மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சனிக்கிழமை இரவு இரண்டு மணி நேர குழப்பமான வாயடிப்பில் டொனால்ட் ட்ரம்ப், ட்ரம்பினாலும் MAGA குடியரசுக் கட்சியினரால் முன்வைக்கப்படும் சர்வாதிகாரத்தின் ஆபத்து மற்றும் மார்-ஏ-லாகோவில் கடந்த மாதம் FBI இன் பரிசோதனையை 'தீவிர இடதுபுறத்தில் இருந்து' ஜனநாயகத்தின் மீதான முன்னோடியில்லாத தாக்குதலாக குறிப்பிட்டு, பைடெனின் செப்டம்பர் 1 உரையை கண்டித்து, ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மீது குற்றத்தை திருப்ப முயன்றார்.
நவம்பர் இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியினருக்கான நிதி திரட்டும் ஒரு உரையுடன் பிரச்சாரத்தினை பைடென் ஆரம்பித்த பின்னர், பென்சில்வேனியாவில் உள்ள Wilkes-Barre இல் பல ஆயிரம் ஆதரவாளர்கள் முன்னிலையில் ட்ரம்ப் பேசினார். பைடன் தனது உரையில் ட்ரம்பை ஒரு அரை பாசிசவாதி எனக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து வியாழன் இரவு பிலடெல்பியாவில் உள்ள சுதந்திர மண்டபத்தின் முன் அவர் ஆற்றிய அமெரிக்க வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாத உரையில் அவர் ட்ரம்பின் கீழ் உள்ள குடியரசுக் கட்சி, அரசியலமைப்பை தூக்கியெறிந்து அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள அச்சுறுத்தும் ஒரு வெகுஜன பாசிச இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது என்று முக்கியமாக எச்சரித்தார்.
சனிக்கிழமையன்று நடந்த முழு நிகழ்வும் குடியரசுக் கட்சியின் பாசிசத் தன்மையையும், கட்சித் தலைமையின் ஆதரவுடன் ட்ரம்பின் தொடர்ச்சியான முயற்சிகளையும் உறுதிப்படுத்தியது. பைடெனின் வார்த்தைகளில், 'அமெரிக்காவில் தேர்தல்களை கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கவும், ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைப்பதற்கு தேர்தல் மறுப்பவர்களுக்கு அதிகாரம் அளிக்க முனைவதாக' குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் மீதான பாரிய சமூக கோபத்தையும் வெறுப்பையும் சுரண்டிக் கொள்ளும் ட்ரம்பின் திறமையை பேரணி அடிக்கோடிட்டுக் காட்டியது. ஜனநாயகக் கட்சி அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு வேரூன்றிய கட்சிகளில் ஒன்றாகும். இது ஆளும் வர்க்கத்தின் ஏனைய கட்சிகளைப்போல பல தசாப்தங்களாக போர், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, பொருளாதார சுரண்டல் மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒடுக்குதல் ஆகியவற்றை மேற்பார்வை செய்தது.
உதாரணமாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் பினாமி போர் குறித்து அதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று தெரிந்து பைடென் அமைதியாக இருந்தபோதும், ட்ரம்ப் போருக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட 80 பில்லியன் டாலர்களை கண்டித்து, அது நூறாயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுப்பதில் முடியும் என்று எச்சரித்தது கவனத்திற்குரியது.
ட்ரம்பின் ஆளும் ஸ்தாபகத்திற்கு எதிரான வாய்வீச்சுக்கு பின்னால் உள்ள உண்மையான பொருளாதார மற்றும் வர்க்க நலன்களை அம்பலப்படுத்த பைடனின் இயலாமை மற்றும் அவரது சொந்த கொள்கைகளை ட்ரம்ப் பயன்படுத்திக் கொண்டார். மாறாக, 2020 இல் ட்ரம்பிற்கு வாக்களித்த ஏராளமான உழைக்கும் மக்கள் உட்பட, 74 மில்லியன் மக்கள் மீது சர்வாதிகாரத்திற்கான ஆபத்தை மறைமுகமாகக் குற்றம்சாட்டிய ஒழுக்கரீதியான சொற்றொடர்களில் அவர் ஈடுபட்டார். அவர்களில் பெரும்பாலோர் தொழிலாள வர்க்கத்திற்கு ஜனநாயகக் கட்சி வெளிப்படையாகப் முதுகைகாட்டிய பின்னர் இயல்பாகவே ட்ரம்பிடம் சென்றனர்.
பைடெனின் உரை, 'மக்கள்தொகையில் பாதி பேரை பேய்களாக்கும்' முயற்சி என்று ட்ரம்ப் தாக்கினார். அவர் ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க காங்கிரஸ் மீதான தாக்குதலைப் பாதுகாத்து, பைடெனின் வெற்றியினை உறுதிப்படுத்தவதை தடுப்பதற்காக, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களைக் கடத்த அல்லது கொல்ல முயன்றவர்கள் மீது வழக்குத் தொடுத்து சிறையில் அடைப்பதைக் கண்டித்து, ட்ரம்ப் அவர்களை “அரசியல் ஆர்ப்பாட்டக்கார்கள்' என்றார்.
அவரது பாசிச அரசியலின் கையிருப்பில் இருக்கும் தீவிர வலதுசாரி கருப்பொருள்களான, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இனவாதம், தீவிர தேசியவாதம், மத வெறி, கருக்கலைப்பு எதிர்ப்பு போராட்டம், சட்டம் மற்றும் ஒழுங்கு, காவல்துறையும் இராணுவத்தையும் பெருமைப்படுத்தல், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகள் அனைத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். இவை அனைத்தும் சோசலிசத்தின் மீதான வெறித்தனமான கண்டனங்களால் உருவாக்கப்பட்டவை.
ஜனாதிபதியின் பதிவேடுகள் மற்றும் இரகசிய ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக அவரது புளோரிடா வளாகத்தில் ஆகஸ்ட் 8 அன்று FBI சோதனை நடத்தியதைக் கண்டித்து, ட்ரம்ப் பைடெனை 'அரசின் எதிரி' என்று அழைத்ததுடன், FBI இனை 'தீய அரக்கர்கள்' என்று முத்திரை குத்தினார்.
நவம்பர் தேர்தல்களில் பென்சில்வேனியாவில் மாநிலம் தழுவிய பதவிக்கு போட்டியிடும் குடியரசுக் கட்சியினரின் பிரச்சாரங்களை ஊக்குவிப்பதே பேரணியின் பெயரளவு நோக்கமாக இருந்தது. தொலைக்காட்சி பிரபல்மான டாக்டர். மெஹ்மெட் ஓஸ் அமெரிக்க செனட்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை ஆளுனருமான ஜோன் பெட்டர்மேனுக்கு எதிராக போட்டியிடுகிறார். தற்போதைய ஜனநாயக கட்சியின் அரச வழக்குத்தொடுனரான ஜோஷ் ஷாபிரோவை எதிர்த்து மாநில செனட்டர் டக் மாஸ்ட்ரியானோ ஆளுனர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
பெட்டர்மேனையும் ஷாபிரோவையும் சோசலிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்டுகள் என்று ட்ரம்ப் தாக்கினார். 'பெட்டர்மேன் ஒரு பொலிஸிற்கான பணத்தை திசைதிருப்பும் மார்க்சிஸ்ட்' என்று அவர் அறிவித்தார். ஜோர்ஜ் சோரோஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் சாத்தானிச, நரமாமிச குழந்தை பாலியல் கடத்தல் வளையத்தின் பின்னணியில் இருப்பதாக நம்பும் பாசிச QAnon சதிக் கோட்பாட்டின் ஆதரவாளர்களுக்கு வேண்டுமென்றே வேண்டுகோள் விடுத்த அவர், பெட்டர்மேனையும் ஷாபிரோவையும் 'குழந்தைகளைக் கொன்று துண்டாடுவதை நம்பும் இரண்டு நோயாளிகள்' என்று அழைத்தார்.
மாஸ்ட்ரியானோ ஒரு முற்றுமுழுதான பாசிசவாதியாவார். அவர் 1986 முதல் 2017 வரை இராணுவத்தில் பணியாற்றி, உளவுத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியதுடன் மற்றும் 1991 இல் பாலைவனப் புயல் படையெடுப்பின் போது ஈராக்கில் கடமையாற்றினார். பின்னர் அவர் அமெரிக்க இராணுவப் போர்க் கல்லூரியில் பல ஆண்டுகள் கற்பித்தார். அந்த காலகட்டத்தில் அவர் ஒரு ஆய்வறிக்கையை எழுதினார். அதில் அவர் இராணுவத்தின் மீதான பொதுக்கட்டுப்பாட்டின் கொள்கையை நிராகரித்தார்.
அவர் தேர்தலை மறுப்பவராவார். ஜனவரி 6 ஆம் தேதி எலிப்ஸில் நடந்த ட்ரம்பின் பேரணியில் கலந்து கொள்ள பென்சில்வேனியாவில் இருந்து ஏராளமான மக்களை அவர் ஒழுங்கு செய்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாஸ்ட்ரியானோ கேபிடல் தாக்குதலில் பங்கேற்றதை மறுத்தார். இருப்பினும், பின்னர் அவர் போலீஸ் தடுப்புகளைத் தாண்டி கட்டிடத்திற்குள் செல்வதைக் காட்டும் ஒளிப்பதிவுகள் வெளிவந்தது.
மாநில செனட்டில், 2020 தேர்தலுக்குப் பின்னர், பைடெனுக்கு கிடைத்த பென்சில்வேனியாவில் மக்கள் வாக்கைப் புறக்கணித்து, ட்ரம்ப் சார்பு வாக்காளர்களை நியமிப்பதற்கு குடியரசுக் கட்சி தலைமையிலான சட்டமன்றத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை அவர் இணைத்தார்.
அவர் ஒரு கிறிஸ்தவ தேசியவாதியும், தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பதை நிராகரிப்பவருமாவர். பொதுப் பள்ளிகளில் பாரிய வெட்டுக்களைக் கோருவதுடன், கற்பழிப்பு, பாலுறவு அல்லது தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவற்றிற்கு கூட விதிவிலக்கு கொடுக்காமல் கருக்கலைப்புகளுக்கு முழு தடை விதிக்கிறார். கருக்கலைப்புக்கு உதவி செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநராக இருந்தபோது அவரது திட்டத்தில் பென்சில்வேனியாவில் இருந்து அனைத்து ஆவணமற்ற குடியேறியவர்களையும் அகற்றுவது மற்றும் அதாவது குழந்தைகளாக அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட ஆவணமற்ற நபர்களான DACA உதவிபெறுநர்களை நாடு கடத்துவது ஆகியவை அடங்கும்.
அவர் ஒரு QAnon ஆதரவாளர் ஆவார். அவர் ஜோர்ஜ் சொரோஸை நாஜி என்று கண்டித்தார். அவர் யூத-விரோத சமூக ஊடக தளமான Gab உடன் ஆலோசனை சேவைகளுக்கு பணம் செலுத்தினார். Gab இல், 2018 Tree of Life யூத ஆலய பாரிய படுகொலை கொலையாளி தனது தாக்குதலை நடத்துவதற்கு சற்று முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
சனிக்கிழமை இரவு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ட்ரம்ப்பால் மேடைக்கு அழைத்து வரப்பட்ட மாஸ்ட்ரியானோ, “நவம்பர் எட்டாம் தேதி நாங்கள் எங்கள் மாநிலத்தை புயலால் திரும்பப் பெறுவோம். அது சரி - மீண்டும் புயலால்' என்றார்.
QAnon இன் கூற்றுப்படி, 'புயல்' என்பது ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ வளைகுடா சிறைக்கு அனுப்பப்படும் அல்லது இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளும் வன்முறைக் கணக்கீட்டு நாளாகும். அதன் பின்னர் இராணுவம் அதிகாரத்தை எடுத்து ஒரு சர்வாதிபத்தியத்தை நிறுவும்.
ட்ரம்பும் குடியரசுக் கட்சித் தலைமையும் பைடெனின் பிலடெல்பியா உரையையும், மார்-ஏ-லாகோ மீதான FBI இன் சோதனையையும் பயன்படுத்தி பாசிசவாதிகளை தங்களுக்கு ஆதரவாக தூண்டிவிட முயலுகையில், ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளும், ட்ரம்பை விமர்சிக்கும் பெருநிறுவன ஊடகங்களும் ட்ரம்பை பாசிசவாதி என என்று முத்திரை குத்துவதற்கான பைடெனின் மாற்றத்திற்கு பதட்டத்துடன் எதிர்வினையாற்றியுள்ளன. முழு ஜனநாயகக் கட்சியும் வாஷிங்டனைக் குடியரசுக் கட்சி கையகப்படுத்துவதன் சீர்குலைவான விளைவுகளைப் பற்றி அஞ்சுகிறது என்றாலும் அது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக இயக்கத்தின் உருவாக்கம் தொடர்பாக அதைவிட அதிகமாக பயப்படுகின்றன.
ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான வாஷிங்டன் போஸ்ட்டின் செப்டம்பர் 2 தலையங்கத்தில் இது சுருக்கமாக குறிப்பிடப்பட்டது. இது பைடெனின் பேச்சை 'கிளர்ச்சியானது' என்று விமர்சித்து ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என தலையங்கமிட்டது. பைடென் தேசபக்தியைத் தூண்ட வேண்டுதே தவிர கிளர்ச்சியை அல்ல என்ற அந்தக் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்' என்று போஸ்ட் எழுதியது. பைடென் 'அடிக்கடி' 'ஒரு ஜனநாயகவாதியாக ஒலிப்பதை விட கூடுதலாக ஒரு ஜனநாயகவாதி போல்' ஒலிக்கிறார். மேலும் அவர் 'சட்டத்தின் ஆட்சியை சொந்த கட்சி நிகழ்ச்சி நிரல் மூலம் நிலைநிறுத்துவதுடன் தொடர்புபடுத்துவது தவறு' என்று புகார் கூறியது.
குறிப்பாக, Roe v. Wade தீர்ப்பை இரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீதான பைடெனின் மறைமுகத் தாக்குதலைப் போஸ்ட் தடுத்தது. ‘‘MAGA சக்திகள்’ மட்டும் அல்ல பல பழமைவாதிகள் தீர்ப்பை ஒப்புக்கொள்கிறார்கள்” என்று கவலைப்பட்டது.
அதேவேளை போஸ்ட், ஜனநாயகத்திற்கான ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பு எனப்படுவதை ஏளனப்படுத்தி, இது கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் முக்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப் சார்பான தேர்தல் நிராகரிப்பாளர்களால் கட்சிக்கு பாரியளவில் நிதி வழங்கப்பட்டதால் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றது எனக் குறிப்பிட்டது. பைடெனின் தொடர்ந்தும் ஆதரவு தேடும் 'முக்கிய நீரோட்ட' குடியரசு கட்சியினரை விட, தேர்தல்களை முறியடிக்கத் தயாராக இருக்கும் வெளிப்படையான பாசிசவாதிகள் பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவது எளிதாக இருக்கும் என்று கணக்கிடுகின்றது. அவர்களின் மாஸ்ட்ரியானோவும் இருப்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டது.
'பென்சில்வேனியாவின் ஆளுநருக்கான போட்டியில், ஜனநாயகக் கட்சியின் ஆளுனர் வேட்பாளரும், மாநில அரச வழக்குத்தொடுனருமான ஜோஷ் ஷாபிரோ, குடியரசுக் கட்சியின் ஆளுனர் வேட்பாளர் மற்றும் மாநில செனட். டக் மாஸ்ட்ரியானோவின் நிலைப்பாடுகளை எடுத்துக்காட்டும் வகையில், தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு 840,000 டாலர்கள் வழங்கினார். இது மாஸ்ட்ரியானோ வாங்கும் விளம்பரத்தை விட இரண்டு மடங்காகும்.
'ஷாபிரோவின் விளம்பரங்கள் மாஸ்ட்ரியானோவை... 'ட்ரம்பின் வலிமையான ஆதரவாளர்களில்' ஒருவராக அழைக்கின்றன. மேலும் 2020 ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டது என்ற அவரது நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.
''நான் அவருக்கு நன்றி வாழ்த்து அட்டையை அனுப்ப வேண்டும்' என ஷாபிரோவின் விளம்பரங்களைப் பார்த்த பின்னர் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் மாஸ்ட்ரியானோ கூறினார்.
உலக சோசலிச வலைத் தளம் அதன் செப்டம்பர் 2 முன்னோக்கு பத்தியில் விளக்கியது போல், சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தின் ஆபத்துக்கான பதில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியாகும். இது ஒரு சோசலிச பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடனான அதன் கூட்டணியால் தொழிலாள வர்க்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடைக்கும் அளவிற்கு மட்டுமே உண்மையான வர்க்க அணிதிரளல் முன்னுக்கு வர முடியும். இது தொழிலாள வர்க்கத்தின் பரந்த வெகுஜனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சோசலிச பொருளாதார மற்றும் அரசியல் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே ட்ரம்ப் இயக்கத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் அம்பலமாகும்.
ட்ரம்ப் ஒரு வெகுஜன அடித்தளத்தைக் கொண்டிருக்கும் அளவுக்கு, முக்கால்வாசி இல்லாவிட்டாலும், அதில் மூன்றில் இரண்டு பங்கு அவரது வார்த்தையாடல்களின் சூடேற்றும் தன்மையால் நிலைத்திருக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி அவரது பலூனை வெடிக்கச் செய்யும்.
மேலும் படிக்க
- ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பதில் இல்லா கேள்விகள்
- ட்ரம்பின் தலைமை தளபதி ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை முடுக்கிவிட்டார் என்பதை குறுஞ்சேதிகள் அம்பலப்படுத்துகின்றன
- ஜனவரி 6 விசாரணை, தேர்தலை முறியடிக்க ட்ரம்ப் பாசிச வன்முறைக்கு அழைப்பு விடுத்ததை விவரிக்கின்ற அதேவேளை, ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் இராணுவம் மற்றும் பொலிஸின் பங்கை மறைக்கிறது
