முன்னோக்கு

மெக்கொன்னலுக்கு எதிராக ட்ரம்பின் மரண அச்சுறுத்தலும், ஜனநாயகக் கட்சியின் மவுனமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

குடியரசுக் கட்சியின் செனட் சபைத் தலைவர் மிட்ச் மெக்கொன்னலை இலக்கு வைத்து, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு தெளிவான மற்றும் உறுதியான மரண அச்சுறுத்தலை வெளியிட்டார்.

டிசம்பர் நடுப்பகுதியில் மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கும் ஒரு சட்டமசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக டொனால்ட் ட்ரம்ப் அவரின் சமூக ஊடக தளத்தில் மெக்கொன்னலை தாக்கினார். மெக்கொன்னல் நிச்சயமாக அந்தச் சட்டமசோதாவுக்கு வாக்களித்து இருக்க வேண்டும் 'ஏனென்றால் அவர் டொனால்ட் ஜெ. ட்ரம்பை வெறுக்கிறார் … [அ]வருக்கு மரண ஆசை இருக்கிறது,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மெக்கொன்னல் மரணத்தை விரும்புவதாக குறிப்பிட்ட பின்னர், அந்த முன்னாள் ஜனாதிபதி உடனடியாக, அந்த செனட்டரின் மனைவி மற்றும் ட்ரம்பின் முன்னாள் போக்குவரத்து துறைச் செயலர் Elaine Chao ஐ இனரீதியில் தாக்க முற்பட்டார், அவரை மெக்கொன்னலின் 'சீனாவை நேசிக்கும் மனைவி கோகோ சோவ்!” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

[Photo: Donald J. Trump/@realDonaldTrump]

மெக்கொன்னலுக்கு எதிரான மரண அச்சுறுத்தல், இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்தில் நடக்க உள்ள இடைக்கால தேர்தல்களுக்கு முன்னதாக ட்ரம்ப் பாசிசவாத பேரணிகளை நடத்தி வரும் சூழலில் வருகிறது. இத்தகைய பேரணிகளில், மற்றவர்களுடன் சேர்ந்து, தன்னைத்தானே 'கிறிஸ்துவ தேசியவாதி' என்று கூறிக் கொள்ளும் ஜோர்ஜியா பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீனும் உள்ளடங்குவார்.

கிரீன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் அவரின் சமூக ஊடக கணக்குகளில், “புலம்பெயர்ந்தோர் ஊர்வலம்' நடத்துவதற்காக ஜோர்ஜ் சோரோஸ் (George Soros) மீது பழி சுமத்தியதுடன், பாசிச மற்றும் யூத-விரோத சதி கோட்பாடுகளைத் தழுவி இருந்தார், மேலும் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் நான்சி பெலோசி உட்பட ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதிகளைக் கொல்ல அழைப்பு விடுத்த சமூக ஊடகக் கருத்துக்களை 'லைக்' செய்திருந்தார். கடந்தாண்டு அப்பெண்மணி நியூ யோர்க் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் இன்னும் சில ஜனநாயகக் கட்சியினரை #ஜிஹாத்ஸ்குவாட் (புனிதப் போர்ப்படை) என்று முத்திரைக் குத்தியதுடன், அவர்கள் 'பயங்கரவாத' அனுதாபங்களுக்கு இடம் அளிப்பதாக வாதிட்டார்.

ட்ரம்ப் பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், அவை பாசிச 'பிரதியீட்டு' கோட்பாட்டை ஊக்குவிப்பதுடன், “போதைப் பொருள் வியாபாரிகளைக்' கும்பலாக வைத்து கொல்ல அழைப்பு விடுத்துள்ளன, மேலும் Qanon இயக்கம் மற்றும் நிக்கோலஸ் ஃபுயென்டெஸின் 'முதலில் அமெரிக்கா' (America First) குழு ஆகியவற்றுடன் தொடர்புடைய பாடல்களும் வீரவணக்கங்களும் அவற்றில் இடம் பெறுகின்றன.

மெக்கொன்னல் மற்றும் சாவோவுக்கு எதிரான ட்ரம்பின் தாக்குதல்களுக்குப் பின்னர், அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி மற்றும் குடியரசுக் கட்சியின் 2012 ஜனாதிபதி வேட்பாளர் மிட் ரோம்னி உட்பட ஒரேயொரு குடியரசுக் கட்சி செனட்டர் கூட, மெக்கொன்னலுக்கு 'மரண ஆசை இருக்கிறது' என்று கூறியதற்காக ட்ரம்பைக் கண்டிக்கவில்லை.

இதில் புளோரிடாவின் முன்னாள் ஆளுநரும் குடியரசுக் கட்சியின் தற்போதைய செனட்டருமான ரிக் ஸ்காட்டும் உள்ளடங்குவார், இவர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு வெவ்வேறு தொலைக்காட்சி நேர்காணல்களில் ட்ரம்பின் 'மரண ஆசை இருக்கிறது' என்ற கருத்துக்களைக் கண்டிக்க மறுத்து, வன்முறைக்கான ட்ரம்பின் அழைப்பை மறைமுகமாக ஆதரித்ததோடு மட்டுமில்லாமல், மாறாக சாவோவுக்கு எதிரான ட்ரம்பின் இனவாத களங்கத்தை அது வெறும் ஒரு 'புனைபெயர்' என்று கூற முயன்றார்.

இந்த வார அபிவிருத்திகள், எந்தளவுக்குக் குடியரசுக் கட்சி ஒரு பாசிச அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிடுகின்றன.

வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர், பைடெனே தேசியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில் இன்றியமையாத வகையில் ஏறக்குறைய இதை ஒப்புக் கொண்டார், அதில் அவர் கூறுகையில், குடியரசுக் கட்சியில் 'MAGA [மீண்டும் அமெரிக்காவை மகத்தானதாக மாற்றுவோம்] குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி அச்சுறுத்துகின்றனர்' இவர்கள் 'அரசியலமைப்பை மதிப்பதில்லை' அல்லது 'ஒரு சுதந்திரமான தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை' என்றார்.

அந்த உரைக் குறித்து கருத்துரை எழுதிய உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:

அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் இரட்டைத் தூண்களில் ஒன்று, ஒரு பாசிசவாதியால் வழி நடத்தப்படுகிறது, 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவை அவர் நிராகரித்ததை ஆமோதித்தது, ஜனவரி 6, 2021 இல் வன்முறையான ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சியை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரித்தது என்ற இந்த உண்மை, ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதி அரசியலமைப்பைத் தூக்கி எறிந்து விரைவாகவும் வன்முறையாகவும் சர்வாதிகாரத்திற்கு மாற மிகவும் ஆதரவாக உள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அரசியல் வன்முறைக்கு அழைப்பு விடுத்ததில் உச்சமடைந்த ட்ரம்பின் கடந்த வார பேரணிகள், இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால் ட்ரம்ப் அச்சுறுத்தல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஜனநாயகக் கட்சி வாய் திறக்காமல் இருப்பதாகும். அந்தக் கருத்துக்களை ஒரேயொரு முன்னணி ஜனநாயகக் கட்சியாளர் கூட கண்டிக்கவில்லை. பைடெனே கூட அந்த அச்சுறுத்தல்கள் குறித்து எதுவும் கூறவில்லை, அதேவேளையில் அயன் சூறாவளி ஏற்படுத்திய சேதாரங்களைப் பார்வையிட புளோரிடாவுக்குச் சென்ற பயணத்தை, குடியரசுக் கட்சி ஆளுநர் ரோன் டிசாண்டிஸ் உடன் புகைப்படத்தில் காட்சிக் கொடுப்பதற்கும், நல்லிணக்கத்தைக் காட்டுவதற்கும் ஒரு வாய்ப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் பைடென் அவர் உரையை வழங்கியதில் இருந்து, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி தொடர்ந்து பாசிசத்தைத் தழுவுவதைக் குறித்து அவரோ அல்லது மற்ற முன்னணி ஜனநாயகக் கட்சியினரோ யாரும் எதுவும் கூறவில்லை.

குடியரசுக் கட்சியின் பாசிசவாத மாற்றத்திற்கு, ஒவ்வொரு கட்டத்திலும் ஜனநாயகக் கட்சி உதவி செய்து உறுதுணையாக இருந்துள்ளது.

பைடென் தேர்வானதற்கு சான்றளிப்பதைத் தடுக்க முயன்ற, ஜனவரி 6, 2021 இல் முயற்சிக்கப்பட்ட அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் இருந்து 20 மாதங்கள் ஆகின்றன. ஒரு 'பலமான குடியரசுக் கட்சிக்கு' அழைப்பு விடுத்ததன் மூலம் பைடென் இந்த கிளர்ச்சிக்கு விடையிறுத்தார். அந்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு முன்னரே கூட மிச்சிகன் ஆளுநர் கிரெட்சென் விட்மர் மற்றும் பிற ஜனநாயகக் கட்சி ஆளுநர்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் இருந்தன. ஜனவரி 6 சம்பவங்களுக்கு ஒரு வெள்ளோட்டமாக இருந்த அந்த சதியின் முக்கியத்துவத்தை மூடிமறைத்ததன் மூலம் ஜனநாயகக் கட்சியினர் அதற்கு விடையிறுத்தனர்.

ஜனவரி 6க்கு முன்னரும் அதற்குப் பின்பும், ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முழுவதும் ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பு, இரண்டு பரிசீலனைகளை உள்நோக்கமாக கொண்டிருந்தது. முதலாவதாக, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக, அது ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டு வரும் அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் திட்டங்களுக்குப் பின்னால், குடியரசுக் கட்சியுடன் அல்லது அதற்காக அதன் ஒரு பிரிவுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உறுதியாக உள்ளது.

இரண்டாவதாக, ஜனநாயகக் கட்சியின் முக்கிய கவலை பாசிச அச்சுறுத்தலோ மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலோ இல்லை, மாறாக அடிமட்டத்தில் இருந்து தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிப்பதாகும்.

பைடென் பதவிக்கு வந்ததில் இருந்து, ட்ரம்ப் அதே பின்பற்றிய உள்நாட்டு கொள்கையின் இன்றியமையாத அம்சங்கள் அனைத்தையும் பின்பற்றி உள்ளார், குறிப்பாக பெருந்தொற்று சம்பந்தமான விஷயத்தில், ஒவ்வொரு நாளும் 400 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழந்து வருவதற்கு மத்தியில் அது 'முடிந்து விட்டதாக' அறிவித்துள்ளார். வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கவும் ஓர் அணு ஆயுதப் பேரழிவைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தும் போர் கொள்கைக்குத் தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்யவும் பைடென் தொழிற்சங்க எந்திரத்தின் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறார்.

அமெரிக்காவில் பாசிச சர்வாதிகாரத்திற்குப் பெரிய ஆதரவு வட்டம் இல்லை என்பதை அவசியம் வலியுறுத்தி ஆக வேண்டும். ஒப்பீட்டளவில் ட்ரம்ப் பேரணிகளில் குறைவான எண்ணிக்கை இருப்பதே இந்த உண்மையை அடிக்கோடிடுகிறது. ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் மற்றும் இராணுவ-அரசு எந்திரத்திற்கு வெளியே ட்ரம்புக்கான ஆதரவு என்பது, பெரிதும், பரந்த பெருந்திரளான மக்களுக்கு அவர்களின் நலன்களை வெளிப்படுத்த அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்த இயங்குமுறையும் இல்லை என்ற உண்மையின் விளைவாகும்.

ஒரு மாதத்திற்கு முன்னர் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, “அமெரிக்காவில் பலமாக வேரூன்றி உள்ள இரு-கட்சி அமைப்பு முறையில், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் குடியரசுக் கட்சியை உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல வேறு வழியின்றி ஆதரிக்கின்றன. … ட்ரம்ப் கொண்டிருக்கும் ஒரு வெகுஜன அடித்தளத்தைப் பொறுத்த வரையில், அதில் முக்கால்வாசி பேர் இல்லையென்றாலும், அதில் மூன்றில் இரண்டு பங்கினர் அவர் சொல்லாடல்களின் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி இந்த பலூனை வெடிக்கச் செய்யும்.”

இது தான் முக்கிய கேள்வி. இது பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சி வசம் விடப்பட்டால், அங்கே பாசிச வலதுக்கு எதிராக எந்த தீவிரமான சண்டையும் இருக்காது என்பதோடு, நவம்பர் 8 வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், இந்த அபாயம் தொடர்ந்து அதிகரிக்கும்.

தொழிலாள வர்க்கம் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள தளைகளில் இருந்து எந்தளவுக்கு உடைத்துக் கொள்கிறதோ அந்தளவுக்கே அமெரிக்க அரசியல் கூட்டங்களில் நிலவும் பிற்போக்குத்தனம் மற்றும் அருவருப்பு தன்மையை அம்பலப்படுத்தி, எதிர்க்க முடியும்.

இரயில்வே தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள், சேவைத் துறைத் தொழிலாளர்கள், கல்வியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் மத்தியில், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது, சர்வாதிகாரம் மற்றும் போரை எதிர்ப்பதற்கான சமூக சக்தியை எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் இந்தச் சமூக சக்தி: 1) தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் குழுக்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும், ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் வில் லெஹ்மனின் பிரச்சாரம் இதன் மிக உயர்ந்த வெளிப்பாடாகும்; 2) முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியப் போரின் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த, சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும், அரசியல் முன்னோக்கால் அது வழி நடத்தப்பட வேண்டும்.

Loading