இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு மேற்கண்ட தொணிப்பொருளில், பேராதனை, ஹிந்தகலவில் அமைந்துள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், ஏப்ரல் 7 அன்று ஒரு பகிரங்க கூட்டத்தை நடத்தவுள்ளது. அன்றைய தினம் கலஹா சந்தியில் பகல் 12 முதல் 1 மணி வரை மறியல் போராட்டம் ஒன்றும் நடைபெறும். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இக்கூட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம் இப்போது, தொழிலாள வர்க்கம் ஆட்சிக்கு வந்து முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்ற, இல்லையேல் முதலாளித்துவம் உலகை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு வரலாற்று காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... நாம் ஒரு புரட்சிகர காலகட்டத்தில் இருக்கிறோம். அதே போல், நாம் ஒரு எதிர்-புரட்சிகர காலகட்டத்திலும் இருக்கிறோம். இந்த இரண்டு போக்குகளில் எது உலகில் மேலோங்கும்? 1932-33ல் ட்ரொட்ஸ்கி மிகச் சிறப்பாகக் கூறியது போல், நெருங்கி வரும் பாசிசத்தின் நிழலை எதிர்கொண்டு, போராட்டமே தீர்மானிக்கும்.” (டேவிட் நார்த், உலக சோசலிச வலைத்தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர்)
தோழர்களே தோழிகளே, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் குற்றவியல் போரின் மூலம் உலகளவில் மனிதகுலம் எதிர்கொள்ளும் உண்மையான சூழ்நிலையை மேற்கண்ட மேற்கோள் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. மனிதகுலத்தின் சாதனைகளைப் பற்றி ஆய்வு செய்யும் புத்திஜீவி பகுதியினரான நாம், இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கப்பட்ட பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்பு இருந்த நிலைக்கு உலகம் திரும்ப முடியாது. ஒரு ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா, அது இழந்துவிட்ட பூகோள ஆதிக்கத்தை மீண்டும் பெறுவதற்காக, பல தசாப்தங்களாகத் திட்டமிட்டு வரும் இராணுவத் தாக்குதலின் ஒரு புதிய கட்டமே இப்போது அரங்கேறி வருகிறது. நெருக்கடியின் படுகுழியில் மூழ்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிதிய தன்னலக் குழுவானது, தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட ஒரு பாசிசக் கும்பலை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது.
உக்ரேன் போருக்கு மத்தியில், பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த அமெரிக்க ஆட்சியானது, வெனிசுவேலாவின் ஜனாதிபதி மதுரோவைக் கடத்தி, அந்நாட்டைக் கைப்பற்றியது. பின்னர், ஈரானைக் கைப்பற்றுவதற்காக இஸ்ரேலிய ஏவல் நாயை ஏவி, பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழித்தது, சமூகப் படுகொலை யுத்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க ஆட்சியாளர்களின் இறுதி இலக்கு, சீனாவையும் ரஷ்யாவையும் அடிபணியச் செய்வதே ஆகும். இந்தப் போரில், சர்வதேச சட்டங்கள், சாசனங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகள், அத்துடன் அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டமும் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன.
ஏனைய ஏகாதிபத்திய சக்திகள், அமெரிக்காவுடன் தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான போரில் அடிப்படையில் உடன்படுகின்றன. இந்த ஏகாதிபத்திய சக்திகளும், அமெரிக்காவைப் போலவே, தங்கள் சொந்த நலன்களை அடைவதற்கான தயாரிப்பில், வல்லரசுகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றன.
விரிவடைந்து வரும் இந்தப் போர், மனிதகுலத்தையே அழித்துவிடும் ஒரு கொடூரமான அணு ஆயுதப் போரின் அபாயத்தை முன்கொணர்ந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட கொடிய அபாயங்களைப் பற்றிப் படித்தோ அல்லது அறிந்தோ இருக்கும் எம்மால், ஒரு மூன்றாம் உலகப் போரின் விளைவுகளைப் பற்றி ஊகிக்க முடிகிறது.
விரிவடைந்து வரும் இந்தப் போருக்கு, செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்களும், ஏனைய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுமே விலைகொடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர். டொலர் பில்லியன் கணக்கிலான செலவை தங்களிடம் இருந்து சுரண்டிக்கொண்டு, தங்கள் மீது போரின் சுமையை திணிப்பதற்கு எதிராக அமெரிக்கத் தொழிலாளர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். மார்ச் 28 அன்று, அமெரிக்காவில் எட்டு மில்லியன் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோரும் 'மன்னர்கள் வேண்டாம்' என்ற பிரச்சாரத்திற்காக வீதிகளில் இறங்கினர். ஏனைய ஏகாதிபத்திய நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரசாங்கம் செயல்படுத்தி வரும் கொடூரமான சிக்கனத் திட்டத்தால் ஏற்கனவே துன்புற்றுவரும் நிலையிலேயே இலங்கையின் தொழிலாளர் மற்றும் ஏழைகள் மீது இந்தப் போரின் சுமை திணிக்கப்படுகிறது. மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முடிவற்றவை.
இருப்பினும், இந்தப் பிரச்சினைகளுக்கு ஒட்டுப்போடும் எளிதான தீர்வுகள் கிடையாது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர்கள், அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் எண்ணெய் மற்றும் உணவு இருப்புகளைக் குவிப்பதன் மூலமும் இலங்கை அரசாங்கம் வளர்ந்து வரும் போர் அபாயத்தைத் தவிர்க்க முடியும் என்ற மாயையைப் பரப்பும், முன்னிலை சோசலிசக் கட்சியுடன் ஒன்றாக இருப்பதுடன் ஈரானுக்கு எதிரான குற்றவியல் போரைப் பற்றி மௌனம் காப்பதன் மூலம் அதற்கு ஆதரவளிக்கின்றனர்.
சில கல்வியாளர்கள், 'அணிசேரா வெளியுறவுக் கொள்கை', 'செயல்மிகு நடுநிலைமை' மற்றும் பலமுனை உலகளாவிய அதிகாரக் கட்டமைப்பு இருந்தால் உலகம் எவ்வளவு அழகாக இருக்கும் என்பது குறித்து விரிவுரைகள் ஆற்றுகிறார்கள்; ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வறிக்கைகளையும் எழுதுகிறார்கள். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட மற்றும் புறநிலையான சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் இந்தப் பிரச்சாரம், தூக்கத்தில் நடப்பதைப் போன்றது. உலக முதலாளித்துவ அமைப்புக்குள்ளும், அதன் ஒரு பகுதியாக இருக்கும் இலங்கையின் முதலாளித்துவ அமைப்புக்குள்ளும் தனித்த தீர்வு எதுவும் கிடையாது.
இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், நடுநிலையான மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்கும் அதேவேளை, அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேல் மற்றும் பிராந்திய சக்தியான இந்தியாவுடன் அணிசேர்ந்துள்ளது. அது ஈரானுக்கு எதிரான போரைக் கண்டிக்கவில்லை. இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாலுமிகளுடன் ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா கப்பலை மூழ்கடித்த கொடூரச் செயலை அது எதிர்க்கவில்லை. காசா பகுதியில் சுமார் 70,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையும், ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்ததையும் அது எதிர்க்கவில்லை. இந்தப் பட்டியல் நீளமானது.
இந்த அரசாங்கம், ஒரு மந்திரத்தை உச்சரிப்பது போல், எந்தவொரு நாட்டினதும் பெயரைக் கூடக் குறிப்பிடாமல், மோதலுக்கு இரு தரப்பு அல்லது முத்தரப்பு தீர்வு காண அழைப்பு விடுக்கும் கோழைத்தனமான அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறது. ஜனாதிபதி திசாநாயக்க அமெரிக்க ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்துடன் அணிசேர்ந்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்: 2025 ஜனவரி 3 அன்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டம்” குறித்து முறையான அனுமதியுடன், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE) ஏற்பாடு செய்த ஒரு விரிவுரை, ஜே.வி.பி. அரசாங்கத்தின் தலையீட்டுடன் துணைவேந்தரால் தடை செய்யப்பட்டது. ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலான இத்தடையை, நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, மாணவர்களும், விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் அளித்த ஆதரவைப் பாராட்டுகிறோம்.
ஈரானைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை எதிர்ப்பதற்கும், ஏகாதிபத்தியப் போரை நிறுத்துவதற்குமான போராட்டத்தில் இணையுமாறு ஐ.வை.எஸ்.எஸ்.இ. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 7 அன்று, பேராதனையில், ஹிந்தகலவில் ஒரு கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். ஏகாதிபத்திய சக்திகளிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் போரை நிறுத்த முடியாது. ஏகாதிபத்தியப் போரை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் மட்டுமே ஆகும். உலக சோசலிசத் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அந்தப் போராட்டத்திற்காகத் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு முக்கிய அரசியல் வகிபாகம் உள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்துதல், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை உடனடியாக விலக்கிகொள்ளல், தடைகளை நீக்குதல் மற்றும் பொருளாதாரப் போரை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவை எங்கள் கோரிக்கைகளில் அடங்கும். தேசிய-அரசு அமைப்பை அடிப்படையாகக் கொண்ட காலாவதியான முதலாளித்துவ அமைப்பு தூக்கியெறியப்பட்டு, ஒரு சோசலிச உற்பத்தி முறை பதிலீடு செய்யப்பட வேண்டும்.
இலங்கைத் தொழிலாள வர்க்கமானது விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்டவர்களைத் தம் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு, தெற்காசியப் பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவது, இந்த சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
எங்கள் கூட்டத்திற்கு வந்து, அங்கு நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கவும்.
நாள்: செவ்வாய், ஏப்ரல் 07
நேரம்: பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இடம்: ஓரியண்ட் கல்வி நிறுவனம், கலஹா வீதி, ஹிந்தகல
கலஹா சந்தியில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மறியல் போராட்டம் இடம்பெறும்.
