World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு

Report from the World Socialist Web Site /Socialist Equality Party conference: "Socialism and the Struggle Against Imperialism and War"

"The turn to authoritarian methods is a symptom of the failure of American capitalism"

உலக சோசலிச வலைதளம்/சோசலிச சமத்துவக்கட்சி
மாநாட்டிலிருந்து ஓர் அறிக்கை

"சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கு எதிரான போராட்டமும்"

"எதேச்சாதிகார வழிமுறைகளுக்குத் திரும்புதல்
அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்வியின் ஒரு அறிகுறி"

23 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், ``சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்`` என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30, 2003 நடாத்தப்பட்ட மாநாட்டில் (Lawrence Porter) லோரன்ஸ் போர்ட்டர் ஆற்றிய உரையை கீழே வெளியிடுகின்றோம்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர்குழுவின் உறுப்பினரான லோரன்ஸ் போர்ட்டர் மாநாட்டில் விவாதத்திற்குப்பின் ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் நான்காவது தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்: "ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்!"

ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("உலக சோசலிச வலைதளம் சோசலிசம் மற்றும் போருக்கெதிரான போராட்டத்தைப் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துகிறது"). இதைத் தவிர உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் தொடக்க உரையை ("கட்டுக்கடங்காத நெருக்கடிக்குள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார்.

மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல் 2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (ஈராக்கில் நிகழ்த்தப்பெறும் போரை வன்மையாகக் கண்டிக்கும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு அறைகூவி அழைக்கும் தீர்மானங்கள்", "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக அழைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் தீர்மானங்கள்", "போர் மற்றும் அமெரிக்கச் சமுதாய நெருக்கடி மீதான தீர்மானம், உலக சோசலிச வலைத்தளத்தின் வளர்ச்சி பற்றிய தீர்மானம்")

ஏப்பிரல் 22 அன்று உலக சோசலிச வலைத்தளமானது முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தீர்மானங்களை அறிமுகப்படுத்திய பட்ரிக் மார்ட்டின், உலிறிச் ரிப்பேர்ட் மற்றும் பாரி கிரே ஆகியோரின் கருத்துக்களை முறையே பின்வருமாறு வெளியிட்டது: (பார்க்க: "ஈராக்கிற்கெதிரான அமெரிக்கப் போர் விஷயத்தில் முரண்பாடுகளும் பொய்களும்", "தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் மையத்தில் நிற்பது சர்வதேசியம்", "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக!")

வரும் நாட்களில் மற்றைய தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களின் கருத்துக்களையும் எஞ்சிய தீர்மானங்களையும் மகாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் கொண்டுவந்த வாழ்த்துக்களின் தொகுப்பையும் நாம் பிரசுரிக்க இருக்கிறோம்.

நாம் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் மிகப்பெரிய அளவிலானவை; அவற்றுக்கு மாபெரும் சிந்தனைகள் தேவை. ஒரு வரலாற்று இயக்கத்தில் மாபெரும் சிந்தனைகள் இணையும்போது பெரும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதைப் பற்றியே நாம் இன்று பேச இருக்கின்றோம்.

சோசலிசச் சிந்தனைகள் விஞ்ஞான அடிப்படையில் கார்ல் மார்க்சினால் அடித்தளமிடப்பட்டன. ஒரு காலகட்டத்தில் சோசலிசச் சிந்தனைகள் தொழிலாள வர்க்க மக்களிடையே மாபெரும் ஆதரவைத் தோற்றுவித்தன. அச்சிந்தனைகள் ரஷியப் புரட்சிக்குப் பின்னர் தோன்றிய அதிகாரத்துவத்தினரால் கூடுதலான அளவு காட்டிக்கொடுக்கப்பட்டன. அந்த வரலாற்று அனுபவங்களினை ஆய்வு செய்யாமலும் புரிந்து கொள்ளாமலும் வருகின்ற காலத்தில் தொழிலாள வர்க்கம் சந்திக்க இருக்கும் போராட்டங்களுக்கு அவற்றைத் தயாரிக்க நம்மால் இயலாமற்போய்விடும். எனவேதான் இன்று நாம் விவாதிக்க இருக்கும் அரசியல் வினாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். நிகழ்ச்சி நிரலில் வெகுஜன மக்களின் தன்னியல்பான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கேள்வி யாதெனில்: எத்திசையில் அவை செல்லும்?

எனக்கு முன்பு பேசியவர், `என்ன செய்யவேண்டும்` என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கம், அதிலும் புரட்சிக் கட்சியில் தோய்ந்திருக்கும் அதன் தலைமை, மிகுந்த அளவிலான அரசியல் நனவைக் கொண்டு விளங்கவேண்டும் என்று லெனின் கூறியுள்ளார். இதற்கு வரலாறு, தத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றிய நல்ல தேர்ச்சி தேவையாகும். இந்த விஞ்ஞான அடிப்படையிலான தலைமையை தொழிலாள வர்க்கம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நான் ஒரு தொழிலாள வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கிறேன்; அவ்வாறுதான் நான் வளர்ச்சியுற்றேன்.

ஜனநாயக உரிமைகளைப் பற்றிய தீர்மானத்தையொட்டி அதனுடைய மிக முக்கியமான சில பகுதிகளைப் பற்றிப் பார்ப்போம்.

``புஷ் நிர்வாகம் நவீன அமெரிக்க வரலாற்றில் ஜனநாயக உரிமைகள் மீதான மிக சக்திவாய்ந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலை ஒரு சாக்காக, அமெரிக்க தேச பக்தி சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்ட வரைவு, மற்றைய பிற்போக்கு நடவடிக்கைகள் மூலம் நேர்த்தியான அளவில் ஒரு போலீஸ் அரசுக்கான கட்டமைப்பை உருவாக்க அது வழிவகை செய்துள்ளது.

"`பயங்கரவாதத்திற்கெதிரான போர்` என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களில் முக்கியமான பகுதிகள் அமெரிக்க அரசியலமைப்பிற்கெதிரான போராக நிரூபிக்கப்பட்டுள்ளன. காங்கிரசில் ஜனநாயகக் கட்சியின் துணையாலும் அமெரிக்க செய்தி நிறுவனங்களின் ஆதரவோடும் புஷ் நிர்வாகம் உள்நாட்டில் உளவு பார்க்கும் அதிகாரங்களையும் தேடுதல், கைப்பற்றுதல் போன்ற அதிகாரங்களையும் கைது செய்து விசாரணையின்றி சிறையிலடைக்கும் அதிகாரங்களையும் பெருமளவு அதிகரித்துக் கொண்டுவிட்டது.

``பல லட்சக்கணக்கான குடிபெயர்ந்து வந்தவர்கட்கு, ஆட்கொணர்வு மனு -எந்த நபரும் விசாரணையின்றி, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத நிலையில் காலவரையறையின்றி சிறைப்படுத்தப்படமாட்டார் என்ற உத்தரவாதம்- இனிமேல் பொருந்தாது. செப்டம்பர் 11 பின்னணியில் அமெரிக்க அசாங்கம் அயல்நாட்டுக் குடியினரையும் அமெரிக்கக் குடிமக்களையும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானவர் என்று கருதுவோரை சிறைபிடித்து எவருக்கும் தெரியாமல் வைக்கலாம் என்று உரிமையை வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு, மத்திய ஆசிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தோரை பயங்கரவாதத்தைச் சார்ந்தவர் என்ற சந்தேகத்தில் விசாரணையின்றிச் சிறையில் தள்ளியது. யார்மீதும் பயங்கரவாதம் தொடர்புடைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, பலரும் விசாரணை நடவடிக்கை எதுவுமின்றி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.``

செப்டம்பர்11ஐ அடுத்து, அன் ஆர்பர் பகுதியிலிருந்து கைது செய்து தடுப்புக்காவலில் தலைமறைவாக வைக்கப்ட்ட ரபி ஹாடாட் (Rabih Haddad) என்ற முஸ்லிம் சமய குருவைப் பற்றி செய்தி சேகரிக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். செப்டம்பர்11 பயங்கரவாதத்தை அவர் எதிர்த்தபோதிலும் அவருடைய கைதுக்கு முன்னரே அவ்வாறு பறைசாற்றியிருந்தபோதிலும் புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்பதில் ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தி உள்ளது.

நிர்வாகத்தினால் குடிபெயர்ந்து வந்தோர் மட்டுமே இத்தகைய இலக்கிற்கு ஆளாகவில்லை. ஜோஸ் பாடிலியோ (Jose Padillio), யாசர் எசம் (Yaser Esam Hamdi) ஆகியோர் உட்பட, அமெரிக்கக் குடிமக்களே கைது செய்யப்பட்டு, தலைமறைவாக வைக்கப்பட்டு, வழக்கறிஞரின் உதவியைப் பெறும் உரிமையை இழந்து நிற்கின்றனர்.

ஜெனிவா உடன்பாடுகளை மிகுந்த இழிவுடன் அமெரிக்க அரசு நடத்தியுள்ளது. ஏறத்தாழ 600 அயல்நாட்டினரை குவான்டனமோபே பகுதியில் காவலுக்குட்படுத்தி புஷ் அரசு சட்டவிரோதமாக வைத்துள்ளது என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட பலரை சித்திரவதைக்குட்படுத்தியதில் அதற்கு பங்கு உண்டு; அதன்விளைவாய் சிலர் மாண்டே போயினர்.

அமெரிக்க தேச பக்தி சட்டம் அரசாங்கத்தை, உளவு பார்த்தால், கண்காணித்தல், மின் இயந்திரங்களிலிருந்து ஒற்று அறிதல் போன்ற அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான அரசியலமைப்புக்கு முரணான செயல்களைச் செய்ய அனுமதித்துள்ளது; இந்த வழிமுறைகள் அதனுடைய அரசியல் எதிரிகட்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பது வெளியே கூறாத உண்மையாகும்.

புஷ் நிர்வாகம் இந்தச் சட்ட மசோதா அதிக அளவு இன்னும் செல்லவில்லை என்றே கருதுகிறது. தற்பொழுது ஒரு புதிய சட்ட மசோதாவைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது - குடியுரிமையாளர் அதை இரண்டாம் தேச பக்தி சட்டம் எனக் கருதுகின்றனர்- முந்தையதைவிட அதிக அளவு ஜனநாயக உரிமைகளைப் பறிப்பவையாக, அந்நிய உளவு கண்காணிப்பு என்ற சட்டத்தின்கீழ் இயங்கும் இரகசிய நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கூடுதலாக்கும்.

தேசபக்தி சட்டத்தின் நூலகக் கண்காப்புப் பிரிவு, அரசாங்கத்திற்கு பொது நூலக ஆவணங்களை நூலகர்கள் மூலம் கேட்கும் உரிமை அளித்துள்ளதோடு நூலகர்கள் அனைத்துப் புரவலரின் சான்றாவணங்களையும் அரசிடம் கொடுக்க வகை செய்துள்ளது. இரண்டாம் தேசபக்தி சட்டத்தில் ஒரு விதி, "பயங்கரவாத" அமைப்பு எனக் கருதப்படுவதற்கு ஆதரவளிப்பவர் என ஒரு அமெரிக்கரை அரசாங்கம் கருதினால் அவருடைய குடி உரிமைகளைக் களைந்துவிடும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.

இந்த விதியின்படி ஒரு குறிப்பிட்ட அயல்நாட்டு நிதி வாங்கும் அறக்கட்டளைக்கு ஒருவர் பணம் அளித்து அவருக்கே தெரியாமல் அரசாங்கம் அதை பயங்கரவாதிகள் இயக்கம் எனக் கருதியிருந்தால் அவரை பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாளர் என குற்றஞ்சாட்டப்பட்டு அவருடைய உரிமைகள் பறிக்கப்பட்டுவிடலாம்.

மரண தண்டனை கூடுதலாகப் பயன்படுத்தப்பட அழைப்பு விடுக்கும் மற்றொரு விதி உள்ளது. அமெரிக்க மக்கள் குடி உரிமை சங்கம் இந்த விதியைப் பற்றிக் கூறுகையில் ``இந்த சட்ட மசோதா மரண தண்டனை விதிப்பதற்கான வழியைக் கூடுதலாக்கியுள்ளது; 15 புதிய மரண தண்டனைக் குற்றங்களை எடுத்துக் கூறுகிறது; அவற்றில் `உள்நாட்டுப் பயங்கரவாதி` என்ற குற்றமும் அடங்கும். சட்டத்தின்படி ஒரு போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் தடையை மீறி சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டால், அதன் விளைவாக யாராவது இறந்தால், அந்த ஆர்ப்பாட்டக்காரர் மரண தண்டனையைச் சந்திப்பதோடு, கூட்ட அமைப்பாளர்களும் உள்நாட்டு பயங்கரவாதிகள் என்ற குற்றத்திற்கு உட்படுவர்.`` (பிரிவு 411)

அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது; ஏனெனில் அதனுடைய கொள்கைகள் மக்களிடையே வரவேற்பைக் கொள்ளவில்லை; எங்கும் பரவிய எதிர்ப்பையே அது தோற்றுவிக்கும். அரசாங்கம் எதேச்சாதிகாரப் போக்கின் வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது என்பதே அமெரிக்க முதலாளித்துவ முறையின் தோல்விக்கு ஒரு அடையாளமாகும்.

என்னுடைய உரையை தீர்மானத்தின் கடைசி சில பத்திகளைப் படித்து அந்த அளவில் முடிவு செய்கிறேன்.

``இந்த மாநாடு குடிபெயர்ந்தோரின் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு செப்டம்பர் 11க்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோருகிறது. சமி அமின்-அல்-அரியன் (Sami Amin Al-Arian) க்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு கோருகின்றது.

``இந்த மாநாடு மேலும் தேசபக்தி சட்டத்தை அமல்படுத்துவதைக் கண்டிக்கிறது; உள்நாட்டு பாதுகாப்புத் துறையைத் தோற்றுவிப்பதையும் கண்டிக்கிறது.``

``இந்த மாநாடு ஜெனிவா உடன்பாடுகளை அமெரிக்க அரசு மதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் போர்க் குற்றவாளிகளுக்கு அனைத்து சட்டபூர்வமான உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும் எனக் கோருகின்றது.

``இம்மாநாடு செப்டம்பர் 11 நிகழ்வுகளைப் பற்றி உண்மையிலேயே சார்பற்ற விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறது.``

``இம்மாநாடு பன்னாட்டு அளவில், குடிபெயர்ந்தோரைப் பாதுகாக்கவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்புவிடுக்கிறது.``

எல்லா பிரதிநிதிகளையும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Top of page