட்டம் பெற்றார். மேலும் 1988-89 இல் கியேவ் பல்கலைக்கழகத்தில் உக்ரேனிய மொழியைப் படிக்க உதவித்தொகை பெற்றார். ஏற்கனவே மொழியில் சரளமாக இருந்ததால், உக்ரேனில் படிப்பதற்கான அவரது உண்மையான ஆர்வம் சோவியத் அரசியலில் உக்ரேனிய தேசிய ஆர்வலராக தலையிடுவதாகும்.

1988 இலையுதிர்காலத்தில், 'உக்ரேனின் மக்கள் இயக்கம்' (Rukh) நிறுவப்பட்டது. ஃபிரீலாண்ட் அதன் நிறுவன மாநாட்டில் கலந்து கொண்டார். மாணவருக்காக உக்ரேனில் இருந்து ஃபிரீலாண்ட் பின்வரும் அறிக்கையை வழங்கினார்:

'நவம்பர் 13 (1988) அன்று, சோவியத் கியேவில் நடந்த மிகப்பெரிய வெகுஜனக் கூட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டத்தில், உக்ரேனின் சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழிமுறையாக ஒரு பிரபலமான இயக்கத்தை உருவாக்குவது பரிந்துரைக்கப்பட்டது. பத்து நாட்களுக்குப் பின்னர், முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் 'உத்தியோகபூர்வமற்ற' சமூகக் குழுக்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் கூட்டுப் பிரதிநிதிகள் உட்பட 33 பேர், உக்ரேனிய மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கு தலைமை தாங்க, எழுத்தாளர் சங்கத்தின் (Writer’s Union) அடிப்படையில் ஒரு முன்முயற்சிக் குழுவை உருவாக்கினர்.”

நடுத்தர வர்க்க Rukh இயக்கத்தின் பிரிவுகள், “பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையை நிர்வகிப்பதில் தொழிலாளர்களின் செயலூக்கமான பங்கேற்பிற்கு” அழைப்பு விடுத்தது. அனைத்து தேசிய சிறுபான்மையினரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழக்கூடிய சுதந்திரமான உக்ரேனை விரும்புவதாகக் கூறினர். பல தசாப்தங்களாக ஸ்ராலினிச பொய்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களை அனுபவித்துவந்த Rukh இல் பங்கேற்ற உக்ரேனியர்களில் பெரும்பான்மையானவர்கள், இந்த மாயைகளுக்கு உண்மையானவர்களாக இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தில் அவர்களின் ஆதரவாளர்கள் என அதைவிடக்கூடுதலாக கணிப்பிடும் நபர்கள் வேறு திட்டங்களைக் கொண்டிருந்தனர்.

1989 ஆம் ஆண்டில், உக்ரேனில் பாசிச வலதுசாரிகளுக்கு எந்தவொரு திறந்த முறையீடும் திகில் மற்றும் நிராகரிப்பை சந்தித்திருக்கும். முதலாளித்துவ மறுசீரமைப்பு வேலைத்திட்டமும், ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் அடிபணிந்த உக்ரேனிய அரசை உருவாக்குவதற்கும் ஒரு 'ஜனநாயக' மூடுதிரை கிடைத்தது. எனவே, அரசு சொத்துக்களை கொள்ளையடிப்பதில் இருந்து ஆதாயம் தேடத் துடிக்கும் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நலன்களுக்காக ஒரு சமூக எதிர்ப்புரட்சி உண்மையில் அங்கு இருப்பதை இது மறைத்துவிடும்.

அவர் தங்கியிருந்த காலத்தில் ஃபிரீலாண்டின் ஊடகத்துறை முயற்சிகளில் ஒன்று, நியூ யோர்க் டைம்ஸ் நிருபர் பில் கெல்லருக்கு பைகிவ்னியாவில் (Bykivnia) உள்ள பாரிய புதைகுழிகள் பற்றிய கதையை வழங்குவதை எளிதாக்கியது. ஃபிரீலாண்ட் அவருக்கான பயணத்தை ஏற்பாடு செய்து, மேலும் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார். 1937 மற்றும் 1939 இற்கும் இடையில் போல்ஷிவிக் கட்சியின் தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட அரசியல் இனப்படுகொலை பிரச்சாரத்தில் ஸ்ராலினின் NKVD இனால் கொல்லப்பட்டவர்களை புதைத்த இடங்களில் வினிஸ்டியா (Vynitsia) மற்றும் பைகிவ்னியாவும் ஒன்றாகும். கெல்லரின் கதையான 'ஸ்ராலினின் பசுமை வேலிக்குப் பின்னால்' மார்ச் 6, 1989 இல் வெளிவந்தது. மேலும் இது பல ஆண்டுகளாக அதில் பாதிக்கப்பட்டவர்கள் நாஜிக்களால் கொல்லப்பட்டதாகக் கூறி வந்த கிரெம்ளினை கோபப்படுத்தியது.

ஃபிரீலாண்ட் சோவியத் பத்திரிகைகளில் கண்டனம் செய்யப்பட்டதுடன், மேலும் KGB அவருக்கு 'ஃபிரீடா' என்ற குறியீட்டு பெயரைக் கொடுத்தது. ஃபிரீலாண்ட் உண்மையில் உக்ரேனிய தேசியவாத நோக்கத்திற்காக ஒரு அரசியல் முகவராக செயல்பட்டார். அவர் உக்ரேனிய தேசியவாத ஆர்வலர்களுக்கு ஒளிப்பதிவுக் கருவிகள் மற்றும் பணத்தை வழங்கினார். மேலும் கனேடிய அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் சோவியத் அதிகாரிகளால் தொட முடியாத அரசாங்கத்தின் இராஜதந்திர தகவல்போக்குவரத்தை கூட தனது தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்தினார். 'மாணருக்கான உளவு' என்ற பொறுப்பை எடுத்து அதை நடைமுறைப்படுத்தினார். அவரது முயற்சிகளுக்காக சோவியத் ஒன்றியத்தின் எதிரியாக அறிவிக்கப்பட்டு, மேலும் 1989 இன் பின்னர் அங்கு திரும்பிவருவதற்கு தடை செய்யப்பட்டார்.

கனடா டிசம்பர் 2, 1991 இல், உக்ரேனின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் அரசாங்கமானது. உக்ரேனிய கனேடிய காங்கிரஸ், கியேவில் கனடாவின் தூதரகத்தை கட்ட 2 மில்லியன் டாலர்களை வழங்கியது. இது கனடா-உக்ரேன் உறவுகளில் அதன் பாரிய செல்வாக்கின் ஒரு அறிகுறியாகும்.

முன்னாள் பாசிச ஒத்துழைப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப மற்றும் அரசியல் சந்ததியினர் உட்பட கனேடிய வெளிநாட்டவர்களால் உக்ரேன் விரைவாக மூழ்கியது. Encyclopedia of Ukraine இல் ஃபிரீலாண்டின் வழிகாட்டியான போஹ்டான் க்ராவ்சென்கோ, உக்ரேனிய நாடாளுமன்றம் (ராடா) மற்றும் அடுத்தடுத்த அமைச்சரவைகளுக்கான தொடர்ச்சியான சக்திவாய்ந்த ஆலோசனைப் பதவிகளை ஏற்க உடனடியாக கியேவுக்குச் சென்றார். ஃபிரீலாண்டின் தாயாரும், வழக்கறிஞரும் ஒருமுறை NDP இன் வேட்பாளருமான ஹலினா சோமியாக், உக்ரேனுக்குச் சென்று 'உக்ரேனிய சட்ட அறக்கட்டளையை' நிறுவினார். இந்த அமைப்பு அதன் அரசியலமைப்பு மற்றும் பொதுமக்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் உட்பட பல சட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அடிப்படையில் உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் உக்ரேனுக்குள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய கூறுபாடு அதன் தீவிரமான வலதுசாரி தேசியவாத அரசியலாகும். இந்த விஷம்மிக்க விதை வளர காலமெடுத்தது.

2019 இல் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கியுடன் கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலாண்ட் (Twitter)

2015 ஆம் ஆண்டு தனது 'எனது உக்ரேன், புட்டினின் பெரிய பொய்' என்ற கட்டுரையில், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும், 'உக்ரேனின் தேசிய உணர்வு பலவீனமாக இருந்தது' என்று கிறிஸ்டியா ஃபிரீலாண்ட் குறிப்பிட்டார். உண்மையில், UCC மற்றும் 1991 க்கு பிந்தைய பிற வலதுசாரி குடியேற்ற குழுக்களின் ஒரு முக்கியமான நோக்கம் ஒரு வலதுசாரி, தீவிர கம்யூனிச எதிர்ப்பு, ரஷ்ய எதிர்ப்பு உக்ரேனிய தேசியவாதத்தை மேம்படுத்துவதும் வலுப்படுத்துவதும் ஆகும். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பெரும்-ரஷ்ய பேரினவாதத்தின் மறுமலர்ச்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகத்தின் அடியில் இருந்த சோசலிச-சர்வதேச முன்னோக்கின் துரோகம் உட்பட ஸ்ராலினிச ஆட்சியின் குற்றங்களைச் சுரண்டிக் கொண்டனர். உக்ரேனின் தேசிய அபிலாஷைகளை நனவாக்குவதற்கு, ரஷ்யாவையும் சோவியத் ஒன்றியத்தையும் பெரும் தடையாக இப்போது காட்டிய இந்த தீவிர வலதுசாரி தேசியவாதம், உக்ரேனிய 'சுதந்திரத்தை ஆதரித்தவர்களுக்கான நோக்குநிலையுடன், ஒரு 'மேற்கத்திய' நோக்குநிலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் “முதலாம் உலகப் போருக்குப் பின்னரும் இரண்டாம் உலகப் போரின் போதும், பனிப்போரின் போதும் உக்ரேனிய தேசியவாதத்தின் “சுடரை” “எரிந்துகொண்டிருக்க” செய்தனர்.

UCC மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அரசியல்-சித்தாந்த செல்வாக்கை பெருகிய முறையில் செலுத்த முடிந்தால், அது எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் போட்டி பிரிவுகளால் நடத்தப்பட்ட சிதைவு நடவடிக்கையின் காரணமாகும். முதலாளித்துவ மறுசீரமைப்பை முன்னோக்கி கொண்டுசென்றபோது யூகோஸ்லாவியாவில் இருந்ததைப் போலவே, சோவியத் ஒன்றியத்திலும் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவம், அரச சொத்துக்களை சூறையாடுவதை நியாயப்படுத்தும் ஒரு வழிமுறையாக போட்டி தேசியவாதங்களை ஊக்குவித்தது. மிக முக்கியமாக, அமைதியற்ற மற்றும் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தை குழப்பி பிளவுபடுத்துவதற்காக கொடூரமாக அரசியல்ரீதியாக ஒடுக்கி, ஸ்ராலினிசத்திற்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பான ட்ரொட்ஸ்கிசத்திற்கு பல தசாப்தங்களாக அணுகல் மறுக்கப்பட்டது.

அமெரிக்க மற்றும் கனேடிய ஏகாதிபத்தியத்தின் வழிகாட்டுதலின் கீழ் உக்ரேனிய 'சுதந்திரம்' தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியது. உக்ரேனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1990 முதல் 1994 வரை 50 சதவீதம் சரிந்தது. சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களை தனியார்மயமாக்குவது குண்டர் கும்பல், அரசியல் கொலை மற்றும் மிரட்டல் ஆகியவற்றுடன் சேர்ந்தது. 1990 மற்றும் 2000 க்கு இடையில் கொலை விகிதம் இரட்டிப்பாகியது. உக்ரேனிய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து, மேலும் 1991 முதல் ஆயுட்காலம் ஏனைய தொழிற்துறைமயமான நாடுகளில் அதிகரித்தபோது அங்கு மாறாமல் இருந்தது. 1991 இல், உக்ரேனியர்களில் 38 சதவீதம் பேர் வறுமையில் இருந்தனர். 1998 இல் 54 சதவீதமாக உச்சகட்டத்தை அடைந்த பின்னர், 2000 ஆம் ஆண்டில் அந்த விகிதம் 50 சதவீதமாக இருந்தது.

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நீடித்துவரும் நெருக்கமான பொருளாதார உறவுகளால் பெருகிய முறையில் விரக்தியடைந்தன. ரஷ்யாவை ஒரு அரை-காலனி நிலைக்கு அடிபணியச் செய்வதற்கான அவர்களின் உந்துதலை எளிதாக்குவதற்கும், யூரேசிய நிலப்பரப்பில் தங்கள் சவாலற்ற மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும், கியேவை முழுமையாக ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஆர்வத்துடன், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கனேடிய கூட்டாளியும் தொடர்ச்சியான 'ஆட்சி மாற்றத்தை' கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 'பொது சமூக' அமைப்புகளுக்கு நிதியளித்தனர்.

முதல் 'ஆட்சி மாற்ற' நடவடிக்கை 2004 இல் வந்தது. விக்டர் யானுகோவிச்சின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வெகுஜன எதிர்ப்புக்கள் 'ஆரஞ்சுப் புரட்சி' என்று அழைக்கப்படும் அமெரிக்க சார்பு வேட்பாளர் விக்டர் யுஷ்செங்கோவை பதவியில் அமர்த்தியது. யுஷ்செங்கோவின் அரசாங்கம் ஸ்வோபோடாவிலிருந்து மூன்று வெளிப்படையான பாசிச அமைச்சர்களை தனது அரசாங்கத்தில் கொண்டிருந்தது. 'பொது சமூக' குழுவான 'Pora' (இப்போது நேரமாகிவிட்டது) அமெரிக்க பணத்தில் 14 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஆதரவுடன் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது.

லெவிவ் இல் ஸ்டீபன் பண்டேராவின் நினைவுச்சின்னம்(Amanda Smith)

ஆரஞ்சுப் புரட்சியானது பாசிச OUN-UPAவின் அரசியல் பாரம்பரியத்தை வெளிப்படையாக மறுசீரமைப்பதற்கும், அதன் தலைவர்களின், குறிப்பாக ஸ்டீபன் பண்டேராவின் ஆளுமை வழிபாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறித்தது. பண்டேராவுக்கு நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டு, தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இவை பல தசாப்தங்களுக்கு முன்னர் கனடாவில் கட்டப்பட்ட பண்டேரா, ரோமன் ஷுகேவிச் மற்றும் Waffen SS கலிசியன் பிரிவின் நினைவுச்சின்னங்களை பிரதிபலிக்கின்றன. 2010 இல் UPA படையினருக்கு வழமையான முன்னாள் படையினருக்கான ஓய்வூதியங்களை வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் UCC மனு அளித்தது. இதற்கு உக்ரைனில் அவர்களையும் அவர்களின் நாஜி கூட்டாளிகளையும் எதிர்த்துப் போராடிய செம்படை வீரர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்திற்கு சமமாக UPA இன் முன்னாள் படையினருக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்குவதற்கான உக்ரேனிய அரசாங்கத்தின் முடிவை மேற்கோள் காட்டியது.

யூஷ்செங்கோ தனது முன்னாள் கூட்டாளிகளுடனான கோஷ்டி பூசல்கள் மற்றும் அவரது வலதுசாரி கொள்கைகளுக்கான எதிர்ப்பின் அதிகரிப்பைத் தொடர்ந்து அதிகாரத்திலிருந்து விரைவாக வீழ்ந்தார். ஆனால் ஆரஞ்சுப் புரட்சியின் தோல்வியானது, ஸ்வோபோடா போன்ற மிகத் தீவிர வலதுசாரி மற்றும் ரஷ்ய-விரோத கூறுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. அவர்கள் அதிகாரத்திற்கான பாதை 1941 உக்ரேனிய தேசிய புரட்சியால் ஈர்க்கப்பட்ட ஒரு வன்முறை சதித்திட்டத்தில் உள்ளது என்று உறுதியாக நம்பினர். இந்த தீவிர வலதுசாரிக் குழுக்கள் பல தசாப்தங்களாக கனடாவில் உக்ரேனிய-கனேடிய அமைப்புகளான UCC, உக்ரேனிய கனேடிய கழகம் (OUN-B) மற்றும் பல்வேறு மதக் குழுக்களால் கனேடிய அரசின் ஆதரவுடன் பராமரிக்கப்பட்டு வருபவற்றின் அரசியல் மரபுகளில் பெரிதும் தங்கியிருக்கின்றன.

ரஷ்யாவுடனான தற்போதைய போருக்கு உக்ரேனை சித்தாந்த ரீதியாக தயார்படுத்துவதில் UCC முக்கிய பங்கு வகித்தது. இந்த அமைப்பு பண்டேரா மற்றும் OUN இன் அர்ப்பணிப்புள்ள அபிமானிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இவர்கள் இந்த நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு மரபுரீதியாக பரவலான விரோதத்தை சந்தித்த நாட்டில் மறுவாழ்வு அளிக்க யுஷ்செங்கோ மற்றும் போரோஷென்கோ அரசாங்கங்களுக்கு உதவினர். வரலாற்றாசிரியர் ஜோன்-பௌல் ஹிம்கா, 2010 இல், 'உக்ரேனில் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோ மற்றும் உக்ரேனிய கனேடிய காங்கிரஸால் வட அமெரிக்க புலம்பெயர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்ட 'பெரும் வெற்றிகரமான பிரச்சாரத்தை' 2010 இல் சுட்டிக்காட்டினார். இந்த தீவிர வலதுசாரி தேசியவாதிகள் உக்ரேனிய தேசிய அடையாள திட்டத்தின் மையத்தில் இருத்தி புகழப்பட்டனர்.

கனேடிய அரசாங்கமும் அரசியல் ஸ்தாபகமும், நாம் ஆவணப்படுத்தியபடி, பல தசாப்தங்களாக தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உடந்தையாக இருந்து வருகிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பேரழிவு தரும் கூட்டுறவுமயமாக்கல் கொள்கைகளால் சோவியத் ஒன்றியம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இறந்த 1932-33 உக்ரேனிய பஞ்சத்தை இது உக்ரேனிய எதிர்ப்பு 'இனப்படுகொலை' ஆகும் என அது மே 2008 இல் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. ஒவ்வொரு நவம்பரில் ஒரு 'ஹோலோடோமர் நினைவு தினம்' (Holodomor) பிரகடனப்படுத்துவதன் மூலம், கனேடிய அரசாங்கம் உக்ரேனிய தீவிர வலதுசாரிகளின் வரலாற்று திருத்தல்வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதை அடிக்கோடிட்டுக் காட்டியது, இது பஞ்சத்தை 'ஹோலோடோமோர்' என்று குறிப்பிடுவதன் மூலம் யூதப்படுகொலையையும் (Holocaust) ஐரோப்பிய யூதர்களின் தொழில்துறைரீதியான அழிப்பில் உக்ரேனிய பாசிச சக்திகளின் பங்கை குறைத்துமதிப்பிட முயன்றது.

உக்ரேனில் பொருளாதார நிலைமைகள் மேலும் மிருகத்தனமாக மாறியதால், தீவிர வலதுசாரிகளும் அவர்களது தனியார் ஆயுதக்குழுக்களின் செல்வாக்கும் அதிகாரமும் அதிகரித்தது. இவர்கள் இகோர் கொலோமோய்ஸ்கி போன்ற சக்திவாய்ந்த தொழிலதிபர்கள் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஆதரவை பெற்றனர். 2013 இல், அமெரிக்க மற்றும் கனேடிய ஏகாதிபத்தியம், ஸ்வோபோடா (Svoboda) மற்றும் ரைட் செக்டர் (Right Sector) போன்ற தீவிர வலதுசாரி மற்றும் வெளிப்படையான பாசிச குழுக்களால் வழிநடத்தப்பட்ட மைதான் எதிர்ப்புகளின் தலைமைக்கு நிதி மற்றும் அரசியல் ஆதரவை வழங்குவதில் முக்கிமானதாகக இருந்தன. இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கையின் உச்சக்கட்டத்தை குறிக்கும் பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு பெப்ரவரி 2014ல் யானுகோவிச்சை அதிகாரத்தில் இருந்து அகற்றி, பெட்ரோ பொரோஷென்கோவின் கீழ் அவர்களுக்கு இணக்கமான ஒரு ஆட்சியை நிறுவியது. அது உக்ரேனை ரஷ்யாவிற்கும் பெயர் குறிப்பிடாத நேட்டோ அங்கத்தவர்களுக்கும் எதிராக பெரும் ஆயுதம் ஏந்திய போர்க்களமாக மாற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒத்துழைத்தது.

கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் UCC தலைவர் பௌல் க்ரோடுடன் பயணம் செய்தார் (Photo Credit: UCC)

இந்த காலகட்டத்தில், கனேடிய வெளியுறவுக் கொள்கையில் UCC தொடர்ந்து ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தது. பிரதம மந்திரிகள் ஸ்டீபன் ஹார்பர் அல்லது ஜஸ்டின் ட்ரூடோ உக்ரேனுக்கு விஜயம் செய்யும் போதெல்லாம், அவர்களுடன் பலம்வாய்ந்த UCC பிரதிநிதிகள் இருந்தனர். ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்துவதற்காக கனேடிய அரசாங்கம் உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வெளிப்படையாக அனுப்புவதற்கு முன்னர், UCC உறுப்பினர்களைக் கொண்ட இராணுவ SOS குழுவிற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு நிலையான ஆயுத ஓட்டம் ஏற்கனவே நடந்து கொண்டிருந்தது. இராணுவ SOS ஆனது இராணுவம் மற்றும் பாசிச அசோவ் பட்டாலியன் உட்பட தேசிய காவலர்களுக்கு துப்பாக்கி பாகங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கியது. இதில் குறிப்பாக டொன்பாஸில் உள்ள ரஷ்ய மொழி பேசும் பிரிவினைவாதிகள் மீது போரை நடத்துவதற்காக பாசிச அசோவ் பட்டாலியன் 2014 இல் நிறுவப்பட்டுப் பின்னர் உக்ரேனிய இராணுவத்தில் அது இணைக்கப்பட்டது.

கிரிமியாவில் உள்ள உக்ரேனிய ஆயுதப் படைகளில் 70 சதவிகிதம் 2014 இல் ரஷ்யாவிற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுத்த பின்னர், உக்ரேனிய இராணுவம் அதன் அதிகாரிகள் படையில் 50 சதவிகிதினரை களையெடுத்தது. அவர்கள் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்களால் மாற்றப்பட்டனர். 2015 இல், உக்ரேனிய இராணுவத்தின் அதிகபட்ச அளவு 184,000 இலிருந்து 250,000 படையினராக அதிகரிக்கப்பட்டது. உக்ரேனிய இராணுவ சீர்திருத்தம் அடுத்த காலகட்டத்தில் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தால் நிதியளிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது.

உக்ரேனிய இராணுவப் பணியாளர்களுக்கான பயிற்சிப் பணியை கனேடிய ஆயுதப் படைகள் (CAF) நிறுவியதன் மூலம் கனேடிய இராணுவ ஆதரவு மிகவும் உத்தியோகபூர்வமாக்கப்பட்டவுடன், ஒட்டாவா மிகவும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளுடன் ஒத்துழைக்கும் அதன் பல தசாப்த கால பாரம்பரியத்தைத் தொடர்ந்தது. கனேடிய இராணுவப் பணியாளர்கள் உக்ரேனின் உயர்மட்ட இராணுவக் கல்லூரியில் நவ-நாஜி செஞ்சுரியா குழுவின் (Centuria group) அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தனர். கனேடிய இராணுவ 'அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள்' மற்றும் அசோவ் பட்டாலியன் இடையே 2018 சந்திப்பு பற்றி பாதுகாப்புத் துறை அறிந்தபோது, அவர்கள் அதை மறைக்க முயன்றனர். அசோவ் பட்டாலியன் சமூக ஊடகங்களில் இதைப் பற்றி பெருமிதம் கொண்டதால், இந்த சந்திப்பு மிகவும் பகிரங்கமானது.

CAF பணியாளர்கள், உக்ரேனுக்கான கனடாவின் தூதர் ரோமன் வாசுக், கனேடிய ஆயுதப்படையினர்கள் புடைசூழ யூதப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்ட யூத கல்லறையில் OUN/UPA உறுப்பினர்களை கௌரவிக்கிறார் [Photo by Facebook] [Photo: Facebook]

2019 வாக்கில், உக்ரேனுக்கான கனடாவின் தூதர் மற்றும் பல கனேடிய ஆயுதப்படை அதிகாரிகள் சம்பீர், கலீசியா அல்லது மேற்கு உக்ரேனில் கொல்லப்பட்ட யூதர்களின் வெகுஜன கல்லறையின் தளத்தில் 17 OUN/UPA போராளிகளுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அர்ப்பணித்து புகைப்படம் எடுத்ததில் பெருமிதம் அடைந்தனர். அக்டோபர் 1942 முதல் ஜூன் 1943 வரையிலான நான்கு படுகொலைகளில் உக்ரேனிய பொலிஸ் பிரிவுகளால் ஆறாயிரம் யூதர்கள் இந்நகரத்தில் கொல்லப்பட்டனர். கனேடிய அரசு பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு அல்லாது சம்பீர் உட்பட யூதப்படுகொலைகளில் முறையாக பங்கேற்ற ஒரு அமைப்பிற்கு ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பதற்கான ஒரு ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை ஆதரித்தது. இந்த பிரச்சாரம் சம்பிரின் பாசிச மேயரால் வழிநடத்தப்பட்டது, அவர் முன்னர் நகரத்தின் முன்னாள் யூத ஜெப ஆலயத்தை ஒரு களியாட்ட விடுதியாக மாற்றினார். மேலும் உக்ரேனிய கத்தோலிக்க திருச்சபை, 2000 இல் ஒரு ஆத்திரமூட்டலில், துணை இராணுவ குண்டர்களின் ஆதரவுடன், யூத கல்லறைகளுக்கு மேல் மூன்று சிலுவைகளை அமைத்தது.

***

இந்த தொடரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள கனேடிய அரசுக்கும் உக்ரேனிய தீவிர வலதுசாரிக்கும் இடையிலான பல தசாப்த கால கூட்டணி, ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரில் ஏகாதிபத்திய சக்திகள் ஒத்துழைத்து வரும் அரசியல் சக்திகளின் உண்மையான தன்மையை அம்பலப்படுத்துகிறது. 'ஜனநாயகம்' மற்றும் 'ஐரோப்பிய விழுமியங்களுக்காக' போரை நடத்துவது பற்றிய அனைத்து போலிப் பிரச்சாரங்களுக்குப் பின்னாலும், கனேடிய ஆளும் வர்க்கம் உக்ரேனிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள், இராணுவம் மற்றும் அரசியல் உயரடுக்கின் உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பின் பாரம்பரியத்தில் நிற்கிறது. மேலும், UCC மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதத்தை நீண்டகாலமாக ஊக்குவிப்பதன் மூலம் இந்த சக்திகளை அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வளர்ப்பதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் பகுதியில், கனேடிய ஏகாதிபத்திய வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கையில் பாசிச சக்திகள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் ஆராய்வோம். மேலும் தொழிலாள வர்க்கம் போரை எதிர்ப்பதற்கும் அதற்கு எதிராக எழுச்சியுறுவதற்கும் ஒரு சோசலிச முன்னோக்கை முன்வைப்போம்.

Loading