18 வயதுக்குட்பட்ட யுவதிகளுக்கு ஹிஜாப்பை தடை செய்ய பிரிவினைவாத எதிர்ப்பு சட்டத்தை பிரெஞ்சு செனட் திருத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம், ஜனாதிபதி மக்ரோனின் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தை ஆராய்ந்த முதல் நாளில், பிரெஞ்சு செனட்டானது 18 வயதிற்குட்பட்ட முஸ்லீம் பெண்கள் பொது இடங்களில் எங்கும் ஹிஜாப் (தலைமறைப்பை) அணிவதைத் தடை செய்யும் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வாக்களித்தது. இரண்டாவது திருத்தமானது முஸ்லீம் தாய்மார்கள் மத ஆடைகளை அணிந்திருந்தால், பள்ளி பயணங்களிலும் மற்றும் நடவடிக்கைகளிலும் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்பதை தடை செய்தது.

இரண்டு திருத்தங்களும் சட்டமாக வருவதற்கு முன்பு தேசிய சட்டமன்றத்தின் வழியாக இன்னும் நிறைவேற்றப்பட வேண்டும். பழமைவாத குடியரசுக் கட்சி (LR) மற்றும் ஐரோப்பிய ஜனநாயக மற்றும் சமூக பேரணி குழுவைச் (European Democratic and Social Rally group) சேர்ந்த செனட்டர்கள் குழுவால் அவைகள் முன்வைக்கப்பட்டன.

ஒரு போலீஸ்காரர் பாரிஸில் திங்கள்கிழமை, அக்டோபர். 5, 2020 அன்று ஒரு பெண்ணைப் அவதானிக்கிறார். (AP Photo/Francois Mori)

18 வயதிற்குட்பட்டவர்கள் மீதான இலக்கு வைக்கப்பட்ட திருத்தமானது 177 க்கு 141 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது, சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்ரோனின் குடியரசுக்கான அணிவகுப்பு (La République En Marche) கட்சியின் பெரும்பான்மையான செனட்டர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். இது இளையவர்களை, "வெளிப்படையான ஒரு மத தொடர்பை வெளிப்படுத்தும்" அல்லது "அது ஆண்களுக்கு பெண்களின் தாழ்வுகளைக் குறிக்கும்" பொது இடங்களில் "அடையாளங்கள் அல்லது ஆடைகளை" அணிவதிலிருந்து தடுக்கும்.

இதை இயற்றுபவர்கள் ஹிஜாப் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பதை உணர்ந்திருந்தாலும், திருத்தத்தின் முதன்மை இலக்கு பிரான்சின் 5.4 மில்லியன் முஸ்லிம்களாகும். முஸ்லீம் இளைஞர்களை துன்புறுத்தவும் கைது செய்யவும் பொலிசாருக்கு திறம்பட உரிமை வழங்கப்படும், மற்றும் கிட்டத்தட்ட அவர்கள் சட்டவரைவின் பரந்த மொழியின் கீழ் பொருத்தமற்றதாக ஆடைகளை அணிந்தவர்களாக அனைவரும் கருதப்படுவார்கள். வறிய மற்றும் சிறுபான்மை பகுதிகளில் பொலிசாரின் மேலதிக கட்டமைப்பின் மூலமும், முஸ்லிம்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளின் மூலமும் இது அமுல்படுத்தப்பட உள்ளது.

முஸ்லீம் பின்னணியைச் சேர்ந்த சுமார் 20 சதவீத பெண்கள் தவறாமல் ஹிஜாப் அல்லது மற்றொரு முக்காடு அணிவதாக 2019 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று கண்டறிந்துள்ளது; மற்றொரு 20 சதவீதம் பேர் சில சூழல்களில் இதை அணிகிறார்கள். முக்காடு அல்லது தலைக்கவசம் அணியும் பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் பருவமடைதல் வயதிலேயே, ஆரம்ப இளம் பருவத்திலேயே தொடங்குகிறார்கள். சட்டம் இந்த நடைமுறையை சட்டவிரோதமாக்கும். முஸ்லீம் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கேற்க விரும்பினால் அரசின் கட்டளைகளுக்கு ஏற்ப உடை அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த திருத்தமானது மக்ரோன் அரசாங்கத்தின் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தின் பிற்போக்குத்தனமான மற்றும் அதிவலது தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மற்றய நடவடிக்கைகளுடன், முஸ்லீம் சங்கங்கள் சட்டபூர்வமாக கையெழுத்திட கடமைப்பட்டிருக்கின்றன, அரசுக்கு தங்கள் விசுவாசத்தை உறுதியளிக்கின்றன, மேலும் மத மற்றும் பிற சங்கங்கள் மீது அரசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன என்று ஒரு "கோட்பாட்டு சாசனத்தை" (“Charter of principles”) அது நிறுவுகிறது. மசூதிகளுக்குள் அரசியல் விவாதம் தடை செய்யப்பட்டுள்ளது, பிரெஞ்சு அரசை இனவெறி என்று கண்டனம் செய்யும் அறிக்கைகள் அவதூறானவை என்று அறிவிக்கப்படுகின்றன.

முழு சட்டத்தையும் போலவே, சமீபத்திய திருத்தமும் "மதச்சார்பின்மை" கொள்கையை தலைகீழாகத் திருப்புகிறது. திருச்சபையையும் அரசையும் பிரிப்பது என்ற ஜனநாயகக் கொள்கையானது குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிடுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்ரோன் அரசாங்கமும் தீவிர வலதுசாரிகளும் முஸ்லீம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அரசு மீறல்களை நியாயப்படுத்த "மதச்சார்பின்மை" குறித்த பரிந்துரைப்புக்களை பயன்படுத்துகின்றனர்.

பெரும்பான்மை அரசாங்க செனட்டர்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி, அடிபணியா பிரான்ஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் இந்த திருத்தத்திற்கு எதிரான வாக்குகள் தீவிர பாசாங்குத்தனமானவையாகும் மற்றும் சிடுமூஞ்சித்தனமானவையாகும்.

அவர்களை தூண்டும் ஒரு முக்கிய கவலை என்னவென்றால், இந்த திருத்தமானது "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தின் அப்பட்டமான பாரபட்சமான தன்மையை மேலும் வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது, மேலும் அதற்கு எதிராக தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே எதிர்ப்பு வெடிப்பைத் தூண்டும் என பயப்படுகிறது.

இரண்டாவதாக, திருத்தமே அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. இந்த திருத்தத்தை எதிர்ப்பதற்கான தனது காரணங்களை விளக்கி டார்மானன் இதைக் கூறினார். அதே வழிகளில், கம்யூனிஸ்ட் கட்சி செனட்டர் மாரி-நுயல் லீனெமன் திருத்தத்திற்கு எதிரான தனது வாக்கெடுப்பை விளக்கினார், "இளையவர்களுக்கான தலைமறைப்பை சட்டவிரோதமாக்கும் சட்டத்தைக் கண்டுபிடிக்க" தான் விரும்புவதாகவும், ஆனால் அதை அடைவதற்கு "எந்த முறையைப் பயன்படுத்துவது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் நாங்கள் தவறு செய்ய முடியாது" என்றும் கூறினார். "இந்த நடவடிக்கை [அரசியலமைப்புக்கு முரணானது] நிராகரிக்கப்பட்டால், அது எங்கள் நோக்கங்களுக்கு மாறாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.

பல தசாப்தங்களாக முழு அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இஸ்லாமிய ஆடைகளை அணிவதன் மீதான கட்டுப்பாடுகளையும் இந்த திருத்தம் விரிவுபடுத்துவதாகும். 2004ல், சோசலிஸ்ட் கட்சியானது பள்ளிகளில் மத ஆடைகளை அணிவதற்கு மாணவர்கள் மீதான தடையை ஆதரிக்க வாக்களித்தது. 2010ல், சார்க்கோசி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நிகாப் (முழுமறைப்பு) மற்றும் பொதுவில் முகத்தை மறைக்கும் மற்றய அனைத்து ஆடைகளையும் தடை செய்வதற்கான நியாயப்படுத்தலாக பயன்படுத்தியது.

அடிபணியா பிரான்ஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளும் தேசிய சட்டமன்றத்தில் "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் குறித்த சட்டவிதிகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவைகளுக்கு வாக்களித்துள்ளனர் அல்லது வாக்களிப்பை தவிர்த்தனர்.

இந்த திருத்தமானது பிரான்சில் "மத பன்முகத்தன்மையை" கீழறுக்கும் என்று தான் கவலைப்படுவதாக டார்மானனின் அபத்தமான கூற்று யாரையும் முட்டாளாக்கவில்லை. டார்மானன் முடியாட்சி ஆதரவு மற்றும் அதிவலது Action française இயக்கத்தை ஆதரித்ததாக அறியப்படுகிறார். கடந்த அக்டோபரில், பல்பொருள் அங்காடிகளில் ஹலால் மற்றும் கோஷர் உணவுகளைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக அறிவித்த அவர், அத்தகைய பிரிக்கப்பட்ட உணவுகளை வைத்திருக்கும் தட்டுக்கள் "வகுப்புவாதத்தை" நோக்கிய முதல்படி என்று கூறினார்.

பெப்ருவரியில் அதிவலது தேசிய பேரணியின் (National Rally) தலைவரான மரின் லு பென்னுடன் நடந்த விவாதத்தில், அவர், லு பென்னை “மென்மையானவர்” என்றும், அரசாங்கத்தின் சில பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களுக்கு வாக்களிக்கத் தவறியதற்காகவும் மேலும் வலது பக்கத்தில் இருந்து தாக்கினார்.

கடந்த நவம்பரில், டஜன் கணக்கான மசூதிகள், அத்துடன் பிரான்சின் மிகப் பெரிய முஸ்லீம் தொண்டு நிறுவனமான பரக்காசிட்டி (BarakaCity) ஆகியவை "பிரிவினைவாத" அனுதாபங்கள் காட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக கூறப்படும் கூற்றுக்களின் பேரில் அரசாங்கத்தால் விசாரிக்கப்பட்டு மூடப்பட்டன. இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிரெஞ்சு ஏகாதிபத்திய போர்கள் மற்றும் சாஹேல், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் தலையீடுகளை விமர்சிப்பவர்கள் ஆவார்கள்.

இந்தக் கொள்கையை நியாயப்படுத்தும் வகையில், டார்மானன், "இதுவரை, அரசாங்கம் தீவிரமயமாதல் மற்றும் பயங்கரவாதத்தில் அக்கறை கொண்டிருந்தது" ஆனால் இப்போது "அறிவார்ந்த மற்றும் கலாச்சார இடத்தை உருவாக்கி தங்கள் மதிப்புகளை திணிப்பவர்களையும் இலக்காகக் கொண்டிருக்கும்” எனக் கூறினார்.

அரசாங்க பிரச்சாரத்தின் பாசிசத் தன்மையானது மார்ச் 29 அன்று குற்றமிழைத்தல் மற்றும் தீவிரமயமாதல் தடுப்புக்கான அமைச்சகங்களுக்கிடையிலான குழுவின் (Inter-ministerial Committee for the Prevention of Delinquency and Radicalization) தொடர்ச்சியான ட்டுவீட்டர்களால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு ட்டுவீட் கூறியது: "தீவிரவாத இஸ்லாம் குறித்த எந்த வகையான விமர்சனத்தையும் தடை செய்யும் நோக்கத்துடன் இஸ்லாமியவாதிகளால் "#islamophobia" என்ற வார்த்தை திணிக்கப்பட்டுள்ளது." இந்த வார்த்தை "சார்லி ஹெப்டோவின் கார்ட்டூனிஸ்டுகள் படுகொலையை நியாயப்படுத்த" பயன்படுத்தப்பட்டது, இது பத்திரிகை மீதான 2015 பயங்கரவாத தாக்குதல் பற்றிய குறிப்பு ஆகும். "[முஸ்லிம்கள்] தங்கள் நம்பிக்கையையுடனும் வழிபாட்டுடனும் சுதந்திரமாக வாழ முடியும்" என்று அது வலியுறுத்திய அதேவேளை, "குடியரசின் சட்டங்கள் மற்றும் மதிப்புகளுக்கு இணங்க" என்று அது அச்சுறுத்தும் வகையில் மேலும் கூறியது.

இந்த அறிக்கைகளில், பிரெஞ்சு அரசு அதிவலது சதிக்கோட்பாடுகளை பிரச்சாரம் செய்து வருகிறது, முஸ்லீம்-விரோத பாகுபாடு என்பது பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாதத்தை நியாயப்படுத்த, தெளிவாக பெயர் குறிப்பிடப்படாத இஸ்லாமிய-சார்பு குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று கூறி வருகிறது. மக்ரோனின் கீழ், பாசிச அணுகுமுறைகளும் கொள்கைகளும் பிரெஞ்சு அரசின் பெரும் பகுதிகளால் மொத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தலைமறைப்பிற்கு எதிரான வலதுசாரி பிரச்சாரங்களும் சமீபத்திய மாதங்களில் பிரான்சுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. பெப்ரவரி 2020 இல் Avenir Québec கூட்டணியானது ஒரு "மதச்சார்பின்மை" மசோதாவை அறிமுகப்படுத்தியது, அது பள்ளிகளில் ஹிஜாப்களை தடை செய்ய முயன்றது. கடந்த மாதம், சுவிட்சர்லாந்து பொது இடங்களில் நிகாப் மற்றும் புர்கா உட்பட முகமறைப்புக்களை சட்டவிரோதமாக்கியது.

அதன் சர்வதேச சகாக்களைப் போலவே, ஆளும் வர்க்கத்தின் பெருந்தொற்று நோய்கான கொலைகார நிர்வகிப்பின் விளைவாக ஏற்பட்ட பாரிய அளவிலான மரணங்கள் மற்றும் பொருளாதார பேரழிவைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் சமூக சீற்றத்தைக் கட்டுப்படுத்த மக்ரோன் அரசாங்கமும் பிடிவாதமாக இருக்கிறது. இது ஒரு பொலிஸ் அரசு எந்திரத்தை விரைவாக நிர்மாணிப்பதுடன், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அதிகாரங்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் அடக்குவதற்கு வழிவகை செய்யும் நடவடிக்கைகளுக்கும் வழிவகுத்துள்ளது. தற்போதைய நடவடிக்கைகள், முதன்மையாக முஸ்லீம் சிறுபான்மையினரை இலக்குக் கொண்டவை என்றாலும், அவைகள் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கான தயாரிப்புகளின் ஒரு பாகமாகும்.

Loading