இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மேற்கு வங்கத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு, இந்தியாவின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் தனது இந்துத்துவ மேலாதிக்க அரசியலை தீவிரமாக திணிக்க முனைந்து வருகிறது.
அதன் உத்தரவின் பேரில், மே 15 அன்று கொல்கத்தாவின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பொலிஸ் தலையிட்டு, பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் பாரம்பரிய வெள்ளிக்கிழமை தொழுகைக் கூட்டங்களைத் தடுக்க முயன்றது.
இரண்டு நாட்களின் பின்னர், புதிய பொலிஸ் கட்டுப்பாடுகளுக்கும் மற்றும் “நகர்ப்புற மேம்பாடு” என்ற பெயரில் “அனுமதியற்ற” கட்டிடங்களை இடிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கும் எதிராக பார்க் சர்க்கஸ் செவன்-பாயிண்ட் சந்தியில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸ் கொடூரமான தாக்குதலை நடத்தியது. உண்மையில், இவ்வாறு “அனுமதியற்ற கட்டிடங்கள்” எனக் குறிவைக்கப்பட்டவை, அரசின் ஆதரவு பற்றாக்குறை மற்றும் நகர்ப்புற திட்டமிடலின் தோல்வியால் ஏழை மக்கள் கட்டிய தற்காலிக குடியிருப்புகள், சிறு வணிகக் கடைகள் மற்றும் உணவுக் கடைகளாகும்.
பொலிஸ் மீண்டும் மீண்டும் தடியடி நடத்தியதுடன், குறைந்தபட்சம் 46 பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிகழ்வுகள், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வலதுசாரி, பாஜக தலைமையிலான தேசிய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்து மதவாதத் தூண்டல் மற்றும் ஆத்திரமூட்டல் போன்ற ஒரு விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பிரச்சாரமானது தொழிலாள வர்க்கத்தைப் பிரிப்பதையும், பாஜகவின் தீவிர வலதுசாரி தொண்டர் படையைத் திரட்டுவதையும் அரசின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலுடனான தனது மூலோபாயக் கூட்டணிகளின் மூலம் புது தில்லி முற்றிலும் உடந்தையாக இருக்கும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் விரிவடைந்து வரும் போரின் பொருளாதார விளைவுகளை இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில், பாஜகவின் மதவாதத் தாக்குதல் தீவிரமாக அதிகரித்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், இந்திய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்கள் பொருளாதார அதிர்ச்சிகளைச் சமாளிக்க “தியாகங்கள்” செய்ய வேண்டும் என்று மோடி கோரினார். குஜராத்தில் உரையாற்றிய அவர், எரிபொருள் மற்றும் உரப் பயன்பாட்டைக் குறைக்கவும், இறக்குமதிகளைச் சுருக்கவும், பயணங்களை ஒத்திவைக்கவும், “தேசிய பொறுப்பு” என்ற பெயரில் சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கூட்டுத்தாபன நிறுவனங்களின் இலாபங்களையும், இந்தியாவின் நிதித்துறை உயரடுக்கின் சொத்துகளையும் பாதுகாக்கும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியின் பெரும் சுமையைத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் மீது மாற்றுவதற்குத் தயார்படுத்துவதையே மோடியின் இந்த வேண்டுகோள் நோக்கமாகக் கொண்டிருந்தது.
மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான இந்தத் தாக்குதல்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு வெடிக்க வழிவகுக்கும் என்பதை பாஜக அறிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகர்ப்புறக் கூட்டமைப்புமான டெல்லியைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைப் பகுதியில், வறுமைக்கால ஊதியங்கள் மற்றும் மிகக் கொடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிராகத் தன்னிச்சையாக வெடித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட அலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.
வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு மோடி அரசின் பதில் என்னவென்றால், அரச ஒடுக்குமுறையும் மதவாதத்தை தூண்டி விடுவதை தீவிரப்படுத்துவதுமாகும். இந்த அடக்கமுறையின் பாகமாக நொய்டா (உத்தரப் பிரதேசம்) மற்றும் மானேசர் (ஹரியானா) ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த உடனேயே, பாஜக அரசு ஆக்கிரமிப்பு குடியிருப்பு அகற்றும் நடவடிக்கைகள், மதவாதத் தூண்டல்கள் மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறைகளைத் தொடங்கியது. கொல்கத்தாவில் தில்ஜலா, சீல்டா மற்றும் ஹவுரா ரயில் நிலையப் பகுதிகள் உட்பட பல இடங்களில், சாலையோரக் கட்டடங்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் ஏழை மக்களின் குடியிருப்புகளைக் குறிவைத்து புல்டோசர்கள் களமிறக்கப்பட்டன.
இந்தத் தாக்குதல்கள் 'ஆக்கிரமிப்பு எதிர்ப்பு' நடவடிக்கைகள் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில், இவை ஏழைகளுக்கு எதிரான ஒரு போராகும். இந்த இடிப்பு நடவடிக்கைகள் இந்து, முஸ்லிம் என இரு தரப்பிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகள், தினக்கூலிகள், சிறு வணிகர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன.
சமீபத்தில் தோற்கடிக்கப்பட்ட மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி உட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், பாஜகவின் இந்த 'புல்டோசர் கலாச்சாரத்தைக்' கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், 'புல்டோசர்கள் ஒருபோதும் நிர்வாகத்தின் மொழியாக மாற முடியாது' என்றும் எச்சரித்துள்ளனர்.
போக்குவரத்து மையங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் வாழும் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, பாஜக அரசு மேற்கொண்டு வரும் நகர்ப்புற 'சுத்திகரிப்பு' நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இறுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறிய சாலையோர வணிகர்களும் வெளியேற்றத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்கள், மதம் அல்லது இனம் ஆகியவற்றைக் கடந்து, மக்கள் தொகையின் மிக ஏழ்மையான பிரிவினரையே பெருமளவில் பாதிக்கின்றது.
இருப்பினும், பாஜகவின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பரந்த அளவிலான தொழிலாளர் பிரிவினரைப் பாதித்த போதிலும், இந்து-ஆதிக்கவாத உணர்வைத் தூண்டுவதற்காக அரசாங்கம் தனது பல நடவடிக்கைகளை வேண்டுமென்றே மதவாதக் கோணத்தில் சித்தரிக்கிறது.
'இது, உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கீழ் உருவான அதே பாணியைப் பின்பற்றுகிறது. அங்கு 'புல்டோசர் நீதி' என்பது முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டுத் தண்டனைக்கு இணையான ஒன்றாக மாறியுள்ளது. இதே போன்ற வழிமுறைகள் இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2019 ஆகஸ்ட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தைப் பறிப்பதற்காக மோடி அரசு ஓர் அரசியலமைப்பு சதித்திட்டத்தை அரங்கேற்றிய பிறகு, அங்கு தலைதூக்கிய எதிர்ப்பை ஒடுக்குவதற்காக கட்டிட இடிப்புகள், பெருந்திரள் சிறைபிடிப்புகள் மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் பயன்படுத்தப்பட்டன.
மத ரீதியிலான பிளவுபடுத்தலை ஊக்குவிக்கவும், இந்து தீவிர தேசியவாதத்தைத் தூண்டிவிடவும், பசு வதை மற்றும் கோயில் அரசியலை மையமாகக் கொண்ட இந்து மதவாதப் பிரச்சாரங்களை பாஜக நீண்டகாலமாகவே தீவிரப்படுத்தி வந்துள்ளது.
'குஜராத்தில், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (RSS), விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பசு பாதுகாப்புக் குழுக்கள், கால்நடைகளைக் கடத்தியதாகவோ அல்லது மாட்டு இறைச்சியை உட்கொண்டதாகவோ குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களையும் தலித்துகளையும் மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளன.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் பகுதியைச் சுற்றி அண்மையில் நடந்த மதவாத அணிதிரட்டல், முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டுவதற்கு 'ஆக்கிரமிப்பு எதிர்ப்பு' நடவடிக்கைகளும் இடிப்புப் பிரச்சாரங்களும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மதவாதக் கொந்தளிப்புக்கு மத்தியில், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து பெரிய அளவில் நடத்தப்பட்ட புல்டோசர் நடவடிக்கைகள் பற்றி செய்திகள் விவரித்தன.
இது தற்செயலானது அல்ல; 'தேசிய ஒற்றுமை' என்ற பெயரில் பொருளாதார 'தியாகங்களை' சகித்துக் கொள்ளுமாறு இந்தியர்களை கெஞ்சும் வகையில் மோடி உரை நிகழ்த்திய அதே நாளில், அவர் சோம்நாத் கோயிலுக்கும் சென்றிருந்தார். இந்த கோயிலைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்பார்வையிடும் குழுவிற்கு மோடி தலைமை தாங்குவதோடு அவரும் அவரது அரசாங்கமும் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது அமைந்துள்ள கோயிலுக்கு அடுத்தபடியாக, இதனை ஒரு முக்கிய இந்து தேசியவாத வழிபாட்டுத் தலமாக தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
பஜ்ரங் தள் ஆர்வலர்களின் பசு வதைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மாநிலத்தில் அனைத்து விதமான பசு வதைகளையும் முற்றிலுமாகத் தடை செய்யும் 1950-ஆம் ஆண்டின் பிற்போக்கு சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற மாநில அரசின் சபதம் உட்பட இதே அரசியல் வழிமுறைகளே தற்போது மேற்கு வங்காளத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில், ஏழை குடியேறிகளை வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமான 'ஊடுருவல்காரர்கள்' என்று முத்திரைக்குத்தி, வங்காளதேசத்தினருக்கு எதிரான தீவிர தேசியவாதத்தை பாஜக ஆக்ரோஷமாக ஊக்குவித்து வருகிறது. இந்த நச்சுத்தனமான பிரச்சாரமானது, முதலாளித்துவத்தின் மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்பி, ஏழ்மையிலுள்ள தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக மோதவிடுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
பாஜகவின் தேர்தல் வெற்றியின் பின்னர், கொல்கத்தாவில் நடந்த மதவாதத் தாக்குதல்களுடன் சேர்ந்து, இறைச்சிக் கடைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களும் அரங்கேறின.
அதேநேரம், மேற்கு வங்கம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மோசமடைந்து வரும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, தனியார்மயம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஊதியம், வேலை பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகளை முறைப்படுத்தும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளைத் தகர்க்கும் வகையில், மோடியின் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டத் கோவைகளை (labour codes) தீவிரமாகச் செயல்படுத்த பாஜக அரசு முன்நகர்ந்து வருகிறது.
மேற்கு வங்காளத்தில் உருவாகி வரும் இந்த வெடிக்கக் கூடிய சமூக பதற்றங்கள், இந்திய முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள ஒரு பரந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகும்.
எரிபொருள் விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருடன் தொடர்புடைய உலகளாவிய ஸ்திரமற்றத்தன்மை ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மோடி அரசு ஏற்கனவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதுடன், மேலும் பரந்த அளவிலான சிக்கன நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருகிறது.
தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு வெடிப்பதைக் கண்டு பீதியடைந்துள்ள பாஜக, மதவாதத் தூண்டல், தேசியவாதம் மற்றும் அரச ஒடுக்குமுறையைக் கொண்டு அதற்கு பிரதிபலிக்கின்றது.
ஆனால், எதிர்க்கட்சிகளால் எந்தவொரு முற்போக்கான மாற்றும் முன்வைக்கப்படவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ், தற்போது பாஜகவின் 'புல்டோசர் கலாச்சாரத்தை' விமர்சித்த போதிலும், அது ஆட்சியில் இருந்தபோது பெங்காலி பிராந்தியவாதத்தையும் மதவாதப் பாதுகாப்பு அரசியலையும் ஊக்குவித்த ஒரு முதலாளித்துவ பிராந்தியக் கட்சியாகவே இருந்தது. இமாம்களுக்கான உதவித்தொகை மற்றும் இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் தேர்தல் ஆதரவை வளர்க்க அது முயன்ற அதேவேளை, முதலாளித்துவ ஆட்சியைத் தீவிரமாகப் பாதுகாத்ததுடன், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுயாதீனப் போராட்டங்களையும் ஒடுக்கியது.
பாஜகவின் எழுச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கியதில் காங்கிரஸ் கட்சியும், ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். கட்சியும் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன.
பல தசாப்தங்களாக, இந்த ஸ்டாலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் மற்றும் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணிகளுக்குக் கீழ்ப்படுத்தியதோடு, மேற்கு வங்கத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான இடதுசாரி கூட்டணி அரசாங்கங்களை நடத்தி, தனியார்மயம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள் மீதான ஏனைய தாக்குதல்களையும் திணித்தனர்.
இந்தியாவின் நவதாராளவாத, சந்தை ஆதரவுக் கொள்கைகளுக்கான மாற்றத்தை முன்னெடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியாவின் சீனாவுக்கு எதிரான 'உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை' உருவாக்கிய பெரிய பெருநிறுவன கட்சியாக விளங்கும் 'மதச்சார்பற்ற' காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிகளில் தொழிலாளர்களைக் கட்டிப்போட்டதன் மூலம், ஸ்டாலினிஸ்டுகள் பாஜகவின் எழுச்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தனர்.
மேற்கு வங்காளத்தின் இந்த நிகழ்வுகள், மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
பாஜக மதவாதத் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் போரின் சுமையைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் தோள்களில் சுமத்துவதற்கான சூழ்நிலைகளைத் தயார்செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மதவாதம், முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக — இந்து, முஸ்லிம் மற்றும் ஏனைய அனைத்து — தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத அரசியல் பணியாகும்.
மேலும் படிக்க
- அரசுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்ட அலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் ஆளும் தீவிர வலதுசாரி பாஜக மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெறுகின்றது
- மேற்கு வங்க பாஜக அரசு இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலத்தில் இந்துத்துவ மேலாதிக்க ஆட்சியின் முத்திரையை பதிக்க முனைகிறது
- ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது
