Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சி
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சி

21. முதலாளித்துவத்தின் பிரமாண்டமான உலகளாவிய விரிவாக்கத்திற்கு அரசியல் அடித்தளத்தை வழங்கிய ஏகாதிபத்தியத்தின் போருக்குப் பிந்தைய சமநிலை உடைந்து நொருங்கி உள்ளது. பழைய சமநிலையைக் கொண்டிருந்த சகல இணைப்புப் பகுதிகளுக்கும் இடையிலான உறவுகள் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதால் இதனைச் சமாதான வழியில் திரும்பக் கொணர முடியாது. இது முதலாளித்துவ அரசுகளின் தனிப்பட்ட தலைவர்களின் அகநிலை விருப்பங்கள் பற்றிய பிரச்சனை அல்ல, மாறாக அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பொருளாதார சமூக முரண்பாடுகளின் புறநிலை விளைவுகளாகும்.

22. உலக ஏகாதிபத்தியத்தின் ஸ்திரமின்மைக்கு மத்தியில் அமெரிக்காவின் நெருக்கடி உள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் எதை எல்லாம் ஈட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சோவியத் அதிகாரத்துவம் அமெரிக்காவை புகழ்ந்தேற்றிக் கொண்டிருக்கும்போதே, இடம் பெறும் வரலாற்றின் விசித்திரமான திருவிளையாடல்களுள் ஒன்றாக அது இருக்கிறது. "சுதந்திர நிறுவனம்" முறையின் அனைத்து நிறுவனங்களையும் அழுகச் செய்யும் ஒரு சமூக நெருக்கடியினால் அமெரிக்கா பீடிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்குள் மூன்றாவது பிரமாண்டமான பொருளாதாரப் பின்னடைவானது, 1980களில் பேரளவிலான கடன்களின் அடிப்படையில் விஸ்தரிக்கப்பட்ட எண்ணற்ற வங்கிகளையும் கூட்டுத்தாபனங்களையும் சரித்து வீழ்த்த அச்சுறுத்திக் கொண்டுள்ளது. பழைய சீர்திருத்தவாத கைமருந்துகளான புதிய கொடுக்கல் வாங்கல்கள், புதிய எல்லைகள், மாபெரும் சமுதாயம் ஆகியன எல்லாம் மிகக் கடந்த காலத்துக்கு உரியனவாகிவிட்டன. எந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சமூகச் சட்டமும் இருபதாண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் இயற்றப்படவில்லை. பழைய சமூக வேலைத்திட்டங்களில் எஞ்சிக் கிடந்தவற்றை பிரமாண்டமான வரவு-செலவுத்திட்ட வெட்டுக்கள் அழித்துவிட்டன: குற்றங்கள் பற்றிய புள்ளி விபரங்கள் சமூக உறவுகளின் உயிராபத்தான அறிகுறிகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. விரைந்து வளரும் வேலையின்மை, வேலையில் இன்னும் உள்ளவர்களின் சம்பள வீழ்ச்சி, கல்வி, வீட்டு வசதி, மருத்துவ பராமரிப்பு போன்றவற்றின் நிலைமையும் பேரழிவுக்கு ஒன்றும் குறைந்ததல்ல. மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் நடைமுறையில் கல்வி அற்றவர்களாக உள்ளனர். வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் கூட சமூக நெருக்கடியின் தாக்குதலினால் அழிக்கப்பட்ட வாழ்க்கைகளின் 'பயங்கரக் கதைகளை': வீடற்ற மக்கள் காட்போட் பெட்டிக்குள் முடங்கிக் கிடத்தல், மருத்துவ காப்புறுதி இல்லை என்பதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை, வேலை அற்ற தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் தற்கொலை போன்றவற்றை-- தினசரி அறிவிக்காமல் இருக்க முடியாதுள்ளது. அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் அதன் சமூக அமைப்புக்களது சீரழிவினையும், மக்கள் தொகையின் பரந்த அளவிலான தட்டினரின் வறுமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே வந்து விட்டனர் என்று, நன்கு பிரபலமான உண்மையை சாதாரணமாக அறிவிப்பதுபோல் ஒரு முன்னணி முதலாளித்துவப் பத்திரிகையின் நிருபர் குறிப்பிட்டிருந்தார். சமூக உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கு அமெரிக்க முதலாளி வர்க்கம் போலீசாரிலும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அதன் ஏஜெண்டுகளின் அளவற்ற துரோகத்திலும் தங்கியிருக்கும்படி தள்ளப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான போராட்டத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் நசுக்கி ஒடுக்குவதே அவர்களின் சமூக செயல்பாடாகும்.

23. மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியின், அதில் கருக்கொண்டிருக்கும் ஆழமான புரட்சிகர விளைபயன்களின் பின்னணியில் உலக ஆளுமையில் தனது அந்தஸ்தினைப் புதுப்பிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தள்ளப்பட்டுள்ளதானது, உலக அரசியலில் வெடித்துச் சிதறும் தனியொரு போக்கைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கையானது, ஐரோப்பிய, ஜப்பானிய போட்டியாளர்களின் செலவில் தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு சற்றுக்கூடிய காலத்துக்குள் புஷ் நிர்வாகம் இரண்டு தடவை - முதலில் பனாமாவுக்கு எதிராகவும் பின்னர் ஈராக்குக்கு எதிராகவும் யுத்தத்துக்குச் சென்றுள்ளது. இறுதி ஆய்வில் பார்க்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த அசட்டுத் துணிச்சலும் போர் வெறியும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது பொருளாதார வீழ்ச்சியைச் சீர்செய்யவும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் முயற்சிப்பதை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த இராணுவ பலத்தில் மட்டுமே அமெரிக்கா கேள்விக்கிடமில்லாத வகையில் ஆதிக்கத்தினை இன்னமும் பிரயோகிக்கின்றது. குவைத்தின் "விடுதலையை" காட்டிலும் அமெரிக்காவிற்குப் பெரிதும் முக்கியமானது, அமெரிக்க அழிக்கும் தன்மையை அனைத்துலகுக்கும் காட்ட ஒரு சந்தர்ப்பம் வழங்குவதே ஆகும். யுத்தத்தின் போது புஷ், பாரசீக வளைகுடா எண்ணெயில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் போட்டியாளர்கள் தங்கி உள்ளதைப் பகிரங்கமாக சுட்டிக் காட்டியதோடு, யுத்தம் அமெரிக்காவின் "தன்வயமாக்கலை" கூட்டி, "அமைதியான வர்த்தக உறவுகளுக்கு இட்டுச்செல்லும்" என சிபாரிசு செய்தார். உண்மையில் ஐரோப்பியர்கள் மற்றும் ஜப்பானியர்களிடமிருந்து அதிக சலுகைகளைப் பிடுங்கிக்கொள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடியும் என்ற கருத்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. யுத்தத்தின் முடிவில் வோல்ஸ்ட்ரீட் பத்திரிகை "பலாத்காரம் கொள்கையின் ஒரு நியாயமான ஆயுதம், அது செயற்படுகின்றது" என பிரகடனம் செய்தது. மேல் அதிகாரத்தில் உள்ளவருக்கே வந்த செய்தி: "அமெரிக்காவினால் தலைமை வகிக்க முடியும், சந்தோஷக் கணைப்பை நிறுத்து, மேலும் துணிவாக சிந்தி, இப்பொழுதே தொடங்கு" என்றும் குறிப்பிட்டது.

24. புஷ்ஷின் பகட்டான "புதிய உலக ஒழுங்குமுறை" பற்றிய வாயளப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்கா உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களில் தனது ஆளுமை அந்தஸ்தினை மீண்டும் நிலைநாட்டுவதற்கு தேவையான சட்ட ரீதியான மூலவளங்கள் இல்லாதிருக்கிறது. யுத்தத்தின் செலவினங்களை நிதியீட்டம் செய்ய தனது கூட்டுக்களை பணத்துக்காக ஆட்டிப் படைத்தமையானது, அமெரிக்காவின் ராணுவப் பகட்டுகளுக்கும் அதன் நிதி வளங்களுக்கும் இடையேயான சமத்துவமின்மையை உலகின் கவனத்துக்கும் கொண்டு வந்தது. மேலும் நவீன தொழில் நுட்பத்திற்கு அடிப்படையான மேலாதார பண்டமான-செமிகண்டக்டருக்கான உலகச் சந்தையில் ஜப்பான் கொண்டிருக்கும் முன்னணி அந்தஸ்தினை திரும்பக் கைப்பற்றுவதைவிட, பாதுகாப்பற்ற பாக்தாத்தின்மேல் குண்டு வீசுவது அமெரிக்காவிற்கு சுலபமானது. ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு புதிய ஒழுங்கினை உண்டு பண்ணுவதற்கு மாறாக யுத்தம் பழைய மரணத்தினை மேலும் நிரூபித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரப் பலவீனங்கள் வெளிப்படையாகியதும் ஐரோப்பிய ஜப்பானிய முதலாளி வர்க்கங்கள் தமது சொந்த நலன்களை மிக மூர்க்கமாக வலியுறுத்துகின்றன. மத்திய கிழக்கில் தமது சொந்த மூலோபாய நலன்களைக் காக்கும் பொருட்டு குர்துகளின் நிலைமையை ஐரோப்பிய முதலாளி வர்க்கம் வெற்றிகரமாக சுரண்டிக்கொள்கின்றது என்பதை புஷ் நிர்வாகம் உணர்ந்து கொண்டதும், "பாலைவனப் புயலின்" வெற்றியினைத் தொடர்ந்து அமெரிக்க முதலாளி வர்க்கத்தின் வெற்றிக் கூச்சல்கள் திடீர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. பாரசீக வளைகுடாவிலும் ஈராக்கின் தெற்கு எல்லையிலும் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை எதிர்கொள்வது போன்று ஐரோப்பியர்கள் தமது படைகளை வடஈராக்கிலும் நகர்த்தத் தொடங்கினர். ஐரோப்பிய ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவின் கைகளில் தமது தலைவிதியை விட்டுவைக்க எண்ணவில்லை, யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்கள், அமெரிக்கா இன்னமும் முன்னணிப் பாத்திரம் வகிக்கும் "நேட்டோ" அமைப்பில் இருந்து சுதந்திரமாக, தமது சொந்த "அதிரப்படைகளை" நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜேர்மன் ஆளும் வர்க்கம், 21-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அடைந்த ராணுவத் தோல்வியால் நிர்ணயம் செய்யப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்பதைத் தெளிவுப்படுத்தியது. குர்துகளுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் சாக்கில் ஜேர்மன் ராணுவம், ஹிட்லரின் வேர்மட் தோல்யின் பின்னர் முதல் தடவையாக ஐரோப்பாவுக்கு வெளியே தனது முதல் நடவடிக்கையை ஆரம்பித்தது. நோட்டோவுடன் ஜேர்மன் செயலதிபரான மான்பிரட் வோர்னர், பழைய பிஸ்மார்க்கின் "இரத்தமும் இரும்பும்" பேச்சினை நினைவூட்டி, "வாள் இல்லாமல் இராஜதந்திரம் மலடாகிப் போன சமயங்களும் உண்டு" எனப் பிரகடனம் செய்தார். அதே சமயம் ஜப்பானிய அரசாங்கம் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் முதன் முதலாக தனது படைகளை சொந்த எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தத் தொடங்கியது.

25. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவினைத் தொடர்ந்து சர்வதேச உறவுகளில் அந்த அளவுக்கு ஸ்திரத்தன்மை நிலவி வரவில்லை. உள்நாட்டு யுத்தத்தின்போது சர்வதேச ராஜதந்திரம் பெருக்கெடுத்த முன்கணித்த வழிகளை சம்பவங்கள் தாண்டிச்சென்றன. பழைய கூட்டுக்கள் உடைந்து செல்கின்றன: புதியவை இன்னமும் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உலக மேலாளுமைக்கான சக்திவாய்ந்த 'டிரான்ஸ் நேஷ்னல்' கூட்டுத்தாபனங்களின் போராட்டமானது, பயங்கர பதட்டத்தில் இருந்து சர்வதேச விவகாரங்களுக்கு செல்கின்றது. அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் இடையேயான யுத்தத்தின் சாத்தியங்கள் ஏற்கனவே உலகப் பத்திரிகைகளின் பக்கங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசியல்வாதிகளின் தேசிய வெறிதொனிக்கும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதன் நோக்கம், ஜப்பான் தனது பிரமாண்டமான பொருளாதார பலத்தினையும் அமைப்புத் திறமைகளையும் பயன்படுத்தி அமெரிக்காவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு இராணுவ சக்தியை உண்டாக்கிக் கொள்வதற்கு முன்னதாகவே, அதனைத் தாக்குவதற்குச் சாதகமான ஒரு பொதுஜன அபிப்பிராயத்தைத் தயார் செய்வதற்காகவே ஆகும். ஆனால் இன்றைய சமயத்தில் இது எவ்வளவு தான் சாத்தியமாகத் தோன்றிடினும் பொருளாதார நலன்களின் மோதல்கள் முதலில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒரு இராணுவ மோதலுக்கே இட்டுச் செல்லும் என முன்கணித்துக் கூறிவிட முடியாது. அமெரிக்காவிற்கும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையேயான ஒரு யுத்தமும் கூடச் சாத்தியமானதுதான். மேலும் எதிர்கால யுத்தம் ஐரோப்பிய அரசுகளைத் தம்மிடையே பிளவுபடுத்தி, வேறுபட்ட தடை முகாம்களில் நிற்க வைக்கவும் கூடும் என்ற சாத்தியத்தினையும் நீக்கிவிட முடியாது. ஜேர்மனியின் ஒன்றிணைப்பானது, ஐரோப்பியக் கண்டத்தில் பழைய சமபல நிலையை அடியோடு மாற்றி விட்டது. "நண்பர்களதும்" "எதிரிகளதும்" கூட்டுக்கள் இன்னமும் எதிர்பாராத வடிவத்தை எடுக்க உள்ளன. ஆனால் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் மோதல் தவிர்க்க முடியாத விதத்தில் ஒரு யுத்தத்துக்கு இட்டுச் செல்கின்றது. இன்றுள்ள தொழில் நுட்பங்களால் விளைவுகள் பயங்கரமாக இருக்குமாதலால் ஏகாதிபத்தியவாதிகள் அத்தகைய தீவிரமான பெறுபேறுகளை தவிர்த்துக் கொள்வார்கள் என எண்ணுவது ஆபத்தான அரசியல் தவறாகும். பேரழிவு பற்றிய அச்சமானது சர்வதேச உறவுகளின் நடத்தையில் சில செல்வாக்கை செலுத்துகின்றது என்பது உண்மைதான். உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் புத்தி சுவாதீனமான வேளையில், மூன்றாம் உலக யுத்தம் மனித நாகரிகத்துக்கு சமாதி கட்டுவதாகும் என்பதை உண்மையில் உணரவே செய்வார்கள். ஆனால் வரலாற்று அனுபவம், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அகநிலைப் பயமோ அல்லது ஒழுக்கவியல் மனசாட்சியோ அல்லாமல், ஏகாதிபத்தியத்தின் புறநிலை முரண்பாடுகளே பிரச்சினைகளை தீர்மானம் செய்கின்றன என்பதை நிரூபிக்கின்றது. இன்னொரு உலக யுத்தத்தினைத் தடுக்கக்கூடிய உலகில் உள்ள ஒரே சக்தி புரட்சிகரத் தொழிலாள வர்க்கமே ஆகும்.

[கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி]