"நாம் 'அணிசேரா' நிலையில் இருக்கக்கூடாது, போர் எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுக்க வேண்டும்"

இலங்கை: ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிராக அணிதிரளுமாறு தொழிலாளர்களும் மாணவர்களும் அழைப்பு விடுக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் (IYSSE), பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஹிந்தகலவில் உள்ள ஓரியண்ட் கல்வி நிறுவனத்தில், ஏப்ரல் 7 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் “ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை நிறுத்து” என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன.

ஈரான் மீதான போருக்கு எதிராக பேராதனையில் சோ.ச.க. உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்த போது

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு இலங்கையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் போர், கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய நலன்களால் தூண்டப்படுகிறது என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஈரானை முழுமையாக அடிபணியச் செய்யும் தனது நீண்டகால இலக்கை நிறைவேற்றும் வரை தனது நிர்வாகம் ஓயாது என்று பாசிச அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கருத்துக்களால் கோபம் தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போர் இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. இதற்கிடையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவின் அரசாங்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவை வழங்கி வரும் அதேநேரம், அவரது போலியான 'நடுநிலை' நிலைப்பாட்டின் முழுமையான பாசாங்குத்தனத்தை பரந்த அளவிலான மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதற்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியான கூட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றன. மார்ச் 17 அன்று கொழும்பில் நடந்த பகிரங்க கூட்டத்தில் அதிகளவானோர் பங்குபற்றினர். மற்றொரு கூட்டம் ஏப்ரல் 7 அன்று கண்டி, பேராதனையில் நடைபெறும்.

மார்ச் 17 கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஒரு சோசலிசப் போர் எதிர்ப்புத் வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடலுக்கு மிகுந்த உற்சாகத்துடன் பதிலளித்தனர்.

சட்ட பீட மாணவரான அகலங்க செனவிரத்ன, பேஸ்புக்கில் அக்கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பைக் கேட்டார். பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கும் மற்ற கட்சிகளைப் போலல்லாமல், இது போரின் உண்மையான வேர்களை அம்பலப்படுத்தியதாக அவர் கூறினார்.

அகலங்க செனவிரத்ன

“முதலாளித்துவக் கட்சிகள், போலி இடதுசாரிக் கட்சிகள், பல்வேறு அரசியல் அமைப்புகள், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இந்தப் போரைப் பற்றி வெவ்வேறு விதமாகக் கூறுகின்றன. அதன் உண்மையான நோக்கத்தை மக்கள் அறிந்துகொள்வதைத் தடுப்பதில் அவர்களுக்கு ஒரு ஆர்வம் உள்ளது. ஈரானிய ஆட்சியிலிருந்து மக்களை விடுவிப்பதே இதன் நோக்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதில் எதுவுமே உண்மையல்லை.”

முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடியே இந்தப் போருக்கான மூலக் காரணம் என்ற விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார், ஆனால் இந்தப் போர் அந்த நெருக்கடியைத் தீர்க்காது, மாறாக அதை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அவர், “அரசாங்கம் அணிசேரா கொள்கையைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் நாம் அணிசேரா நிலையில் இருக்கக்கூடாது, மாறாகப் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்தப் போர் தொடர்ந்தால், சாமானிய மக்களே பலியாக நேரிடும்,” என்றார்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் “நடுநிலை” நிலைப்பாடு என்பது, அதன் ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டை மூடிமறைக்கப் பயன்படுத்தப்படும் “வெறும் வார்த்தை ஜாலம்” என்று அகலங்க குறிப்பிட்டார். போர் தொடங்கிய பின்னர் அமெரிக்க இராணுவம் இலங்கை அரசாங்கத்திற்கு ஹெலிகாப்டர்களை வழங்கியதாக ஒரு செய்தி அறிக்கையைப் பார்த்ததாகவும், இது இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான உறவுகளை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் காரணமாக இலங்கை போரில் தலையிட நிர்பந்திக்கப்படுகிறது என்று கூறும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுசாரி அமைப்புகளின் கூற்றுகளை அவர் நிராகரித்தார். “அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படாவிட்டாலும் கூட, இலங்கை போன்ற சிறிய நாடுகள் இந்தப் போர்களால் பாதிக்கப்படுகின்றன. முந்தைய உலகப் போர்களிலும் இதை நாம் கண்டோம்.”

2025ல் ஈரானுக்கு எதிரான 12 நாள் போரை டிரம்ப் நிர்வாகம் நிறுத்திய பின்னர், “இது மற்றொரு பெரிய அளவிலான போருக்குத் தயாராவதற்கு எடுத்துக்கொள்ளப்படும காலதாமதம்” என்று உலக சோசலிச வலைத் தளம் விடுத்த எச்சரிக்கை இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அகலங்க கூறினார். ஒரு உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப, இந்த சோசலிசப் பகுப்பாய்வு எவ்வாறு தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரைச் சென்றடைய முடியும் என்பதை அவர் அறிய விரும்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, IYSSE அமைப்பின் உறுப்பினர் ஒருவர், முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ரஷ்யப் புரட்சியின் படிப்பினைகளை சுட்டிக் காட்டி, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான போராட்டமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். போரின் மூல காரணங்கள் மற்றும் அதை நிறுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்களுக்குக் கல்வி புகட்டுவதற்கான ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது பற்றியும் மேலும் கலந்துரையாடப்பட்டது.

சோ.ச.க. பிரச்சாரகர்கள், கொழும்பில் உள்ள இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் தொழிலாளியான இலங்ககோனுடனும் பேசினர். அவர், போரைத் தொடங்கியதற்காக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டித்துத் தனது உரையைத் தொடங்கினார்.

அவர் கூறியதாவது: “ஈரான் யாரையும் தொந்தரவு செய்யவில்லை; அமெரிக்காவின் நடவடிக்கை நியாயப்படுத்த முடியாதது. அவர்கள் எண்ணெயைக் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறார்கள். இந்த வளங்களுக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடிந்தால், உலகில் எதையும் செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரியான ஜோ கென்ட், ஈரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்ததையும் அவர் குறிப்பிட்டார்.

'இது நிறுத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கிறது, எல்லா வேலைகளும் தடைபட்டுள்ளன,' என்று இலங்ககோன் மேலும் கூறினார். எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய தனது தொழிலில் இது ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு ரயில் ஊழியரான பாலித கூறியதாவது: 'நமக்கு ஒரு போர் தேவையில்லை. இது நமது போர் அல்ல. இது மேலாதிக்க சக்தி மற்றும் பிற நோக்கங்களுக்காக நடக்கும் போர். இந்த அழுத்தத்தை எங்களால் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்று தெரியவில்லை. போரை நிறுத்த நாம் ஒன்று திரள வேண்டும் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். ஆம், ஆட்சியாளர்கள் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட மட்டுமே செய்கிறார்கள், ஆனால் வேலையைச் செய்பவர்கள் தொழிலாளர்கள்தான். நாம் நிறுத்தினால், எல்லாம் நின்றுவிடும்.'

கண்டி, ஹசலகவில் சமுர்த்தி நல அலுவலரான கமகே, உழைக்கும் மக்கள் மீது இந்தப் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசினார். உலகளாவிய சந்தை விலை உயர்வுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அரசாங்கம் விதித்துள்ள எண்ணெய் விலைகளின் பெரும் உயர்வை அவர் கண்டித்தார்.

'இந்தப் போர் இன்னும் ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்தால், அது ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்,' என்று கமகே கூறினார். தீவிரமடைந்து வரும் சமூக நெருக்கடியை விவரித்த அவர், 'முன்பு பல்வேறு வேலைகளைப் பெற முடிந்த மக்கள், இப்போது வேலையில்லாமல் சாலையோரத்தில் காத்திருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு வேலை கொடுத்தவர்களிடம் பணம் இல்லை, அவர்களும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். யாராலும் புதிய விவசாயப் பொருட்களைக்கூட உற்பத்தி செய்ய முடியவில்லை; அதற்கான செலவைத் தாங்குவது மிகவும் கடினமாக உள்ளது,' என்று விளக்கினார்.

அரசு உட்பட முதலாளித்துவ அமைப்பானது, சமூக நலனை வழங்குவதற்கோ அல்லது மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கோ இல்லை, மாறாக ஒரு சிறிய செல்வந்தப் பிரிவினரை வளப்படுத்துவதற்காகவே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், பெரும் வணிக நிறுவனங்களின் நலன்களுக்காகவே செயல்படுகின்றன என்று அவர் கூறினார். போர் என்பது இந்த அமைப்பின் ஒரு நீட்சியாகும் என்றும், அது இலாப நோக்கத்தால் உந்தப்பட்டு, மனித உயிர்களைப் பொருட்படுத்தாமல் நடத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

நுவரெலியா மாவட்டம், சாமிமலை, கிளனுஜி தோட்டத்தில் ஒரு சிறு கடை உரிமையாளரான ஆர். ரொபின்சன், இந்தப் போர் அமெரிக்காவாலும் அதன் மத்திய கிழக்கு 'கண்காணிப்பு நாயான' இஸ்ரேலாலும் சட்டவிரோதமாகத் தொடங்கப்பட்டது என்று கூறினார்.

ஆர். ரொபின்சன்

சோ.ச.க.இன் ஆதரவாளரான ரொபின்சன், WSWS வெளியிட்ட பகுப்பாய்வுகளைத் தாம் அறிந்திருப்பதாகக் கூறினார். 'உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைக்கப் போர் நடத்தும் அதே ஏகாதிபத்திய சக்திகளிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் இந்தப் போரை நிறுத்த முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.' அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தினாலும், அது தற்காலிகமானதாகவே இருக்கும் என்று அவர் கூறினார். 'போரைத் தூண்டும் முதலாளித்துவ ஆட்சிகளை வீழ்த்தாமல் போர் நிற்காது. இல்லையெனில், அவர்கள் தொழிலாளர்களை முற்றிலுமாக அழித்துவிடுவார்கள்.'

எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் ஏற்பட்ட பெரும் உயர்வுகளால் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலை எவ்வாறு மோசமடைந்துள்ளது என்பது குறித்து ரொபின்சன் விரிவாக கலந்துரையாடினார். இந்தத் தொழிலாளர்கள், இலங்கைத் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் என்றும், அடிமைத்தனமான நிலைமைகளைச் சகித்துக்கொண்டு வாழத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்கம் சமீபத்தில் வழங்கிய 400 ரூபா (ஒரு நாளைக்கு சுமார் 2 அமெரிக்க டொலர்) ஊதிய உயர்வு முற்றிலும் போதுமானதல்ல என்றும் அவர் கூறினார்.

'ஒரே இரவில் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய் விலை உயர்வு, அந்தச் சம்பள உயர்வை முழுவதுமாக விழுங்கிவிட்டது. இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பே, தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தனர். எரிபொருள் விலை உயர்வால், அனைத்து நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயர்ந்தன. இது உழைக்கும் மக்களை சட்டியில் இருந்து நெருப்புக்குள் தள்ளியது,' என்று ரொபின்சன் கூறினார்.

சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தால் மட்டுமே இந்தப் போரை நிறுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்: 'உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். அவர்களுக்கு ஒரு சர்வதேச சோசலிச முன்நோக்கை வழங்குவது இன்றியமையாதது, அதற்காக நமக்கு ஒரு உலகக் கட்சி தேவை.'

Loading