The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 2

நிரந்தரப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தினாலான "பாய்ச்சல்" அல்ல. மாறாக அது பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் தேசத்தை மீளக்கட்டி எழுப்புதலாகும்

Use this version to print | Send feedback

றடெக் எழுதுகிறார்:

லெனினது தத்துவத்திலிருந்து "நிரந்தரப் புரட்சியின்" தத்துவமும் தந்திரோபாயமும் என்றழைக்கப்படும் சிந்தனை ஓட்டத்தை வேறுபடுத்தும் அத்தியாவசிய இயல்பு, முதலாளித்துவ புரட்சியின் கட்டத்தை சோசலிசப் புரட்சியின் கட்டத்துடன் கலத்தலில் இருக்கிறது'. (தந்திரோபாயத்தையும் கவனிக்க- ட்ரொட்ஸ்கி)

இந்த அடிப்படைக் குற்றச்சாட்டோடு தொடர்புபடுத்தியோ அன்றேல் அதன் விளைபயனாகவோ வெறும் பல கரிசினை குறைந்த குற்றச்சாட்டுகள்: ரஷ்யாவின் நிலைமையில் ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சி வளரமாட்டாது என்பதை ட்ரொட்ஸ்கியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆதலாலேயே அவர் ஜனநாயக சர்வாதிகார கட்டத்தை தாண்டிப் பாயவேண்டும் என்கிறார். ட்ரொட்ஸ்கி விவசாயிகளின் பாத்திரத்தை நிராகரிக்கிறார். இதிலேதான் 'மென்ஷிவிக்குகளினதும் ட்ரொட்ஸ்கியினதும் கூட்டுப்பார்வைகள் பொருந்துகின்றன. நான் முன்பு கூறியாங்கு இவையெல்லாம் எனக்கெதிராகவென்றால் சீன புரட்சியின் அடிப்படைகள் பற்றிய எனது நிலைப்பாட்டை பக்க சாட்சியங்களோடு நிறுவுவதற்கும்: வளமையான இலக்கிய பக்கத்தை நோக்குமிடத்து கட்டாயமாக றடெக்கினால் ஆங்காங்கே லெனினில் மேற்கோள்களை காட்ட முடியும்... அதை அவர் செய்தார்: எல்லோரும் கைகளில் இந்தப் பகுதி மேற்கோள்களை வைத்திருக்கிறார்கள். நான் இனிமேல் சீக்கிரம் விளங்கப்படுத்தப்போவது போன்ற லெனினுக்கும் எனக்குமிடையேயான வாக்குவாதமானது வெறுமனே உபகதை போன்றதோடு சரியற்றது. இவை எனது 1905ம் ஆண்டைய நிலைப்பாட்டை எந்தவிதத்திலும் குணாம்சப்படுத்தவில்லை. லெனினது சொந்த எழுத்துக்களிலேயே புரட்சி பற்றிய அடிப்படை பிரச்சினை சம்மந்தமான எனது நோக்கத்திற்கு நேர்முரணான சிறந்த ஆதாரத்தோடு கூடிய சிறந்த குறிப்புரைகள் உண்டு. றடெக், லெனினது வெவ்வேறுவிதமான எனது உண்மையான நோக்கோடு நேரடியாக முரண்படும் குறிப்புரைகளை கூட்டிக்குவித்து இத்தாக்கத்திலுள்ள முரண்பாடுகளை ஒப்புநோக்கி விளக்க முயற்சிக்கவேயில்லை.[1]

1906-ல் லெனின் தனது சொந்த முன்னுரையோடு ரஷ்ய புரட்சியின் உந்துசக்தி என்னும் கவுட்ஸ்கியின் கட்டுரையை பிரசுரித்தார். இது பற்றி ஒன்றும் அறியாமலேயே நான் கவுட்ஸ்கியின் கட்டுரையை சிறையிலிருந்தபடியே மொழிபெயர்த்து அதற்கொரு முன்னுரை வழங்கி கட்சியின் பாதுகாப்பு எனும் எனது புத்தகத்தில் வெளியிட்டேன். லெனினும் நானும் கவுட்ஸ்கியின் ஆய்வோடு பூரணமாக இணங்கியதை வெளியிட்டோம். பிளக்கானேவின் கேள்வி எங்களது புரட்சி முதலாளித்துவப் புரட்சியா அன்றேல் சோசலிசப் புரட்சியா? கவுட்ஸ்கி விடையிறுத்தார். இது இனிமேல் முதலாளித்துவப் புரட்சியாக இருக்க முடியாது. ஆனால் இது இன்னும் சோசலிசப் புரட்சி மட்டத்திற்கு வரவில்லை. அதாவது, இது ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறும் இடைமருவும் நிலையையே பிரதிநிதித்துவப்படுத்தும். இதை தொடர்புபடுத்தியே லெனின் தனது முன்னுரையை எழுதினார்.

"பொதுவான குணாம்சத்தில் எமது புரட்சி முதலாளித்துவப் புரட்சியா சோசலிசப் புரட்சியா? அது பழைய மாதிரி என்கிறார் கவுட்ஸ்கி. இப்படி இந்த பிரச்சினையை அணுகக்கூடாது. அப்படி அணுகுவது மார்க்சிச முறையல்ல. இன்றைய புரட்சிகர இயக்கத்தில் முதலாளித்துவம் உந்துசக்திகளில் ஒன்றல்ல. அதே நேரத்தில் ரஷ்யாவில் வருவது சோசலிசப் புரட்சியுமல்ல".

(லெனின் நூல்தொகுதி, பக்கம் 82 கவுட்ஸ்கியின் குறுநூலான ரஷ்யப் புரட்சியின் உந்துசக்தியும் எதிர்பார்ப்பும்)

லெனின் இந்த முன்னுரையை எழுதியதன் பின்பும் முன்பும் எத்தனையோ தடவை திட்டவட்டமாக ரஷ்யப் புரட்சி முதலாளித்துவ புரட்சியாக வரும் என்று எழுதியுள்ளார். இது ஒரு முரண்பாடா? இன்று ட்ரொட்ஸ்கிசம் என விமர்சிக்கப்படும் வடிவத்திலேயே லெனினை அணுகினோமானால் பல டஜன் பலநூறு முரண்பாடுகளை எந்தவித கஷ்டமுமின்றி காணலாம்... வித்தியாசமான காலகட்டங்களில் பிரச்சினைகள் வித்தியாசமான முறையில் அணுகப்பட்டதென்று கரிசினையான-உணர்வுபூர்வமான வாசகர்களுக்கு இவை தெளிவாகும். ஆனால் இவை லெனினது கருத்துருவின் அடிப்படை ஒற்றுமையை எந்தவிதத்திலும் முரண்படுத்தவில்லை என்பது தெளிவாகும்.

மற்றொருபுறத்தில், உடனடி வரலாற்றுக் கடமையின் நோக்கில் புரட்சியின் முதலாளித்துவ தன்மையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் இது அதன் உந்து சக்தியையும் முன்னோக்கையும் பொறுத்தமட்டில் மாத்திரம்தான். நிரந்தரப் புரட்சி பற்றிய எனது அந்நாளைய அடிப்படை வேலைகள் (1905-1906) பின்வரும் வாக்கியங்களோடு தொடங்குகின்றன: "ரஷ்ய புரட்சியானது சமூக ஜனநாயகவாதிகளை தவிர மற்றைய எல்லோரும் எதிர்பாரதபடி வந்தது. முதலாளித்துவ அபிவிருத்திக்கும், கிழடு தட்டிய மன்னராட்சிக்கும் இடையேயுள்ள முட்டி மோதலினால் தவிர்க்க முடியாதபடி ரஷ்யாவிலே புரட்சி வெடிக்குமென்று மார்க்சிசம் எப்போதோ எதிர்வு கூறியது. இதை முதலாளித்துவ புரட்சி என்றும் கூறும் அதேவேளை "முதலாளித்துவ சமுதாயம் முழுமையடையக்கூடிய இயல்பான சூழ்நிலைகளை" அமைப்பதுதான் புரட்சியின் உடனடி பணியென்று அப்பொழுது மார்க்சிசம் சுட்டிக்காட்டியது. மார்க்சிசவாதிகள் இப்பொழுது முற்றிலும் வேறான பணியோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அபிவிருத்தி காணும் புரட்சியின் உள் இயங்குமுறையை ஆய்வு செய்வதன் மூலம் புரட்சியின் "சாத்தியப்பாடுகளை" கண்டறியும் முற்றிலும் வேறான பணியோடு முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். எமது சமூக வரலாற்று அமைப்பு அபிவிருத்தியின் பிரத்தியேகப் போக்கின் விளைபயனால் ரஷ்ய புரட்சி முற்றிலும் பிரத்தியேகமான குணாம்சத்தை உடையது. ஆதலால், இது புதிய வரலாற்று வாய்ப்பு வளத்திற்கு வழி திறந்துவிட்டது." (எங்களது புரட்சி 1906 கட்டுரை, "விளைவுகளும் வாய்ப்புவளங்களும்" பக்கம் 224)

"எடுத்துக்கொண்ட முதலாளித்துவ புரட்சியின் இயங்குமுறை வழங்கிய முதலாளித்துவப் புரட்சி என்ற பொதுவான சமூகப் பதம் எந்த வகையிலும் அரசியற் தந்திரோபாய பிரச்சினைகளை, முரண்பாடுகளை மற்றும் தொல்லைகளை தீர்க்காது." (அதே புத்தகம் பக்கம் 249)

ஆகவே நான் புரட்சியின் முதலாளித்துவ குணாம்சத்தை நிராகரிக்கவில்லை. அன்றைய நாளில் அதுதான் வரவிருந்தது. அதனோடு நான் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் கலக்கவில்லை. எமது நாட்டில் முதலாளித்துவ புரட்சியின் வர்க்க இயங்கியலானது பாட்டாளி வர்க்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர இருந்ததையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமின்றி ஜனநாயகக்கடமைகள் கூட தீர்க்கப்படமாட்டாது என்பதையும் காட்ட நான் பிரயத்தனப்பட்டேன்.

அதே கட்டுரையில் (1905-1906) நான் எழுதினேன்: முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் வளர்ந்து பலமடையும். இந்த அர்த்தத்தில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தியானது பாட்டாளி வர்க்கம் அதன் சர்வாதிகாரத்தை நோக்கி அபிவிருத்தியடைவதாகிறது. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் மாறும் நாளும் மணியும் உற்பத்தி சக்திகள் எந்த மட்டத்திற்கு அபிவிருத்தியடைந்துள்ளன என்பதில் நேரடியாகத் தங்கிநிற்கவில்லை. மாறாக அது வர்க்கப் போராட்ட உறவுகளிலும் சர்வதேச நிலைமையிலும் ஈற்றில் எத்தனையோ அகவயக் காரணிகளான தொழிலாளர்களின் மரபுகள், முன்முயற்சி, தொழிலாளர்களின் போரிடுவதற்கான தயார்நிலை ஆகியவற்றை பொறுத்திருக்கின்றது.

"பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டிற்கு முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாட்டில் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுதல் சாத்தியமாகும்... தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஒரு நாட்டின் மூலவளங்களிலுமே பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் தங்கிநிற்பதென்று கற்பனைசெய்தல் சடவாத "பொருளாதார" தப்பெண்ணமும் எளிமைப்பட்ட மதியீனமும் ஆகும். இந்தப் பார்வைக்கும் மார்க்சிசத்திற்கும் சம்மந்தமேயில்லை.

"ரஷ்ய புரட்சியானது முதலாளித்துவ தாராண்மை அரசியல்வாதிகள் பூரணமாக ஆட்சி செய்வதற்கு தயாராகு முன் ஆட்சி அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு மாறும் சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பதும் புரட்சி வெற்றிவாகை சூடினால் அதைத்தான் செய்யும் என்பதுமே எங்களது பார்வையாகும். (அதே புத்தகம் பக்கம் 245).

இந்த வரிகள் கொச்சை "மார்க்சிசத்திற்கு" எதிராக வாதத்தை கொண்டிருந்தது, அது 1905-1906-களில் வழக்கத்திலிருந்தது மட்டுமல்லாமல், லெனின் வருவதற்கு முன்னான 1917 மார்ச், போல்ஷிவிக் மாநாட்டின் குரலையும் கூட நிர்ணயித்தது, மற்றும் ஏப்ரல் மாநாட்டில் றிக்கோவின் பேச்சில் அதன் மிக மடத்தனமான வெளிப்பாட்டை கண்டது. கம்யூனிச அகிலத்தின் 6-வது காங்கிரசில் இந்த போலி மார்க்சிசமும், அதாவது பண்டிதநுணுக்கத்தால் தூண்டப்பட்ட பண்பற்ற 'பொது அறிவும்' சூசினின் போன்ற அனேகரின் பேச்சின் விஞ்ஞான ஆதாரம். இது நடந்தது அக்டோபர் புரட்சி நடந்து பத்து வருடத்தின் பின்னராகும்!

"முடிவுகளும் வாய்ப்புவளங்களும்" என்பதின் முழு சிந்தனைத் தொடரையும் இங்கு மீளக்கொணரக்கூடிய சாத்தியக்கூறு இல்லாததால் 1905 Natchalo-வில் பிரசுரமான கட்டுரைகளில் இருந்து சில மேற்கோள்களை இங்கு கூறுகிறேன்.

"எங்களது தாராண்மை முதலாளித்துவ வாதிகள் புரட்சியின் உச்சக்கட்டத்திற்கு முன்னதாகவே எதிர்ப் புரட்சியாளர்களாக முன்னுக்கு வந்தார்கள். ஒவ்வொரு இக்கட்டான கணங்களிலும், எங்களது புத்திஜீவி ஜனநாயகவாதிகள் தங்களது ஆண்மையின்மையை காட்டினார்கள். விவசாயிகள் முழுமையாக கிளர்ச்சி எழுச்சியின் அடிப்படைச் சக்தியை பிரதிநித்துவப்படுத்தினர். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு சக்தியால் மட்டுமே விவசாயிகளை புரட்சிக்கு சேவை செய்யக்கூடியதாக இயக்க முடியும். புரட்சியிலே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணித் தன்மையானது இது புரட்சிகர கிராமப்புறத்தோடு நேரடித்தொடர்பை உண்டாக்குவதை பொறுத்ததும் இராணுவத்தை தன்பால் கவர்ந்து அதன் செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதையும் பொறுத்துமே இருக்கிறது. இவைகளே தொழிலாள வர்க்கத்தை தவிர்க்க முடியாதபடி ஆட்சிக்கு கொண்டு வரும். புரட்சி பூரணமாக வெற்றிவாகை சூடுவதென்பது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியேயாகும். இது மேலும் புரட்சி தடங்கலின்றி செல்வதையே குணாம்சப்படுத்துகிறது". (எங்களது புரட்சி, பக்கம் 172)

றடெக் எழுதும் எல்லாவற்றுக்கும் நேர்மாறாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் எதிர்நோக்கியிருப்பதையும் ஈற்றில் வளருவதையும் சுருக்கமாகக் கூறுமிடத்து அது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியிலிருந்தே எனலாம் ... ஆதலால்தான் இதை நிரந்தரப் புரட்சியென்று அழைக்க வேண்டும். (தங்குதடையற்றது) றடெக் விரும்புவது போல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஜனநாயக புரட்சி பூரணமானதன் பின் வராது. அது அப்படி இருந்திருந்தால் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வந்திராது. விவசாயிகளது பிரச்சினை சோசலிசப் புரட்சிக்கு முன்பு தீர்ந்திருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் குறைந்த பாட்டாளி வர்க்கமுள்ள பின்தங்கிய நாட்டில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்க முடியாது. இல்லை, முதலாளித்துவப் புரட்சியின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிகழக்கூடியதாக மற்றும் தவிர்க்க முடியாததாக காணப்பட்டது துல்லியமாக ஏனெனில் விவசாயப் புரட்சியின் பணிகளை தீர்க்கக்கூடிய வேறு சக்தி மற்றும் வேறு வழிமுறைகள் இருக்கவில்லை. சரியாக சொல்லுமிடத்து இது ஜனநாயகப்புரட்சி சோசலிசப்புரட்சியாக வளர்ந்து செல்லும் எதிர்கால வாய்ப்புவளத்தை திறக்கிறது.

"உண்மை என்னவென்றால் பாட்டாளி வர்க்க பிரதிநிதி அதிகாரமற்ற பிணையாள் போன்றல்லாமல், தலைமை கொடுக்கும் சக்தியாக அரசாங்கத்தினுள் உட்புகுந்து குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் உயர்ந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் இடையேயுள்ள எல்லையை நிர்மூலமாக்கி அரசுடமையாக்கலை உடனடியாக செயல்படுத்த வேண்டும். சொல்லப்போனால், அது கூட்டுத்தன்மையை நாளின் நடப்பாக வைக்கும். இந்த திசைவழியில் பாட்டாளி வர்க்கம் அதன் முன்னேற்றத்தை உயர்த்திப் பிடிக்கும் புள்ளி, சக்திகளின் உறவைப் பொறுத்தே இருக்கும் மாறாக எவ்வகையிலும் பாட்டாளி வர்க்க கட்சியின் மூல நோக்கங்களைப் பொறுத்து அல்ல.

"இதன் காரணமாகவே முதலாளித்துவப் புரட்சியில் சிறப்பு வடிவத்திலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்க ஜனநாயக சர்வாதிகாரம் (அல்லது பாட்டாளிகள் விவசாயிகள் ஜனநாயக சர்வாதிகாரம்) பற்றி பேச்சு இருக்க முடியாது. அதன் ஜனநாயக வேலைத்திட்ட வரம்புகளை தாண்டிச்செல்லாமல் பாட்டாளி வர்க்கத்தால் தனது சர்வாதிகாரத்தின் ஜனநாயக குணாம்சத்தை பாதுகாக்க முடியாது.....

"பாட்டாளி வர்க்கம் ஒரு தடவை ஆட்சியைக் கைப்பற்றிய மாத்திரமே அதற்காக கடைசி அந்தலை மட்டும் போராடும். அதிகாரத்தை நிலை நிறுத்தவும் வலுப்படுத்தவுமான போராட்டத்தில் இன்னுமொரு ஆயுதம் என்னவெனில், கிளர்ச்சி செய்வதும் ஒழுங்கமைப்பதுமாகும். குறிப்பாக, இது கிராமப்புறங்களில் செய்யப்பட வேண்டும். மற்றைய ஆயுதம் கூட்டாண்மைக் கொள்கையாகும். கூட்டாண்மை என்பது கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய நிலையிலிருந்து முன்னேறிப் போவதற்கான தவிர்க்க முடியாத வழி மாத்திரமல்ல, பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவோடு கைப்பற்றிய ஆட்சியை பாதுகாப்பதற்கான வழியுமாகும்" (விளைவும் வாய்ப்பு வளங்களும் பக்கம் 258)

நாங்கள் மேலும் போவோம்:

"எங்களுக்கு புரட்சி பற்றிய ஒரு சிறந்த உதாரணம் தெரியும் ... இங்கே முதலாளித்துவ பூர்சுவாக்கள் ஆட்சி செய்வதற்கான நிலைமையானது பயங்கரவாத சர்வாதிகாரத்தால் வெற்றிவாகை சூடிய சான் குளோற்றால் (Sans-Culottes) தயாரிக்கப்பட்டது. (நான் இதை 1908 மென்ஷெவிக் செறவானினுக்கு எதிராக எழுதினேன்) அந்த சகாப்தத்தில் பெருந்தொகை நகர மக்கள் கம்மாளர்கள், வியாபாரிகள் போன்ற குட்டி முதலாளித்துவ வாதிகளாலானவர்கள் ஆவர். இந்த மக்கள் யக்கோபின் தலைமைத்துவத்தை பின்பற்றினார்கள். இன்று ரஷ்யாவின் நகர மக்களில் அதிகமானோர் தொழிற்துறை பாட்டாளிகளால் ஆனவர்கள். ஒரு நிகழக்கூடிய வரலாற்றுக் காலகட்டத்தில் முதலாளித்துவபுரட்சியின் வெற்றியின் சாத்தியம், பாட்டாளி வர்க்கம் புரட்சிகர ஆட்சியை கைப்பற்றுவதால் மட்டும் சாத்தியமென்பதன் நிரூபணத்தையே இந்த ஒப்புவமை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புரட்சி முதலாளித்துவ புரட்சியாக இல்லாது போய்விடுமா? ஆமும் இல்லையுமே பதிலாகும். இது சம்பிரதாய சிறப்புப்பெயர்களில் தங்கியிருக்கவில்லை மாறக நிகழ்வுகளின் மேலதிக அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கங்களின் கூட்டால் தூக்கியெறியப்பட்டால், அவர்களுள் விவசாயியும் கூட விடுவிக்கப்பட வேண்டியது, அப்பொழுது புரட்சியானது அதன் மட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவ வர்க்க தன்மையை தக்க வைக்கும். இருந்தபோதிலும் பாட்டாளி வர்க்கம் ரஷ்ய புரட்சியின் தேசிய சட்டத்தை உடைத்தெறிந்து அதன் முழு ஆட்சியை அமுல் செய்யமுடியும் என்பதை நிறுவிக்காட்டினால் அந்நிகழ்ச்சியானது உலகப் புரட்சிக்கு கட்டியங் கூறுவதாக அமையும். கேள்வி என்னவென்றால் எந்தப் பருவத்தை ரஷ்ய புரட்சி அடைந்துள்ளது? இதற்கு நிபந்தனையோடு கூடிய பதிலைத்தான் அளிக்க முடியும். ஒன்று மட்டும் பரிபூரணமாக சந்தேகமற்ற சரி: ரஷ்ய புரட்சியை வெறுமனே முதலாளித்துவ புரட்சியென்று குணாம்சப்படுத்துவது அதற்குள்ளே எவ்விதமான அபிவிருத்தி நிகழ்கிறது என்பதை எங்களுக்கு சொல்லாது விடுவது மாத்திரமல்ல பாட்டாளி வர்க்கம் தங்களது அரச பதவிக்கான சட்டபூர்வமான வாரிசாகக் கூறிக்கொள்ளும் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளோடு என்ன தந்திரோபாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லாமல் விடுவதாகும்." (ட்ரொட்ஸ்கி 1905 ம் ஆண்டு பக்கம்)

அதே கட்டுரையில் இருந்து:

"எங்களது புரட்சி, இது உடனடித் தேவைகள் காரணமாக முதலாளித்துவ புரட்சியாகவே வளரும் ஆனால் தொழிற்துறை ஜனத்தொகையின் அதீத வர்க்க துருவப்படுத்தலின் ஒரு பூர்சுவா வர்க்கமும் தனது சமுதாய சுமையையும் அரசியல் அனுபவத்தையும் தங்களது புரட்சிகர சக்தியையும் ஒன்றாய் இணைத்து வெகுஜனங்களுக்கு தலைமை கொடுக்க இலாயக்கற்று இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட தொழிலாள, விவசாய வெகுஜனங்கள் அவர்களது கடுமையான பள்ளியான சாந்தமாக்க முடியாத முட்டி மோதல்கள் கொடூரம் நிறைந்த தோல்விகள் என்ற சொந்த வழக்கங்களினோடு அவர்களின் வெற்றிக்கு அவசியமான அரசியல்-ஸ்தாபன முன்நிபந்தனைகளை தோற்றுவிக்க விடப்படவேண்டும். வேறு பாதைகள் அவர்களுக்கு, திறக்கப்படவில்லை." (ட்ரொட்ஸ்கி 1905ம் ஆண்டு பக்கம் 267-268)

விவசாயிகள் சம்மந்தமாக மிகவும் உக்கிரமான தாக்குதற்குரிய புள்ளி மீது இன்னுமொரு மேற்கோள் முடிவுகளும் வாய்ப்பு வளங்களும் என்பதிலிருந்து இங்கு கட்டாயம் சான்றைக் குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. 'ஆட்சி பீடமேறிய பாட்டாளிகளும் விவசாயிகளும்' என்ற சிறப்பு அத்தியாயத்தில் பின்வருவன கூறப்பட்டுள்ளன:

"பாட்டாளி வர்க்க இயக்கம் புரட்சியின் அடித்தளத்தை விஸ்தரிக்காமல் தனது ஆட்சியை கெட்டியாக்க முடியாது. புரட்சியின் முன்னணிப் படையான நகர்ப்புற பாட்டாளிகள், அரசினது ஆளும் நிலைக்கு வந்த பின்புதான் உழைக்கும் மக்களின் எத்தனையோ பகுதியினர் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள் புரட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியல் ரீதியில் அணிவகுக்கப்படுவார்கள். பின்னர் அரச வளங்களின் உதவியுடனேயே புரட்சிகர கிளர்ச்சியையும் ஒழுங்கமைத்தலையும் செய்ய வேண்டும். சட்டமியற்றல் அதிகாரம் கூட வெகுஜனங்களை புரட்சிகரமாக்கும் வலிமைமிக்க கருவியாகும்.

விவசாயிகளின் மிக அடிப்படை புரட்சிகர நலன்களின் தலைவிதியானது, விவசாயி ஒட்டுமொத்தமாகவும் கூட, ஒரு பிரிவு என்ற வகையில், புரட்சியின் தலைவிதியோடு பிணைக்கப்பட்டவர்கள் ஆவர், அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தலைவிதியோடு பிணைக்கப்பட்டவர்களாவர்.

"அதிகாரத்திலுள்ள பாட்டாளி வர்க்கம், விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த வர்க்கமாகவே திகழும். பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கமானது, ஜனநாயக சமத்துவத்தை மாத்திரமல்லாமல், சுதந்திரமான சுய - அரசாங்கத்தை ஏற்படுத்துவது, பணக்கார வர்க்கங்களின் மேல் வரிச்சுமை முழுவதையும் திணிப்பது, ஆயுதபாணியாக்கப்பட்ட மக்களுள் நிரந்தர இராணுவத்தை கலைப்பது, மதக்கோவில்களின் கட்டாய வரியை நீக்குவது, நில உறவுகளில் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் புரட்சிகர மாற்றங்களை (அபகரிப்புக்களை) அங்கீகரித்தலையும் அர்த்தப்படுத்தும். விவசாயத்திலே தக்க மாற்றங்களைச் செய்யும் அரச பணியின் தொடக்கமாகவே பாட்டாளி வர்க்கம் இந்த மாற்றங்களைச் செய்யும். அப்படியான நிலைமைகளுக்குள்ளே, ரஷ்ய விவசாயிகள் புரட்சியின் முதலும் மிகவும் கஷடமானதுமான காலகட்டத்தில், புதிய சொத்துடமையாளர்களுக்கு தனது துப்பாக்கி முனைகளின் பலத்தினால், அவர்களின் உடமைகளுக்கு கேடுநேராமல் உத்தரவாதம் செய்த நெப்போலியன் பொனபாட்டின் இராணுவ அரசை பராமரித்த பிரெஞ்சு விவசாயிகளுக்கும் குறைவில்லாமல், அனைத்து நிகழ்வுகளிலும் ஒரு பாட்டாளி வர்க்க அரசை பராமரிக்க ஆர்வங்கொள்வார்கள்.

ஆனால் விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தை ஒருபுறமாகத்தள்ளிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற மாட்டார்களா? அது நடக்க முடியாத காரியம். எல்லா வரலாற்று அனுபவங்களும் இப்படியான ஊகத்தை எதிர்கின்றன. விவசாயிகள் சுயாதீனமான ஒரு அரசியல் பாத்திரத்தை வகிக்க பரிபூரணமாக இலாயக்கற்றவர்கள் என்றே அனைத்து வரலாற்று அனுபவங்களும் கூறுகின்றன (பக்கம் 251).

இவை யாவும் 1929-லோ 1924-லோ எழுதப்படவில்லை. 1905-ல் எழுதப்பட்டவை. இவைகள் "விவசாயிகளை உதாசீனம்" செய்வதாக எழுதப்பட்டிருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்? எங்கே விவசாயப் பிரச்சினையில் இருந்து "தாண்டி செல்லப்பட்டிருக்கிறது"? இதுவல்லவே நேரம் நண்பர்களே, சற்றே விழிப்பாக இருப்பதற்கு?

இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஸ்ராலின் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார் என்பதை பார்ப்போம். லெனினது ஜெனீவா கட்டுரையோடு அனைத்து முக்கியமான விடையங்களோடும் இணங்கியுள்ள 1917 பெப்ரவரி புரட்சி பற்றிய எனது நியூயோர்க் கட்டுரையை மேற்கோள்காட்டி கட்சியிலுள்ள பிற்போக்கு வாதத்தின் தத்துவாசிரியர் பின்வருமாறு எழுதுகிறார்:

"....ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் குறைந்தபட்சம் லெனினது எழுத்துக்களோடு கடிதத்தோடு ஆத்மீக ரீதியிலோ முடிவுக்கு வருவதிலோ இசைந்து போகவில்லை. அவை, முற்றுமுழுதுமாக ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் விரோத "ஜார் வேண்டாம், ஆனால் தொழிலாளர் அரசாங்கம்" என்ற, விவசாயி இல்லாத ஒரு புரட்சியை உட்குறிப்பாய் தெரிவிக்கும் சுலோகத்தையே பிரதிபலிக்கிறது. (கட்சியின் நானாவித தொழிற்சங்கங்களின் ஐக்கிய சபையின் மத்திய குழுக் கூட்டத்தில் ஸ்ராலின் நவம்பர் 19-1924 ஆற்றிய பேச்சு, ஸ்ராலினது எழுத்துக்கள் பாகம் 6, பக்கம் 349)

"ஜார் வேண்டாம் ஆனால் தொழிலாளர் அரசாங்கம்" என்னும் (ட்ரொட்ஸ்கியினது என்று கூறப்படுவதின்) "போல்ஷிவிக் விரோத சுலோகங்கள்" பற்றிய இவ்வார்த்தைகளின் ஒலி கவனத்திற்குரியது. ஸ்ராலினை பொறுத்தவரை போல்ஷிவிக் சுலோகம், இப்படி இருக்க வேண்டுமாம்: "தொழிலாளர் அரசாங்கம் வேண்டாம் மாறாக ஜார்', நாங்கள் பின்பு ட்ரொட்ஸ்கியின் சுலோகங்கள் என்று சொல்லப்படுபவை பற்றி பேசுவோம்: இப்பொழுது தற்கால சிந்தனையின் மேதையாக போகிற ஒருவரின் பேச்சை கேட்போம். சிலவேளை அவர் எழுத்தறிவு குறைந்தவராக இருக்கலாம். அவர் தத்துவார்த்த விடையங்களிலே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து நிரந்தர விடுமுறை பெற்றவர். நான் இங்கே லுனார்ஸ்கியைப் பற்றி சொல்கிறேன்:

"1905-ல் லெவ் டாவிடோச் ட்ரொட்ஸ்கியின் யோசனையானது: பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து தனிமைப்பட்டிருக்க வேண்டும்(!) முதலாளித்துவத்திற்கு ஆதரவு வழங்கக்கூடாது. அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதமாகும். மொத்த ஜனத்தொகையிலே ஏழு தொடக்கம் எட்டு சதவீதமானவர்களே பாட்டாளி வர்க்கமாதலால் இந்தச் சிறிய எண்ணிக்கையிலான காரியாளர்களை வைத்துக்கொண்டு பாட்டாளி வர்க்கம் தான் தனித்து புரட்சியை செய்து முடிப்பது மிகவும் கஷ்டமாகும். ஆகவே ட்ரொட்ஸ்கி முடிவெடுத்தார் பாட்டாளி வர்க்கம் ரஷ்யாவிலே நிரந்தரப் புரட்சி நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து, முழு உலக வெடிமருந்துக் களஞ்சியம், அக்கினி பிரளையத்தை கக்கி, அனல்ஜோதி ஆகும் வரை காத்திருந்து பெரிய வெற்றிக்காக போராட வேண்டும்". (Vlaster Sovydtov சோவியத்துக்களின் ஆட்சி இல-7. 1927 அக்டோபர் புரட்சியின் குணாம்சம் A. லூனாசார்ஸ்கி, பக்கம்10)

வெடிமருந்துகள் கனல்கக்கும் வரை பாட்டாளி வர்க்கம் 'கட்டாயம் தொடர்ந்து தனிமைப்பட்டிருக்க வேண்டும்'. தங்களது சின்னத் தலைகளுக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் அந்தக் கணத்தில் இன்னும் 'தனிமைப்படாத' மக்கள் கொமிசார்கள் எவ்வளவு கெட்டித்தனமாக எழுதுகிறார்கள். (ரஷ்ய மொழியில் கனல் கக்குவதற்கு சின்னத்தலை என்ற அர்த்தமும் உண்டு) நாங்கள் லுனார்ஸ்கியின் விஷயத்தில் அவ்வளவு கடுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கேற்ப அப்படித்தான். கடைசி ஆய்வில் பார்க்கும் பொழுது அவரது துப்புக்கெட்ட முட்டாள்தனம் ஏனைய அநேகரோடு ஒப்பிடுமிடத்து பெரிதாக அர்த்தமற்றதாகி விடாது.

ஆனால் எப்படி, ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை பாட்டாளி வர்க்கம் 'தொடர்ந்து தனிப்பட்டிருக்க வேண்டும்'? 1906ம் ஆண்டு ஸ்றூவுக்கு எதிராக எழுதிய குறுநூலில் இருந்து ஒரு மேற்கோளை இங்கு பார்ப்போம். இதற்கிடையில் ஒன்று சொல்ல வேண்டும். அந்நாட்களில் லுனார்ஸ்கி அந்த எழுத்தை எல்லையில்லாமல் புகழ்ந்தார். சோவியத் பிரதிநிதிகளைப் பற்றி சொல்லும் பாடத்திலே சொல்லப்பட்டுள்ளது. முதலாளித்துவக் கட்சிகளெல்லாம் வெகுஜனங்களை விழிப்படையச் செய்யவிடாத 'முற்றிலும் ஒரு பக்க போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கையிலே' அரசியல் வாழ்க்கையானது தொழிலாளர்களின் சோவியத்துக்களிலே செறிந்தது. (1905-ல்) நகர்ப்புற குட்டி முதலாளித்துவ ஜனங்கள் மிகவும் நனவோடு இல்லாவிட்டாலும் சோவியத்துக்கள் மேல் அனுதாபம் கொண்டிருந்தார்கள். நானாவிதமான ஒடுக்கப்பட்ட மனம் நொந்தவர்களும் சோவியத்துக்களின் பாதுகாப்புக்காக வந்தார்கள். சோவியத்துக்களின் செல்வாக்கு நகர எல்லைக்கும் அப்பால் வெகுதூரம் பரவியிருந்தது. நீதியின்மையை அனுபவித்த விவசாயிகளின் "முறைப்பாடுகள்", விவசாயிகளின் தீர்மானங்கள் போன்றன சோவியத்துகளுக்கு வந்தன. கிராமங்களிலிருந்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் சோவியத்துக்களுக்கு வந்தார்கள். இங்கேயே, சரியாக இங்கே, முழு தேசத்தினதும் உண்மையான அனுதாபமும் சிந்தனையும் செறிந்திருந்தது, பொய்மைப்படுத்தப்பட்ட ஜனநாயக தேசங்களது அல்ல. (எங்களது புரட்சி பக்கம் 199)

இந்த மேற்கோள்களில் எல்லாம் --இந்த எண்ணிக்கை இலகுவாக இரண்டு மூன்று பத்து மடங்கென்று கூடிக்கொண்டே போகும்-- நகரத்திலும் நாட்டுப்புறங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை சோவியத்துக்களாக அணிவகுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தோடு உருக்கி ஒட்டிய புரட்சியைத்தான் ஒரு தேசியப் புரட்சி என்ற ரீதியில் பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்திற்கு உயர்த்தி, அதன்மூலம் சோசலிசப் புரட்சியாக வளர்ந்த ஜனநாயகப் புரட்சியின் சாத்தியத்திற்கு வழி திறந்ததைத்தான் நிரந்தரப் புரட்சி என்று விவரிக்கலாம்.

நிரந்தரப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பாய்ச்சல் அல்ல; மாறாக முழு தேசத்தையும் பாட்டாளி வர்க்க தலைமையின் கீழ் மீண்டும் கட்டியெழுப்புவதாகும். 1905ம் ஆண்டிலிருந்தே நிரந்தரப் புரட்சி முன்னோக்கு பற்றிய எனது எண்ணக்கருவும் வியாக்கியானமும் இதுதான்.

பார்வுஸ் பற்றிய றடெக்கினது நிலைப்பாடும் தவறானது.[2] பார்வஸ்சினது 1905ம் ஆண்டு ரஷ்ய புரட்சி பற்றிய நிலைப்பாடு, எனது நிலைப்பாட்டுக்கு அருகாமையில் இருந்தது. ஜார் அரசாங்கத்திலிருந்து சமூக ஜனநாயக அரசாங்கத்திற்கு "பாய்ச்சலில்" மாற வேண்டும் என்பது, பார்வுஸ்சினது நிலைப்பாடாக இருந்ததென்று றடெக் மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்கிறார். றடெக் தனது கட்டுரையில் இன்னொரு இடத்திலே தன்னையே முரண்படுத்தி ஆனால் சரியாக புரட்சி பற்றிய எனது பார்வையை பார்வுஸ்சிலிருந்து வித்தியாசப்பட்டது என்கிறார். ரஷ்யாவிலே ஒரு தொழிலாளர் அரசாங்கம் சோசலிசப் புரட்சியின் திசைக்கு நகரும். அதாவது ஜனநாயகக் கடமைகளை இட்டு நிரப்பும் நிகழ்வுப் போக்கினோடு அது சோசலிச சர்வாதிகாரத்துக்கு வளர்ந்து செல்லுமென்று பார்வுஸ்சினது அபிப்பிராயம் இருக்கவில்லை. தொழிலாளர் அரசின் கடமையானது, ஜனநாயக கடமையை செய்வதுதான் என்பதினுள்ளே பார்வுஸ் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார் என்று றடெக்கினால் காட்டப்பட்ட 1905ம் ஆண்டு மேற்கோள் நிறுவுகிறது. பின்பு எவ்வாறு சோசலிசத்திற்கு பாய்வது? புரட்சியின் விளைவாக அவுஸ்ரேலியா மாதிரி ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பது அந்தக் காலத்தைய பார்வுஸ்சினது யோசனையாகும்... அக்டோபர் புரட்சிக்குப் பின்பு பார்வுஸ் ரஷ்யாவை அவுஸ்திரேலியாவுக்கு பக்கத்தில் வைத்தார், அந்நாளில் சமூக சீர்திருத்தவாதத்தின் அதி வலது நிலைப்பாட்டை அவர் எடுத்து ஏற்கனவே நீண்டகாலமாகியிருந்தது. நிரந்தரப் புரட்சி சம்மந்தமான தனது நிலைப்பாட்டை பூசிமெழுகுவதற்காகவே பார்வுஸ் அவுஸ்திரேலியாவை யோசித்தார் என்று இது தொடர்பாக புக்காரின் அடித்துச் சொன்னார். பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது கூட ஜனநாயகத்திற்கான பாதையே அன்றி சோசலிசத்திற்கு அல்ல என்றே, 1905-லும் கூட பார்வுஸ் பார்த்தார். பாட்டாளி வர்க்கம் தொடர்பான அவரது நிலைப்பாடே அக்டோபர் புரட்சியின் முன் எட்டு மாதங்களிலும் பாட்டாளி வர்க்கம் வகித்த பாத்திரமாகும். தொடர்ந்த முன்னோக்கில் பார்வுஸ் குறிப்பிட்டார், அந்தக் காலத்தில் அவுஸ்ரேலிய ஜனநாயகம் அதாவது ஓர் அரசியல் அமைப்பு, அதிலே தொழிலாளர் கட்சி செல்வாக்குள்ளதாக இருந்ததே அன்றி ஆட்சி செய்யவில்லை. அதாவது தொழிலாளர் கட்சி முதலாளித்துவ வேலைத்திட்டத்தின் மிச்சசொச்சங்களை இட்டுநிரப்ப சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்தது. மாற்றி எழுத முடியாத தலைவிதியின் காரணமாக 1923-1928-களில் வலது மையவாதிகளின் அடிப்படை போக்கானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சுருக்கமாக அவுஸ்ரேலிய தொழிலாளர் ஜனநாயகத்தைப்போல கொண்டு வருவதாகும். இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முந்திய ரஷ்ய பத்திரிகைகளிலே அதை தொழிலாளர், விவசாயிகள் நாடெங்கும் கடுமையான ஏற்றுமதி தீர்வையினால் வெளியுலகோடு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கே 'சோசலிச சட்டங்கள்' அபிவிருத்தியாக்கப்பட்டு அதன் வழியே ஒரு நாட்டில் சோசலிசம் கட்டி வளர்க்கப்படுகிறது என்றும் கூறியவற்றை நாம் மீண்டும் யோசித்துப் பார்ப்போமானால் இது மிகவும் தெளிவாக விளங்கும். எனது ஜனநாயகத்திற்கு மேலான பாய்ச்சல் என்ற இல்லாத கட்டுக்கதைகளை மீண்டும் சொல்வதற்கு பதிலாக பிரச்சனையின் இந்த பக்கத்தை முன்னுக்கு தள்ளியமை றடெக்கின் சரியான செயற்பாடாகும்.

பிற்குறிப்பு:

1. என்னால் மீட்டு யோசிக்கக்கூடியதாக இருக்கிறது. புக்காரின் கம்யூனிச அகில காரிய சபையின் எட்டாவது பிளினத்தில் இந்த மேற்கோள்களைக் காட்டினார். நான் உடனே லெனினது அதற்கு நேர்முரணான மேற்கோள்களை எடுத்துக் காட்டினேன். சிறிது நேரத் தயக்கத்தின் பின் புக்காரின் எனக்குத் தெரியும் ஆனால் நான் எனக்குத் தேவையான மேற்கோள்களைக் காட்டுவேனேயன்றி, உனக்குத் தேவையானது அல்ல. இந்த தத்துவஞானிகளின் உள்ளக்கிடக்கை இப்படித்தான். - லியோன் ட்ரொட்ஸ்கி [RETURN TO TEXT]

2. அந்தக் காலத்தில் பார்வுஸ், சர்வதேச மார்க்சிசத்தின் அதி இடதுபுறம் நின்றார் என்பதை நினைவூட்ட வேண்டும் - லியோன் ட்ரொட்ஸ்கி [RETURN TO TEXT]

 
 
©World Socialist Web Site
All rights reserved