பிரிட்டனின் சுனாக் அரசாங்கம் வேலைநிறுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் தடை விதிக்க உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரிஷி சுனாக்கை பிரதம மந்திரியாக கொண்டு லிஸ் ட்ரஸைப் பிரதியீடு செய்திருப்பது, நிதிய தன்னலக்குழுவின் வற்புறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது, தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் தாக்குதல்களை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்பதே அதன் முக்கிய கோரிக்கையாகும்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமரான ரிஷி சுனாக், பதவியேற்ற பின்னர் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை காலையில் நடத்துகிறார். அக்டோபர் 26, 2022 [Photo by Simon Walker/No 10 Downing Street / CC BY-NC-ND 2.0]

ட்ரஸின் செப்டம்பர் மாத இடைக்கால வரவு செலவுத் திட்டக்கணக்கில் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட 45 பில்லியன் பவுண்டு வரி வெட்டுக்கள், உடனடியாக கூடுதல் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் அல்ல மாறாக கடன் பெறுவதன் மூலமாக வழங்கப்பட்டு இருந்ததாலேயே, ட்ரஸ் தூக்கி எறியப்பட்டார். பெரும் பணக்காரர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் பரந்த உதவிகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்குவது என்பதில் ஆளும் கட்சியான பழமைவாத கட்சியின் கோஷ்டிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவரின் பதவிநீக்கம் வெளிப்படுத்திய அதேவேளையில், இதை நடைமுறைப்படுத்த தேவைப்படும் அவசியமான சர்வாதிகார நடவடிக்கைகளைத் திணிப்பது என்று வரும் போது அதை எதிர்க்க அங்கே ஒருவரும் இல்லை.

போரிஸ் ஜோன்சனின் 2019 தேர்தல் அறிக்கை, போக்குவரத்துத் துறை வேலைநிறுத்தங்களின் போது குறைந்தபட்ச சேவை வரம்புகள் (MSLs) கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தது, இது அந்தத் துறையின் தொழில்துறை நடவடிக்கையைப் பிரயோசனமற்றதாக ஆக்கிவிடும். இன்னும் பின்னோக்கி பழமைவாத கட்சியின் 2015 தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், வேலைநிறுத்தங்களைப் பயனற்றதாக ஆக்குவதை நோக்கமாக கொண்ட மற்றொரு கொள்கை, தொழில்துறை நடவடிக்கை எடுக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக ஏஜென்சிகள் தற்காலிக தொழிலாளர்களை வழங்க அனுமதிப்பதை சட்டப்பூர்வமாக்குவதாக இருந்தது.

ஏஜென்சி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டம் ஜூலை 21 இல் சட்டமானது. அதே நேரத்தில் வேலைநிறுத்த நடவடிக்கையை 'சட்டவிரோதமாக' கண்டால், நீதிமன்றங்கள் ஒரு தொழிற்சங்கத்திற்கு எதிராக வழங்கக் கூடிய அதிகபட்ச சேதங்களுக்கான அபராத அளவை உயர்த்தவும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. மிகப் பெரும் தொழிற்சங்கங்களை பொறுத்த வரையில், இப்போது 1 மில்லியன் பவுண்டு ஆக உள்ளது.

ஜூலை 7 இல் ஜோன்சன் அவர் இராஜினாமாவை அறிவித்திருந்தார், இது ட்ரஸைப் பதவிக்கு கொண்டு வந்த கட்சித் தலைவருக்கான தேர்தல் வரவிருப்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்த போதும் கூட, இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறைந்தபட்ச சேவை வரம்புகளைப் (MSLs) பதவியேற்று 30 நாட்களுக்குள் சட்டபூர்வமாக்குவதாக ட்ரஸ் அறிவித்தார். 2023 இன் ஆரம்பத்தில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி இப்போது சுனாக் மீது விழுகிறது.

அரசாங்கத்தின் வர்க்கப் போர் தாக்குதலின் அளவு பொது ஒழுங்கு மசோதாவால் (Public Order Bill) எடுத்துக்காட்டப்படுகிறது — இது போராடுவதற்கான உரிமையை நடைமுறையளவில் அகற்றுவதுடன், வேலைநிறுத்தங்களை கூடுதலாகக் கட்டுப்படுத்துகிறது, இது பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் கடுமையான மசோதாக்களில் ஒன்றாகும்.

மிகவும் அப்பட்டமாகவே சர்வாதிகார ரீதியில் இருப்பதாக கருதப்பட்டு பிரபுக்கள் அவையின் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட பொலிஸ், குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் சட்டம் 2022 இன் பிரிவுகளைப் புதுப்பிக்க இந்த மசோதா பயன்படுத்தப்படுகிறது. விமான நிலையங்கள், சாலை வலையமைப்பு, இரயில்வே மற்றும் பத்திரிகை அச்சகத்தார் உட்பட முக்கிய தேசிய உள்கட்டமைப்பின் செயல்பாடு அல்லது பயன்பாட்டில் ஒருவர் குறுக்கிடுவதை அது சட்டவிரோதமாக ஆக்குவதை உள்ளடக்கி உள்ளது. இது நடைமுறையளவில் இந்தத் துறைகளின் தொழில்துறை நடவடிக்கையை அடிப்படையில் சட்டவிரோதமாக ஆக்குவதாகும்.

'இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்குக் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தும்' செயல்களைப் போராட்டங்கள் உள்ளடக்கி இருந்தால், அவை சட்டவிரோதமாகக் கருதப்படும். 'கடுமையான இடையூறு' என்பதில் 'சத்தம்' என்பதும் உள்ளடங்கும், அதாவது எந்தவொரு போராட்டத்தையும் சட்டவிரோதமாக அறிவிக்க முடியும் என்பதே இதன் அர்த்தமாகிறது.

அசையாப் பொருள்களையோ அல்லது ஒருவரை ஒருவரோ 'அடைத்து வைத்தால்' அவர்களுக்கு 51 வாரங்கள் வரையில் சிறைத் தண்டனைகள் விதிக்கப்படும்.

பொலிஸிற்கும் பாரியளவில் நிறுத்தி பரிசோதிப்பதற்கான புதிய அதிகாரங்களும், “தீவிர இடையூறு தடுக்கும் ஆணைகள்' (SDPO) வழங்குவதற்கான உரிமைகளும் வழங்கப்படுகின்றன. ஐந்தாண்டுக்குள் குறைந்தது இரண்டு போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது, அவர்கள் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு SDPO வழங்க முடியும். கூடுதலாக போராட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து அந்த நபரைத் தடுக்கும் வகையில் அவருக்கு இரண்டு ஆண்டு கால தடை உத்தரவு வழங்க முடியும்.

SDPO ஆணை வழங்கப்பட்டவர்களின் நகர்வுகளைக் கண்காணிக்க அவர்கள் ஒரு மின்னணு பட்டை அணிந்திருக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மன் 10 டவுனிங் தெருவில் பிரதம மந்திரி லிஸ் ட்ரஸின் கீழ் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு வெளியேறுகிறார். செப்டம்பர் 7, 2022, இலண்டன் [Photo by Simon Dawson/No 10 Downing Street / CC BY-NC-ND 2.0]

இந்த சர்வாதிகார தாக்குதலை சுமத்த, டோரி கட்சியின் மோசமான வலதுசாரி பேர்வளிகளில் ஒருவரான சுயெல்லா பிரேவர்மனை சுனாக் உள்துறைச் செயலராக மீண்டும் கொண்டு வந்தார். அமைச்சருக்கான நெறிமுறைகளை மீறியதற்காக அவர் பதவியிலிருந்து விலகி இருக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இது நடந்தது.

'முக்கிய தேசிய உள்கட்டமைப்புக்கு' 'கடுமையான இடையூறுகளை' ஏற்படுத்தும் போராட்டங்களை 'அனேகமாக' நடத்தக்கூடும் என்றோ, 'அத்தியாவசிய' பொருட்கள் அல்லது சேவைகளுக்கான அணுகலைத் தடுக்கலாம் அல்லது 'பொது பாதுகாப்பில் பெரும் கேடான விளைவுகளை' ஏற்படுத்தலாம் என்று அவர்கள் கருதும் எவருக்கு எதிராகவும் அன்றைய தின உள்துறைச் செயலர் தடை உத்தரவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் கடைசி நிமிட சட்டத்திருத்தத்தை, ட்ரஸ் இராஜினாமா செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரேவர்மன் நழுவ விட்டார்.

பொது ஒழுங்கு மசோதா மீது மக்களவையில் நடந்த இறுதி வாக்கெடுப்பில் அரசாங்கம் 49 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அரசின் தற்போதைய அடக்குமுறை எந்திரம் எதிர்ப்புகளை அடக்குவதற்கு போதுமானது என்ற அடிப்படையில் மட்டுமே தொழிற்கட்சி அதற்கு எதிராக வாக்களித்தது. ஆனால் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் தற்பெருமையோடு கூறுகையில், “கடந்த ஏப்ரலில், Just Stop Oil அமைப்பு செய்த இடையூறுகளைத் தொடர்ந்து இன்னும் அதிகமாக தடை அதிகாரங்களுக்கு, தொழிற்கட்சி, அழைப்பு விடுத்தது… நாங்கள் தடை உத்தரவுகளைப் பரிந்துரைத்தோம், ஏனென்றால் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் மீதான மொத்த கூடுதல் செலவுகளுடன், ஓர் எண்ணெய் முனையம் மீது குற்றங்கள் நடந்த பின்னர் அந்த நடத்தையைக் குற்றமாக்க எடுக்கப்படும் அதிக சட்டரீதியான நடவடிக்கைகளை விட அதன் மீது மேற்கொண்டு கூடுதல் இடையூறுகள் நடக்காத விதத்தில் அந்த அதிகாரங்கள் பெரும்பாலும் தடுத்துவிட சாத்தியம் உள்ளது என்பதால் அதைப் பரிந்துரைத்தோம். இந்த தடை உத்தரவுகள் பொலிஸிற்கு சிக்கலின்றி மிகவும் தெளிவாக உள்ளன, அவை ஒரு நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்றன என்பதால் அவற்றில் அதிக பாதுகாப்பு வழிவகைகள் உள்ளன, போராட்டக்காரர்கள் உத்திகளை மாற்றும் போது அடுத்து வரவிருப்பதற்கும் அவை கவசமாக உள்ளன,” என்றார்.

சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட குழுக்கள் நடத்திய மேலதிக போராட்டங்களையும் சேர்த்து, தொழிற்கட்சி பதவியேற்றால் அவர் பட்டியலில் வைத்திருக்கும் ஒடுக்குமுறையைக் குறித்து எச்சரித்தார். தொலைபேசியில் நடத்தப்படும் LBC Radio நிகழ்ச்சியில் திங்கட்கிழமை கூறுகையில், பொது வழக்குகளுக்கான இயக்குனராக அவர் பதவி வகித்த போது (2008-2013), இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குபவர்கள் மீது வழக்கு தொடுக்க 'நம்மிடம் எப்போதும் சட்டங்கள் இருந்தன' என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “சாலைகள் மற்றும் மோட்டார் பாதைகளில் பசை போல ஒட்டிக் கொள்பவர்களுக்கு நீண்ட கால தண்டனை வழங்குவதற்கு நாங்கள் அழுத்தமளித்து வருகிறோம். அதை நாங்கள் இன்னும் அடையவில்லை என்றாலும், நான் அதைத் தான் விரும்புகிறேன்,” என்றார். “எதிர்காலத்தில் அதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் நிக்கி ஃபெராரி கேட்ட போது, ஸ்டார்மர் 'ஆமாம்' என்று பதிலளித்தார்.

தொழிற்சங்கங்கள் அந்த சட்டத்திற்கு எதிராக அவற்றின் மில்லியன் கணக்கான உறுப்பினர்களை அணிதிரட்ட எதுவும் செய்யவில்லை. “அமைச்சர்கள் எங்களுடன் சண்டைக்கு வர எல்லை மீறினால், பின்னர் நாங்கள் அவர்களை அந்த வழியில் சந்திக்கத் தயார்… நான் கூறுவதைக் கவனமாக கேளுங்கள்: நாங்கள் உங்களை நீதிமன்றத்தில் சந்திப்போம்!” என்று வெளியேறவிருந்த தலைவர் பிரான்சிஸ் ஓ'கிரேடி விடுத்த அறிக்கையே தொழிற்சங்க காங்கிரஸின் ஒரே விடையிறுப்பாக இருந்தது.

கடந்த சில மாதங்களாக தேசியளவில் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள தொழிலாளர்களின் முக்கிய பிரிவினரில் உள்ளடங்கிய பத்தாயிரக் கணக்கான இரயில்வே பணியாளர்களை ஒடுக்க அந்த சட்டம் நோக்கம் கொண்டுள்ளது. இந்தக் குறைந்தபட்ச சேவைகள் சட்டம் பெருந்திரளாக வேலைநீக்கம் செய்வதற்குக் களம் அமைக்கிறது, 'இன்னமும் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கும் குறிப்பிட்ட தொழிலாளர்கள் நியாயமின்றி தானியக்க முறை நீக்கங்களில் இருந்து அவர்களின் பாதுகாப்பை இழப்பார்கள்' என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

அக்டோபர் 1, 2022 அன்று இலண்டனின் யூஸ்டன் நிலையத்தில் இரயில் ஓட்டுனர்கள் மறியல் போராட்டம்

குறைந்தபட்ச சேவைகள் அளவை நிர்ணயிக்கும் அந்தச் சட்டமசோதா 'தொழில்துறை மோதல்கள் நீண்ட காலம் நீடிப்பதற்கு மட்டுமே வழி வகுக்கும்' என்பதே ASLEF இரயில்வே ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் மிக் வீலனின் முக்கிய கவலையாக இருந்தது. அந்த சட்டத்தின் அபாயங்கள் மற்றும் டோரி அரசாங்கத்தின் உள்நோக்கங்களை வீலன் குறைத்துக் காட்டும் வகையில், “ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற சட்டம் இருப்பதாக அரசாங்கம் வாதிடுகிறது. ஆனால், இருக்கிறது தான், ஆனால் அது அமலாக்கப்படவில்லை என்பது அரசாங்கத்திற்குத் தெரியவில்லை — அல்லது கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது வேலைக்கு ஆகாது என்பது அவர்களுக்குத் தெரியும்,” என்றார்.

இது பொய். அந்த அரசாங்கங்கள் மற்றும் பிற அரசாங்கங்களால் இதுபோன்ற சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல; ஐரோப்பா எங்கிலும் வழமையாக வர்க்கப் போராட்டம் கூர்மை அடைந்து வருவதால் இன்னும் அதிக கடுமையான சட்டமும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும், வேலைநிறுத்தம் செய்த ஸ்பானிய விமானத் துறைத் தொழிலாளர்களும் மற்றும் உலோகத் துறைத் தொழிலாளர்களும் குறைந்தபட்ச சேவை வரம்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கோடையில் ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடெமோஸ் அரசாங்கம் மற்றும் Ryanair ஆகியவை குறைந்தபட்ச சேவை வரம்பைத் திணித்து பல தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலைகளை நிறுத்துவதைத் தடுத்தன. கான்டாப்ரியாவில் உலோகத் துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில், 12 நிறுவனங்களில் 100 சதவீத குறைந்தபட்ச சேவை வரம்பு விதிக்கப்பட்டதால், 150 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதில் இருந்து தடுக்கப்பட்டனர்.

இந்த மாதம் பிரான்சில் மக்ரோன் அரசாங்கம், பொருளாதாரத்தின் நாடி நரம்புகளைப் பாதிக்கும் ஒரு பலமான நடவடிக்கையை உடைப்பதற்காக வேலைநிறுத்தம் செய்த சுத்திகரிப்புத் துறைத் தொழிலாளர்களைக் கட்டாயமாக மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்தது.

2008 உலகளாவிய நிதிய உருகுதலுக்குத் தொழிலாளர்களைப் பணம் கொடுக்கச் செய்ய ஐரோப்பிய ஆளும் வர்க்கம் மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த நிலையில், இந்தத் தாக்குதல் கடந்த தசாப்தத்தில் வேகப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 2010 இல், ஸ்பெயினின் PSOE அரசாங்கம் ஒரு தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தத்தை முறியடிக்க, 2,200 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைத் துப்பாக்கி முனையில் வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்தது. அவர்கள் வேலைகளை நிறுத்தினால் உடனே கைது செய்யும் அச்சுறுத்தலுடன் ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் அவர்கள் முன்னால் நின்றிருந்தார்கள்.

ஜனவரி 2013 இல், சமூக ஜனநாயகக் கட்சியான PASOK மற்றும் ஜனநாயக இடதை உள்ளடக்கிய புதிய ஜனநாயகம் தலைமையிலான கிரேக்கக் கூட்டணி அரசாங்கம், வேலைநிறுத்தம் செய்த மெட்ரோ தொழிலாளர்களைச் கடுங்காவல் வலியின் கீழ் வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்து, அவர்களை இராணுவச் சட்டத்தின் கீழ் நிறுத்தியது. அதற்கடுத்த மாதம், அந்தக் கூட்டணி, 'மக்களை அணித்திரட்டும்' வடிவில் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியதுடன், உத்தியோகபூர்வமாக இராணுவச் சேவையோடு சேர்ந்து சதி செய்து, வேலைநிறுத்தம் செய்த கப்பல்துறை தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டது.

முன்பினும் அதிக ஆக்ரோஷமாக வன்முறையான வழிவகைகள் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு புதிய உலகளாவிய பொருளாதார நெருக்கடியை மற்றும் புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க முடியும் என்பதை ஆளும் வர்க்கம் அறிந்துள்ளது. உடனடியாக வரவிருக்கும் வர்க்கப் போர்களை முகங்கொடுக்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் ஆயுதபாணியாகி இருக்க வேண்டும்.

Loading