முன்னோக்கு

ரோசா லுக்செம்பேர்க் பிறந்து 150 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கலந்துரையாடலை இங்கே கேட்கலாம்.

உலக சோசலிச வலைத் தளம் ரோசா லுக்செம்பேர்க் பிறந்த 150 ஆம் ஆண்டு நினைவாண்டைக் குறிக்கும் விதமாக, மார்ச் 7 ஞாயிறன்று, அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு, இணையவழி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இங்கே பதிவு செய்துகொள்ளலாம்.

இன்றிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 5, 1871 இல், சிறிய போலந்து நகரமான ஜாமோவில் (Zamość) ரோசா லுக்செம்பேர்க் பிறந்தார். 47 வயதில் காலத்திற்கு முந்தியே கொடூரமாக மரணமடைந்திருந்தாலும், அவர், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியுடன் சேர்ந்து, 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான புரட்சிகர மார்க்சிச தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், அவரது படைப்புகள் இன்றும் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளன.

லுக்செம்பேர்க்கின் நிகரில்லா புத்திஜீவிதத்தன்மை மற்றும் அசாதாரண தத்துவார்த்த மற்றும் சொல்லாட்சித் திறமைகளுடன், அவரின் தனிப்பட்ட தைரியம், உடைக்க முடியாத போராட்ட உத்வேகம் மற்றும் அசைக்க முடியாத கொள்கைகளும் சேர்ந்திருந்தன. அவர் மிகவும் படித்தவர், ஜேர்மன், போலந்து, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளைச் சரளமாக பேசக்கூடிய அவர், மற்ற மொழிகளையும் புரிந்து கொள்ளக்கூடியவராக இருந்தார். அவர் மிகவும் உணர்ச்சிகரமானவர் என்பதோடு தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை ஈர்க்கும் ஒரு கவர்ச்சியான ஆளுமை கொண்டிருந்தார்.

ரோசா லுக்செம்பேர்க்

இலக்கியங்களை நேசித்த அவர் அவற்றில் நன்கு பரிச்சயமாகி இருந்தார். ஆறு வயதிலேயே, குழந்தைகள் பத்திரிகை ஒன்றில் எழுதத் தொடங்கி, பின்னர் விரைவிலேயே ரஷ்ய கவிதைகளைப் போலந்து மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார், அவரின் சொந்த கவிதைகளையும் எழுதினார். போலந்து தேசியக் கவிஞர் ஆடம் மிக்கிவிச்ஸின் (Adam Mickiewicz) பக்கங்களையும், அத்துடன் கோத்தே (Goethe) மற்றும் மொரிக் (Mörike) போன்ற ஜேர்மன் கவிஞர்களின் பக்கங்களையும் அவரால் மனப்பாடம் செய்து ஒப்பிக்க முடிந்தது. இயற்கையின் மீதிருந்த அவரது காதல் தெளிவாக அவர் கடிதங்களின் பக்கங்களில் காணப்படுகிறது. சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு முன்னர் அவர் ஆரம்பத்தில் உயிரியல் படித்தார். 26 வயதில் தனிச்சிறப்புடன் முனைவர் பட்டம் பெற்றார்.

உலக வரலாற்றில் முற்போக்கான எல்லா தலைச்சிறந்த பிரமுகர்களைப் போலவே, லுக்செம்பேர்க்கும் அவர் எதிரிகளால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார், அல்லது தவறான நண்பர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பொய்மைப்படுத்தப்பட்டார். அவரை ஒரு பெண்ணியவாதியாக ஒத்து போகச் செய்யவும், சோசலிசத்திலிருந்து புரட்சிகரமற்ற பாதையில் செல்ல அறிவுறுத்தியவராக அவரைச் சித்தரிக்கவும், போல்ஷிவிசத்திற்கு எதிரான ஒரு முக்கிய சாட்சியாக அவரைத் தவறாக பயன்படுத்தவும் முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஜேர்மனியின் இடது கட்சி அதன் நடைமுறை செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் அதன் வேலைத்திட்டத்தின் ஒவ்வொரு வரியிலும் லுக்செம்பேர்க்கிற்கு முற்றிலும் எதிர்மறையாக உருவடிவம் கொடுக்கிறது என்றாலும் கூட, அதன் கட்சி அமைப்பிற்கு அந்த மாபெரும் புரட்சியாளரின் பெயரையே சூட்டியது.

ஒருவர் லுக்செம்பேர்க்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுத்துக்களைப் படிக்கும் தருணத்தில் அத்தகைய முயற்சிகள் அனைத்துமே மோசடிகளாக அம்பலமாகின்றன. சோசலிச புரட்சிக்கு நிபந்தனையின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர், சர்வதேசவாதத்தை சமரசமின்றி பாதுகாத்தார். பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதம் மற்றும் தொழிற்சங்கங்களின் பழமைவாதத்திற்கு எதிரான அவர் போராட்டம், முதல் உலகப் போருக்கு அவர் காட்டிய சளைக்காத எதிர்ப்பு மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதில் அவர் வகித்த முக்கிய பாத்திரம் ஆகியவை புரட்சிகர மார்க்சிசத்தின் முதல் வரிசையில் அவர் இடத்தைப் பாதுகாக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தை அகற்றுவதன் மூலம் மட்டுமே மனிதகுலத்தின் தலையாய பிரச்சினைகளான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் போர் போன்றவற்றை தீர்க்க முடியும் என்றும், இதற்கு தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவுக்கான ஒரு போராட்டம் அவசியம் என்றும் லுக்செம்பேர்க் உறுதியாக நம்பினார். பெரும்பாலும் தொழிலாளர்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்களை நோக்கி இடதுசாரி புத்திஜீவிகள் கொண்டிருந்த இரக்கவுணர்வு அவருக்கு முற்றிலும் அந்நியமானது. தொழிலாளர்களின் நனவை உயர்த்துவதும், அவர்களின் அறிவு மற்றும் புரிதலுக்கான தாகத்தைத் தணிப்பதும், சமூக மற்றும் அரசியல் இயக்கவியலை விளங்கப்படுத்துவதும் மற்றும் அவற்றிலிருந்து எழும் அரசியல் பணிகளை விரிவாக்குவதுமே தனது பணியாக அவர் கருதினார். இது தொழிலாளர்கள் மத்தியில் அவரை நம்ப முடியாதளவில் பிரபலமாக்கியது. சமூக ஜனநாயகவாதிகளுக்கான (SPD) தேர்தல் பேரணிகளில் அவர் பேசிய போது, அந்த இடங்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

கிளாரா செட்கின் மற்றும் ரோசா லுக்செம்பேர்க், 1910 இல் மாக்டபேர்க்கில் நடந்த சமூக ஜனநாயகக் கட்சி மாநாட்டில்

லுக்செம்பேர்க் எப்போதுமே முதலாளித்துவ பெண்ணியத்தை எதிர்த்தார். அவரைப் பொறுத்த வரை, பெண்களின் விடுதலை என்பது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதில் இருந்து பிரிக்க முடியாததாக இருந்தது. இன்றைய பெண்ணியவாதிகள் மற்றும் அடையாள அரசியலைப் பின்பற்றுபவர்களைப் போல, ஒரு சில பெண்கள் மட்டும் முதலாளித்துவ தனிச்சலுகைகள் பெறுவதற்காக அவர் போராடவில்லை, மாறாக எல்லாவித தனிச்சலுகைகளையும் ஒழிப்பதற்காக போராடினார். பெண்கள் அனைவருக்கும் சமமான மற்றும் நேரடியான வாக்குரிமை கிடைப்பதற்கான சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மகளிர் பேரணியில் 1912 இல் அவர் பேசிய போது, இது "பாட்டாளி வர்க்கப் போராட்டத்தைப் பெருமளவில் முன்னேற்றி தீவிரப்படுத்தும்" என்று கூறி அதை நியாயப்படுத்தினார். அவர் தொடர்ந்து கூறுகையில், "பெண்களின் வாக்குரிமைக்காக போராடுவதன் மூலம்,” “புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் சுத்தி அடியின் கீழ், தற்போதைய சமூகம் சின்னாபின்னமாகும் அந்த வரவிருக்கும் தருணத்தை நாமும் விரைவுபடுத்துவோமாக,” என்றார்.

லுக்செம்பேர்க்குக்கு லெனினுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்றாலும், ட்ரொட்ஸ்கி அதை ஒருமுறை குறிப்பிட்டது போல, அவற்றின் தற்காலிக கூர்மை என்னவாக இருந்தாலும், அவை “புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசியலின் பொதுவான அடித்தளத்தை” அடிப்படையாகக் கொண்டிருந்தன. லெனினும் லுக்செம்பேர்க்கும் மார்க்சிசத்தின் திருத்தல்வாத எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் ஒன்றுபட்டிருந்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சியினது புரட்சிகர அணியின் முன்னணி குரலாக அவர் மதிப்பைப் பலப்படுத்திய, 1899 இல் பிரசுரிக்கப்பட்ட லுக்செம்பேர்க்கின் சீர்திருத்தமா அல்லது புரட்சியா? படைப்பு, மார்க்சிச இலக்கியத்தில் தலைச்சிறந்த அரசியல் விவாதங்களில் ஒன்றாக விளங்குகிறது. அது, மார்க்சிச தத்துவத்தின் சடவாத அடித்தளத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க புரட்சியிலிருந்து சோசலிசத்தை துண்டித்து, ஒழுக்கவியலை முன்வைக்கும் தாராளவாதமாக அதை மாற்றிய எட்வர்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கு ஒரு கடுமையான விமர்சனமாகும்.

இறுதி இலக்கு ஒரு பொருட்டல்ல, ஆனால் இயக்கம் தான் எல்லாம் என்ற பேர்ன்ஸ்டைனின் அவமரியாதைக்குரிய கருத்துக்குப் பதிலளித்த லுக்செம்பேர்க், “இந்த முதலாளித்துவ அமைப்பைச் சீர்படுத்துவதற்கான ஒரு வீண் முயற்சியிலிருந்து, இந்த அமைப்புக்கு எதிராக, இந்த அமைப்பை அகற்றுவதற்கான, ஒரு வர்க்க போராட்டத்திற்குள், ஒட்டுமொத்த தொழிலாளர் இயக்கத்தை" திருப்பும் "தீர்க்கமான காரணியே" சோசலிசத்தின் இறுதி இலக்கு என்று அறிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், "பேர்ன்ஸ்டைன் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுடனான சர்ச்சையில், கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், அதாவது இது இந்த அல்லது அந்த போராட்ட முறை சம்பந்தப்பட்ட பிரச்சினையோ, அல்லது இந்த அல்லது அந்த பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட பிரச்சினையோ இல்லை, மாறாக சமூக ஜனநாயக இயக்கத்தின் உயிர்பிழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்," என்றார்.

தங்களின் சொந்த தலைவிதியை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வெற்றியுடன் இணைத்திருந்த கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் குட்டி முதலாளித்துவவாதிகளின் ஓர் அடுக்கிற்காக பேர்ன்ஸ்டைன் பேசினார். 1890 களின் பொருளாதார முன்னேற்றமும், சமூக ஜனநாயகக் கட்சி சட்டபூர்வமான ஒரு வெகுஜனக் கட்சியாக மாறியமையும், மற்றும் தொழிற்சங்கங்களின் வளர்ச்சியும் அந்த அடுக்கு வேகமாக விரிவடைய இட்டுச் சென்றன.

1905 ரஷ்ய புரட்சி SPD க்குள் இருந்த மோதல்களைக் கூர்மையாக்கியது. அந்த புரட்சியில் முன்னணி படையாக விளங்கிய தொழிலாள வர்க்கம், இரண்டு புதிய சாதனைகளை உருவாக்கியது: அரசியல்ரீதியில் பாரிய வேலைநிறுத்தத்தையும் மற்றும் சோவியத்தையும் (தொழிலாளர் சபையை) தோற்றுவித்தது. லுக்செம்பேர்க், அந்த நேரத்தில் ஜாரிச ஆட்சியின் கீழ் இருந்த வார்சோவுக்குச் சென்று, புரட்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், நீண்ட கால சிறைத் தண்டனை மற்றும் சாத்தியமான மரண தண்டனை தவிர்க்கப் பெற்றதற்கு SPD தலைமையின் கடுமையான தலையீட்டுக்குத் தான் நன்றி கூற வேண்டும்.

அங்கிருந்து திரும்பிய பின்னர் ஜேர்மனியில் பாரிய அரசியல் வேலைநிறுத்தத்திற்காக அவர் பிரச்சாரம் செய்தபோது, தொழிற்சங்கத் தலைவர்கள் பீதியுடன் எதிர்வினையாற்றினார்கள். "பொது வேலைநிறுத்தம் பொது பைத்தியக்காரத்தனம்," என்பதே அவர்களின் விடையிறுப்பாக இருந்தது. கொலோனில் நடந்த 1905 தொழிற்சங்க மாநாடு, "தொழிற்சங்கங்கள் முதலும் முக்கியமுமாக சமாதானத்தைக் கோருகின்றன,” என்ற கோஷத்தின் கீழ் நடத்தப்பட்டது. அந்த தொழிற்சங்க நிகழ்வுகளில் பேசுவதற்கு லுக்செம்பேர்க்கிற்குத் தடை விதிக்கப்பட்டது.

சோசலிசப் புரட்சிக்கு எதிரான அவர்களின் குரோதத்தைத் தொழிற்சங்கத் தலைவர்கள் இதை விட மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்க முடியாது. இப்போது பாரிய வேலைநிறுத்தம் மீதான விவாதம், சமூக ஜனநாயகக் கட்சியின் சந்தர்ப்பவாத அணிக்கும் புரட்சிகர அணிக்கும் இடையிலான மோதலின் மையப் பகுதியாக மாறியிருந்தது.

ஆகுஸ்ட் பெபல்

முதல் உலகப் போர் நெருங்கிய நிலையில், 1913 இல் இறந்த ஆகுஸ்ட் பெபலைச் சுற்றியிருந்த சமூக ஜனநாயகக் கட்சி தலைமையும், கார்ல் கவுட்ஸ்கியும் இன்னும் கூடுதலாக வலதுக்கு மாறினார்கள். போர் தொடங்கிய போது, சமூக ஜனநாயகக் கட்சியில் சந்தர்ப்பவாதிகளின் கை ஓங்கியிருந்தது. அவர்கள் உறுதியாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பக்கம் நின்றார்கள். ஆகஸ்ட் 4, 1914 இல், SPD இன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் போர் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு வாக்களித்தனர். ரோசா லுக்செம்பேர்க்கும் கார்ல் லீப்னெக்டும் பேரினவாத அலையை எதிர்த்த சிறுபான்மையினரை வழி நடத்தினார்கள்.

ரோசா லுக்செம்பேர்க்கின் போருக்கு எதிரான போராட்டம், இதை அவர் பெரும்பாலும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நடத்திய நிலையில், அவருடைய வாழ்க்கையின் மிகவும் சாகசமான காலங்களில் ஒன்றாக இருந்தது. அவர் சிறிதும் சளைக்காமல் ஏகாதிபத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், சமூக ஜனநாயகக் கட்சியின் காட்டிக்கொடுப்பைக் கண்டித்தார், பெருந்திரளான மக்களை விழித்தெழச் செய்ய செயல்பட்டார். ஆகஸ்ட் 4, 1914 மாலையில் ஏற்கனவே அவர் சர்வதேச குழுவை (International Group) உருவாக்கி இருந்ததுடன், அது The International என்ற பத்திரிகையைப் பிரசுரித்து வந்தது, மேலும் Spartacus Letters ஐ சட்டவிரோதமாக வினியோகித்துக் கொண்டிருந்தது, இவை ஸ்பார்டகுஸ் லீக் (Spartacus League) என்றழைக்கப்படும் குழுவை அமைக்க இட்டுச் சென்றது.

கார்ல் லீப்நெக்ட்

The International பத்திரிகையில் லுக்செம்பேர்க்கின் முதல் முக்கிய கட்டுரை இந்த வார்த்தைகளுடன் தொடங்கியது, “ஆகஸ்ட் 4, 1914 இல், ஜேர்மனிய சமூக ஜனநாயகம் அரசியல் ரீதியில் அடிபணிந்த அந்த கணத்திலேயே சோசலிச அகிலம் தோல்வி அடைந்துவிட்டது. இந்த உண்மையை மறுக்கவோ அல்லது மறைக்கவோ செய்யப்படும் எல்லா முயற்சிகளும், அவை என்ன அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும், சோசலிஸ்ட் கட்சிகளின் நாசகரமான சுய-வஞ்சகத்தையும் மற்றும் அந்த பொறிவுக்கு இட்டுச் சென்ற இயக்கத்தினது உள்-வியாதியை என்றென்றைக்கும் நியாயப்படுத்தவும், நீண்டகால ஓட்டத்தில் சோசலிச அகிலத்தை ஒரு கட்டுக்கதையாக, ஒரு வேஷதாரியாக ஆக்குவதற்கும், புறநிலைரீதியில் உகந்ததாய் அமைகின்றன.”

போருக்கு எதிரான ரோசா லுக்செம்பேர்க்கின் போராட்டம் அவர் வாழ்நாள் முழுவதும் நீடித்திருந்த சமரசமற்ற சர்வதேசியவாதத்தின் மீது தங்கியிருந்தது.

22 வயதான ஒரு மாணவியாக, போலந்து சோசலிஸ்ட் கட்சியின் (PPS) சமூக தேசபக்தியை (social patriotism) தாக்குவதற்கு ஜூரிச்சின் சோசலிச அகில காங்கிரஸில் தலையீடு செய்தார். இந்த போலந்து சோசலிஸ்ட் கட்சி (PPS), ரஷ்ய, ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய ஆட்சிக்கு இடையே போலந்து பிரிந்து கிடந்த அந்த காலத்தில் போலந்து தேசிய அரசை மீண்டும் ஸ்தாபிக்க அறிவுறுத்தியது. இந்த கோரிக்கையை நிராகரித்த லுக்செம்பேர்க், ஜாரிசத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க, ரஷ்ய போலந்து மற்றும் ரஷ்யாவின் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். போலந்து சுதந்திரத்திற்கு வக்காலத்து வாங்குவதானது, இரண்டாம் அகிலத்தில் தேசியவாத போக்குகளை ஊக்குவித்து, மற்ற நாடுகளிலும் இதற்கு இணையான தேசிய பிரச்சினைகளை மேலுயர்த்தும், மேலும் இது "ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாட்டாளி வர்க்கம் அனைத்தினது ஒருங்கிணைந்த போராட்டத்தைப் பலனின்றி தேசிய போராட்டங்களுக்குள் கலைத்து விடுவதற்கு" அனுமதிக்கும் என்றவர் எச்சரித்தார்.

ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி வேலைத் திட்டத்தின் "தேசங்களின் சுயநிர்ணய உரிமையை" ஏற்றுக் கொள்வதற்கு அவர் மறுத்தமை, இந்த உரிமையை அறிவுறுத்திய லெனினுடன் லுக்செம்பேர்க்கை மோதலுக்கு கொண்டு வந்தது. ஆனால் இங்கே நிலவிய கருத்து வேறுபாடு பின்னர் கூறப்பட்டதை விடவும் கூர்மையில் குறைவாகவே இருந்தது. லெனினைப் பொறுத்த வரையில், மிகப்பெரும் ரஷ்ய பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதே முக்கிய அக்கறையாக இருந்தது. லுக்செம்பேர்க்கைப் பொறுத்த வரையில், அது போலாந்து தேசியவாதத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தது. லெனின் தேசிய கோரிக்கைகளையும் வர்க்க போராட்டத்திற்கு அடிபணிய செய்தார். அவர் தேசிய பிரிவினைவாதத்திற்காக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்யவில்லை, மாறாக சொல்லப் போனால், “சுய-நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதிலிருந்த” எதிர்மறை கோரிக்கையுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார்.

லெனினுடன் கருத்து வேறுபாடுகள் இருந்த போதினும், தேசியவாதத்திற்கு எதிரான லுக்செம்பேர்க்கின் விரோதப் போக்கு மிகவும் தொலைநோக்கு கொண்டதாக நிரூபணமானது. போலாந்து விசயத்தில், PPS தலைவர் Józef Piłsudski அக்டோபர் புரட்சியை அடுத்து செம்படை மீதான தாக்குதலில் திருத்தியமைக்கப்பட்ட சுதந்திர போலாந்தின் துருப்புகளுக்கு கட்டளையிட்டார். 1926 மற்றும் 1935 க்கு இடையே, அவர் ஒரு எதேச்சதிகார சர்வாதிகாரத்தை நிறுவினார். இன்று போலந்தில் உள்ள தேசியவாத வலது அவரைத்தான் தங்களின் மாவீரராக புகழ்ந்து கொண்டிருக்கிறது.

தேசியவாதத்தில் சரணடைந்தமை, இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலங்களின் பொறிவுக்கான காரணமாகவும் இருந்தது, இது தொழிலாள வர்க்கத்திற்கு கொடூரமான தோல்விகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அகிலம் "தந்தை நாட்டின் பாதுகாப்பு" (“defense of the fatherland”) என்ற பெயரில் முதல் உலகப் போரை ஆதரித்தது, மூன்றாம் அகிலம் "தனியொரு நாட்டில் சோசலிசம்" (“socialism in one country”) என்ற ஸ்ராலினிச முன்னோக்கின் கீழ் சீரழிந்தது.

லெனினின் தேசியக் கொள்கையை நசுக்கி, பெருநில ரஷ்ய பேரினவாதத்தின் படுமோசமான நடைமுறைகளுக்குத் திரும்பிய ஸ்ராலினிஸ்டுகள், லுக்செம்பேர்க்கின் சர்வதேசியவாதத்திற்காக அவரை ஒருபோதும் மன்னிக்கவில்லை. ஸ்ராலின் ஆட்சியின் கீழ், “லுக்செம்பேர்க்கிசம்" மீதான குற்றச்சாட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் இருந்தது என்றாலும் "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" ஏற்படுத்திய மரணகதியிலான விளைவுகளை விட குறைவானதொன்றையும் ஏற்படுத்தி விடவில்லை. ஸ்ராலின் மரணத்திற்குப் பின்னரும் கூட, “தேசிய நிகிலிசவாதத்தை" (அதாவது, அனைத்து முற்போக்கான கருத்துக்களையும் நிராகரித்து தனிமனிதவாதத்திற்கு முன்னுரிமை கொடுத்த இளம் ஹேகலியவாதம் - nihilism) பிரதிநிதித்துவம் செய்ததாக கியோர்க் லூக்காஸ் மாபெரும் புரட்சியாளர் லுக்செம்பேர்க்கைக் குற்றஞ்சாட்டினார்.

1990 களின் போது, சமீபத்தில், தேசங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை அதன் எல்லா முற்போக்கான ஜனநாயக முக்கியத்துவத்தையும் இழந்தது. பொருளாதார பூகோளமயமாக்கலும் உலகின் மிக தொலைதூரப் பகுதிகளில் தொழிலாள வர்க்கம் உருவெடுத்ததும் அரை-ஜனநாயக நாடுகளுக்கும் கூட இடம் கொடுக்கவில்லை. இருக்கும் அரசுகளை உடைக்கவும் அடிபணிய வைக்கவும் ஏகாதிபத்தியம் இந்த சுய-நிர்ணயம் என்ற முழக்கத்தைப் பயன்படுத்தியது. இத்தகைய நாடுகளில், இந்த கோரிக்கையானது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்குச் சேவையாற்றவும் எதிர்விரோத போட்டி முதலாளித்துவக் குழுக்களுக்கு உதவின. இது யூகோஸ்லாவியாவின் துன்பியலில் எடுத்துக்காட்டப்பட்டது. தேசிய சுய-நிர்ணயம் என்ற பெயரில், அந்நாடும் அதன் தனித்தனி பகுதிகளும் ஒரு கொலைகார சகோதரத்துவ சண்டைகளுக்குள் தள்ளப்பட்டன, இதன் விளைவாக குற்றவியல் குழுக்கள் ஆட்சி செலுத்தும் மற்றும் பொருளாதாரரீதியில் வெற்றிகரமாக இயங்கவியலாத ஏழு அரசுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

லுக்செம்பேர்க்கும் ஸ்பார்டகுஸ் கழகமும் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி தலைமைத்துவத்தை மட்டுமல்ல, மாறாக "மார்க்சிஸ்ட் சென்டர்" (“Marxist Centre”) மற்றும் அதன் தத்துவார்த்தத் தலைவர் கார்ல் கவுட்ஸ்கியை எதிர்த்தும் போராடினர், கவுட்ஸ்கி லுக்செம்பேர்க்கை "தரிசு நிலத்தின் தத்துவவாதி" (theoretician of the swamp) என்றார். "மார்க்சிஸ்ட் சென்டர்" அமைப்பு தொழிலாளர்களின் தீவிர மனநிலைக்கு வாய்மொழி விட்டுக்கொடுப்புகளை வழங்கியது என்றாலும், எந்தவொரு புரட்சிகர நடவடிக்கையையும் நடைமுறையில் எதிர்த்தது, மேலும் சமூக ஜனநாயகக் கட்சியின் போர்-சார்பு போக்கை ஆதரித்தது. 1917 இல் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, விரும்பியோ விரும்பாமலோ சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சியை (USPD) உருவாக்கிய பின்னர், லுக்செம்பேர்க் அவர் விமர்சனத்தைக் கூர்மையாக்கினார்.

USPD “எப்போதுமே சம்பவங்கள் மற்றும் அபிவிருத்திகளைப் பின்தொடர்ந்து சிந்தித்தது; அது ஒருபோதும் தலைமை எடுக்கவில்லை,” என்றவர் எழுதினார். “அது அதற்கும் அதை சார்ந்திருப்பவர்களுக்கும் இடையே ஓர் அடிப்படை கோட்டை வரைய முடியவில்லை. பாரிய வெகுஜன மக்களிடையே குழப்பத்திற்கு வழிவகுத்த எந்தவொரு திகைப்பூட்டும் குழப்பமும்: அதாவது சமாதானம் மீதான புரிந்துணர்வு, சர்வதேச நாடுகளின் கழகம், ஆயுதக் குறைப்பு, வில்சன் ஈடுபாடு என மூடிமறைப்புகளைப் பரப்பிய முதலாளித்துவ வாய்வீச்சின் எல்லா வார்த்தைகளும், போரின் போது புரட்சிகர மாற்றீட்டின் அப்பட்டமான, கசப்பான உண்மைகளை மூடிமறைத்த இவை, அவர்களிடையே உத்வேகமான ஆதரவைக் கண்டன. ஒருபுறம் சமாதானத்தை ஏற்படுத்த நாட்டம் கொண்ட நியமிக்கப்பட்ட அதிகாரங்களாக முதலாளித்துவ அரசாங்கங்களை ஆக்குவதற்குத் தொடர்ந்து முயன்றது அதேவேளையில் மறுபுறம் அது பாட்டாளி வர்க்கத்தின் பாரிய நடவடிக்கைக் குறித்து பேசியது, ஆக கட்சியின் மொத்த மனோபாவமும், நிராதரவாக இந்த முக்கிய முரண்பாடுகளைச் சுற்றியே சுழன்றது. பன்முகக் கோட்பாடு, ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடைமுறையின் ஒரு துல்லியமான கண்ணாடியாக இருந்தது: அதாவது, அவநம்பிக்கையோடு சோசலிச உத்வேகத்தைக் கைவிட்டு விட்டு, தீவிர சூத்திரங்களின் ஒரு குழப்பமான கலவையாக இருந்தது.”

லுக்செம்பேர்க் பெரும்பாலும் அவரின் “தன்னெழுச்சி தத்துவத்திற்காக” கண்டிக்கப்பட்டார்: வெற்றுக்கூடாகி போன எந்திரங்களுக்கு எதிராக பெருந்திரளான மக்களின் சுயாதீனமான எழுச்சியை நம்பியதற்காகவும், கட்சி குறித்த லெனினின் கருத்துருவை விமர்சித்ததற்காகவும், சமூக ஜனநாயகக் கட்சியுடன் அவர் அமைப்புரீதியில் முறித்துக் கொள்ள தாமதித்ததற்காகவும் அவர் கண்டிக்கப்பட்டார். நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்திற்கு முன்னர் பொய்யாக தங்களை லுக்செம்பேர்க் அடித்தளத்தில் நிறுத்திக் கொண்டிருந்த மத்தியவாத போக்குகளுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்திய லியோன் ட்ரொட்ஸ்கி 1935 இல் இந்த பிரச்சினை மீது மிகவும் அடிப்படை விசயங்களை முன்வைத்தார்.

"பலவீனமான பக்கங்களும் குறைபாடுகளும்" "ரோசாவில் எந்த வகையிலும் தீர்க்கமானவை இல்லை" என்றவர் எழுதினார். சமூக ஜனநாயகக் கட்சியின் பழமைவாத கொள்கைக்கு எதிராக லுக்செம்பேர்க் “பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளின் தன்னியல்பான தன்மையை" முன்வைத்தமை "முற்றிலும் புரட்சிகரமான முற்போக்கான தன்மையைக் கொண்டிருந்தது,” என்றார். ட்ரொட்ஸ்கி தொடர்ந்து எழுதுகையில், "ரோசா லுக்செம்பேர்க், லெனினுக்கு வெகு முன்னரே, வெற்றுக்கூடாகி போன கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் பிற்போக்குத்தனமான தன்மையைப் புரிந்து கொண்டு, அதற்கு எதிராக ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்.”

"ரோசா ஒருபோதும் தன்னை வெறுமனே தன்னெழுச்சி தத்துவத்தில் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை," மாறாக "பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அணியைப் படிப்பிப்பதிலும், சாத்தியமானளவுக்கு அதை ஒருங்கிணைத்துக் கொண்டு வரவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். போலந்தில், அவர் மிகவும் உறுதியான ஒரு சுயாதீன அமைப்பை உருவாக்கினார். தொழிலாளர் இயக்கம், முன்னணிப்படையைத் தேர்வு செய்வதற்கான தயாரிப்பு, எதிர்நோக்கப்படும் பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளுடன் ஒப்பீடு என இவற்றைக் குறித்த அவரின் வரலாற்று-மெய்யியல் மதிப்பீட்டில் ரோசா மிகக் குறைவாக இருந்தார்; அதேவேளையில் லெனின் —எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய அற்புதங்களோடு தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ளாமல்— முன்னேறிய தொழிலாளர்களை ஏற்று, ஒரு கூர்மையான வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் மூலமாக, பாரிய அமைப்புகளிலோ அல்லது பின்புல இரகசிய அமைப்புகளிலோ, சட்டபூர்வமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ, தொடர்ந்து சளைக்காமல் அவர்களை உறுதியான கருவுக்குள் ஒருங்கிணைத்தார் என்று பெரும்பாலும் கூற முடியும்.”

அக்டோபர் 1917 இல் போல்ஷிவிக்குகள் ரஷ்யாவில் ஆட்சியைப் பிடித்த போது, லுக்செம்பேர்க் அவர்களுக்கு உற்சாகமாக ஆதரவளித்தார். சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவர் எழுதி, அவர் மரணத்திற்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் மட்டுமே பிரசுரிக்கப்பட்ட "ரஷ்ய புரட்சி குறித்து" என்ற அவரது எழுத்துக்கள், பெரும்பாலும் போல்ஷிவிசத்தின் மீது ஆழமாக செல்லும் ஒரு விமர்சனமாக பொருள்படுத்தப்படுகிறது. ஆனால் அது தவறு. லுக்செம்பேர்க் நிபந்தனையின்றி அக்டோபர் புரட்சியைப் பாதுகாத்தார் என்பதோடு, இரண்டாம் அகிலம் மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் காட்டிக்கொடுப்பு காரணமாக போல்ஷிவிக்குகள் எதிர்கொண்ட சாத்தியமற்ற நிலைமைகளாலேயே அவர் விமர்சித்த "தவறுகள்" ஏற்பட்டிருந்தன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அவர் எழுதினார், “வரலாற்று சாத்தியக்கூறுகளின் வரம்புகளுக்குள் ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி பங்களிக்கக்கூடிய எல்லாவற்றையும் செய்வதில் அவர்கள் திறமையானவர்கள் என்பதை," “போல்ஷிவிக்குகள்,” "எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்… அவசியமற்றதிலிருந்து அவசியமானதை, போல்ஷிவிக்குகளினது அரசியலில் உள்ள தற்செயலான தொங்குதசையிலிருந்து கருப்பொருளைப் பிரித்துக் காட்டுவது அவசியம். தற்போதைய காலகட்டத்தில், உலகெங்கிலும் நாம் தீர்க்கமான இறுதி போராட்டங்களை எதிர்கொண்டிருக்கையில், சோசலிசத்தின் மிகவும் முக்கியமான பிரச்சினையே நமது காலக்கட்டத்தின் பற்றியெறியும் கேள்வியாக இருந்தது மற்றும் உள்ளது. அது இந்த அல்லது அந்த இரண்டாந்தர தந்திரோபாய கேள்வி சம்பந்தப்பட்டதல்ல, மாறாக பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாட்டுத் திறன், செயல்படுவதற்கான வலிமை, சோசலிச அதிகாரத்திற்கான விருப்பம் போன்ற கேள்விகள் சம்பந்தப்பட்டதாகும். இதில் லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் அவர்களின் நண்பர்கள், உலகின் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக முன்னேறியவர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர்; “எனக்கு தைரியம் உண்டு!” என்று ஹூட்டனுடன் சேர்ந்து உரக்கக் கூறக்கூடியவர்களாக இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

"இதுதான் போல்ஷிவிக் கொள்கையில் பரிபூரணமாக இன்றியமையாது அமைந்துள்ளது. இந்த அர்த்தத்தில், சோசலிசத்தைக் கைவரப்பெறும் பிரச்சினையை நடைமுறைரீதியில் நிறுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதன் மூலமாக, ஒட்டுமொத்த உலகிலும் மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையே பலத்தோடு கணக்கைத் தீர்த்து வைப்பதில் முன்னேறியதன் மூலமாக, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிவகுத்து சென்றதில் காலத்தால் அழியா வரலாற்று சேவை அவர்களுடையது தான். ரஷ்யாவில், பிரச்சினை முன்வரக் கூடும். அதை ரஷ்யாவில் தீர்க்க முடியாது. இதன் அர்த்தம், எதிர்காலத்தில் எல்லா இடங்களும் ‘போல்ஷிவிசத்திற்கு’ உரியது.”

நவம்பர் 1918 இல், ஜேர்மனியிலும் புரட்சி வெடித்தது. கியேல் (Kiel) இல் மாலுமிகளின் ஒரு எழுச்சியால் தொடங்கப்பட்ட இது நாடெங்கிலும் காட்டுத்தீ போல் பரவியது. கைசர் பதவி விலகினார், ஆளும் உயரடுக்கினர் அரசு அதிகாரத்தை சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஃப்ரீட்ரிக் ஏபார்ட்டிடம் ஒப்படைத்தனர், அவர் தொழிலாள வர்க்கத்தை இரத்தக்களரியாக அடக்குவதற்காக இராணுவ உயர் கட்டளையகத்துடன் கூட்டணி அமைத்தார். USPD உம் மூன்று அமைச்சர்களுடன் ஏபார்ட் அரசாங்கத்தில் பங்கு பற்றியிருந்தது.

புரட்சிகரப் போராட்டங்களுக்கு மத்தியில், ஸ்பார்டகுஸ் லீக் 1918 இறுதியில் பேர்லினில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) உருவாக்கியது. அக் கட்சியின் வேலைத்திட்டத்தை எழுதிய ரோசா லுக்செம்பேர்க் அதை பிரதிநிதிகளுக்கு வழங்கினார். அது முதலாளித்துவ வர்க்க ஆட்சியை அகற்றுவதற்கான குறிக்கோளை வெளிப்படையாக நெறிப்படுத்தி இருந்தது. மாற்றீடு சீர்திருத்தமோ அல்லது புரட்சியோ அல்ல என்று வலியுறுத்திய அந்த வேலைத்திட்டம், மாறாக "முதலாளித்துவம், புதிய போர்கள், வரவிருக்கும் காலத்தில் குழப்பம் மற்றும் அராஜகத்திற்குள் வீழ்வது இவற்றின் தொடர்ச்சியா, அல்லது முதலாளித்துவச் சுரண்டலை ஒழிப்பதா என்ற இந்த தேர்வுகளுடன் இந்த உலக போர் சமூகத்தை எதிர்கொள்கிறது. இந்நேரத்தில், சோசலிசம் மட்டுமே மனிதகுலத்திற்கான ஒரே இரட்சிப்பாகும். சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வார்த்தைகள், முதலாளித்துவ சமூகத்தின் நொறுங்கிய கோட்டைகளுக்கு மேலே பிரகாசமான முன்னெச்சரிக்கை போல ஒளிர்கின்றன.”

ஏபார்ட் அரசாங்கம் சோசலிசப் புரட்சியைத் தடுக்க தீர்மானமாக இருந்தது. ஜனவரி 15, 1919 இல், ஜேர்மன் ஏகாதிபத்திய இராணுவ மந்திரி குஸ்தவ் நொஸ்க (SPD) இன் வெளிப்படையான உத்தரவுகளின் பேரில், ரோசா லூக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். எழுச்சியை இராணுவரீதியில் ஒடுக்குவதற்காக நோஸ்க ஆல் பேர்லினுக்கு வரவழைக்கப்பட்டிருந்த ஜேர்மன் இராணுவப் படையின் "குதிரைப்படை பிரிவால்" (Freikorps “Garde-Kavallerie-Schützendivision) அந்த குற்றம் நடத்தப்பட்டது. அவர்கள் இருவரையும் கடத்தி சென்ற அப்படையினர், ஹோட்டல் ஈடனில் உள்ள அவர்களின் தலைமையிடத்திற்கு கூட்டிச் சென்று, அவர்களை விசாரணை செய்து துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் ஹோட்டல் வாயிலில் துப்பாக்கி பின்கட்டையால் தாக்கப்பட்டு தரையில் விழுந்த லுக்செம்பேர்க்கை மூட்டையாக கட்டி காரில் ஏற்றி பின்னர் சுட்டுக் கொன்றனர். அவர் உடல் லாண்ட்வேர் கால்வாயில் (Landwehr canal) வீசப்பட்டது, அங்கே அது பல வாரங்களுக்குப் பின்னரே கண்டெடுக்கப்பட்டது. கார்ல் லீப்னெக்ட் பேர்லின் பூங்காவில் (Tiergarten) மிகவும் நெருக்கமான தூரத்தில் இருந்து மூன்று குண்டுகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

ஜூன் 13, 1919 இல் ரோசா லுக்செம்பேர்க்கின் இறுதிச் சடங்கு (Bundesarchiv, Bild 146-1976-067-25A / CC-BY-SA 3.0) [Photo by Bundesarchiv, Bild 146-1976-067-25A / CC BY-SA 3.0]

இந்தக் கொலைகளுக்கு அரசால் முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மே 1919 இல் ஓர் இராணுவ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அந்த படைப்பிரிவின் தலைவராக உத்தரவை வழங்கிய வால்டமார் பாப்ஸ்ட் (Waldemar Pabst), நாஜிக்களின் கீழ் கூட்டாட்சி குடியரசில் அவர் தொழில் வாழ்க்கையைத் தொடர முடிந்தது. 1970 இல் அவர் ஒரு செல்வந்த ஆயுத வர்த்தகராக இறந்தார். ஏற்கனவே இந்த கட்டத்திலேயே, அடுத்த நாஜிக்களின் வளர்ச்சி போக்கிற்குக் களம் அமைக்கப்பட்டிருந்தது. ஹிட்லரின் SA இராணுவம் நோஸ்க ஒன்றுதிரட்டி இருந்த மற்றும் நீதித்துறையால் பாதுகாக்கப்பட்ட அந்த சிப்பாய்களையே நியமிக்க இருந்தது.

கார்ல் லீப்க்னெக்ட் மற்றும் ரோசா லுக்செம்பேர்க்கின் படுகொலை சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்கு ஒரு மாபெரும் அடியாகும். லுக்செம்பேர்க் KPD ஐ வழிநடத்தி இருந்தால், ஜேர்மன் வரலாறும் மற்றும் உலக வரலாறே கூட அனேகமாக வேறு விதமாக மாறியிருக்கும். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அனுபவமிக்க தலைமையைக் கொண்டிருந்திருந்தால் அக்டோபர் 1923 இல் அது அதிகாரத்தைப் பிடித்திருக்கும் என்பதை எடுத்துக்காட்ட பல விசயங்கள் உள்ளன. மனிதகுலம் அடோல்ஃப் ஹிட்லரைத் தவிர்த்திருக்கும், இவர் மேலுயர்ந்ததற்கு எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ராலினிசமயப்பட்ட KPD இன் நாசகரமான "சமூக பாசிச" கொள்கையால் தொழிலாள வர்க்கம் முடக்கப்பட்டதற்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும். ஸ்ராலினின் வளர்ச்சியே கூட கம்யூனிஸ்ட் அகிலத்திற்குள் கடுமையான எதிர்ப்பை முகங்கொடுத்திருக்கும்.

ரோசா லுக்செம்பேர்க்கின் பாரம்பரியம் — அவரது சர்வதேசியவாதம், தொழிலாள வர்க்கத்தை நோக்கிய அவரின் நோக்குநிலை, அவரது புரட்சிகர சோசலிசம் ஆகியவை — இன்று உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பாதுகாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இது சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான ஆயுதமாக விளங்குகிறது.

Loading