முன்னோக்கு

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் விலைகள்: ஆளும் வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்களை விலைகொடுக்க வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போருக்குப் பிந்தைய பணவீக்கமும், 1929 பங்குச் சந்தை வீழ்ச்சியின் விளைவுகளும் உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கங்களின் பெரும் பகுதியினரின் வாழ்வாதாரத்தை அழித்த ஒரு நூற்றாண்டின் பின்னர், இப்போது ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்கிறது. உயர் பணவீக்கமும், குறைந்த ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டதன் ஒருங்கிணைந்த விளைவுகளின் கீழ், இன்று வருமானம் மழையில் பனி போல் கரைந்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகமான யூரோஸ்டாட்டின் கூற்றுப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளில் நுகர்வோர் விலைகள், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இந்த ஜூலை மாதத்தில் 9.8 சதவீதம் அதிகமாக இருந்தது. 16 நாடுகளில் இதைவிட அதிகமாக உள்ளன. பால்டிக் நாடுகள் முன்னணியில் உள்ளன. அங்கு பணவீக்கம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து செக் குடியரசு, பல்கேரியா, ஹங்கேரி மற்றும் போலந்து ஆகியவற்றில் விலைகள் 14 முதல் 17 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லாத இங்கிலாந்தில், பணவீக்கம் 12 சதவீதமாக உள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் 18 சதவீதமாக உயரலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமானம் எங்கும் இல்லை. எடுத்துக்காட்டாக, ஜேர்மனியில் ஊதியங்கள் 2.9 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளன. விலைகள் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளன. மத்திய புள்ளிவிபர அலுவலகம் கணக்கிட்டுள்ளபடி, உண்மையான ஊதியம் ஒரு வருடத்திற்குள் சராசரியாக 4.4 சதவீதம் குறைந்துள்ளது. 2020 மற்றும் 2021 தொற்றுநோய் ஆண்டுகளில் உண்மையான ஊதியங்கள் ஏற்கனவே சுருங்கிவிட்டன. ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் பணவீக்கத்தின் உண்மையான தாக்கத்தை அரிதாகவே பிரதிபலிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, உணவு, எரிவாயு, மின்சாரம் மற்றும் பெட்ரோலின் விலைகள், குறிப்பாக தொழிலாள வர்க்க குடும்பங்களின் மீது பெரும் சுமையை சுமத்துகின்றன. இவை சராசரிக்கும் அதிகமான விகிதத்தில் உயர்ந்து இப்போது வெடிப்புடன் அதிகரிக்கின்றன. இது மில்லியன் கணக்கான உழைக்கும் குடும்பங்களுக்கு பட்டினியா அல்லது குளிரால் உறைவதா என்ற மாற்றீட்டை முன்வைக்கின்றது. இந்த இரண்டையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பலர் உள்ளனர்.

ஜேர்மனியில், உணவுப் பொருட்களின் விலை 12.7 சதவீதமும், எரிபொருளின் விலை 38 சதவீதமும் ஓராண்டுக்கு முன்பு உயர்ந்துள்ளது. பல அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் அக்டோபர் 1 ஆம் தேதி காலாவதியாவதாலும் மற்றும் எரிவாயுவிற்கான மேலதிக கட்டணம் நடைமுறைக்கு வருவதால் விலைகள் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேலதிக கட்டணம், ரஷ்ய எரிசக்தி விநியோகங்களின் இழப்பிற்கு எரிசக்தி நிறுவனங்களுக்கு நஷ்டஈடாக அனைத்து இறுதி பயனர்களுக்குமான ஒரு வகையான சிறப்பு வரியாகும். கூடுதலாக, மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான உயர் உலக சந்தை விலைகள் வீட்டுக் கட்டணங்களின் மீது சுமத்தப்பட தொடங்கியுள்ளது. ஐரோப்பிய எரிசக்தி பரிமாற்றத்தில் (EEX) மின்சாரத்தின் விலை சில சந்தர்ப்பங்களில் 20 மடங்கு உயர்ந்துள்ளது. எனவே இந்த குளிர்காலத்தில் பணவீக்க விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று Bundesbank எதிர்பார்க்கிறது.

இங்கிலாந்தில், அக்டோபர் 1 ஆம் தேதி, குடும்பங்களுக்கான உத்தியோகபூர்வ எரிசக்தி விலை வரம்பு ஆண்டுக்கு 80 சதவீதம் அதிகரித்து 3,549 பவுண்டுகளாக (4,200€) உயர்த்தப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரலில் 7,200 பவுண்டுகளாக மேலும் இரட்டிப்பாகும். அக்டோபர் 2020 இல் ஒரு வருடம் முன்பு அதிகபட்ச விலை வரம்பு 1,042 பவுண்டுகளாக ஆக இருந்தது. இதன் விளைவாக அனைத்து பிரிட்டிஷ் குடும்பங்களில் 50 சதவீதத்தினர் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை சூடேற்ற முடியாததால் இறப்பார்கள் என தேசிய சுகாதார சேவை (National Health Service) மதிப்பிடுகிறது.

நெதர்லாந்தில் (பணவீக்க விகிதம் 11.6 சதவீதம்), விலைவாசி உயர்வு அதன் 17.4 மில்லியன் மக்களில் 1.4 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளும் அபாயம் உள்ளது என அரசாங்கத்தின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐந்தில் ஒரு டச்சு குடும்பம் இந்த குளிர்காலத்தில் எரிவாயு மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில், ஊதியங்கள் குறைவாகவும், விலை உயர்வு அதிகமாகவும் இருக்கும் நிலையில், நிலைமை இன்னும் பேரழிவு தரக்கூடியது. எடுத்துக்காட்டாக, ஜூலை மாதத்தில் ருமேனியாவில் மின்சாரம் போலந்தில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், பின்லாந்தை விட ஆறு மடங்கு அதிகமாகவும் இருந்தது.

அரசாங்கங்கள் பணவீக்கத்தையும் அதன் சமூக விளைவுகளையும் ஒரு முன்எதிர்பாராத இயற்கை பேரழிவாக அல்லது 'உக்ரேனில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க' செய்யப்பட வேண்டிய தியாகங்களாக சித்தரிக்கின்றன. ஆனால் அவை அப்பட்டமான பொய்களாகும். உண்மையில், மக்கள்தொகையின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல் என்பது, 1980களில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதிகரித்துவரும் தீவிரத்துடன் நிதிய தன்னலக்குழு நடத்தி வரும் வர்க்கப் போரின் பாரிய விரிவாக்கமாகும்.

நிதி நெருக்கடி மற்றும் தொற்றுநோய்களின் போது எடுத்துக்காட்டப்பட்டதைப் போலவே, ஊதியங்கள் வீழ்ச்சியடையும் போது இலாபங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன என்பதன் மூலம் இது காட்டப்படுகிறது.

இதற்கு உதாரணமாக இருப்பது பிரிட்டனாகும். பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களின் (FTSE 350) இலாப வரம்புகள், தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டான 2019ஐ விட 73 சதவீதம் அதிகமாகும். தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் (ONS) படி, பெருநிறுவன இலாபங்கள் அக்டோபர் 2021 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் மட்டும் 11.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் ஊதியங்கள் 2.6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளன. பணவீக்கத்தினை கணக்கில் எடுக்கும்போது 1 சதவிகிதத்திற்கு சற்று குறைவாக உள்ளது.

பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இலாபத்தில் மிதக்கின்றன. பெரிய ஆறு பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களான ExxonMobil, Chevron, Shell, BP, TotalEnergies மற்றும் Eni ஆகியவை 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 64 பில்லியன் டாலருக்கும் அதிகமான இலாபத்தைப் பதிவு செய்துள்ளன. அதில் பாதி பங்குதாரர்களை இன்னும் செல்வந்தராக்க பங்குகளை வாங்குதல் மற்றும் ஈவுத்தொகையைப் பகிர்ந்து கொள்ளச் சென்றது. உழைக்கும் குடும்பங்களிடமிருந்து வெப்பமூட்டுவதற்காகவும், மின்சாரத்திற்காகவும் திருடிக் கொள்ளப்படும் பாரியளவிலான தொகைகள் நேரடியாக பெரும் பணக்காரர்களின் வங்கிக் கணக்குகளில் வந்து சேரும்.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியப் போருக்கும் வர்க்கப் போருக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை எடுத்துக் காட்டுகின்றன.

உக்ரேன் பற்றிய உத்தியோகபூர்வ பிரச்சாரம் நிலைமையை சித்தரிப்பதற்கு மாறாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் நடத்தி வரும் பினாமி போர் 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றிற்கான போர் அல்ல. மாறாக உலகை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்தியப் போர் ஆகும். பால்கன், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் பிற இடங்களில் நடந்த குற்றவியல் போர்களின் பின்னணியில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மூலப்பொருட்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் யூரேசிய நிலப்பரப்பு பகுதியில் மூலோபாய மேலாதிக்கத்தைப் பெறவும் முயன்றன.

உக்ரேன் போர் பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்ய தாக்குதலுடன் தொடங்கவில்லை. மாறாக உக்ரேனில் ஒரு மேற்கத்திய கைப்பாவை ஆட்சியை நிறுவி, உக்ரேனிய இராணுவத்தினை திட்டமிட்டு ஆயுதமயமாக்கி மற்றும் ரஷ்யாவிற்கு எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்க மறுத்து நேட்டோ ரஷ்யாவை திட்ட்டமிட்டு சுற்றி வளைத்தது.

ரஷ்ய தன்னலக்குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி புட்டின், சிந்திக்கக்கூடிய அனைத்து பிரதிபலிப்புகளிலும் மிகவும் பிற்போக்குத்தனமாக பதிலளித்தார். அவர் உக்ரேனை இராணுவ ரீதியாக தாக்கி மிகவும் வலதுசாரி, தேசியவாத சக்திகளை வலுப்படுத்தி மற்றும் நேட்டோவிற்கு போருக்கு தேவையான சாக்குப்போக்கை வழங்கினார். அப்போதிருந்து, நேட்டோ உலகின் இரண்டாவது பெரிய அணுசக்தியுடன் மோதலை இரக்கமின்றி முன்னோக்கி செலுத்தி வருகிறது, உக்ரேனுக்கு ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கி, போர் முயற்சியை திறம்பட வழிநடத்துகிறது.

அவ்வாறு செய்வதன் மூலம், அது உறுதியான பொருளாதார மற்றும் புவி மூலோபாய இலக்குகளை பின்தொடர்கிறது: ரஷ்யாவை காலனித்துவரீதியாக அடிபணியவைத்தல், அதன் பரந்த நிலப்பரப்பை சுற்றிவளைப்பது, அதன் வழமிக்க மூலப்பொருட்களை கொள்ளையடித்தல் மற்றும் சீனாவின் ஒரு சாத்தியமான கூட்டாளியை அகற்றுதலும் அடங்கும்.

20 ஆம் நூற்றாண்டின் அனைத்து அனுபவங்களும், ஏகாதிபத்திய போர்களுக்கு உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான இரக்கமற்ற ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் தேவை என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகள், வைத்தியசாலைகள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவை உடைந்த நிலையில், மறுஆயுதமாக்குதலுக்கான செலவை அது ஏற்க வேண்டியுள்ளது. போருக்கான தயாரிப்புகளாலும் போரினாலும் ஏற்பட்ட உலகப் பொருளாதாரத்தின் வன்முறைச் சீர்குலைவுகளின் விளைவுகளுள்ளும் அது சிக்கியுள்ளது.

பணவீக்கம் என்பது, இது நிகழும் வடிவங்களில் ஒன்றாகும். அரசாங்கங்களும் ஊடகங்களும் ரஷ்ய எரிசக்தி விநியோகங்களிலிருந்தும் அல்லது சீன கணினி சில்லுகள் மற்றும் மின்சார வாகன மின்கலங்களில் இருந்து விடுபடுவதற்கும் மக்கள் 'தியாகங்களை' செய்ய வேண்டும் என்று பிரசங்கிக்கும்போது, அவர்கள் உண்மையில் போரைப் பற்றி பேசுகிறார்கள்.

ஹிட்லரும் முசோலினியும் இரண்டாம் உலகப் போருக்குத் தயாரானபோது தேசிய தன்னிறைவை ஊக்குவித்தனர். ஆனால் பாசிச தேசியவாதம் 'தேசிய எல்லைகளுக்குள் பொருளாதாரத்தை அமைதிப்படுத்தவில்லை. மாறாக உலக அரங்கில் எரிமலை வெடிப்புகள் மற்றும் பிரமாண்டமான மோதல்களை தயார்படுத்தியது' என்று லியோன் ட்ரொட்ஸ்கி 1933 இல் 'தேசியவாதமும் பொருளாதார வாழ்வும்' என்ற கட்டுரையில் எழுதினார். இன்று மீண்டும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

அதே நேரத்தில் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரையும் சீனாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்புகளையும் நிராகரிக்காமல் பணவீக்கத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவது சாத்தியம் என்று தொழிலாளர்களுக்கு உறுதியளிப்பவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்கள். போரையும் இராணுவவாதத்தையும் நிராகரிக்காமல் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க முடியாது.

ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும், தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மீண்டும் போராடுகிறார்கள். சமூக வெட்டுக்கள் மற்றும் அதிக ஊதியங்களுக்கான வேலைநிறுத்தங்களுக்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த போராட்டங்களுக்கு தெளிவான நோக்குநிலை மற்றும் முன்னோக்கு தேவை. அவை முதலாளித்துவத்திற்கு எதிரான ஐரோப்பிய மற்றும் உலகளாவிய சோசலிச இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களும் அவர்களின் அரசியல் ஆதரவாளர்களும் இதனைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். தேசியவாத அடிப்படையில், அவர்கள் தங்கள் அரசாங்கங்களின் போர்க் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பதுடன், தொழிலாளர்களின் போராட்டங்களைத் தனிமைப்படுத்தவும், ஒடுக்கவும், காட்டிக்கொடுக்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். உயர் ஊதியம் பெறும் தொழிற்சங்க அமைப்பின் ஆதரவு இல்லாமல், சமீபத்திய ஆண்டுகளின் உண்மையான ஊதிய வெட்டுக்களையும் பணிநீக்கங்களையும் நிறுவனங்களால் செயல்படுத்த முடியாது.

வாழ்க்கைத் தரத்தை வெற்றிகரமாகப் பாதுகாப்பதற்கான முன்நிபந்தனையானது, தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்வதும், ஊதியக் குறைப்புக்கள், விலைவாசி உயர்வுகள், சமூக நலன்புரி வெட்டுக்கள் மற்றும் பணிநீக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைக்கும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது ஆகும். அத்தகைய உலகளாவிய தொழிலாள வர்க்க எதிர்த்தாக்குதலைத் தொடங்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை (IWA-RFC) உருவாக்கியுள்ளது.

Loading