பிரெஞ்சு சுத்திகரிப்பு நிலைய வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், பாராளுமன்ற வாக்கெடுப்பின்றி 2023ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை மக்ரோன் திணிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பணவீக்கத்திற்கும் உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருக்கும் எதிராக பிரான்சில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில், மக்ரோன் நேற்று தனது 2023 வரவு-செலவுத் திட்டத்தை தேசிய சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின்றி தாக்கல் செய்தார். மே 2022 தேர்தல்களுக்குப் பின்னர், மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி (Renaissance party) சட்டமன்றத்தில் ஒரு சிறுபான்மையினரை மட்டுமே கொண்டுள்ளது, மேலும் அதன் வரவு-செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இறுதியில், பிரெஞ்சு அரசியலமைப்பின் ஜனநாயக விரோத சட்டப்பிரிவு 49-3 ஐ பயன்படுத்தி, அதன் வரவு-செலவுத் திட்ட மசோதாவின் வருவாய் பகுதியின் ஒப்புதலை கட்டாயப்படுத்த மக்ரோன் அரசாங்கம் நேற்று முடிவு செய்தது. இந்தப் சட்டப்பிரிவு, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முறையான கண்டன தீர்மானத்தை ஏற்காத பட்சத்தில், வாக்கெடுப்பின்றி வரவு-செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள சட்டமன்றத்தை கட்டாயப்படுத்த அரசாங்கத்தை அனுமதிக்கிறது. சமூக பாதுகாப்பின் நிதியுதவி குறித்து வார இறுதிக்குள் அரசாங்கம் இந்த சட்டப்பிரிவை மீண்டும் செயல்படுத்த உள்ளது — மேலும், வரவு-செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு ஏழு முறை வரை இருக்கலாம்.

வாக்கெடுப்பின்றி தனது வரவு-செலவுத் திட்டத்தை திணித்து, பணித்துறை செயல்முறை ஆணை உத்தரவை பயன்படுத்தி தொழிலாளர்களை வேலைக்கு கட்டாயப்படுத்துவதன் மூலம் எண்ணெய் சுத்திகரிப்பு வேலைநிறுத்தத்தை நசுக்க முயன்ற மக்ரோன் அரசாங்கம், எந்தவொரு மக்கள் ஆதரவும் இல்லாததோடு அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு வெளிப்படையான அவமதிப்புடன் செயல்படுகிறது. இது பிரான்சில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதிலும் உள்ள அனைத்து தொழில்துறை தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். வங்கிகளின் அப்படடமான சர்வாதிகாரங்களை அல்ல, தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு விட்டுக்கொடுப்பின்றி எதிர்க்கும் அரசாங்கங்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

மக்ரோனை ஆட்சியில் வைத்திருக்கும் வழிமுறைகளையும் நேற்று நிகழ்வுகள் வெளிப்படுத்தின, அவர் ஒரு மக்கள் ஆதரவுத் தளம் இல்லாத போதிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள நேச சக்திகளும் உடந்தையாக உள்ளனர்.

சட்டமன்றத்தில் அவருக்கு ஆதரவு இல்லாததை ஒப்புக்கொண்டு, மக்ரோன் தனது பலவீனத்தை வெளிப்படுத்தியபோதும், ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் பிரிவுகள் அவருக்கு சரணடைந்து, எண்ணெய் சுத்திகரிப்பு வேலைநிறுத்தத்தை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உண்மையில், நேற்று CGT அதிகாரிகள் டோன்ஜ் (Donges) சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைநிறுத்தத்தின் முடிவை அறிவித்தனர், அதே நேரத்தில் பொலிசார் லியோனுக்கு அருகிலுள்ள ஃபெய்சான் (Feyzin) சுத்திகரிப்பு நிலையத்தில் வேலைநிறுத்தத்தை முடிக்க முயன்றனர் — உற்பத்தியை மறுதொடக்கம் செய்வதற்காக இந்த ஆலையில் 20 முக்கிய தொழிலாளர்களுக்கு பணித்துறை செயல்முறை ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் Place d’Italie இல் நடந்த பேரணி, செவ்வாய்க்கிழமை அக்டோபர் 18, 2022.

'இன்று எங்களின் முக்கிய விஷயம், இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து சுத்தமாகவும், ஒத்திசைவுடனும் ஒரு ஒருங்கிணைந்த கூட்டமாகவும் வெளியேறுவதே ஆகும்,' என்று டோன்ஜ் இல் உள்ள CGT அதிகாரி BFM-TV இடம் கூறினார். CGT யின் அக்டோபர் 18 தேசிய நடவடிக்கை தினத்தில் குறைந்த அளவிலான பங்குபற்றலை மேற்கோள் காட்டி, 'நாங்கள் எதிர்பார்த்த இயக்கத்தின் விரிவாக்கம் நடைபெறவில்லை' என அவர்கள் தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தினர்.

உண்மையில், CGT தேசிய கூட்டமைப்புகள் வேலைநிறுத்தம் செய்பவர்களை தனிமைப்படுத்தி நிராயுதபாணியாக்குகின்றன. பிரான்சின் தொழிற்சங்க கூட்டமைப்புகள் பல பில்லியன் யூரோ வரவு-செலவுத் திட்டங்களைக் கொண்டுள்ளன, தொழிலாளர்கள் பணித்துறை செயல்முறை ஆணை உத்தரவை மீறினால் 10,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். ஆனால் எந்த தொழிற்சங்கங்களும் பணித்துறை செயல்முறை ஆணை உத்தரவை மீற தொழிலாளர்களுக்கு உதவவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அக்டோபர் 18 அன்று அதன் அடையாள ஒரு நாள் எதிர்ப்பு இருந்தபோதிலும், CGT அதிகாரத்துவம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிலாளர்களுக்கு எந்தவொரு தொடர்ச்சியான ஒற்றுமை வேலைநிறுத்தங்களிலும் பரந்த ஆதரவைத் திரட்டவில்லை.

எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரள்வை சீர்குலைப்பதன் மூலம் பயனடையும் மக்ரோன், பணவீக்கம், சிக்கனம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றுக்கான தனது வரவு-செலவுத் திட்ட நிகழ்ச்சி நிரலை இரட்டிப்பாக்குகிறார்.

320 பில்லியன் யூரோக்கள் வரி வருவாயை அடிப்படையாகக் கொண்ட 480 பில்லியன் யூரோக்கள் வரவு-செலவுத் திட்டம், 160 பில்லியன் யூரோக்கள் பாரிய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை முன்னறிவிக்கிறது. இது பாதுகாப்பு செலவினங்களை 3 பில்லியன் யூரோக்கள் முதல் 44 பில்லியன் யூரோக்கள் வரை உயர்த்துகிறது மற்றும் எரிசக்தி விலை மானியங்களை குறைக்கிறது, இதனால் எரிசக்தி விலைகள் முழுமையாக 15 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2022ல் பிரான்சில் 7 சதவீத பணவீக்கத்தின் தாக்கத்தில் ஏற்கனவே தத்தளிக்கும் தொழிலாளர்களுக்கான செலவுகளை மேலும் உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தை சீரழிக்கும். கிட்டத்தட்ட 6 பில்லியன் யூரோக்கள் அரசு வருமானம் ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புகளில் இருந்து வருகிறது. இது பணக்கார முதலீட்டாளர்களை தங்கள் அரசு கடன் மற்றும் பங்குகளை வாங்குவதன் மூலம் செலுத்தச் செல்கிறது.

எவ்வாறாயினும், உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருக்கு மத்தியில் அதன் இராணுவ கட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மையோ அல்லது அதன் எரிசக்தி மானியக் குறைப்புக்கள் மற்றும் அதிபெரும் பணக்காரர்களின் ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புகளின் பணவீக்க தாக்கமோ பாராளுமன்ற விவாதங்களில் விவாதிக்கப்படவில்லை. மாறாக, பிரதிநிதிகள் மக்ரோன் அரசாங்கத்தை பல்வேறு நடவடிக்கைகள் மீது தாக்கினர், குறிப்பாக செல்வந்தர்களுக்கு சிறிய வரிச் சலுகைகள்.

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 49-3 வது பிரிவைப் பயன்படுத்த மக்ரோன் அரசாங்கத்திற்கு அங்கீகாரம் அளித்திருந்தார், ஆனால் பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் 'விவாதம் நடக்க வேண்டும்' என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சட்டமன்றத்தில், 2023 வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறின: இது வரவு-செலவுத் திட்ட மசோதாவில் உள்ள பல பிரிவுகளில் வாக்குகளை இழந்தது, சில சமயங்களில் மக்ரோனின் சொந்த மறுமலர்ச்சிக் கட்சியின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கூட அடங்கும்.

மக்ரோனின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய வலதுசாரி ஜனநாயக இயக்கக் கட்சியின் உறுப்பினரான ஜோன்-போல் மத்தேயி (Jean-Paul Mattei) ஆல் முன்மொழியப்பட்ட ஒரு திருத்தத்தால் அது தோல்வியடைந்தது என்பது மக்ரோன் அரசாங்கத்திற்கு குறிப்பாக சங்கடமாக இருந்தது. அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் வழங்கப்படும் 'மிகப்பெரிய ஈவுத்தொகைகளுக்கான' வரிகளை தற்காலிகமாக உயர்த்த வேண்டும் என்று மத்தேயி கோரினார் — இந்த வரி உயர்வை மக்ரோன் அரசாங்கமும் பொருளாதார மந்திரி புருனோ லு மேயரும் எதிர்த்தனர். மத்தேயி இன் திருத்தத்தை ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் ஒன்றியமும் நவ-பாசிச தேசிய பேரணியும் (RN) மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியின் பிரிவுகளும் ஆதரித்தன.

மக்ரோனுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் 49-3 வது பிரிவை பயன்படுத்துவதைத் தயாரிக்க போர்ன் செவ்வாய்க்கிழமை காலை மறுமலர்ச்சிக் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். நேற்று, எதிர்க் கட்சிகளின் கேலிக்கூத்துகளின் கீழ், போர்ன் 49-3 ஐ பயன்படுத்துவதை அறிவித்தார்: “ஒரு சமரசத்தைத் தேடுவதை நாங்கள் கைவிட்டிருக்கலாம். நாங்கள் உரையாடலைத் தேர்ந்தெடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தேசிய நலன் கேள்விக்குறியாக இருக்கும்போது நாம் ஒன்றாக வரலாம். நம் நாட்டிற்கு ஒரு வரவு-செலவுத் திட்டத்தை கொடுக்க வேண்டும். இதற்கு எனது அரசாங்கத்தின் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.”

இப்போதைக்கு, இந்த முடிவு மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) மற்றும் தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) இரண்டும் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக, பிரிவு 49.3க்கு இணங்க கண்டன தீர்மானங்களை சமர்ப்பித்துள்ளன. இருப்பினும், தற்போது, LFI மற்றும் RN ஆகிய இரண்டும் மற்ற கட்சியின் கண்டன தீர்மானங்களுக்கு வாக்களிக்க மறுப்பதால், இந்த பிரேரணைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலதுசாரி குடியரசுக் கட்சி ஏற்கனவே கண்டன தீர்மானத்திற்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது.

எவ்வாறாயினும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வரவு-செலவுத் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தீர்க்கமான பிரச்சினைகள் எதுவும் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையில் விவாதிக்கப்படவில்லை. இதில், தேசிய சட்டமன்றத்தில் உள்ள பிரதிநிதிகள் CGT இன் அதிகாரத்துவங்களை விட வேறுபட்டவர்கள் அல்ல. உக்ரேனில் நேட்டோ-ரஷ்ய போர் ஐரோப்பாவை பேரழிவிற்கு உட்படுத்தும் ஒரு முழு அளவிலான அணுசக்தி போராக வெடிக்கும் மிகப்பெரிய ஆபத்து மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை பேரழிவிற்கு உட்படுத்தும் பணவீக்க அலையை இயக்குவதில் வங்கி பிணையெடுப்புகள் மற்றும் எரிசக்தி கொள்கையின் பங்கு அனைத்தும் மௌனமாக கடந்து செல்கின்றன.

இந்த மோசமான மௌனம், பொதுமக்களை தூங்க வைக்கிறது மேலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் போர் மற்றும் பொருளாதார சரிவின் மகத்தான ஆபத்துக்களை மறைத்து, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலை சீர்குலைக்க உதவுகிறது.

ஏப்ரல் 2022 ஜனாதிபதித் தேர்தலில் நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் பெற்ற மெலோன்சோன் மீது குறிப்பாக பெரும் பொறுப்பு உள்ளது. ஏறக்குறைய இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய போதிலும், மெலோன்சோன், மக்ரோன் அல்லது நவ-பாசிச மரீன் லு பென்னுக்கு எதிர்ப்பைக் காட்ட முற்படவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் இருவரின் கீழும், அவர்களின் பிரதமராக பணியாற்ற முடியும் என்று அவர் உறுதியளித்தார். பின்னர் அவர் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பரவலாக வெறுக்கப்பட்ட, தொழிலாளர்-விரோத சோசலிஸ்ட் கட்சியுடன் (PS) ஒரு புதிய மக்கள் ஒன்றிய (NUPES) கூட்டணியை உருவாக்கினார்.

பணவீக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவோ அல்லது ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக சுத்திகரிப்பு தொழிலாளர்களை பாதுகாக்க அணிதிரளுமாறு தனது திரளான வாக்காளர்களுக்கு முறையிட மெலோன்சோன் எதுவும் செய்யவில்லை.

உண்மையில், மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை, மேலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முற்படும் CGT அதிகாரத்துவத்தினரிடமும் தொழிலாளர்களுக்கு வழங்க எதுவும் இல்லை. முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழி, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கிளர்ச்சி மற்றும் அடக்குமுறை, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் ஒழுங்கமைக்கும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதுதான். இந்தப் போராட்டங்களில் பிரான்சில் உள்ள தொழிலாளர்களின் சிறந்த கூட்டாளிகள் உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகள் ஆவர். அவர்கள் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) கட்டமைக்க போராடுகிறார்கள்.

Loading