IYSSE நடத்தும் போர் எதிர்ப்பு பொதுக் கூட்டங்களில் பங்குபற்றுங்கள்! காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேல் இனப்படுகொலைப் போரை நிறுத்து!

பின்வரும் அறிக்கை, இலங்கையில் உள்ள சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, ”உக்ரேன் போர், அதை நிறுத்துவது எப்படி?” என்ற தொனிப்பொருளில் அக்டோபர் 19 அன்று கொழும்பில் நடத்திய பகிரங்க கூடத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்து தொழிலாளர்கள் இளைஞர்கள் மத்தியில் விநியோகித்த அறிக்கை ஆகும். ஏனைய நாடுகளில் போலவே இலங்கையில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இது போன்ற தொடர் போர்-எதிர்ப்பு கூட்டங்களை நாடு பூராகவும் நடத்தவுள்ளது. இந்தக் கூட்டங்களில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இத்தகைய கூட்டங்கள், காஸாவில் வாழும் பலஸ்தீனியர்கள் மீது ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவுடன் இஸ்ரேலின் சியோன்வாத நெதன்யாகு ஆட்சியால் தற்போது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு மத்தியில் மிகவும் அவசியமானவை ஆகும்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் களனி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றார்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரையும் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான ஏகாதிபத்திய-சார்பு இஸ்ரேலின் தாக்குதலையும் எதிர்ப்பதற்காக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். பேரழிவுகரமான உலகப் போர் வெடிப்பதைத் தடுக்க தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை பற்றி இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

ஐ.வை.எஸ்.எஸ்.இ., இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பலஸ்தீனியர்களின் பாரிய எழுச்சியின் பின்னர், காஸா மீதான நெதன்யாகு அரசாங்கத்தின் கொடூரமான போரை கண்டிக்கிறது. நாம், இஸ்ரேல் போரை எதிர்த்தும் பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்காண மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுடன் ஆதரவாக நிற்கின்றோம்.

கடந்த 10 நாட்களாக காஸா மீது தொடர்ச்சியான குண்டுவீச்சு நடத்திய பின்னர், இஸ்ரேலிய இராணுவம் சிறிய நிலப்பகுதியை ஆக்கிரமிக்கவும் 1930கள் மற்றும் 1940களில் நாஸிக்கள் செய்த குற்றத்திற்குப் பின்னர் கேள்விப்பட்டிராத காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிடவும் தயாராகின்ற நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் 1.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை வடக்கு காஸாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதுவரைக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 4,300 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் இடைவிடாத குண்டுத்தாக்குலுக்கு பலியாகியுள்ளதோடு ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் முற்றுகையின் விளைவாக காசாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தண்ணீர், உணவு, மின்சாரம் மற்றும மருந்து உட்பட அத்தியாவசியத் தேவைகளை இழந்து நிற்கின்றனர்.

பைடென், “நாம் இஸ்ரேலுடன் நிற்கின்றோம்” என்று அறிவித்துள்ளதுடன், இஸ்ரேலின் பிற்போக்கு அரசின் பிரதான முண்டு கொடுப்பாளரான அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தப் போரை முழுமையாக ஆதரித்துள்ளது. பென்டகன் இரண்டு பாரிய விமானம் தாங்கி கப்பல்களையும் அவற்றின் தாக்குதல் குழுக்களையும் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ஹமாஸின் 'பயங்கரவாதத்தை' கண்டனம் செய்வதில் வாஷிங்டனுடன் இணைந்து காஸா மீதான கொலைகார இஸ்ரேலிய தாக்குதலை முழுமையாக ஆதரிக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றார்.

ஏகாதிபத்திய சக்திகள் இந்த நூற்றாண்டுகளிலும் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் எண்ணற்ற போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களைச் செய்துள்ளன. 75 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனியர்களை அவர்களின் தாயகத்திலிருந்து வன்முறையைப் பிரயோகித்து வெளியேற்றுவதன் மூலம் சியோனிச அரசை அமைப்பதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஆதரவு அளித்தன. கடந்த தசாப்தங்களில் இந்த மக்கள் மீதான எண்ணற்ற குண்டுவீச்சுக்களால் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு ”பயங்கரவாதம்” என்பதன் அர்த்தம் இஸ்ரேலின் சியோனிஸ ஆட்சியின் தசாப்த-கால இரத்தக்களரி ஒடுக்குமுறைக்கு பலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகள் நெதன்யாகுவின் தாக்குதலுக்குப் பின்னால் அணிவகுத்துள்ளனர்

நாம், சியோனிச இஸ்ரேல் அரசுடன் பாலஸ்தீன சிறிய ஆட்சி என்ற பிற்போக்கு ”இரு அரசுகள் தீர்வை” எதிர்ப்பதோடு சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களின் ஒன்றிணைந்த சோசலிச அரசு என்ற வேலைத் திட்டத்தை முன்வைக்கிறோம்.

உலச சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு ஒக்டோபர் 12 அன்று அதன் அறிக்கையில் விளக்கியது போல், ”காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை ரஷ்யாவிற்கு எதிராக அதிகரித்துவரும் அமெரிக்க-நேட்டோ போரின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். இது உலகப் போரின் ஆரம்ப கட்டமாகும். உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீடானது, நாடுகளுக்கு இடையேயான மோதல்களின் வடிவத்தை மட்டும் எடுக்காமல், வெகுஜன மக்களுக்கு எதிரான நேரடியான வன்முறையான போராக உருவெடுக்கும். ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளின் தொடர்களை எதிர்கொள்ளும் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள், அவற்றை இராணுவ வன்முறை வெடிப்பின் ஊடாக திசைதிருப்பிவிட முயல்கின்றன.”

மீண்டும், எப்போதும் ஆழமாகி வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் இந்த பூகோளத்தை சூறையாடுவதற்கும், தங்களுக்குள் மீண்டும் பிரித்துக்கொள்வதற்கும், அணுஆயுத நாடுகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மூன்றாம் உலகப் போரை நடத்த அச்சுறுத்துவதன் பக்கம் திரும்பியுள்ளன. இந்த உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் மையத்தில் இருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது வரலாற்று வீழ்ச்சியில், அதன் பூகோள மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்த இராணுவ வழிமுறைகளை நாடுகிறது.

வாஷிங்டன் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரேனில் போரை வேண்டுமென்றே தூண்டியது. ரஷ்யாவை அடிபணிய வைத்து அதன் பிரமாண்டமான இயற்கை வளங்களை சூறையாடுவதை அமெரிக்கா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. உக்ரேன் போர் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளதுடன் நகரங்கள் மற்றும் கிராமங்கள் பேரழிவிற்குள்ளாகியுள்ளன. இருப்பினும், பெருந்தொகை உயிர்கள் பலியாவதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா ஓயாமல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில், அமெரிக்கா பிராந்தியம் முழுவதும் அதன் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்தி, சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்துவதுடன் பெய்ஜிங்கை ஆத்திரமூட்டும் வகையில் சீனாவை தாய்வானுக்கு எதிராக போருக்குத் தள்ளுகிறது.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் போர் சுமைகளையும், முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடியையும் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறது. இதற்கு விடையிறுக்கும் வகையில், உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டம் அதிகரித்து வருவதுடன் உலகப் போரின் அபாயத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அரசாங்க அச்சுறுத்தல்களையும் ஆளும் வர்க்கங்களின் மூர்க்கமான கண்டனங்களையும் மீறி, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிரான போராட்டங்களில் மில்லியன் கணக்கான மக்கள் இணைந்துள்ளனர்.

போருக்கு இந்த வளர்ந்து வரும் எதிர்ப்பு, சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவான உலகளாவிய இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். உக்ரேன் மற்றும் காஸா போர்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மற்றும் உலகளாவிய அணுவாயுத பேரழிவை நோக்கிய சரிவை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஐ.வை.எஸ்.எஸ்.இ. அத்தகைய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறது.

ஐ.வை.எஸ்.எஸ்.இ. குறிப்பாக இலங்கை மற்றும் தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் காசாவில் இஸ்ரேலிய போருக்கும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கும் எதிராக பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது:

  • காஸா மீதான இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவு இராணுவத் தாக்குதலை நிறுத்து!

  • யூத, பாலஸ்தீனிய, அரேபிய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக!

  • உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை நிறுத்து!

  • காஸாவில் இனப்படுகொலைப் போருக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆதரவை நிறுத்து!

இந்த அரசியல் போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, எங்களின் போர் எதிர்ப்பு பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை மாணவர்கள் காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்க்கின்றனர்

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுங்கள்!

அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் போருக்கு எதிரான கருத்துக்களை குற்றமாக்காதே! காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு வெகுஜன இயக்கத்தை முன்னெடுப்போம்!

Loading