இலங்கையில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை கண்டிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஈரான் மீதான போருக்கு எதிராக யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் 10 மார்ச் 2026 அன்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்த போது

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரின் தாக்கங்கள் குறித்தும் சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் பற்றியும் தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடின.

இப்போது இரண்டாவது வாரமாக தொடரும் கொடூரமான அமெரிக்க-இஸ்ரேலிய அழித்தொழிப்பு போர், ஈரானை அடிபணியச் செய்து அதன் வளங்களை வாஷிங்டனின் ஆதிக்கத்தின் கீழ் வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கண்மூடித்தனமான தாக்குதல்கள் நாட்டை பேரழிவிற்குள்ளாக்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, அடிப்படை உள்கட்டமைப்பை அழித்துள்ளன.

இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், போரை கண்டிக்காமல் இருப்பதன் மூலம், வாஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு அதன் ஆதரவை நடைமுறையில் சமிக்ஞை செய்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவி வருவதால், உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.

வடமேல் மாகாணத்தின் கடலோர நகரமான புத்தளத்தில் உள்ள ஒரு பாடசாலையின் அரசியல் விஞ்ஞான ஆசிரியை ஒருவர் கூறியதாவது: “இந்த சட்டவிரோதப் போரை நியாயப்படுத்த, டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும், இது அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பொய்களைப் பரப்புகிறார். இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை. ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி சீனாவுக்கான எண்ணெய் விநியோகத்தைத் துண்டிப்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.”

ஈரானில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக ட்ரம்ப் கூறுவதற்கு பதிலளித்த அவர்: “அமெரிக்க அரசாங்கம் மக்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்டிருந்தால், புலம்பெயர்ந்தவர்கள் ஏன் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுகிறார்கள்? ட்ரம்ப் நிர்வாகமே அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், இல்லையா?” என கேட்டார். அமெரிக்க டொலரின் உலகளாவிய ஆதிக்கம் பலவீனமடைவது குறித்து அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதிகளவு கவலை கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் குறிப்பிட்டு, அவர் மேலும் கூறியதாவது: “ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சீன நாணயத்தைப் பயன்படுத்தி எண்ணெய் ஒப்பந்தங்களைச் செய்ததாக நான் கேள்விப்பட்டேன். ஈரானும் இதேபோன்றது. இந்த நாடுகளில் சீனாவின் முதலீடுகள் அதிகரித்துள்ளன, அதனால்தான் பதட்டங்கள் போராக அதிகரித்துள்ளன. சீனாவும் ரஷ்யாவும் நேரடியாக ஈடுபட்டால், அணு ஆயுதங்கள் கூட பயன்படுத்தப்படலாம்.” அத்தியாவசிய மருந்துகள் பெறுவதை தடைசெய்த ஈரானுக்கு எதிரான பல தசாப்த கால அமெரிக்கத் தடைகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் போரை கண்டிக்கத் தவறியதை விமர்சித்த அந்த ஆசிரியர், அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மீது சுமத்துவதை சுட்டிக்காட்டினார். தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களையும் தூக்கியெறியும் வரை உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியாது என்று ரஷ்யப் புரட்சியின் தலைவர் விளாடிமிர் லெனின் கூறியதை அவர் சுட்டிக்காட்டனார்.

இ.மி.ச. ஊழியர் கனிஷ்க கருணாரத்ன

இலங்கை மின்சார சபை நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் கனிஷ்க கருணாரத்ன கூறியதாவது: “அமெரிக்கத் தரப்பிலிருந்து பார்க்கும் போது இது ஒருதலைப்பட்சப் போராகத் தோன்றுவதுடன் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் இது இயக்கப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரதூரமன சிக்கல்கள் உள்ளன. சக்திவாய்ந்த நாடுகள் மற்ற நாடுகளை இணைத்துக்கொள்ளும் ஹிட்லரின் பொருளாதார அமைப்பைப் போன்ற ஒரு பொருளாதார அமைப்பை ட்ரம்ப் விரும்புவதாகத் தெரிகிறது. அமெரிக்கா வெனிசுலாவில் தலையிட்டு, இப்போது அது அதன் வர்த்தக உறவுகளை கையாளுகிறது.”

ஈரானில் தலையிடவும் மனித உரிமைகள் பிரச்சினைகளை சுரண்டிக்கொள்ளவும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று கருணாரத்ன கூறினார்: “ஈரானில் பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அவை உள்நாட்டுப் பிரச்சினைகள். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. ஈரானிய மக்களே தலையிட்டு தங்கள் அரசாங்கத்தை மாற்ற வேண்டும்.

“போரை நிறுத்துவது ஒரு தீவிரமான பிரச்சினை, ஏனெனில் போரை நடத்தும் நபரின் -டொனால்ட் ட்ரம்ப்- மனநிலையில் ஒரு சிக்கல் உள்ளது. அவர் தனது முடிவுகளை எவ்வாறு எடுக்கிறார் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் இப்போது தோன்றியுள்ள எதிர்ப்பு இயக்கங்கள் மூலம் ஒரு உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க முடியும்.”

கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் மாணவியான செனுரி: “இந்தப் போர் முற்றிலும் தேவையற்றது. அமெரிக்கா அநியாயமாக நடந்து கொள்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற ஈரானின் வளங்களை அமெரிக்கா கொள்ளையடிக்க முனைவதால், ஈரானுக்கு பதிலடி கொடுக்க உரிமை உண்டு. டொனால்ட் ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரி, ஹிட்லர் செய்தது போல ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுக்கிறார்.” முதலாளித்துவ அமைப்பின் சமத்துவமின்மை பற்றி செனுரி குறிப்பிடுகையில், “இந்த அமைப்பு இனி தொடரக்கூடாது” என்றார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர்: “நாங்கள் போருக்கு எதிரானவர்கள். இது ஒரு பெரிய குற்றம். அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலால் பல சாதாரண மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இன்று அமெரிக்காவின் அழிவுகரமான வகிபாகத்தைக் காட்டுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலா மீதான தாக்குதலைக் கண்டோம். அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கூட அமெரிக்கா கடத்தியது. அந்த நாட்டை குறிவைத்த பிறகு, இப்போது ஈரானை கைப்பற்ற முயற்சிக்கும் அவர்கள், அங்கேயே நிறுத்துவார்கள் என்று நம்புவது கடினம். அமெரிக்கா கிரீன்லாந்தையும் கனடாவையும் கூட ஆதிக்கம் செலுத்த விரும்புவதாகத் தெரிகிறது.”

கொழும்பில் ஒரு இளைஞருடன் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் கலந்துரையாடிய போது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி எஸ். பானுசா, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களை 'கடுமையாக எதிர்ப்பதாக' IYSSE இடம் கூறியதோடு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 26 ஆண்டுகால இனவாதப் போரையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூக பேரழிவையும் சுட்டிக்காட்டினார்.

'ஒரு சமூகமாக, நாங்கள் பல தசாப்தங்களாக பிரமாண்டமான துன்பங்களையும் கொடுமையையும் எதிர்கொண்டோம். அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரானிய மக்களின் உணர்வுகளை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கூட கொன்றுள்ளனர்,' என்று அவர் கூறினார்.

ஈரான் மீதான கொடூரமான தாக்குதல் பற்றிய செய்திகளை ஊடகங்கள், குறிப்பாக யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் அவதானித்து வருவதாக பானுசா கூறினார். 'இந்தப் போர் அதிகரித்தால், மூன்றாம் உலகப் போரின் ஆபத்து அதிகரிக்கும். ஒரு பெரிய சக்தி மற்றொரு சிறிய நாட்டிற்கு எதிராகப் போரை நடத்தி வருகிறது. அது நிறுத்தப்பட வேண்டும்,' என்று அவர் கூறினார்.

கலந்துரையாடல்களின் போது, ​​ஏகாதிபத்திய சக்திகளிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்த முடியாது என்று சோசலிச சமத்துவக் கட்சி / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் விளக்கினர். தொழிலாள வர்க்கத்தின் முதல் பணி, போரின் தன்மையைப் புரிந்துகொள்வது என்று அவர்கள் விளக்கினர். நவீன போர்கள் தற்செயல் நிகழ்வுகளோ அல்லது ஏதாவதொரு அரசாங்கத்தின் கொள்கைகளின் விளைவோ அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியிலிருந்தும், சந்தைகள், வளங்கள் மற்றும் மூலோபாய ஆதிக்கத்திற்கான போட்டி ஏகாதிபத்திய சக்திகளின் போராட்டத்திலிருந்தும் எழுகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவம், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டின் மூலம் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்பதை நிரூபிக்கிறது. சமூகத்தின் செல்வத்தின் உற்பத்தியாளர்களான தொழிலாளர்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜன நடவடிக்கைகள் மூலம் போர் பொருளாதாரங்களை சீர்குலைக்கும் கூட்டு சக்தியைக் கொண்டுள்ளனர். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்தும் சுயாதீனமாக, சர்வதேச அளவில், அவர்களால் போர் ஆதரவு முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து, சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுசீரமைக்க முடியும்.

இன்று, மூன்றாம் உலகப் போரின் ஆபத்து வேகமாக தீவிரமடைகையில், தொழிலாள வர்க்கம் அதே வரலாற்று மாற்றீட்டை எதிர்கொள்கிறது: சோசலிசமா அல்லது மிலேச்சத்தனமா. போருக்கு ஆதரவான ஆளும் உயரடுக்குகள், அவர்களின் பாசிச கூட்டாளிகள் மற்றும் முதலாளித்துவ அமைப்பில் மாயைகளை ஊக்குவிக்கும் போலி இடது மற்றும் அமைதிவாத சக்திகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் போரின் தோற்றுவாயையே -முதலாளித்துவத்தையே- ஒழிப்பதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துவது போல், சோசலிசத்திற்கான போராட்டம் இன்றி போருக்கு எதிரான உண்மையான போராட்டம் முன்னெடுக்கப்பட முடியாது, மற்றும் ஏகாதிபத்திய போரை எதிர்க்காத எந்த சோசலிச இயக்கமும் இருக்க முடியாது.

அமெரிக்க-இஸ்ரேலியப் போரை இயக்கும் புவிசார் மூலோபாய காரணிகள் மற்றும் அதை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து கலந்துரையாட மார்ச் 17 அன்று மாலை 4 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் சோசலிச சமத்துவக் கட்சி-ஐ.வை.எஸ்.எஸ்.இ. நடத்தும் பகிரங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி/ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரச்சாரகர்கள் தாங்களுடன் பேசிய அனைவரையும் வலியுறுத்தினர். தொலைதூரத்தில் உள்ளோர் zoom மூலம் கூட்டத்தில் பங்கேற்க பதிவுசெய்துகொள்ளுங்கள்.

Loading