இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஆகஸ்ட் 12 அன்று, இலங்கையின் கிளிநொச்சி, வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஊர்வலத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த உலக சோசலிச வலைத் தள நிருபர்களை செய்தி சேகரிக்க விடாமல் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட அதிகாரிகள் குழுவொன்று தடுக்க முயன்றது. அவர்களுக்கு உதவிக்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் குழுவொன்று, எமது செய்தியாளர்களை தாக்கப் போவதாக அச்சுறுத்தியதுடன், ஊடகவியலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஞானசங்கரி சப்தசங்கரி என்பவர், நமது நிருபர் ஒருவரை கையால் தாக்கியதுடன், பின்னர் ஹெல்மெட்டினால் தாக்க முற்பட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், காணாமல் போனோர் குறித்து தகவல் கேட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சங்கத்தின் செயலாளர் ஆனந்த-நடராஜா, “மக்களை மூளை சலவை செய்ய வேண்டாம்” என்று கூறி, தனது உறுப்பினர்களை எமது செய்தியாளர்களிடம் பேசவிடாமல் தடுத்தார். காணாமல் போனோர் தொடர்பிலான விபரங்கள் தேவைப்படின், சங்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும், என அவருடன் கூட இருந்த சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், “கடந்த முறை முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்க நீங்கள் வந்த பிறகு, எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. நீங்கள் சொல்வது பிழை' என்று கூறியவாறே எமது நிருபர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றுவதற்கான ஆத்திரமூட்டலில் இறங்கினார். முடிந்தால் 'பிழை' என்ன என்பதைக் குறிப்பிடுமாறு சவால் விட்டபோது, அவரால் பதில் அளிக்க முடியவில்லை.
அமைப்பாளர்களின் எதிர்ப்புக்கான அரசியல் காரணம் என்ன என்பதை நமது செய்தியாளர்கள் கூடியிருந்தவர்களுக்கு விளக்கினர். அதுபற்றிய பகுப்பாய்வு, 2022 ஆகஸ்ட் 25 அன்று வெளியான 'யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஐநூறுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் செய்தனர் ' என்ற கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எமது செய்தியாளர்கள் உண்மைகளை விளக்கி பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த, தற்போது கபிடல் FM ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஞானசங்கரி சப்தசங்கரி, WSWS அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட இணையத்தளமா என்றும் ஊடக அமைச்சினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் நிருபர்களிடம் உள்ளதா என்றும் பொலிஸ்காரரைப் போல் கேள்வி எழுப்பினார். பின்னர், அவர் எமது பத்திரிகையாளரைத் தாக்கினார்.
உலக சோசலிச வலைத் தளம் சிங்களம் மற்றும் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் வெளியாகி வெளிவருவதை சங்கரி அறிந்திராமல் இருக்க முடியாது. அவரதும், ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களதும் நோக்கம், எமது செய்தியாளர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டலைத் தூண்டி விடுவதே ஆகும்.
தமிழ் தேசியவாதத்தின் ஊதுகுழலான இலண்டனை தளமாகக் கொண்ட IBC தமிழ் இணையதளம், 'தமிழரின் உணர்வெழுச்சிப் போராட்டத்தை திசைதிருப்ப முயன்றோர் விரட்டியடிப்பு' என்று WSWS நிருபர்களின் தலையீட்டை இழிவான முறையில் அறிவித்திருந்தது. WSWS செய்தியாளர்களின் கருத்துகளைத் திரிபுபடுத்தி, சர்வதேச விசாரணைக்குப் பதிலாக உள்ளூர் விசாரணையைக் கேட்டு பிரச்சாரத்தை சீர்குலைக்க எமது செய்தியாளர்கள் முயன்றதாக அது கூறியிருந்தது. அந்த செய்தியில், உலக சோசலிச வலைத் தளத்தின் முகவரியான wsws.org, என்பதை, வேண்டுமென்றே திரித்து, WEWS.org என வெளியிடப்பட்டிருந்தது.
ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையைக் கோரும் காணாமல் போனோர் அமைப்பின் தலைவர்களும், போர் குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பின்னாலேயே அணிசேர்ந்துள்ளனர். இது, இந்த சக்திகளுக்கு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அக்கறையும் கிடையாது என்பதை இன்னுமொரு முறை அம்பலப்படுத்தியுள்ளது. இந்து சமுத்திரத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அமைந்துள்ள இலங்கையை, சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளுடன் இணைத்துக்கொள்வதிலேயே அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இலங்கையில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியைத் தூக்கி எறியும், சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே, போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதும் சாத்தியமாகும் என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளோம். அதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நடராஜாவும் ஏற்பாட்டுக் குழுவுக்குப் பின்னால் இருக்கும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், நாங்கள் “மூளை சலவை செய்கின்றோம்” என்றும் “நாங்கள் சொல்வது பிழை” என்று எங்கள் மீது எரிந்து விழுவது, இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்க்க கொள்கையை தெளிவுபடுத்தி, அதைச் சூழ அவர்களை அணிதிரட்டுவதற்காக முன்னெடுக்கின்ற போராட்டத்துக்கு எதிராகவே ஆகும். ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ அமைப்பினுள் தமிழ் மக்களை அடைத்து வைத்து, தங்களின் வரப்பிரசாதங்களை தக்கவைத்துக்கொள்வதே அவர்களின் நோக்கமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் முன்னெத்த முன்னெடுத்து வரும் தேசியவாத அரசியல், தமிழ் மக்களுக்கு மிகவும் தீங்கு விளைவிகக் கூடியதாகும்.
உலக சோசலிச வலைத் தளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மார்க்சிச வெளியீடாகும். அது, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு நாட்டிலும் போராடுகிறது. அனைத்துலகக் குழுவின் கிளைகளாக சோசலிச சமத்துவக் கட்சிகள் இந்த இணையதளம் மூலம் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றன
உலக சோசலிச வலைத் தளம், அனைத்துலகக் குழு மற்றும் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள முதலாளித்துவ வர்க்கம் மேற்கொண்ட அனைத்து வகையான பாரபட்சங்களுக்கும், போருக்கும் எதிராக, அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் போராடிய புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளன. ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியான இலங்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை தூக்கி எறிந்து, தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்காகப் போராடுவதே எமது வேலைத்திட்டமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டனம் செய்! உலகத் தமிழ் தேசிய முதலாளித்துவ அமைப்புகளுக்கு எந்த ஆதரவும் கொடுக்காதே! சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப இணைந்திடு!
உலக சோசலிச வலைத் தளத்தை வாசித்து அதைக் கட்டியெழுப்புவதில் இணையுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
