இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிளாட்டின விழா: "புதிய எலிசபெத்திய யுகத்தின்" முடிவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மகாராணி இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி 6, 1952 இல் அரியணைக்கு வந்து பின்னர் ஜூன் 2 அன்று முடிசூட்டப்பட்டார். இப்போது 96 வயதாகும், அவர் 70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் அரசு மற்றும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவராக உள்ளார். இவர், பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியும், உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியும் ஆவர்.

பிளாட்டின விழாவைக் குறிக்கும் நான்கு நாட்கள் கொண்டாட்டங்களின் முதல் நாளில், மற்ற அரச குடும்ப உறுப்பினர்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையின் மொட்டைமாடியில் ராணி (நடுவில், நீல நிற கோட் மற்றும் தொப்பியுடன்) லண்டன், ஜூன் 2, 2022, (Humphrey Nemar/Pool Photo via AP) [AP Photo/Humphrey Nemar/Pool Photo]

அவரது பிளாட்டின விழா நான்கு நாட்கள் அரசு விழா மற்றும் கொண்டாட்டங்களுடன் கொண்டாடப்படுவதுடன், உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு, இன்னும் அதன் ஆடம்பரம் மற்றும் பகட்டு கொண்டாட்டங்கள் அனைத்தையும் உலக அளவில் முன்னிலைப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ராயல் விமானப்படை விமானங்கள் நிறத்தாரைகளை வெளிப்படுத்தி மற்றும் நாடு முழுவதிலும் பொதுநலவாய நாடுகளிலும் வானவேடிக்கைகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது; புனித பௌல் தேவாலயத்தில் இராணியின் ஆட்சிக்கு நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனை வெள்ளிக்கிழமை இடம்பெறும். குதிரை ஓட்டப்பந்தயம், அரண்மனை இசை நிகழ்ச்சியில் பிளாட்டின கொண்டாட்டம், தெரு மற்றும் தோட்ட விருந்துகள் மற்றும் பிளாட்டின விழா போட்டி ஆகியவை வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றிலும் ஒரு அடக்கப்பட்ட பதட்டத்தின் இழை ஓடுகின்றது. இராணியின் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, 'புதிய எலிசபெத்திய யுகம்' என்று அழைக்கப்படுவதையும், அடுத்து வரக்கூடியவற்றையும் மதிப்பிடுவதற்கான சந்தர்ப்பமாக இந்த விழா தவிர்க்க முடியாமல் உள்ளது. இந்தக் கவலையை புரிந்து கொள்ள, அவரது ஆட்சி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்கு தற்போது எதனை அர்த்தப்படுத்துகின்றது என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

16 ஆம் நூற்றாண்டுடன் 20 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் வாழ்க்கையில் இருந்த முடியாட்சியின் நிலையை ஒப்பிடமுடியாதபோது 'இரண்டாம் எலிசபெத்திய யுகம்' என்ற கூற்றில் எப்போதும் ஆடம்பரமான ஒன்று இருந்தது. ஆனால் எலிசபெத் வின்ட்சர் சில முக்கியமான விஷயங்களில் மிகைப்படுத்தலுக்கு பொருத்தமாக இருந்திருக்கிறார். பரபரப்பாக பாராளுமன்றம் மற்றும் ஊடகங்கள் முழுவதும் பாராட்டப்பட்ட பிளாட்டின விழா, இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வரலாறு மற்றும் உண்மையில் அதன் உயிர்வாழ்விற்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பின் கொண்டாட்டமாகும்.

இரண்டாம் எலிசபெத் இரண்டாம் உலகப் போருக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் அமெரிக்காவின் நிரந்தர சுற்றுவட்டத்தினுள் பிரிட்டனின் இருந்தபோது ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியில், இங்கிலாந்தின் தொழில்துறை பொருளாதாரத்தின் நீடித்த வீழ்ச்சியும் மற்றும் அதன் இறுதி பிற்பகுதியில், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சரிவுகளும் உள்ளடங்கும்.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் புவிசார் மூலோபாய மற்றும் சமூக விளைவுகள் பாரியளவானவை. 1950கள் மற்றும் 60களில் பிரிட்டன் தனது ஏகாதிபத்திய உடைமைகளில் பெரும்பகுதியை இழந்ததுடன், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் ஸ்திரப்படுத்தலால் அதன் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி 1956 இன் சூயஸ் நெருக்கடியால் அடையாளப்படுத்தப்பட்டது. 1970கள் மற்றும் 80களில் பெரும் வேலைநிறுத்த அலைகள் ஹீத், வில்சன், கலஹான் மற்றும் தாட்சர் அரசாங்கங்களை உலுக்கியது. பூகோளமயமாக்கலின் வளர்ச்சி மற்றும் தொழிற்சங்கம் மற்றும் தொழிற்கட்சி அதிகாரத்துவத்தின் கைகளில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாள வர்க்கத்தின் மற்ற முன்னணி பிரிவுகளுக்கு ஏற்பட்ட தோல்வியுடன், பிரிட்டிஷ் பொருளாதாரம் உற்பத்தியின் மையம் என்பதிலிருந்து நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் சர்வதேச இருப்பிடமாக மாற்றப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு, இந்த சவால்களுக்கு வழக்கமான மிருகத்தனத்துடன் பதிலளித்தது. இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சியின் முதல் எட்டு ஆண்டுகளில், கென்யாவில் Mau Mau கிளர்ச்சிக்கு எதிராக இங்கிலாந்து காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை நடத்தியது. 1967-1970 க்கு இடையில், பிரித்தானியா பிரிந்து சென்ற Biafra பகுதிக்கு எதிராக நைஜீரிய அரசாங்கத்தின் இனப்படுகொலைப் போரை அது ஆதரித்தது. அயர்லாந்தின் வடக்கில் உள்ள ஆறு மாவட்டங்கள் மற்றும் பசிபிக் பகுதியில் உள்ள மால்வினாஸ்/போக்லாந்து தீவுகள் ஆகியவற்றில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டை தக்கவைக்க இரத்தக்களரிமிக்க இராணுவ ஒடுக்குமுறைகள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவுடனான 'சிறப்பு உறவுக்கு' ஆதரவாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் குற்றம்மிக்க்க போர்கள் நடாத்தப்பட்டன. உள்நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு எழுச்சியும் அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொலிஸ் அடக்குமுறைகளால் நசுக்கப்பட்டன.

இத்தகைய கிளர்ச்சிகரமான அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில், ஆளும் வர்க்கத்திற்கு இராணியின் பெரும் சேவையானது, முடியாட்சியின் பங்கு ஒரு ஸ்திரப்படுத்தும் சக்தியாக அதனைப் பாதுகாத்ததாகும். அவர் அந்தப் பணியை தனித்த உறுதியுடனும், ஒழுக்கத்துடனும், இரக்கமற்ற சுயகடமையுடனும் நிறைவேற்றியுள்ளார்.

ஒரு அசாதாரண அளவிற்கு, அவரது ஆளுமை கிட்டத்தட்ட முழுவதுமாக பிரிட்டிஷ் முடியாட்சியின் அமைப்பினால் உள்ளிளுத்துக்கொள்ளப்பட்டது. அவர் முழுமையான உணர்ச்சி மற்றும் அறிவுசார் இயலாமையின் ஒரு விம்பத்தை பராமரிக்கிறார். 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னரும், இராணி எதைப் பற்றியும் என்ன நினைக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் எப்படிப்பட்டவர் என்ற உணர்வு தங்களுக்கு இருப்பதாக எவரும் உணர்ந்தால், அவர்கள் நெட்ஃபிக்ஸ் தொடரான அரியணை (The Crown) எழுத்தாளர் ஸ்டீபன் மோர்கன் மற்றும் நடிகைகள் கிளாரி ஃபோய் மற்றும் ஒலிவியா கோல்மன் ஆகியோரின் கண்ணியமான விமர்சன ஆனால் பொதுவாக அனுதாபமான கலை விளக்கங்களைக் குறிப்பிடலாம்.

ஊழல், தவறான வார்த்தை அல்லது தவறான நடவடிக்கையைத் தவிர்ப்பதில் இராணியின் விடாமுயற்சி மற்றும் ஆளும் உயரடுக்கின் தீய வர்க்கக் கொள்கையுடன் வெளிப்படையாகத் தன்னை இணைத்துக் கொள்ளாத அக்கறை ஆகியவை அவரை ஒரு அழுக்குப்படியாத கரும்பலகை ஆக்கியது, அதில் நேரத்திற்கு தேவையான அரசியல்ரீதியாக வசதியான எந்த நம்பிக்கைகளையும் எழுதலாம். ஒரு பிரதம மந்திரி குறிப்பாக செல்வாக்கற்றவராக இருக்கும்போது, குறிப்பாக தாட்சர் மற்றும் பிளேயர், 'நம்மைப் போல' இராணி அவர்களை வெறுக்கத்தக்கதாகக் கருதுகிறார் என்று ஊகிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை தந்தபோதும் அப்படித்தான் நிகழ்ந்தது.

அவரது கவனமாக வளர்க்கப்பட்ட பொது ஆளுமை, எலிசபெத் II தேசிய நெருக்கடியின் போது ஒரு மாயையான ஆனால் அரசியல்ரீதியாக தேவையான ஸ்திரத்தன்மை மற்றும் நிரந்தரமான உருவகமாக பயன்படுத்தப்படுவதை அனுமதித்தது. வர்க்க ஆட்சி மற்றும் பரம்பரைச் சலுகையின் இந்த பிரதிநிதி, அரசியலின் இரத்தம் மற்றும் அழுக்கிற்கு மேலே உயர்ந்து வரும் ஒரு உருவமாக சித்தரிக்கப்படுவதுடன், காலத்தின் கடந்து வரும் 'தீவிரவாதத்திற்கு' எதிராக 'பிரிட்டிஷ் மக்களின்' மாறாத மரபுகள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிப்பதாக காட்டப்படுகிறார். வெளிநாட்டில், பேரரசின் நீடித்த துப்பாக்கிமுனை இராஜதந்திரத்திலிருந்து 1960 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் மேக்மில்லனின் 'மாற்றத்தின் காற்று' உரையால் தொடங்கப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான அரசு வருகை இராஜதந்திரத்திற்கு மாறுவதற்கு அவர் உதவினார்.

1997 இல் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு - குறுகிய காலத்தைத் தவிர - பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைமையில் பாசிசத்துடன் ஊர்சுற்றும் குடும்பத்தில் வளர்ந்த ஒரு அற்புதமான பணக்கார பரம்பரை முடியாட்சிக்கு, அவர் ஒருபோதும் கடுமையான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை அல்லது மோசமாக்கவில்லை. அது தொழிலாள வர்க்க எதிர்ப்பை நடுநிலையாக்குவதற்கு தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு சாத்தியத்திற்கான இடத்தை கொடுத்தது. பிளாட்டின விழா என்பது ஆளும் வர்க்கத்தின் ஒரு முன்மாதிரி அரசிக்கும் அவரது ஏழு தசாப்தங்களாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியையும் அதன் வெடிக்கும் சமூக விளைவுகளையும் சமாளிக்க உதவிய அவரது கடினமான சேவைக்கான நன்றிக் கடனாகும்.

டயானாவின் சவப்பெட்டி, அரசகொடியால் போர்த்தப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு செல்லும் வழியில் இலண்டன் தெருக்களினூடாக கொண்டு செல்லப்படுகிறது

ஆனால் காலத்தின் அழுத்தங்கள் தாக்கம் இல்லாமல் கடக்கவில்லை. 1980 களில் இருந்து அரச குடும்பம் அதிகரித்தளவில் மக்களின் கண்காணிப்பிற்கு உட்பட்டது. 1990 களின் இளவரசி டயானாவின் கதையால் பிரபுத்துவ கும்பலின் அழுக்குமிக்க மறுபக்கத்தையும், ஏமாற்றுக்காரர்கள் மற்றும் பொய்யர்களை அம்பலப்படுத்தியது.

இன்று, சிம்மாசனத்தின் வாரிசு இளவரசர் சார்லஸ், அவருடைய மகன் இளவரசர் வில்லியமை தனக்கு பின்னால் தள்ள எல்லாவற்றையும் செய்ய பொறுப்புள்ளவராகக் கருதப்படுகிறார். இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்க்கலுடன் ஒரு அங்கீகாரமின்மையின் கீழ் முடியாட்சியை கைவிட்டார். பில்லியனர் வகுப்பைச் சேர்ந்த தண்டனை பெற்ற பாலியல் கடத்தல்காரனான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவரது உறவை ஆராயும் விசாரணையில் விலைகொடுத்து வெளியேறிய பின்னர் இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில், YouGov கருத்துக்கணிப்பு முடியாட்சிக்கான ஆதரவில் 73 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டுகிறது. 18-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே வீழ்ச்சி செங்குத்தானது; ஒரு தசாப்தத்திற்கு முன்பு 54 சதவீதமாக இருந்த பிரிட்டனில் முடியாட்சி தொடர வேண்டும் என்றவர்களில் இப்போது 33 சதவீதம் பேர் அவ்வாறு நம்புகின்றனர்.

இந்த புள்ளிவிவரங்களில் பொதுவாக ஒரு காலத்திற்கு ஒவ்வாததாகக் கருதப்படும் ஒரு நிறுவனம் தொடர்பான பரவலான அணுகுமுறைகளைக் காட்டிலும் அதிகமானவற்றை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு நாட்டையும் போலவே பிரிட்டனும் உலக முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடியின் பிடியில் உள்ளது. இது உலக வர்க்கப் போராட்டத்தை கொதிநிலைக்கு கொண்டு வருகிறது. சமூகப் பதட்டங்களால் சூழப்பட்டிருக்கும் கடந்த 70 ஆண்டுகளைப் பற்றி ஒரு அழகான படத்தை ஒருவர் கொண்டிருக்கத்தேவையில்லை. ஆளும் வர்க்கம் இதை இப்போது ஓட்டுனர் இல்லாத புகையிரதம் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதுடன் ஒப்பிட்டுபார்க்கும் என்பதை கூறத் தேவையில்லை.

இத்தகைய நிலைமைகளின் கீழ், 'தேசிய ஒற்றுமை' மற்றும் நாம் 'இதில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்' என்று கூறும் அனைத்தும் துண்டு துண்டாக சிதைக்கப்படுகின்றன. 'கடந்த 70 ஆண்டுகளில் சாதித்ததைப் பற்றி சிந்திக்கவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பார்க்க வரவிருக்கும் நாட்கள் வாய்ப்பளிக்கும்' என்ற இராணியின் நேற்று அறிவித்த நம்பிக்கையுடன், பொய்யானது வெகுதூரம் நீட்டப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் இராணியின் பிளாட்டின விழாக் கொண்டாட்டத்தின் போது இராணுவ மரியாதை அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக எண் 10 டவுனிங் தெருவில் இருந்து வெளியேறுகிறார் 02/06/2022. (Credit: Picture by Andrew Parsons/No 10 Downing Street/Flickr)

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் கோவிட்டினால் கிட்டத்தட்ட 200,000 கொல்லப்பட்ட மற்றும் 2 மில்லியன் பேரின் இரத்தத்துடன் “கடவுளே இராணியைக் காப்பாற்றுங்கள்” என்று வாழ்த்தினார். தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மர், தொற்றுநோயின் பிடியிலும் வரலாற்றில் இன்னும் மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு, ஏழ்மை வானை முட்டுகையில் 'கடந்த சில வருடங்கள் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னர்” அதன் 'தேசபக்த கடமை' “தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது” என்கிறார். ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ/அமெரிக்கப் போரில், பில்லியன் கணக்கானவர்களை பட்டினிக்குள்ளாக்குவதுடன், உலகை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவ மோதலை அச்சுறுத்தும் வகையில், பிரிட்டனின் முக்கிய பங்கிற்கு இருவருமே தலைமை தாங்குகின்றனர். இருவரது இழிவான கட்சியாலும் சிறிதளவும் மக்கள் ஆதரவைத் திரட்ட முடியாது.

எலிசபெத் II தனது ஆட்சியுடன் தொடர்புடைய முழு வரலாற்றுக் காலகட்டமும் முடிவடைவதைக் காண நீண்ட காலம் வாழ்ந்துள்ளார். நீடித்த பொருளாதாரச் சரிவு, பாசிசத்தின் எழுச்சி, தடையற்ற சந்தையின் பரவலான மதிப்பிழப்பு மற்றும் இரண்டு பேரழிவு தரும் உலகப் போர்களுக்குப் பின்னர் முதலாளித்துவ ஸ்திரத்தன்மையின் ஒரு காலத்தில் இராணி அரியணை ஏறினார். புதுப்பிக்கப்பட்ட ஒரு உலகப் பொருளாதாரப் பேரழிவு, தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சி, மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் மற்றும் மக்கள் தொகையின் முற்றான அந்நியப்படல் ஆகியவற்றின் மத்தியில் அவர் தனது ஆட்சியின் முடிவை நெருங்குகிறார்.

அவரது முதல் பிரதம மந்திரி வின்ஸ்டன் சேர்ச்சில், அவரது வர்க்க இரக்கமற்ற தன்மை மற்றும் பேரினவாதம் இருந்தபோதிலும், நாஜிசத்திற்கு எதிரான வீரமிக்க தேசியப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகராக இருந்தார். அவருடைய சமீபத்தியவர் ஜோன்சன், ஒரு மோசமான முட்டாள்தனமானவரும், அவருடைய சேர்ச்சிலிய வாரிசான பாசாங்குகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் சரிவு மற்றும் சீரழிவின் ஒரு தற்செயலான அளவை மட்டுமே வழங்குகின்றன.

முடியாட்சியின் தலைவிதி இந்த தீர்க்கமுடியாத முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் அது தூண்டிவிட்ட எதிர்வினை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தங்களின் உலகளாவிய அலையானது இங்கிலாந்து பொருளாதாரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையையும் பாதிக்கிறது. தொழிலாளர்களை பிரித்து, காட்டிக் கொடுக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

'எல்லோரையும் ஒன்று சேர்க்கும்' மகாராணியின் திறனில் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தாலும், மற்றும் 'நல்லிணக்கம் எப்போதும் சாத்தியம்' என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அவராலோ, அவரது வாரிசினாலோ அல்லது எந்த அரசாங்கமோ ஒரு 'புதிய எலிசபெத்திய யுகம்' என்ற கற்பனையை ஒதுக்கித் தள்ளும் மகத்தான சமூக சக்திகளையும் மற்றும் ஒரு சோசலிசப் புரட்சியின் சகாப்தத்தின் தொடக்கத்தையும் தடுக்க முடியாது.

Loading