தொற்றுநோய் பேரழிவுகரமாக பரவுகையில் இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டைப் பொது முடக்கம் செய்ய மறுக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவுகின்ற கோவிட் -19 வைரஸின் புதிய விகாரங்கள் நாடு முழுவதும் பரவிவருகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில், நாட்டைப் பொதுமுடக்கம் செய்ய அரசாங்கத்திற்கு எந்த அவசியமும் கிடையாது என்று தெரிவித்தார்.

நாட்டின் முழுமையாக பொதுமுடக்கம் செய்வது குறித்து பெருகிவரும் பொதுமக்களின் விருப்பத்துக்கு எதிராக, “கோவிட் அச்சுறுத்தலுக்கு ஒரு தீர்வாக நாட்டை குறிப்பிட்ட காலத்துக்கு மூட வேண்டும் என்று சிலர் நினைத்தாலும், அது நீண்ட காலமாக பொது மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்துக்கு ஒரு பேரழிவு விளைவை ஏற்படுத்தும் செயலாகும்" என்று இராஜபக்ஷ அறிவித்தார்.

நாட்டை பொது முடக்குவது மக்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்ற இராஜபக்ஷவின் கவலை போலியானதாகும். அத்தகைய பொதுமுடக்கம் பெரிய முதலாளிகளின் இலாபம் ஈட்டும் செயல்முறையை முடக்கும் என்பதையிட்டே இராஜபக்ஷ உண்மையில் கவலைப்படுகிறார்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ (AP Photo/Eranga Jayawardena)

தொற்றுநோயின் வெடிப்பில் இருந்தே பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பது பற்றிய இராஜபக்ஷவின் குற்றவியல் அலட்சியக் கொள்கைகள், முதலாளித்துவ இலாபங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தால் தீர்மானிக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வைரஸ் தொற்றாளர்கள் சிறிது சிறிதாக கண்டுபிடிக்கப்படதுடன், நாட்டைப் பொது முடக்கம் செய்ய வேண்டிய அவசியம் பொது மக்கள் மத்தியில் தலைதூக்கிய போது, “புலிகளுக்கு எதிரான போரின் போது கூட நாடு மூடப்படாத நிலையில், தொற்று நோயிலிருந்து காத்துக்கொள்ள நாட்டை முடக்க வேண்டிய அவசியமில்லை", என்று இராஜபக்ஷ கூறினார்.

அந்த கருத்தை தெரிவித்து ஒரு வாரத்திற்குள், அரசாங்கத்தின் அலட்சியமான பிரதிபலிப்புக்கு எதிராக சமூகத்திற்குள் பலம்வாய்ந்த எதிர்ப்பு தலைதூக்கிய பின்னரே நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அது விதித்தது.

இராஜபக்ஷ அரசாங்கம், ஆரம்பத்தில் கோவிட் -19 வைரஸ் நாட்டில் "கட்டுப்பாட்டில்" இருப்பதாக பெருமையாகக் கூறிய அதேவேளை, அது பி.சி.ஆர். பரிசோதனையை மிகக் குறைந்த மட்டத்திலேயே வைத்திருந்தது. இவ்வாறு தொற்றுநோய் சமூகத்தில் பரவ அனுமதித்ததன் விளைவாக, தொற்றுநோயாளர்கள் நாட்டில் வேகமாகப் பெருகத் தொடங்கினர். மட்டுப்படுத்தப்பட்டளவில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரித்ததன் விளைவாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் தினசரி தொற்றாளர்கள் 800 ஆக இருந்த போது, அரசாங்கம் வேண்டுமென்றே அந்த பரிசோதனைளை பாதியாக குறைத்தது, இதன் காரணாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால், தாம் நோயைக் கட்டுப்படுத்திவிட்டதாக அரசாங்கம் மீண்டும் தற்பெருமை காட்டத் தொடங்கியது.

அந்த குற்றவியல் செயலின் அபாயகரமான விளைவுகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மிகவும் குறைத்துக் கணக்கிடப்படும் அரசாங்க புள்ளிவிவரங்களின் படி கூட, இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதுடன் இறப்பு எண்ணிக்கை 644 ஆகும். ஏப்ரல் 21 முதல் நேற்று வரை முறையே 578, 657, 931, 880 மற்றும் 783, 997 போன்ற உயர்ந்த எண்ணிக்கையில் தீவு முழுவதும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அரசாங்கம் இன்னும் போதுமான அளவில் தினசரி பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காததன் காரணமாக உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு பெரியதாகும்.

தொற்றுநோய் தீவிரமடைந்து வரும் நிலையில் இராஜபக்ஷ பொது முடக்கத்தை மறுக்கையில், உலகின் மிக அதிகமான தினசரி தொற்றாளர்கள் பதிவாகின்ற, முன்னெப்போதும் இல்லாத பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளையே அவர் எதிரொலிக்கிறார். இந்தியாவை தொற்றுநோயிலிருந்து அன்றி, "ஒரு முழுமையான பொதுமுடக்கத்திற்கு உள்ளாகும் அச்சுறுத்தலில் இருந்தே" காப்பாற்றப்பட வேண்டும் என்று மோடி சமீபத்தில் கூறினார். மோடி மற்றும் இராஜபக்ஷவின் இத்தகைய பிரதிபலிப்புகள், உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த ஆளும் வர்க்கங்கள் பொது மக்களின் உயிர் வாழ்வு பற்றி காட்டும் குற்றவியல் அலட்சியத்தை பிரதிபலிக்கின்றன.

24 அன்று தெரண தொலைக் கட்சிக்கு அளித்த பேட்டியில், சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்தியர் சூசி பெரேரா, நாட்டில் ஆங்காங்கே தனிமைப்படுத்தலை அமுல்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் செயற் திட்டத்தின் பயனற்ற தன்மையை வலியுறுத்தினார். “தொற்றுநோய் மேலும் வேகமாக பரவி வருகிறது. இப்படிச் சென்றால் பொருளாதாரம் முற்றிலுமாக இழக்கப்படக் கூடும். இந்த குழாய் மூடப்பட வேண்டும். இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டில், குழாயை திறந்துவிட்டு சிறிய துண்டு துணி மற்றும் பஞ்சுகளை வைத்துக் கட்டி, ஆங்காங்கே துடைத்து விட்டு சிகிச்சை சேவைகளை முன்னெடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

மக்களின் வாழ்க்கைக்கு மேலாக முதலாளித்துவ பொருளாதாரத்தை ஸ்தாபிக்கும் இராஜபக்ஷ அரசாங்கம், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை உதைத்து தள்ளியிருந்தாலும், பெரிய முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏகமனதாக ஒப்புக் கொண்டுள்ளது. மார்ச் 15 அன்று, கூட்டு ஆடை தொழில் உரிமையாளர் சங்கத்துடனான சந்திப்பின் போது, "உற்பத்தித்திறனை" அதிகரிப்பதற்கு தொழிற்சாலைகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு பரிந்துரைகளையும் கூட தளர்த்துவதற்கான வேண்டுகோளை இராஜபக்ஷ முழுமையாக ஆதரித்தார்.

கடந்த ஆண்டு தொற்றுநோய் வெடிப்பு தொடங்கியபோது, மிகக் குறுகிய காலத்திற்கு மூடப்பட்ட இலங்கை தொழிற்சாலைகள், அரசாங்கத்தின் முழு ஒப்புதலுடன், குறைவான தொழிலாளர்களுடன் சுரண்டலை தீவிரமாக்க விரைவாக மீண்டும் திறக்கப்பட்டன. தொழிலாளர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதேவேளை, அவர்களின் வேலைகள் மற்றும் ஊதியங்கள் வெட்டப்பட்டதன் காரணமாக’ அவர்களின் வாழ்க்கை பேரழிவு தரக்கூடிய பொருளாதார மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்த நிலையில், உலகளவியரீதியிலும் இலங்கையிலும் முதலாளிகள் தங்கள் இலாபங்களை குவித்துக்கொண்டுள்ளனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதற்காக, தொற்றுநோயை அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்வதற்கு பெருவணிகத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் முன்பு ஆற்றிய ஒரு உரையில், இராஜபக்ஷ! எல்லோரும் தொற்றுநோயுடன் வாழுதல் என்ற புதிய இயல்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், சில வழிகளில் இந்த புதிய இயல்புநிலை நல்ல பிரதிபலன்களை கொடுக்கக் கூடும், என்று அறிவித்தார்.

அரசாங்க சலுகைகளின் கீழ் இயங்கும் தொழிற்சாலைகள், இப்போது தொற்றுநோய் இனப்பெருக்கம் செய்யும் களமாக மாறியுள்ளன. கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயின் கையெழுத்துடன், கடந்த 23 அன்று, அரசாங்கம் அவசரமாக வெளியிட்ட கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதலில், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட தொழில்களுக்கு, வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எந்த தடையையும் பரிந்துரைக்கவில்லை.

புதிய விகாரங்கள் காற்றின் மூலம் பரவுகின்றது என்றும், இளைஞர்களுக்கு கூட ஆபத்தான நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த விடயங்களில், பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளை மூடுவதற்கான அவசரம் வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும், மேற்கூறிய வழிகாட்டல்கள், பாடசாலைகளை தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்கு அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொற்றுக்கு உள்ளாகியதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பாடசாலைகளை மூட அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள போதிலும், அந்த ஆபத்தை அலட்சியம் செய்து பாடசாலைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நேற்று நடந்த கலந்துரையாடலில் முடிவு செய்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வளர்ந்து வந்த எதிர்ப்பைத் தணிக்க மட்டுமே மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர்களின் உயிர் வாழ்வைப் பற்றி அது எந்தவகையிலும் பொருட்படுத்தவில்லை. பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக நாடு பாதுகாப்பாக உள்ளது என்று மிகைப்படுத்திக் காட்டுவதன் பேரில் பாடசாலைகளை திறந்து வைக்க அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.

இவ்வாறு தொற்றுநோய் பரவுவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் உருவாக்கிவிட்டுள்ள இராஜபக்ஷ, தனது அறிக்கையில், "கொவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான கடைசி வழிமுறை தடுப்பூசி மட்டுமே" என்றும், அதற்கான "முறையான திட்டம்" அரசாங்கத்திடம் உள்ளது என்றும் கூறினார். தொழிலாள வர்க்கத்தை குழப்பி அவர்களை தொழிற்சாலைகளுக்கு செல்ல வைப்பதை குறிக்கோளாகக் கொண்டு இராஜபக்ஷ தெரிவிக்கும் இத்தகைய கருத்துக்கள், கபடத்தனமானதாகும்.

ஆரம்பத்தில் இருந்தே, பொது மக்களுக்கு பரந்த அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான முறையான திட்டத்தை அமல்படுத்துவதை அரசாங்கம் கைவிட்டது. முடிந்தவரையான தாமதப்படுத்தலின் பின்னர், கடந்த ஜனவரி பிற்பகுதியில் தடுப்பூசி செலுத்தல் தொடங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள், மக்கள் தொகையில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் பகுதி வழங்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, சமூகத்தில் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு, தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் மொத்த மக்கள் தொகையில் 60-70 சதவீதம் பேர் பெற வேண்டும்.

தொற்றுநோய்க்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே என்று இராஜபக்ஷ கூறுகையில், தொற்றுநோய் பரவுவதற்கு இடமளிக்கும் வகையில் பிற சுகாதார வசதிகளின் விரிவாக்கத்தை கைவிடுவதற்கான தனது தயார்நிலையை அவர் அறிவிக்கிறார். இலங்கை மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை படுக்கைகள் நிரம்பிவிட்டதாக இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இலங்கையில் சுகாதார கட்டமைப்பு, சுவாச இயத்திரம் மற்றும் ஓக்ஸிஜன் பற்றாக்குறையின் அபாயத்தை எதிர்கொள்கின்றது.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் சுகாதாரத் துறையில் முன்னெடுத்த சிக்கன நடவடிக்கைகளை இராஜபக்ஷ அரசாங்கம் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. தொற்றுநோய் அபாயம் தலைதூக்கிய போது, சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இராஜபக்ஷ அரசாங்கம், 2020 வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சுகாதார செலவினங்களில் மேலும் 18 பில்லியன் ரூபாயைக் குறைத்தது. அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கை காரணமாக சுகாதார வசதிகள் கடுமையாக மோசமடைவது, ஒரு பேரழிவிற்கு வழிவகுத்துள்ளது என்பதற்கான உதாரணங்களை அண்டை நாடான இந்தியா இப்போது வழங்கிவருகின்றது.

"சவாலை வெற்றிகரமாக சமாளிக்க வேண்டுமானால் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கும் அனைத்து விதிகளையும் ஆலோசனைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்" என தனது அறிக்கையில் கூறியுள்ள இராஜபக்ஷ, தொற்றுநோய் பரவுவதற்கான பொறுப்பை பொதுமக்கள் மீது சுமத்த முயல்கிறார். அடிப்படை பொது சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதே தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான முதுகெலும்பாகும், என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் கூறியதாக இராஜபக்ஷ மேலும் வலியுறுத்தினார்.

தொற்றுநோயை ஆரம்பத்தில் இருந்தே முடிந்தவரை பரிசோதிக்க வேண்டும் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான வற்புறுத்தலை முற்றிலுமாக நிராகரித்த ஒரு அரசாங்கத்தின் தலைவர், இப்போது மக்களுக்கு எதிராக விரலை நீட்டும் போது, அவரது கொடூரமான கபடத்தனமே அம்பலப்படுத்தப்படுகிறது. இராஜபக்ஷ உட்பட முழு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கொலைகாரக் கொள்கைகளின் விளைபொருளான தொற்றுநோயின் பேரழிவிற்கு, தொழிலாள வர்க்கமோ அல்லது பிற ஒடுக்கப்பட்ட குழுக்களோ எந்த வகையிலும் பொறுப்பல்ல.

தேசிய அரசுகளுக்குள் கட்டுண்டுள்ள மற்றும் இலாபத்தை நோக்கமாக கொண்ட முதலாளித்துவ முறைமையிடம், பூகோளத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் கிடையாது. ஒரு சோசலிச அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கம் மட்டுமே, தொற்றுநோய் அலைகளைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துக குழுவின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட, சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை அமையுங்கள் என்ற அறிக்கையில், அத்தகைய ஒரு பூகோள இயக்கம் போராடும் வழியை வலியுறுத்துகிறது.

தொற்றுநோய்க்கு, போருக்கு, சமத்துவமின்மைக்கு, சுரண்டலுக்கு, சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது, முழு முதலாளித்துவ சமூக, பொருளாதார ஒழுங்கிற்கு எதிரான போராட்டமாகும். அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், தன்னலக்குழுக்களை பறிமுதல் செய்வதற்கும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைக்கு சேவை செய்யும் நோக்கத்திற்காக உற்பத்தியின் பகுத்தறிவு, விஞ்ஞான மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவுவதற்கும் ஒரு பொதுவான அரசியல் போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.

இந்த அரசியல் தாக்குதலுக்காக தொழிலாளர்களை தயார்படுத்துவதில் தீர்க்கமானதாக இருக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மே தின இணையவழி கூட்டம் மே 1 அன்று இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைத்து புத்திஜீவிகளையும் இந்த கூட்டத்தில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்பொதே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading