இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில், கொழும்பிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகர சிறைச்சாலையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்குவதற்காக, இலங்கை அரசாங்கம் நூற்றுக்கணக்கான பொலிஸாரையும் இராணுவத்தினரையும் குவித்தது.
ஆயிரக்கணக்கான கைதிகள், தாங்க முடியாத சிறைச்சாலை நிலைமைகளுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை வழங்குமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். படைகள் “ஒழுங்கை மீட்டெடுத்தபோது”, ஒரு கைதி கொல்லப்பட்டதாகவும், சுமார் எட்டு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இலங்கையில் ஒரு மாத காலத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது மரணகரமான சிறைச்சாலை மோதல் இதுவாகும். ஜூலை 5–6 அன்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரம், பேர்போன விசேட அதிரடிப் படை உட்பட பொலிஸாரால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் 21 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 14 சிறைச்சாலை காவலர்களும் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 1 பிற்பகலில் மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை ஒடுக்கப்பட்ட பின்னர், அன்று மாலை கைதிகளின் மற்றொரு போராட்டம் வெடித்தது. அது மறுநாளும் தொடர்ந்தது. முதல் போராட்டத்தில் பங்கேற்ற கைதிகளை, சிறைச்சாலை அதிகாரிகள் சில கைதி முகவர்களைப் பயன்படுத்தி துன்புறுத்தியதே இந்த புதிய அமைதியின்மைக்கு காரணமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்குப் பின்னர் செய்ததைப் போலவே, கைதிகளை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் மிகப்பெரிய பாதுகாப்புப் படையை குவித்து, முழு சிறைச்சாலையையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் ஒரு போர்க்களமாக மாற்றியது. நூற்றுக்கணக்கான பொலிஸாரும், அதிரடிப் படையினரும், இராணுவம் மற்றும் கடற்படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனங்கள் சிறைச்சாலையைச் சுற்றி ரோந்து சென்றன. அதேவேளை, விமானப்படை ஹெலிகொப்டர்கள் மேலே பறந்து, சிறைச்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது தேடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சின.
ஆகஸ்ட் 1 இரவு முதல் சிறைச்சாலைக்கு அண்மையிலுள்ள பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மறுநாள், வீதித் தடைகள் அமைக்கப்பட்டதுடன், பொலிஸ் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆகஸ்ட் 4 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இந்த கொடூர நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றார். அமைதியின்மை “நாசவேலையும் தீவைப்பும் இடம்பெற்றதற்கான தெளிவான அறிகுறிகளைக் கொண்டிருந்தது” என்றும், அது “சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி” என்றும் அவர் கூறினார். “இதன்மூலம் அவர்களுக்கு தெளிவான நோக்கம் இருந்தது என்பது தெரியவருகிறது… ஏதேனும் சதிகாரர்கள் இருந்தால், அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் முன்சென்ற பொலிசார், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறி சில “குற்றவாளிகளின்” பெயர்களையும் வெளியிட்டனர்.
உத்தியோகப்பூர்வ விளக்கத்தின்படி, சனிக்கிழமை மாலை பார்வையாளர் நேரத்தின் போது நான்கு கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தை ஆரம்பித்தனர். சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நான்கு பேருடன் மேலும் 1,000 கைதிகள் இணைந்தனர். ஆனால், அந்தப் போராட்டம் ஏன் வெடித்தது என்பது குறித்து அதிகாரிகள் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.
அமைதியின்மை நீடித்துக்கொண்டிருந்த மணித்தியாலங்களில், கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை நுழைவாயிலுக்கு வெளியே திரண்டனர். அவர்களில் சிலர் பிற்பகலிலேயே தங்களது உறவினர்களைப் பார்வையிட வந்திருந்தபோதிலும், அதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிறைச்சாலைகளில் முன்னர் இடம்பெற்றுள்ள கொடூரமான அடக்குமுறைகளின் வரலாற்றை அறிந்திருந்ததால், மற்றவர்கள் அச்சத்தின் காரணமாக அங்கு வந்திருந்தனர்.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் மற்றும் சட்டத்தரணியான சேனக பெரேரா, செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில், சுமார் 900 கைதிகளை மட்டுமே அடைத்துவைக்கக்கூடிய மஹர சிறைச்சாலையில் தற்போது 4,400க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய அளவில், 11,762 கைதிகளை மட்டுமே தங்க வைக்கக் கட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகளில், தற்போது 42 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதுமான கழிப்பறை வசதிகள், தங்கும் இடம் அல்லது குடிநீர் இன்றி, கைதிகள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருவதாக பெரேரா கூறினார். நீர்விநியோகத்தை ஈடுகட்டுவதற்காக ஐந்து லிட்டர் தண்ணீர் கேன்கள் கொண்டுவரப்பட வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில், கைதிகள் பல நாட்கள் தூங்கக்கூட முடியாமல் நின்றபடியே இருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, சிறைச்சாலைகளுக்குள் நிலவும் பாகுபாடான மற்றும் ஊழல்மிக்க நடைமுறைகளைச் சுட்டிக்காட்டினார். “பெருமளவிலான மோசடிகளில் ஈடுபட்ட பணபலமுள்ளவர்கள் சிறைச்சாலைக்குள் ஆடம்பர வசதிகளையும் சிறப்புச் சலுகைகளையும் பெறுகின்றனர். ஆனால், ஒரு சிறிய அளவு கஞ்சா அல்லது ஹெரோயின் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட சாதாரண கைதிகள், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள்கூட கிடைக்காமல் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.
கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியே திரண்டது “முன்கூட்டியே திட்டமிடப்பட்டது” என்ற பொலிஸாரின் கூற்றை அவர்கள் நிராகரித்தனர். தங்களது உறவினர்களின் நலன் குறித்து கவலைப்பட்டவர்கள் அங்கு திரண்டது இயல்பான ஒன்றே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 2 அன்று டெய்லி மோர்னிங் பத்திரிகைக்குப் பேட்டியளித்த சேனக பெரேரா, ஆரம்பத்தில் நடைபெற்ற போராட்டம் “பாகுபாடாக நடத்தப்படுவதற்கு எதிராக” நடத்தப்பட்டதாகக் கூறினார். “பின்னர் அந்தப் போராட்டம் தணிந்தபோதிலும், அதில் பங்கேற்ற கைதிகளை, சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பைப் பெற்றிருந்த கைதிகள் குழுவொன்று மிரட்டவும் துன்புறுத்தவும் தொடங்கினர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
போராட்டம் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலை நிர்வாகம் சுமார் 104 கைதிகளை, தும்பறை, வெலிக்கடை, களுத்துறை, பதுளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் பூஸ்ஸ உட்பட பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியது. பூஸ்ஸ, இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும், சுயாதீன கண்காணிப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையாகும். நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு எதிராக திட்டமிட்ட பழிவாங்கல் மற்றும் சித்திரவதை மேற்கொள்ளப்படும் கடுமையான அபாயம் நிலவுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலேயே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை, நீதி அமைச்சர் முன்வைத்த, “சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தகுதியான சந்தேகநபர்கள் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு விளக்கமறியல் மற்றும் சிறைத்தண்டனைக்குப் பதிலாக வீட்டுக்காவலைச் சட்டபூர்வ மாற்று ஏற்பாடாக அறிமுகப்படுத்தும் சட்டமூலத்தை விரைவுபடுத்துவது” தொடர்பான முன்மொழிவை உடனடியாக அங்கீகரித்தது. அதேவேளை, நாடு முழுவதும் புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் சிறைச்சாலைகளின் கொள்ளளவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும், மனிதாபிமானமான வாழ்க்கை நிலைமைகளைக் கோரி வெடித்த கைதிகளின் போராட்டங்களை இரக்கமின்றி ஒடுக்கிய கொடூரமான வரலாற்றைக் கொண்டுள்ளன.
2020 நவம்பரில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த அரசாங்கத்தின் காலத்தில், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது இதே மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 11 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், டசின் கணக்கானோர் காயமடைந்தனர்.
2012 ஆம் ஆண்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் பாதுகாப்புப் படையினர் டசின் கணக்கான கைதிகளைப் படுகொலை செய்தனர். இதேபோன்ற படுகொலைகள் 2011 இல் அனுராதபுரம் சிறைச்சாலையிலும், 2000 இல் களுத்துறை சிறைச்சாலையிலும் இடம்பெற்றன. ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னரும் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் அவை நீதியை வழங்குவதற்காக அல்ல, மாறாக அந்தச் சம்பவங்களை மூடிமறைப்பதற்காகவே செயல்பட்டன.
நிராயுதபாணி, சுய பாதுகாப்பற்ற கைதிகளுக்கு எதிராக நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான அடக்குமுறைக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், மஹர சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அரச பயங்கரவாத நடவடிக்கை தொழிலாள வர்க்கத்திற்கும் ஏழை மக்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும்.
மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை, தனியான ஒரு சம்பவமோ அல்லது வெறுமனே சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலின் விளைவோ அல்ல. அது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அனுரகுமார திசாநாயக அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிராக முன்னெடுத்து வரும் பரந்தளவிலான தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்காகச் செயல்படும் திசாநாயக அரசாங்கம், வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இரக்கமின்றி முன்னெடுப்பதையும், பெரும் வணிக நிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதையும் உறுதியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. சமூக நெருக்கடி தீவிரமடைந்து, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், அந்த எதிர்ப்பை ஒடுக்குவதற்காக அரசாங்கம் பொலிஸ், இராணுவம் மற்றும் அடக்குமுறை அரச இயந்திரத்தை அதிகளவில் நம்பியுள்ளது.
நிராயுதபாணி கைதிகளுக்கு எதிராக இராணுவப் பலம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதானது, முன்னிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடது கட்சிகள் முன்வைக்கும் அரசியல் முன்னோக்கின் வங்குரோத்தை அம்பலப்படுத்துகிறது. மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, சிறைச்சாலைகளின் நிலைமைகளை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை அமல்படுத்தச் செய்ய முடியும் என்று அவை கூறுகின்றன.
வன்முறையான அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கில், கைதிகளை “குற்றவாளிகள்” எனச் சித்தரித்து பிசாசுகளாகக் காட்டுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை தொழிலாளர்களும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களும் நிராகரிக்க வேண்டும். இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமைகள், மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் ஏழை மக்களையும் வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் பற்றாக்குறைக்குள் தள்ளியுள்ள அதே முதலாளித்துவ அமைப்பின் விளைவாகும். சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமே அரசின் இந்தக் கொடூரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது சாத்தியமாகும்.
மேலும் படிக்க
- இலங்கை: நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரங்களில் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்
- இலங்கையில் சிறைக் கலவரங்களுக்குப் பின்னர் கைதிகள் சித்திரவதையை எதிர்கொள்கின்றனர்
- “கிராமங்களின் அப்பாவி இளைஞர்களே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்” என்று நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
- இலங்கை: பாராளுமன்ற உறுப்பினரின் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் குடும்பங்கள் நிதி உதவி கோருகின்றன
