மக்ரோனின் பணவீக்கம் மற்றும் போர்க் கொள்கையை எதிர்த்து பிரெஞ்சு எரிசக்தி சுத்திகரிப்பு நிலையங்கள் வேலைநிறுத்தங்கள் செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டோட்டல் மற்றும் எஸ்ஸோ எரிசக்தி சுத்திகரிப்பு நிலையங்களில் செப்டம்பர் 27 அன்று வேலைநிறுத்தங்கள் தொடங்கியதையடுத்து பிரான்ஸ் முழுவதும் எரிசக்தி பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்களுக்கும் மறுபுறம் நேட்டோ கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதலுக்கான களத்தை அமைக்கிறது.

எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்கள் 10 சதவிகித உயர்வைக் கோருகின்றனர், இது பணவீக்கத்தையும், தங்கள் முதலாளிகளால் ஈட்டப்பட்ட பெரும் இலாபங்களில் பல பில்லியன் கணக்கான யூரோக்களையும் சுட்டிக் காட்டுகிறது. Gonfreville-l'Orcher, La Mède, Feyzin, Donges மற்றும் Grandpuits ஆகிய இடங்களிலுள்ள மொத்த சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதே போல் Notre Dame-de-Gravenchon மற்றும் Fos இலுள்ள எஸ்ஸோ சுத்திகரிப்பு ஆலைகளும் பாதிக்கப்படுகின்றன. Donges மற்றும் Grandpuits இல் வேலைநிறுத்த நடவடிக்கைகள் இந்த வார இறுதியில் நிறுத்தப்பட்டாலும், அது மற்ற சுத்திகரிப்பு ஆலைகளிலும் தொடர்கிறது.

தொழிற்சங்க புள்ளிவிவரங்களின்படி, சுத்திகரிப்பு தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். Feyzin சுத்திகரிப்பு ஆலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தின் பரந்த தாக்கத்தை செய்தி ஊடகத்திற்கு அளித்த கருத்துக்களில் வலியுறுத்தினர்: 'எங்களுடைய முழு சுத்திகரிப்பு ஆலையிலும் உற்பத்திப் பொருட்கள் வெளியேறுவதோ நுழைவதோ இல்லை. இதன் பொருள் நாளொன்றுக்கு 200 முதல் 250 டிரக்குகள் வரை, படகுகள் மற்றும் இரயில் கார்களை கணக்கெடுக்காமல், அவை இனி சுத்திகரிப்பு ஆலைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ இல்லை.'

மார்சேய் பகுதியிலும், பிரான்சின் வடக்கில் லில் மற்றும் டன்கிர்க்கைச் சுற்றிலும், இப்போது லியோன் பகுதியிலும் எரிவாயு நிலையங்கள் வறண்டு போகத் தொடங்கியுள்ளன. புதனன்று, வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்கள் பிரான்சின் மிகப் பெரிய சுத்திகரிப்பு ஆலையான Gonfreville-l'Orcher மற்றும் Notre-Dame-de-Gravenchon ஆகியவற்றிலும் இந்த நடவடிக்கையைத் தொடர வாக்களித்தன.

Fos இல், ஒரு தொழிற்சங்க உறுப்பினர் உலக சோசலிச வலைத் தளத்திடம், தொழிலாளர்கள் மத்தியில் பணவீக்கத்தின் மீதான சீற்றத்தால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டப்பட்டதாக கூறினார்: 'இது வருத்தமளிக்கிறது, எங்கள் நிறுவனம் ஒரே ஒரு காலாண்டில் 409 மில்லியன் யூரோக்களை ஈட்டுகிறது, ஆனால் அதன் ஊழியர்களின் வாங்கும் சக்தியைப் பாதுகாக்க அது இலாயக்கற்றது. அதனால்தான் தொழிலாளர்கள் மத்தியில் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்ற கோபம் இருந்தது. ... பிரான்சில் எல்லா இடங்களிலும், ஒருவர் சுத்திகரிப்பு ஆலைகளிலோ அல்லது சிறு வணிகங்களிலோ, நாடுகடந்த நிறுவனங்களிலோ அல்லது பொதுத்துறையிலோ வேலை செய்தாலும், ஒவ்வொருவரும் அதை எதிர்க்கின்றனர். எனவே இது அனைவருக்கும் முக்கியமானது ... விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் வாங்கும் சக்தியை மீண்டும் பெறுவதற்கு.'

உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோ போருக்கு மத்தியில் புதிய ஓய்வூதிய வெட்டுக்கள் பற்றிய மக்ரோனின் விவாதம் மீதான தொழிலாளர்களின் சீற்றத்தை மேற்கோளிட்டு, தொழிற்சங்க உறுப்பினர் மேலும் கூறினார்: 'பணவீக்கம் ஏற்கனவே 2021ல் தொடங்கிவிட்டது, ஆனால் பின்னர் உக்ரேனில் போர் பணவீக்கத்தின் கட்டுப்பாடற்ற வெடிப்பிற்கு, குறிப்பாக எரிசக்தி விலைகளுக்கு ஒரு ஊக்கியாக இருந்தது. கோவிட் நெருக்கடியைப் போலவே, உக்ரரேன் நெருக்கடியும் முதலாளித்துவத்தின் நெருக்கடியாகும்.'

டோட்டல் மற்றும் எஸ்ஸோவின் தொழிலாளர்கள் நிதியப் பிரபுத்துவத்தின் பணவீக்கக் கொள்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர், அது, தொழிலாளர்களை ஒரு பணியிடத்தில் அல்லது பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல, பிரான்சிலும் மற்றும் உலகம் முழுவதிலும் ஒரு வர்க்கமாக தாக்குகிறது. வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) அரசுகள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் வாங்கும் சக்தியை அழிப்பதன் மூலம் நெருக்கடியின் முழு சுமைகளையும் அதன் மீது சுமத்த முயற்சிக்கின்றன.

இந்த வேலைநிறுத்தம் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களை மக்ரோனுடன் மட்டுமல்லாமல், நிதியச் சந்தைகள் மற்றும் ரஷ்யாவுடனான போருக்கான தளமாக ஐரோப்பாவை பயன்படுத்தும் நேட்டோ கூட்டணியுடனும் நேரடி மோதலுக்குள் கொண்டுவருகிறது. அத்தகைய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது போர்க் கொள்கையை ஆதரிக்கும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கைகளில் இருந்து வேலைநிறுத்தத்தின் மீதான கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும்.

டோட்டலின் ஊதியப் போராட்டம் அதிகாரத்துவங்கள் ஏற்கனவே தொழிலாளர்களின் மிக அடிப்படையான நலன்களைப் பாதுகாப்பதில் முற்றிலும் தவறிவிட்டன என்பதை வெளிப்படுத்துகிறது. வங்கிகள் ரஷ்யாவுடனான நேட்டோ போருக்கு விடையிறுக்கும் வகையில் எரிசக்தி மீது ஊக வணிகம் செய்து, பாரியளவில் விலைகளை உயர்த்தியதோடு எண்ணெய் நிறுவனங்களின் இலாபங்களை அதிகரித்தன. ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் பணப்பைகளை சூறையாடி, அவர்கள் தங்கள் எரிசக்தி பயன்பாடுகளுக்கு பணம் கொடுத்து அல்லது தங்கள் எரிவாயு கலன்களைகளை நிரப்பியபோது, தொழில்துறையின் ஐந்து பெரிய நிறுவனங்கள் (Exxon, Chevron, Shell, BP மற்றும் Total) 2022 இன் இரண்டாவது காலாண்டில் 60 பில்லியன் யூரோக்களை இலாபத்தை ஈட்டின.

இந்த கோடையில், டோட்டல் தலைமை நிர்வாக அதிகாரி Patrick Pouyanné 2022 இல் மொத்த பங்குதாரர்களுக்கு 15 பில்லியன் டாலர் இலாபத்தை செலுத்தும் திட்டங்களை அறிவித்தார். வேலைநிறுத்தம் தொடங்கியவுடன், Pouyanné இன்னும் 2.62 பில்லியன் டாலர்கள் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக திருப்பித் தரப்படும் என்று அறிவித்தார்.

ஆயினும்கூட டோட்டல் பிரான்சில் அதன் ஊழியர்களுக்கு 3.5 சதவிகித உயர்வைத்தான் கொடுத்துள்ளது. பணவீக்கம் ஏற்கனவே பிரான்சில் 7 சதவிகிதமாகவும், ஐரோப்பா முழுவதிலும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் உள்ளது. இது உண்மையான ஊதியங்களில் 3.5 சதவிகித வெட்டுக்கு சமம்.

டோட்டல் தொழிலாளர்கள் மீதான தனது அவமதிப்பை வெளிக்காட்டுவது போல், Pouyanné தனக்குத்தானே 52 சதவிகித உயர்வைக் கொடுத்து, அவரது வருடாந்திர சம்பளத்தை 5.9 மில்லியன் யூரோக்களாகக் கொண்டுவந்தார். இது பிரான்சிலுள்ள ஒரு டோட்டல் தொழிலாளியின் சராசரி ஆண்டு ஊதியத்தை விட 167 மடங்கு அதிகமாகும்.

தொழிலாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதும், தொழிலாளர்களின் போராட்டங்கள் மீதான அவர்களின் இறுக்கமான பிடியை நசுக்குவதும், பணவீக்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை இன்னும் பரந்தளவில் அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் இந்தப் போராட்டத்தில் முன்னோக்கிய வழி ஆகும். இப்போராட்டம் Pouyanné க்கு எதிராக மட்டுமல்ல, மக்ரோனுக்கும், இறுதிப் பகுப்பாய்வில் ஐரோப்பாவை போர்க்கால அடிப்படையில் நிறுத்தும் முழு நேட்டோ கூட்டணிக்கும் எதிரானது. எரிவாயு நிலையங்கள் வறண்டு, மக்ரோன் அரசாங்கம் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுவதற்கு நகர்ந்தால், ஒரு பரந்த அணிதிரட்டல் மட்டுமே போதுமானதாக இருக்கும்.

அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக சக்திவாய்ந்த 2010 எரிசக்தி சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்து படிப்பினைகளைப் பெறுவது அவசியமாகும். பொருளாதாரத்தை நிறுத்தக் கூடிய எரிவாயு விநியோகங்கள் முற்றிலுமாக முறிவடைவதை எதிர்கொண்ட சார்க்கோசி அரசாங்கம் வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஒரு பலமுனை மூலோபாயத்தை வகுத்தது. அது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை இறக்குமதி செய்தது, பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருடன் ஒப்பந்தங்களைக் குறைத்தது, எரிசக்தி சுத்திகரிப்புத் தொழிலாளர்களை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துமாறு ஒரு கோரிக்கை (réquisition) ஆணையை வெளியிட்டது, மேலும் அந்த உத்தரவை மீறிய தொழிலாளர்களை தாக்க கலகம் அடக்கும் போலீசாரை அனுப்பியது மற்றும் அவர்களை வேலைக்குத் திரும்புமாறு சரீரரீதியாக கட்டாயப்படுத்தியது.

மற்ற தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களால் தனிமைப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்கள், சார்க்கோசியின் ஓய்வூதியக் குறைப்புக்கள் மிகப்பெருமளவில் செல்வாக்கற்றவையாக இருந்தபோதிலும் கூட, தோல்வியை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்: ஐரோப்பாவில் நடந்து வரும் பெரும் வல்லரசுக்கான போரும், அதிகரித்துவரும் பொருளாதாரச் சரிவும் தொழிலாளர்களைத் தாக்குவதில் மக்ரோனை இன்னும் ஆக்கிரோஷமானதாக மாற்றும். பிரெஞ்சு தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை ஆதரித்துள்ளன, மேலும் ஐரோப்பாவில் நேட்டோவின் போர் செயற்பட்டியலை அச்சுறுத்தும் தாக்குதல்களை தனிமைப்படுத்துவதிலும் காட்டிக் கொடுப்பதிலும் இன்னும் கூடுதலான கிறுக்குத்தனத்தை நிரூபிக்கும்.

பிரான்சிலும் அதற்கு அப்பாலும் வர்க்கப் போராட்டம் மீதான தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் பிடியை உடைப்பதற்கு, அடிமட்டத்தில் இருந்து சாமானியக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகிறது.

பிரான்சில் டோட்டல் மற்றும் எஸ்ஸோ தொழிலாளர்களின் போராட்டம், பணவீக்கம் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்களின் ஒரு சர்வதேச அலையின் ஒரு பகுதியாகும். போக்குவரத்து மற்றும் துறைமுக வேலைநிறுத்தங்கள் பிரிட்டனையும் தென்னாபிரிக்காவையும் உலுக்கி வருகின்றன. லெபனான், ஜேர்மனி, கிரேக்கம், நோர்வே, கொசோவா, ஹங்கேரி மற்றும் சேர்பியாவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலக ஏகாதிபத்தியத்தின் போர் அரங்கமான அமெரிக்காவில், இரயில்வே தொழிலாளர்களின் சீற்றம், வெள்ளை மாளிகையும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் தங்கள் முதுகுக்குப் பின்னால் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்கள் மீது பெருகி வருகிறது—இது ஒரு சக்திவாய்ந்த அமெரிக்க இரயில் வேலைநிறுத்தத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

பிரான்சிலேயே, வடக்கு பிரான்ஸ் முழுவதிலும் உள்ள Stellantis-Hordain மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரர்களின் சமீபத்திய திடீர் வேலைநிறுத்தம், தொழிலாளர்களிடையே வெடிக்கும் மனப்பான்மைக்கு சான்றாக உள்ளது.

பிரான்சில் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, தங்கள் சொந்த சாமானிய குழுக்களை அமைப்பதற்கும், சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கும் நேரம் கனிந்துள்ளது. அத்தகைய அமைப்புக்கள் மட்டுமே உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடையே பணவீக்கம் மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பை ஐக்கியப்படுத்தவும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலை தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் நாசவேலை செய்வதை தூக்கியெறியவும் முடியும்.

அமெரிக்க கார் தயாரிப்பு தொழிலாளியான வில் லெஹ்மனின் ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) தொழிற்சங்கத் தலைவருக்கான பிரச்சாரம், அதிகாரத்துவத்தைக் கலைத்துவிட்டு சாமானிய தொழிலாளர்களிடம் அதிகாரத்தைத் திரும்ப ஒப்படைக்க அழைப்பு விடுத்துள்ளது, அத்தகைய முயற்சிகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் வலுவான ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கிறது. பணவீக்கம், சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிராக ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் எதிர் தாக்குதலை தொடங்க சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தை அவர்கள் செயல்படுத்த முடியும்.

Loading