The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 7

இன்றைய கிழக்கிலே ஜனநாயக சர்வாதிகாரம் என்ற முழக்கம் எதை அர்த்தப்படுத்தும்

Use this version to print | Send feedback 

வரலாற்றுப் படிகளை பற்றிய ஸ்ராலினிச பரிணாமவாத, பண்பாடற்ற, புரட்சிகரமில்லாத எண்ணங்களுக்குள் சறுக்கி விழ்ந்து றடெக்கும் இன்று, பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற முழக்கத்தை, முழு கிழக்கிற்கும் பிரதிஷ்ட்டை செய்ய முயற்சிக்கிறார். ஒரு பிரத்தியேக நாட்டின் அபிவிருத்திக் கட்டத்திற்கு ஏற்ப, லெனின் பிரயோகித்து, மாற்றி, ஸ்தூலமாக்கி ஒரு குறிக்கப்பட்ட கட்டத்தில் தூக்கியெறிந்த போல்ஷிவிசத்தின் "செயல்முறை உத்தேசத்திலிருந்து" றடெக் வரலாற்றிற்கு அப்பாற்பட்ட திட்டம் ஒன்றை உருவாக்குகின்றார். அவரது பின்வரும் கட்டுரையில் இந்த விஷயத்தை சளைக்காமல் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்.

"முதலாளித்துவம் தனக்கு முன் பாரம்பரியமாக விட்டு வைக்கப்பட்டிருந்த சமூக அரசியல் உருவாக்கங்களை நிர்மூலமாக்காத, முதலாளித்துவ அபிவிருத்தி இளமையாகவுடைய அனைத்து நாடுகளுக்கும் இந்த தத்துவமும் இந்த தத்துவத்திலிருந்து பெறப்பட்ட செயற்தந்திரங்களும் பிரயோகிக்கப்பாலதாகும்."

இந்த சூத்திரம் சொல்வதென்னவென்று ஒருதரம் சிந்தியுங்கள். இது 1917 கமனேவின் நிலைப்பாட்டை பயபக்தியோடு நியாயப்படுத்துவதில்லையா? ரஷ்ய முதலாளித்துவம் பெப்ரவரி புரட்சிக்கு பின்னர் ஜனநாயக புரட்சியின் பிரச்சனைகளை நிர்மூலமாக்கவில்லையா? இல்லை. அவைகள் தீர்க்கப்படாமலே இருந்தன. அவற்றுள் மிக முக்கியமானதாக விவசாய பிரச்சனை உட்பட தீர்க்கப்படாமலே இருந்தன. பழைய சுலோகம் இன்னும் 'பிரயோகிக்கத்தக்கது' என்பதை லெனின் எப்படிக் கிரகிக்க தவறினார். ஏன் அவர் அதை திரும்பப்பெற்றார்?

றடெக் இதைப்பற்றி எங்களுக்கு முன்பே விடையிறுத்துவிட்டார்: ஏனெனில் அவை ஏற்கனவே 'நிறைவேற்றப்பட்டிருந்தது'. நாங்கள் அவரது விடையை ஆராய்ந்தோம். இது றடெக்கினது வாயால் பூரணமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இராத, இரண்டு மடங்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இராததாகும். அவரது நிலைப்பாட்டின்படி, பழைய லெனினிச சுலோகத்தின் சாராம்சம் ஆட்சியதிகார வடிவங்களாக இருக்கவில்லை, பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் கூட்டுச் சேர்ந்து பண்ணையடிமை முறையை நிர்மூலமாக்குவதாக இருந்தது என்பதாகும். ஆனால் இம்மியும் பிசகாமல் இதைத்தான் கெரென்ஸ்கியிசம் வளர்க்கவில்லை. அன்றைய மிகக் கூர்ப்படைந்த பிரச்சனையான சீனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக வேண்டி றடெக் எங்களது கடந்த காலத்திற்கு சுற்றுலா செய்தார் என்று இதிலிருந்து பின்தொடர்கிறது எல்லாம் சேர்ந்து அபத்தமாகும். இது விசாரணை செய்யப்பட்டிருக்க வேண்டியதை 1905ல் ட்ரொட்ஸ்கி புரிந்து கொண்டதாலோ அல்லது புரிந்துகொள்ளத்தவறினார் என்பதாலோ அல்ல, மாறாக ஸ்ராலின், போல்ரோனவ் விஷேசமாக றிக்கோவும் கமனேவும் 1917 பெப்ரவரி மார்ச்சில் கிரகிக்காததாலேயே ஆகும். (றடெக் அந்நாட்களில் என்ன நிலைப்பாட்டை எடுத்தாரென்று எனக்குத் தெரியாது). இரட்டையாட்சி காலத்தில் அந்த மட்டத்திற்கு ஜனநாயக சர்வாதிகாரம் நிதர்சனமானதென்று எவரும் நம்பினால் உடனடியாக மைய சுலோகத்தை மாற்றியிருக்க வேண்டும். அப்படியானால் சீனாவில் கோமிண்டாங்கின் ஆட்சியின் கீழ் அதாவது சியாங்கே சேக்கினதும் வாங் சிங்-வெய் இனதும் Tan Pin-Shan உடனிருந்த ஆட்சியின் கீழ் ஜனநாயக சர்வாதிகாரம் முற்று முழுதாகவும் பூரணமாகவும் நிறைவேறியதென்று எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும்.[1] ஆகவே இப்படி இது எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவில் சுலோகத்தை மாற்றுவதற்கு அத்தியாவசியமாக இருந்தது.

ஆனால் மொத்தத்தில், முந்தைய "சமூக-அரசியல் உருவாக்கங்களின் மரபியம்" சீனாவில் இன்னும் நிர்மூலமாக்கப்பட்டு விடவில்லையா? இல்லை. இது இன்னமும் நிர்மூலமாக்கப்படவில்லை. இது ரஷ்யாவில் லெனின் 'பழைய போல்ஷிவிச' மேல்தட்டினர் மேல் யுத்தப்பிரகடனம் செய்த நாளான 1917 ஏப்ரல் 4-ல் நிர்மூலமாக்கப்பட்டு விட்டதா? றடெக் நம்பிக்கையற்று தன்னைத்தானே முரண்படுத்துகிறார். தட்டுத் தடுமாறி அங்யேயொருக்கால் இங்கேயொருக்கால் சேறுகலக்குகிறார். இது சம்பந்தமாக எங்களை சிறு குறிப்புகளை சொல்ல அனுமதியுங்கள். அவர் சிக்கல் நிறைந்த "உருவாக்கங்களின் மரபியம்" என்ற பதப்பிரயோகத்தை பாவித்தது பூரணமாக தற்செயலானதல்ல. வெவ்வேறு இடங்களில் சில மாற்றத்தோடு வேண்டுமென்றே பாவிக்கிறார். தெளிவான சொற்களான "நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்கள்" அல்லது "பண்ணையடிமை முறை" என்பவற்றை தவிர்த்துக் கொண்டது தற்செயலல்ல, ஏன்? ஏனெனில் நேற்று இந்த மிச்சசொச்சங்களை மூர்க்கத்தனமாக நிராகரித்தார். அதன்மூலம் ஜனநாயக சர்வாதிகாரம் எனும் சுலோகத்திற்கான அடித்தளங்களை கிழித்தெறிந்தார். கம்யூனிச கலைக்கழகத்தில் அவரது அறிக்கையில், றடெக் கூறினார்:

சீனப்புரட்சியின் வளங்கள், எங்களது 1905ம் ஆண்டு புரட்சியின் வளத்தினும் குறைந்த ஆழம் கொண்டதல்ல. 1905 எங்களது புரட்சியிலும் பார்க்க சீனாவில் விவசாயிகளோடு ஐக்கியம் பூண்ட தொழிலாளர் வர்க்கம் பலம் வாய்ந்ததென்று உறுதியாக அடித்துக் கூறலாம். இந்த சின்னக்காரணத்தால் இது இரண்டு வர்க்கத்திற்கு எதிராக அணி திரட்டப்படவில்லை. தனித்து ஒரு வர்க்கமான முதலாளித்துவத்திற்கு எதிராகவே அணி திரட்டப்பட்டது.

ஆம், இந்த சின்னக்காரணத்தால் பாட்டாளி வர்க்கம் விவசாயிகளோடு சேர்ந்து, முதலாளித்துவ வர்க்கம் என்ற ஒரு வர்க்கத்திற்கு எதிராக தனது போரை நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களுக்கு எதிராக அல்லாமல் முதலாளித்துவம் என்ற வர்க்கத்திற்கு எதிராக தனது போரை திருப்பினால், அப்படியான புரட்சிக்கு என்ன பெயரென்று தயவு செய்து சொல்லுங்கள். இதிலே ஒன்றை கவனிக்க வேண்டும். றடெக் 1905-ல் சொல்லவில்லை. 1909-திலும் சொல்லவில்லை. ஆனால் 1927 மார்ச்சிலேயே சொன்னார் என்பதையே கவனிக்க வேண்டும். இது எப்படி விளங்கப்பட்டது? மிக இலகுவாக, 1927 மார்ச்சில் றடெக் சரியான பாதையில் இருந்து பிசகி வேறொரு திசையில் சென்றார். சீனப்பிரச்சனை பற்றிய ஆய்வுக்கட்டுரையிலே இடது எதிர்ப்பு அன்றைய றடெக்கினது ஒரு பக்க பார்வையில் மிக முக்கியமான திருத்தத்தை உட்புகுத்தியது. ஆனால் அங்கே மேற்கோள் காட்டிய சொற்களில் உண்மையின் வித்துக்கள் இருக்கின்றன. சீனாவிலே நிலச்சுவாந்தர்களின் பண்ணைகள் இல்லை. ஜாரிச ரஷ்யாவிலும் பார்க்க நிலச்சுவாந்தார்கள் முதலாளித்துவத்தை அதியுன்னத அன்னியோன்னியமாய் தழுவியிருக்கிறார்கள். சீனாவில் உள்ள விவசாய பிரச்சனையின் தனிவகைப்பட்ட எடை ரஷ்யாவில் இருந்ததிலும் இலேசானது. ஆனால் மறுபக்கத்தில் தேசிய விடுதலைப் பிரச்சனைக் குவியல் மிக மிக பெரியதாகும். அவ்வண்ணமே தேசத்தில் ஜனநாயக புத்துயிரூட்டலுக்கான சீன விவசாயிகளது சுயாதீனமான புரட்சிகர அரசியல் போராட்ட கொள்ளளவு, கட்டாயமாக ரஷ்ய விவசாயிகளிலும் பார்க்க கூடியதாக இருக்க முடியாது. உண்மையான இந்த வெளிப்பாடு, விவசாயப் புரட்சியை தனது பதாகையில் முகவரியாக எழுதிய ஒரு நரோத்னிச கட்சி (மக்கள் முன்னணி) 1925-க்கு முன்பும் இல்லை மூன்று வருட புரட்சி நாட்களிலும் இல்லை என்பதிலேயும் மற்ற விடயங்களிலேயும் கண்டுகொள்ளப்பட்டது. இது எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் 1925-27 அனுபவமானது சீனா பின்தங்கியுள்ளதென்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜனநாயக சர்வாதிகார சூத்திரம் பெப்ரவரி புரட்சிக்கு பின் நாளைய ரஷ்யாவிலும் பார்க்க சீனாவை பெரிய பிற்போக்கு கண்ணியில் அகப்படுத்துவதாகும் என்பதை காட்டுகிறது.

றடெக் செய்த இன்னுமொரு சுற்றுலா ஆக பின்னுக்கு கடந்தகாலத்துக்கு சென்றது, அது இரக்கமில்லாமல் அவருக்கு எதிராகவே திரும்புகின்றது. இந்த நேரம், 1850ல் மார்க்ஸ் எழுப்பிய நிரந்தரப்புரட்சியின் சுலோகம் பற்றிய விஷயமாகும்.

றடெக் எழுதுகிறார், "மார்க்ஸ்சுக்கு ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகம் கிடையாது. ஆனால் லெனினுக்கு 1905-ல் இருந்து 1917 வரை இதுதான் அரசியல் அச்சாக விளங்கியது. அதாவது முதலாளித்துவ அபிவிருத்தி மிக ஆரம்ப நிலையிலுள்ள எல்லா நாடுகளுக்கும் [? !] பொருந்தக்கூடிய அவரது புரட்சி பற்றிய கருத்தியலின் ஒரு பகுதி இதுவாகும்".

லெனினது சில வரிகளிலே தங்கி நின்று, றடெக் விளக்குகிறார். ஜேர்மனிக்கும் ரஷ்யாவிற்கும் வித்தியாசமான நிலைப்பாடுகளை எடுத்ததன் உண்மை என்னவென்றால், ஜேர்மனிய புரட்சியின் மையக்கடமை தேசத்தை ஐக்கியப்படுத்துவது. ஆனால் ரஷ்யாவில் விவசாய புரட்சியாகும். இந்த ஒப்புநோக்கலை யாந்திரிக முறையில் நோக்கவில்லையென்றால், அந்தக் கருத்தை நிலையாக வைத்திருந்தால், அது சில விஷயங்களிலே சரியாகும். அப்படியென்றால் அந்த விஷயம் எப்படி சீனாவுக்கு பொருந்தும். 1848-50 ஜேர்மனியோடு ஒப்பிடுமிடத்து ஓர் அரை காலனித்துவ நாடான சீனாவின் தேசிய பிரச்சனையின் பிரத்தியேக சுமை விவசாயப் பிரச்சனையிலும் பார்க்க அளக்க முடியாத அளவுக்கு பெரியது. சீனாவுக்கு ஒரே நேரத்தில் அதை ஐக்கியப்படுத்துவதும் அது விடுதலை அடைவதுமான இரட்டை பிரச்சனையாகும். ஜேர்மனியானது தனது அனைத்து முடியரசுகளையும் திடமாக வைத்துக் கொண்டிருக்கும்பொழுதும், யங்கர்கள் நிலங்களை வைத்துக் கொண்டிருக்கும் பொழுதும், முதலாளித்துவத்தின் உச்சியிலுள்ள தலைவர்கள் தனித்து அரசாங்க கொலு மண்டபத்தில் வைத்து சகிக்கப்பட்டபொழுதும் மார்க்ஸ் தனது நிரந்தரப் புரட்சியின் முன் நோக்கை முறைப்படுத்தினார். சீனாவிலே 1911-ல் இருந்து முடியாட்சி இல்லை. ஒரு சுயாதீனமான நிலப்பிரபுத்துவ வர்க்கமில்லை. தேசிய முதலாளித்துவ கோமிண்டாங் ஆட்சி அதிகாரத்திலிருக்கிறது. பண்ணை அடிமைத்தன உறவுகளைப்பற்றி சொல்வதென்றால் அது முதலாளித்துவ சுரண்டலோடு இரசாயன ரீதியாக உருக்கி ஒட்டப்பட்டுள்ளது. றடெக்கால் கையாளப்பட்ட மார்க்சினது நிலைப்பாட்டிற்கும் லெனினது நிலைப்பாட்டிற்கும் இடையிலான வேறுபாடு சீனாவிலே ஜனநாயக சர்வாதிகாரத்திற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடென்று சொல்லும்.

றடெக், மார்க்சின் நிலைப்பாட்டை அக்கறையாக கூட எடுத்துக்கொள்ளவில்லை, மாறாக மேலோட்டமாக, கிளைக்கதையாக, அதுவும் 1850-ல் மார்க்ஸ் விடுத்த சுற்று அறிக்கையை மாத்திரம் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். அதில் மார்க்ஸ் இன்னும் விவசாயிகளை நகர்ப்புற குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் இயற்கையான நேசசக்தியென்று எண்ணினார். அந்தக் காலத்தில் ஜேர்மனியில் ஒரு சுயாதீனமான ஜனநாயக புரட்சி காலக்கட்டம் நிலவுகின்றதென்றும், விவசாயிகளின் ஆதரவோடு நகர்ப்புற குட்டி முதலாளித்துவ தீவிர வாதிகள் தற்காலிகமாக ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்றும் மார்க்ஸ் எதிர்பார்த்தார். இங்கேதான் இந்த பிரச்சனையின் சாராம்சம் இருக்கிறது. ஆனால் அது நடந்தேறவேயில்லை. தற்செயலாகக்கூட நடந்தேறவில்லை. ஏற்கனவே கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், தங்களது சொந்த சுயாதீனமான புரட்சியை செய்ய தங்களுக்கு சக்தியில்லை என்பதைக் காட்டிவிட்டார்கள். மார்க்ஸ் இந்த படிப்பினையை தனது மதிப்பீட்டிற்கு சேர்த்துக்கொண்டார். 1856 ஏப்ரல் 16-ல் அதாவது அந்த சுற்று அறிக்கையை எழுதி ஆறு வருடங்களின் பின் மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு எழுதினார்.

"விவசாயிகள் யுத்தம் பற்றிய இரண்டாவது பிரசுரத்தால் பாட்டாளி வர்க்க புரட்சியின் பின்பகுதியை மூடிவைக்கும் சாத்தியத்திலே ஜேர்மனியின் ஒட்டுமொத்த விஷயமும் தங்கியுள்ளது. அவ்வாறாயின் விஷயம் சிறப்பாயிருக்கும்."

விஷேசமான இந்த சொற்களை றடெக் பூரணமாக மறந்துவிட்டார். உண்மையிலேயே இந்த சொற்கள் அக்டோபர் புரட்சியின் பெறுமதியான திறவுகோலை வைத்திருந்ததோடு இங்கேயுள்ள அனைத்து பிரச்சனையையும் இது முழுமையாக உள்ளடக்கி வைத்திருக்கிறது. மார்க்ஸ் விவசாய பிரச்சனையை தாண்டிப் பாய்ந்தாரா? இல்லை. நாங்கள் பார்ப்பதுபோல் அவர் தாண்டிப் பாயவில்லை. வரப்போகின்ற புரட்சியிலே பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் கூட்டு முக்கியமானதென்று அவர் எண்ணினாரா? ஆம். அவர் அப்படித்தான் எண்ணினார். புரட்சியிலே விவசாயிகள் தலைமை வகிக்கும் சாத்தியப்பாட்டை அல்லது ஒரு சுயாதீனமான பாத்திரத்தை வகிப்பார்கள் என்பதை மார்க்ஸ் அனுமதித்தாரா? இல்லை. அந்த சாத்தியப்பாட்டை அவர் அனுமதிக்கவில்லை. விவசாயிகள் ஆதரவு வழங்கியும் முதலாளித்துவ ஜனநாயகம், ஜனநாயக புரட்சியை செய்வதிலே வெற்றியடையவில்லை என்பதிலிருந்து (முதலாளித்துவ ஜனநாயகத்தின் தவறால் மாத்திரம், விவசாயிகளது தவறின்மையால்) விவசாயிகள் ஆதரவை வழங்கும்பொழுது, பாட்டாளி வர்க்கம், பாட்டாளி வர்க்க புரட்சியை செய்து முடிக்குமென்று முடிவெடுத்தார். 'அப்படி நடந்தேறினால் விடயம் சிறப்பாகவிருக்கும்.' சரியாக அக்டோபர் புரட்சி இப்படித்தான் நடந்ததென்பதையும் அங்கே தவறு நடக்கவில்லை என்பதையும் றடெக் வெளிப்படையாய் பார்க்கவில்லை.

இந்த முடிவுகளிலிருந்து சீனாவைப் பற்றி நல்ல தெளிவுகிடைக்கின்றது. விவாதம் விவசாயிகள் ஒரு தீர்க்கமான நேச சக்தியென்பதோ அன்றேல் விவசாய புரட்சியின் பெரிய முக்கியத்துவம் பற்றியதோ அல்ல மாறாக சீனாவில் சுயாதீனமான விவசாய ஜனநாயக புரட்சி சாத்தியமாகுமா அல்லது 'விவசாயிகளின் யுத்தம் பற்றிய இரண்டாவது பதிப்பு' பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு ஆதரவை வழங்குமா என்பதுதான். இப்படித்தான் பிரச்சனையுள்ளது. இந்த பிரச்சனையை வேறுவிதமாக அணுகுகின்றவர்கள் எதையும் கற்றுக்கொண்டதோ விளங்கி கொண்டதோ கிடையாது. மாறாக வெறுமனே சீன கம்யூனிஸ்ட் கட்சியை குழப்பியதோடு அதை பிழையான வழிக்கு திசை திருப்பியவர்களுமாவார்கள்.

கீழைத்தேச பாட்டாளிகளின் வெற்றிக்கு பாதை திறக்கும் பொருட்டு 'கட்டங்கள் மற்றும் 'படிநிலை' பற்றிய ஸ்ராலின், மார்ட்டினோக்களது படுபிற்போக்கு தத்துவம் எடுத்த எடுப்பிலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டி இருந்தது, உதறித்தள்ளியாக வேண்டி இருந்தது, துடைப்பக்கட்டையால் அடித்துப் பெருக்கி, கூட்டித்தள்ளியாக வேண்டி இருந்தது. இந்த கேடுகெட்ட பரிணாமவாதத்திற்கு எதிராக போராடியதனாலேயே போல்ஷிவிசம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்தது. இது முன்பே ஏட்டிலே குறித்து வைத்திருந்த அரசியல் நிலைப்பாட்டிற்கு அடிபணிந்து பீடுநடை போடுவதாகும். வெவ்வேறு அபிவிருத்தி மட்டங்களிலுள்ள நாடுகளுக்கு படிப்படியாக வெவ்வேறு வரிசைக்கிரமத்தில் புரட்சி செய்யும் உரிமையை வகுத்து, அவைகளுக்கு முன்னமே புரட்சி பங்கீட்டு அட்டைகளை உரிமையாக வழங்கும் இந்த ஸ்ராலின் கூசினெனின் சிந்தனைகளை கட்டாயம் நிராகரிக்க வேண்டும். ஒருவர் தானே உண்மையான வர்க்கப் போராட்டத்தின் போக்கை ஏற்க வேண்டும். இதற்கான மதிப்பிட முடியாத வழிகாட்டி லெனினாகும், ஆனால் லெனினின் ஒட்டுமொத்தத்தையும் கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டும்.

1919-ல் லெனின் வ¤ஷேசமாக கம்யூனிச அகிலத்தை அணிவகுப்பது தொடர்பாக கடந்தகால முடிவுகளை தொகுத்தளித்ததோடு, என்றைக்குமான நன்றாக முற்றுப்பெற்ற தத்துவார்த்த முறைப்படுத்தலை தரும்பொழுது கெரன்ஸ்கி இசத்தினதும் அக்டோபர் புரட்சியினதும் அனுபவத்தை வியாக்கியானப்படுத்த பின்வருமாறு கூறினார். ஏற்கனவே வர்க்க முரண்பாடுகள் அபிவிருத்தியடைந்த ஒரு முதலாளித்துவ சமூகத்திலேயே நேரடியான அல்லது அன்னிய ரூபமான முதலாளித்துவ சர்வாதிகாரம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மாத்திரம் நிலவ முடியும். இங்கே இடைநடுவு ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு ஜனநாயகமும், ஒவ்வொரு "ஜனநாயக சர்வாதிகாரமும்" (வஞ்சப்புகழ்ச்சியான மேற்கோள் லெனின் இட்டது) ஒரு திரைமறைவில் உள்ள முதலாளித்துவ ஆட்சியாகும் என்பதை மிகப் பின்தங்கிய நாடான ரஷ்யா அனுபவித்த முதலாளித்துவ ஜனநாயக சகாப்தமும் அதாவது "ஜனநாயக சர்வாதிகாரத்திற்கு" மிகச் சாதகமான சகாப்தம் காட்டியது. பெப்ரவரி மற்றும் அக்டோபர் புரட்சியின் கூட்டு அனுபவத்தால் மாத்திரம் உண்டான இந்த முடிவை லெனின் தனது ஜனநாயகம் பற்றிய ஆய்வுரையின் அடிப்படையாக எடுத்தார்.

மற்றவர்களைப் போலே றடெக்கும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற பிரச்சனையில் இருந்து ஜனநாயகத்தை யாந்திரீக முறையில் பிரிக்கின்றார். பெரிய தவறுகளின் ஊற்றிடம் இதுதான். "ஜனநாயக சர்வாதிகாரம்" என்பது வெறுமனே புரட்சிக் காலங்களில் முதலாளித்துவத்தின் முகமூடியணிந்த ஆட்சியாகும். 1917-ல் எங்களது 'இரட்டையாட்சி' அனுபவமும் சீனாவிலே கோமின்டாங்கின் அனுபவமும் இதை எங்களுக்கு கற்பித்தன.

உண்மையிலேயே இழிபாசாங்கினரது நம்பிக்கையீனம் அதிவேகத்தில் வெளிப்பட்டது எங்கேயெனில் இப்போதுங்கூட ஜனநாயக சர்வாதிகாரத்தை முதலாளித்துவ சர்வாதிகாரத்தோடும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தோடும் ஒப்புநோக்க முயற்சிப்பதாலாகும். ஆனால் இதன் அர்த்தம் ஜனநாயக சர்வாதிகாரம் ஓர் இடைமருவு குணாம்சமாக கட்டாயம் இருக்க வேண்டும், அதாவது இது ஒரு குட்டி முதலாளித்துவ உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். அதிலே பாட்டாளி வர்க்கம் பங்கு கொள்ளுதல் விஷயங்களை மாற்றாது. இயற்கையிலேயே வெவ்வேறு வர்க்க நிலைப்பாடுகளுக்கு ஓர் எண்கணித இடைநிலை இல்லையென்பதாகும். முதலாளித்துவ சர்வாதிகாரமும் இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் இல்லையென்றால் இதிலிருந்து குட்டி முதலாளித்துவ வர்க்கம் கட்டாயம் ஒரு நிர்ணயமான பாத்திரத்தை வகிக்கும் என்பதாகும். மூன்று ரஷ்ய புரட்சிகளும் இரண்டு சீன புரட்சிகளும் விடையிறுத்த அதே பழைய பிரச்சனைக்கு இது எங்களை மீண்டும் கொண்டு வரும். ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்க நிலைமைக்குள்ளே, முதலாளித்துவ நாடுகளில் குட்டி முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகர தலைமைப்பாத்திரத்தை வகிக்குமா, இன்னும் ஜனநாயக கடமைகளோடு முட்டிமோதிக் கொண்டிருக்கும் பின்தங்கிய நாடுகளில் புரட்சிகர தலைமைப் பாத்திரத்தை வகிக்குமா?

குட்டி முதலாளித்துவ கீழ்த்தட்டினர் புரட்சிகர சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியிருந்த சகாப்தங்கள் நிலவியதுதான். அதை நாம் அறிவோம். அந்த சகாப்தங்கள் பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடி தன்னை இன்னும் குட்டி முதலாளித்துவத்தில் இருந்து வித்தியாசப்படுத்தியிருந்திருக்கவில்லை, மாறாக பாட்டாளி வர்க்கம் அபிவிருத்தி அடையாத நிலைமைக்குள்ளே பின்னதன் மூலத்தையும் தன்னுள் வைத்திருந்தது. ஆனால் இன்று அது முழுக்க வேறுவிதம். ஒரு பின்தங்கிய முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் கூட, இன்றைய வாழ்க்கை முறையை வழிநடத்திச்செல்வதற்கான திறமையைப் பற்றிப் பேச முடியாது. ஏனெனில் குட்டி முதலாளித்துவத்தை உதவாக்கரையாக்கி, விவசாயிகளை தவிர்க்க முடியாமல் அரசியலில் ஒன்றில் முதலாளித்துவத்தை அன்றேல் தொழிலாள வர்க்கத்தை தேர்ந்தெடுக்கும்படி மோதுகின்ற முதலாளித்துவ அபிவிருத்தியின் அடிப்படையில், தொழிலாள வர்க்கமானது, குட்டி முதலாளித்துவத்தில் இருந்து பிரிந்து முதலாளித்துவத்தின் போர் எதிரியாக போர்க்களம் புகுந்துவிட்டது. மேல்மட்டமாக பார்க்கும் பொழுது விவசாயிகள் ஒரு கட்சியை உருவாக்க முயற்சிசெய்த பொழுதெல்லாம், அது குட்டி முதலாளித்துவ கட்சியாகத்தான் தெரியும். உண்மையிலேயே அது நிதி மூலதனத்திற்கு உறுதுணையாக தனது முதுகை கொடுக்கும். முதலாவது ரஷ்ய புரட்சி காலகட்டத்தில் அல்லது முதல் இரு புரட்சிகளுக்கு இடையிலான கால கட்டத்தில் ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவத்தின் சுயாதீனத்தின் அளவு பற்றி (ஆனால் அளவு மட்டும்தான்!) இன்னும் கருத்து வேறுபாடுகள் நிலவின, இப்பொழுது இப்பிரச்சினை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகளின் ஒட்டுமொத்தப் போக்கினால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது, மாற்றமுடியாமல் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் புரட்சிக்குப் பின்பும் இந்த பிரச்சனை பல நாடுகளிலும் அனைத்து சாத்தியமான வடிவங்களிலும் வெவ்வேறு சேர்க்கைகளிலும் எழுப்பப்பட்டது, எல்லா இடங்களிலும் அதே மாதிரியாகவே தீர்க்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி கெரன்ஸ்கியிசத்திலிருந்து கிடைக்கப்பட்ட ஓர் அடிப்படை அனுபவம்தான் கோமிண்டாங்கின் அனுபவமாகும். இன்னும் முக்கியத்துவம் குறையாத ஒன்றான இத்தாலிய பாசிச அனுபவத்தையும் இதனோடு சேர்க்க வேண்டும். அங்கே குட்டி முதலாளித்துவம் ஆயுதமும் கையுமாக பழைய முதலாளித்துவ கட்சிகளின் கையில் இருந்து ஆட்சியதிகாரத்தை பிடுங்கி அதன் தலைவர்களினோடு உடனடியாக நிதிய தன்னலக்குழுவிடம் (Financial oligarehy) கையளித்தது. இதே பிரச்சனை போலந்திலும் எழுந்தது. அங்கே பில்சுட்ஸ்கி (Pilsudski) இயக்கம் பிற்போக்கு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசாங்கத்திற்கு எதிராக இலக்கு வைத்தது மற்றும் குட்டிமுதலாளித்துவ வெகுஜனங்கள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் பரந்த வட்டாரங்களின் நம்பிக்கைகளை பிரதிபலித்தார்கள். பழைய போலந்து சமூக ஜனநாயகவாதி வோர்ஸ்கி (Worski) தான் விவசாயிகளை 'குறை மதிப்பீடு' செய்வது என்ற பயத்தில் பில்சுட்ஸ்கி (Pilsudski) புரட்சியை 'தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்' என்று அடையாளப்படுத்தியது ஒரு தற்செயலான நிகழ்ச்சி அல்ல. பல்கேரிய அனுபவத்தை ஆராய்ந்தால் இது எங்களை அதிக தூரத்திற்கு இழுத்துக் கொண்டு போய்விடும், அதாவது கொலறோவினதும் (Kolarov) கபக்சிவினதும் (Kabakchiev) ஸ்டம்ப்லிஸ்கியின் (Stamplisky) கட்சி சம்பந்தமான வெட்கங்கெட்ட வியாகூல அரசியலை அல்லது அமெரிக்காவின் விவசாய தொழிற்கட்சியின் வெட்கங்கெட்ட பரிசோதனையை அல்லது சினோவியேவின் Radic பற்றிய கட்டுக்கதையை அல்லது ரூமேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தை இப்படியே முடிவில்லாமல் நீட்டிக்கொண்டே போகலாம். சில விடயங்கள் அவைகளின் முக்கியத்துவம் கருதி எனது கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த அனுபவங்களில் இருந்து எடுத்துக்கொண்ட அடிப்படையான முடிவுகள் அக்டோபர் புரட்சியின் படிப்பினைகளை, முழுமையாக ஊர்ஜிதம் செய்வதோடு மேலும் அதற்கு உரமூட்டுகின்றது, அதாவது விவசாயிகள் உள்ளடங்கலான குட்டி முதலாளித்துவம் புரட்சிகர சகாப்தங்களில் என்றால் என்ன பிற்போக்கு சகாப்தங்களில் என்றால் என்ன, நவீன, பின்தங்கிய முதலாளித்துவ சமுதாயத்தில் கூட தலைமைப் பாத்திரத்தை வகிக்க இலாயக்கற்றது. விவசாயி ஒன்றில் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு ஆதாரவாக பணியாற்ற வேண்டும். இடைவடிவங்கள் எல்லாம் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை மறைக்கவே செய்யும், அது ஆட்டங்காணத்தொடங்கி உள்ளது அல்லது இடையூறுகளுக்கு பின்னர் இன்னும் காலூன்றாதிருக்கிறது (கெரன்ஸ்கியிசம், பாசிசம், பில்சூட்ஸ்கியின் ஆட்சி).

விவசாயிகள் ஒன்றில் முதலாளித்துவத்தை அல்லது பாட்டாளி வர்க்கத்தைப் பின்பற்றுவார்கள். விவசாயிகள் தன்னைப் பின்பற்றாத பட்சத்துங்கூடப் பாட்டாளி வர்க்கம் என்ன விலை கொடுத்தும் விவசாயிகளோடு சேர்ந்து நடந்தார்களென்றால், அவர்கள் உண்மையிலேயே நிதி மூலதனத்தின் வாலில் தொங்குபவர்கள் என்பதை நிறுவுவார்கள்: 1917 ரஷ்யாவில் தந்தை நாட்டை பாதுகாப்பவர்களான தொழிலாளர்களும் சீனாவிலே கோமின்டாங்கில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் உள்ளடங்கலான தொழிலாளர்கள், 1926 போலந்து சோசலிச கட்சியில் இருந்த தொழிலாளர்களும், ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கம்யூனிஸ்ட்டுகளும் இப்படியே.

யாராவது இதை முடிவுவரை சிந்திக்காது விடுவரோ, அவை விட்டுச்சென்ற புதிய தடத்திலிருந்து நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவில்லையோ, அவர்கள் புரட்சிகர அரசியலில் தலையிடாது விடுவது சிறந்ததாகும்.

பெப்ரவரி அக்டோபர் புரட்சிகளின் படிப்பினைகளிலிருந்து லெனின் ஓர் அடிப்படையான முடிவுக்கு வந்தார். முழுமையாகவும் ஸ்தூலமாகவும் எடுக்கப்பட்டட அந்த முடிவானது பூரணமாக "ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற சிந்தனையை நிராகரிப்பதாகும். 1918 க்குப் பின்னர் பின்வருவன லெனினால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது:

"முழு அரசியல் பொருளாதாரமும் --யாராவது இதிலேயிருந்து ஏதாவது கற்றறிந்தால்-- முழு புரட்சிகளின் வரலாறும் 19ம் நூற்றாண்டின் முழு அரசியல் அபிவிருத்திகளும் எங்களுக்கு கற்றுத்தந்தது, விவசாயிகள் ஒன்றில் முதலாளித்துவ வர்க்கத்தை பின்பற்றுவார்கள் அன்றேல் தொழிலாள வர்க்கத்தை பின்பற்றுவார்கள் என்பதைத்தான். இது ஏன் என்று நீங்கள் அறியாவிட்டால், அந்த குடிமகனுக்கு நான் சொல்வேன்.... பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எந்த பெரிய புரட்சிகளின் அபிவிருத்திகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் எந்த நாட்டு அரசியல் வரலாற்றை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏனென்று அவைகள் உங்களுக்கு சொல்லும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார கட்டுமானமானது அதை ஆளும் சக்திகள் மூலதனம் அல்லது அதைத் தூக்கியெறிந்த பாட்டாளி வர்க்கம் மாத்திரமேயென்று சொல்லும். அந்த சமூகத்தின் பொருளாதார கட்டுமானத்தில் அதை ஆளக்கூடிய வேறொரு சக்திகள் இல்லை."

நவீன இங்கிலாந்தையோ ஜேர்மனியையோ எடுத்தாலும் விஷயம் இதுவேதான். பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏதாவதொரு பெரிய புரட்சியின் படிப்பனவுகளை ஆதாரமாகக் கொண்டால், பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவப் புரட்சியும் கூட ஒன்றில் முதலாளித்துவ சர்வாதிகாரம் அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக மாத்திரமே அமையும் என்ற முடிவுக்கு லெனின் வந்தார். இதற்கு இடை நடுவில் நிற்கும் ஒரு "ஜனநாயகம்", அதாவது இடைநிலை சர்வாதிகாரம் அமைய முடியாது.

அவரது தத்துவார்த்த, அரசியல் உல்லாசப் பயணத்தை றடெக் தொகுத்தபோது முதலாளித்துவப் புரட்சியை சோசலிசப் புரட்சியிலிருந்து வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும் என்ற மெல்லிய முதுமொழியை மாத்திரம் நாங்கள் பார்க்கலாம். "பகுத்தறிவென்ற" ஒரேயொரு ஊற்றிலிருந்தே அனைத்து விடயங்களையும் தொடங்கும் கூசினின்னை றடெக் ஒரு விரலால் சுட்டிக்காட்டி இந்த 'படி'க்கு இறங்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சுலோகமானது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் பின்தங்கிய நாடுகளுக்கும் அறைகூவுவது நிகழக்கூடாத காரியமென்று கருதுகிறார். விசுவாசமாக ஒன்றையும் விளங்க முடியாத ஒரு மனிதனான கூசினின், ட்ரொட்ஸ்கி 1905-ல் இருந்து "ஒன்றையும் விளங்கவில்லை" என்று குற்றஞ்சாட்டுகிறார். கூசினினை பின்பற்றி றடெக்கும் வஞ்சப் புகழ்ச்சியாய்: ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை, "சீன இந்திய புரட்சியினது தனித்தன்மை, அவைகள் மேற்கு ஐரோப்பிய புரட்சியிலிருந்து எந்த வகையிலும் தனிச்சிறப்புப்பெற்றிருக்கவில்லை. ஆதலால் அவைகளது முதலாவது அடியெடுப்பிலேயே [? !] கட்டாயமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு" இட்டுச்செல்லும் என்பதாகும்.

இது சம்பந்தமாக றடெக் ஒரு சின்ன விஷயத்தை மறந்துவிட்டார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் நடந்தேறவில்லை. மாறாக அது ஒரு பின்தங்கிய கிழக்கு ஐரோப்பிய நாட்டிலேயே நிதர்சனமாகியது. வரலாற்று நிகழ்வுப்போக்கு ரஷ்யாவின் 'பிரத்தியேகத்தன்மையை' கவனியாதுவிட்டது ட்ரொட்ஸ்கியின் தவறா? மேலும் முதலாளித்துவம் சரியாக சொல்வதென்றால் நிதி மூலதனம் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஆட்சி செய்கின்றது என்பதை அவைகளின் பிரத்தியேகத்தன்மைகளான அபிவிருத்தி மட்டங்கள், சமூக கட்டுமானங்கள், சம்பிரதாயங்கள் போன்றவைகள் வித்தியாசமானதாக இருந்தபோதும், முதலாளித்துவம் ஆட்சி செய்கின்றதென்பதை றடெக் மறந்துவிட்டார். மேலும் இங்கே பிரத்தியேகத்தன்மைகளுக்கு மதிப்பளிக்காமை வரலாற்று அபிவிருத்தியால் ஏற்பட்டதேயன்றி ட்ரொட்ஸ்கியால் ஏற்பட்டதல்ல.

அப்படியானால் வளர்ச்சியடைந்த நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் எங்கே வித்தியாசப்படுகின்றன? அந்த வித்தியாசம் பெரியது. ஆனால் அது முதலாளித்துவ உறவுகளின் ஆதிக்க எல்லைகளுக்குள் இன்னும் நிலவுகின்றது. முதலாளித்துவ ஆட்சி வடிவங்களும், முறைகளும் வெவ்வேறு நாடுகளில் பெரிதாக வித்தியாசப்படுகின்றன. ஒரு முனையில் இந்த அதிகாரமானது பலமான சர்வாதிகார குணாம்சத்தை எடுத்துள்ளது: ஐக்கிய அமெரிக்காவில். மறுமுனையில் நிதி மூலதனம் மத்தியகால வாழ்ந்து முடிந்த ஆசிய ஸ்தாபனங்களுக்கு இசைந்ததினோடு அவைகளை தனக்குக் கீழ்ப்படியவைத்து, அவைகளுக்குமேல் தனது முறைகளை திணித்துள்ளது: இந்தியாவில். இருந்தாலும் இரண்டு இடங்களிலும் முதலாளித்துவமே ஆட்சி செய்கின்றது. வித்தியாசமான முதலாளித்துவ நாடுகளில் அவைகளின் சமூக அடிப்படை, அரசியல் வடிவங்கள், உடனடிக் கடமைகள், வேலை வேகங்களை பொறுத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் பெரிய வித்தியாசமான குணாம்சமானதாய் இருக்குமென்பது இதிலிருந்து பெறப்படும். ஆனால், வெகுஜனங்களை ஏகாதிபத்திய வாதிகளின், நிலப்பிரபுக்களின் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டை வெல்லுவதற்கு தலைமைவகிக்க வேண்டும் -இது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர மேலாதிக்கத்தின் கீழ் மாத்திரந்தான் செய்யப்பட முடியும். அது ஆட்சியை கைப்பற்றியதன் பின்பு தானாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக உருமாறும்.

றடெக்கின் கற்பனைகள் மானிடத்தை, ஒன்று சோசலிச சர்வாதிகாரத்திற்கு "முதிர்ச்சியடைந்த அணி", மற்றையது ஜனநாயக சர்வாதிகாரத்திற்கு "முதிர்ச்சியடைந்த அணி" என இரண்டு அணியாகப் பிரிக்கிறபொழுது, இதனால் மாத்திரம் அவர் என்னிலிருந்து வித்தியாசப்பட்டு தனித்தனி நாடுகளின் "பிரத்தியேகத்தன்மை" என்று கூறப்படுவதை கவனத்தில் எடுத்துள்ளார். ஒவ்வொரு நாட்டைப் பற்றிய பிரத்தியேகத்தன்மைகளை விசுவாசமாக படிப்பதை, அதாவது ஒரு நாட்டின் வரலாற்று அபிவிருத்தியில் ஏற்படும் விதவிதமான படிகளினதும் கட்டங்களினதும் உயிரோட்டமான முழுநிறைவாய் ஊடுருவலைப் பற்றி விசுவாசமாகப் படிப்பதினின்றும் கம்யூனிஸ்ட்டுக்களை திசை திருப்பி உயிரற்ற அலுப்புத்தட்டும் ஒன்றாக உண்மையிலேயே மாற்றியுள்ளார்.

ஒரு நாடு ஜனநாயகப் புரட்சியை செய்யவில்லையா அன்றேல் செய்துவிட்டதா என்ற பிரத்தியேக தன்மைகள், அவைகளை அடிப்படையாகக் கொண்டே பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் வேலைத்திட்டத்தை அமைக்க வேண்டும் என்றவகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த அடிப்படையில் அமைந்த தேசிய வேலைத்திட்டத்தால் மாத்திரமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி முதலாளிகளுக்கும் அவர்களின் ஜனநாயக ஏஜன்டுகளுக்கும் எதிராக பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான அதன் உண்மையான மற்றும் வெற்றிகரமான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

இந்த போராட்டத்திலே வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூற்றை பெரிதாக அந்நாட்டு பொருளாதாரத்திலே பாட்டாளி வர்க்கம் வகிக்கும் பாத்திரமும் அதனோடு சேர்ந்த அதன் முதலாளித்துவ அபிவிருத்தி மட்டமுமே கட்டாயம் தீர்மானிக்கும். இருந்தபோதிலும் இது மாத்திரம் தான் முக்கிய காரணியாகாது. முக்கியம் குறையாத பெரியதும் சுவாலை விட்டெரிகின்றது என்றும் "மக்கள்" கருதும் பிரச்சனைகள் அந்த நாட்டிலே இருக்குமானால் அதன் தீர்விலே பெரும்பான்மை தேச மக்களுக்கு நாட்டமிருக்குமானால் அதை தீர்ப்பதற்கான தீரம் நிறைந்த புரட்சிகர செயற்பாடுகளை அது கோரும். இப்படியான பிரச்சனைகளாவன விவசாய பிரச்சனைகள் தேசிய இனப் பிரச்சனைகள் இரண்டும் சேர்ந்த பிரச்சனைகள் போன்றனவாகும். வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கம் தூய சோசலிசப் புரட்சியின் அடிப்படையில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக காலனித்துவ நாடுகளிலுள்ள கூர்ப்படைந்த விவசாய பிரச்சனைகளாலும் சகிக்க முடியாத தேசிய இன ஒடுக்குமுறைப் பிரச்சனைகள் போன்றவற்றாலும் சார்பு ரீதியில் இந்நாடுகளிலுள்ள சிறிய பாட்டாளி வர்க்கம் தேசிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படையில் ஆட்சிக்கு வரும். அக்டோபர் புரட்சியின் பின்பு இதற்கான நிரூபணம் தேவையற்ற ஒன்றாகும். கருத்தியல் பிற்போக்கு வருடங்களில் இழிபாசாங்கினரது தத்துவார்த்த சீரழிவினூடாக புரட்சி பற்றிய ஆரம்ப எண்ணக்கரு கூட வெறுக்கத்தக்கதாகி அழுகி.... கூசின்மயமாகியதால் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து தொடங்க வேண்டியதாகி விட்டது.

மேற்சொன்னதிலிருந்து வருவது என்னவென்றால் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் இந்த வழியில் அல்லது வேறொரு வழியில் இன்றைய நிலையில் பார்க்கும்பொழுது ஏற்கனவே சோசலிசப் புரட்சிக்கு முதிர்ச்சியடைந்துவிட்டதா? இல்லை. அப்படிச் சொல்வது தவறான, செத்த, பண்டிதச்செருக்கான ஸ்ராலின் புக்காரினது வழியில் கேள்வியை கேட்பதாகும். உலகப் பொருளாதாரம் அதன் ஒட்டுமொத்தத்தில் சந்தேகத்திற்கிடமின்றி சோசலிசத்திற்கு முதிர்ந்துவிட்டது. ஆனால் இதன் அர்த்தம் ஒவ்வொரு நாடும் தனித்தனியாக பார்க்குமிடத்து சோசலிசப் புரட்சிக்கு முதிர்ந்துவிட்டதென்ற அர்த்தமல்ல. அப்படியென்றால் இந்தியா, சீனா போன்ற வெவ்வேறு பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னவாவது? இதற்கு நாம் விடையிறுப்போம்: வரலாறு நீங்கள் ஆணையிட்டபடி ஆக்கப்படுவதில்லை. ஒரு நாடு, அது சுயாதீனமாக சோசலிசத்தை கட்டுவதற்கு முதிர்ச்சி அடைவதற்கும் முன்னதாக மட்டுமல்லாமல், பல விளைவுகளை உண்டு பண்ணக்கூடிய சோசலிசமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு அது முதிர்ச்சியுறுவதற்கும் முன்னால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதற்கு 'முதிர்ச்சி'யடைய முடியும். ஒருவர் சமூக வளர்ச்சியின் இயக்கததை முன்னரே யோசித்து வைத்திருந்த அபிப்பிராயத்தோடு தொடங்கக் கூடாது. ஸ்ராலினது இளம் தத்துவார்த்த அரவணைப்பிருந்தபோதும் சீரற்ற அபிவிருத்தியின் (Uneven Development) விதிகள் தொடர்ந்து வாழும். ஒவ்வொரு நாடுகளுக்கிடையிலுள்ள உறவிலே மாத்திரம் இந்த விதியின் விசைகள் செயல்படுவது மாத்திரமல்ல, ஒரு நாட்டிலுள்ள வெவ்வேறு நிகழ்வுப்போக்குகள் இடையேயுள்ள உறவுகளிலும் இது செயல்படும். ஓர் உலகளாவிய மட்டத்திலேயே, பொருளாதார அரசியல் நிகழ்வுப்போக்குகளிலே உள்ள சீரற்ற வளர்ச்சியில் சமரசத்தை அடையலாம். குறிப்பாக இதன் அர்த்தம் சீனப் பாட்டாளி வர்க்க சர்வாதிகார பிரச்சனைக்கு சீன எல்லைக்குள்ளேயுள்ள பொருளாதார அரசியலை மாத்திரம் கருத்திற் கொள்ள முடியாது.

இங்கேதான் நாங்கள் இரண்டு ஒன்றையொன்று புறநீங்கலாக்கும் நிலைப்பாடுகளுக்கு வருகின்றோம். ஒன்று நிரந்தரப் புரட்சி பற்றிய சர்வதேச புரட்சிகரத் தத்துவம் மற்றையது தனி ஒரு நாட்டில் சோசலிசம் பற்றிய தேசிய சீர்திருத்தவாத தத்துவம். பின்தங்கிய சீனா மாத்திரமல்ல ஆனால் பொதுவாக உலகத்தில் எந்தவொரு நாடும் தனது தேசிய எல்லைகளுக்குள்ளே சோசலிசத்தைக் கட்டியெழுப்ப முடியாது: தேசியமாக்கலுக்கு ஏதுவாக போதுமான அளவில் அபிவிருத்தியடையாத உற்பத்திச் சக்திகள் போலவே, தேசிய எல்லைகளுக்கு அப்பால் உயர்ந்தமட்டத்தில் அபிவிருத்தியடைந்திருக்கும் உற்பத்தி சக்திகள் அதை எதிர்க்கும். உதாரணமாக பிரித்தானியாவிலே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கஷ்டங்களையும் முரண்பாடுகளையும் சந்திப்பது வித்தியாசமான குணாம்சம் உள்ளதாக இருந்த போதிலும் அது சீனாவிலே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முகங்கொடுப்பதிலும் பார்க்க உண்மையாகவே அது குறைந்ததாக இராது. இரண்டு இடங்களிலுமுள்ள முரண்பாடுகளை சர்வதேச புரட்சியினால் மாத்திரம் வெல்ல முடியும். சீனாவில் சோசலிச உருமாற்றத்திற்கு "முதிர்ச்சி அடைந்தது", "முதிர்ச்சி அடையாதது" என்ற பிரச்சனைக்கே இடம்விடவில்லை. சீனாவின் பின்தங்கிய நிலையானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் பணியை மிகக் கடினமானதாக்கும் என்பதே சர்ச்சைக்கிடமில்லாத விஷயமாகும். நாங்கள் மீண்டும் சொல்வோம்: வரலாறு ஒழுங்குபடுத்தலுக்காக ஆக்கப்படவில்லை, ஆதலால் சீன பாட்டாளிகளுக்கு மாற்றுவழி வேறில்லை.

எப்பொழுது எந்த சூழ்நிலைமைக்குள், ஒரு காலனித்துவ நாடு அதன் விவசாய மற்றும் தேசிய இனப்பிரச்சனைக்கான உண்மையான புரட்சிகர தீர்வுக்கு முதிர்ச்சியடையும் என்று முன்னமே கூற முடியாது. ஆனால் எதுவென்றாலும் நாங்கள் இன்று முழு நிச்சயத்துடன் கூற முடியும், சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் உண்மையான மக்கள் ஜனநாயகம், அதாவது தொழிலாளர் விவசாயிகளது ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் மூலம் மட்டுமே அடையப்பட முடியும். அந்தப் பாதையில் இன்னும் பல கட்டங்கள், படிநிலைகள் மற்றும் நிலைகள் இருக்கலாம். மக்களை இன்னும் ஈவிரக்கமற்று தாக்குதலுக்கு ஆளாக்கும் பொருட்டே மக்களின் வெகுஜன அழுத்தத்தின் கீழ் முதலாளித்துவ வர்க்கம் இன்னும் இடதுபுறம் அடி எடுக்கும். இரட்டை அதிகாரம் கொண்ட காலகட்டங்கள் சாத்தியமானது மற்றும் நிகழக்கூடியது. ஆனால் எது இருக்காது, எது இருக்க முடியாது என்பது உண்மையான ஜனநாயக சர்வாதிகாரம் ஆகும், அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்ல. ஒரு 'சுயாதீனமான' ஜனநாயக சர்வாதிகாரம் கோமிண்டாங் வகையினதாக மட்டுமே இருக்க முடியும், அதாவது, முற்றிலும் தொழிலாளர் விவசாயிகளுக்கு எதிராக செலுத்தப்பட்டதாகவே இருக்கும். நாம் ஆரம்பத்திலேயே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும், அருவமான சூத்திரங்களுக்குப் பின்னால் உள்ள வர்க்க யதார்த்தங்களை மறைக்காமல், வெகுஜனங்களுக்கு கற்பிக்க வேண்டும்.

ஏகாதிபத்திய நுகத்தடிக்கு நன்றி, முதலாளித்துவம் சீனாவில் தேசியப் புரட்சியை செய்யுமென்று ஸ்ராலினும் புக்காரினும் போதித்தார்கள். அதற்கான முயற்சி செய்யப்பட்டு முடிந்தது. என்ன பலாபலன்? பாட்டாளி வர்க்கத்தை, நாட்டாமைக்காரனின் கோடரிக்கு இரையாய் வழங்கினார்கள். பின்னர் சொன்னார்கள், அடுத்ததாக இனிமேல் ஜனநாயக சர்வாதிகாரம் வரும் என்று. குட்டி முதலாளித்துவ சர்வாதிகாரம் வெறுமனே ஒரு முகமூடியணிந்த மூலதனத்தின் சர்வாதிகாரமென்று நிறுவப்பட்டாயிற்று. தற்செயலாகவா? இல்லை. "விவசாயிகள் ஒன்றில் தொழிலாளர்களை அன்றேல் முதலாளித்துவத்தை பின்பற்றுவார்கள்." முதலாவதில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எழும். மற்றயதில் முதலாளித்துவ சர்வாதிகாரம் எழும். சீன படிப்பினகளிலிருந்து இது தெளிவாக விளங்கும். நீங்கள் அதைத் தூரத்திலிருந்து படித்தாலுங்கூட "இல்லை" என்று நாங்கள் பதிலிறுத்தோம். "அது ஒரு வெற்றியளிக்காத வெறும் பரிசோதனை. ஓர் உண்மையானஜனநாயக சர்வாதிகாரத்தை நிர்மாணிக்க நாங்கள் எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்." "என்ன வழிகளில்?" "பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் கூட்டென்ற சமூக அடிப்படையில்" இதுதான் எங்களுக்கு றடெக் வழங்கிய கடைசிக் கண்டுபிடிப்பு. நீங்கள் கோமிண்டாங் பாட்டாளிகளும் விவசாயிகளும் "ஒத்துழைத்த" அடிப்படையிலேயே எழ அனுமதித்தீர்களானால், சுட்ட பலாக்கொட்டையை முதலாளித்துவத்திற்கு கொடுக்க நெருப்பிலிருந்து வெளியிலெடுப்பீர். இந்த அரசியல் இயங்குமுறை என்னவாக இருக்குமென்று எங்களுக்குச் சொல்லுங்கள். கோமின்டாங்கை என்னத்தால் இடம்பெயர்ப்பீர்கள்? எந்த கட்சிகள் ஆட்சியில் இருக்கும்? தோராயமாகவாவது அதைப்பற்றிக் காட்டுங்கள். குறைந்தபட்சம் அதைப்பற்றி விபரியுங்கள். இதற்கு றடெக் விடையளிக்கின்றார். (1928-ல்!) எந்த வர்க்கம் குதிரை என்றும் எந்த வர்க்கம் சவாரி செய்வதென்றும் தனித்து அதற்காக தயாரிக்கப்பட்ட மனிதர்கள்தான் மார்க்சிசத்தின் சிக்கல் தன்மையை புரிந்துகொள்ள தகமையற்றவர்கள்தான் இந்த இரண்டாம் நிலைப் பிரச்சனையிலே அவாக்கொள்ள முடியும். ஒரு போல்ஷிவிக், அரசியல் மேல் கட்டுமானத்தில் இருந்து சூக்குமப்படுத்துவான். தன்னுடைய கவனத்தை வர்க்க அஸ்திவாரத்திலே செலுத்துவான். இல்லையென சொல்லிவிடுங்கள். நீங்கள் உங்களது பரிகாசத்தை ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள்.

நீங்கள் ஏற்கனவே தேவையான அளவுக்கு சூக்குமப்படுத்தி விட்டீர்கள். தேவைக்கு அதிகமான அளவுக்கு சீனாவிலே கட்சி விஷயங்களில் எப்படி வர்க்க சமரசம் வெளிப்பட்டது என்ற பிரச்சனையிலிருந்து உங்களையே 'பிரித்தெடுத்து' விட்டீர்கள், நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை கோமிண்டாங்கிற்குள் இழுத்தீர்கள். உங்களது புலனறிவை இழுக்கும் மட்டத்திற்கு கோமிண்டாங்கிலே அறிவு மயங்கினீர்கள். கோமிண்டாங்கை விட்டு வெளியேறுதலை மூர்க்கத்தன்மையாய் எதிர்த்தீர்கள். நீங்கள் அரசியல் பிரச்சனைகளுக்காக போராடுவதை தவிர்ப்பதற்காக மீண்டும் மீண்டும் சூக்கும சூத்திரங்களை உச்சாடனம் செய்தீர்கள். முதலாளி வர்க்கம் திட்டவட்டமாக பாட்டாளி வர்க்கத்தின் மண்டையோட்டை பிளந்த பின்பு எங்களை முதலிலிருந்து தொடங்க விடுங்களென்று சொன்னீர்கள். மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் பொழுது எங்களை இன்னுமொரு தடவை கட்சியை பற்றிய புரட்சிகர சக்தி பற்றிய பிரச்சினையிலிருந்து 'பிரித்து விடுங்கள்' என்றீர்கள். இல்லை! இவையெல்லாம் எளிய பரிகாசங்கள். நாங்கள் இன்னுமொரு தடவை எங்களை பின்னுக்கு இழுக்கவிடப் போவதில்லை.!

நாங்கள் கிரகித்தது போன்றே இந்தக் குத்துக்கரணங்கள் எல்லாம் தொழிலாளர் விவசாயிகள் கூட்டின் நலனுக்கென்று சமர்பிக்கப்பட்டது. விவசாயிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு எதிராக எதிர்ப்பு இயக்கத்தை றடெக் எச்சரிக்கை செய்து, மென்ஷிவிக்குகளுக்கு எதிரான லெனினது போராட்டத்தை மேற்கோள் காட்டுகிறார். சில வேளைகளில் எங்காவது ஒருவர் லெனினது மேற்கோள்களுக்கு என்ன செய்கிறார்களென்று பார்த்தாரென்றால், மனித சிந்தனையின் கௌரவத்திற்கு எதிராக இப்படியும் ஒரு தாக்குதலா என்று அதிகூடிய ஆத்திரமடைவார். ஆம். விவசாயிகளின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்தல், மென்ஷிவிக்குகளினது குணாம்சமென்று லெனின் ஒரு தடவைக்கு மேலாக கூறியிருக்கிறார். அது சரிதான் ஆனால் இந்த மேற்கோள்களோடு சேர்த்து, அக்டோபர் புரட்சியிலிருந்து பிப்ரவரி புரட்சியை பிரித்த எட்டு மாதங்கள், மென்ஷிவிக்குகள் சோசலிசப் புரட்சியாளர்களோடு உடையாத கூட்டில் செலவிட்ட 1917ம் ஆண்டும் உள்ளது. இந்தக் காலங்களில் சோசலிச புரட்சியாளர்கள், புரட்சியால் விழிப்புணர்வடைந்த பெரும்பான்மை விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். சோசலிசப் புரட்சியாளர்களோடு மென்ஷிவிக்குகளும் ஒன்றாய் சேர்ந்து தங்களை புரட்சிகர ஜனநாயக வாதிகளென்று சொல்லிக்கொண்டு தாங்கள் தான் தொழிலாளர்களை விவசாயிகள் (படைவீரர்கள்) கூட்டில் அடித்தளம் அமைத்தவர்களென்று எங்களுக்கு எதிர் நியாயம் சொன்னார்கள். பெப்ரவரி புரட்சிக்குப் பின்னர் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் கூட்டென்ற போல்ஷிவிக்குகளது சூத்திரத்தை மென்ஷிவிக்குகள் பறித்துக் கொண்டார்கள். பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை விவசாயிகளிடமிருந்து பிரித்து அதனால் புரட்சியை நாசமாக்குகிறார்கள் என்று போல்ஷிவிக்குகளை மென்ஷிவிக்குகள் குற்றஞ்சாட்டினார்கள். வேறு மாதிரிச் சொல்வதென்றால், லெனின் விவசாயிகளை புறக்கணிக்கின்றார் அல்லது விவசாயிகளை குறைத்து மதிப்பிடுகிறார் என்று மென்ஷிவிக்குகள் குற்றம் சாட்டினார்கள்.

மென்ஷிவிக்குகளது விமர்சனத்தின் எதிரொலியாலேயே கமனேவ் சினோவியேவ் போன்றவர்கள் லெனினை எதிர்த்து விமர்சனம் செய்தார்கள். றடெக்கினது பங்கான தற்போதைய விமர்சனம் கமனேவினது விமர்சனத்தின் காலந்தாழ்ந்த எதிரொலியாகும்.

சீனாவிலே றடெக்கினது கொள்கை உள்ளடங்கலான இழிபாசாங்கனரது கொள்கை 1917 மென்ஷிவிக்குகளது மாறுவேடத்தின் தொடர்ச்சியும் அதை மேலும் அபிவிருத்தி செய்ததுமாகும். சீனாவிலே கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கோமிண்டாங்கோடு இருந்தது ஸ்ராலினால் மாத்திரம் பாதுகாக்கப்பட்டதல்ல, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் கூட்டின் அத்தியாவசியத்தினை சுட்டிக்காட்டி றடெக்கினாலும் பாதுகாக்கப்பட்டது. கோமிண்டாங் ஒரு முதலாளித்துவக் கட்சியென்று "தற்செயலாக" வெளிப்படுத்தப்பட்டபோது, "இடது" கோமின்டாங்கென்று சொல்லிக்கொண்டு அதே முயற்சி மீண்டும் செய்யப்பட்டது. அதன் பலாபலன் திரும்பவும் அதேதான். அதன் விளைவாய், இந்த பரிதாபகரமான நிதர்சனம் போனதன் பின்பு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலிருந்து வெறுபடுத்திக்காட்டும் வகையில், ஜனநாயக சர்வாதிகாரம் 'பிரித்தெடுத்துக்காட்டப்படுவதை' பெரிய நம்பிக்கையை அளியாது விட்ட பரிதாபகரமான யாதார்த்தத்திற்கு மேலாக உயர்த்தியது - புதிதாகத் திரும்பச்செய்வதாகும். 1917-ல் சேறெத்ரெலி (Tseresteli), டான் (Dan) போன்றவர்களிடம் இதை நூறுமுறை கேட்டோம். "நாங்கள் ஏற்கனவே புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரத்தை பெற்றுவிட்டோம். நீங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிப் புறப்படுகிறீர்கள். அதாவது அழிவை நோக்கி. உண்மையிலேயே மக்களுக்கு ஞாபகசக்தி குறைவு. ஸ்ராலின் றடெக்கினது 'புரட்சிகர ஜனநாயக சர்வாதிகாரம்' சேரெற்றெலி, டான்களது புரட்சிகர ஜனநாயகத்தின் சர்வாதிகாரத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கக்கூடியதொன்றல்ல. இருந்தபோதும் இந்த சூத்திரம் கம்யூனிச அகிலத்தின் தீர்மானங்களில் மாத்திரம் புகுந்ததல்ல. அதன் வேலைத்திட்டங்களிலேயும் ஊடுருவிவிட்டது. இதிலும் மேலான குள்ளத்தனமான மாறுவேடத்தை பார்க்க முடியாது. அதற்கும் மேலாக 1917-ல் போல்ஷிவிக்குகள் மென்ஷிவிக்குகளின் மேல் குவித்த மானபங்கங்களுக்கான மென்ஷிவிசத்தின் மூர்க்கத்தனமான பழிவாங்கலுமாகும்.

இருந்தபோதும் கீழைத்தேச புரட்சியாளர்களுக்கு ஜனநாயக சர்வாதிகார பிரச்சனையின் குணாம்சத்தைப் பற்றி முன்னரே தீர்மானித்து வைத்திருந்த மேற்கோள்களின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகளிலும் அரசியல் அனுபவங்களிலும் ஆதாரமான, ஒரு திட்டவட்டமான விடையை கோருவதற்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக சர்வாதிகாரம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு விடையாக ஸ்ராலின் திரும்பவும் திரும்பவும் பண்டைய மறுமொழியையே தருகிறார். கீழைத்தேசங்களுக்கு ஏற்றதான 1905 ஆம் ஆண்டு புரட்சி பற்றி லெனின் கருதியது. இது ஒரு மட்டத்துக்கு உத்தியோகபூர்வமான சூத்திரமாகும். சீனா, இந்தியா, பொலினேசியா (Polynesia) போன்ற நாடுகள் சம்பந்தமான தீர்மானங்கள் உள்ள புத்தகங்களிலே காணலாம். புரட்சி பற்றிய லெனினது எண்ணக்கரு எதிர்கால சம்பவங்கள் பற்றியது. இந்த இடைக்காலங்களில் அவை எப்போதா நடந்து முடிந்த விஷயங்கள் ஆகிவிடும். லெனின் முன்கூட்டி உத்தேசித்த கருத்தியல்களை இப்படியும் அப்படியும் வியாக்கியானப்படுத்துவது போல் சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு லெனினே விளக்கியவாறான வழியில் ஒருபோதும் இல்லை.

கீழைத்தேச கம்யூனிஸ்ட்டுகள் துக்கத்தோடு தலையை தொங்கப்போட்டுக் கொண்டு, அது சரி, உங்களின் சொல்லின் படியே, புரட்சிக்கு முன் லெனின் எப்படி கிரகித்து இருப்பாரோ நறுக்காக அப்படியே கிரகிக்க முயற்சிக்கிறோம். யதார்த்தத்தில் அந்த சுலோகம் எப்படி இருக்குமென்று சொல்லுவீர்களா? அது உங்கள் நாட்டில் எப்படி நிதர்சனமானது?

"எங்கள் நாட்டில் அது இரட்டை ஆட்சிக் காலத்தில் கெரென்ஸ்கிச வடிவத்தில் நிதர்சனமாகியது".

"ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகம் எங்களது சொந்த நாட்டு கெரென்ஸ்கிச வடிவத்தில் நிதர்சனமாகியது என்று நாங்கள் எங்கள் தொழிலாளர்களுக்கு சொல்லலாமா?"

"வாங்கோ, வாங்கோ! அது மாத்திரமல்ல! ஒரு தொழிலாளியும் அப்படியான சுலோகத்தையும் ஏற்க மாட்டான். கெரென்ஸ்கிசம் என்பது முதலாளித்துவ அடிவருடித்தனமும் உழைக்கும் மக்களைக் காட்டிக்கொடுப்புமாகும்".

"அப்படியென்றால் எங்கள் தொழிலாளர்களுக்கு நாம் என்ன சொல்ல முடியும்?" என்று கீழைத்தேச கம்யூனிஸ்ட் நம்பிக்கையிழந்து கேட்பான்.

கடமையில் இருந்த மனிதனான கூசினென் பொறுமையிழந்து விடையிறுக்கிறார், "லெனின் கிரகித்த ஜனநாயக சர்வாதிகாரம் என்பது எதிர்கால ஜனநாயக புரட்சி என்று நீங்கள் அவர்களுக்கு சொல்லலாம்."

கீழைத்தேச கம்யூனிஸ்ட் அறிவில் பற்றாக்குறை இல்லையென்றால் அவன் மீண்டும் இணையப் பார்ப்பான்:

ஆனால் உண்மையான ஜனநாயக சர்வாதிகாரமானது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய அக்டோபர் புரட்சியிலேதான் அதன் மெய்யான மற்றும் உண்மையான அடைதலைக் கண்டு கொண்டது என்று 1918-ல் லெனின் சொல்லவில்லையா? இந்த முன்னோக்கை நோக்கி கட்சியையும் தொழிலாள வர்க்கத்தையும் நோக்குநிலைப்படுத்திக் கொள்ளல் (Orient) நல்லதல்லவா?

எந்த சூழ்நிலையிலும் அது நடக்காது. அப்படி யோசிக்கத் துணியவும் கூடாது. ஏன், அது தான் நிர... நிரந்... நிரந்தரப்... புர... புர... புரட்சி. அது தான் ட்ரொ... ட்ரொட்ஸ்கிசம்!

இந்த மிரட்டும் கொடுஞ்சொல்லைக் கேட்டதுதான் தாமதம் கீழைத்தேச கம்யூனிஸ்ட் இமயமலை உச்சியிலுள்ள பனியிலும் பார்க்க வெளிறி மேலும் அறிவைத் தேடிக்கொள்ள அஞ்சுவான். நடந்தது நடந்து முடிந்துவிட்டது என்று விட்டுவிடுவோம்.!

அதன் பின்விளைவு என்ன? அதைப்பற்றி நாங்கள் நன்றாக அறிவோம். ஒன்றில் அவமானகரமாக சியாங்ஷேக்குக்கு பின்னால் ஊர்ந்து போதல் அன்றேல் வீரதீர சாகசங்கள் ஆகும்.

NOTES

1 :சியாங்கே சேக் கோமிண்டாங்கின் வலது கன்னைத் தலைவர். wang ching wei இடது கன்னைத் தலைவர். Tan ping-Shan ஸ்ராலின் புக்காரினது அரசியலை செய்யும் கம்யூனிச அமைச்சராக இருந்தார்.[ RETURN TO TEXT]

* (லெனின் XVI,, பக்கம் 217) சுதந்திரம் சகோதரத்துவம் சுலோகங்களால் மக்களை ஏமாற்றுதல், மே 1919 XXIX பக்கம் 338, the People by The Deception of Slogans of Freedom and Equality, May 1919, 4th Edition XXIX, 338]

 
 
©World Socialist Web Site
All rights reserved