line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும

 

Print part 2 on single page

12. எதிர்ப்பு மற்றும் அதன் முன்னோக்குகளின் தோல்விக்கான காரணங்கள்

கட்சியின் இடது பாட்டாளி வர்க்கப் பிரிவு தன்னுடைய கருத்துக்களை பல பத்திரங்களில் பதிவு செய்து வைத்தது; அவற்றுள் முக்கியமான போல்ஷிவிக் லெனினிச (எதிர்ப்பின்) மேடையானது [Platform of the Bolshevik-Leninists (Opposition)] 1923 இலையுதிர் காலம் தொடங்கி முறையான, அமைப்புரீதியான அழித்தொழிப்பு பிரச்சாரங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றது. அடக்குமுறையின் வழிவகைகள் கட்சியின் உள்ளாட்சியின் தன்மையினால் வரையறுக்கப்பட்டன; அது பாட்டாளி வர்க்கம் அல்லாத வர்க்கங்கள் பாட்டாளி வர்க்கத்தின்மீது கொடுக்கும் அழுத்தம் பலமாக வளர்ந்த அளவுக்கு இன்னும் அதிகாரத்துவத்தன்மையதாகியது. இத்தகைய வழிவகைகளின் வெற்றிக்கான வாய்ப்புக்கள் பாட்டாளி வர்க்கம் மிகப் பெரிய தோல்விகளை சந்தித்த, சமூக ஜனநாயகம் மீண்டும் உயிர் பெற்ற, கம்யூனிஸ்ட் கட்சிகளில் இடைநிலை வாத சந்தர்ப்பவாத போக்குகள் வலுவடைந்த காலகட்டத்தின் பொது அரசியல் தன்மையினால் உருவாக்கப்பட்டன; இதைத்தவிர, இடைநிலைவாத நிலைப்பாடும் முறையாக சமீபத்திய மாதங்களில் வலதிற்கு சரிந்து கொண்டிருந்தது. எதிர்ப்பிற்கு எதிரான முதல் தாக்குதல் ஜேர்மன் புரட்சியின் தோல்வியை அடுத்து உடனடியாக மேற்கொள்ளப்பட்டது; ஏதோ அந்த தோல்விக்கு இது துணை என்பது போல் இது நடந்தது. இந்த தாக்குதல் ஜேர்மனிய தொழிலாள வர்க்கம் வெற்றி பெற்றிருந்தால் ஒருபோதும் நடந்திருக்க முடியாது; அது சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் தன்னம்பிக்கையை அசாதாரணமாக உயர்த்தியிருக்கும்; அதையொட்டி உள்ளேயும், வெளியேயும் பூர்ஷ்வா வர்க்கங்களை எதிர்க்கக்கூடிய மற்றும் இந்த அழுத்தத்தை கடத்துகின்ற கட்சி அதிகாரத்துவத்தை எதிர்க்கும் அதன் சக்தியையும் அதிகரித்திருக்கும்.

1923 இறுதிக்கு பின்னர் கொமின்டேர்னில் நடைபெற்ற மறு குழுக்கூடல் அமைந்ததின் பொருளை தெளிவாகக் கொடுப்பதற்கு, படிப்படியாக எப்படி முன்னணிக் குழு, எதிர்ப்பின் மீது அதன் சரிவின் பல கட்டங்களிலும் தன்னுடைய அமைப்புமுறையிலான "வெற்றிகளை" விளக்கியதை ஆராய்தல் மிகவும் முக்கியமானதாகும். வரைவு வேலைத்திட்டத்தை பற்றிய விமர்சனத்தின் வடிவமைப்பிற்குள் அதை நாம் செய்வதற்கு இல்லை. ஆனால் எதிர்ப்பினர் மீதான முதல் "வெற்றி" எப்படி செப்டம்பர் 1924ல் பார்க்கப்பட்டது மற்றும் விளக்கப்பட்டது என்பதை ஆராய்ந்தாலே போதுமானது. சர்வதேச கொள்கை பற்றிய தன்னுடைய முதல் கட்டுரையில் ஸ்ராலின் கீழ்க்கண்டவாறு கூறினார்:

"கம்யூனிஸ்ட் கட்சிகளின் புரட்சிகர பிரிவின் உறுதியான வெற்றியானது தொழிலாள வர்க்கத்திற்குள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆழ்ந்த புரட்சிகர நிகழ்வுப்போக்குகள் பற்றிய உறுதியான குறிப்பாகும்..."

இதே கட்டுரையில் மற்றொரு இடத்தில்:

"சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியில் (CPSU) இருக்கும் சந்தர்ப்பவாதப் போக்குகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதோடு இந்த உண்மையையும் நாம் சேர்த்துக் கொண்டால், சித்திரம் முழுமையடைந்து விடுகிறது. ஐந்தாம் அகல்பேரவை கம்யூனிச அகிலத்தின் அடிப்படைப் பிரிவுகளில் புரட்சிகர பிரிவின் வெற்றியை ஒருங்கிணைத்தது." [37]

இவ்விதத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் எதிர்ப்பின் தோல்வியானது, ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் இடதிற்கு சென்று கொண்டிருப்பதின் விளைவு என்று அறிவிக்கப்பட்டதுடன், புரட்சியை நோக்கி நேரடியாகச் சென்று கொண்டிருக்கிறது என்றும் இது கொமின்டேர்னின் அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் சந்தர்ப்பவாதிகளை கடந்து புரட்சிகர பிரிவிற்கு ஏற்றத்தைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்பட்டது. இன்று ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், 1923 இலையுதிர்காலத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய தோல்விக்கு பின்னர், பிராவ்தா 1923 தோல்விக்கு பின்னர் வந்த, குறிப்பிட்ட அக்கறையின்மை மற்றும் பெரும் ஏமாற்றம் என்ற அலை, மற்றும் ஜேர்மன் முதலாளித்துவத்தை தன்னுடைய நிலைப்பாட்டை சேர்த்து ஒன்றாக்கிக் கொள்ள அனுமதித்தது" இப்பொழுதுதான் மறையத் தொடங்குகிறது என்று ஒப்புக்கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தானே கண்டுகொள்கிறது. [38]

அப்படியானால், கொமின்டேர்னின் புதிய தலைமைக்கு ஒரு வினா எழுகிறது; இது அவர்களுக்கு புதிது, நமக்கு அல்ல: அப்படியானால் 1923 ல் எதிர்ப்பின் தோல்வி மற்றும் அதைத் தொடர்ந்த ஆண்டுகள் தொழிலாள வர்க்கத்தின் இடதுபுற ஊசல் என்று இல்லாமல், ஒரு வலதுபுற ஊசலால் ஏற்பட்டது என்று விளக்கப்படலாமா? இந்த வினாவிற்கு விடை அனைத்தையும் முடிவெடுக்கும்.

1924ல் ஐந்தாம் அகல்பேரவைக்கு கொடுக்கப்பட்ட விடை, பின்னர் பல கட்டுரைகளிலும், உரைகளிலும் கூறப்பட்டது ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கத்திற்குள் இருக்கும் புரட்சிகர கூறுபாடுகளை வலுப்படுத்துவது, புதிய எழுச்சி பெறும் அலை, பாட்டாளி வர்க்கத்தின் வரவிருக்கும் புரட்சி ஆகியவை அனைத்தும் எதிர்ப்பின் "நிலைகுலைவால் ஏற்பட்டது" எனப்பட்டது.

ஆயினும், இப்பொழுது 1923க்கு பின்னர் அரசியல் பிணைப்பு முறைகள் இடதிற்கு என்று இல்லாமல் வலதிற்கு தீவிரமாக நீடித்த காலத்தில் திரும்பியது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுவாகவும் அறியப்பட்டு, மறுக்க முடியாத உண்மையாகவும் மாறிவிட்டது. இதன் விளைவாக, மற்றொரு மறுக்கப்பட முடியாத உண்மை, அதாவது இடது எதிர்ப்பிற்கு எதிரான போராட்டத்தை தொடக்கி உக்கிரப்படுத்தல், இப்போராட்டத்தை கட்சியில் இருந்து வெளியே அனுப்புதல், நாடுகடத்துதல் போன்ற மட்டத்திற்கு வலியுறுத்தல் ஆகியவை ஐரோப்பாவில் முதலாளித்துவ அரசியல் செயற்பாடுகளை ஸ்திரப்படுத்தலுடன் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டது ஆகும். உண்மையில், இந்த வழிவகை கடந்த நான்கு ஆண்டுகளில் முக்கிய புரட்சிகர நிகழ்வுகளினால் தடைக்கு உள்ளாயிற்று. ஆனால் தலைமையின் புதிய தவறுகள், 1923ல் ஜேர்மனியில் செய்யப்பட்டதையும் விடக் கூடுதலானவை, ஒவ்வொரு முறையும் எதிரிக்கு வெற்றி கொடுத்து தொழிலாள வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிக மோசமான நிலைமைகளை ஏற்படுத்தி, அதையொட்டி முதலாளித்துவ உறுதிப்பாட்டிற்கு புதிய நிலைத்திருக்கும் ஆதாரங்களையும் தோற்றுவித்தது. சர்வதேச புரட்சிகர இயக்கம் தோல்விகளால் பாதிக்கப்பட்டது மற்றும் அதனுடன் சேர்ந்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கொமின்டேர்னின் லெனினிச பாட்டாளி வர்க்கப் பிரிவான, இடதுபகுதி தோல்விகளைக் கண்டது.

உலக நிலைமையில் இருந்து வெளிப்படும் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் உள் நிகழ்ச்சிப்போக்குகளை நாம் கவனிக்காமல் விட்டால், அதாவது, புதிய பொருளாதார கொள்கையின் (NEP) அடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பெருகின, அதே நேரத்தில் தலைமையானது நகரத்திற்கும் கிராமப்புறத்திற்கும் இடையே இருந்த " smychka" வின் பொருளாதாரப் பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; தொழில்மயமாக்கல் பணிகளில் இருக்கும் ஒவ்வாத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது, திட்டமிட்ட பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உட்கிரகிக்கவில்லை போன்றவற்றை கவனிக்காவிட்டால், இந்த விளக்கம் முழுமையை அடையாது.

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாட்டாளி வர்க்க புரட்சியின் தோல்விகளின் அடிப்படையில் நாட்டிற்குள்ளே உள்ள அதிகாரத்துவம் மற்றும் குட்டி முதலாளித்துவ அடுக்கினரின் பொருளாதார, மற்றும் அரசியல் அழுத்தத்தின் வளர்ச்சியானது இந்த நான்கு ஆண்டுகளில் எதிர்ப்பின் கழுத்தை சுற்றியிருந்த கயிற்றை இறுக்கமாக்கிய வரலாற்று சங்கிலியாயிற்று. இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாது.

இந்த பகுப்பாய்வில், செயல்படுத்தப்பட்ட நிலைப்பாட்டிற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசம் என்ற பெயரில் நிராகரிக்கப்பட்ட நிலைப்பாட்டை கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் நாம் எதிர்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்; பொதுக் கூறுபாடுகளில் இந்தப் போராட்டத்தின் பொருள் ஒவ்வொரு மார்க்சிசவாதிக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். எப்பொழுதாவது கூறப்படும் பகுதி "ட்ரொட்ஸ்கிச" குற்றச்சாட்டுக்கள் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக வந்த உண்மையான, கற்பனையான மேற்கோள்களால் உறுதுணைச் சான்றுகளை கொண்டு தற்காலிக குழப்பத்தை கொடுத்தன என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சிந்தனைப் போராட்டம் பற்றித் தெளிவான, பொதுவான மதிப்பீடு கொடுக்கப்பட்டதே இரண்டு வழிவகைகள் இங்கு இருந்தன என்பதற்கு நிரூபணம் ஆகும். அவற்றுள் ஒன்று நனவுடன் கூடிய, தொடர்ச்சியாக இருக்கும் வழிவகையாகும்; இது சோவியத் ஒன்றியத்தின் உள் பிரச்சினைகள் மற்றும் உலகப் புரட்சி பற்றிய பிரச்சினைகளுக்கு லெனினுடைய தத்துவார்த்த மற்றும் மூலோபாய கோட்பாடுகளை அவற்றின் பிரயோகத்தில், வளர்த்ததின் தொடர்ச்சியாகும்; அதுதான் எதிர்ப்பின் நிலைப்பாடாகும். இரண்டாவது நிலைப்பாடு நனவற்ற, முரண்பாடான, ஊசலாடும் நிலைப்பாடாகும், சர்வதேச அரசியலின் பின்னோக்கிய நீரோட்ட காலத்தில் விரோதப் போக்குடைய வர்க்க சக்திகளின் அழுத்தத்தின் கீழ் லெனினிசத்தில் இருந்து கோணல்மாணலாய் சரிந்த விதத்தில் வெளிப்பட்டது; இதுதான் உத்தியோகபூர்வ தலைமையின் நிலைப்பாடாகும். பெரும் திருப்பு முனைகளில் மனிதர்கள் பல நேரமும் வழக்கமான சொற்றொடர்களை கைவிடுவதை விட தங்கள் கருத்துருக்களை கைவிடுதல் எளிதென்று காண்கின்றனர். சிந்தனைப் போக்கின் வண்ணம் மறைந்துவிடுபவர்களுக்கு அது ஒரு பொது விதியாகும். லெனினை அனேகமாக எல்லா அடிப்படைக் கருத்துக்களிலும் திருத்திய வகையில், தலைமை இந்த திருத்தல்வாதத்தை லெனினிசத்தின் ஒரு வளர்ச்சி என்று கூறி, அதே நேரத்தில் லெனினிசத்தின் சர்வதேசப் புரட்சியின் சாராம்சத்தை ட்ரொட்ஸ்கிசம் என்றும் வகைப்படுத்தியது. தன்னை வெளிப்புறமும் உட்புறமும் மூடி மறைத்துக் கொள்ளுவதற்கு மட்டும் அது இதைச் செய்யாமல், தன்னுடைய கீழ்நோக்கிச் சரிதல் வழிவகைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுவதற்கும் செய்தது.

இதைப்புரிந்து கொள்ள முயல்பவர் எவரும் வரைவு வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தை ட்ரொட்ஸ்கிச கட்டுக்கதையை அம்பலப்படுத்தலுடன் நாம் தொடர்புபடுத்தியுள்ளோம் என்று இழிந்த முறையில் நம் மீது சுடுசொற்களை வீசமாட்டார்கள். தற்போதைய வரைவு வேலைத்திட்டம் இந்தக் கட்டுக்கதையில் தோய்ந்துள்ள ஒரு சிந்தனைப் போக்கின் விளைபொருளாகும்; வரைவு வேலைத்திட்டத்தை தயாரித்தவர்கள் இக்கட்டுக்கதையை அதிகம் பரப்பினார்கள், அதிலிருந்து மேற்சென்று அனைத்தையும் அளக்கும் கருவியாக அதைப் பயன்படுத்தினார்கள். துல்லியமாக இந்த சகாப்தத்தைத்தான் முழு வரைவு வேலைத்திட்டமும் பிரதிபலிக்கிறது.

அரசியல் வரலாறானது ஒரு புதிய, அசாதாரணமான கல்விபுகட்டும் அத்தியாயத்தால் வளமாக்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாயத்திற்கு கட்டுக்கட்டுக்கதையின் ஆற்றல் அல்லது மிக எளிதாக, ஒரு அரசியல் ஆயுதமாக கருத்தியல் அளவில் அவதூறு பரப்பல் என்று தலைப்புக் கொடுக்கப்படலாம். இந்த ஆயுதத்தின் சக்தியைக் குறைத்துமதிப்பிடக்கூடாது என்று அனுபவம் நமக்குக் கூறியுள்ளது. "தேவை என்ற நிலையில் இருந்து சுதந்திரம் என்ற நிலைக்கு பாய்ந்து சென்றுவிட்டோம்" என்பதை நாம் அடைவது இன்னும் தொலைவில்தான் உள்ளது; நாம் இன்னும் ஒரு வர்க்கச் சமூகத்தில்தான் வாழ்கிறோம்; அறிவிற்கு எதிர்ப்பு, தப்பெண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் ஆகியவை இல்லாமல் இந்தச் சமூகம் இல்லை. ஒரு குறிப்பிட்ட நலன்கள் அல்லது மரபார்ந்த வழக்கங்களுக்கு ஒத்து இருக்கும் ஒரு கட்டுக் கதை எப்பொழுதுமே ஒரு வர்க்கச் சமூகத்தில் பெரும் சக்தியைச் செலுத்தும். ஆனால் கட்டுக்கதையின் அடிப்படையில் மட்டும், அது திட்டமிட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்டு அரச அதிகாரத்தின் அனைத்து வளங்களின் செல்வாக்கையும் கொண்டிருந்தாலும், பெரிய கொள்கை எதுவும் செயல்படுத்தப்பட முடியாது; குறிப்பாக தீடீரென மாறுதல்கள் தோன்றும் எமது சகாப்தத்தில், கட்டுக்கதை ஒரு சிறு பங்கைத்தான் கொண்டுள்ளது என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்; கட்டுக்கதையானது அதன் சொந்த முரண்பாடுகளின் வலைக்குள்ளே தவிர்க்கவியலாமல் சிக்கிக்கொள்ளுவதாக ஆகும். இந்த முரண்பாடுகளின் மிக முக்கியமான பகுதியாக ஒருவேளை இருந்தாலும், நாம் ஏற்கனவே சிறு பகுதியை குறிப்பிட்டுள்ளோம். வெளி நிலைமைகள் எமது ஆய்வுகளை இறுதிவரைக்கும் கொண்டு செல்ல எம்மை அனுமதிக்குமா என்பதிருந்து மிகவும் சுயாதீனமான வகையில், எமது அகநிலை ஆய்வுகள் வரலாற்று நிகழ்வுகள் அளிக்கும் புறநிலை ஆய்வுகளால் ஆதரிக்கப்படும் என்பதை உறுதியாக நாம் கருத்திற்கொள்ளுவோம்.

ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் தீவிரமயமாதல் என்பது கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் வெளிப்பாட்டை கண்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் இந்த தீவிரமயமாதல் இப்பொழுது ஆரம்ப கட்டங்களைத்தான் கடந்து கொண்டிருக்கிறது. சீனப் புரட்சியின் தோல்வி போன்ற காரணிகள் தீவிரமயமாதலுக்கு எதிராக நின்று பெரும்பாலும் சமூக ஜனநாயக வழிவகைகளில் சேர்ந்துவிடும். எப்படியாயினும், இந்த நிகழ்ச்சிப்போக்கு எந்த வேகத்தில் வருங்காலத்தில் தொடரும் என்பதைப் பற்றி இங்கு நாம் கணிப்பதற்கு உளம்கொள்ளவில்லை. ஆனால் எப்படிப் பார்த்தாலும், இந்த தீவிரமயமாதல் ஒரு புதிய புரட்சிகர நிலைமைக்கு அழைப்புக் கொடுக்கும் கருவியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கும் தன்மையை, சமூக ஜனநாயகத்தின் பெரும் வளங்களின் இழப்பில்தான் வளரும் என்பது உறுதி. அந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை. ஆனால் அது இரும்பு போன்ற உறுதியான தேவையுடன் கட்டாயம் இடம்பெறும்.

தற்போதைய உறுதியற்ற கொமின்டேர்ன் தலைமையின் நோக்குநிலை, அதன் உள் ஒழுங்கற்ற தன்மையில் இடதிற்கு முழு ஆட்சியையும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, புரட்சிகர கூறுபாடுகளின் மிகவும் சோதிக்கப்பட்ட அமைப்பு போராட்ட விதிகளுக்கு முற்றுப் புள்ளியும் வைக்க நினைப்பதுடன், இந்த முரண்பாடுடைய சார்பு எதிர்த்தரப்பின் ஆய்வை முற்றிலும் உறுதிப்படுத்திய சோவியத் குடியரசின் உள் பொருளாதாரம் பெரும் அடிகளைப் பெற்றதின் விளைவாகத்தான் வெளிப்பட்டுள்ளது; மேலும் ஐரோப்பிய உழைக்கும் மக்களின் தீவிரமயமாதல் ஏற்படுவதின் முதல் கட்டத்திற்கும் முழுமையாக ஒத்திருக்கிறது. கொமின்டேர்ன் தலைமையின் கொள்கையின் திரட்டுவாதம், வரைவு வேலைத்திட்டம் பிரதிபலிக்கும் திரட்டுவாதம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய நிலையை நிழற்படம் எடுத்துக் கொடுப்பது போல் உள்ளது; இது வளர்ச்சியின் போக்கை ஒட்டி இடதிற்கு திரும்புகிறது; ஆனால் தன்னுடைய போக்கை இன்னும் நிர்ணயிக்கவில்லை; இதையொட்டி ஜேர்மன் சமூக ஜனநாயகத்திற்கு ஒன்பது மில்லியன்களுக்கும் அதிகமான வாக்குகள் கொடுக்கப்பட்டு விட்டன.

இன்னும் கூடுதலான உண்மையான புரட்சிகர எழுச்சி தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு மகத்தான மறு குழுகூடலைக் குறிக்கும்; அது அனைத்து அமைப்புக்களிலும், கொமின்டேர்ன் உட்பட, வெளிப்படும். இந்த நிகழ்வுப்போக்கின் வேகம் இன்னும் தெளிவாக இல்லை; ஆனால் எந்த விதத்தில் படிகமாதல் என்ற போக்குகள் நன்கு புலனாகின்றன. உழைக்கும் மக்கள் சமூக ஜனநாயகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வொரு பிரிவாகச் செல்லும். கம்யூனிஸ்ட் கொள்கையின் அச்சு இன்னும் கூடுதலான வகையில் வலதில் இருந்து இடதிற்கு மாறும். அதே நேரத்தில், தொடர்ச்சியான போல்ஷிவிக் வகை குழுவிற்கான கோரிக்கை பெருகிய முறையில் வளரும்; அதுதான் குற்றச்சாட்டுக்கள் என்ற புயல், துன்புறுத்தப்படுதல்கள் ஆகியவற்றை, 1923ம் ஆண்டு ஜேர்மனிய பாட்டாளி வர்க்கம் கொண்டதில் இருந்து கொடுக்கப்பட்ட தாக்குதல்களை எதிர்நீச்சல் மூலம் சமாளிக்க முடிந்த பிரிவு ஆகும்.

உண்மையான, தவறாக்கப்படாத லெனினிசத்தின் சிந்தனைப்படி வந்த அமைப்பு வழிவகைகள் கொமின்டேர்னில் வெற்றி அடையும்; அதன் விளைவாக முழுச் சர்வதேச தொழிலாள வர்க்கமும் தற்போதைய கொமின்டேர்னின் மீது பெரும் நம்பிக்கை கொள்ளும்; அதன் விளைவு நேரடியாக ஆறாம் அகல்பேரவையில் வெளிப்படும்.

ஆனால், அகல்பேரவையின் முடிவுகள் எப்படி இருந்தாலும் --நாம் மோசமானதிற்கு தயாராக உள்ளோம்-- தற்போதைய சகாப்தத்தின் பொது மதிப்பீடு, அதன் உட்போக்குகள் பற்றியவை, சிறப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனுபவத்தின் மதிப்பீடு ஆகியவை, எதிர்ப்பு கொமின்டேர்னை தவிர வேறு எந்த தளத்தையும் கொள்ள வேண்டியதில்லை என்று குறிப்பிடுகிறது. அதில் இருந்து நம்மை அகற்றுவதில் எவரும் வெற்றி பெற முடியாது. நாம் பாதுகாக்கும் சிந்தனைகள் அதன் சிந்தனைகளாக மலரும். அவை கம்யூனிச அகிலத்தின் வேலைத் திட்டமாக வெளிப்பாட்டை காணும்.

Notes

37. Pravda, September 20, 1924.

38. Pravda, January 28, 1928.