வேலைநிறுத்தம் செய்யும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு ஒற்றுமையாக பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாரிய வெளிநடப்பு செய்தனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 18, 2022, செவ்வாய்க்கிழமை, தெற்கு பிரான்சின் மார்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர் [AP Photo/Daniel Cole]

செவ்வாயன்று, பிரான்ஸ் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டதாக La Voix Iyceenne மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது. முற்றுகைகளின் உச்சமாக, செவ்வாய்க்கிழமை காலை நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியே சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தற்போது வேலைநிறுத்தம் செய்யும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு தங்கள் ஆதரவையும் மக்ரோன் அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

வேலைநிறுத்தம் செய்யும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பிட தொழிலாளர்கள் மீதான மக்ரோன் அரசாங்கத்தின் பணித்துறை செயல்முறை ஆணைக்கு (requisitioning) விடையிறுக்கும் வகையில் அக்டோபர் 18 அன்று தொழிற்துறை தழுவிய வேலைநிறுத்தத்துடன் இணைந்து மாணவர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பிரெஞ்சுத் தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு கொண்டு சென்ற, மக்ரோன் மற்றும் நவ பாசிச மரீன் லு பென்னின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை எதிர்த்து அதிக எண்ணிக்கையிலான உயர்நிலைப் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிகழ்வுக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பள்ளி வெளிநடப்புகளின் புதிய அலை இப்போது எழுந்துள்ளது.

L’Est Republican இடம் பேசிய உயர்நிலைப் பள்ளி மாணவி டோரா, “அதிகரித்து வரும் அடக்குமுறை மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக நாங்கள் இங்கு நிற்கிறோம்” என்று விவரித்தார். உயர்நிலைப் பள்ளிகளும் “எங்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும்', 'சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும்' எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் கூறினார்.”

டோரா மேலும், “நாங்கள் உயர்நிலைப் பள்ளி சீர்திருத்தம் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை [Parcoursup] முறையை எதிர்க்கிறோம்” என்று கூறினார். மக்ரோனின் தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளி சீர்திருத்தம் மற்றும் Parcoursup பல்கலைக்கழகத் தேர்வு முறை ஆகியவை தொழிலாள வர்க்க மாணவர்கள் உயர்கல்வியை அணுகுவதைக் கட்டுப்படுத்த நோக்கம் கொண்ட பரவலாக வெறுக்கப்படும் கொள்கைகளாகும்.

L’Alsace செய்தியிதழின் படி, கிழக்கு நகரமான முல்ஹவுஸில் 12 உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை பிரசுரத்திற்கு பேட்டியளித்த ஒரு மாணவர், வேலைநிறுத்தம் செய்யும் மாணவர்கள் ‘பொது வேலைநிறுத்த இயக்கத்தை ஆதரிப்பதாக’ கூறினார், மேலும், ‘எனக்கு 17 வயதுதான் ஆகிறது, என்றாலும் நானும் ஒரு எதிர்கால தொழிலாளி. ஊதிய உயர்வு பிரச்சினை நம் அனைவருக்கும் கவலையளிக்கிறது’ என்று கூறினார்.

அரசாங்கத்தின் பாரபட்சமான முஸ்லீம்-விரோத சட்டம் மற்றும் தேசிய கல்வியில் திணிக்கப்பட்ட ஆழமான வெட்டுக்களுக்கு எதிராகவும் பல மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரெஞ்சு பொதுப் பள்ளிகளில், இளம் முஸ்லீம் பெண்கள் தங்கள் தலைமுடி அல்லது முகத்தை ஏதேனும் ஒரு துணி கொண்டு மூடுவதற்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாந்தேர் இல் உள்ள லிசே ஜோலியோ-க்யூரி (lycée Joliot-Curie) பள்ளியில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும் உயர்நிலைப் பள்ளி எதிர்ப்பாளர்கள், தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர், அங்கு மாணவர்கள் கடந்த வாரத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் கடுமையாக ஆயுதம் ஏந்திய பொலிஸ்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர். செவ்வாய்க்கிழமை வெளிநடப்பின் போது, பிரான்ஸ் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் “Joliot-Curie க்கு ஆதரவு” என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அக்டோபர் 11 அன்று, நாந்தேர் இல் உள்ள ஜோலியோ-க்யூரி பள்ளி மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் ஆத்திரமூட்டும் வன்முறையை செயல்படுத்தியிருந்தது. பள்ளிக்குப் பிந்தைய பயிற்சித் திட்ட வெட்டு, மற்றும் அரசாங்கத்தால் பாரபட்சமாக திணிக்கப்படும் ஆடைக் குறியீட்டை எதிர்த்தும் மாணவர்களால் இந்த பள்ளி முற்றுகையிடப்பட்டது. அதையடுத்து பொலிசார் எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளையும் இரப்பர் தோட்டாக்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து 14 மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.

மீண்டும், திங்கட்கிழமை காலை, அதே பள்ளியில் எதிர்ப்பாளர்களை பொலிசார் தாக்கினர், மேலும் பிற பள்ளிகளிலும் மாணவர்களுக்கு எதிராக இதேபோன்ற தந்திரோபாயங்களை கையாண்டனர். மீண்டும் ஒருமுறை, ஜோலியோ-க்யூரி பள்ளியில் மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டது, மேலும் ஐந்து சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.

நாந்தேர் மாணவர்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வேலைநிறுத்தத்தின் போது, சார்செல் இல் உள்ள லிசே டு லா தூரெல் (Lycée de la Tourelle) பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசித் தாக்கினர். அன்று பிற்பகலில், பாரிஸ் அணிவகுப்பில் நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் மீது பொலிசார் பலமுறை குற்றம் சாட்டி தடியடி நடத்தியதால், பலர் காயமடைந்தனர்.

திங்களன்று Beaumont-Sur-Oise இல் உள்ள லிசே எவாரிஸ்ட்-கலுவா (lycée Evariste-Galois) உயர்நிலை பள்ளியில் 30 பொலிஸ் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் அறிக்கைகள் செவ்வாய் இரவு வெளியிடப்பட்டன. மீண்டும், பொலிசார் மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்கியதுடன், 3 பேரை கைது செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பள்ளிகளில் உள்ள நிலைமைகள் மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை எதிர்த்து வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை பொலிசார் வன்முறை கொண்டு ஒடுக்குகின்றனர். நவம்பர் 2020 இல், பாரிய அளவில் நிகழ்ந்த கோவிட்-19 நோய்தொற்று பரவல் மற்றும் மரணத்தின் போது பள்ளிகளை மீளத்திறப்பதை எதிர்த்த மாணவர்களும் வன்முறை கொண்டு அடக்கப்பட்டனர், அதில் இந்த ஆண்டு ஏப்ரலில் சோர்போன் உட்பட, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்த உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவர்.

அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் மீதான இளைஞர்களின் வெறுப்பை பிரதிபலிக்கும் வகையில், பாரிஸில் உள்ள லிசே எலென் புஷ்சே (lycée Hélène Boucher) உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளியை முற்றுகையிடுவது பற்றி BFMTV நிரூபர்களிடம் பேச மறுத்து, ‘தவறான தகவல்களை வெளியிடும் தொலைக்காட்சி எங்களுக்கு வேண்டாம்’ என்று கூறினர்.

எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர் பிரிவுகளின் வேலைநிறுத்த போராட்டங்களுடன் தங்களையும் ஒருங்கிணைத்துக் கொள்ள முனையும் ஆர்ப்பாட்டம் செய்யும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உந்துதல் ஆரோக்கியமானது. தற்போதைய பொருளாதார நெருக்கடி, புவி வெப்பமடைதல், கோவிட்-19 தொற்றுநோய், கல்வி வெட்டுக்கள், மற்றும் அணு ஆயுதப் போராக வளர்ந்து வரும் உக்ரேனில் நடக்கும் நேட்டோ-ரஷ்யப் போரின் அச்சுறுத்தல் உட்பட, இளைஞர்களையும் மாணவர்களையும் கவலையடையச் செய்யும் பாரிய சமூக அவலங்களை தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அணிதிரட்டலின் அடிப்படையில் மட்டுமே வெற்றி கொள்ள முடியும்.

பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வெளிப்படையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முதலாளித்துவ அரசாங்கங்களின் பணவீக்கம், சிக்கன நடவடிக்கை, மற்றும் போர் கொள்கைகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் தொழிலாளர்களின் இயக்கம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஐரோப்பா முழுவதும் ஆசிரியர்கள், மற்றும் ஆபிரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் என உலகளவில் தற்போது பல்வேறு தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பணவீக்கம், போர், மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொடிய கொள்கைகளை எதிர்க்கும் மாணவர்களும் இளைஞர்களும், முதலாளித்துவ சமூகத்தை எதிர்க்கும் ஒரே புரட்சிகர சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இறங்க வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான இளைஞர்களின் சோசலிச இயக்கத்தை உருவாக்குவதற்கான, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் முயற்சிக்கு ஆதரவளிப்பதே மாணவர்களுக்கான முதல் படியாகும்.

Loading