முன்னோக்கு

1871 பாரிஸ் கம்யூனின் வரலாற்று முக்கியத்துவமும், சமகாலத்திய முக்கியத்துவமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக வரலாற்றில் முதல் முறையாக தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய 1871 பாரிஸ் கம்யூனின் 150 வது நினைவாண்டைக் குறிக்கும் விதமாக உலக சோசலிச வலைத் தளம், சனிக்கிழமை, சர்வதேச இணையவழி கூட்டம் ஒன்றை நடத்தியது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் அந்த கலந்துரையாடலை அறிமுகப்படுத்தி நெறிப்படுத்தினார், அதில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste) தேசிய செயலர் அலெக்ஸ் லான்ரியே, WSWS இன் எழுத்தாளர் திரேஸ் லுக்கிளேர் (Thérèse Leclerc), WSWS இன் அமெரிக்க தேசிய பதிப்பாசிரியர் பேரி கிரே ஆகியோர் உரையாற்றினர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலையின் 80 ஆம் நினைவாண்டு, லெனின் பிறந்து 150 ஆம் நினைவாண்டு, ரோசா லூக்செம்பேர்க் பிறந்து 150 ஆம் நினைவாண்டு, ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள், ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு ஆகியவை உள்ளடங்கலாக, கடந்தாண்டு தொடர்ச்சியாக பல கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளதுடன், பல குறிப்பிடத்தக்க நினைவுதினங்களைக் குறிக்கும் விதத்தில் முக்கிய நிகழ்வுகளையும் நடத்தி உள்ளன.

ICFI ஐ பொறுத்த வரை, வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்வது எப்போதுமே தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் தற்போதைய பணிகளைத் தெளிவுபடுத்துவதுடன் பிணைந்துள்ளது. வரலாற்று அனுபவம் என்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு நோக்குநிலை மற்றும் ஒரு திசையைக் காட்டி, அவர்களின் தற்போதைய போராட்டங்களை அவர்கள் ஒரு பரந்த உள்ளடக்கத்தில் பார்க்க செய்யும் விதத்தில், அவர்களை படிப்பிப்பதில் இன்றியமையா அடித்தளமாகும். நம்முடைய இந்த காலகட்டத்தை போல, ஒரு மிகப்பெரும் நெருக்கடி காலகட்டத்தில், வரலாற்றுப் படிப்பினைகள் எப்போதுமே சமகாலத்திற்கு மிகப்பெரியளவில் பொருந்துவதாக உள்ளன. இது பாரிஸ் கம்யூன் விசயத்தில் நிச்சயமாக உண்மையாகும்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த அந்த கூட்டத்தின் போது, குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். 1848 புரட்சிகளுக்கு வெவ்வேறு வர்க்கங்களது விடையிறுப்பு உள்ளடங்கலாக, கம்யூனை முன்னுக்குக் கொண்டு வந்த வரலாற்று பின்னணியை அவர்கள் மீளாய்வு செய்தனர். 1840 களின் மத்தியப் பகுதியில் தொடங்கி விஞ்ஞான சோசலிசம் மற்றும் வரலாற்று சடவாதத்தை விளங்கப்படுத்துவதில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸின் தத்துவார்த்த மற்றும் வரலாற்று பணியை கம்யூன் சக்தி வாய்ந்த முறையில் உறுதிப்படுத்திய விதம் குறித்து அவர்கள் விவாதித்தனர். அவர்கள், கம்யூனில் சம்பந்தப்பட்டிருந்த அரசியல் மற்றும் சமூக சக்திகளை மதிப்பிட்டதுடன், கம்யூன் உறுப்பினர்களை எதிர் புரட்சிகர வன்முறைக்கு ஆளாக செய்த பிழைகளையும் மதிப்பீடு செய்தனர். கம்யூன் உறுப்பினர்களுக்கு எதிராக அந்த முதலாளித்துவ அரசால் திருப்பிவிடப்பட்ட அதிர்ச்சிகரமான வன்முறையிலிருந்து, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி உட்பட மார்க்சிஸ்டுகள் வரைந்த படிப்பினைகளை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பாரிஸ் நகரைப் பாதுகாக்க அத்தியாவசியமாக இருந்த பீரங்கிகளை அகற்றுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கும், அடோல்ப் தியேரின் பிரெஞ்சு அரசாங்க முயற்சிக்கு எதிராக பாரிஸ் தொழிலாள வர்க்கம் கிளர்ந்தெழுந்த போது, 1871, மார்ச் 18 இல் கம்யூன் உயிர் பெற்றதை, நோர்த் அந்த கலந்துரையாடலை அறிமுகப்படுத்துகையில் விவரித்தார். அந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் தலைவர்கள் அந்நகரை விட்டு தப்பியோடி, வேர்சாயில் அவர்கள் தலைமையகத்தை அமைத்து, பாரிஸ் தொழிலாளர்களுக்கு எதிராக ஓர் உள்நாட்டு போரைத் தொடங்கினர்.

நோர்த் விவரித்தார், "எழுபத்தொரு நாட்களுக்குப் பின்னர், 1871 மே 28, ஞாயிற்றுக்கிழமை, வேர்சாய் அரசாங்கத்தின் இராணுவத்தால் கம்யூன் நசுக்கப்பட்டது. அது அந்நகரின் தொழிலாள வர்க்க மக்கள் மீது கொடூரமான படுகொலைகளை நடத்தி பாரிஸ் மீது மீண்டும் அதன் கட்டுப்பாட்டை எடுத்தது.” அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்:

கம்யூன் உயிர் வாழ்ந்த நாட்களில் கடைசி ஏழு நாட்களில் மட்டும் —அந்த மே 21-28 “இரத்தந்தோய்ந்த வாரத்தில்"— வேர்சாய் இராணுவம் 20,000 அதிகமான உழைக்கும் மக்களை படுகொலை செய்தது. இந்தளவிலான வன்முறை ஓர் ஐரோப்பிய நகரில் அதற்கு முந்தைய நூற்றுக் கணக்கான ஆண்டுகளில் பார்க்கப்பட்டதில்லை. மீண்டும் 1939 மற்றும் 1945 க்கு இடையே நாஜிக்களின் வெறியாட்டம் வரையில் அந்த படுகொலைக்கு நிகரான ஒன்றை காணக்கூடியதாக இருக்கவில்லை.

நோர்த் விவரித்தார், கம்யூன் வெறுமனே அழிவு மற்றும் சோகத்தின் கதை மட்டுமல்ல. "கம்யூன் உயிர் வாழ்ந்த 71 நாட்களில் அதன் சாதனைகள், காலத்தால் அழியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த அரசாங்கத்தின் வடிவம், மற்றும் அது எடுத்த நடவடிக்கைகள், மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை முன்னறிவித்தன. முதலாளித்துவ அரசுக்கு ஒரு சாத்தியமான மாற்றீட்டை பாரிஸ் கம்யூன் எடுத்துகாட்டியது என்ற உண்மையே, இறுதி பகுப்பாய்வில், வேர்சாய் ஆட்சியால் வழங்கப்பட்ட இரத்தக்களரியான பழிவாங்கலுக்கான இறுதிக்காரணமாக வருகிறது.”

சமத்துவமின்மை மற்றும் வர்க்க சுரண்டலில் இருந்து விடுவிக்கப்பட்ட முற்றிலும் ஒரு புதிய சமூகத்திற்கான அடித்தளத்தை உருவாக்கிய கம்யூன் நடைமுறைப்படுத்திய அரசு வடிவங்கள் மற்றும் கொள்கைகளைக் குறித்து, பிரான்சில் உள்நாட்டுப் போர் என்பதில், மார்க்சின் சமகால பகுப்பாய்வை லுக்கிளேர் மீளாய்வு செய்தார். பிரஷ்ய இராணுவத்தால் பாரிஸ் முற்றுகையிடப்பட்டிருந்த போது அந்நகரை வறுமை மற்றும் பட்டினி மூழ்கடித்திருந்ததைத் தொடர்ந்து வந்த கம்யூனின் கொள்கைகள், "உண்மையிலேயே தொழிலாள வர்க்கத்தின் முத்திரையைத் தாங்கி இருந்தன" என்றவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக, மூன்றாம் நெப்போலியனின் தோல்வியுற்ற ஆட்சியின் இராணுவவாதம் மற்றும் தேசியவாதத்தை கம்யூன் நிராகரித்தது. ஐரோப்பா முழுவதிலும் இருந்து 100,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அரசியல் அகதிகள் பாரிஸில் வசித்து வந்த நிலையில், கம்யூன் "புலம்பெயர்ந்தோரை வரவேற்றதுடன், அவர்களுக்கு சம உரிமைகளையும் கம்யூனை செயல்படுத்தும் அதிகார பதவிகளையும் வழங்கி, சர்வதேசியவாத நிலைப்பாட்டை" எடுத்ததை லுக்கிளேர் சுட்டிக் காட்டினார்.

கம்யூன் சம்பந்தமாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்கள் மீது முழுமையாகப் பணியாற்றிய லெனினின் படைப்புகளை கிரே விபரித்தார். ஆகஸ்ட் 1917 இல், லெனின் பின்லாந்தில் தலைமறைவாக இருந்து, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் போல்ஷிவிக் கட்சி வெற்றி பெற போராடியபோது, அவரது தலைசிறந்த அரசும் புரட்சியும் (The State and Revolution) படைப்பை தயாரித்தார். தொழிலாள வர்க்கம் சர்வசாதாரணமாக தற்போதிருக்கும் முதலாளித்துவ அரசை அப்படியே கைப்பற்றி விட முடியாது என்பதே லெனின் வரைந்த மத்திய படிப்பினைகளில் ஒன்றாக இருந்தது. “ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட அரசு அதிகார எந்திரத்தை அழிக்காமல்,” தொழிலாளர்களின் புரட்சி சாத்தியமில்லை என்று லெனின் முடிவுக்கு வந்தார்.

பாரிஸ் கம்யூனின் பலவீனங்களிலிருந்து மார்க்சிச தலைவர்கள் எடுத்த முடிவுகளையும் கிரே சுட்டிக் காட்டினார். தியேரின் குற்றகரமான மார்ச் 18 சதித்திட்டத்திற்குப் பின்னர் கம்யூன் அவரது அரசாங்கத்தைப் பதவிலிருந்து கீழிறக்கி அவரைக் கைது செய்ய தவறியது, மேலும் முதலாளித்துவ அரசாங்கங்களது சதித்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வந்த பிரான்ஸ் வங்கியை (Bank of France) கைப்பற்றுவதிலும் அது தோல்வி அடைந்தது.

முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் மீது அதன் ஆதிக்கத்தைப் பாதுகாக்க அது காட்டிய ஈவிரக்கமற்ற வன்முறையே கம்யூன் வழங்கிய மிக முக்கிய படிப்பினைகளில் ஒன்றாகும், இது அக்கூட்டம் நெடுகிலும் விவாதிக்கப்பட்டது. பிரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த முதலாளித்துவ தியேர் அரசாங்கம், கம்யூனை இரத்தத்தில் மூழ்கடிக்க இராணுவத்தை நிலைநிறுத்தியது.

மே 21 இல், மூன்றாம் குடியரசின் துருப்புக்கள் பாரிஸ் நகரச் சுவரின் ஒரு பகுதியைக் கைப்பற்றின, கம்யூனின் ஒரு எதிர்ப்பாளரது துரோக நடவடிக்கை மற்றும் கம்யூனின் இராணுவப் பிரிவுகளது கவனக்குறைவு இவ்விரண்டுக்கும் தான் இதற்காக நன்றி கூற வேண்டியிருக்கும். ஒரு வாரத்தில் அந்நகரம் முழுவதையும் தகர்த்த தியேர் அரசாங்கத்தின் படைகள் சுமார் 20,000 தொழிலாளர்களைப் படுகொலை செய்தன. அவர்களில் பெரும்பான்மையினர் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டிருந்தனர். பாரிஸ் கம்யூன் சம்பந்தமாக வரலாற்றாளர் ஜோன் மெர்ரிமனின் படுகொலை (Massacre) என்ற நூலிலிருந்து விபரங்களை நோர்த் மேற்கோளிட்டார்:

வேர்சாய் துருப்புகள், சனிக்கிழமை மாலை பேர் லாசேஸ் (Père Lachaise) கல்லறை நுழைவாயில்களை நொருக்கிய பின்னர், உள்ளே நுழைந்தன. அங்கே போராடிய கம்யூன் உறுப்பினர்கள் பலர் வீழ்ந்தனர், சிலர் புதைகுழிகளுக்கு மத்தியிலும் துப்பாக்கிமுனையை வெறுங்கைகளால் எதிர்த்து போராடினர். எஞ்சியவர்களை பிடித்த சிப்பாய்கள், கம்யூன் கைதி உறுப்பினர்களை ஓர் ஆழமான பள்ளத்திற்கு அருகே இரண்டிரண்டு பேராக ஒரு சுவரைப் பார்த்தவாறு வரிசையாக நிற்க வைத்து, கொத்து கொத்தாக நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்றனர். இயந்திர துப்பாக்கிகள் மீதியைச் செய்தன. பல கைதிகள் மடிந்து வீழ்ந்தனர் அல்லது ஒரு மிகப்பெரிய புதைகுழியில் வீசப்பட்டனர்.

பாரிஸ் நகர தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையின் அளவை விவரித்து, லான்ரியேர் கூறினார்:

அது, அரசியல்ரீதியில் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்த எவரொருவருக்கும் எதிரான ஒரு பொதுவான தாக்குதலாக இருந்தது. [பாரிஸ்] தேசிய காவலர் உடையணிந்த யாரேனும் பிடிபட்டால், ஒரு தடுப்பரணைக் காவல் செய்யும் எவரொருவரும் பிடிபட்டால், அவர்கள் மீது போர் சட்டத்தின்படி வழக்கு விசாரணை இருக்காது. பத்தாயிரக் கணக்கானவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நடப்பதற்கும் பாரிஸைச் சுற்றிப் பார்ப்பதற்கும் சிறந்த இடங்களாக இன்று எவை அறியப்படுகின்றனவோ —அதாவது, இராணுவப் பள்ளி அருகிலுள்ள பூங்காக்கள், ஈபிள் கோபுரம், மான்சியோ பூங்கா, லுக்செம்பேர்க் பூங்கா, பேர் லாசேஸ் கல்லறை ஆகியவை—பெருந்திரளான மக்களை கொல்லும் கொலைக் களங்களாக மாற்றப்பட்டிருந்தன.

இந்த மனிதப்படுகொலையானது, ஐரோப்பிய கலாச்சாரத்தின் மையமாகக் கருதப்படும் ஒரு நாட்டில், ஜனநாயகக் குடியரசாக கூறும் ஓர் அரசாங்கத்தின் கரங்களில் நடந்தது என்பதை நோர்த் வலியுறுத்தினார். முதலாளித்துவ அரசு அதன் வர்க்க ஆட்சியைப் பாதுகாப்பது என்று வரும்போது அதன் அணுகுமுறைகள் இவ்விதத்தில் இருக்கின்றன.

மார்க்சிஸ்டுகளின் ஒவ்வொரு தலைமுறையும் பாரிஸ் கம்யூனின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டுள்ளது. 1917 ரஷ்யப் புரட்சியிலிருந்து பாரிஸ் கம்யூனைப் பிரிக்கும் காலகட்டம் 50 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தது, அதாவது ஏறக்குறைய இது, 1973 இல் சிலியில் ஓர் இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்தை கைப்பற்றி சோசலிச தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது படுகொலைகளை நடத்திய கொடூரங்களுக்கும் இன்றைக்கும் இடையிலான ஒரு காலகட்டத்திற்கு சமாந்தரமானதாகும் என்பதை நோர்த் சுட்டிக்காட்டினார்.

சோசலிச இயக்கத்தின் ஆரம்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் பாரிஸ் கம்யூன் தோன்றியது. இருப்பினும், 20 ஆம் நூற்றாண்டின் எதிர்புரட்சி மற்றும் புரட்சியின் இயக்கவியலில் இருந்த அதன் அடிப்படை கூறுபாடுகளை அது எதிர்நோக்கி இருந்தது. இந்த வரலாற்றின் தோல்விகள் மற்றும் வெற்றிகள் இரண்டிலிருந்தும் ஒரு மையப் பாடம் வெளிப்படுகிறது, அனேகமாக இதுவே பாரிஸ் கம்யூனின் மிகப் பெரிய படிப்பினையாக இருக்கலாம், அதுவாவது: புரட்சிகர தலைமையின் மகத்தான பங்கு தொடர்பானதாகும்.

ட்ரொட்ஸ்கி, பெப்ரவரி 1921 இல் எழுதிய “பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள்” என்ற அவர் கட்டுரையில் இந்த புள்ளியை வலியுறுத்தி இருந்தார். "ஆகவே கம்யூனின் முழு வரலாற்றையும், பக்கத்திற்குப் பக்கம், அலசி எடுத்தால், நமக்கு ஒரேயொரு படிப்பினை கிடைக்கும், அதுவாவது: ஒரு வலுவான கட்சித் தலைமை அவசியம் என்பதாகும்.” ட்ரொட்ஸ்கியின் இந்த வார்த்தைகள் இன்று மிகவும் சக்தி வாய்ந்த விதத்தில் பொருந்துகின்றன:

ஒரு நிஜமான தொழிலாளர்களின் கட்சி என்பது, நாடாளுமன்ற தந்திரங்களுக்கான ஒரு எந்திரம் அல்ல. அது பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுதிரட்டப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அனுபவமாகும். தனது வளர்சியின் பாதையில் அனைத்து கட்டங்களிலும் தனது கடந்த கால வரலாற்று அனுபவங்களை அடித்தளமாக கொண்டு, தனது எதிர்கால நடவடிக்கையை தத்துவார்த்தரீதியாக முன்கணித்து அதற்கு அவசியமான நடைமுறைகளை வழிநடாத்தும் ஒரு கட்சியின் உதவியோடு மட்டுமே, பாட்டாளி வர்க்கம் எப்போதும் அதன் வரலாறை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறது: அதாவது அதன் தயக்கங்கள், அதன் முடிவெடுக்கும் திறனின்மை, அதன் தவறுகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறது.

தியேரின் பாரிஸிற்கும் பிரான்சின் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பாரிஸிற்கும் இடையிலான தொடர்பைக் குறித்த ஒரு கலந்துரையாடலுடன், நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமான தொடர்பை இணைத்து, அக்கூட்டம் நிறைவடைந்தது.

தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில், உயிர் உட்பட எல்லா பரிசீலனைகளையும் முதலாளித்துவ நிதிய பிரபுத்துவத்தின் இலாப நலன்களுக்கு மக்ரோன் அடிபணிய செய்வது கொலைகார விளைவுகளைக் கொண்டுள்ளது என்பதை லான்ரியேர் விவரித்தார். வரவிருக்கும் வாரங்களில், பிரெஞ்சு மருத்துவமனைகள் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளால் நிரம்பி வழியும் என்கின்ற நிலையில், பிரான்சில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் நடந்த இரத்தக்களரியான வாரத்தில் இறந்தவர்களை விட அதிகமான மக்கள் இறக்கக்கூடும்.

கோவிட்-19 தொற்றுநோயின் கொடூரங்களுக்கு மத்தியில், முதலாளித்துவ ஜனநாயகத்தின் முகம் அம்பலமாவதும் சக்தி வாய்ந்த விதத்தில் ஒத்துப் போகிறது. இது பிரான்சில் மட்டுமே உண்மை என்பதல்ல. எல்லா பிரதான முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்களும் தங்கள் குடிமக்களை நேரடியாக சுட்டுத்தள்ளும் நிலைக்கு இன்னும் செல்லவில்லை. ஆனாலும் ஆளும் உயரடுக்கின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையின் காரணமாக மனித உயிரிழப்புகள் மீது மலைப்பூட்டும் அளவுக்கு அலட்சியமாக இருப்பது தியேரின் காட்டுமிராண்டித்தனத்தையே தெளிவாக எதிரொலிக்கிறது.

இன்று, கோவிட்-19 தொற்றுநோய், போர் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் அளப்பரிய சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்திற்கு இந்த முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு போராட்டம் அவசியப்படுகிறது. தொழிலாளர்கள் இந்த போராட்டத்திற்குத் திரும்பி வருகின்ற நிலையில், பாரிஸ் கம்யூனும், கம்யூன் உறுப்பினர்களின் வீரமும் புதிய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். இது இன்றைய புரட்சிகர சோசலிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் தொழிலாளர்கள் இணையவும் அதை கட்டமைக்கவும் அவர்களுக்கு உத்வேகமூட்டும்.

Loading