The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 5

"ஜனநாயக சர்வாதிகாரம்" நம் நாட்டில் அடையப்பெற்றதா? அடையப்பெற்றது என்றால், எப்பொழுது?

Use this version to print | Send feedback

லெனினுக்கு முறையீடு செய்து ஜனநாயக சர்வாதிகாரம் இரட்டை அதிகார வடிவமைப்பில் அடையப்பட்டது என்று றடெக் வாதிடுகின்றார். ஆம், எப்பொழுதாவது, மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, என்று நான் ஒப்புக்கொள்வேன், லெனின் வினாவை இவ்வகையில் எழுப்பினார். "எப்பொழுதாவதா?", என்று றடெக் வெறுப்பும் சீற்றமும் கொண்டு கேட்டு, லெனினுடைய மிக அடிப்படையான சிந்தனைகளை தாக்குவதாக என்மீது குற்றம் சாட்டினார். ஆனால் அவர் தவறான கருத்தை கொண்டிருப்பதால்தான் றடெக் கோபமடைகிறார். நான்கு ஆண்டுகள் காலதாமதத்திற்கு பின்னர் றடெக் இதுபோல விமர்சனத்திற்கு உட்படுத்திய, அக்டோபர் படிப்பினைகளில், நான் லெனினுடைய ஜனநாயக சர்வாதிகாரம் "அடையப்படுகிறது" பற்றி பின்வரும் வகையில் விளக்கம் கொடுத்தேன்:

"ஒரு ஜனநாயக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்" கூட்டணி உண்மையான அதிகாரத்தை அடையும் திறனில்லாத, பக்குவப்படாத வடிவைத்தான் கொள்ள முடியும்; அது ஒரு போக்காகத்தான் வடிவமைப்பு கொள்ள முடியுமே அன்றி, ஒரு ஸ்தூலமான நிகழ்வாக அல்ல." (Collected Works, Vol.III, part 1)

இந்த விளக்கத்தை பற்றி ரடெக் எழுதுகிறார்: "லெனினுடைய படைப்பில் மிகச் சிறப்பான தத்துவார்த்த அத்தியாயங்களில் ஒன்றின் பொருளுரை பற்றி இத்தகைய விளக்கம் சிறிதும் பயனற்றது." இச்சொற்களை அடுத்து, போல்ஷிவிசத்தின் மரபுகளுக்கு பரிதாபமான முறையில் முறையீடு செய்யப்பட்டு இறுதியில் முடிவுரையாக: "லெனின் எப்பொழுதாவது கூறியதை வைத்துக் கொண்டு இத்தகைய முக்கியமான பிரச்சினைகளுக்கு விடையிறுக்க முடியாது."

இவ்விதத்தில் லெனினுடைய சிந்தனைகளில் "மிகச் சிறந்த ஒன்று பற்றி" கவனமின்மையுடன் நான் கையாண்டுள்ளதாக ரடெக் ஒரு தோற்றத்தை காட்ட முற்படுகிறார். ஆனால் தன்னுடைய இகழ்வையும் சோகத்தையும் ரடெக் வெற்றுத்தனமாகத்தான் வீணடிக்கிறார். சற்று கூடுதலான முறையில் புரிந்து கொள்ள வேண்டியது இங்கு அவசியமாகும். மிகச் சுருக்கமான முறையில் இருந்தாலும் அக்டோபர் படிப்பினைகளில் எனது முன்வைப்பு ஏதோ மேற்கோள்களை இரண்டாந்தரமாக எடுத்தாள்வதன் அடிப்படையிலான ஒரு திடீர் அகத்தூண்டல் மீது தங்கியிருக்கவில்லை, மாறாக லெனினுடைய படைப்புக்களை உண்மையாக ஆழ்ந்து ஆராய்ந்ததின் மீதாகும். இப்பிரச்சினை பற்றி லெனினுடைய கருத்துக்களின் சாராம்சத்தை அது மறுபதிப்பாக கொடுத்துள்ளது; ஆனால் ரடெக்கின் சொல்லலங்கார அளிப்பு, ஏராளமான மேற்கோள்கள் இருந்த போதிலும், லெனினுடைய சிந்தனையில் இருந்து உயிரோட்டமான ஒரு கருத்தைக் கூட வெளிக் கொண்டுவரவில்லை.

"எப்பொழுதாவது" என்ற சொல்லை நான் ஏன் பயன்படுத்தினேன்? ஏனெனில் பொருளுரை உண்மையில் அப்படித்தான் இருந்தது. இரட்டை அதிகார வடிவமைப்பில் ஜனநாயக சர்வாதிகாரம் "அடையப்பட்டது" என்ற உண்மை ("ஒரு வடிவமைப்பில், ஒரு குறிப்பட்ட காலக்கட்டத்தில்"), லெனினால் ஏப்ரல் - அக்டோபர் 1917 வரையிலான காலத்தில்தான் குறிப்பிடப்பட்டது; அதாவது, ஜனநாயகப் புரட்சி உண்மையில் செயல்படுத்தப்படுவதற்கு முன், இதை ரடெக் கவனிக்கவில்லை, அல்லது புரிந்து கொள்ளவில்லை அல்லது மதிப்பீடு செய்யவில்லை. தற்போதைய நிலைப்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் லெனின் ஜனநாயக சர்வாதிகாரம் "அடையப்படுவது" பற்றி கடும் நிபந்தனைகளுடன்தான் பேசினார். இரட்டை அதிகார காலத்திற்கு ஒரு வரலாற்றுத் தன்மை கொடுப்பதற்காக அவர் அவ்வாறு கூறவில்லை --அவ்விதத்தில் அது பெரும் அபத்தமாக இருந்திருக்கும்; ஆனால் ஒரு சுயாதீனமான ஜனநாயக சர்வாதிகாரத்தின் செம்மைப்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக விவாதிக்கிறார். லெனினுடைய சொற்களுக்கு ஒரு பொருள்தான் இருந்தது, அதாவது பரிதாபமாக தோல்வியுற்றுவிட்ட இரட்டை அதிகாரத்திற்கு வெளியே எவ்வித ஜனநாயக சர்வாதிகாரமும் இருக்காது, இருக்கமுடியாது என்பதுதான் அது. இந்தக் காரணத்திற்காகத்தான் கட்சியை "மீண்டும் ஆயுதமேந்த" வைக்க நேரிட்டது; அதாவது சுலோகத்தை மாற்ற வேண்டியிருந்தது. மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களும், நிலங்களை விவசாயிகளுக்கு மறுத்த மற்றும் போல்ஷிவிக்குகளை வேட்டையாடிய முதலாளித்துவத்துடன் ஏற்படுத்திய கூட்டணி, போல்ஷிவிக்குகளின் சுலோகம் "யதார்த்தமாதலை" கொண்டிருந்தது என்று கூறினால், இதன் பொருள் கறுப்பை வெளுப்பு என்று வேண்டுமென்றே கூறுதல் அல்லது முற்றிலும் அறிவை இழந்து பேசுவது என்று ஆகிவிடும்.

மென்ஷிவிக்குகளை பொறுத்தவரையில், லெனின், கமனேவிற்கு எதிரான வாதத்தில் குறிப்பிட்ட வகையை ஒப்பிட்டு ஒரு வாதத்தை கூறமுடியும்: "புரட்சியில் ஒரு முற்போக்குபணியை முதலாளித்துவம் செய்து முடிக்கும் என்றா கூறுகிறீர்கள்? இந்தப் பணி ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுவிட்டது: ராட்ஜியன்கோ, குச்க்கோவ் மற்றும் மிலியுகோவ் ஆகியோரின் அரசியல் பங்கு முதலாளித்துவத்தினர் கொடுக்க கூடிய அதிகபட்ச பங்கு; ஒரு சுதந்திரமான கட்டத்தில் கெரென்ஸ்கிசம் எப்படி ஜனநாயக புரட்சிக்கு அதிகபட்ச பங்கை கொடுக்க முடிந்ததோ, அதுபோல்தான் இதுவும்."

ஐயத்திற்கிடமின்றி உடற்கூறுபாடுகள் -சில அடிப்படைக் கூறுகள்-- எமது முன்னோர்களுக்கு வால் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இந்தக் கூறுபாடுகள் விலங்கின உலகின் மரபுத் தன்மை ஒற்றுமையை உறுதிபடுத்தப் போதுமானவை ஆகும். ஆனால் தெளிவாகக் கூறவேண்டும் என்றால் மனிதனுக்கு வால் இல்லை. இரட்டை அதிகார ஆட்சியில் ஜனநாயக சர்வாதிகாரத்தின் சில அடிப்படை கூறுகள் பற்றி கமனேவிற்கு லெனின் எடுத்துக்காட்டினார்; மேலும் இந்த அடிப்படை கூறுகளில் இருந்து புதிய உறுப்பு ஒன்றும் தோன்றிவிடாது என்றும் எச்சரித்தார். ஜனநாயகப் புரட்சியை வேறெங்கும் என்றும் செய்யாத வகையில் ஆழ்ந்த முறையில், மிக உறுதியாக மிகத்தூய்மையாக நிறைவேற்றியபொழுதும்கூட, நாம் ஒரு சுயாதீனமான ஜனநாயக சர்வாதிகாரத்தைப் பெற்றிடவில்லை.

பெப்ரவரியில் இருந்து ஏப்ரல் வரை ஜனநாயக சர்வாதிகாரம் உண்மையில் அடையப்பட்டது என்ற நிகழ்வை ரடெக் சிந்தித்துப்பார்த்தால், மோலோடோவ் கூட அதை அறிந்திருப்பார். கட்சியும், வர்க்கமும் ஜனநாயக சர்வாதிகாரம் என்பது இரக்கமற்ற முறையில் முடியாட்சியின் பழைய அரசாங்கக் கருவியை அழித்து, நிலப்பிரபுத்துவ அடிப்படையிலான சொத்துரிமையையும் அழித்திருக்கும் என்பதை அறிந்திருந்தது. ஆனால் இப்படி கெரென்ஸ்கியின் காலத்தில் நடந்ததாக சிறு அறிகுறிகள்கூட இல்லை. ஆனால் போல்ஷிவிக் கட்சியைப் பொறுத்தவரையில், புரட்சிப் பணிகளை உண்மையில் அடைதல் என்பதுதான் பிரச்சினையே ஒழிய, சில சமூக, வரலாற்று "அடிப்படைக்கூறுகள்" வெளிப்பட்டுவந்தது அல்ல. தன்னுடைய எதிர்ப்பாளர்களை தத்துவார்த்தரீதியில் புரியவைக்கும் வகையில், முழு வளர்ச்சி பெற்றிராத இந்தக் கூறுபாடுகள் பற்றி விளக்கிக் காட்டினார்; இது தொடர்பாக அவர் செய்தது அதுதான். ஆனால் ரடெக்கோ இரட்டை அதிகார, அதாவது அதிகாரமற்ற, காலத்தில் "சர்வாதிகாரம்" இருந்தது என்றும், ஜனநாயகப் புரட்சி அடையப்பட்டது என்றும் நம்மை நம்பவைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார். லெனினுடைய மேதைமை இதைப் புரிந்துகொண்டால் போதும் என்ற வகையில் அவர் "ஜனநாயகப் புரட்சி" வந்ததை பற்றிப் பேசுகிறார். ஆனால் இத்தகைய பேச்சே அது அடையப்படவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. உண்மையான ஜனநாயகப் புரட்சி என்பது ரஷ்யாவிலும், சீனாவிலும் உள்ள ஒவ்வொரு கல்வியறிவு இல்லாத மனிதராலும் எளிதில் புரிந்து கொள்ள முடிவதாகும். ஆனால் இத்தகைய வளர்ச்சிக் கூறுபாடுகளை பொறுத்தவரையில், அது மிகவும் கடினமானது ஆகும். உதாரணமாக, ரஷ்யாவில் கமனேவ் கொடுத்த படிப்பினையையும் மீறி, சீனாவிலும் ஜனநாயக சர்வாதிகாரம் இதுபோல் லெனினுடைய முறையில் "அடையப்பட்டது" (கோமிண்டாங் மூலமாக), இன்னும் முழுமையாக அங்கு அடையப்பட்டு, எமது நாட்டில் இரட்டை அதிகாரம் நடைமுறையில் இருந்து வந்ததைவிட முடிவுற்ற வகையில் அங்கு வந்தது என்று ரடெக் கருத்திற் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது முடியாததாகும்; நம்பிக்கையிழந்த பேதைகள்தான் "ஜனநாயகத்தின்" அப்படிப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு சீனாவில் வரும் என்று எதிர்பார்க்க முடியும்

ஜனநாயக சர்வாதிகாரம் எமது நாட்டில் கெரென்ஸ்கிசத்தின் வடிவமைப்பில் அடையப்பட்டிருந்தால், லோயிட் ஜோர்ஜ் மற்றும் கிளெமென்சோவிற்கு எடுபிடியாக இருந்த கெரென்ஸ்கியின் மூலம் அடையப்பட்டிருந்தால், போல்ஷிவிசத்தின் மூலோபாய கோஷம் பற்றி கொடுமையான கேலிக்கூத்தை வரலாறு அளித்தது என்றுதான் கூறவேண்டும். அதிருஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. போல்ஷிவிக்கின் கோஷம் உண்மையில் அடையப்பட்டது; ஒரு வளர்ச்சிக் கூறுபாட்டுத் தன்மை முறையில் என்று இல்லாமல், மிகப் பெரிய வரலாற்று யதார்த்தம் என்ற முறையில் ஆகும். அக்டோபர் புரட்சிக்கு முன்னால் என்று இல்லாமல் அதற்குப் பின்னர்தான் அது அடையப்பட்டது. மார்க்சின் சொற்களில் விவசாயப் போர் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஆதரித்தது. இரண்டு வர்க்கங்களின் ஒத்துழைப்பு அக்டோபர் மாதம் மகத்தான அளவில் அடையப்பட்டது. அந்த நேரத்தில் அறியாமையில் இருந்த ஒவ்வொரு விவசாயியும் லெனினுடைய விளக்க உரைகள் இல்லாமல் கூட, போல்ஷிவிக்குகளின் கோஷத்திற்கு உயிரூட்டப்பட்டுவிட்டது என்று கிரகித்துக்கொண்டார் மற்றும் உணர்ந்து கொண்டார் லெனினே அக்டோபர் புரட்சியை - அதன் முதல் கட்டத்தை - ஜனநாயகப் புரட்சியை உண்மையாய் அடைதல் என்று மதிப்பீடு செய்தார்; சற்று மாறுபட்டிருந்தாலும் கூட, அதன் மூலமும் கூட போல்ஷவிக்குகளின் மூலோபாய சுலோகத்தின் உண்மையான மொத்த உருக்கொடுப்பு என்றும் கருதினார். லெனினுடைய முழுமையான படைப்பும் கவனமாக எண்ணிப்பார்க்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சற்றே கூடுதலான பார்வை கிடைக்கும் இடத்தில் இருந்து லெனின் நிகழ்வுகளை கணித்து மதிப்பீடு செய்ததை, அக்டோபருக்கு பின்னர் இருந்த நிலையில் இருந்து காணவேண்டும். இறுதியாக, லெனினை லெனின் வழியில் காணவேண்டுமே அன்றி இழிபாசாங்கினர்களது வகையில் பார்க்கக் கூடாது.

புரட்சியின் வர்க்கத் தன்மை பற்றிய பிரச்சினை, மற்றும் "மேலாய் வளர்ததல்" ஆகியவை லெனினால் (அக்டோபருக்குப் பின்னர்) கவுட்ஸ்கியின் நூலுக்கு எதிரான தன்னுடைய பகுப்பாய்வில் கொடுக்கப்பட்டது. அதில் இருந்து கூறப்படும் கீழேயுள்ள பத்திகள் பற்றி றடெக் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

"ஆம், எமது புரட்சி (அக்டோபர் புரட்சி LT) விவசாயிகளுடன் முற்றிலுமாக நாம் அணிவகுத்துச் செல்லும் வரையில் ஒரு முதலாளித்துவப் புரட்சிதான். இதை நாம் மிகத் தெளிவாகக் கண்டுள்ளோம். இதைப்பற்றி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தடவைகள் 1905ல் இருந்து கூறியிருக்கிறோம்; இந்த வரலாற்று வழிவகைக் கட்டத்தின் தேவையான கட்டத்தை நாம் தாவிக் குதிக்கவோ, ஆணைகள் மூலம் அகற்றிவிடவோ முயன்றதில்லை."

மேலும் :

"அவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று நாம் கூறியபடிதான் நிகழ்வுகள் இருந்தன. புரட்சியால் எடுக்கப்பட்ட போக்கு நம் ஆராயும் தன்மையின் சரியான நிலைப்பாட்டை காட்டியது. முதலில், முடியாட்சி, நிலப்பிரபுக்கள், இடைக்கால ஆட்சிமுறை ஆகியவற்றிற்கு எதிராக "ஒட்டுமொத்த" விவசாயிகள் தொகுப்பும் எழுச்சி செய்தது (அந்த அளவிற்கு புரட்சி முதலாளித்துவ, முதலாளித்துவ-ஜனநாயக வகையைக் கொண்டிருந்தது). இதற்குப் பின்னர் வறிய விவசாயிகள், அரைப் பாட்டாளி வர்க்கத்தினர், அனைத்து சுரண்டப்பட்டவர்களும் முதலாளித்துவத்திற்கு எதிராக, நகர்ப்புற பணக்காரர்கள், குலாக்குகள், இலாபம் சுரண்டுவோர் ஆகியோருக்கு எதிராக எழுச்சி அடைந்தனர்; அந்த அளவிற்கு புரட்சி ஒரு சோசலிச புரட்சி ஆயிற்று."

"எப்பொழுதாவது" அல்ல; எப்பொழுதும், அல்லது இன்னும் துல்லியமாக அநேகமாக -- புரட்சியை பற்றி, அக்டோபர் உட்பட, லெனின் ஒரு முடிவுற்ற, பொதுவான, நிறைவான மதிப்பீட்டைக் கொடுத்தபோது, இப்படித்தான் லெனின் கூறினார் "அவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று நாம் கூறியபடிதான் நிகழ்வுகள் நடந்தன". முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியினால் அடையப்பட்டது. கெரென்ஸ்கியின் காலத்திலா? இல்லை. அக்டோபருக்குப் பின்னர் முதல் கட்டத்தில். அது சரியா? ஆம், சரிதான். ஆனால் இப்பொழுது நமக்குத் தெரிந்துள்ளபடி, அது ஒரு ஜனநாயக சர்வாதிகார அமைப்பில் அடையப்படாமல், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற அமைப்பில் அடையப்பட்டது. அதையொட்டி பழைய குறியீட்டுக்கணித சூத்திரமுறையின் தேவையும் மறைந்துவிட்டது.

கமெனேவிற்கு எதிரான 1917ம் ஆண்டு லெனினின் நிபந்தனையுடன் கூடிய வாதமும், அக்டோபர் புரட்சி பற்றிய முடிவுரையாக கூறப்பட்ட பிந்தைய ஆண்டுகளின் லெனினிச வாதமும் திறனற்ற முறையில் எதிராக இருக்கின்றன என்று கூறினால், அதன் பொருள் ரஷ்யாவில் இரு ஜனநாயகப் புரட்சிகள் "அடையப்பட்டன" என்பதாகும். இது கூடுதலான பொருந்தாத் தன்மை உடையது ஆகும்; ஏனெனில் இரண்டாவது முதலில் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமேந்திய எழுச்சியால் பிரிக்கப்பட்டது ஆகும்.

இப்பொழுது பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும் என்னும் லெனினுடைய நூலில் இருக்கும் மேற்கோளை, என்னுடைய விளைவும் வாய்ப்புவளமும் நூலில் இருக்கும் பத்தியுடன் வேறுபடுத்திப் பார்க்கவும்; என்னுடையதில் முதல் அத்தியாயமான "பாட்டாளி வர்க்க ஆட்சி" என்பதில் சர்வாதிகாரத்தின் முதல் கட்டமும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

"நிலப்பிரபுத்துவ முறை ஒழிப்பு என்பது முழுச் சுமையையும் கொண்ட தொகுப்பான விவசாயிகள் அனைவருடைய ஆதரவையும் பெறும். கூடுதலான வருமானத்திற்கு கூடுதலான வரி என்பது பெரும்பாலான விவசாயிகளின் ஆதரவிற்கு உட்படும். ஆனால் விவசாய பாட்டாளி வர்க்கத்தை பாதுகாப்பதற்காக எந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும், அது பெரும்பான்மையின் தீவிர ஆதரவைப் பெறாது என்பதுடன் விவசாயிகளின் சிறுபான்மையினரின் தீவிர எதிர்ப்பையும் எதிர்கொள்ளும்.

"பாட்டாளி வர்க்கம் கிராமங்களிலும் தன்னுடைய வர்க்கப் போராட்டத்தை தொடரும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்படும்; இவ்விதத்தில் அனைத்து விவசாயிகளிடத்திலும் ஐயத்திற்கு இடமின்றி இருக்கும் சமூக நலன்களை அழிக்கவும் நேரிடும்; ஒரு குறுகிய வரம்பிற்கு உட்பட்டுத்தான் என்றாலும், நிலைமை இப்படித்தான் இருக்கும். அதிகாரத்தை எடுத்துக் கொண்ட முதல் கணத்தில் இருந்தே, பாட்டாளி வர்க்கம் கிராம ஏழைகள், கிராம பணக்காரர்கள் ஆகியோருக்கு இருக்கும் விரோதப் போக்கில் இருந்து ஆதரவைத் திரட்ட வேண்டும்; அதேபோல விவசாய பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாய முதலாளித்துவத்தினருக்கும் இடையே இருக்கும் விரோதப் போக்கில் இருந்தும் ஆதரவைத் திரட்ட வேண்டும்." (Our Revolution, 1906)

எனது பங்கில் நான் விவசாயிகளை "புறக்கணிக்கிறேன்" என்பதும் லெனினது மற்றும் எனது, இரு நிலைப்பாடுகளுக்கிடையிலான முழு "விரோதப் போக்கு" என்பதும், ஆகிய இத்தோற்ற ஒற்றுமைகள் எவ்வளவு அற்பமானவை!

கையாளப்பட்ட லெனினுடைய மேற்கோள் அவருடைய படைப்புக்களில் தனித்து நிற்கவில்லை. மாறாக, மிகச் சிறப்பாக நிகழ்வுகளை எடுத்துக் காட்டும் புதிய சூத்திரம், மற்ற லெனின் எழுத்துக்களை போலவே, அவருடைய உரைகள், கட்டுரைகள் என்று முழுக் காலத்திற்கும் அச்சாணியாக விளங்குகின்றது. மார்ச் 1919ல் லெனின் கூறினார்:

"அக்டோபர் 1917ல் நாம் விவசாயிகள் அனைவருடனும் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றினோம். இது ஒரு முதலாளித்துவப் புரட்சி; ஏனெனில் கிராமப் புறங்களில் வர்க்கப் போராட்டம் என்பது வளர்ச்சியுற்றிருக்கவில்லை."

மார்ச் 1919 ல் கட்சி மாநாட்டில் லெனின் பின்வருவனவற்றை கூறினார்:

"விவசாயிகளின் உதவியுடன் அதிகாரத்தை கைப்பற்றும் கட்டாயத்தில் பாட்டாளி வர்க்கம் உள்ள நாட்டில், ஒரு குட்டி முதலாளித்துவ புரட்சியின் முகவராக பாட்டாளி வர்க்கம் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் நாட்டில், ஏழை விவசாயிகளின் அமைப்பு ஏற்படுத்தப்படும் வரை, அதாவது 1918 கோடை, ஏன் இலையுதிர்காலம் வரையில்கூட, எமது புரட்சி பெருமளவிற்கு ஒரு பூர்ஷ்வா புரட்சியாகத்தான் இருந்தது."

இச்சொற்கள் அடிக்கடி லெனினால் வெவ்வேறுவித சந்தர்ப்பங்களில் சற்று வேறுபாடுகளுடன்கூட உரைக்கப்பெற்றன. விவாதத்திலேயே முடிவுரையாக இருக்கும் லெனினின் இந்த மையக் கருத்தை ரடெக்கோ தவிர்க்கிறார்.

விவசாயிகளுடன் இணைந்து பாட்டாளி வர்க்கம் அக்டோபரில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டது என்று லெனின் கூறுகிறார். அதோடு மட்டுமே, புரட்சியானது ஒரு முதலாளித்துவ புரட்சியாகும். இது சரியா? ஒரு அர்த்தத்தில் சரியே. ஆனால் இதன் பொருள் உண்மையான பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம், அதாவது சர்வாதிகாரத்தையும், நில அடிமை முறையையும் உண்மையில் அழித்து, நிலப்பிரபுக்களிடம் இருந்து நிலத்தை பறித்தது என்பது அக்டோபருக்கு முன்னால் சாதிக்கப்பட்டது என்றில்லாமல், அக்டோபருக்கு பின்னர் சாதிக்கப்பட்டது என்பதேயாகும். மார்க்சின் சொற்களப் பயப்படுத்துவதெனில், விவசாயப் போரினால் ஆதரிக்கப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வடிவத்தில் - இது சாதிக்கப்பட்டது; அதன் பின்னர், சில மாதங்களுக்கு பின்னர், இது ஒரு சோசலிச சர்வாதிகாரமாக வளரத் தொடங்கியது. இதைப் புரிந்து கொள்ளுவது கடினமா? இன்று இந்நிலை பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாமா?

ரடெக்குடைய கருத்தின்படி, "நிரந்தர" தத்துவம் முதலாளித்துவ கட்டத்தை சோசலிச கட்டத்துடன் கூட்டாக இணைத்ததின் மூலம் பெரும் தவறை இழைத்துள்ளது என்பதாகும். ஆனால் உண்மையில் வர்க்க இயக்கவியல் என்பதுதான் முற்றிலும் "கூட்டாக இணைக்கப்பட்டுள்ளது"; அதவது இரு கட்டங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டன; இந்த நூலிழைகளைக்கூட எமது துரதிருஷ்டவச இயல்கடந்த உளப்பாங்கினர் காணும் நிலையில் இல்லை.

விளைவுகளும் வாய்ப்பு வளங்களும் என்பதில் பல விடுபடுதல்களும், பிழையான வாதங்களும் உறுதியாக இருக்கக்கூடும். இந்த நூல் 1928ல் எழுதப்படவில்லை, அக்டோபருக்கும் முன்பு, அக்டோபர் 1905க்கும் முன்பு என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் இருக்கும் விடுபடுதல்கள், இன்னும் சரியாகக் கூறவேண்டும் என்றால் அந்நேரத்தில் இத்தத்துவத்திற்கான அடிப்படை வாதங்கள் ரடெக்கினால் தொடக்கூடப்படவில்லை; ஏனெனில் அவருடைய ஆசிரியர்களான இழிபாசாங்கினர்களை பின்றபற்றி அவர் விடுபடுதல்களை தாக்காமல், தத்துவத்தின் வலிமையான பக்கங்களை தாக்குகிறார்; அவையோ வரலாற்று வளர்ச்சிப் போக்கினால் உறுதிசெய்யப்பட்டவை, லெனினுடைய சூத்திரங்களில் இருந்து முற்றிலும் தவறான முடிவுரைகளை எடுத்துக் கொண்டு அவற்றை தாக்குகிறார்; இவற்றை ரடெக் முழுமையாக படித்ததில்லை அல்லது இறுதிவரை நன்கு சிந்தித்ததும் இல்லைப்போலும்.

பழைய மேற்கோள்களுடன் செப்படிவித்தைகள் செய்வது என்பது இழிபாசாங்கினர்கள் பள்ளியில் முழுமையாக, ஒரு சிறப்பு வகையிலேயே கையாளப்படுகிறது; இது உண்மையான வரலாற்று வழிவகையுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் "ட்ரொட்ஸ்கிசத்தின்" எதிர்ப்பாளர்கள் அக்டோபர் புரட்சியின் உண்மையான வளர்ச்சிப் பகுப்பாய்வை காண்பதற்கு தீவிரமாக, நேர்மையுடன் செயல்பட்டால் ---அவ்வப்பொழுது ஒரு சிலர் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிகிறது-- தாங்கள் நிராகரிக்கும் தத்துவத்தின் உணர்வில் இருக்கும் சூத்திரங்களைத்தான் தவிர்க்க முடியாமல் அடைவர். அக்டோபர் புரட்சி பற்றி A. Yakovlev  எழுதியுள்ள படைப்புக்களில் இதற்கு உறுதியான சான்றுகளை காண்கிறோம். இந்த ஆசிரியரால் பழைய ரஷ்யாவில் இருந்த வர்க்க உறவுகள் நிர்ணயித்துக் கூறப்படுகின்றன; இன்று அவை ஆளும் பிரிவிற்கு பெரும் துணையாக உள்ளது; மற்ற ஸ்ராலினிஸ்டுகளை விட அறிவுச் செறிவு காணப்படுகிறது; ஸ்ராலினையும் விட குறிப்பாக; அது கூறுவதாவது:

"விவசாயிகள் எழுச்சியில் (1917 மார்ச் இல் இருந்து அக்டோபர் வரை), நாம் இருவித வரம்புகளை காண்கிறோம். ஒரு விவசாயிகள் போர் என்ற அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டாலும், எழுச்சி தன்னுடைய வரம்புகளை கடக்கவில்லை; அதனுடைய உடனடிப் பணியான அண்டையில் இருக்கும் நிலச்சொந்தக்காரரை அழித்தல், தன்னை ஒரு புரட்சிகர இயக்கமாக அமைத்துக் கொள்ளும் வகையில் மாறுதல், ஆகியவற்றின் அழுத்தத்தில் நசுங்கிவிடவில்லை; ஒரு விவசாயிகள் இயக்கத்தை வேறுபடுத்திக் காட்டும் அடிப்படை திடீர் கிளர்ச்சி பண்பைக் கடந்து அது செல்லவில்லை.

"அதை மட்டும் தனியாக ஆராய்ந்தால், அண்டை நிலச்சுவான்தாரை அழித்துவிடும் நோக்கத்தை மட்டுமே வரம்பாக கொண்டிருந்த அடிப்படை எழுச்சி வெற்றி பெற முடியவில்லை; நிலச்சுவாந்தரை ஆதரித்த, விவசாயிகளுக்கு விரோதமாக இருந்த அரசாங்க அதிகாரத்தை அழிக்க முடியவில்லை. எனவேதான் இதையொத்துள்ள நகர வர்க்கத்தினால் வழிநடத்தப்பட்டால்தான் விவசாயிகள் இயக்கம் வெற்றி பெற முடியும் ... இறுதிப்பகுப்பாய்வில், விவசாயப் புரட்சியின் விதி பல்லாயிரக்கணக்கான கிராமங்களினால் என்று இல்லாமல் சில நூற்றுக்கணக்கான சிறு நகரங்களால் நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் மையங்களில் முதலாளித்துவத்திற்கு மரண அடி கொடுத்துக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கம்தான் விவசாயிகள் எழுச்சிக்கு ஒரு வெற்றியைக் கொண்டுவர முடியும். நகரத்தில் தொழிலாள வர்க்கத்தின் வெற்றி ஒன்றுதான் பல மில்லியன் விவசாயிகள் பல ஆயிரம் நிலச்சுவான்தாரர்களுடன் கொள்ளும் அடிப்படை மோதலின் வரம்புகளில் இருந்து விவசாயிகள் இயக்கத்தை கிழித்தெடுக்க முடியும்; இறுதியாக, தொழிலாள வர்க்கத்தின் வெற்றி ஒன்றுதான் ஒரு புதிய வகையிலான, ஏழை, மத்தியதர விவசாயிகள் தொகுப்பை பூர்ஷ்வாக்களுடன் என்றில்லாமல் தொழிலாள வர்க்கத்துடன் இணைத்த வகையில், விவசாயிகள் அமைப்பிற்கு அடித்தளங்களை கொடுக்க முடியும். விவசாயிகளது எழுச்சியின் வெற்றி பற்றிய பிரச்சினையானது நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வெற்றி பற்றிய பிரச்சினையாக இருந்தது.

"முதலாளித்துவ அரசாங்கத்திற்கு உறுதியான தாக்குதலை அக்டோபரில் தொழிலாளர்கள் கொடுத்தபோது, அவர்கள் விவசாயிகள் எழுச்சியின் வெற்றிக்கு குறுக்கே இருந்த தடையை தீர்த்துவைத்தனர்."

மேலும்:

"... இந்த விஷயத்தின் முழு சாராம்சமும் இதுதான்; வரலாற்று அடிப்படையில் வந்துள்ள சூழ்நிலையில் 1917ல் முதலாளித்துவ ரஷ்யா நிலச்சுவான்தார்களுடன் ஓர் உடன்பாட்டை கொண்டது. மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் போன்ற மிகத் தீவிர முதலாளித்துவ இடது கன்னைகள் கூட நிலச்சுவான்தாதர்களுடன் சாதகமான உடன்பாட்டை தாண்டிப் போகவில்லை. அங்குதான் ரஷ்ய புரட்சிக்கும், நூறு ஆண்டுகளுக்கும் முன்பு நடந்திருந்த பிரெஞ்சு புரட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு உள்ளது. ...விவசாயப் புரட்சி 1917ம் ஆண்டு ஒரு முதலாளித்துவப் புரட்சியாக வெற்றி பெற முடியவில்லை. (மிகச்சரியே! L.T.) அதற்கு இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று முதலாளித்துவத்தின் மற்றும் நிலச்சுவாந்தர்களுடைய தாக்குதல்களில் இருந்து தோல்வி அல்லது பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் சேர்ந்து நின்று அதற்குத்துணை நின்ற இயக்கம் என்ற வகையில் வெற்றியைக் காணுதல். மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்த முதலாளித்துவத்தின் பணியை எடுத்துக் கொண்ட அளவில், விவசாய ஜனநாயகப் புரட்சிக்கு தலைமைவகிக்கும் பணியை எடுத்துக் கொண்ட வகையில், ரஷ்யாவின் தொழிலாள வர்க்கம் ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியை சாதிக்கும் வாய்ப்பை செயல்படுத்தியது. (The Peasant Movement in 1917, State Publishing House, 1927).

யாகோவ்லெவின் வாதங்களில் அடிப்படைக் கூறுபாடுகள் எவை? விவசாயிகள் தொகுப்பு ஒரு சுயாதீனமான அரசியல் பங்கை செலுத்தும் திறனற்றது என்பதாகும்; இதையொட்டி ஒரு நகர்ப்புற வர்க்கம் தவிர்க்க முடியாமல் வழிநடத்தும் பொறுப்பை எடுத்துக் கொள்ளுவது ஆகும்; ரஷ்ய முதலாளித்துவம் விவசாய புரட்சியில் தலைமைப் பங்கே ஏற்றுக் கொள்ள இயலாத நிலையாகும்; அதையொட்டி தவிர்க்க முடியாமல் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பங்கு ஏற்படுதல்; விவசாய புரட்சியின் தலைவனாக அதன் அதிகாரக் கைப்பற்றல்; இறுதியாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்; இது விவசாயிகள் போரில் தன் ஆதரவை நிலைநிறுத்திக் கொண்டு, சோசலிசப் புரட்சி சகாப்தத்திற்கான வழியைத் திறக்கிறது. இது புரட்சியின் "முதலாளித்துவ" அல்லது "சோசலிச" பண்பு பற்றிய பிரச்சினை இயல்கடந்தநிலை வகையில் எழுப்பப்படுவதின் வேர்களை அழித்து விடுகின்றது. விஷயத்தின் சாரம்சம், முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படையை கொண்டிருக்கும் விவசாயப் பிரச்சினை, முதலாளித்துவ ஆட்சியின் கீழ் தீர்க்கப்பட முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் விவசாயிகளின் ஜனநாயகப் புரட்சி முடிவிற்கு வந்தபின் தோன்றியது என்று இல்லாமல், பிந்தையது சாதிக்கப்படுவதற்கு தேவையான முன்நிபந்தனை என்ற முறையில் தோன்றியது. சுருங்கக் கூறின், யாகோலெவின் இந்த நிகழ்வுகளை பிற்காலத்தில் இருந்து பார்க்கும் வகையில், 1905ம் ஆண்டு என்னால் இயற்றப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அனைத்து அடிப்படைக் கூறுபாடுகளும் உள்ளன. என்னை பொறுத்தவரையில் பிரச்சினை ஒரு வரலாற்று வகையில் முன்னோக்கி அறிதல் என்று இருந்தது; ஏராளமான இளைய ஆராய்ச்சியாளர்களின் ஆரம்ப ஆய்வை அடிப்படையாக கொண்டு யாகோவ்லெவ் முதல் புரட்சிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் அக்டோபர் புரட்சிக்கு பத்து ஆண்டுகளுக்கு பின்னரும் மூன்று புரட்சிகளின் ஐந்தொகையை கொடுக்கிறார். அதற்குப் பின்னும் என்ன கூறுகிறார்? 1905ம் ஆண்டு நான் இயற்றிய சூத்திரங்களை கிட்டத்தட்ட அப்படியே யாகோவ்லெவ் திருப்பிக் கூறுகிறார்.

நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டிற்கு யாகோவ்லெவின் அணுகுமுறை என்ன? தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொண்டு, முடிந்தால் இன்னும் உயர்ந்த பதவியை அடையவேண்டும் என்று கருதும் ஒவ்வொரு ஸ்ராலினிச அதிகாரியுடைய அணுகுமுறைதான் அவருடையது. ஆனால் இந்த விஷயத்தில் அக்டோபர் புரட்சியின் உந்து சக்திகளின் மதிப்பீட்டை "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டத்துடன் எவ்வாறு சமன்படுத்திக் காண்கிறார்? மிக எளிதாக: அத்தகைய சமரசம் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. டார்வினுடைய கோட்பாட்டை ஒப்புக் கொண்டு அதே நேரத்தில் சமயவழிபாட்டுச் சடங்கில் முறையாக பங்கு பெற்ற சில தாராளவாத ஜாரிச அதிகாரிகள் போலவே, யாகோவ்லெவ் மார்க்சிச கருத்துக்களை அவ்வப்பொழுது வெளியிடும் உரிமையை, நிரந்தரப் புரட்சியை சடங்கு போல் தாக்கும் தன்மையில் பங்கு பெறுவதின் மூலம் விலைகொடுத்து பெறுகிறார். இத்தகைய உதாரணங்கள் டஜன் கணக்கில் கொடுக்கப்பட முடியும்.

அக்டோபர் புரட்சி பற்றி மேலே மேற்கோளிடப்பட்டுள்ள நூலை யாகோவ்லெவ் தன்னுடைய சொந்த ஆரம்ப முயற்சியில் முடிக்கவில்லை, மத்தியக் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் அது நிகழ்ந்தது என்பதும் கூறப்பட வேண்டும். அதே நேரத்தில் அக்குழு யாகோவ்லெவின் படைப்பை பதிப்பு செய்யும் பொறுப்பையும் கொடுத்தது. [1] அந்த நேரத்தில் லெனின் குணம் அடைந்துவிடுவார் என்று இன்னமும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது; இந்த இழிபாசாங்கினர் எவருக்கும் நிரந்தரப் புரட்சி பற்றிய ஒரு செயற்கையான பூசலைக் கிளறவேண்டும் என்று தோன்றவில்லை. எப்படி இருந்தாலும், என்னுடைய முந்தைய அதிகாரத்தின் அடிப்படையில், இன்னும் சரியாகக் கூறவேண்டும் என்றால், அக்டோபர் புரட்சியின் உத்தியோகபூர்வ வரலாற்றின் ஆசிரியர் என்னும் முறையில், அனைத்து பிரச்சினையான கேள்விகளிலும் அந்த ஆசிரியர், நனவுடனோ அல்லது நனவற்றமுறையிலோ நிரந்தரப் புரட்சி பற்றிய என்னுடைய தடைசெய்யப்பட்ட, ஒதுக்கப்பட்ட நூலில் இருந்து பல எழுத்துச்சூத்திரங்களை பயன்படுத்திக் கொண்டார் என்பதை முழுமையாகக் கூறுவேன். (Results and Prospects)

"நிரந்தரம்" மற்றும் லெனினுடையது, ஆகிய இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடு பற்றி லெனின் உறுதியாக சுட்டிக்காட்டுகின்ற போல்ஷிவிக் கோஷத்தின் வரலாற்று விதியின் சூதற்ற மதிப்பீடு இரண்டாம் நிலை மற்றும் குறைந்த முக்கியத்துவத்தை கொண்டிருந்தது, இருந்தபோதிலும், அவற்றை ஐக்கியப்படுத்தியது மிகவும் அடிப்படையானதாகும். இரு பிரிவுகளுடைய இந்த அடிப்படை, அக்டோபர் புரட்சியில் முழுமையாக இணைந்தன; ஆனால் பெப்ரவரி-மார்ச் என்னும் ஸ்ராலினுடைய வழிவகையுடன் மட்டுமல்லாமல் ஏப்ரல்-அக்டோபர் வழி என்னும் கமெனேவ், ரிகோவ் மற்றும் சினோவியேவ் வழியுடனும், ஸ்ராலின், புக்காரின் மற்றும் மார்ட்டினோவின் முழு சீனக் கொள்கையுடன் மட்டும் அல்லாமல், ரடெக்கின் தற்போதைய "சீன" வழி நிலைப்பாட்டுடனும் சமரசத்திற்கு இடமில்லாத விரோதப் போக்கைக் கொண்டுள்ளது.

1925க்கும் 1928ன் இரண்டாம் பகுதிக்கும் இடையே மிகவும் தீவிரமாக தன்னுடைய மதிப்பீட்டை மாற்றிக் கொண்ட ரடெக் "மார்க்சிசம் மற்றும் லெனினிசம் பற்றிய சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளை" புரிந்து கொள்ள முடியாதவர் என்று என்னைக் குற்றம் சாட்டும்போது, நான் கூறமுடியும்: விளைவுகளும் வாய்ப்புவளமும்- இல் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் வளர்த்தெடுத்த அடிப்படைச் சிந்தனை தொகுப்பு பின்னர் நடந்த நிகழ்வுகளினால் முற்றிலும் சரியென உறுதிபடுத்தப்பட்டது; அதனால்தான் துல்லியமாக அது போல்ஷவிசத்தின் மூலோபாய வழியுடன் முற்றிலும் இயைந்து உள்ளது.

அதிலும் குறிப்பாக என்னுடைய 1905ம் ஆண்டு நூலின் முன்னுரையில் நிரந்தரப் புரட்சி பற்றி 1922ல் நான் கூறியுள்ளதை திரும்பப் பெறுவதற்கு எந்தச் சிறு காரணம் கூட இல்லை என்றுதான் உணர்கிறேன். கட்சி முழுவதும் அதைப் படித்து, ஆய்ந்துள்ளது; கணக்கிலடங்கா பதிப்புக்கள், மறுபதிப்புக்கள் லெனின் உயிரோடு இருக்கும்போதே வெளிவந்தன; இது 1924 இலையுதிர்காலத்தில்தான் கமெனேவிற்கு "உளைச்சலை" கொடுத்தது; 1928ல் முதல்தடவையாக ரடெக்கிற்கு உளைச்சலை கொடுத்தது.

"துல்லியமாக ஜனவரி 9ல் இருந்து அக்டோபர் வேலைநிறுத்தம் வரை (முன்னுரையில் கூறப்பட்டிருப்பது) இவ்வாசிரியர் இக்கருத்துக்களை இயற்றினார்; பின்னர் இவை "நிரந்தரப் புரட்சி தத்துவம்" என்ற பெயரைப் பெற்றன. முதலாளித்துவ கடமைகளால் நேரடியாக எதிர்கொள்ளப்பட்ட ரஷ்ய புரட்சி எவ்விதத்திலும் அவற்றை நிறுத்த முடியாது என்ற கருத்தை இப்படிப்பட்ட அசாதாரணமான பெயர் வெளிப்படுத்தும். பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தில் இருத்தாமல், புரட்சியானது தன்னுடைய உடனடி முதலாளித்துவ கடமைகளை தீர்க்க முடியாது....

"இந்த மதிப்பீடு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் என்றாலும், மிகவும் சரியானது, என்று உறுதி செய்யப்பட்டது. ரஷ்ய புரட்சி ஒரு முதலாளித்துவ-ஜனநாயக ஆட்சியுடன் முடிவிற்கு வரமுடியாதது ஆகும். அது அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றவேண்டியிருந்தது 1905ம் ஆண்டில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற மிகவும் வலுவற்று இருந்தது என்றால், முதலாளித்துவ ஜனநாயக குடியரசில் அல்லாமல் மூன்றாம்-ஜூன் ஜாரிசத்தின் சட்டவிரோத தன்மையிலேதான் அது பக்குவம் அடைந்து, வலிமையாக வளர வேண்டியிருந்தது.'" (L.Trotsky The Year 1905, foreword)

இதையும் தவிர "ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற கோஷத்தில் நான் தெரிவித்த மிகக்கூர்மையான தர்க்க மதிப்பீடுகளுள் ஒன்றையும் மேற்கோளிட விரும்புகிறேன். 1909ம் ஆண்டு ரோசா லுக்சம்பேர்க்கின் போலிஷ் இதழில் எழுதினேன்:

"மென்ஷிவிக்குகள் 'எமது புரட்சி ஒரு முதலாளித்துவப் புரட்சிஎன்ற அருவமான கருத்தில் இருந்து தொடங்கி, பாட்டாளி வர்க்கத்தின் முழு தந்திரோபாயத்தையும் தாராள முதலாளித்துவ முறையில் ஏற்கும் கருத்திற்கு வந்தவுடன், அரசு அதிகாரத்தை கைப்பற்றும் வரை, போல்ஷிவிக்குகள் அதே வெறுமையான அருவமான கருத்தான ஜனநாயகம், ஆனால் சோசலிசமற்ற சர்வாதிகாரம்என்ற நிலையில் இருந்து பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கொள்ளும்போது முதலாளித்துவ ஜனநாயக சுய வரம்புடன் இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு வரும். இவர்களுக்கு இடையே இப்பிரச்சினையில் இருந்த வேறுபாடு நிச்சயமாக முக்கியமானதுதான்; மென்ஷிவிசத்தின் புரட்சி எதிர்ப்பு பக்கங்கள் ஏற்கனவே முழு அளவில் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், போல்ஷிவிசத்தின் புரட்சி எதிர்ப்பு கூறுபாடுகள் புரட்சி வெற்றி அடைந்தால் பெரும் ஆபத்தை கொடுக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன."

ஆண்டு 1905 என்ற என்னுடைய நூலின் ரஷ்ய பதிப்பில் மறுபடியும் வந்த இப்பத்தியில், ஜனவரி 1922ல் நான் கீழ்க்கண்ட குறிப்பையும் கூறினேன்:

"அனைவரும் நன்கு அறிந்துள்ளபடி, இது நடக்கவில்லை; ஏனெனில் லெனினுடைய தலைமையின் கீழ் (உட்கட்சி போராட்டம் இல்லாமலில்லை எனினும்), போல்ஷிவிசம் அதன் கருத்தியல் மறுஆயுதபாணியாக்கலை 1917 வசந்த காலத்தில் மிக முக்கியமான பிரச்சினையில், அதாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன் நிறைவேற்றியது."

1924ம் ஆண்டில் இருந்து இந்த இரு மேற்கோள்களும் மிகக் கடுமையான குறைகூறல்களுக்கு உட்பட்டுள்ளன. இப்பொழுது நான்கு ஆண்டுகள் காலதாமதத்திற்கு பின்னர், ரடெக்கும் இக்குறைகூறலில் சேர்ந்துள்ளார் ஆயினும் ஒருவர் நேர்மையான முறையில் மேற்கூறிய வரிகளை சிந்தித்தால், அவை மிக முக்கியமான முன்கணிப்பை கொண்டிருந்ததுடன் முக்கியமான எச்சரிக்கையையும் கொண்டிருந்தது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். பெப்ரவரி புரட்சியின் கணத்தில் போல்ஷிவிக்குளின் "பழைய காவலர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை சோசலிச சர்வாதிகாரத்துக்கு எதிரிடையாக்கும் நிலைப்பாட்டை கொண்டனர். லெனினுடைய குறியீட்டுக்கணித சூத்திரத்தில் இருந்து அவருக்கு நெருக்கமான சீடர்கள் முற்றிலும் இயல்கடந்த கட்டமைப்புக் கருத்துக்களை இயற்றி அதை உண்மையான புரட்சியின் வளர்ச்சிக்கு எதிராக இயக்கினர். மிக முக்கியமான வரலாற்று திருப்புமுனைக் காலத்தில், ரஷ்யாவில் இருந்த போல்ஷிவிக்கின் உயர்மட்ட தலைமை ஒரு பிற்போக்கான நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது; லெனின் மட்டும் மிகச் சரியான நேரத்தில் வந்திருக்கவில்லை என்றால் அக்டோபர் புரட்சியை ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு என்ற கோஷத்தில், பின்பு சீனப் புரட்சியை குத்தியது போல், கத்தியால் குத்திக் கிழித்திருப்பர். மிகவும் பக்தியுடன்கூட ரடெக் இந்த முக்கிய கட்சி அடுக்கின் தவறான நிலைப்பாட்டை "ஒரு தற்செயல் விபத்து" என்று விளக்குகிறார். ஆனால் மாமெனைவ், சினோவியேவ், ஸ்ராலின், மோலோடோவ், ரிகோவ், நோகின், மில்யூடின், கிரெஸ்ட்துஸ்கி, ப்ரூன்ஜ், யாரோஸ்லாவ்ஸிகி, ஓர்ட்ஜோநிகிட்ஜே, ப்ரெயோப்ராஷென்ஸ்கி, ஸ்மிலா இன்னும் ஒரு டஜனுக்கும் மேலான "பழைய போல்ஷிவிக்குள்" உடைய இழிந்த ஜனநாயக நிலைப்பாடு பற்றிய மார்க்சிச விளக்கம் என்பதை தவிர அதற்கு வேறு மதிப்பு கிடையாது. பழைய, குறியீட்டுக் கணித போல்ஷிவிக் சூத்திரம் சில ஆபத்துக்களை தன்னகத்தே கொண்டிருந்தது என்பதை ஒப்புக் கொள்ளுவது இன்னும் சரியாக இருக்காதா? ஒரு குழப்பமான புரட்சிகர சூத்திரத்துடன் எப்பொழுதும் நடப்பது போல் அரசியல் வளர்ச்சி அதைப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு குரோதமான பொருளுரையுடன் இட்டு நிரப்பியது. லெனின் ரஷ்யாவில் இருந்து, கட்சியின் வளர்ச்சியை அன்றாடம், குறிப்பாக போர்க்காலத்தில் கவனித்திருந்தால், தக்க திருத்தங்கள், தெளிவுகள் ஆகியவற்றை சரியான நேரங்களில் அளித்திருப்பார் என்பதற்கு சான்று தேவையில்லை. புரட்சியின் அதிருஷ்டம் அவர் சற்று முன்னரே, காலதாமதம் ஆனாலும்கூட, தேவையான கருத்தியல் மறு ஆயுதபாணியாக்கலை மேற்கொள்ள வந்துவிட்டார். தலைமையிலுள்ளோரின் எதிர்ப்பு இருந்தபோதிலும், கட்சியின் உயர்மட்ட தலைமைக்கு எதிரான போராட்டத்தில், போல்ஷிவிக்குகளின் முந்தைய முழு பணியினாலும் தயார் செய்யப்பட்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் வர்க்க உள்ளுணர்வு மற்றும் கட்சியின் கீழ்மட்ட அங்கத்தவர்களுடைய புரட்சிகர அழுத்தங்களும், கட்சியின் கொள்கையை ஒரு புதிய பாதையில் திருப்புவதை லெனின் சாத்தியமாக்குவதற்கு போதுமான நேரத்தை அளித்தது.

சீனா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு, இன்று 1905ம் ஆண்டு லெனினின் சூத்திரத்தை அதன் குறியீட்டுக்கணித வடிவில், அதாவது அனைத்து தெளிவற்ற தன்மையுடனும் நாம் கட்டாயம் ஏற்க வேண்டும், இச்சூத்திரத்தை ஒரு குட்டி முதலாளித்துவ தேசிய ஜனநாயக பொருளுரை மூலம் இட்டு நிரப்ப சீன இந்திய ஸ்ராலின்கள், ரிகோவ்கள் (Tang Pinf-shan, Roy  மற்றும் ஏனையவர்கள்) ஆகியோரிடம் கட்டாயம் விட்டுவிட வேண்டும், அதன் பின் ஏப்ரல் 4ல் அவசியமான திருத்தங்களை செய்வதற்குப் பொறுப்பெடுக்க உரிய காலத்தில் ஒரு லெனின் தோன்றுவதற்கு காத்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உண்மையில் ஊற்றெடுக்கவில்லை? அத்தகைய திருத்தச் செயற்பாடுகள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உறுதியளிக்குமா? இந்தச் சூத்திரத்தில் குறிப்பிட்ட தேவையான திருத்தங்கள், ரஷ்யா மற்றும் சீன இரண்டிலும் வரலாற்று அனுபவங்களால் விளக்கிக்காட்டப்பட்டிருக்கும் தேவையான அத்திருத்தங்களை இச்சூத்திரத்தில் அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமாக இருக்காதா?

பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்னும் கோஷம் வெறும் "தவறுதான்" என்று புரிந்துகொள்ளப்படும் என்பதை மேலே கூறியுள்ளது பொருள் கொடுக்குமா? நாம் அனைவரும் அறிந்துள்ளபடி மனிதனின் சிந்தனைகள் செயல்கள் ஆகியவை இரு பிரிவுகளில் பிரிக்கப்படலாம்; முற்றிலும் சரியானவை, அதாவது "பொது வழியில்" உள்ளவை; மற்றும் முற்றிலும் தவறானவை, அதாவது அந்த வழியில் இருந்து பிறழ்ந்து நிற்பவை. ஆனால் எது முற்றிலும் சரியானது என்று இன்று கூறப்படுவது நாளை முற்றிலும் தவறானது என்று அறிவிக்கப்படுவதை இது தடை செய்யாது என்பது உண்மையே. ஆனால் "பொது வழி" வெளிப்படுவதற்கு முன்பு சிந்தனைகளின் உண்மையான வளர்ச்சி, உண்மைக்கு மிக அருகாமையில் செல்லும் தொடர்ந்த தோராயங்களையும் அறிந்திருந்தது. கணக்கில் எளிமையான வகுத்தலில்கூட எண்கள் தேர்ந்தெடுப்பில் பரிசோதனை தேவையாகும்: பெரிய அல்லது சிறிய எண்களுடன் தொடங்கி, சோதிக்கும் வகையில் ஒன்றைத்தவிர மற்றதை நிராகரிக்கிறோம். பீரங்கி இலக்கை நிர்ணயிப்பதில் தொடர்ச்சியாக அருகில் தோராயமாக செலுத்தும் வழிவகைச் சோதனை " Bracketing" என்று அறியப்படுகிறது. அரசியலிலும் கூட தோராயப்படுத்தல் வழிமுறை முற்றிலும் தவிர்த்தல் கூடாது. உரிய நேரத்தில் இழப்பு என்பது இழப்பு என்று அறியப்படவேண்டும் என்பதுதான் முக்கிய கருத்து; அவசியமான திருத்தங்கள் தாமதமின்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

லெனினுடைய சூத்திரத்தின் பெரும் வரலாற்று முக்கியத்துவமானது, ஒரு புதிய வரலாற்றுச் சகாப்த சூழ்நிலையில், மிக முக்கியமான தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளை, குறிப்பிட்டுச்சொல்வதானால் குட்டி முதலாளித்துவத்தின் பல பிரிவுகளால், எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயியால் அரசியல் சுயாதீனம் எந்த அளவிற்கு அடையப்பட முடியம் என்ற பிரச்சினையை நன்கு ஆய்ந்தது என்ற உண்மையில் அமைந்துள்ளது. அதன் முழுமையான தன்மையினால்தான் 1905-17 போல்ஷிவிக் அனுபவம் உறுதியான முறையில் "ஜனநாயக சர்வாதிகாரத்திற்கு" எதிராக தன் கதவுகளை அடைத்து வைத்தது. தன்னுடைய கையினாலேயே லெனின் கதவில் எழுதினார்; "உள்ளே அனுமதியில்லை -- வெளியே செல்ல முடியாது." இதை இச் சொற்களில் அவர் வெளிப்படுத்தினார்: விவசாயிகள் ஒன்றில் முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் சென்றாக வேண்டும் அல்லது தொழிலாளருடன் சென்றாகவேண்டும். ஆனால் இழிபாசாங்கினர் இந்த முடிவுரையை முற்றிலும் புறக்கணித்தனர்; பழைய போல்ஷிவிசத்தின் சூத்திரம் இதற்குத்தான் இட்டுச் சென்றிருந்தது; இந்த முடிவிற்கு மாறாக அவர்கள் ஒரு புதிய இடைக்கால முன்கருத்தை கொண்டனர்; அதை தம் திட்டத்திலும் சேர்த்துக் கொண்டனர். இதில்தான், பொதுவாகக் கூறவேண்டும் என்றால் இழிபாசாங்கினருடைய சாராம்சம் இருந்தது.

Notes

1. Excerpt from the minutes of the session of the Organization Bureau of the Central Committee of May 22, 1922, No. 21 : ‘To instruct Comrade Yakovlev ... to compile a textbook on the history of the October Revolution under the editorial supervision of Comrade Trotsky.’—L.T. [RETURN TO TEXT]

 

 
 
©World Socialist Web Site
All rights reserved