இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலகப் போர், ஏகாதிபத்தியம் மற்றும் பல்துருவ உலகம் பற்றிய மாயை என்ற தலைப்பில் இன்று (ஜூலை 8) மாலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ள பகிரங்க Zoom கூட்டத்தில் பங்குபற்றுமாறு, இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து போர்-எதிர்ப்பு மக்களுக்கும் இலங்கையின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு அழைப்பு விடுக்கிறது. கூட்டத்தில் பங்குகொள்ள இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.
ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் இந்தத் தீர்க்கமான தருணத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள இந்த முக்கியக் கூட்டத்தில், பல்வேறு பின்நவீனத்துவ கல்வியாளர்களும் போலி-இடது அமைப்புகளும் ஏகாதிபத்தியப் போரின் அதிகரித்துவரும் அச்சுறுத்தலை மூடிமறைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல் ரீதியாகத் திசைதிருப்பும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விதம் பற்றி தெளிவுபடுத்தப்படும்.
ரஷ்யா, சீனா மற்றும் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு போன்ற புதிய “அதிகார மையங்கள்” உருவாகியிருப்பதால் “பல்துருவ உலகம்” தோன்றியுள்ளது; எனவே உலகப் போரின் ஆபத்து குறைந்துவிட்டது என்று இந்தப் பின்நவீனத்துவ கல்வியாளர்களும் போலி-இடது அமைப்புகளும் வாதிடுகின்றன.
இதற்கு மாறாக, முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புக்கும் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் இடையிலான சமரசப்படுத்த முடியாத முரண்பாடே போரைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது. முதலாளித்துவம் அமைதியான அல்லது ஜனநாயகமான பல்துருவ உலக ஒழுங்காகப் பரிணமிக்க முடியாது.
கடந்த இரண்டு வாரங்களாக, ஐ.வை.எஸ்.எஸ்.இ மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள், கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதனை உட்பட பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் கலந்துரையாடி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சாரத்தின் போது, அதிகரித்துவரும் உலகப் போர் ஆபத்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள பலவீனமான போர்நிறுத்தம், உக்ரேனில் மீண்டும் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் உலகப் போரைத் தடுத்து நிறுத்தத் தேவையான அரசியல் வேலைத்திட்டம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
ஐ.வை.எஸ்.எஸ்.இ./சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் உரையாடிய ஏறத்தாழ அனைவரும், ஈரானுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் போர்களுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், ஈரான் மற்றும் காசா மக்களுடன் தமது ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவரான கலன மதூஷ, “எனக்கு சர்வதேச அரசியலில் ஆர்வம் இருக்கிறது. அதனால்தான் போர் நிலைமைகளை எப்போதும் கவனித்து வருகிறேன். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் போரும், நேட்டோவின் தலைமையில் அமெரிக்கா உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தும் போரும் உலகப் போராக விரிவடையக்கூடும். அப்படியான ஒரு உலகப் போர் நம்மை எல்லோரையும் அழித்துவிடக்கூடிய அணுவாயுதப் போராக மாறும் அபாயம் இருக்கிறது. ஆனால், இந்தப் போரை எப்படி நிறுத்துவது என்பதுதான் எனக்கு இருந்த கேள்வி,” என்று பிரச்சாரகர்களிடம் கூறினார்.
போர்முனைப்பிற்கான அடிப்படைப் பொறுப்பாளியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட அமெரிக்கத் தலைவர்கள், அதன் அழிவின் அளவை உணர்ந்து இறுதியில் போரை நிறுத்துவார்கள் என்று தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடியே அதன் ஆளும் வர்க்கத்தைப் போருக்குத் தள்ளும் உந்துசக்தியாக உள்ளது என்றும், தானும் ஒரு அங்கமான அமெரிக்க நிதியத் தன்னலக்குழுவின் நலன்களுக்காகவே ட்ரம்ப் இந்தப் போர்களை முன்னெடுக்கின்றார் என்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் அவருக்கு விளக்கினர். இதற்கு பதிலளித்த கலன, “இத்தகைய விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை. இது மிகவும் சக்திவாய்ந்த பகுப்பாய்வு,” என்று அவர் கூறினார்.
கூட்டத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள “பல்துருவ உலகம்” என்பதன் பொருள் குறித்து அவர் விளக்கம் கேட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் இரண்டு துருவங்களாகப் பிரிந்திருந்தது; சோவியத் ஒன்றியம் இனி இல்லாவிட்டாலும், ரஷ்யா, சீனா மற்றும் பிரிக்ஸ் நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு இடையில் அதிகாரம் பகிரப்பட்டிருப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் உலகப் போரின் ஆபத்து நீங்கிவிட்டதாகவும் போலி-இடது அமைப்புகள், பின்நவீனத்துவ கல்வியாளர்கள் மற்றும் தம்மை “புத்திஜீவிகள்” என்று கூறிக்கொள்பவர்கள் பரப்பிவரும் ஒரு போலியான கருத்தே அது என்று விளக்கிய பின்னர், கலன கூறியதாவது:
“பல வல்லரசுகள் இருப்பதால், போரால் ஏற்படும் அழிவை உணர்ந்து அவை போருக்குச் செல்லாது என்ற இந்தக் கருத்து மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. உண்மையில், நீங்கள் விளக்கியது போல, அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியே அதைப் போருக்குத் தள்ளுகிறது. அப்படியானால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களையும் முதலாளித்துவத்தால் ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதைப் பற்றி மேலும் அறிய நான் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பேன்.”
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் கூறியதாவது: “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட ஆட்சியாளர்கள் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இப்போதுள்ள போர்நிறுத்தமும் அதுபோலத்தான் உள்ளது. போர் மீண்டும் தொடங்கலாம். ஏனென்றால் இந்தப் போர் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகவே நடத்தப்படுகிறது. எண்ணெய் உட்பட இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்காகத்தான் இது நடக்கிறது. அந்தத் தேவை முடிந்துவிடவில்லை. உக்ரேன் போரும் மீண்டும் மீண்டும் தீவிரமடைகிறது. ஒரு பயங்கரமான உலகப் போர் வெடிக்கலாம்.”
ஈரான் போரின்போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்ட நிலைமை மற்றும் போரின் சுமை மக்களின் மீது திணிக்கப்படுவது குறித்து அவர் கூறியதாவது:
“இந்த வாரம் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். பொரலஸ்கமுவவில் உள்ள என் விடுதிக்குப் போகவே 100 ரூபாய் செலவாகிறது. பேருந்துக் கட்டணம் மட்டும் ஒரு நாளைக்கு 200 ரூபாய். பல்கலைக்கழக உணவகத்தில் ஒரு சாப்பாடு 100 ரூபாய். அதுவும் முட்டை, மீன், இறைச்சி இல்லாமல். ஒரு முட்டை எடுத்தால் 150 ரூபாய் ஆகிறது. மீன் எடுத்தால் இன்னும் அதிகம்.”
அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுக்கும் பாலஸ்தீன இனப்படுகொலையையோ, ஈரான் மீதான தாக்குதலையோ மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் கண்டிக்கவில்லை என்பதையும், திசாநாயக அரசாங்கம் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுக்கும் போர்த் தயாரிப்புகளுடன் தன்னை இணைத்துக்கொண்டிருப்பதையும் ஐ.வை.எஸ்.எஸ்.இ./சோ.ச.க. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
“முன்பு போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பைக் காட்டிய ஜே.வி.பி.. இப்போது போரின் சுமையை எங்கள் மீது திணித்துள்ளது,” என சுட்டிக்காட்டிய அந்த மாணவி, “சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் உலகத் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்பதை இந்தக் கலந்துரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டேன்,” எனத் தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவி, தனது பயிற்சிக் காலத்தின் ஒரு பகுதியாக கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணக்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
“கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கிறது. அது போக்குவரத்துச் செலவுக்கே போதுமானதாக இருக்கிறது. சமீபத்தில் என் அப்பா இறந்துவிட்டார். என் அண்ணன்தான் என் செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். என் அம்மா வேலைக்குப் போவதில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்கிறோம்,” அவர் கூறினார்.
மாத்தறை ருஹுணு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அங்குள்ள விஞ்ஞானப் பீடத்தின் விரிவுரையாளர் தக்ஷில பின்வருமாறு கூறினார்: “உங்களுடைய விளக்கத்தின் மூலம் போரை நிறுத்த வேண்டியது அவசியம் என்பதையும், அதைச் செய்ய முடியும் என்பதையும் நான் புரிந்துகொண்டேன். அதேபோல், முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற அமைப்புகளும் சில கல்வியாளர்களும் “பல்துருவ முதலாளித்துவ உலக ஒழுங்கு” குறித்து உருவாக்கி வரும் அரசியல் குழப்பம் மிகவும் பாரதூரமானது. அந்தக் கருத்துகளின் நச்சுத்தன்மையை இன்று தான் நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையை எதிர்த்து உங்கள் தோழர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன். இந்தக் கூட்டத்திலும் நான் பங்கேற்பேன்.”
தக்ஷில பல்கலைக்கழக அமைப்பில் மோசமடைந்து வரும் நிலைமைகளையும் விளக்கினார். “பல்கலைக்கழகத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. மாணவர் விடுதிகளில் போதுமான வசதிகள் இல்லை. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகள் மாணவர்களின் கல்வியை மோசமாகப் பாதித்துள்ளன.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் எஸ். சிந்துஜன் கூறியதாவது: “அமெரிக்கா–ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நான் நம்பவில்லை. அமெரிக்கா ஈரானின் வளங்களை கொள்ளையடிப்பதற்காகத்தான் இந்தப் போரைத் தொடங்கியது. எனவே, ஏதோ ஒரு கட்டத்தில் அந்தப் போர்நிறுத்தத்தை அமெரிக்காவே மீறிவிடும். இந்த இடைக்கால போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி மீண்டும் போரைத் தொடங்குவதற்காக அமெரிக்கா தயாராகி வருகிறது என்று நான் நினைக்கிறேன்.
“அமெரிக்கா நடத்தும் இந்தப் போரால் உலகம் முழுவதும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்ந்ததால் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் எங்களுடைய கல்வியையும் நேரடியாகப் பாதிக்கின்றன. நான் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன். தற்போது விடுதியில் தங்கி படித்து வருகிறேன். இப்போது மாதந்தோறும் உணவுக்கே 22,000 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது.”
மேலும் ஒரு மாதத்தில் தானும் மற்ற மாணவர்களும் இரண்டாம் ஆண்டிற்குச் செல்லவிருப்பதாகவும், இரண்டாம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழக விடுதி வசதி கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“முன்பு 3,000 ரூபாயாக இருந்த ஒரு அறையின் வாடகை இப்போது 6,000–7,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அந்தச் செலவை எங்கள் பெற்றோரால் தாங்க முடியாது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எங்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை,” என்று அவர் கூறினார். நாளை நடைபெறும் கூட்டத்தில் நிச்சயமாகப் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே பல்கலைக்கழகத்தின் மாணவி டி. மயூரி, போரில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்ததால், தற்போதைய போர்நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி அடுத்த தாக்குதலுக்காக அது தயாராகி வருவதாகத் தான் கருதுவதாக தெரிவித்தார்.
“பல்துருவ உலக ஒழுங்கு உருவாகிவிட்டதால் இனி உலகப் போரின் ஆபத்து இல்லை என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. ஏனெனில், சீனாவின் பொருளாதார எழுச்சியும், இயற்கை வளங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான போட்டியும், போரை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றன.”
இந்தப் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற கலந்துரையாடலை மேலும் ஆழப்படுத்தும் வகையில், போருக்கு எதிரான ஒரு சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அமைப்புகளுக்கு தலைமை வழங்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்வைக்கும் ட்ரொட்ஸ்கிசப் புரட்சிகர முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் பற்றி இக்கூட்டத்தில் பேச்சாளர்கள் விளக்குவார்கள்.
இன்று, ஜூலை 8, புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு சூம் வழியாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இங்கு பதிவு செய்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்க
- IYSSE கூட்டம்: உலகப் போர், ஏகாதிபத்தியம் மற்றும் பல்துருவ உலகம் என்ற மாயை
- அமெரிக்கப் புரட்சி குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் இணையவழி கருத்தரங்கு: 1776 இன் வரலாற்று முக்கியத்துவமும் சமகாலப் பொருத்தமும்
- கல்வியாளர் சுமித் சாமிந்த “பல்துருவ உலகம்” பற்றிய மாயைகளைப் பரப்புகிறார்
- G7 வல்லரசுகள் எவியான் உச்சிமாநாட்டில் புதிய போர்த் திட்டங்களைத் தீட்டுகின்றன
